PDA

View Full Version : தப்பிப்போகும் தவறுகள்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-06-2008, 05:33 AM
அர்த்த ராத்திரியில்
ஐந்தாறு பிசாசுகள் ஒன்றுகூடி
ஏன் இப்படிச்செய்தாயென்று
கழுத்தை நெறிப்பது போல்தான்
கனவுகளும் வருகின்றது

என் மனைவி மேல் விழுந்த
என் கையை
தூக்க மிகுதியில்
அவள் தட்டிவிடும்போது கூட
ஒரு வேளை உண்மை
தெரிந்திருக்குமோவென்று
அச்சப்பட வைக்கிறது

வீட்டின் தொலைபேசி மணி
ஒலிக்கும் பொழுதெல்லாம்
அதைப்போல் ஒரு மணி
எனதிருயத்திற்குள்ளும் ஒலிக்கிறது
ஒரு வேளை அது எனக்கான
முறையீட்டு மணியாய் இருக்குமோவென்று

தெருவோரத்தில்
நாலு பேர் கூடி நின்று
அன்றைய அரசியல் பேசினாலும்
விஷயம் என்னைப்பற்றியதாக
இருக்குமோவென்று
மனம் குறுகுறுக்கிறது.

நானில்லாத சமயத்தில்
நாலு பேர் என்னை
தேடிச்சென்றதாக வந்த பிறகு
அப்பா சொன்னதும்
யாரு யாரு என்று
மேல் கீழ் எல்லா மூச்சுகளும் வாங்கி
அவர்கள் நண்பர்களென்று
அறிந்த பிறகே மனம்
ஆசுவாசப்படுகிறது

நன்றாய் தெரிந்தவர்கள்
பல யோசனையில்
எனை சீண்டாமல்
கடந்து செல்லும்போது
ஒருவேளை அவர்களுக்கும்
விஷயம் தெரிந்திருக்குமோவென்று
வயிற்றில் ஒரு புளி மூட்டையை இறக்குகிறது

நின்று கொல்லும் கடவுளும்
அன்று கொல்லும் அரசனும்
என் மனசாட்சிக்குள் உறைந்து
அனுஅனுவாய் ஏககாலத்தில்
என்னை பழிதீர்த்தபின்
இனி எந்ததவறும் செய்யப்போவதில்லையென்று
அவசர அவசரமாய் எடுக்கும் உறுதிமொழிகள்
அடுத்த தவறுசெய்யத்துவங்கும்முன்
நினைவில் நிற்பதில்லை.

எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in

kavitha
16-06-2008, 05:44 AM
இனி எந்ததவறும் செய்யப்போவதில்லையென்று
அவசர அவசரமாய் எடுக்கும் உறுதிமொழிகள்
அடுத்த தவறுசெய்யத்துவங்கும்முன்
நினைவில் நிற்பதில்லை.
பிசாசுகள் பிசாசுகளாக பகலில் தெரிவதில்லை.

யதார்த்த கவிதை. பாராட்டுகள் ஹஸனி

ஓவியன்
16-06-2008, 05:45 AM
''குற்றம் செய்த மனசுதான் குறு குறுக்கும்” என்றொரு முதுமொழி நான் படித்ததுண்டு, அந்த முது மொழியின் கருக் கருவை பல வரிகளில் யதார்த்தம் மாறாது கவிதைப் படைப்பாளி விளக்கிய விதம் அருமை. ஆனால் ஒரு குற்றத்தினை முதல் முறையோ அல்லது சந்தர்ப்ப வசத்தினாலோ செய்து விட்ட ஒருவனுக்குத் தான் இந்த பட படப்பும் பதை பதைப்பும், இருக்கும். குற்றமே வாழ்க்கையாகி விட்டவனுக்கு இத்தகைய பதட்ட நிலை இருக்காது என்பது என் எண்ணம்...

நல்லதோர் கவிதைக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எஸ்.எம்.சுனைத் ஹஸனி அவர்களே..!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-06-2008, 06:08 AM
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கவிதா அவர்களே

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-06-2008, 06:14 AM
கருத்துக்கு மிக்க நன்றி ஓவியன் அவர்களே. சொன்னால் நம்புவீர்களா என்று தெரியவில்லை. நீங்கள் கூறிய அதே கருத்தை என் கவிதையை படித்த என் அறை நண்பரும் கூறினார். ஒரு பெருங்குற்றவாளியைப்பற்றி நான் கூறவில்லை. அவ்வப்போது தவறு செய்து தவிதவிக்கும் ஒரு சராசரி குற்றவாளியை பற்றி கூறுகிறேன் என்று அவரிடம் சமாளித்து விட்டேன். நீங்கள் பண்பட்டவர் அல்லவா அதான் உங்களிடம் மாட்டிக்கொண்டேன் என்று நினைக்கிறேன்.
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.