PDA

View Full Version : நாகரீக வழிப்பறிஎஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-06-2008, 05:30 AM
அழைப்பிதழ்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட
அந்த கணத்திலிருந்தே
சிந்தனைக்குதிரைகள்
அலை பாய ஆரம்பித்துவிடுகின்றன
அதற்கு என்ன அன்பளிப்புகளை
அளித்து விட்டு வரலாமென்று

தரம் குறைந்த சிறிய பொருளை
மிகப்பெரும் அலங்காரப்பெட்டிக்குள்
பந்தாவாக பலர் முன்னிலையில்
அதுவும் படம் பிடிக்கிறார்களாவென்று
சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம்
அளிப்பதில் பெருமிதம் பலருக்கு

கடுகு சிறுத்தாலும்
காரம் சிறுக்காததைப்போல்
அப்படி என்ன இதற்குள் பெரிதாக
இருந்துவிடப்போகிறதென்று நினைக்கத்தோணும்
சின்னஞ்சிறு பெட்டிக்குள்
மூக்கில் விரல் வைக்கும்
மதிப்புள்ள ஒரு பொருளை அடைத்து
ஆட்களில்லா தருணம் பார்த்து
கைகளில் திணித்து விட்டு
நடையைக்கட்டுவது
சில மேல் தட்டினரின் வாடிக்கை

என் வீட்டு விசேஷத்தில்
அவன் செய்ததை விட
ஒரு காசு அதிகமிட மாட்டேனென்று
கடன் கழித்துவிட்டு வருவதற்காய்;
விசேஷத்திற்கு செல்கிறவர்களுமுண்டு

ஐம்பது ரூபாய் மதிப்புள்ள பொருளில்
பத்து நபர்கள் பெயர் பொறித்து
போதாதென்று இறுதியாய் வெறுமனே
வந்த ஒருவனின் கெஞ்சலை
தவிர்க்க முடியாமல்
அவன் பெயரையும் ஓரத்தில் எழுதி
ஏதோ உலகக்கோப்பையை
பிடிப்பது போல் அனைவரும் சேர்ந்து
அதை ஒன்றாக பிடித்து நின்று
போட்டோவிற்கு போஸ் கொடுக்கும்போது
விளங்கிக்கொள்ளலாம் அவர்களனைவரும்
சம்பந்தப்பட்டவரின் நெருங்கிய
நண்பர்களென்று

அன்பளிப்புகளின்றி
கை வீசி வந்தவர்களிடம்
பரவாயில்லை தின்றதற்காவது
பணத்தைகொடுத்துவிட்டுபோவென்று
கத்தியின்றி இரத்தமின்றி
பேனா காகிதத்துடன்
மொய் என்ற பெயரில்
நாகரீக வழிப்பறியில்
இறங்கிவிடும் ஒரு கூட்டம்

பல நூறுகள் மட்டும்
ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்க
ஒரு சில பத்துக்களை மட்டும்
ஏந்திக்கொண்டு சிலர் நாணத்தால்
பின்தங்கிக்கொண்டிருக்கும்போது
வரதட்சணைக்கு எதிராக
குரல்கொடுப்பவர்கள்
இதற்கும் சேர்த்து
ஒரு குரல் கொடுத்தால்
தேவலையென்று நினைக்கத்தோன்றும்

எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in

kavitha
17-06-2008, 06:04 AM
அன்பளிப்புகளின்றி
கை வீசி வந்தவர்களிடம்
பரவாயில்லை தின்றதற்காவது
பணத்தைகொடுத்துவிட்டுபோவென்று
கத்தியின்றி இரத்தமின்றி
பேனா காகிதத்துடன்
மொய் என்ற பெயரில்
நாகரீக வழிப்பறியில்
இறங்கிவிடும் ஒரு கூட்டம் பெயரே அன்பளிப்பு தானே.. மனமார்ந்த இனிமையான வாழ்த்துகள் போதாதா?
சிறப்பான கவிதை ஹஸனி.


வரதட்சணைக்கு எதிராக
குரல்கொடுப்பவர்கள்
இதற்கும் சேர்த்து
ஒரு குரல் கொடுத்தால்
தேவலையென்று நினைக்கத்தோன்றும்
:) அதற்குத்தான் குரல் கொடுத்துவிட்டீர்களே... இதைப்படிப்பவர்களாவது புரிந்துகொள்வார்கள்.

நீங்கள் இக்கவிதையில் எழுதிய அத்தனை வரிகளும் அப்பட்டமான உண்மை. புதிய சிந்தனையில் கவிதை எழுதியமைக்காக... உங்களுக்கு இ-பணம் /// ச்ச...ச்ச்...ச....மீண்டுமா......? என் மனமார்ந்த பாராட்டுகள்.

இளசு
17-06-2008, 06:17 AM
புரையோடியிருக்கும் ஒரு நோயைப்
பற்றிய ரணசிகிச்சைக் கவிதை..

வாழ்த்துகள் நண்பரே!

இந்நோயின் தீவிர வடிவம் ஒன்று உண்டு - மொய் விருந்து!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-06-2008, 06:21 AM
வெறும் பாராட்டுக்கள் என்றாலே என் கால் பூமியில் நிற்காது. அதுவும் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கூறி விட்டீர்கள். என் மேலதிகாரி ரொம்ப பாவம். எப்படி என்னிடம் இன்று வேலை வாங்கப்போகிறான் என்று தெரியவில்லை. பாராட்டியமைக்கு மிக்க நன்றி கவிதா.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-06-2008, 06:33 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி இளசு அவர்களே. மொய் விருந்து வழக்கம் வழக்கில் அறவே அற்றுவிட்டது என்று என் நண்பர் ஒருவர் எனக்கு கூறி இருந்தார்.அது இன்னும் வழக்கில் உள்ளதா? அதைப்பற்றி கூடுதல் விவரம் தெரிந்தால் கொஞ்சம் தெரிவிக்கும்படி தங்களை கேட்டுக்கொள்கிறேன்

சிவா.ஜி
17-06-2008, 06:40 AM
உண்மையான வரிகள். நிகழ்ச்சிக்கு அழைப்பு என்றாலே சிலருக்கு பகட்டு, சிலருக்கு பதட்டம். அதிலும் அன்பளிப்பு வந்துவிட்டாதா என கண்கானிப்பும் செய்யும்போது....அது நீங்கள் சொன்னதைப்போல வழிப்பறியாகிவிடுகிறது.

நல்ல சிந்தனைக்குப் பாராட்டுகள் ஹஸனி.

இதயம்
17-06-2008, 06:56 AM
அன்பளிப்பு என்பது அன்பின் வெளிப்பாடு என்பது போய், இப்பொழுதெல்லாம் கௌரவத்தை கர்வத்துடன் நிரூபிக்கவும், கடன் தீர்க்கவும் தான் பயன்படுகிறது. ஆனால், மொய் என்பது நாகரீக கடன் அல்லது பிச்சை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. 100 ரூபாய் மொய் செய்தால் அடுத்த முறை அவனுக்கு செய்யும் போது குறைந்த பட்சம் 1 ரூபாயேனும் கூடுதலாக செய்ய வேண்டிய நிலை. இதைக்கொண்டு இருவருக்குள் அன்பு வளர்கிறதோ இல்லையோ வட்டி வளர்கிறது. அகமும், முகமும் மலர்ந்து காட்ட வேண்டிய அன்பை காகித பெட்டிக்குள் ஜிகினா தாள் சுற்றி வைத்து மூச்சு திணற வைத்துவிட்டார்கள்.

என் திருமண அழைப்பிதழில் மொய், அன்பளிப்பை தவிர்க்கவும் என்று நான் இட்டதை பலர் நான் சுயநலமில்லாதவன் என்று பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள். ஆனால், அவர்களின் அன்பின் வடிவில் வருவதை நான் வட்டி போட்டு தரவேண்டும் என்ற என் சுயநல கவலையும் அதில் கலந்திருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியுமா..? இந்த அநாகரீக மொய் வழக்கம் என்பது முற்றிலும் களையப்படவேண்டியது.

கவியின் கடைசி கருத்து நச்..!! பாராட்டுக்கள் ஜுனைத்..!!