PDA

View Full Version : காத்திருக்கையில்!!கண்மணி
12-06-2008, 11:52 AM
எரிகின்ற உச்சி வெயில்
கறுத்திளகிய தார்ச்சாலை
இலையுதிர்த்த புளிய மரம்
அசைந்தாடும் கானல் நீர்
அசையாத வெக்கைக் காற்று
சற்றுமுன் சென்ற லாரி விட்டுச் சென்ற
தூசியும் கரும்புகையும்
வடியத் துடிக்கும்
ஒரு துளிக் கண்ணீர்
அனைத்தும்
என்னிலும்
என்னைச் சுற்றிலும்
உனக்காக காத்திருக்கையில்!

அக்னி
12-06-2008, 12:04 PM
கருக்கலை விடுத்துக்,
கருக்கொள்...

என்ன கண்மணி... சரிதானே நான் சொல்வது...

கண்மணி
12-06-2008, 12:28 PM
இல்லை அக்னி..
கருக்கல் அவனால் இல்லையே!!

புறத்திலும் அகத்திலும் வேனிற்காலம்
சாலையோரம் அவன் வருகைக்காய் நான்

அவன் வந்திட்டால்
வேனிற்காலம் போய்விடப் போவதில்லை
ஆனால் வருத்தாதன்றோ?
நிழல் கிட்டிவிடுவதால்!!!

ஷீ-நிசி
12-06-2008, 02:01 PM
காத்திருக்கின்ற அந்த சுகானுபவங்களை சொல்லியிருக்கிறீர்கள்...
காதலிப்பவர்களுக்கு, காதலிக்காய் காத்திருப்பவர்களுக்கு இத்தனையும் உணர்ந்திருப்பார்கள்...

வாழ்த்துக்கள்!

இளசு
12-06-2008, 06:47 PM
காத்திருக்கும் நேரம்..

கடிகாரம் மெதுவாய் நகரும்
கண்கள் பூக்கும். சோரும்..மங்கும்..

இங்கே கண்மணியின் கவிப்பார்வை
கடையோர நீர்த்துளியையும் மீறி
அத்தனையும் படம்பிடித்ததால்...

காமிராக்காட்சி போல கவிதை வந்தது..
தாமதங்களும் சில சமயம் நன்மை பயக்குது..:)

பாராட்டுகள் கண்மணி!

கண்மணி
13-06-2008, 04:37 AM
எரிகின்ற உச்சி வெயில்
கறுத்திளகிய தார்ச்சாலை
இலையுதிர்த்த புளிய மரம்
அசைந்தாடும் கானல் நீர்
அசையாத வெக்கைக் காற்று
சற்றுமுன் சென்ற லாரி விட்டுச் சென்ற
தூசியும் கரும்புகையும்
வடியத் துடிக்கும்
ஒரு துளிக் கண்ணீர்
அனைத்தும்
என்னிலும்
என்னைச் சுற்றிலும்
உனக்காக காத்திருக்கையில்!

எரிகின்ற உச்சி வெயில் - வறுமை
கறுத்திளகிய தார்ச்சாலை - எதிர்கால இலட்சியங்கள்
இலையுதிர்த்த புளிய மரம் - அன்பு நீரின்றி பசுமை தொலைத்தமனம்
அசைந்தாடும் கானல் நீர் -- ஆசைகள் கனவுகள்
அசையாத வெக்கைக் காற்று -- பொறாமைகள்
சற்றுமுன் சென்ற லாரி விட்டுச் சென்ற தூசியும் கரும்புகையும் -- உறவினரின் கிண்டல்கள், கேலிகள், குத்திக்காட்டல்கள், தூற்றுதல்கள்
வடியத் துடிக்கும் ஒரு துளிக் கண்ணீர் - விரல் பட்டுத் துடைக்க ஆறுதல் தேடித் தவிக்கும் இதய மூலையில் தவித்துக் கிடக்கும் ஒரு சின்ன விசும்பல்

kavitha
13-06-2008, 05:41 AM
என்னிலும்
என்னைச் சுற்றிலும்
இந்த வரிகளைப்படிக்கையில் நினைத்தேன் கண்மணி. நீ எதையோ உருவகப்படுத்துகிறாய் என்று. லாரிக்கு என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே வருகையில் உன் பதிவு விடுகதையின் விடையாக.


எரிகின்ற உச்சி வெயில் - வறுமை
கறுத்திளகிய தார்ச்சாலை - எதிர்கால இலட்சியங்கள்
இலையுதிர்த்த புளிய மரம் - அன்பு நீரின்றி பசுமை தொலைத்தமனம்
அசைந்தாடும் கானல் நீர் -- ஆசைகள் கனவுகள்
அசையாத வெக்கைக் காற்று -- பொறாமைகள்
சற்றுமுன் சென்ற லாரி விட்டுச் சென்ற தூசியும் கரும்புகையும் -- உறவினரின் கிண்டல்கள், கேலிகள், குத்திக்காட்டல்கள், தூற்றுதல்கள்
வடியத் துடிக்கும் ஒரு துளிக் கண்ணீர் - விரல் பட்டுத் துடைக்க ஆறுதல் தேடித் தவிக்கும் இதய மூலையில் தவித்துக் கிடக்கும் ஒரு சின்ன விசும்பல்
மீண்டும் ஒருமுறை கவிதையை வாசிக்கிறேன். ஆகா! அருமை.


உனக்காக காத்திருக்கையில் இங்கே உனக்காக என்பது உன் உருவகப்படி "வெற்றி" யைத்தானே குறிக்கிறது?

கண்மணி
13-06-2008, 05:48 AM
சிச்சுவேஷன் இப்படி!

கணவன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றிருக்கிறேன்.. பலப்பலக் கடமைச் சுமைகளை கடன் சுமைகளை இலேசாக்கி இல்லாமல் செய்ய..

அனுப்பிய பணமெல்லாம் ஆடம்பரமாய் செலவழிக்கப் பட்டுவிட்டது உறவினர்களால்.. வறுமை ஒழியவில்லை, வாழ்க்கையும் செழிக்கவில்லை.

உழைத்த உடல் உருகிப் போக, வெறும் சக்கையாய் நாடு திரும்பிக் கொண்டிருக்கும் கணவன்.. அவனுக்காய் காத்திருக்கும் மனைவி..

வெறுங்கையுடன் வருபவனை வரவேற்க உறவினர்க் கூட்டமா திரண்டு நிற்கும்?

வாழ்க்கைத் துணையானவள் வசந்தம் இழந்து வேனிற்காலத்தில் வெம்மையில் காத்திருக்கிறாள்..

அன்பு மழைக்காக. !!!

அந்த வருகைக்குப் பிறகு, புளிய மரம் தழைத்து நிழல் கொடுக்கலாம்?
தெரிந்த பாதையில் பயணம் தொடரலாம்.. புதுவாழ்க்கை அவளுக்கும் அவனுக்குமாய்!

அக்னி
13-06-2008, 01:47 PM
என் அறிவுக்கு, மழை தேடும் வரட்சிதான் கவிதைக் கருவாகப் புரிந்தது.
அதற்குள் இப்படியான ஒரு ஆழ்ந்த கருத்து இருக்கும் என்று சிந்திக்கவேயில்லை.
வியக்கவைக்கின்றீர்கள் கண்மணி...

கண்மணி
13-06-2008, 01:57 PM
பருவக்காற்றுக்கு காத்திருக்கும் மரங்களும், வருடங்களுக்கொருமுறை வரும் கணவனுக்குக் காத்திருக்கும் மனைவியரும் ஒன்றுபோலத்தானே அக்னி!