PDA

View Full Version : இறைவன் அழைக்கிறான்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
15-06-2008, 07:06 AM
வண்ணக்கைலியும் குல்லாவும்
அத்தர் மணக்கும் சட்டையுமாய்
தொழுகை கழிந்த
அரைமணிநேரம் பின்னும்
கோரிக்கைகளை செவிமடுக்கச்சொல்லி
வானுயர்த்திய கையை கீழிறக்காத
எல்லாம் வல்ல அல்லாஹ்வின்
நல்லடியார்களும்

நெற்றி மறைக்கும் பட்டையும்
குரல்வளை நெறிக்கும்
ருத்திராட்ச கொட்டையும்
உழைத்தவர்களுக்கு எண்ணியும்
உண்டியலுக்காய் எண்ணாமலும்
எடுத்துவந்த காசுக்கட்டுகளுடன்
கை சுண்டி அழைப்பதுபோல்
மணி சுண்டி கடவுளை அழைக்கும்
சிவ முருக பக்தர்களும்

சிலுவைக்குள் இருக்கும் யேசுவை
ஆணியைக்கூட பிடுங்கிவிடாமல்
அப்படியே இறங்கிவந்து
பாவங்களை ஏற்றுக்கொள்ளென்று
மன்றாடும்
யேசுபிரானின் தொண்டர்களும்
ஆலயங்களுக்கு வெளியே
கடவுள்கள் கூவியழைத்தும்
புறக்கணிப்பது ஏன் என்றுதான்
எனக்கு விளங்கவில்லை.

எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in
.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
15-06-2008, 10:30 AM
தங்கள் அறிவுரைக்கு நன்றி கிஸோர். அடுத்தவரை புண்படுத்தவேண்டுமென்பது என் எண்ணம் இல்லை. ஏதோ ஒன்றை கூற முயற்சித்தேன். எப்படியோ ஆகிவிட்டது. இனிமேல் இதுபோன்ற படைப்புகளை தவிர்க்கிறேன். மிக்க நன்றி .

இதயம்
15-06-2008, 11:10 AM
கவிதை என்ற பெயரில் மத நம்பிக்கையாளர்களை கிண்டலடித்திருக்கிறீர்கள். இதை நீங்கள் அறியாமல் செய்ததாக சொன்னாலும், படிப்பவரின் மனதை புண்படுத்தும் என்பதால் அவ்வரிகளை மாற்றுங்கள், அல்லது மொத்தத்தையும் நீக்கி விடுங்கள்..!

சிவா.ஜி
15-06-2008, 12:34 PM
ஆண்டவன் மசூதிக்குள்ளோ, கோவிலுக்குள்ளோ, பேராலயங்களுக்குள்ளோ இருப்பதாய் எண்ணிக்கொண்டு உண்மையான கடவுளைக் காண மறுப்பவர்களுக்காக நல்ல கருத்தினை சொன்னாலும் இப்படி நேரிடையாகச் சொல்வது பலரை மனம்நோகச் செய்யும் மஹாசின் அவர்களே. நாசூக்காய் சொல்லுங்கள். ஆனால் நீக்க வேண்டியத்தேவையில்லை.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
15-06-2008, 01:48 PM
மிக்க நன்றி சிவாஜி. இது என் மன்றத்திற்கு இணைக்கும் முதலாவது கவிதை. ஆதலால் சட்டென்று பிறர் கவனத்தை கவர எதையாச்சும் செய்யவேண்டுமென்று சிந்தித்தது கொஞ்சம் ஆர்வக்கோளாறாய் போய்விட்டது. சதா இறைவனென்று அலைபவர்கள் மனிதங்களை மறந்து போகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்காய் வரையப்பட்ட கவிதை இது. இஸ்லாமிய இந்து மற்றும் கிறித்தவ நண்பர்களை நக்கலடிப்பது போலிருந்தால் தயவுசெய்து மன்னியுங்கள். உங்கள் கருத்தென்ற உணவில்தான் என் கவிதை என்ற ஜீவன் வலுப்பெறுகிறது என்பதை உங்கள் சிந்தனைக்குள் நிறுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

செல்வா
15-06-2008, 01:59 PM
காலத்தின் தேவை மட்டுமல்ல காலத்தின் கட்டாயமாகவும் ஆகிவிட்டது இத்தகைய கருத்துக்களின் தேவை.


உழைத்தவர்களுக்கு எண்ணியும்
உண்டியலுக்காய் எண்ணாமலும்
உண்மையான வரிகள்.
விவிலியத்தில் ஒரு வாசகம் வரும் சிறியனான உன் சகோதரனுக்கு என்னென்ன செய்கிறானயோ அப்போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று.
மனிதனை மதிக்காது மதத்தை மதித்து என்ன பயன்.
அருமையான கவிதை ....
பெரியார் சொல்லியதை விடவா கடுமையாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
மனிதத்தை நேசிக்க சொல்லும் உங்கள் கவிதைகள் மேலும் பிறக்கவேண்டும் என்பதே எனது அவா...

சிவா.ஜி
15-06-2008, 02:09 PM
அன்பு மஹாசின், மன்னிப்பு கேட்க அவசியமேயில்லை. தொடர்ந்து நல்ல கருத்துகளை கொண்ட கவிதைகளை படையுங்கள். வாழ்த்துகள்.

பாரதி
15-06-2008, 02:10 PM
அன்பு நண்பரே,
ஆர்வக்கோளாறில் செய்திருந்தாலும் கூட, மனிதம் வளருங்கள்; மனிதர்களை நேசியுங்கள் என்ற ஆரோக்கியமான அறைகூவலாகத்தான் பார்க்கிறேன். இறை நம்பிக்கை உள்ளவர்களும், இல்லாதவர்களும் தயவு செய்து மனிதர்களை நேசியுங்கள். இதை இறை எதிர்ப்பாக கருத வேண்டிய அவசியம் இல்லை.

மற்றவர்கள் மனம் புண்படும் வகையில் எழுதுவது என்பதற்கும், தனது கருத்தை வெளிப்படையாக, சுதந்திரமாக சொல்வது என்பதற்கும் இடைப்பட்ட கோட்டில் நின்று யோசிப்போம். கவிஞர் சொல்ல வரும் மூலக்கருத்து என்பதை சற்று சிந்திப்போம். நமது கருத்துக்களையும் - எதிர்கருத்தாக இருந்தாலும் சரி - சரியான முறையில் எடுத்துரைப்போம்.

புதிய கவிஞர்களை ஊக்குவிப்போம்; சரியான முறையில் கைபிடித்து செல்வோம்.

ஓவியன்
15-06-2008, 04:21 PM
கத்தி போன்ற கூர்மையான சில விடயங்களைக் கவிதையின் கருப் பொருளாக கையிலெடுக்கையில் கவனமாக இருத்தல் வேண்டும், இல்லையென்றால் அது நம் கையையே பதம் பார்த்து விடும் என்பதைக் கவனத்திற் கொண்டால் நீங்களும் அழகாக கவிதைகளைப் படைக்கலாம் எஸ்.எம்.சுனைத் ஹஸனி...