PDA

View Full Version : சோமுவின் அன்றாடம்அன்புரசிகன்
15-06-2008, 02:50 PM
சோமுவின் அன்றாடம்


டேய் எழுந்திருடா என்று சொல்லி தண்ணீரை முகத்திற்கு பீச்சியடித்தது சோமுவின் கணினி.சோமு அவுஸ்திரேலிய நாட்டில் ஒரு கட்டிட நிர்மாணத்துறையின் ஆலோசனைப்பிரிவில் ஒரு முகாமையாளனாக பணிபுரிபவன்.அவனுக்கு பூர்வீகம் என்னமோ இலங்கை தான். ஆனால் அவன் இலங்கையை வரைபடத்தில் கூட பார்த்ததில்லை. காரணம் உலக வரைபடத்தை பார்க்கும் நேரத்தில் அவன் 10 கட்டிட வரைபடங்களுக்கு ஆலோசனை வழங்கினால் அவனுக்கு 10 மில்லியன் டொலராவது வந்திரும். அன்றாட செய்திகளை படிப்பதற்கு மாத்திரம் அவன் 10 நிமிடங்களை அவனது தினசரி வாழ்நாளில் ஒதுக்கி வைத்திருப்பதெ அதிகம் என சொல்வான். இன்று ஒரு முக்கிய கூட்டம் ஒன்றிற்கு தயார்செய்யவேண்டியதால் நேற்றே அவன் கணினியில் அலாரத்தை செயற்படுத்திவிட்டு கூட்டத்திற்கு தேவையான ஆவணங்களையும் அவனது கணினியின் வன்தட்டில் சேமித்துவிட்டு அவன் இரவு படுக்கைக்கு சென்றிருந்தான்.அதிகாலை மூன்று மணிக்கே கணினி அவனை எழுப்பிவிட்டது. அவன் காலைக்கடன் முடிக்க செல்லும் போதே ஒரு தகவலை சொல்லியது அவனது கணினி. உங்களது அமெரிக்க கிளை நிறுவன அதிகாரி ஒன்லைனுக்கு வந்துவிட்டார். இன்னும் பிரித்தானிய மற்றும் அமீரக கிளை அதிகாரிகள் தான் வரவேண்டியுள்ளது. என்று தகவல் கொடுத்திருந்தது அந்த 6வது பரம்பரை கணினி.தனது நிலையை பிஸி என கூறுமாறு கணினிக்கு பணித்துவிட்டு காலைக்கடன் முடிக்க குளியலறை சென்றான்.

கணினித்திரைக்கு முன் அமர்ந்தவனுக்கு அமீரக அதிகாரி இன்னமும் லொகின் பண்ணாதிருப்பதை பார்த்து ஆத்திரம் கொண்டவன் அவனுக்கு சுடுதண்ணீரால் பீச்சவும் என இவனது கணினி மூலம் அவன் கணினிக்கு கட்டளை யிட்டான். அந்த கணினி உடனடியாக பிரித்தானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் அனுமதி கோரியது. அனுமதி கிடைத்ததும் அமீரக அதிகாரிக்கு சுடுநீரால் பீச்சியடிக்கும் படி அமீரக கணினிக்கு உத்தரவிட்டது. அவனும் அலறியடித்துக்கொண்டு எழுந்துதவன் காலைக்கடனுக்காக செல்ல எத்தனித்தபோது அவனது கணினி அனுமதி மறுத்து அவனை சங்கிலியால் கட்டி கணினித்திரைக்கு முன் கட்டாய இருப்புக்கு உத்தரவிட்டது. கூட்டமும் ஆரம்பித்தது. கூட்டத்தின் முடிவில் அவரவர்களுக்கான தகவல்களை அவரவர் சேமிப்பகத்தில் சேமித்துவிடுமாறு கணினிக்கு சோமு உத்தரவு இட்டான்.


சுமாராக 45 நிமிடங்களுக்கு நீடித்த அந்த கூட்டம் நிறைவு பெறவும் சோமுவின் கணினி சோமுவுக்கு ஒரு அவசர தகவலை கொடுத்தது. உனது கடனட்டையை யாரோ பயன்படுத்த முயல்வதாகவும் அவனை அடிக்கவா அமுக்கவா என கேட்டது. அவனை அமுக்கி விசாரிக்க எனக்கு நேரமில்லை. 10 நிமிடத்திற்கு நையப்புடைத்து 20 வினாடிகளுக்கு குறைந்த மின்னழுத்தத்தில் அவனுக்கு மின்சாரம் பாய்ச்சுமாறு கணிக்கு உத்தரவிட்டுவிட்டு சமையலறைக்கணிக்கு சென்றான். அவனுக்கான தேனீர் இதமான சூட்டுடன் தயாராக வைத்திருந்தது அந்த கணினி. இன்னமும் 1 நிமிடம் 24 வினாடிகள் காத்திரு என சோமுவுக்கு பணித்தது அந்த கணினி.


வீட்டிற்கு அன்று தேவையான பொருட்கள் அனைத்தையும் வாரின் மூலம் (belt) அந்த அடுக்குமாடிக்குடியிருப்புக்கான வழங்கி (server) அனுப்பிவைத்திருந்தது. அதற்கான செலவை அவனது களஞ்சிய அறை கணினி கண்காணிக்கும். அவனது அலைபேசியில் ஒரு அழைப்பு. களஞ்சிய அறைக்கு வருமாறு. இன்றய பொருட்கள் வந்துவிட்டன. நாளை என்ன பொருட்கள் தேவை என கேட்டது அந்த கணினி. நாளைய பொருட்களுக்கு வழங்கியிடம் இன்றே டோக்கின் இட்டு வைக்க வேண்டும் என்று அந்த கணினிக்கு தெரியும். அதற்கு விபரம் கொடுத்து விட்டு அன்றய செலவை பார்க்குமாறு பணித்தது அந்த கணினி. 35000 டொலர் காட்டியது. என்ன இன்று மிக குறைவாக செலவு வந்திருக்கிறது என மனதினுள் புன்முறுவல் பூத்துவிட்டு அடுத்த 30 நிமிடங்கள் அவனது குடும்பத்தாருடன் அலைபேசி Conference ல் பேசினான். டேய் என்னடா சாப்பாடு ஒழுங்காய் சாப்பிடுவதில்லையோ? என தாய் விசாரித்தாள்.இல்லம்மா. பசிக்குதில்ல. டொனிக்குக்கு ஓடர் குடுத்திருக்கிறன். இன்னும் ஸ்டோர் ரூமுக்கு வரேல. ஓடர செக் பண்ணவேணும் என்றான். உன்ட கொம்ப்யூட்டருக்கு அதிகமா செல்லம் குடுக்குறாய். அது காசடிக்கப்பாக்கும். கவனம் என தாய் எச்சரித்தாள். வரும் விடுமுறையில் தனது முழு ஸிஸ்டத்தையும் சரிபார்க்கிறேன் என தாய்க்கு உறுதியளித்தான். உங்க எப்படி விலைவாசி எல்லாம் என்று கேட்டான். இந்தமாசம் பெருசா ஒன்டும் கூடேல. கத்தரிக்காய் ஒருகிலோ 13450 டொலர் என்றாள். பரவாயில்லை. நான் 15 தாண்டும் என்டு நினச்சன். என்று தனது அனுமானத்தை தாயிடம் தெரிவித்துவிட்டு செய்தி கணினிக்கு சென்றான் சோமு.

இன்றுடன் அமெரிக்காவின் பெற்றோலியம் நிறைவுக்கு வருகிறது என்ற செய்தி தலைப்பு செய்தியாக இருந்தது. இனிமேல் அவுஸ்திரேலிய பெற்றோலியத்திற்கு பெரிய டிமான்ட் வரப்போகுது என்று மனதினுள் சிணுங்கினான். மத்தியகிழக்கில் ஒட்டகங்களுக்கு உணவு தட்டுபபாடு நிலவுவதால் மத்திய கிழக்கு அரசு பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது என்று இன்னொரு செய்தி இருந்தது.துபாயின் ஷேக் ஷஜட் வீதியெங்கும் ஒட்டகங்கள் இறந்துகிடப்பதை காணமுடிந்தது என அந்த வட்டார செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவங்கள் ஆடின ஆட்டத்திற்கு ஒருகாலத்தில அவைக்கு BMW உம் கடிலக் உம் கேட்டது. இப்ப சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்கிறாங்கள் என மனதினுள் குதுகலித்தான். மத்திய கிழக்கில் பட்ட அவதிகளை அவனது கொப்பாட்டனின் தந்தையின் பழைய மின்னஞ்சல்களை பார்த்து அறிந்தவன் அவன்.

அடுத்து இலங்கை செய்திப்பக்கம் சென்றான். அங்க என்ன நடக்குது என்று பாப்பம் என்றுவிட்டு செய்தியை உன்னிப்பாக பார்த்தான். இனப்பிரச்சனை வலுவாகியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி அஸங்கே பண்டாரநாயக்க ராஜபக்ஸ விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவர் விஷ்ணுஹரனுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு முன்வந்துள்ளார் என்று அந்த செய்தி சொன்னது. புன்முறுவலுடன் தனது அடுத்த நடவெடிக்கைக்கு தயாரானான் சோமு.


(முற்றும்)

சிவா.ஜி
15-06-2008, 03:18 PM
அசத்திட்டிங்க அன்பு. பல நூறு வருடம் உலகம் முன்னோக்கிப் போனாலும் இலங்கைப் பிரச்சனை இருந்துகொண்டேதான் இருக்குமென்று நக்கலாக சொல்லியிருக்கிறீர்கள். இந்தவகை நையாண்டி அருமைதான். ஆனால் இப்படி நிகழக்கூடாதே என்றுதான் மனம் விழைகிறது.
நல்ல எழுத்துநடை. பாராட்டுகள் அன்பு.

அன்புரசிகன்
15-06-2008, 03:25 PM
முன்பொருநாள் எங்கோ வாசித்த ஒரு கரு. சற்று சோடனை செய்து பதித்திருக்கிறேன்.... மற்றப்படி கதையின் முழுமை என்னிடமில்லை...

கருத்துக்கு நன்றி சிவா..

அன்புரசிகன்
15-06-2008, 06:22 PM
அப்படியாகத்தான் இருக்கவேண்டும். தவிர முழுமையாக ஞாபகம் இல்லை...

இளசு
16-06-2008, 12:14 AM
அறிவியல் புனைக்கதை என்ற இலக்கணத்துக்குப் பொருந்தும்படி
விவரணைகள்....சம்பவங்கள்..

உன் எழுத்துத்திறனுக்கு இன்னொரு சான்றாய்..

வாழ்த்துகள் அன்பு..

அதில் ஊடாடும் எள்ளல் நடை கூடுதல் சிறப்பு..

அப்போதும் தீராதது (தீராதா????) - எம் தேச இனப்போர் -
என ஏக்கத்தை எள்ளலாய்ப் பதித்ததே உச்சச் சிறப்பு..

அண்ணனின் பாராட்டுகள்.. தொடர்க!

அன்புரசிகன்
16-06-2008, 02:55 AM
ஏக்கம் என்னமோ உள்ளூர இருக்கிறது.

நவீனத்துவம் எங்கோ படித்ததில் பிடித்தது. கடனட்டை விலைவாசி பெற்றோலியம் போன்ற செய்திகள் தான் என்சோடனை....

பாராட்டிய அண்ணனுக்கு நன்றிகள் பல...

கண்மணி
16-06-2008, 03:08 AM
ஒரு நாள் செலவு - 35000 டாலர்
ஒருகிலோ கத்திரிக்காய் விலை - 13450 டாலர்

ஆக ஒரு நாள் செலவு = 2-3/4 கிலோ கத்திரிக்காய்... தினப்படி செலவு ரொம்பவும் குறைஞ்சுதான் போயிட்டது அன்பு!!!

ஆதங்கம் புரிகிறது.. அதே சமயம், வசதியாகிவிட்ட புள்ளிகளின் அலட்சியமும் குத்திக்காட்டப்படுகிறது.. ஒரே கல்லில இரண்டு மாங்காய்,,, பலே பலே!!

அன்புரசிகன்
17-06-2008, 02:56 PM
ஒரு நாள் செலவு - 35000 டாலர்
ஒருகிலோ கத்திரிக்காய் விலை - 13450 டாலர்

ஆக ஒரு நாள் செலவு = 2-3/4 கிலோ கத்திரிக்காய்... தினப்படி செலவு ரொம்பவும் குறைஞ்சுதான் போயிட்டது அன்பு!!!

ஆதங்கம் புரிகிறது.. அதே சமயம், வசதியாகிவிட்ட புள்ளிகளின் அலட்சியமும் குத்திக்காட்டப்படுகிறது.. ஒரே கல்லில இரண்டு மாங்காய்,,, பலே பலே!!

அந்த காலம் வரும் போத மனுசனுக்கு ஆயிரத்தெட்டு வருத்தம் வந்திடும். அதுக்கு மேல சாப்பிட்டா செத்துடுவோமே என்கிற பயம் வரும். அதனாலேதான்.... :D

SivaS
19-06-2008, 10:24 AM
என்னத்த சொல்ல இயந்திர தனமான வாழ்கை வாழும் காலம்

அன்புரசிகன்
20-06-2008, 08:20 AM
ஊரோடின் ஒத்தோடு என்ற ஒரு கவிதை இது உதயனில் படித்தது. 30 - 10 - 2005 ல் நாம் அனைவரும் யாழில் செய்தது அதே தான்... அது மாதிரித்தான். விரும்பியோ விரும்பாமலோ சில விடையங்களுக்கு நாம் மாறுவது தவிர்க்க முடியாதது. அது போல தான் இந்த இயந்திரத்தனமான வாழ்க்கை....

கருத்திற்கு நன்றி சிவாஸ்... இது கூட நல்ல பெயர் தான்...

MURALINITHISH
31-10-2008, 10:13 AM
இலங்கை மக்களின் வேதனைகள் தொடருமா படிக்கும் போதே மனம் கணக்கிறது அது கதை எனினும்