PDA

View Full Version : ஓரவஞ்சனையில்லா திரை விமர்சனம்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-06-2008, 06:41 AM
எங்களால முடிஞ்சத பண்ணிட்டோம்
அப்புறம் கடவுள் விட்ட வழி
ஒரிஜினல் மருத்துவரும் பிச்சையெடுக்கும்
சோகம் கலந்த முகபாவனையில்
கூறிச்சென்ற ரங்கசாமியும்

மீட்டருக்கு மேல போட்டுகொடு சாரே
ஒரு காட்சி என்றாலும்
மனசாட்சிக்குள் உறைந்து விட்டுச்சென்ற
ஆட்டோ டிரைவர் அப்புசாமியும்

ஸ்ட்ரெய்ட்டா போய்
ரைட்டால கட் பண்ணிக்க
முகவரி மட்டும் சொல்லிச்சென்ற
முத்தையாவும்

கதாநாயகி பேருந்துக்காய் நிற்க
அவளுக்குத்துணையாய்
நிலையத்தில் நின்ற
லட்சுமி,பார்வதி மற்றும் சரசுவும்

ஐம்பத்தைந்து கிலோ
அமுல்பேபி ஹீரோவின் ஒரே அடியில்
எட்டடி தூரம் தாவி விழுந்த
பயில்வான் பலராமன் மற்றும் முத்துவும்

சைதாப்பேட்டை எறங்கு
விசிலே இல்லாமல் விசிலடித்த
நடத்துனர் நல்லகண்ணுவும்

கேமராவைப்பார்க்காமல்
கொடுக்கப்பட்ட புத்தகத்தை மட்டும்
பவ்யமாய் பார்த்த
நாயகனின் வகுப்புத்தோழர்களும்

நாயகனும் நாயகியும்
தவறவிட்ட நடிப்பை
இழுத்துப்பிடித்திருக்கிறார்கள்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-06-2008, 06:59 AM
நெசமாத்தான் சொல்றீங்களா கிஸோர். என்ன வச்சு காமெடி கீமெடி பண்லியே!

இதயம்
18-06-2008, 07:23 AM
எங்களால முடிஞ்சத பண்ணிட்டோம்
அப்புறம் கடவுள் விட்ட வழி
ஒரிஜினல் மருத்துவரும் பிச்சையெடுக்கும்
சோகம் கலந்த முகபாவனையில்
கூறிச்சென்ற ரங்கசாமியும்

கசக்கும் உண்மையை எளிய வரிகளில் சொன்ன உங்கள் அட்டகாசமான கவிதைக்கு என் பாராட்டுக்கள் ஜுனைத்..! உங்கள் கவிதையின் கருத்து நான் பல தடவை மனதுக்குள் வலியாய் உணர்ந்தது. ஆனால், சினிமா என்றால் என்ன என்பதையே உணர முடியாத அல்லது உணர விரும்பாத, மனித வழிபாட்டை ஊக்குவிக்கும் செம்மறியாடுகளால் தான் நடிப்பறியா ஹீரோக்களின் பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. தன் தொழிலை சிறப்பாக செய்யும் இதைப்போன்றவர்களுக்கு பேரும் கிடைப்பதில்லை, ஊதியமும் சரியாக கிடைப்பதில்லை.

உங்கள் கவிதை கொம்பு முளைத்த ஹீரோக்களுக்கு அவர்களின் ஆணவ கொம்பை உடைக்கும் சம்மட்டி அடி..! பேரும் பணமும் கிடைக்காத நல்ல நடிகர்களுக்கு சாமர வீச்சு..!! பாராட்டுக்கள் ஜுனைத்..!!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-06-2008, 08:01 AM
இதயம் உங்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும். என் கவிதையை பாராட்டியதற்காக ஒரு நன்றி. என் பெயரை மிகச்சரியாக உச்சரித்ததற்காய் ஒரு நன்றி. அந்தப்பெயர் பல இடங்களில் படாதபாடு படுகிறது என்பதால்தான் சற்று மாற்றி சுனைத் என்று ஆக்கிக்கொண்டேன். இருந்தாலும் அதன் அசல் கண்டு சரியாய் உச்சரித்தமைக்காய் கோடி நன்றிகள் உங்களுக்கு.

ஆதவா
18-06-2008, 08:46 AM
வாவ் வாவ்வ்

சூப்பர்ங்க... விரிவா பிறகு எழுதறேன்..

kavitha
18-06-2008, 09:21 AM
கவிதையை மிக ரசித்தேன் ஹஸனி.
"வெள்ளித்திரை" படத்தில் இப்படி ஒரு வசனம் வரும்
"நடிப்பது என்பது நடிப்பதல்ல;நடந்துகொள்வது". பாலுமகேந்திராவில் படங்களில் ஏறத்தாழ இதை உணரலாம். கேமரா எங்கே இருக்கிறது என்பதையே நாயகனும் நாயகியும் அறிந்திராதவர் போல் இயல்பாய் படம் இருக்கும்.


நாயகனும் நாயகியும்
தவறவிட்ட நடிப்பை
இழுத்துப்பிடித்திருக்கிறார்கள்.
உண்மை. உண்மை. பல படங்களில் வந்த கமலாகாமேஷ் இப்பொழுதும் ஒரு தாயாகவேதான் நமக்குத் தோன்றுகிறார்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-06-2008, 10:47 AM
55 வயது ரஜினிகாந்திடம் சுமார் பத்து பதினைந்து நபர்கள் அசராமல் அடிவாங்குகிறார்கள். எங்கோ பாய்ந்து விழுகிறார்கள். ஒடும் ரயிலில் கணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் எவ்வி குதிக்கிறார்கள். ஆனால் கையை காலை மட்டும் ஆட்டிக்கொண்ட ரஜினி அநியாத்திற்கு பெயரை சம்பாதித்து விடுகிறார். அந்த ரஜினியின் பெயர் வெளியில் தெரிய எத்தனை நபர்கள் பாடாய் பாடு பட வேண்டி இருக்கிறது. நேற்று தற்செயலாய் சிவாஜி படத்தின் சில காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்ததால் ரஜினியை சொல்கிறேன். மற்றபடி அவர்மீது எனக்கு கன்னக்கோல் ஒன்றும் இல்லை. எல்லா நடிகர்களுக்கும் இது பொருந்தும். என் ஆதங்கத்தை என்னால் முடிந்த செயலாய் ஒரு கவிதையாய் வடித்திருக்கிறேன். ஆதரவிற்கு நன்றி கவிஞர்களே.

சிவா.ஜி
18-06-2008, 12:12 PM
கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்களுக்காக கவிதை படைத்து அழகாய், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தைப் பதித்துவிட்டீர்கள் ஜுனைத்.

வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.

இளசு
19-06-2008, 12:07 AM
விளிம்பு நிலை மனிதர்களுக்காக
பரிந்து எழுதப்பட்ட உயரிய கவிதை!

பாராட்டுகள் நண்பரே!

டிஷ்யூம் திரைப்படத்தில் இப்பிரசினை அணுகப்பட்டது சிறப்பாக!

ஆதவா
24-06-2008, 03:08 PM
இதைக் குறுங்கவிதையில் பதிந்திருக்க வேண்டியதில்லை..

கவிதையின் நடையே சிறப்பாக இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிக்கு முந்திய வரிகள் வரை சொல்லிவிட்டு, சொன்னதன் காரணத்தை இறுதியில் புகுத்திய விதமும் அழகு...

துணை நடிகைகள், நடிகர்களின் நடிப்பு, முக்கிய நடிகர்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. இங்கே தோலுக்குத்தானே மதிப்பு. முகம் சிவப்பாக, கலையாக இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது...

கறுப்பாக இருந்தால் அவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பு...

வாழ்த்துகள் ஜுனைத்

பூமகள்
24-06-2008, 03:16 PM
இறுதியில் நிற்கும் கடைக்கோடி துணை நடிகர்களுக்காக எழுதப்பட்ட அற்புதக் கவிதை..!!

எத்தனையோ முறை இவர்களுக்காக வருந்தியதுண்டு..! ஆனால்.. உங்களைப் போல கவிதை எழுத ஏனோ தெரியவில்லை...

மிக நல்ல கவிதை..!!

திரைப்படத்துறையில் நாயகர்.. நாயகி நிறம் அதிகமெனில் உடனிருப்பவர் அனைவரும் குறைவான நிறத்திலிருப்பார்கள்.. அல்லது நாயகர்.. நாயகி நிறம் குறைவெனில் அல்லது நாயகர் வயதானவரெனில் பின்னால் நிற்பவர்கள் யாவரும் மிகவும் நிறம் குறைவாக ... சற்று வயதானவர்களாகக் கூட இருப்பார்கள்..!!

இப்படி அழகை மட்டுமே நம்பியிருக்கும் தொழில் திரைப்படம்.. நன்றாக நடித்தும் இறுதியில் நிற்க வைக்கப்படும் நாயகி/நாயகர் ஆக வேண்டுமென வந்த எத்தனையோ துணை நடிகர்களின் நிலை இது தான்..!!

வருத்தமே மேலிடுகிறது.. பாராட்டுகள் ஜூனைத் அண்ணா.