PDA

View Full Version : கானக இரகசியம்!சிவா.ஜி
16-06-2008, 11:11 AM
அடர்ந்த வனம் அது
படர்ந்த இருள் கொண்டது
விழுந்த இலைகளோடொருவனாய்
நிமிர்ந்து பார்க்கிறேன்

ஒன்றோடொன்று உரசிக்கொண்டு
ஓராயிரம் கோடி இலைகள்
ஊடுருவ வழியின்றி
உட்புகத் தவிக்கும் சூரிய இழைகள்

மெல்ல ஒரு முணுமுணுப்பு
இலைகளின் சலசலப்பு
காற்றுக் காதலன் வந்துவிட்டான்
காதல் ஸ்பரிசம் தந்துவிட்டான்

சிலிர்த்து தலை கவிழ்ந்தன இலைகள்
கிடைத்த இடைவெளியில்
நுழைந்தன சூரிய இழைகள்
இளகி வழிவிட்டன சிறு கிளைகள்

இருள் வானத்தின்
ஒளிர் வின்மீன்களாய்
இலைகளின் இடைவெளியில்
கதிரவனின் ஒளிப்பொத்தல்கள்

காற்றின் காதல் செய்த அதிசயம்
கானகம் ஒளித்துவைத்த ரகசியம்
பகலில் தாரகைக் கண்ட பரவசம்!
பகலவன் பட்டதில் புது சுகம்!

அன்னாந்த பார்வையகற்றி
அருகாமைப் பார்க்கிறேன்
சுற்றிவர விழியோட்டி
முற்றிலும் பார்க்கிறேன்....

சின்னஞ்சிறு பொத்தலாய்
சன்னமாய் நுழைந்த
வெளிச்ச வீழ்ச்சிகள்
அருவியாய் அனைத்திடத்தும்...!

வெளிச்சத்தில் நனைந்து
குளித்துவிட நினைந்து
அடவியெங்கும் அலைந்தேன்
பிடரி சுட மகிழ்ந்தேன்

கொஞ்சும் நேரம் முடிந்ததென்று
காற்றும் விலகிட
தலைதாழ்ந்த இலைகள் நிமிர்ந்திட
இருள் போர்வை இறுக மூடியது!

வெற்று இருள் வானம்
நட்சத்திர வானமாகி
சற்று நின்று வெளிச்சம் வீழ்த்தி
முற்றும் நனைவதற்குள்
மூடிக்கொண்டது இருள்!

எத்தனை அதிசயங்கள்
இத் தருபூமியில்?

kavitha
17-06-2008, 05:17 AM
எத்தனை அதிசயங்கள்
இத் தருபூமியில்?
இயற்கையில் காணும் ஒவ்வொன்றும் அதிசயம்தான் சிவா அண்ணா. அதை ஹாரிஸ் ஜெயராஜின் மெல்லிய மெலடி போல ரம்மியமாய் சொன்ன உங்கள் கவிதை அழகு.

இளசு
17-06-2008, 06:10 AM
தனிமை மனச்சிறையில்...
பழைய நினைவுகளுடன் படுக்கையில்..

மின்னல் போல் ஓர் வரவு..
ஒளிவீச்சு அதிகம்..
இருக்கும் நேரம் குறைவு...

மின்னல் வந்துபோன பின்
இன்னும் அடர்ந்தது
முன்னிருந்த மன இருள்!


------------------------

வாழ்த்துகள் சிவா!

கானகம் - அமேசான் வகை வானடர்ப்பந்தர் வனம் -
பல உருவகங்களை என்னுள் எழுப்பும்..


பிடரி சுடுமளவு வெளிச்சக்கதிர் வரவைத்த
கொஞ்ச நேரக் காற்றுக்காட்சி பற்றிய
கொஞ்சு தமிழ் நடையில் சொல்லும் உங்கள் கவிதை கண்டும்
பல பரிமாண நினைவுகள் என்னுள்...

வாழ்த்துகள் சிவா!

சிவா.ஜி
17-06-2008, 06:27 AM
இயற்கையில் காணும் ஒவ்வொன்றும் அதிசயம்தான் சிவா அண்ணா. அதை ஹாரிஸ் ஜெயராஜின் மெல்லிய மெலடி போல ரம்மியமாய் சொன்ன உங்கள் கவிதை அழகு.

உண்மைதாம்மா. இயற்கையே மிகப்பெரிய அதிசயம்தான். அதிலொரு பகுதியாக இந்த கானக அதிசயம். எங்கள் ஊர்ப் பகுதியில் இப்போதும் இப்படி பகலை இரவாக்கும் அடர்ந்த வனங்கள் உண்டு. அதில் கவிதையில் சொன்ன காட்சியைக் கண்டு அனுபவித்ததும் உண்டு.

மிக்க நன்றி தங்கையே.

சிவா.ஜி
17-06-2008, 06:31 AM
தனிமை மனச்சிறையில்...
பழைய நினைவுகளுடன் படுக்கையில்..

மின்னல் போல் ஓர் வரவு..
ஒளிவீச்சு அதிகம்..
இருக்கும் நேரம் குறைவு...

மின்னல் வந்துபோன பின்
இன்னும் அடர்ந்தது
முன்னிருந்த மன இருள்!


ஆஹா...முற்றிலும் புதிய பார்வை. நான் சிறிதளவும் இதை சிந்திக்கவில்லை. எத்தனைப் பொருத்தமான சிந்தனை. வழக்கம்போல் மிகுந்த ஆச்சர்யத்தில் நான். அறிஞர் அவரது ஆ'பத்து பதிலில் சொன்னதைப் போல படைப்பாளிகள் படைப்பை படைக்கிறார்கள், ஆனால் மன்றம் படைப்பாளிகளை படைப்போதோடு மட்டுமல்லாமல் பட்டையும் தீட்டுகிறது. மிக்க நன்றி இளசு.

கண்மணி
17-06-2008, 06:33 AM
அழகானக் காட்சி.. புதிய கோணம். கவிதையின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவையாய் இருக்கு சிவாஜி..
படித்தவுடன் கண்ணை மூடிக் காட்சி அனுபவத்தைக் கற்பனை செய்துப் பார்க்கத்தோன்றுகிறது.

சொல்லப்போனா ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கோணம் தோணும்.. எனக்குத் தோன்றியதைச் சொல்லவா?

அடர்ந்த இருள் வனத்தில்
காற்றும் இலையும்
காதல் கொண்டு
நட்சத்திரங்களைப் பிரசவித்தன!


வான்வழி ஒழுகும்
ஒளியருவிகளில்
பிடரிசுடக் குளித்தேன்..
காதல் முடிந்தது
காலம் ஒடுங்கியது!!!


இரண்டும் தனித்தனியா இருக்கே. இணைக்க வேண்டுமானால் நட்சத்திரங்களையும் அருவியையும் இணைக்க வேண்டும். நட்சத்திரங்கள் குழந்தைகள் என்றால், குழந்தைகளிலிருந்து வரும் அருவி?:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

அண்ணே தப்பா எடுத்துக்காதீங்க.. திட்டினா :traurig001::traurig001::traurig001:

சிவா.ஜி
17-06-2008, 06:43 AM
அட...இங்கே இன்னுமொரு பார்வை! அழகாக இரூக்கிறது கண்மணி உங்கள் பார்வை. ஆனாலும் அருவியை நீங்கள் அதனோடு ஒப்பிட்டிருப்பது ஓவர் குசும்பு.(நிஜமாகவே சிரித்துவிட்டேன். குறும்பான கற்பனை)

மிக்க நன்றி குறும்புப்பெண்ணே.