PDA

View Full Version : படிக்கறாங்களா?சிவா.ஜி
12-06-2008, 05:25 PM
அஞ்சாப்பு வாத்தியார்
அர்ச்சுனனை அடித்து விரட்ட
அடுத்தத் தெருவுக்கு பருப்பு வாங்க
அலறி ஓடறான்!

நாலாப்பு டீச்சர் வீட்டில
நந்தினி நல்லத்தண்ணியை
நாலு தொட்டி நாளும் நிறைக்கறா

ஹெட்மாஸ்டர் சைக்கிளை
அங்குலமங்குலமா
அழுத்தித் தொடைக்கிறான்
அல்போன்ஸு

நேத்து வரைக்கும்
நிதமும் வேலை செஞ்சி
பத்து ரூபா சம்பாரிச்ச
பச்சக்குழந்தைங்க....
பரந்த மனசுக்காரங்க
பார்வைப் பட்டு படிக்க வந்தாங்க...

படிக்கறாங்களா.....??????

(இன்று குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்புதினம்)

கண்மணி
12-06-2008, 05:39 PM
படிக்கலையே
படிக்கறவங்களும்
படுத்தறவங்களும்

கூரையில்லா குட்டிச் சுவரும்
மரத்தடிக் கரும்பலகையும்
உடைந்த மேசையின் மேல் பிரம்பும்
அனாதையாய்க் கிடக்க

கூச்சலிட்டு ஓடிய குழந்தைகள்
வரிசையில் நிற்கின்றன
ஓரகப்பைச் சத்துணவுக்கு.!!!


நல்லதொரு கவிதை சிவாஜி அண்ணா! ஆசிரியர் மனம் ஆ-சிறியதானதால்(மிகச் சிறியதானதால்) ஆசிரியர் இல்லா ஆ-சிரியர் (மிகுந்த சிரிப்பை உடையவர்கள் - குழந்தைகள்) இல்+ ஆ - சிரியர்(சிரிப்பில்லாதவர்கள்) ஆகிப்போனார்,,

இளசு
12-06-2008, 07:20 PM
நன்றி சிவா

இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்தொழிந்து போயிடலையா?
இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தாலும் தப்பில்லையா?

வேலிகள் பயிரை இம்சித்து முள்ளால் குத்தலாமா?

வெட்டி எல்லையில் இருக்க வைக்க வேண்டாமா?

சிவா.ஜி
12-06-2008, 07:24 PM
அந்த ஓரகப்பை உணவுக்காக படிக்க வந்தவர்களானாலும் பரவாயில்லை உழைச்சு சாப்பிட்டாங்கன்னு சொல்லலாம்.....படிக்க வந்தவங்களை....??

உற்று நோக்கும் வண்ணம் கவிதையில் பின்னூட்டமளித்த கண்மணிக்கு மிக்க நன்றிகள்.

சிவா.ஜி
12-06-2008, 07:28 PM
வேலியை வெட்டி எங்கே வைக்க இளசு? அரசு எனும் பண்ணையாரின் அடியட்களாக செயல் படும் இவர்களைத் தட்டிக் கேட்க முடியவில்லையே. மன்னிக்கவும் இளசு அங்கொன்றும் இங்கொன்றுமாய் இல்லை...வெகு பரவலாய் நடப்பதை நானே கண்டு கொண்டிருக்கிறேன்.

இவர்களை நான் ஆசிரியர்களாகவே நினைக்கவில்லை. அரசு எனும் பிரபல ரௌடியின் அடியாட்களாய்த்தான் பார்க்கிறேன். பரமசிவன் கழுத்து பாம்புகள்.

Narathar
12-06-2008, 07:55 PM
உண்மைதான் இலங்கையில் பரவலாக இந்நிலை இல்லையென்றாலும், மலை நாட்டு இந்தியவம்சாவழி மக்களின் பாடசாலைகளில் இப்படி நடப்பதாக நான் செய்திகளில் கண்டதுண்டு.................

அந்த ஏழை தொழிலாளிகளின் ஓட்டுக்களை வாங்கி ஏப்பமிடும் அரசியல் வாதிகள் தான் இவற்ரை தட்டிக்கேட்க வேண்டும்.... ஆனால் தட்டியல்லவா கொடுக்கின்றார்கள்!!!!

சிவா.ஜி
12-06-2008, 08:10 PM
பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் இந்த அவலத்தைக் காணலாம் நாரதர். என் வீட்டருகே உள்ள பள்ளியில் இந்த கேவலத்தைப் பார்த்து மனம் நொந்தவன்.

கிராமத்துப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் தோட்டத்தின் விளைச்சல்களைக் கப்பமாக இந்த ஆசிரிய மகாராஜா, மகராணிகளுக்கு கட்டிக்கொண்டுதானிருக்கிறார்கள்.

நீங்கள் சொன்னதைப்போல அரசும் அரசியல்வாதிகளும் இவற்றை நிச்சயம் தட்டிக் கேட்க மாட்டார்கள். ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர், அவர்களுக்கு 100 பொன்வாக்குகள் போடும் வாத்துகள்.

கண்மணி
13-06-2008, 02:51 AM
அந்த ஓரகப்பை உணவுக்காக படிக்க வந்தவர்களானாலும் பரவாயில்லை உழைச்சு சாப்பிட்டாங்கன்னு சொல்லலாம்.....படிக்க வந்தவங்களை....??

.
உங்கள் கவிதையை
படிக்கலையே
படிக்கறவங்களும் --- மாணவர்கள்
படுத்தறவங்களும் --- ஆசிரியர்கள்


இன்றைய கிராமப் புற அரசுப் பள்ளிகளின் நிலைமை (பாதி வகுப்புகளுக்கு குட்டிச் சுவர், கரும்பலகை மேசை பிரம்பு மாத்திரம் உண்டு கூரைகளும் ஆசிரியர்களும் கிடையாது... )
---------------------------------------------------
கூரையில்லா குட்டிச் சுவரும்
மரத்தடிக் கரும்பலகையும்
உடைந்த மேசையின் மேல் பிரம்பும்
அனாதையாய்க் கிடக்க
----------------------------------------------

ஓரகப்பைச் சத்துணவுக்கு
கூச்சலிட்டு ஓடிய குழந்தைகள்
வரிசையில் நிற்கின்றன
ஓரகப்பைச் சத்துணவுக்கு.!!!

ஓர் + அகப் + பை + சத்து + உணவு === கல்வி!!!
ஓர் அகப்பை சத்துணவு = மதிய உணவு,,

கல்விக்கு வந்தவர்கள் உணவுக்கு வரிசையில்...இப்படிப் படிச்சுப் பாரருங்க சிவாஜி பொருள் மாறும்!!!

பூமகள்
13-06-2008, 06:31 PM
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி ஒரு கவிதையில் விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் சிவா அண்ணா...!

மனம் பதைபதைக்கிறது... விழி துடிக்கிறது..

ஏதாவது செய்யனும்.. ஏதாவது செய்யனும் என்று கண் முன் காணும் போதெல்லாம் மனம் வெகுண்டெழுகிறது..

நல்ல விதையை தூவிய உங்களின் பணி தொடரட்டும்..
பாராட்டுகள் சிவா அண்ணா.

சிவா.ஜி
14-06-2008, 05:36 AM
ரொம்ப நன்றிம்மா. ஆனா ஒரு கொடுமை என்னன்னா.....நம்மாள ஒண்ணுமே செய்ய முடியாது. பிள்ளைகள் அந்த ஆசிரியர்களுக்கு ரொம்ப பயப்படுகிறார்கள். பெற்றவர்கள் சென்று கேட்கலாமென்றாலும், வேண்டாம் நீங்க போன பிறகு எங்களைத் தண்டித்துவிடுவார்கள் என்று ரொம்பவே அச்சப்படுகிறார்கள்.

ஆதவா
16-06-2008, 04:46 AM
ஆரம்பத்தில் குரு பணிவிடை, குரு தட்சணை என்றும் வர்ணாச்சிரம பிரிவின்படி பணிவிடைகளும் இருந்தன. இன்று மிகவும் குறைந்துள்ளனேவே தவிர ஒழிந்துவிடவில்லை.

பெரும்பாலும் (சில) கிராமத்து ஆரம்பப் பள்ளிகள் அல்லது மிகக் கீழ்தளமான கல்வியை மைய நிறுத்தாமல் கற்பிக்கும் பள்ளிகளில் இவ்வகை ஒழுங்கீனங்களைக் காணலாம். ஆசிரியர் மாணவரிடம் எந்தவேலையும் செய்யச் சொல்லலாமா? கூடாதா? ஒரு ஆசிரியர் தன் மாணாக்கனிடம் கல்வி தொடர்பான அல்லது பள்ளி தொடர்பான வேலைகளை வாங்குவதில் எள்ளளவிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. பள்ளிக்கு அப்பால் தனது சொந்த வேலைகள் சொல்லுவது முற்றிலும் தவறெனப்படும்.

அர்ச்சுனனை அடித்து விரட்ட..

கவிதை முற்றிலும் பழக்கு மொழியில் எழுதியிருப்பதால் அடித்து என்ற பதத்திற்கு 'அடிச்சு ' என்று உபயோகப்படுத்தியிருக்கலாம். பிந்தைய வரிகள் சொல்லும் 'அலறி ஓடறான்" என்பது மாணவனின் விருப்பத்தை முறைகேடாக்கும் ஒரு கற்பிப்பவனின் செயலாக எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஆரம்பப்பள்ளியில் நடப்பதாக முன்னிறுத்தியிருக்கும் 'அஞ்சாப்பு' என்ற வார்த்தை கவனிக்கத் தக்கது.

நந்தினி தொட்டி நிறைக்கறா

இது மாணவி சம்பந்தமானது. நீர் இறைத்தலும் அதனை தொட்டியில் நிறைத்தலும் பள்ளியின் உள்ளூடே அமைந்திருக்கும் ஆசிரியையின் இல்லத்தில் நடக்க வாய்ப்புகள் அதிகம். (கல்வி நிலையங்கள் வீட்டில் நடப்பது இங்கு அரிதல்ல.) மேலும் இத்தகைய பணிபுரியும் மாணவி, மிக நல்ல தேர்ச்சிபெற்ற அறிவுத்திறன் கொண்டவளாக இருப்பதில்லை, கல்வியைப் பொறுத்தவரையிலும் ஆசிரியர்கள் பார்வைக்கும் இரு சாதிகள் கண்களுக்குத் தெரிகின்றன. அறிவிலி ஒன்று, அறிவாளி மற்றொன்று. இதில் முதலாவதாகச்சொன்ன அறிவிலியே எடுபிடி வேலைகள் செய்ய இலாயக்குள்ளவள் என்று எண்ணிவிடுவதும் கற்பிக்கும் ஆசிரியர்களின் மனதில் அவர்களுக்குத் தெரியாமல் புகுந்துவிட்ட எண்ணம்.

நல்லத்தண்ணியை

தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் நல்ல தண்ணி அதாவது குடிப்பதற்குகந்த நீர் வரும் நேரங்கள் சரியாக வகுக்கப்படுவதில்லை. இரவிலும் வரலாம், பகலிலும் வரலாம். சரியான நேரத்தில் நீர் பிடிக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறதல்லவா.. இல்லாவிடில் தமிழ்நாட்டில் தண்ணீர் கிடைப்பதே அரிதாக அல்லவா இருக்கிறது..

அவர்கள் படிக்கிறார்களா என்று கேட்டால்.. இல்லை என்று சொல்லமுடியாது. ஆனால் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டு படிக்கிறார்கள் அல்லது கற்பிக்க மனதில்லாமல் நடத்துகிறார்கள் என்று சொல்லலாம்............ ஆம்.. படிக்காதவர்களும் உண்டு.........

நல்ல கவிதை அண்ணா.

சிவா.ஜி
16-06-2008, 05:10 AM
ஆழமான ஆதவா ரக விமர்சனம். பலவேளைகளில் எனக்கு ஆச்சர்யமளிப்பது உங்களின் ஊடுருவியப் பார்வை ஆதவா. கவிதையின் பல பரிமாணங்களிலும் பயணித்து, படைத்தவர்களே சிந்திக்க மறந்த கோணங்களை வெகு லாவகமாக வெளிக்கொணரும் அழகான விமர்சனம்.
நன்றி ஆதவா.

kavitha
16-06-2008, 05:15 AM
பரந்த மனசுக்காரங்க
பார்வைப் பட்டு படிக்க வந்தாங்க...
பள்ளியிலும் எடுபிடி வேலை செய்யப்பணிக்கப்படும் பிள்ளைகளின் நிலையை படம் பிடிக்கிற கவிதை. குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தில். யோசிக்கவேண்டிய விசயமல்ல. தட்டிக்கேட்க வேண்டிய விசயம்.
பத்து ஆசிரியர்கள் இருக்கும் இடத்தில் ஒரு நல்ல ஆசிரியர் இருந்தால் கூட போதும்; இந்நிலை மாறிவிடும்.


பெற்றவர்கள் சென்று கேட்கலாமென்றாலும், வேண்டாம் நீங்க போன பிறகு எங்களைத் தண்டித்துவிடுவார்கள் என்று ரொம்பவே அச்சப்படுகிறார்கள்.
ஒருவராக சென்று கேட்டால் சரிப்படாது. இரண்டு, மூன்று பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து கேட்டால் கொஞ்சம் பயமும், விழிப்புணர்ச்சியும் ஏற்படும்.அறிவிலி ஒன்று, அறிவாளி மற்றொன்று. இதில் முதலாவதாகச்சொன்ன அறிவிலியே எடுபிடி வேலைகள் செய்ய இலாயக்குள்ளவள் என்று எண்ணிவிடுவதும் கற்பிக்கும் ஆசிரியர்களின் மனதில் அவர்களுக்குத் தெரியாமல் புகுந்துவிட்ட எண்ணம்.
அறிவிலிகள் என்று யாருமே கிடையாது. இவர்கள் பாடம் நடத்தி புரியவைக்க இயலவில்லை என்பது மட்டுமே உண்மை. அறிவாளிகளுக்கு இவர்கள் பாடம் நடத்தவேண்டிய அவசியமே இல்லையே.... அவர்களே படித்துக்கொள்ளக்கூட முடியும். புதிய பாடங்களைப்பொறுத்தவரை அனைவருமே சமம் தான். தம் குழந்தைகளைவிடவும் அக்கறை காட்டவேண்டியவர்கள் மாணவர்கள்.

கண்மணியின் கவிதையும் நன்று. :)

ஆதவா
16-06-2008, 05:42 AM
அறிவிலிகள் என்று யாருமே கிடையாது. இவர்கள் பாடம் நடத்தி புரியவைக்க இயலவில்லை என்பது மட்டுமே உண்மை. அறிவாளிகளுக்கு இவர்கள் பாடம் நடத்தவேண்டிய அவசியமே இல்லையே.... அவர்களே படித்துக்கொள்ளக்கூட முடியும். புதிய பாடங்களைப்பொறுத்தவரை அனைவருமே சமம் தான். தம் குழந்தைகளைவிடவும் அக்கறை காட்டவேண்டியவர்கள் மாணவர்கள்.

கண்மணியின் கவிதையும் நன்று. :)

மன்னிக்கவேண்டும் சகோதரி, கீழ்காணும் வரியை நீங்கள் கவனிக்கவில்லையோ என்று நினைக்கிறேன்.


கல்வியைப் பொறுத்தவரையிலும் ஆசிரியர்கள் பார்வைக்கும் இரு சாதிகள் கண்களுக்குத் தெரிகின்றன.

மற்றபடி அறிவிலி என்று யாரையும் எண்ணமுடியாது.. ஆசிரியர்களின் பார்வைக்கு அப்படித்தோன்றலாம் என்று சொல்கிறேன்.

சிவா.ஜி
16-06-2008, 05:52 AM
நல்ல விமர்சனம் தங்கையே. நிச்சயம் இது தட்டிக்கேட்கப்படவேண்டிய விஷயம்தான். ஆதவா சொன்னதைப்போல பெரும்பாலும் கிராமப்புற பள்ளிகளிலேயே இத்தகைய காரியங்கள் நடப்பதால், கிராமத்துப் பெற்றோர்களுக்கு இன்னமும் ஆசிரியர் என்பவர் மரியாதைக்குரியவராக இருப்பதால் சற்று சிரமம்தான். ஏதேனும் ஒரு சமூக நல அமைப்பு இதை செய்யலாம். நன்றிம்மா கவிதா.

kavitha
16-06-2008, 06:08 AM
மன்னிக்கவேண்டும் சகோதரி, கீழ்காணும் வரியை நீங்கள் கவனிக்கவில்லையோ என்று நினைக்கிறேன்.

Quote:
கல்வியைப் பொறுத்தவரையிலும் ஆசிரியர்கள் பார்வைக்கும் இரு சாதிகள் கண்களுக்குத் தெரிகின்றன.
ஆசிரியர்களின் பார்வைக்கு அப்படித்தோன்றலாம் என்று சொல்கிறேன்.
ஆதவா உன்னை சொல்லவில்லையப்பா... அப்படி நினைக்கும் ஆசிரியர்களைத்தான் சொன்னேன். புரிகிறதா? கிராமப்புறங்களில் நானும் கண்கூடாகப்பார்த்திருக்கிறேன். நகர்ப்புறங்களிலும் கூட படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சலுகைகள் காட்டுவதுண்டு. தவறு செய்தால் கூட கண்டிக்க யோசிப்பார்கள். படிக்காத பிள்ளைகள் என்றால் அவ்வளவு தான். தொலைந்தார்கள் அன்று.ஆதவா சொன்னதைப்போல பெரும்பாலும் கிராமப்புற பள்ளிகளிலேயே இத்தகைய காரியங்கள் நடப்பதால், கிராமத்துப் பெற்றோர்களுக்கு இன்னமும் ஆசிரியர் என்பவர் மரியாதைக்குரியவராக இருப்பதால் சற்று சிரமம்தான். ஏதேனும் ஒரு சமூக நல அமைப்பு இதை செய்யலாம். நன்றிம்மா கவிதா.
உங்களின் சரியான புரிதலுக்கு மிக்க நன்றி அண்ணா.

ஓவியன்
16-06-2008, 06:21 AM
குழந்தைத் தொழிலாளர்களின் நிலைக்கு நம் ஒட்டு மொத்த சமுதாயமும் காரணம், ஒரு தொழில் பிரிவினரோ அல்லது சமூகத்தின் ஒரு பகுதியினரோ மட்டும் காரணகர்த்தாக்களில்லை சிவா. ஏனென்றால் ஒரு தொழில் பிரிவினரோ (உதாரணமாக ஆசிரியர்கள் எனக் கொள்ளலாம்) இல்லை சமூகத்தின் ஒரு பகுதியினரோ மட்டும் மனம் வைத்து விட்டால் இந்த நிலை மாறிடுமா..??

முன்னுதாரணமாக இருக்க வேண்டியவர்கள் அதிலிருந்து தவறிவிட்ட நிலையை மட்டும் எடுத்தியம்பும் கவிதை இது, மாறாக இத்தகையோர்களால் மட்டும் தான் இந்த சமூதாய தவறு நடக்கிறது என்ற கருத்தியலைத் தோற்றுவித்து விட நாம் அனுமதித்து விடக் கூடாது.

எந்தவிடத்திலும் நல்லவர்களும் உள்ளனர், கெட்டவர்களும் உள்ளனர் கெட்டதை அறிந்து நல்லதை அண்டி நாம் தான் நம்மையும் நம் சமூகத்தையும் நல்லவையாக பேணப் பழக வேண்டும்.

வேறுபட்ட கோணத்தில், இலகு தமிழில் சந்தம் பிசகாது
தாங்கள் தந்த கவிதைக்கு என் பாராட்டுக்கள் சிவா..!!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
16-06-2008, 07:05 AM
குழந்தைத்தொழிலாளர்கள் கூடாது அவர்களையும் படிக்கவைக்கவேண்டுமென்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய பல கவிஞர்களின் பல கவிதைகளை படித்து இருக்கிறேன். ஆனால் உங்கள் இந்தக்கவிதை முற்றிலும் வித்தியாசமான சிந்தனை. இதெல்லாம் ஒரு காலமென்று ஒதுக்கிவிட முடியா கருத்துக்களை கூறியுள்ளீர்கள். பல கிராமங்களில் நீங்கள் சொல்லும் கவிதை உண்மைப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் உள்ளது இன்றளவும். நானும் சில வருடங்கள் கல்லூரியில் பணியாற்றி இருக்கிறேன். அப்பொழுதெல்லாம கொங்சம் ஓவராகவே நடந்து கொண்டது உங்கள் கவிதையை படித்தபின்பே மனம் குறுகுறுக்கிறது. அருமையான எளிய நடை கவிதை. இது போன்ற மாறுபட்ட சிந்தனைகளை வரவேற்கிறேன்.
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.

ஆதவா
16-06-2008, 07:58 AM
நானும் சில வருடங்கள் கல்லூரியில் பணியாற்றி இருக்கிறேன். அப்பொழுதெல்லாம கொங்சம் ஓவராகவே நடந்து கொண்டது உங்கள் கவிதையை படித்தபின்பே மனம் குறுகுறுக்கிறது. அருமையான எளிய நடை கவிதை. இது போன்ற மாறுபட்ட சிந்தனைகளை வரவேற்கிறேன்.
எஸ்.எம்.சுனைத் ஹஸனி.

இது கவிதையின் விளைவு, கவிஞரின் விழைவு.

பாராட்டுகள் சிவா அண்ணா

சிவா.ஜி
16-06-2008, 08:36 AM
குழந்தைத் தொழிலாளர்களின் நிலைக்கு நம் ஒட்டு மொத்த சமுதாயமும் காரணம், ஒரு தொழில் பிரிவினரோ அல்லது சமூகத்தின் ஒரு பகுதியினரோ மட்டும் காரணகர்த்தாக்களில்லை சிவா. ஏனென்றால் ஒரு தொழில் பிரிவினரோ (உதாரணமாக ஆசிரியர்கள் எனக் கொள்ளலாம்) இல்லை சமூகத்தின் ஒரு பகுதியினரோ மட்டும் மனம் வைத்து விட்டால் இந்த நிலை மாறிடுமா..??

நான் ஆசிரியர்களை மட்டும் சொல்லவில்லை ஓவியன். பள்ளியில் நடக்கும் இதைப்போன்ற செயல்களுக்கு அவர்கள்தானே காரணம். இது பள்ளியில் நிகழ்வதை மட்டுமே சொல்லும் கவிதை.. நீங்கள் சொன்னதைப்போல சமுதாயத்தில் நிறைய இடங்களில் இந்த நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது. அப்படிப்பட்ட கொடுமைகளிலிருந்து சில நல்லவர்களால் காப்பாற்றிக் கூட்ட்டிவரப்பட்ட பிள்ளைகள் படிப்பதில் எத்தனை ஆர்வமாக இருப்பார்கள்? இங்கு வந்தும் அதே வேலையே செய்யவேண்டியுள்ளதே என்பதே எனது ஆதங்கம். அதையே வெளிப்படுத்தினேன்.
நன்றி ஓவியன்.

சிவா.ஜி
16-06-2008, 08:38 AM
மிக்க நன்றி ஹஸனி. தங்களின் சமூக ஆர்வத்தை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

இதயம்
16-06-2008, 09:00 AM
ஒரு காலத்தில் மிகையாக நடந்து, தற்காலத்தில் அரிதாகிப்போன ஒரு விஷயத்தை ஆதாரமாக தன் அனுபவத்தையே அடிப்படையாக கொண்டு கவிதை வடித்திருக்கிறார் நம் சிவா. வெறும் மனனத்தை அடிப்படையாக கொண்ட நம் கல்வி முறையே தவறாக இருக்கும் பொழுது, அது நடக்கும் சூழலில் ஏற்படும் விஷயங்களை இத்தனை பூதாகரமாக்கத்தேவையில்லை. நான் படித்த பள்ளிக்கு சொந்தமாக 5,6 வயல்கள் இருந்தன. வாரத்தில் இரு நாட்களில் ஒரு மணி நேரம் அந்த வயல்களுக்கு சென்று வரப்பு வெட்டுதல், உழுதல், நடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், களை பறித்தல் என்று தெரிந்தவர்கள் தெரிந்த வேலையை செய்வார்கள். எதுவும் தெரியாத என்னைப்போன்றவர்கள் நாற்றுக்கட்டுக்களை எடுத்துப்போடுவோம். அல்லது அருகில் நின்று உற்சாகப்படுத்துவோம். அப்போது எங்கள் மனதுக்குள்ளும், மறைவாகவும் பள்ளி நிர்வாகத்தை திட்டியிருக்கிறோம்.

ஆனால், நாங்கள் பக்குவ வயதை அடைந்த பிறகு அவர்களின் அந்த முயற்சி எங்களை வைத்து வேலை வாங்கும் ஈன செயலல்ல, எல்லாம் அறியச்செய்து எங்களை பண்படுத்த எடுத்த உயர்ந்த முயற்சி என்பதை புரிந்து கொண்டோம். அதே போலவே மாணவர்களை அடித்து கண்டிப்பதும் (ஆனால், அதன் எல்லைக்குள் இருக்க வேண்டியது அவசியம்). அதே போல் ஆசிரியருக்கு வீட்டு வேலை செய்து கொடுப்பது நம் பார்வையில் அவர்களின் ஏவல்களை நிறைவேற்றுவதாக இருந்தாலும் அது நம்மை பண்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. அது மட்டுமல்லாமல், ஆதவா சொன்னது போல் இது போன்ற வேலைகளை குறும்புத்தனம் நிறைந்த, படிப்பில் அக்கறை இல்லாத மாணவர்களை தான் செய்ய வைப்பார்கள். இதன் மூலம் அவர்கள் ஏட்டுக்கல்வியில் உயர முடியாவிட்டாலும், வாழ்க்கை கல்வியில் உயர முடியும். ஒரு தந்தையின் கோணத்தில் நீங்கள் வடித்த இந்த கவிதை எத்தனை நியாயமோ, அத்தனை நியாயம் ஒரு ஆசிரியரின் கோணத்தில், எதிர்கால விளைவின் கோணத்தில்..!!

இதயம்
16-06-2008, 09:03 AM
ஆசிரியரை ஒரு அரசின் அடியாட்கள் என்ற உங்களின் கோணம் பெரும் முரண்பாடு. ஒரு ஆசிரியர் ஒருவனின் வாழ்வில் ஏற்படுத்தும் உயர்ந்த நிலையை பெற்று வளர்க்கும் தாய் தந்தையர் கூட ஏற்படுத்துவதில்லை. ஒழுக்கம், உயர்வுக்கு அடிப்படை ஆசிரியர்கள். பலருக்கு அவர்களின் ஆதர்ச நாயகன் பள்ளி ஆசிரியர்களாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன், எனக்கும் தான்..!! இத்தனைக்கும் அவர்கள் அடித்து கண்டிக்காதவர்கள் அல்ல..! கோழி மிதித்து குஞ்சு முடமாவதில்லை. ஒரு ஆசிரியரின் கண்டிப்போ, ஏவலோ எதிர்மறை விளைவை கொடுக்குமென்று நான் நம்பவில்லை. இருந்தாலும் உங்கள் அனுபவம் கொடுத்த மனநிலையை மதித்து வாளாதிருக்கிறேன்..!! மாணவர்களின் நலன் பற்றி சிந்திக்காமல் சுயநலத்திற்கு அவர்களை பயன்படுத்தும் ஆசிரியர்களை கண்டித்த உங்களின் கருத்திற்கு ஒரு ஷொட்டு..! ஆசிரியர் சமூகத்தையே குற்றம் சாட்டும் உங்களின் போக்கிற்கு ஒரு குட்டு..!!

சிவா.ஜி
16-06-2008, 11:59 AM
ஆஹா, ஷொட்டும் குட்டும் சேர்த்தே கிடைத்திருக்கிறதே. முதலில் ஷொட்டுக்கு நன்றி.
இதயம், நீங்கள் படிக்கும்போதும், நான் படிக்கும்போதும் இருந்த ஆசிரியர்கள் தற்போது இல்லை. அரசு என்று கல்வியை தனியாருக்கு தாரைவார்த்து வியாபாரமக்கிவிட்டதோ அப்போதிருந்தே கல்வி கற்பித்தலை ஒரு சேவையாக செய்யாமல் காசுக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு அப்துல்கலாமையும், சர்.சி.வி. ராமனையும், சேஷனையும் ஏன் உங்களையும் என்னையும் ஒரு நிலைக்கு ஆளாக்கியதில் சர்வ நிச்சயமாய் அந்த ஆசிரியப் பெருந்தகைகளுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

ஆனால் இன்றைய நிலையை சற்று பாருங்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கும், இட மாறுதல்களுக்கு யாரை பிடிக்கலாமென்று அலைவதில் காட்டும் ஆர்வத்தை படிப்பை சொல்லிக்கொடுப்பதில் காட்டுவதில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்களோ தங்களுக்கு கிடைக்கும் குறைந்த சம்பளத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், தாங்கள் செய்யும் வேலையை பகுதி நேர வேலையாக மட்டுமே வைத்துக்கொண்டு, எப்படியாவது அரசாங்க வேலையை வாங்கிவிடவேண்டுமென்று முழுநேரமும் அலைகிறார்கள். அப்படிக்கிடைத்துபோனால் வேலையே செய்யாமல் அதிக சம்பளம் வாங்கலாம் என்ற ஆசைதான். இது நிதர்சனம்.

இந்த நிலையில் தான் கற்றுக்கொடுக்கும் மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்று ஈடுபாட்டுடன் ஆத்மார்த்தமாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சுருங்கிவிட்டார்கள்.

நீங்கள் சொன்ன அத்தனை வேலைகளையும் நானும் அந்த சமயத்தில் செய்திருக்கிறேன். ஆனால் ஆசிரியர்களின் வீட்டுவேலைகளை அல்ல. சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துதல், பள்ளி வளாகத்தை பராமரித்தல் என்ற உயர்ந்த நோக்கமுள்ள பணிகளை மட்டுமே.

ஆனால் இன்று நாம் காண்பது என்ன? அடுத்தமுறை ஏதாவது ஒரு அரசுப்பள்ளிக்குச் சென்று கவனித்துப்பாருங்கள். உண்மை உங்களுக்கே புரியும். புனிதமான தொழில் என்ற வரிசையிலிருந்து ஆசிரியர் பணி படி இறங்கி வந்து பல காலமாகிவிட்டது. கோழிமிதித்து குஞ்சு சாகாது..ஆனால் வாத்தியார் அடித்து மாணவன் இறந்த கதைகள் அநேகம்.

எனினும் இன்றளவும் நீங்கள் பார்த்த ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிந்து வருகிறார்கள் என்றால்....அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.