PDA

View Full Version : தலைப்பில்லா கவிதை 2

ஆதவா
18-06-2008, 04:48 AM
ஆரம்பத்தில்
காட்சிகள் அப்படியே இருந்தன

காட்சியின் ஓரத்தில்
ஒரு கவிதை விமர்சனக் கைகள்ல்
சொறுகிவைக்கப்பட்டிருந்தது
மறு ஓரத்தில்
கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும்
ஒரு சிறுவனின் சித்திரம்

நொடிமுற்கள் வெகுதூரம் ஓடிவிட்ட காலத்தில்
காட்சிகள் நீட்சியடைகின்றன
காலமாற்றத்தில் காட்சி மாற்றம்

கவிதை தொங்கி விமர்சனப் பிடியை நழுவவிட்டது
கற்கள் நீண்டு மலைகள் ஆகி,
சிறுவனை நசுக்கியது.

நொடிமுற்கள் இன்னும் ஓய்வெடுக்கவில்லை
காட்சிகள் மாறுகின்றன மீண்டும்.
ஆரம்பத்தில் கண்ட காட்சி
இறுதியிலும் அப்படியே தான் இருந்தது.

kavitha
18-06-2008, 05:12 AM
ஆதவா,
வாழ்வாதாரத்திற்கு போராடும் வாலிபனின் நிலையாகக்காட்சி சித்தரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
கற்கள் மலைகளாகி நசுக்குவதும், மீண்டும் கால ஓட்டத்தில் அவன் விதிர்த்தெழுந்து அதே கற்களைப்பொறுக்குவதுமாக... மீண்டும் அதே காட்சி தொடர்கிறது.
கற்கள் = பணம்/செல்வம்
கவிதை, விமர்சனக்கை இவை எது குறித்தது என புரியவில்லை.
கவிதை தொங்கியதற்கான காரணம் என்ன? அதன் அடர்த்தியா?

ஆதவா
18-06-2008, 05:48 AM

வெற்றி.... வெற்றி...

உங்கள் உணர்வை இங்கே கொடுத்திருக்கிறீர்கள்...

கவிதையையும் விமர்சனத்தையும் நீங்கள் எதோடு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம்.

கவிதை எதையும் சொல்லவில்லை.. ஆனால் படிப்பவர்கள் உணர்வுகளே கவிதையின் கரு... இது ஒரு மாயத்தோற்றம் அக்கா.. இவ்வகை முயற்சியை மேலும் நுண்ணிப்பாக்க முனைகிறேன்.

நன்றி சகோதரி

kavitha
18-06-2008, 05:56 AM
கவிதை எதையும் சொல்லவில்லை.. ஆனால் படிப்பவர்கள் உணர்வுகளே கவிதையின் கரு... இது ஒரு மாயத்தோற்றம் அக்கா.. இவ்வகை முயற்சியை மேலும் நுண்ணிப்பாக்க முனைகிறேன்
உணர்வுகளின் வெளிப்பாடாய் கவிதை இருக்கலாம் தம்பி. அர்த்தமற்றதாய் இருந்துவிடக்கூடாது. பிறகு எழும் எல்லாக்கேள்விகளுக்கும் நீ விடை சொல்லத்தயாராய் இருக்கவேண்டும்.

ஆதவா
18-06-2008, 07:11 AM
உணர்வுகளின் வெளிப்பாடாய் கவிதை இருக்கலாம் தம்பி. அர்த்தமற்றதாய் இருந்துவிடக்கூடாது. பிறகு எழும் எல்லாக்கேள்விகளுக்கும் நீ விடை சொல்லத்தயாராய் இருக்கவேண்டும்.

அர்த்தம் இருக்கிறது அக்கா.. அது என் (கவிஞனின்) கரு(த்து)

இதயம்
18-06-2008, 07:26 AM
ஆதவா..! உங்களின் எழுத்தை இரசிப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால், உங்களின் கவிதைகள் என்னைப்போன்ற கவி அனுபவம் அதிகமில்லாதவர்களை சென்றடையாமல் போவதில் உங்களுக்கு வருத்தமோ இல்லையோ.. ஆனால், எனக்கு பெரும் வருத்தம். நல்ல கலைஞனின் படைப்புகள் பலரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில்.!

ஒரு படைப்பின் வெற்றி என்பது அது சொல்லும் கருத்து பயனாளரிடம் வெகு எளிதில் சென்றடையும் விதத்தில் எளிமையாய் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். தன் குழந்தையை முகச்சாயலை கொண்டு பிறர் தானாக அடையாளம் காண்பதற்கும், அவர்கள் குழம்பி, பின் தந்தை விளக்கம் கொடுப்பதற்கும் வேறுபாடு இருக்கிறதே..! உங்கள் கவிதைகள் ஒரு சிறு வட்டத்திற்குள் இருப்பவர்களை மட்டும் மகிழ்விப்பதாய் இருப்பது உங்கள் கவிதையின் தரத்தை கா(கூ)ட்ட நினைக்கும் கவிஞனின் முயற்சியாக எடுத்துக்கொள்ளலாமா..?

kavitha
18-06-2008, 08:32 AM
அர்த்தம் இருக்கிறது அக்கா.. அது என் (கவிஞனின்) கரு(த்து)
அர்த்தம் விளங்கும்/விளக்கப்படும் வரை காத்திருக்கிறேன் தம்பி.

கலைவேந்தன்
18-06-2008, 09:22 AM
புதுவகை உத்திகளை உபயோகப்படுத்துவதில் தவறில்லை ஆதவா!
ஓவியக்கலை அறிந்தவர் நீங்கள்! மாடர்ன் ஆர்ட் வெறும் அந்த நிமிஷ சலனங்களுக்கும் சபை கர்வத்துக்கும் மட்டுமே பயன் படுபவை!

பாமரர்களையும் சென்றடையச்செய்த பாமன்னன் பாரதிகூட பல உத்திகளைக் கையாண்டு தமிழை வளர்க்க பாடுபட்டார்!

ஆனால் எனது கருத்து என்னவெனில் நாம் சொல்லவந்தது என்ன என்று முதலில் நமக்கே தெளிவு இருக்கவேண்டும்!

கவிதா அவர்கள் கேட்டதிலோ இதயம் அவர்கள் கூறியதிலே இருகருத்தில்லை!

தங்களின் புதிய முயற்சி இன்னும் மிளிர வாழ்த்துகள்!

உண்மை என்னவெனில் எனக்கும் ஒன்றும் புரியவில்லை! மாடர்ன் ஆர்ட் கண்ட குழந்தையாய் நான்!

ஆதவா
18-06-2008, 09:58 AM
மிக்க நன்றி இதயம் மற்றும் கலைவேந்தன்

பொதுவாக எல்லா கவிதைகளையுமே இப்படி நான் எழுத முனைவதில்லை.. (தலைப்பில்லா கவிதை 1 மிக நேரடியான புரிந்துகொள்ளக் கூடிய அர்த்தமே!) இது ஒரு சிறு முயற்சி,.. அதில் எத்தனை தூரம் வென்றிருக்கிறேன் என்பது தெரியவில்லை. நீங்கள் அதைப் படித்து உணர்வுகளை எழுதும்போதுதான் நான் வென்றது புலனாகும்.

எளிய கருத்துள்ளவைகளையும் எழுதியிருப்பதால் நான் இவ்வகைக் கவிதைகளையும் எழுத ஆசை கொள்கிறேன்.. எனக்கு இரண்டுமே வேண்டும்.

மாடர்ன் ஆர்ட் இப்படித்தான்.. சட்டெனப் புரியாது. அதன் வசீகரம் நாம் உள் நோக்கி ஆராய்ந்தால் விளங்கும். ஆனால் அது சபைகர்வத்திற்கென எடுத்துக் கொள்வதாக சொல்வது எத்தனை தூரம் உண்மை என்று விளங்கவில்லை. ஏனெனில் இன்றளவும் மாடர்ன் ஆர்ட்களுக்கான மதிப்பு மிக அதிகமே! உங்களுக்கு பிரபல ஓவியர் என்ற உடனே பிக்காஸோவின் நினைவு வருவதற்கும் அதே மாடர்ன் ஆர்ட்டே காரணம்.

பிகு: ஓவியக்கலை அவ்வளவாக அறிந்தவன் நானல்ல.. மன்னிக்கவும்.

கவிதையின் விளக்கம் :

ஆரம்பத்தில்
காட்சிகள் அப்படியே இருந்தன

கவிதை நாயகன் காணும் காட்சிகள் முதலில் அப்படியேதான் இருந்தது.. என்றால்.... பிறகு மாறும் என்று அர்த்தம்.

அந்த மாறக்கூடிய காட்சி, மாறாத பொழுது எப்படி இருந்தது?

கவிதை நாயகனின் கண்களுக்கு ஒரு கவிதை விமர்சனத்துடன் ( ஒரு படைப்பும் அதன் ஆராய்வும், ) மறு ஓரத்தில் பொருட்களைச் சேகரிக்கும் ஒரு சிறுவன்... இவ்விரண்டும் அக்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

நொடிமுற்கள் வெகுதூரம் ஓடிவிட்ட -- கொஞ்சம் நேரம் போனது.

காட்சிகள் நீட்சியடைகின்றன - காட்சிகள் மாறுகின்றன, எதனால்?

காலமாற்றத்தில் காட்சி மாற்றம்

பின்?

கவிதை தொங்கி விமர்சனப் பிடியை நழுவவிட்டது - ஒரு படைப்பும் அதன் ஆராய்வும் விலகிச் சென்றன. பொருட்களைச் சேகரித்த சிறுவனுக்கோ அந்தப் பொருளே எமன் ஆனது..

ஓய்வெடுக்காத நொடிமுள் - காலம் இன்னும் நிற்கவில்லை என்பது பொருள்

காட்சிகள் மாறாமல் இருந்தன... என்றால் இடையில் வந்தவை மாயை.

சுருங்கச் சொன்னால்...

என் கண்களுக்கு மாயை எனத் தோன்றும் ஒரு காட்சி, அது உருமாறவில்லை ஆனால் உருமாறியதாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்................ - இதுதான் கவிதையின் கரு.

-----------------------
கவிதையும் விமர்சனமும் - தந்தையும் தனயனுமாய்
சிறுவனும் கற்களும் - வியாபாரியும் பணமுமாய் (தனயனாகவும் இருக்கலாம்)

தந்தை தனயனை கைவிடுகிறார் (அல்லது தனயன் தந்தையைக் கைவிடுகிறான்)
பணம், வியாபாரத்தை அல்லது வியாபாரியை கஷ்டப்படச் செய்கிறது.

இவ்வுலகில் எல்லாம் மாயை
--------------------------

கவிதையும் விமர்சனமும் - கணவனும் மனைவியுமாய்
சிறுவனும் கற்களும் - அதே கணவனும் வியாபாரமும்

விவாகரத்து நடக்கிறது (அதனால்)
வியாபாரம் படுக்கிறது.

எல்லாம் மாயை

--------------------

கவிதையும் விமர்சனமும் - ஒரு வயதான அம்மாவும் மருமகளும்
சிறுவனும் கற்களும் - மகனும் மனைவியின் சொற்களும் (பொறுக்குதல் என்பதால்)

அம்மாவை மருமகள் விட்டு, அநாதையாக்குகிறாள்
மனைவியின் சொற்கள் மகனுக்கு வேதனையாக்குகிறது.

எல்லாமே மாயை
--------------------

கவிதையும் விமர்சனமும் - கவிதையும் விமர்சனமும்
சிறுவனும் கற்களும் - கவிஞனும் அவன் கர்வமும்

கவிதை விமர்சனத்தைப் பிரிகிறது
அவன் கர்வம் அவனை அழிக்கிறது...

-----
இவையெல்லாம் நான் நினைத்தவை........... மேலும் நீங்கள் எதுவும் நினைக்கலாம்..........

மேற்படி கவிதையில் குறை இருந்தால் சொல்லுங்கள்.. இருக்கவாய்ப்புண்டு. திருத்திக் கொள்ளுகிறேன்..

நன்றி மக்களே

kavitha
18-06-2008, 10:53 AM
ஓ இதில் இத்தனை கற்பனை மாயைகள் இருக்கின்றனவா? எனக்கு, கவிதை-விமர்சனம், வாலிபன் - பொருளாதாரம் இரண்டுக்கு மேல் தோன்றவில்லை. அதைச் சுற்றியே தொடர்பு படுத்திப்பார்த்ததால் கடைசி வரிகளின் அர்த்தம் விளங்கவில்லை.

மலை நசுக்குகிறது... (காலம்/சூழ்நிலை = மலை)
பிறகு அவன் எப்படி மீண்டும்
அதே காட்சிக்குள் (பொறுக்குவதாக) வந்தான்?
காலம் மாறும்போது சிறுவன் வளர வேண்டுமே...? ஏன் வளரவில்லை?

மேலே சொன்ன நான்கு உவமைகளில்
"கவிதையும் விமர்சனமும் - கணவனும் மனைவியுமாய்
சிறுவனும் கற்களும் - அதே கணவனும் வியாபாரமும் "

சிறுவனும் கவிதையும் எப்படி ஒரே குறியீடாய் அமைய முடியும்?

சிறுவனும் கற்களும் - வியாபாரியும் பணமுமாய் (தனயனாகவும் இருக்கலாம்)

ஒரே குறியீடு வெவ்வேறு பாத்திரத்திற்கு ஒரே கவிதையில், ஒரே அர்த்தத்தில் பொருத்தினால் குழப்பம் தான் நேரும் தம்பி.

அடுத்தது,

அம்மாவை மருமகள் விட்டு, அநாதையாக்குகிறாள்
மனைவியின் சொற்கள் மகனுக்கு வேதனையாக்குகிறது.

---- பிறகு எப்படி காட்சி மீண்டும் ஆரம்ப நிலையை அடைகிறது?

ஆதவா
18-06-2008, 11:23 AM
பிறகு எப்படி காட்சி மீண்டும் ஆரம்ப நிலையை அடைகிறது?

என் கண்களுக்கு மாயை எனத் தோன்றும் ஒரு காட்சி, அது உருமாறவில்லை ஆனால் உருமாறியதாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்................ - இதுதான் கவிதையின் கரு.

இந்தக் கோணத்தில் நீங்கள் பார்க்கலாம்.

இவர்கள் எல்லாமே இப்படி ஆனார்கள் - இப்படி காட்சி உருமாறியது.. ஆனால்

அது மாயத்தோற்றம்.. அப்படி ஆகவில்லை...

சிறுவனும் கவிதையும் எப்படி ஒரே குறியீடாய் அமைய முடியும்?

இது என் விளக்கத் தவறு.. மன்னிக்கவும்.

ஒரே குறியீடு வெவ்வேறு பாத்திரத்திற்கு ஒரே கவிதையில், ஒரே அர்த்தத்தில் பொருத்தினால் குழப்பம் தான் நேரும் தம்பி.

நன்றி... இதைத் திருத்திக் கொள்கிறேன். (விளக்கம் அளித்ததால் வந்த வினை.)

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிவிட்டார்கள் என்பதைச் சொல்லத்தான் ஏகப்பட்ட கவிதைகள் இருக்கின்றனவே! ஆனால் அப்படி மாறியதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் பற்றிய கவிதை...

முதல் முயற்சி என்பதால் சற்று தடுமாற்றம் இருக்கலாம்... அடுத்தடுத்த முயற்சிகளில் நிச்சயம் வெல்லுவேன். ஆனால் அந்த முயற்சிகளில் எனது கவிதைக்கு நானே நிச்சயம் விளக்கம் அளிக்கமாட்டேன்.. விளக்கத் தவறுகள் என் கவிதையின் தவறாகப் போய்விட வாய்புண்டு..

kavitha
19-06-2008, 06:56 AM
என் கண்களுக்கு மாயை எனத் தோன்றும் ஒரு காட்சி, அது உருமாறவில்லை ஆனால் உருமாறியதாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்................ - இதுதான் கவிதையின் கரு.

இந்தக் கோணத்தில் நீங்கள் பார்க்கலாம்.
இப்போது புரிகிறது :) நன்றி.

விளக்கம் அளித்ததால் வந்த வினை
இல்லை. இது தான் தெளிவின் ஆரம்பம்.

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிவிட்டார்கள் என்பதைச் சொல்லத்தான் ஏகப்பட்ட கவிதைகள் இருக்கின்றனவே! ஆனால் அப்படி மாறியதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் பற்றிய கவிதை...
நன்று:)

முதல் முயற்சி என்பதால் சற்று தடுமாற்றம் இருக்கலாம்... அடுத்தடுத்த முயற்சிகளில் நிச்சயம் வெல்லுவேன்.

இக்கவிதையே வெற்றியின் ஆரம்பம் தானே ஆதவா.:icon_b:

என் பார்வையில்....
இது ஒரு அழகிய படக்கவிதை. ஓவியத்தைக்கண்முன்னே வரைந்த கவிதை.

முன்னேறத்துடிக்கும் இளைஞன் (சிறுவன்) தன்னால் முடிந்தளவிற்கு பொருளை (கற்களை) சேகரிக்கிறான். குடும்பம் (கவிதை) ஏற ஏற விமர்சனப் (சுமை) பிடி தளர்கிறது. கவலை (மலை) அவனை நசுக்குகிறது. காலம் நகர்கிறது.... வளர்கிறான்... ஆனாலும் அவன் பாரம் தீரவில்லை.... நொடிமுள் ஓடினாலும் அவன் பாரம் தீரவில்லை... எவ்வளவு கற்களை சேகரித்தாலும் முன்னேற முடியவில்லை.

இதுதான் இன்றைய இளைஞர்களின் நிலை..... என்பதுவாகக் கவிதை ஒரு சோகப்பாடல் இயற்றுகிறது.

ஆனால் அந்த முயற்சிகளில் எனது கவிதைக்கு நானே நிச்சயம் விளக்கம் அளிக்கமாட்டேன்.. விளக்கத் தவறுகள் என் கவிதையின் தவறாகப் போய்விட வாய்புண்டு..
இங்கே தான் தவறு செய்கிறாய். உன் கவிதைக்கு நீ தானேயப்பா பொறுப்பு. எழுதியவருக்குத்தான் அதன் அர்த்தம் தெரியும். மாடர்ன் ஆர்ட் என்றாலும் வரைந்தவர் அதற்கான காரணத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லவேண்டும். ஓவியர்கள் அத்தகைய படங்களுக்கு ஏற்ற தலைப்பை வழங்கி இருப்பார்கள். அது தான் அர்த்தத்திற்கான துணுக்காக (hint) இருக்கும்.
நீ இக்கவிதைக்கு தலைப்பையாவது தந்திருக்கலாம். :fragend005:

நானே நிச்சயம் விளக்கம் அளிக்கமாட்டேன்... என்றால்... என்ன அர்த்தம்? :sauer028::confused:

இளசு
19-06-2008, 08:53 PM
தொடர்பு கொள்ளலே வாழ்க்கை..

செல்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டால்தான் - அது ஓர் உயிரி..

கடிதம், கதை, கவிதை என எழுத்து வடிவம்..
புதிர், விடுகதை எனும் தூண்டும் வடிவம்..
ஓவியம், இசை எனும் மொழி நீர்த்த வடிவம்..

எல்லாமே தொடர்பு கொள்ளலின் அவதாரங்களே!

நான் யாரைத் தொட வேண்டும்?
யார் யார் என்னைத் தொடும் தூரத்தில் நானிருக்க வேண்டும்?

இதையொட்டியே தொடர்பு ஊடகத்தின் வடிவம்..

குழந்தையுடன்.... உம்மா, மூச்சா, பப்லு, பப்பு எனப் பேசுவது
ஏன் என விளங்குமே இப்போது!

நாரதகான சபா ரசிகர் முன் - தோடியில் தொடர்பு..

Quick clues - குறுக்கெழுத்துப்புதிருடன் சில ஆயிரம் பேர் தொடர்பு..
அதே Clues - Cryptic என்றால் சில நூறுபேர் தொடர்பு..

படைப்பாளியின் உரிமை - தேர்ந்தெடுப்பதில் !
படிப்பவர் உரிமை - கையில் எடுப்பதில்!

ஆனாலும் கவீ சொன்னதுபோல்,
சிலர் மட்டுமே தொட்டு விளங்க முற்படும் ''கடின''வகைப் படைப்புகளில்
வந்த சிலரின் விளக்கங்களை வழிநடத்தி, தெளிவாக்கும் பொறுப்பு
படைப்பாளிக்கு இருப்பதாய் நானும் எண்ணுகிறேன் ஆதவா..

-------------------------------------------------

சரயூ நதிக்கரையில் என ஒரு கவிதை நான் எழுதினேன்.
முழுதும் சில உணர்வுகளை உள்ளடக்கி
முற்றிலும் உருவகங்கள் கொடுத்து..

பலவகைப் புரிதல்கள் நம் மன்ற சொந்தங்களிடமிருந்து..

அண்மையில் கண்மணி காத்திருத்தல் பற்றி எழுதியதில்
அவர் உள்வைத்த மனைவி-பிரிவு-உறவினர் நடப்பு
மொத்தமாய்த் தவற விட்டேன்..

-------------------------------
நெடும்புனலின் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

இதைவிடவா ஒரு நவீனம்?

சொல்லவந்ததை வாசகனின் யூகம், அடுத்தநிலைத் தேடலுக்கு விடுவது
கவிதைக்குப் புதிதா என்ன?

உவமை, உருவகம், இருண்மை, படிமம், புதிர், விடுகதை -
இது எல்லாமே கூட்டத்தில் தம் அதிர்வை ஒத்த ஒரு சிலரை
இனம் காண அறிவைப் பயன்படுத்தி உருவாக்கிய குழூஉக்குறி!

அதன் குறிக்கோள் அந்த சிலரை தொடர்பு கொள்வதே..
அதிர்வலை எண்ணில் அகன்றவர்கள் -?
புற ஊதாக்கதிரை நாம் பார்க்க முடியாதது - போல!

அதைக் கண்டு அமரும் தும்பியே
இந்தக் கவிமலர்களின் நோக்கம்..

அந்த வகையில் -
இந்த வகைக் கவிதைகள்
புரிந்தவர்கள், புரியாதவர்கள்
படைப்பவர்கள், படைக்காதவர்கள்
எல்லாருமே மகிழ்ச்சியாய் இருக்கக் கடவது!

செல்வா
19-06-2008, 10:05 PM
அதன் குறிக்கோள் அந்த சிலரை தொடர்பு கொள்வதே..
அதிர்வலை எண்ணில் அகன்றவர்கள் -?
புற ஊதாக்கதிரை நாம் பார்க்க முடியாதது - போல!

அதைக் கண்டு அமரும் தும்பியே
இந்தக் கவிமலர்களின் நோக்கம்..

:confused::confused::confused::confused: செல்வா...... எஸ்கேப்....

கவிதா அக்காவோட விளக்கத்த படிச்சதும் என் மனசுக்குத் தோன்றிய விளக்கத்த சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடுறன்.

கவிதை விமர்சனம் - கலையைக் குறிக்கிறது... முதற்காட்சி சிறுவன் இன்னும் வாழ்வின் பாரம் சுமக்காத நிலை...
மாறுகின்ற காட்சி - காலம் மாறுகிறது..... பொருள் தேடி வாழ்வை நிலைப்படுத்த வேண்டிய தேடலில் கலையின் தாகம் காணாமல் போகிறது..
இறுதிக்காட்சி - உண்மையில் கலை காணாமல் போவதில்லை அவன் அடிமனதில் அப்படியே தான் இருக்கிறது... மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் பொது .. விழித்துக் கொள்கிறது.

அட அப்படியே என்னோட வாழ்க்கைங்க..

கல்லூரி - கவலையற்ற வாழ்க்கை - கலைக்குழுக்கள் - கூத்துகள் - நாடகங்கள் -

வேலை - தொழில் - தோல்வி - வேலை - வேட்டை - ஊர் விட்டு ஊர் பயணம் - காணாமல் போன கலை - கழுத்தை இறுக்கும் குடும்ப பாரம்

தமிழ் மன்றம் - விலகிய மாயக்காட்சி - வாய்ப்புகள் கிடைத்தது - கலை விழித்துக் கொண்டது - படைப்புக்கள் (கவிதை விமர்சனம்) - கலை விழிக்கும் போது - குடும்ப பாரங்கள் சிறிதாய் போய்விட்டது

உண்மையில் காட்சி மாறவில்லை

அபாரம் ஆதவா........ எனக்கே ஒப்புமைப்படுத்தி பார்க்க தோணிடுச்சே..
ஆனா சரிதானாணு சொல்லணும்.

kavitha
20-06-2008, 03:45 AM
நெடும்புனலின் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

இதைவிடவா ஒரு நவீனம்?

அண்ணா, இக்குறளை விளக்க வேண்டுகிறேன்.

---------------------------------------------

கவிதா அக்காவோட விளக்கத்த படிச்சதும் என் மனசுக்குத் தோன்றிய விளக்கத்த சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடுறன்.

கவிதை விமர்சனம் - கலையைக் குறிக்கிறது... முதற்காட்சி சிறுவன் இன்னும் வாழ்வின் பாரம் சுமக்காத நிலை...
மாறுகின்ற காட்சி - காலம் மாறுகிறது..... பொருள் தேடி வாழ்வை நிலைப்படுத்த வேண்டிய தேடலில் கலையின் தாகம் காணாமல் போகிறது..
இறுதிக்காட்சி - உண்மையில் கலை காணாமல் போவதில்லை அவன் அடிமனதில் அப்படியே தான் இருக்கிறது... மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் பொது .. விழித்துக் கொள்கிறது.

அட அப்படியே என்னோட வாழ்க்கைங்க..

கல்லூரி - கவலையற்ற வாழ்க்கை - கலைக்குழுக்கள் - கூத்துகள் - நாடகங்கள் -

வேலை - தொழில் - தோல்வி - வேலை - வேட்டை - ஊர் விட்டு ஊர் பயணம் - காணாமல் போன கலை - கழுத்தை இறுக்கும் குடும்ப பாரம்

தமிழ் மன்றம் - விலகிய மாயக்காட்சி - வாய்ப்புகள் கிடைத்தது - கலை விழித்துக் கொண்டது - படைப்புக்கள் (கவிதை விமர்சனம்) - கலை விழிக்கும் போது - குடும்ப பாரங்கள் சிறிதாய் போய்விட்டது

உண்மையில் காட்சி மாறவில்லை

அட.... என்ன ஒரு அருமையான நேர்முகப்பார்வை! சூப்பர்ப்...!!

இளசு
20-06-2008, 07:09 AM
அன்பு செல்வா

பூக்களைப் பார்க்கும்போது -
நமக்குத் தெரியும் வண்ணங்கள் வேறு.
நம் பார்வைக்குப் புலப்படும் VIBGYOR -நிறப்பிரிகைக்குள் இருக்கும்
பல வண்ணங்கள் மட்டுமே!

நமக்குப் புலப்படாத UV -புற ஊதா வண்ணமும் மலரில் உண்டு..
குறிப்பாய் மகரந்தம் இருக்கும் இடத்தில் அவ்வண்ணம் மின்னும்.
அதைக் கண்டு அங்கே அமரும் தும்பியும் தேனீயும் வண்டும்..

இது அறிவியல் உண்மை!

ஒரு கவிதையின் மேம்போக்கான பொருள் அறிபவன் - சாதா ரசிகன்..
மறைபொருள், உட்பொருள் உய்த்தறிபவன் - சிறப்பு ரசிகன்..

சிறப்பு ரசிகன் + அவனுக்குத் தீனிபோடும் சிறப்புக் கவிஞன் = ஒரு தனி வட்டம்.

சிலர் அந்த வட்டத்துக்குள் மட்டும் இருப்பர்.
சிலர் உள்ளே -வெளியே ஆட்டக்காரர்கள்..

எல்லாருமே கவிஞர்கள் - சுவைஞர்களே!
எல்லார் குறியும் மகிழ்வதே!

இளசு
20-06-2008, 07:15 AM
அன்பு கவீ

நீரில் போரென்றால் எதையும் முதலை வெல்லும்..
நீரை விட்டு நீங்கினால் - அதனை மற்றவை வென்றுவிடும்!

இத்துடன் வள்ளுவர் முடித்துக் கொள்கிறார்.

இருக்கும் இடம் பொருத்து தன் வலிமையின் வீச்சு மாறும்..

பால், அதிகாரத் தலைப்பை வைத்து
இது மன்னனுக்கு சொல்லப்பட்ட கருத்து என உணர்கிறோம்.

போரில் வெல்ல படைபலம் மட்டும் போதாது.
களம், காலம் சரியாய் இருக்க வேண்டும்.

நெப்போலியனின் ரஷ்யப் போர் முயற்சி ... நல்ல எடுத்துக்காட்டு.

இதை இன்றைய சமூகச் சூழல் - பன்னாட்டு நிறுவனத்திலிருந்து,
புகுந்த வீடா பிறந்தவீடா வரை பொருத்திக்கொண்டே போகலாம்..!

செல்வா
20-06-2008, 08:05 AM
ஒரு கவிதையின் மேம்போக்கான பொருள் அறிபவன் - சாதா ரசிகன்..
மறைபொருள், உட்பொருள் உய்த்தறிபவன் - சிறப்பு ரசிகன்..

சிறப்பு ரசிகன் + அவனுக்குத் தீனிபோடும் சிறப்புக் கவிஞன் = ஒரு தனி வட்டம்.

சிலர் அந்த வட்டத்துக்குள் மட்டும் இருப்பர்.
சிலர் உள்ளே -வெளியே ஆட்டக்காரர்கள்..

எல்லாருமே கவிஞர்கள் - சுவைஞர்களே!
எல்லார் குறியும் மகிழ்வதே!

உங்கள் விளக்கத்தைப் புரிந்து கொண்டேன் அண்ணா ... நான் ஓடிப்போக இருந்ததன் காரணம் இதுதான்.
சிறுவயதிலிருந்தே கதைகள் வாசித்திருக்கிறேன். அதுவும் வாசித்தால் உடனே புரியும்படியான நேரடி பொருள்கொண்ட ஜனரஞ்சக கதைகள்.
கவிதைகள் வாசித்ததே இல்லை எனலாம்.
ஆனாலும் கல்லூரி காலத்தில் கவிதை என்றால் என்ன என்று தெரியாமலே கிறுக்கியது உண்டு ஏன் அதற்கு முன்பும் கூட.
எனக்கு கற்று தந்த அனைவருமே கல்லூரி வரை தேர்வுக்காக கற்று தந்தார்களே ஒழிய மொழியைப் புரியவைத்து மொழியின் பாரிமாணங்களை புகுத்தவில்லை.
நானும் முயற்சிக்கவில்லை. தெரியாத ஒன்றிற்கு எங்ஙனம் முயற்சிப்பது.
ஆகா இந்த மறைபொருள் ஒன்றிருக்கும் இந்த மறைபொருளைத் தேடல் போன்ற எண்ணங்களே இல்லாமல் போனதால்... தடுமாற்றம் கவிதைகளைப் புரிந்து கொள்வதில்.
மன்றம் வந்த பிறகு தான் தமிழை இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். மெல்ல மெல்ல அந்த சூட்சுமத்தை உணரத் தலைப்படுவேன். உங்கள் அனைவர் வழிநடத்தலுடன். விளக்கத்திற்கு நன்றி அண்ணா :)

செல்வா
20-06-2008, 08:15 AM
அட.... என்ன ஒரு அருமையான நேர்முகப்பார்வை! சூப்பர்ப்...!!

நன்றி அக்கா...... இதுவரை இத்தகைய கவிதைகள் என்றால் அந்தப் பக்கத்திலே வரமாட்டேன்... ஓடியே போயிடுவேன். இப்பல்லாம் உக்காந்து வாசிச்சு புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்.

kavitha
20-06-2008, 08:36 AM
அன்பு கவீ

நீரில் போரென்றால் எதையும் முதலை வெல்லும்..
நீரை விட்டு நீங்கினால் - அதனை மற்றவை வென்றுவிடும்!

இத்துடன் வள்ளுவர் முடித்துக் கொள்கிறார்.

இருக்கும் இடம் பொருத்து தன் வலிமையின் வீச்சு மாறும்..

பால், அதிகாரத் தலைப்பை வைத்து
இது மன்னனுக்கு சொல்லப்பட்ட கருத்து என உணர்கிறோம்.

போரில் வெல்ல படைபலம் மட்டும் போதாது.
களம், காலம் சரியாய் இருக்க வேண்டும்.

நெப்போலியனின் ரஷ்யப் போர் முயற்சி ... நல்ல எடுத்துக்காட்டு.

இதை இன்றைய சமூகச் சூழல் - பன்னாட்டு நிறுவனத்திலிருந்து,
புகுந்த வீடா பிறந்தவீடா வரை பொருத்திக்கொண்டே போகலாம்..!
இப்போது தெளிவாகப்புரிந்தது அண்ணா. முதல்ல எனக்கு முதல் வரி மட்டுமே புரிந்தது(முதலை கதைங்கறதாலேயோ என்னவோ முதல முதலயா வருதுண்ணா). இப்போது எனக்கு இரண்டாவது வரியிலிருந்து இறுதிவரி வரை புரிகிறது. நன்றி அண்ணா :)

------------------------------------

இப்பல்லாம் உக்காந்து வாசிச்சு புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்.
__________________
அன்புடன்..,
செல்வா
நல்ல முன்னேற்றம் செல்வா. படிக்க படிக்க எழுதத்தூண்டும். விரைவில் நீங்களும் இத்தகைய கவிதை எழுத வரவேற்கிறேன்.

ஆதவா
20-06-2008, 02:01 PM
இங்கே தான் தவறு செய்கிறாய். உன் கவிதைக்கு நீ தானேயப்பா பொறுப்பு. எழுதியவருக்குத்தான் அதன் அர்த்தம் தெரியும். மாடர்ன் ஆர்ட் என்றாலும் வரைந்தவர் அதற்கான காரணத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லவேண்டும். ஓவியர்கள் அத்தகைய படங்களுக்கு ஏற்ற தலைப்பை வழங்கி இருப்பார்கள். அது தான் அர்த்தத்திற்கான துணுக்காக (hint) இருக்கும்.
நீ இக்கவிதைக்கு தலைப்பையாவது தந்திருக்கலாம். :fragend005:

நானே நிச்சயம் விளக்கம் அளிக்கமாட்டேன்... என்றால்... என்ன அர்த்தம்? :sauer028::confused:

அக்கா, தன் கவிதையை தானே விமர்சிப்பது தவறான ஒன்று என்பதை ஆரம்பம் முதலே மனதிலே விதைத்திருக்கிறேன். அப்படி போர்வையில் விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால் விளக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் நிலையில் அந்த சங்கோசம் நெளிந்து விளக்கத்தை விளக்கத்தெரியாமல் விளக்குகிறேன்.

மற்றவர் படைப்பை விளக்க வேண்டுமெனில் விளக்கு வைத்து பார்க்கும் கண்கள் தன் படைப்பு எனும்போது நாணிக் குறுகி எழுத்தை ஏளனம் செய்கிறது அக்கா.

அப்படியொரு கருத்துப்பிழையான விளக்கத்தை என் கவிதைக்குத் தர நான் தயாராக இல்லை அதாவது அப்படி ஒரு நிலைக்கு நான் மன உறுதியைப் பெற்றிருக்கவில்லை என்பதையே குறிப்பிட்டேன்.

இங்கு வந்து கற்றுக் கொண்டதுதான் கவிதைக்கான பரிமாணங்கள். அவை மன்றத்தில் எப்படி எங்கு என்பது தெரியாது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு பதிவின் போதும் என்னை நானே வளர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன். அந்த முயற்சி விளக்கப் பதிவில் தோற்றுவிடக்கூடாது என்றும் சமநிலைப்படுத்தவும் (balance) கூறுகிறது.

இதற்கு என்ன தலைப்பு வைக்கவேண்டுமென்றே தெரியவில்லை. மாயத்தோற்றம் என்று வைத்திருந்தால் அது அவனது காட்சிப்பிழையாக கருத்தில் சென்றிருக்கும், அல்லது எனக்குச் சரியாக தலைப்பை வைக்கத்தெரியவில்லை... அதனாலேயே இதனை தலைப்பில்லாத கவிதைகள் பட்டியலில் சேர்த்துவிட்டேன்.

அத்தகைய பிழைகளுக்கு களைவு உண்டு. பிற்காலத்தே!

நன்றியுடன்
ஆதவன்

ஆதவா
20-06-2008, 03:01 PM
தொடர்பு கொள்ளலே வாழ்க்கை..

நெடும்புனலின் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

இதைவிடவா ஒரு நவீனம்?

அண்ணா. அத்தொடர்பு விட்டுப்போகிவிடுமோ என்ற நிலையில் மனது உருட்டுக்கட்டையில் பதித்த கால்தடமாய் தள்ளாடுகிறது.

சில தொடர்புகளின் வட்டாரம் பெரிய அளவில் இருக்கும். அப்பொழுது அக்குழுக்களின் மனசஞ்சரிப்பைச் சரியாக கணித்துச் சொல்லுபவன் தலைவனாக இருக்கலாம். அத்தனை மனத்திற்கும் ஒருதலைபட்சமில்லாத தொடர்பு ஒன்று வேண்டித்தான் புறப்பட்டு வருகிறோம்..

தொடர்பு குறுகும் போது, அவ்வட்டாரத்திலிருந்து பிதுங்கி விழுந்துவிடுவோமோ என்ற அச்சமும் இருக்கிறது. ஆங்கொரு கால் ஈங்கொருகால் வைத்து கட்டம் கட்டிவிடத்தான் மனம் எண்ணுகிறதே தவிர ஓரவஞ்சனையாக ஒருத் தளத்திலே ஒதுங்க ஒருபோதும் நினைப்பதில்லை.

கவியக்கா சொன்னது போல விளக்கம் தருவது படைப்பாளியின் கடமை என்பதை உணருகிறேன். அதற்குண்டான மனப்பக்குவம் அடையவில்லை என்பதையும் கூட...

அதைக் கண்டு அமரும் தும்பியே
இந்தக் கவிமலர்களின் நோக்கம்..

அத்தகைய தும்பிகளை உருவாக்குவதும் இம்மன்றத்தின் தலையாய கடமையல்லவா?

நீண்ட விளக்கத்திற்கு நன்றி அண்ணா அதிலும் குறிப்பாய் திருக்குறள்...

ஆதவா
20-06-2008, 03:12 PM
:confused::confused::confused::confused: செல்வா...... எஸ்கேப்....

அட அப்படியே என்னோட வாழ்க்கைங்க..

அபாரம் ஆதவா........ எனக்கே ஒப்புமைப்படுத்தி பார்க்க தோணிடுச்சே..
ஆனா சரிதானாணு சொல்லணும்.

மிக்க நன்றி செல்வாண்ணா! உத்தகைய உணர்வுகளைத்தான் படைக்கவேண்டுமென்ற ஆவல் பெறுகிற்று. ஓரளவு வெற்றியும் கிடைத்தது என்றே சொல்லலாம்.

இது ஒரு போதையாக இருக்கலாம். போதையின் கண்களுக்கு எல்லாமே மாறுதலாகத் தெரியும். ஆனால் காட்சிகள் மாறுவதில்லை.. நமது எண்ணத்தின் மாற்றமே!

தமிழ்மன்றம் உங்கள் காட்சியின் முன் தெரிவதானால் இக்கவிதை மன்றத்திற்கே சமர்ப்பணம்.

ஆதவா
20-06-2008, 03:17 PM
அன்பு செல்வா

நமக்குப் புலப்படாத UV -புற ஊதா வண்ணமும் மலரில் உண்டு..
குறிப்பாய் மகரந்தம் இருக்கும் இடத்தில் அவ்வண்ணம் மின்னும்.
அதைக் கண்டு அங்கே அமரும் தும்பியும் தேனீயும் வண்டும்..

சிலர் அந்த வட்டத்துக்குள் மட்டும் இருப்பர்.
சிலர் உள்ளே -வெளியே ஆட்டக்காரர்கள்..

எல்லாருமே கவிஞர்கள் - சுவைஞர்களே!
எல்லார் குறியும் மகிழ்வதே!

இதுதான்... இதுதான்....

இருவகை சொந்தங்களையும் சுவைக்க வைக்கவேண்டும்.. அதேசமயம் ஒரு சொந்தம் மறு சொந்தத்தை நிச்சயம் தெரிந்துகொள்ளவும் வேண்டும்..

UV தும்பி... மிகச்சிறந்த உதாரணம்... கலக்கல் அண்ணா..

ஆதவா
20-06-2008, 03:27 PM
உங்கள் விளக்கத்தைப் புரிந்து கொண்டேன் அண்ணா ... நான் ஓடிப்போக இருந்ததன் காரணம் இதுதான்.
சிறுவயதிலிருந்தே கதைகள் வாசித்திருக்கிறேன். அதுவும் வாசித்தால் உடனே புரியும்படியான நேரடி பொருள்கொண்ட ஜனரஞ்சக கதைகள்.
கவிதைகள் வாசித்ததே இல்லை எனலாம்.
ஆனாலும் கல்லூரி காலத்தில் கவிதை என்றால் என்ன என்று தெரியாமலே கிறுக்கியது உண்டு ஏன் அதற்கு முன்பும் கூட.
எனக்கு கற்று தந்த அனைவருமே கல்லூரி வரை தேர்வுக்காக கற்று தந்தார்களே ஒழிய மொழியைப் புரியவைத்து மொழியின் பாரிமாணங்களை புகுத்தவில்லை.
நானும் முயற்சிக்கவில்லை. தெரியாத ஒன்றிற்கு எங்ஙனம் முயற்சிப்பது.
ஆகா இந்த மறைபொருள் ஒன்றிருக்கும் இந்த மறைபொருளைத் தேடல் போன்ற எண்ணங்களே இல்லாமல் போனதால்... தடுமாற்றம் கவிதைகளைப் புரிந்து கொள்வதில்.
மன்றம் வந்த பிறகு தான் தமிழை இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். மெல்ல மெல்ல அந்த சூட்சுமத்தை உணரத் தலைப்படுவேன். உங்கள் அனைவர் வழிநடத்தலுடன். விளக்கத்திற்கு நன்றி அண்ணா :)

செல்வாண்ணா..

நானும் அவ்வளவு அதிகமாக மறைபொருள் கவிதைகள் படித்தது கிடையாது. மன்ற வரலாற்றில் எனது பல கவிதைகள் ஏனோ அப்படியே அமைந்துவிடுகிறது.. சில கொடுமையானதுமாய்.. :D

ஆனால் இது தேடலில் விளைந்தவை. ஒவ்வொரு அடுக்குகளையும் பிரித்து ஆராய்ந்த பொழுது கிடைத்த தேன். சில வார்த்தைகளை அடக்கி சுருக்கி, தானாகவே அமைந்துகொண்டது. இன்னும் சொல்லப்போனால் கவிதைக்கு வார்த்தைச் சுருக்கம் தேவை என்று ஆழ்மனத்தில் கள்ளத்தனமாய் பதுக்கி வைத்திருப்பதாலோ என்னவோ அவை அவ்வாறே அமைந்துவிடுகிறது...........

பென்ஸ்
21-06-2008, 02:05 AM
இந்த கவிதை என்னால் பலமுறை வாசிக்க பட்டது....
பலவகையாக புரியப்பட்டது....

விமர்சனங்கள்....
கவிதை எழுதியவரின் குறிக்கோளை விமர்சனங்கள் நிறைவேற்றிவிட்டன...
வாசிக்கவந்தவர்களின் ஆச்சரியத்தை பெற்று கொண்டன.

இளசுவின் விமர்சனத்துக்காகவே அனைவரும் கவிதை போல ஒரு உணர்வு... இந்த கவிதைக்கு அதில் வெற்றி...

தாமரையும், கவிதாவும் மன்றத்தில் வரும் போது கவிதைகள் உயிருடன் இருக்கும் மனிதனின் வயறு எங்கிருக்கிரது, கிட்னி எங்கிருக்கிறது, இதயம், நுரையீரல் எல்லா(ரு)ம் எங்கிருக்கிறது என்று கத்தியின்றி ரத்தம் இன்றி வெட்டி பார்க்கபடுகிறது....

..............................................................

ஆதவா....
நீ இந்த கவிதை எழுதியதின் வெற்றியை பெற்றுவிட்டாய்....

நான் சிறுவனாக இருக்கும் போது தூர்தர்சனில் கார்ட்டூன் என்ற பெயரில் (!!!!!) படங்களை மாற்றி மாற்றி காட்டி கதை சொல்லி வருவார்கள்....

இத கவிதையை வாசிக்கும் போது அதே உணர்வு....

இப்போ விமர்சனம்.....

This world is round...!!!!! (ஆங்கிலம் மன்னிக்க, எல்லாம் ஒரூ பஞ்சூக்காக)

படுத்து...
ஊர்ந்து...
தள்ளாடி...
நடந்து...
ஓடி...
நடந்து...
தள்ளாடி..
ஊர்ந்து...
படுத்து...

என்று மீண்டும் துவக்கத்தை நோக்கி....

இது ஒரு சுழர்ச்சி... எல்லோரும் பின்பற்றி சென்றுதான் ஆக வேண்டும்...

துரும்பிலிருந்து இரும்பெடுத்து
எலும்பொடித்து துரும்பாகினாய்...

எல்லாம் துவக்கம் நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது....

என் எண்ணக்களும்...
மீண்டும் மீண்டும்...
கவிதையின் துவக்கம் நோக்கி...

வாழ்த்துகள்...

ஆதவா
21-06-2008, 05:59 AM
இந்தக் கவிதைக்கு ஏற்கனவே அண்ணன் பார்வை பலமுறை பட்டும், இன்னும் நம்ம லோக்கல் அண்ணன் (அதாங்க, பெங்களூரூ அண்ணன்) பார்க்கலையேன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்,,,,

அந்தவகையில் இக்கவிதைக்கான மருத்துவம் முழுமை பெற்று ஆரோக்கியமாக இருப்பதாக உணருகிறேன்.

உங்கள் புரிதல் சரியென்றால் எனது எழுத்துக்களின் சரியென்பேன்...

நன்றி பென்ஸ் அண்ணா :icon_b:

மதுரகன்
21-06-2008, 01:23 PM
ஆதவா நீண்ட நாட்களின் பின் பார்க்கும்போது உங்களின் எழுத்தின் தரம் பல மடங்கு உயர்ந்திருப்பது புரிகின்றது. நானும் உங்கள் கருத்துக்கு உடன் பட்டவன் ஒவ்வொரு கவிஞனின் உணர்வுகளுமே கவிதைகளாகப் பிறக்கின்றது. அது பார்ப்பவர்களின் ஏதாவதொரு உணர்வுடன் பொருந்தி அர்த்தம் பெறப்படுகின்றது. இதுதான் புதுக்கவிதையின் தத்துவம். கவிக்கோ அப்துல் ரகுமான் போன்ற பெருங்கவிஞர்கள் சென்ற பாதையும் அதுவே..

ஆதவா
22-06-2008, 06:46 AM

மதுரகன், மிக்க நன்றி.. எல்லாமே மன்ற சொந்தங்கள் தந்த பாடம்.. பயிற்சி.

kavitha
27-06-2008, 08:49 AM
அக்கா, தன் கவிதையை தானே விமர்சிப்பது தவறான ஒன்று என்பதை ஆரம்பம் முதலே மனதிலே விதைத்திருக்கிறேன். அப்படி போர்வையில் விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால் விளக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் நிலையில் அந்த சங்கோசம் நெளிந்து விளக்கத்தை விளக்கத்தெரியாமல் விளக்குகிறேன்.

மற்றவர் படைப்பை விளக்க வேண்டுமெனில் விளக்கு வைத்து பார்க்கும் கண்கள் தன் படைப்பு எனும்போது நாணிக் குறுகி எழுத்தை ஏளனம் செய்கிறது அக்கா.

அப்படியொரு கருத்துப்பிழையான விளக்கத்தை என் கவிதைக்குத் தர நான் தயாராக இல்லை அதாவது அப்படி ஒரு நிலைக்கு நான் மன உறுதியைப் பெற்றிருக்கவில்லை என்பதையே குறிப்பிட்டேன்.

இங்கு வந்து கற்றுக் கொண்டதுதான் கவிதைக்கான பரிமாணங்கள். அவை மன்றத்தில் எப்படி எங்கு என்பது தெரியாது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு பதிவின் போதும் என்னை நானே வளர்த்துக் கொள்ள முயற்சிக்கிறேன். அந்த முயற்சி விளக்கப் பதிவில் தோற்றுவிடக்கூடாது என்றும் சமநிலைப்படுத்தவும் (balance) கூறுகிறது.

இதற்கு என்ன தலைப்பு வைக்கவேண்டுமென்றே தெரியவில்லை. மாயத்தோற்றம் என்று வைத்திருந்தால் அது அவனது காட்சிப்பிழையாக கருத்தில் சென்றிருக்கும், அல்லது எனக்குச் சரியாக தலைப்பை வைக்கத்தெரியவில்லை... அதனாலேயே இதனை தலைப்பில்லாத கவிதைகள் பட்டியலில் சேர்த்துவிட்டேன்.

அத்தகைய பிழைகளுக்கு களைவு உண்டு. பிற்காலத்தே!

உனது முதல்வரியில் எனக்கு உடன்பாடில்லை ஆதவா. செதுக்கல்கள் தான் மிளிரச்செய்யும் என்பதில் உனக்கும் எனக்கும் ஒத்த உடன்பாடு உண்டு. நம் கவிதையை நாமே ஒரு வாசகராக நின்று படிக்கும்போது அதன் குறைகளை (பிழைதிருத்தமாகக்கூட இருக்கலாம்) கண்டறிய வாய்ப்புண்டு. தவிர, தன்னிலை விமர்சனம் என்பது தற்பெருமையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
இமைப்பொழுதில் தோன்றும் கவிதைகளின் வீச்சு, வீரியம் அதிகம். நிதானமாக இயற்றப்படும் பாடல்களை மனம் அசை போட்டபடியே இருக்கும். இறக்கியும் வைக்க முடியாமல் சுமந்தும் திரியமுடியாமல் மூளைக்குள் படும் அவஸ்தை இனிய சுமை. அப்படி எழுதப்படும் கவிதைகளைக்கூட சில மாதங்கள் கழித்து படிக்கும்போது இதை இப்படி எழுதியிருக்கலாமோ.... இங்கே இந்த வார்த்தை பொருத்தமாக இருந்திருக்குமோ என்று தோன்றும். திருப்தியின்மை வளரும் கலைஞனின் மூலதனம். எனவே உனது கவிதைவிளக்க சங்கோசம் தேவையற்றது. ஆனால் உறுதி மிக மிக அவசியமானது. நாம் எழுதியதில் நமக்கு எந்த ஐயப்பாடும் இல்லை எனும்போது மட்டுமே அதை வெளியிடவேண்டும். முழுமையான கவிதை அப்போது தான் கிடைக்கும். உறுதியுடன் தொடர்ந்து எழுத எனது வாழ்த்துகள்.

-----------------------------------------------------------------

தாமரையும், கவிதாவும் மன்றத்தில் வரும் போது கவிதைகள் உயிருடன் இருக்கும் மனிதனின் வயறு எங்கிருக்கிரது, கிட்னி எங்கிருக்கிறது, இதயம், நுரையீரல் எல்லா(ரு)ம் எங்கிருக்கிறது என்று கத்தியின்றி ரத்தம் இன்றி வெட்டி பார்க்கபடுகிறது....
ஆஹா.... என்ன பென்சு இப்படி சொல்லீட்டீங்க? :(
ஒன்னைத்தவிர மற்ற அத்தனையையும் சொல்லிட்டீங்க. அது தாங்க மூளை. அறுவைச்சிகிச்சை மனிதத்திற்கு மட்டும்; மனிதர்களுக்கு அல்ல.

ஆதவா
29-06-2008, 05:59 AM
நீங்கள் சொல்வதிலிருந்து யோசித்து வருகிறேன் அக்கா. சில சமயங்கள் வரம்பு மீறி சென்றுவிடுவேனோ என்ற தவறான மனக்கருத்து என்னுள். மற்றபடி உங்கள் எண்ணமே எனக்கும்.. இதுவரை முழு திருப்தியாக ஒரு கவிதையும் எழுதவில்லை என்பதே உண்மை. அதை அங்கங்கே சொல்லியிருக்கிறேன். இந்தக் கவிதையும் அப்படித்தான்.. கொஞ்சம் வார்த்தைகள் மாற்றியிருக்கலாமோ என்ற உறுதியின்மை...
மிகுந்த நன்றியுடன்.
ஆதவன்...

பென்ஸ்
30-06-2008, 01:53 AM
ஆஹா.... என்ன பென்சு இப்படி சொல்லீட்டீங்க? :(
ஒன்னைத்தவிர மற்ற அத்தனையையும் சொல்லிட்டீங்க. அது தாங்க மூளை. அறுவைச்சிகிச்சை மனிதத்திற்கு மட்டும்; மனிதர்களுக்கு அல்ல.

இதில் என்ன தவறிருக்கிறது கவி...

இந்த வகை ஆழமான்ன அலசலுக்குதானெ எல்லோரும் மன்றம் வருகிறோம்....
உங்களை போன்றாவர்களால் ஆரோக்கியமாக செய்யமுடிகிறது....

நான் செய்ய நினைத்தால் .... பேசியன்ட் குளோஸ்..... அதனால் தான் புரிந்தும் புரியாமலும் பாராட்டுற மாதிரி மட்டும் எழுதிட்டு எஸ்கேப் ஆயிடுறேன்....

kavitha
30-06-2008, 07:35 AM
இதில் என்ன தவறிருக்கிறது கவி...

இந்த வகை ஆழமான்ன அலசலுக்குதானெ எல்லோரும் மன்றம் வருகிறோம்....
உங்களை போன்றாவர்களால் ஆரோக்கியமாக செய்யமுடிகிறது....
இதை நேர்முகமாக எத்தனை பேர் எடுத்துக்கொள்வார்கள் பென்ஸ்? ஆதவன், மற்றும் சிலர் இதில் விதிவிலக்கு....

பாராட்டிப்போகிறவர்கள் மத்தியில் எனது சுட்டுப்பார்வை சுட்டமட்டும்தான்; சுட்டுவிட அல்ல. வெறும் முகஸ்துதி செய்ய என் மனம் ஒப்ப மறுக்கிறது. ஏனெனில் இங்கே முகஸ்துதிக்கு அவசியமே இல்லை. எழுத்தையும் எண்ணத்தையும் நோக்கியே திறனாய்வு. அது மேலும் சிறப்பான பதிவைத்தருவதற்கே அன்றி, உற்சாகத்தை குறைக்க அல்ல. உங்களைப்போன்ற பண்பட்டவர்கள் புரிந்துகொள்ளக்கூடும்; புதியவர்களிடம் நான் பதிலளிக்காமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன். நன்றி.

அக்னி
30-06-2008, 03:33 PM
மரணப் பிடிக்குள் மனிதன்... (நிச்சயம்)
மனிதப் பிடிக்குள் வாழ்க்கை... (முயற்சி)

பிறந்ததுமே அழுங்குப் பிடி பிடித்து,
தன்னை நோக்கி இழுக்கும் மரணம்...

பிறந்தது முதலே தேடல்களில், தேவைகளில், மனிதன்...
பருவ மாற்றங்களில் தேடப்படுவனவும், தேவைப்படுவனவும் மாறுகின்றனவேயொழிய,
தேடலும் தேவையும் இல்லாது போவதில்லை...

உணரும்வரை வாழ்க்கை, பொறுக்கப்படும் கூழாம்கல்...
உணர்ந்தபின் வாழ்க்கை, நெரிக்கும் கல் மலை...

கால ஓட்டத்தில்,
சிலரை அழுத்தும் வறுமை, பிணி, சோகம்,
சிலரை அழுத்தும் புகழ், செல்வம், அதிகாரம்,
போன்றன...

எப்படியானாலும், ஏதோவொரு வகையில்,
நெரிக்கப்படுகின்றான் ஒவ்வொரு மனிதனும்...

எதுவரை..? இறப்புவரை...

இறுதியில், மீண்டும்,
மரணப் பிடிக்குள் மனிதன்,
தவிர்க்க முடியாத மனிதனின் முடிவு...
மனிதப் பிடிக்குள் வாழ்க்கை,
மனிதன் வாழ்ந்ததற்கேற்ப நீடிக்கும்...

அனைத்துப் பின்னூட்டங்களினாலும் விளக்கம் பெற்று,
எனது பார்வையில்...
அனைவருக்கும் நன்றி...

ஒன்றில்மட்டும் சிறு குழப்பம்...

ஒரு கவிதை விமர்சனக் கைகள்ல்
சொறுகிவைக்கப்பட்டிருந்தது
---------------------------
கவிதை தொங்கி விமர்சனப் பிடியை நழுவவிட்டது

செருகிவைக்கப்பட்ட கவிதை, எப்படி விமர்சனப்பிடியை நழுவவிட்டது..?
பிடித்திருந்தது கவிதையா... விமர்சனமா...

ஆதவா
01-07-2008, 04:46 AM
மரணப் பிடிக்குள் மனிதன்... (நிச்சயம்)
மனிதப் பிடிக்குள் வாழ்க்கை... (முயற்சி)

பிறந்ததுமே அழுங்குப் பிடி பிடித்து,
தன்னை நோக்கி இழுக்கும் மரணம்...

பிறந்தது முதலே தேடல்களில், தேவைகளில், மனிதன்...
பருவ மாற்றங்களில் தேடப்படுவனவும், தேவைப்படுவனவும் மாறுகின்றனவேயொழிய,
தேடலும் தேவையும் இல்லாது போவதில்லை...

உணரும்வரை வாழ்க்கை, பொறுக்கப்படும் கூழாம்கல்...
உணர்ந்தபின் வாழ்க்கை, நெரிக்கும் கல் மலை...

கால ஓட்டத்தில்,
சிலரை அழுத்தும் வறுமை, பிணி, சோகம்,
சிலரை அழுத்தும் புகழ், செல்வம், அதிகாரம்,
போன்றன...

எப்படியானாலும், ஏதோவொரு வகையில்,
நெரிக்கப்படுகின்றான் ஒவ்வொரு மனிதனும்...

எதுவரை..? இறப்புவரை...

இறுதியில், மீண்டும்,
மரணப் பிடிக்குள் மனிதன்,
தவிர்க்க முடியாத மனிதனின் முடிவு...
மனிதப் பிடிக்குள் வாழ்க்கை,
மனிதன் வாழ்ந்ததற்கேற்ப நீடிக்கும்...

அனைத்துப் பின்னூட்டங்களினாலும் விளக்கம் பெற்று,
எனது பார்வையில்...
அனைவருக்கும் நன்றி...

ஒன்றில்மட்டும் சிறு குழப்பம்...

செருகிவைக்கப்பட்ட கவிதை, எப்படி விமர்சனப்பிடியை நழுவவிட்டது..?
பிடித்திருந்தது கவிதையா... விமர்சனமா...

நன்றி அக்னி.. அதென்னவோ உங்கள் பின்னூட்டங்கள் பல விசயங்களை அள்ளித்தருகிறதே! என்ன ஜாலம்?

கவிதை விமர்சனத்தின் கையில் செருகப்பட்டது, அது தொங்கி, விமர்சனத்தின் பிடியை விட்டது.. எனக்கு என்னவோ சரியாகச் சொல்லியிருப்பதாகத்தான் தெரிகிறது..

நன்றிப்பா

அக்னி
04-07-2008, 10:38 AM
கவிதை விமர்சனத்தின் கையில் செருகப்பட்டது, அது தொங்கி, விமர்சனத்தின் பிடியை விட்டது..
அப்போ
கவிதையின் எண்ணமோ...

வாழ்க்கை எம்மைப் பிடித்திருக்கின்ற போதிலும்,
வாழ்க்கையை நாம் பிடித்திருப்பதான மாயை நிலை...

பற்றுவதும் விடுவதும் நாமே என்று,
நாம் நினைக்க,
வாழ்க்கை எம்மைப் மீளப் பிடிக்கும்வரை,
நாம்
ஏமாறுகின்றோமா... ஏமாற்றப்படுகின்றோமா... ஏமாற்றுகின்றோமா...