PDA

View Full Version : நோட்டீஸூம் புள்ளட் கோதும் (பாகம் 2 - இறுதிப்பாகம்)



அன்புரசிகன்
11-06-2008, 06:31 PM
நோட்டீஸூம் புள்ளட் கோதும்
(பாகம் 1)
டேய்... நோட்டீஸ் போடுறாங்களாமடா... என்று சொன்னவாறு வீதியால் சில வாலிபர்கள் துவிச்சக்கரவண்டியில் விரைந்தார்கள். சிங்கள இராணுவத்தினர் நோட்டமிடும் விமானம் (சீ-பிளேன் என்போம்) மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் துண்டுப்பிரசுரங்களை வானிலிருந்தவாறே தூவி விடுவர்.அதைத்தான் நோட்டீஸ் என வடதமிழீழமக்கள் (செல்லமாக) அழைப்பார்கள். அதை பொறுக்கி படிக்கும் ஆவலில் பெரியவர்கள். அதில் என்ன வந்துள்ளது, எதைப்பற்றி அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை படித்துத்தெளியும் நோக்கில் அந்த பெரியவர்கள். இதற்கிடையில் பெரியவர்கள் கண்களுக்குப்படும் முன் அதை கைப்பற்றும் நடவெடிக்கையில் எந்த பயமும் தெரியாத சிறுவர்கள். யார் அதிகமாக வைத்திருக்கிறார்கள் என அடுத்தநாள் பாடசாலை நண்பர்களுக்கு இடையில் போட்டி வேறு இருக்கும்.

பயங்கரவாதிகளின் காம்புக்கு பக்கத்தில யாரையும் இருக்க வேண்டாமாம். என்று சொன்னவாறே பக்கத்து வீட்டு தியாகர் ராசுப்பிள்ளை வீட்டுப்படலையை திறந்தார். தியாகு மற்றும் ராசுப்பிள்ளை அந்த ஊரில் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் சிலரில் இருவர்கள். நாசமாப்போனவங்கள் இயக்கத்தின்ட காம்ப (camp) பார்த்தே அடிக்கிறாங்கள். இங்க இருக்கிற எல்லாற்ற வீடும் அந்த பாவியளுக்கு காம்ப் தான். எங்க போய் ஒழிக்கிறது என்று புலம்பித்தள்ளினார் ராசு... அவங்களுக்கும் கிழமைக்கு ஒருபாடு நோட்டீஸ் போடாட்டிக்கு கவன்மன்ட் சம்பளம் குடுக்காது போல என புன்முறுவலுடன் கூறினார் தியாகு...

இதற்கிடையில் ராசுவின் கடைக்குட்டி அந்த துண்டுப்பிரசுரங்களை சேகரித்துவிட்டு வீட்டினுள் நுழைந்தான். காற்சட்டைப்பை மற்றும் கைகளில் நோட்டீஸால் நிரப்பியவாறே ஏதோ சாதித்து முடித்தது போன்ற முகபாவனையுடன் வீட்டின் முற்றத்தில் உள்ள தியாகுவைப்பார்த்து இங்க பாத்தியளோ... என்னட்ட எத்தின நோட்டீஸ் இருக்கென்டு... என பெருமையுடன் கூறினான் பவி. எனக்கும் ஒன்டு தாவன் என நகைச்சுவையாக அவனுடைய உயரத்திற்கு குனிந்து கேட்டார் தியாகு... ஐ... ஆளப்பாரன்... என்றவாறே உடம்பை நெளித்துக்கொண்டு அதே வயதுக்குரிய குறும்புடன் வீட்டினுள் நுழையவே இந்த கோதாரிய எதுக்கு வீட்டுக்குள்ள கொண்டுவந்து வீட்ட குப்பையாக்குறா என்று பொரிந்து தள்ளினார் பவியின் தாயார் சோதி... அவன் அதை காதில் போட்டுக்கொண்டதாக தெரியவில்லை. நாளை பாடசாலையில் அதைக்கொண்டு எத்தனைபேருடன் போட்டிபோடப்போகிறான் என்று அவனுக்கு தான் தெரியும்... அவனோட எதுக்கு தனகுறா என தன் மனைவியை கடிந்தார் ராசு...

உங்கட பிள்ளையும் நீங்களும் என்றவாறு தேனீர் குவளையை தன் கணவருக்கும் மாலைநேரத்தில் வந்த தியாகுவுக்கும் பரிமாறிவிட்டு கைகளில் பனங்கட்டி துண்டு ஒன்றையும் கொடுத்தார் சோதி. வட இலங்கையில் அந்தக்காலத்தில் இலங்கையரசால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையால் அங்கு சீனி என்பது தங்கத்திற்கு நிகராகவே இருந்தது. அதில் இவர்கள் அரசாங்க உத்தியோகம் வேறு. இதனால் இவர்களுக்கு நிவாரணம் இல்லை. காசை கொடுத்து கடையில் வாங்கப்போனால் அங்கும் மருந்து கட்டிக்கொடுப்பது போல தான் சீனியை கொடுப்பார்கள். அதற்காகவே உள்ளூர் தயாரிப்பான பனங்கட்டியை துண்டாக்கி போத்தல் ஒன்றில் அடைத்துவைத்திருந்தார் சோதி. டேய் இந்தாடா உன்டய அப்பாவுக்கு பக்கத்தில வைச்சிருக்கிறன். போணீக்க ஒரு பனங்கட்டி துண்டு மட்டும் எடுத்துக்கொண்டு வா என்றார் பவிக்கு கூவினார் சோதி... அவனுக்கு குதுகலம். இரண்டு மூன்று கட்டிகளை காற்சட்டைப்பைகளுக்குள் திணித்துவிட்டு ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு நல்லபிள்ளையாட்டமாக தாய் முன் வந்தான் பவி... இவனின் திருட்டுத்தனத்தை நன்கறிந்த சோதி வந்தவுடன் கட்டியணைத்து அவனது காற்சட்டைப்பைகளுக்குள் இருந்த பனங்கட்டிகளை கைப்பற்றினார். கோபத்தில் பவியின் முகம் வெதும்பியது. எதுவும் செய்யமுடியாதவனாக அந்த தேனீரை குடிக்க மறுத்தான். குடிக்காட்டி விடு. அப்பதான் உனக்கு கொழுப்பு அடங்கும் என்று திட்டவும் இந்தாடா என்ட அப்பு... நீ இந்த கட்டியையும் வச்சிரு என்று ராசு தன் கடைக்குட்டிக்காக தனது பனங்கட்டியை தியாகம் செய்தார். அவன் அதை வாங்க செல்லும் போதே அவனை தன் மடியில் தூக்கி அமர்த்தி கட்டியணைத்தார் ராசு. இவன் பிறந்தபின் தான் தனக்கு செல்வங்கள் சேர்ந்தது என்றும் இவனது ஜாதகப்பலனால் தான் இந்த வீட்டை தன்னால் கட்டிமுடிக்க முடிந்தது என்பதும் அவரது நம்பிக்கை. இவனுக்கு செல்லம் குடுக்கிறதே நீங்கள் தான். என்று சொன்னவாறே அடுப்பங்கரைக்கு சென்றாள் சோதி.

அந்தநேரத்தில் தனியார் கல்விநிறுவனத்திலிருந்து வந்த பவியின் அண்ணன் வீட்டினுள் தன் துவிச்சக்கரவண்டியை ஏற்றினான். அம்மா எனக்கு ஒரு டீ... என்றான்... கொஞ்சம் பொறு. அடுப்பில இப்பதான் சுடுதண்ணி வைச்சிருக்கிறன். இந்த விறகு ஒழுங்காய் எரியுதில்ல. என்று புறுபுறுத்தவாறே ஊதுகுழலால் அடுப்பில் உள்ள தனலுக்கு ஊதினாள் சோதி. இவ்வளவு நேரமும் நடந்தவற்றை பார்த்துக்கொண்டிருந்த தியாகு அண்ணை... நேரம் ஏழேமுக்காலாகுது. வெரித்தாஸை (பிலிப்பைன்ஸ் மனிலாவிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலி சேவை) போடுங்கோ என்றார் தியாகு... டேய் அந்த ரேடியோவ தூக்கிட்டு வாடா குட்டி என்று தன் கடைக்குட்டியை கெஞ்சவே துள்ளிச்சென்று அதனையும் எடுத்துக்கொண்டு வரும் போதே அந்த வானொலி சேவையை ஒலிக்கசெய்தவாறே கொண்டுவந்தான் பவி. நீ பெரிய ஆள்தான் என்று புகழ்ந்தார் தியகு... அந்த குதூகலத்துடன் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்தான் பவி. இவர்கள் வீட்டு முற்றத்தில் நிலாவெளிச்சத்தில் செய்தியை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் பவியின் அண்ணன் அம்மா... இந்த லாம்புக்கு எண்ணெய் பத்தாது போல... புகைப்பிடிக்குதும்மா... என்று தாயிற்கு முறையிட்டான். டேய் மங்கல் வெளிச்சத்தில படிச்சு கண்ணை கெடுக்காத என்று எச்செரித்தார் தந்தை... வீட்டிலிருந்த மண்ணெண்ணைய்ப்போத்தலை கொண்டுவந்து விளக்கில் ஊற்றிவிட்டு இஞ்சருங்கோ.... நாளைக்கு மண்ணெண்ணெய் வாங்கவேண்ணும். நான் மறந்தாலும் மறப்பன். வாங்கீட்டுவாங்கோ என்று சொல்லிவைத்தாள் சோதி. இப்படியே 8.30 க்கு இலங்கை செய்தி 9.15 ற்கு பி.பி.சி யின் தமிழோசை என 10 மணிவரை வீட்டு முற்றத்தில் இருந்தவாறே தியாகுவும் ராசுவும் அரட்டைஅடித்து 10 மணிக்கு கிளம்பினார் தியாகு... அதற்கிடையில் பிட்டும் சாம்பாறும் சமைத்து முடித்திருந்த சோதி தன் கணவரையும் பிள்ளைகளையும் சாப்பிட அழைத்தார். அனைவரும் விளக்கு வெளிச்சத்தில் சாப்பிட ஆரம்பித்தார். சோதி சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அண்ணன் கேட்டான். டேய் இன்டைக்கு எத்தின நோட்டீஸ் பொறுக்கினி என்று... அதற்கு அவன் நான் இன்னும் எண்ணேல பொறு எடுத்துக்கொண்டு வரட்டோ என்றான் அண்ணனைப்பார்த்து. டேய். சாப்பிடேக்க கதைக்காத என்று தாயார் தன் கடைக்குட்டிக்கு எச்சரித்தார். சாப்பிட்டு முடிந்ததும் அனைவருக்கும் பசுப்பால் பரிமாறினார். தன் கடைக்குட்டிக்கு சூடு அதிகம் என்று அறிந்த சோதி பெரிய குவளை கொண்டு அந்த பசும்பாலை ஆற்றினார். பின் அவனுக்கு அருகில் இருந்தவாறே டேய் இத குடிடா என்றார். இல்லாவிட்டால் அவன் அந்த பாலை குடிக்கமாட்டான். அவனுக்கு அந்த பனங்கட்டியை பறித்த கோபம் இன்னும் விலகவில்லை என்பது அவனது நடவெடிக்கையில் அறிந்துகொண்டார் தாய். சரி சரி. அப்பனுக்கு கன்டோஸ் ஒன்று வாங்கி வைச்சிருக்கிறன். செல்லமெல்லே.. குடிடா... என்று செல்லமாக சொல்லவே அந்த சிறியமனமும் தன் கோபத்தை மறந்து மடமடவென குடித்து முடித்துவிட்டு அந்த கன்டோஸூக்காக தாயின் முகத்தை பார்த்தான். தாய் கொடுத்ததும் அதை பிரித்து உண்டுவிட்டு அதிலிருந்த ஸ்டிக்கரை பார்த்தான். அது ஒவ்வொரு கன்டோஸூடனும் இலவசமாகவருவது... டேய் இது யாரடா என்று தன் தமையனை கேட்க்கவே இது ரவிஸாஸ்திரியடா என்றான். யாரடா அவர் என்றான். உனக்கு அது தெரியாது பேசாம அத தா என்று அதட்டினான். தமையனுக்கு அந்த ஸ்டிக்கர்களை சேர்க்கும் பழக்கம் உண்டு. அப்படியே கடிந்தவாறே இரவு படுக்கைக்கு சென்றான். என்னதான் தந்தையுடன் செல்லம் என்றாலும் பவிக்கு தாயின் கைகளில் தலைவைத்து படுப்பது தான் பிடிக்கும். அப்படியே தாயை அணைத்துக்கொண்டு சுருண்டு படுப்பான் அந்த பாலகன்.

காலை விடிந்ததும் காலைக்கடன்களை தானாகவே முடித்து குளித்துவிட்டு பாடசாலைக்கு புறப்பட தயாரானான். வழமையாக நடந்து செல்பவன்... டேய் என்ன பள்ளிக்கூடத்தில இறக்கிவிடுறியாடா என்று தமையனை கெஞ்சினான்... நீ என்னோட வாவன் என தந்தை அழைக்கவும் நீங்கள் வர நேரமாயிடும். பிறகு அந்த பிறின்ஸி புல்லுப்புடுங்க விடும் என்று புறுபுறுத்தான். நீ அந்த ஸ்டிக்கரை தா. நான் உன்னை பள்ளிக்கூடத்தில் இறக்கிவிடுகிறன். என பேரம் பேசினான் தமையன். அதற்கு உடன்பட்டு அவனுடன் பாடசாலை விரைந்தான் பவி. படிப்பில் சுட்டி. அதே போல் விளையாட்டிலும் தான். அன்று கொண்டு வந்த நோட்டீஸை தன் நண்பர்களுடன் ஒப்பிடுவதில் குறியாக இருந்தான்.

அந்த போட்டியில் வெற்றிபெற்ற பவியை பார்த்த பவியின் நண்பன் ஒருவன் இங்க பார் என்னட்ட எத்தின புள்ளட் கோது இருக்கு பார் என்று தன் காற்சட்டைப்பைகளுக்குள் இருந்து வெளியே எடுத்து போட்டான். இது கொஞ்சம் தான். வீட்ல ஒரு உரபாக்குக்குள்ள வச்சிருக்கன்டா... என்று மல்லுக்கட்டினான் அவன். இது ஃபிப்டி (50) கலிபரோடது (துப்பாக்கியின் ஒரு ரகம்) என்று விளக்கம் வேறு கொடுத்தான். இதுண்ட ரவக்கூடு கூட என்னட்ட வீட்ல இருக்கென்று தனது பெருமையை மேலெழுப்பினான் நண்பன். பவியின் மனம் துவண்டது. ஆனாலும் அவனுக்கு தன்னை விட்டுக்கொடுக்க மனமில்லை. இதப்பார். இது நேற்று போட்ட நோட்டீஸ். உன்னட்ட நேற்று சுட்ட் புள்ளட் கோது இருக்கா என்று போட்டான் ஒரு போடு. அவனுக்கு தெரியும். நேற்று ஊரில் எங்கும் 50 கலிபர் தாக்குதல் நடாத்தப்படவில்லை. ஆகவே அந்த கோதுக்கு சாத்தியமே இல்லை என்று... அந்த நண்பன் பேச்சு இல்லாமல் அந்த கோதுகளை எடுத்து தன் காற்சட்டைப்பைகளுக்குள் போட்டான். எப்படியாவது தானும் ஒரு தொகுதி புள்ளட் கோது சேர்த்துவிடவேண்டும் என்று மனதில் போட்டுவைத்தான் பவி.

பாடசாலை விட்டதும் வீதியால் நண்பர்களுடன் அரடை்டை அடித்தவாறே நடந்து வந்தான் பவி. வீதிமருங்கில் இருந்த பூவரசமரத்தின் சிறு கிழையை பிடுங்கி வீதியால் வரும் போது வீதியோரத்திலிருந்த தொட்டாச்சிணுங்கி பதருக்கு அடிப்பான். அந்த பதர் சுருங்குவதை பார்த்து அவன் மனம் நெகிழும். அந்த பூவரசம் இலையை மடித்து சுருட்டி வாயில் வைத்து ஊதிக்கொண்டே வந்தான். தாக் நாதஸ்வரம் ஊதுவது போன்ற சைகையாக தன் தலையை வேறு ஆட்டுவான். அத்துடன் வரும் பாதையிலுள்ள அத்தனை வேலிகளுக்கும் அந்த கம்பால் அடி விழும். வீட்டுக்காரர்கள் யாரடா அங்க என மிரட்டும் சத்தம் கேட்டால் சத்தம் போடாது நடப்பான். வீதிமருங்கிலிருக்கும் மாமரங்களில் ஒரு மாங்காய் கண்ணில் பட்டால் போதும். கல்லால் அடித்து அதனை யாருடையதாவது வீட்டு மதிலில் குற்றி நண்பர்களுடன் பகிர்ந்து உண்டுகொண்டே வீட்டுக்கு போவான். வீடு வந்ததும் அவனது வெள்ளை பாடசாலை சீருடை மண்ணிறத்திற்கு மாறியிருக்கும். எங்கயடா பிரட்டிக்கொண்டு வாறாய். என்று தாய் அதட்டினாள் அன்று... மாங்காய் பால் கயர் பிரட்டினாய் என்டா அது தோச்சாலும் போகாதடா என்று விளக்கம் வேறு கொடுத்தாள். உத எத்தினை தடவ சொல்லீட்டீங்கம்மா.... நான் என்ன சின்னப்பிள்ளையோ என்று கேட்டான் அந்த 8 வயது பாலகன்... முளைச்சு மூண்டு இல விடல. அதுக்குள்ள அவற்ற கதையப்பார். எத்தின தரம் சொன்னாலும் கேட்கிறியோடா.... என்று பதிலுக்கு பதிலிட்டாள் சோதி. அப்பிடியே உன்ட உடுப்பைக்கொண்டு போய் கிணத்தடியில ஊறவிடு... வெய்யில் போறதுக்குள்ள தோச்சு போடவேணும். என்றாள் சோதி.... சரீம்மா என்றுவிட்டு கிணற்றடிக்கு ஓடினான் அவன்.


(தொடரும்...)

இளசு
11-06-2008, 07:49 PM
ஒரே மூச்சில் முதல் பாகத்தை வாசித்தேன் அன்பு..

என்ன சொல்ல... கதையல்ல இது..!

அந்த நிலவொளி வீட்டுக்கு நானும் சென்றுவிட்டேன்..

பிள்ளைகள் எந்த சூழலிலும் அதை விளையாட பயன்படுத்துவார்கள்
என்ற நிஜத்தை - எச்சரிக்கைப் பிரசுரங்கள், துப்பாக்கி ரவைகள் சேகரிப்பதை வைத்து - சொன்னது நெஞ்சைப் பிசைகிறது..

வெல்லந்திருடி, மாங்காய்க் கவர்ந்து, மண்ணில் உருண்டு,
சின்ன இனிப்பில் மடங்குவதோடு அந்தப் பவி வளர்ந்திருக்கக்கூடாதா?

வரலாற்றுச் சோக விகாரத்தை பவியின் மூலம் பதிய வந்த
அன்புத்தம்பிக்கு என் ஆழ்ந்த அன்பும் ஆதரவும்..

தொடர்க அன்பு!

செல்வா
11-06-2008, 09:09 PM
ஐயா.... இரசிகரே எங்கே சென்றிருந்தீர் இத்தனை நாளும்.....
உங்கள் தமிழ் வழக்கு தடுமாறா தளிர்நடை....
சாண்டில்யனின் கடற்போர்க்காட்சிகளை வாசிக்கும் போது நம்கண்ணெதிரே அது நடப்பது போன்ற உணர்வு நமக்கு வரும்.
அதே உணர்வு என் கண்களுக்கு முன் கணிணித்திரையில் பவியைப் பார்த்தேன்.... நோட்டீஸ் பொறுக்குவதும் மாங்காய் எறிவதும் .... பகிர்வதும் .... வேலிகளை அடித்துக்கொண்டு ஓடுவதும் நடப்பதும்.. வீட்டுமுற்றத்திலமர்ந்து வானொலி செய்திகள் கேட்பது...
அப்படியே வாழ்ந்த உணர்வு...

தொடருங்கள்..... வாழ்த்துக்கள் இரசிகரே...

அக்னி
11-06-2008, 09:25 PM
மங்கிய விளக்கொளியோடு, நிலா ஒளியில் உண்ணலும், வானொலிச் செய்திகள் கேட்டலும், நடப்பு நிகழ்வுகளை அயலவர்களாய்ச் சேர்ந்து உரையாடுவதும் யுத்த வளையத்திற்குள் ஒரு அமைதி வலயம் போன்றது. அந்த அமைதி வலயமும் பலவேளைகளில் தாக்கப்படும்.
தாக்குதல்கள் வழமையானதால், தாக்கங்களும் பழக்கமாகிப் போனதுதான் உண்மை.

ஒரு குறித்த காலப்பகுதியின் உண்மை நிகழ்வுகள் இக்கதையாகிப் போனாலும்,
இக்கதை பல உண்மை நிகழ்வுகளையும், வாழ்க்கையின் கடினங்களையும், வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்குவாரங்களையும், பொருளாதாரத் தடைகளையும், அந்தத் தடைகளினால் கண்டுபிடிக்கப்பட்ட மாற்றீடான பாவனைப் பொருட்களையும் வெளிக்கொண்டுவருமானால் சரித்திரமாகும்.

அன்புரசிகரே இப்படியான ஒரு எழுத்து உங்களிடமிருந்து உதயமாகும் என்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், இப்போது நிறையவே எதிர்பார்க்கின்றேன்.

மதி
12-06-2008, 12:51 AM
ஆஹா..ரசிகரே..
கலக்கிட்டீங்க போங்க..

சரளமான நடையில் தெள்ளிய விவரணைகள். பவியும் ஆட்டமும் கொண்டாட்டமும் கண்முன் கொணர்ந்தீர்.. வாழ்த்துகள்.. மேலும் தொடருங்கள் சீக்கிரமே..

அன்புரசிகன்
12-06-2008, 02:11 AM
ஐயா.... இரசிகரே எங்கே சென்றிருந்தீர் இத்தனை நாளும்.....
உங்கள் தமிழ் வழக்கு தடுமாறா தளிர்நடை....
சாண்டில்யனின் கடற்போர்க்காட்சிகளை வாசிக்கும் போது நம்கண்ணெதிரே அது நடப்பது போன்ற உணர்வு நமக்கு வரும்.
அதே உணர்வு என் கண்களுக்கு முன் கணிணித்திரையில் பவியைப் பார்த்தேன்.... நோட்டீஸ் பொறுக்குவதும் மாங்காய் எறிவதும் .... பகிர்வதும் .... வேலிகளை அடித்துக்கொண்டு ஓடுவதும் நடப்பதும்.. வீட்டுமுற்றத்திலமர்ந்து வானொலி செய்திகள் கேட்பது...
அப்படியே வாழ்ந்த உணர்வு...

தொடருங்கள்..... வாழ்த்துக்கள் இரசிகரே...

அப்படி என்றில்லை செல்வா... நான் கத்தாரில் இருந்த போது எழுதுவதற்கு நேரம் இல்லை எனலாம். அதற்காக ரொம்ப பிஸி என்றிடமாட்டேன். அலுவலகம் முடிந்து வீடு வந்தால் ஏதாவது சோலி இருக்கும். அதனுடன் மேய்ந்து திரிவதே பெரும்வேலையாக இருக்கும்... ஆனால் துபாயில் அவ்வாறில்லை. நான் வெளியே செல்ல விரும்புவதில்லை... அலுவலகமும் 2வாரம் கடும் வேலை 2 வாரம் சுமாராக அப்படித்தான் இருக்கும். அந்த நேரத்தை ஓரளவு பயன்படுத்தினேன்.

அதுக்காக இவ்வளவு ஓவரா பில்டப் கொடுக்காதீங்க... இந்த கதையில் உயிர்ப்பு இருப்பது என்னமோ வாஸ்த்தவம். அதற்கு காரணம் இது மீண்டும் பல உண்மைச்சம்பவங்களை கேர்க்கப்பட்டு எழுதப்பட்டதால்....


மங்கிய விளக்கொளியோடு, நிலா ஒளியில் உண்ணலும், வானொலிச் செய்திகள் கேட்டலும், நடப்பு நிகழ்வுகளை அயலவர்களாய்ச் சேர்ந்து உரையாடுவதும் யுத்த வளையத்திற்குள் ஒரு அமைதி வலயம் போன்றது. அந்த அமைதி வலயமும் பலவேளைகளில் தாக்கப்படும்.
தாக்குதல்கள் வழமையானதால், தாக்கங்களும் பழக்கமாகிப் போனதுதான் உண்மை.

ஒரு குறித்த காலப்பகுதியின் உண்மை நிகழ்வுகள் இக்கதையாகிப் போனாலும்,
இக்கதை பல உண்மை நிகழ்வுகளையும், வாழ்க்கையின் கடினங்களையும், வாழ்க்கையில் ஏற்பட்ட நெருக்குவாரங்களையும், பொருளாதாரத் தடைகளையும், அந்தத் தடைகளினால் கண்டுபிடிக்கப்பட்ட மாற்றீடான பாவனைப் பொருட்களையும் வெளிக்கொண்டுவருமானால் சரித்திரமாகும்.

அன்புரசிகரே இப்படியான ஒரு எழுத்து உங்களிடமிருந்து உதயமாகும் என்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், இப்போது நிறையவே எதிர்பார்க்கின்றேன்.

தாக்கங்கள் பழகிப்போனதென்னமோ உண்மை தான்.

அதை முதலில் பரீச்சியமாக்கிக்கொண்டவர்கள் யாழ்ப்பாண மக்கள் எனலாம். ஷெல் தாக்குதல்லகளில் இருந்து அனைத்து தடைகள் வரை. அதிகமாக எதிர்பாபர்க்காதீங்க..அத்துடன் நீங்கள் கூறியவற்றை கொண்டுவர முழுமையாக இப்போது முடியாது. அந்த திறமை என்னிடமில்லை... சீனி மட்டும் தான் இப்போதய கண்டுபிடிப்பு... :D

அன்புரசிகன்
12-06-2008, 02:12 AM
வெல்லந்திருடி, மாங்காய்க் கவர்ந்து, மண்ணில் உருண்டு,
சின்ன இனிப்பில் மடங்குவதோடு அந்தப் பவி வளர்ந்திருக்கக்கூடாதா?

வரலாற்றுச் சோக விகாரத்தை பவியின் மூலம் பதிய வந்த
அன்புத்தம்பிக்கு என் ஆழ்ந்த அன்பும் ஆதரவும்..

தொடர்க அன்பு!

கதையின் கருவையே சொல்லிவிட்டீங்களே... இன்று மாலை இறுதிப்பாகம் இட்டிடுவேன்...

ஊக்கங்கள் தந்த அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகள்.

ஓவியன்
12-06-2008, 03:27 AM
கதையாக இங்கே இதனைக் கண்டாலும் நிஜமாக என்றோ விரிந்த சில விடயங்கள் இங்கே வார்த்தைகளாக அமைக்கப்பட்டிருக்கின்றன என உணருகின்றேன்....

வானிலிருந்து உலங்குவானூர்தியால் போடப்படும் துண்டுப் பிரசுரங்களையும், வானிலிருந்து தாக்குதல் நடத்திய போது சிதறிய வெற்றுத் தோட்டாக்களையும் மீள ஞாபக அலைக்குள் சிக்க வைத்த படைப்பு இது...

அந்த பயங்கரங்களின் உண்மை விளைவுகளின் பரிமாணம் சரி வரத் தெரியாத நிலையில் அவற்றை மிக சாதாரணமாக எடுத்து வந்த பல்லாயிரம் குழந்தைகளில் ஒருவனாக பவி....

தொடரட்டும் அன்பு, சிறப்பான முடிவுக்கு என் முன் வாழ்த்துக்கள்...!! :)

சிவா.ஜி
12-06-2008, 04:52 AM
என்னவென்று சொல்வது? இதை கதையென்ற நினைப்பில்தான் வாசிக்கத் தொடங்கினேன்...வாசிக்க வாசிக்க....அக்னி சொன்னதைப் போல வலி மிகுந்த, தங்கள் மேல் திணிக்கப்பட்ட ஒரு வித்தியாச வாழ்க்கையின் வரலாற்றுப் பதிவாக விரியத்தொடங்கியது.

சிவா.ஜி
12-06-2008, 04:55 AM
பவியின் குறும்பையும், கண்டிப்போடுகூடிய அன்பை வெளிப்படுத்தும் சோதியையும், அவர்கள் குடும்பத்தையும் கண்முன்னே நடமாடவிட்டுவிட்டன உங்கள் எழுத்து.
நிச்சயமாக இது சாதாரணக் கதையல்ல. பிரமிப்போடு பாராட்டுகிறேன் அன்பு. வாழ்த்துகள்.

மதி
12-06-2008, 05:12 AM
இதுவரை கேட்டு படித்திருந்த பல விஷயங்களை கண்முன்னே நிறுத்தும் அளவுக்கு கதையுடன் ஒன்ற வைத்து விட்டீர்கள்..

இறுதிப்பாகத்துக்காக காத்திருக்கிறோம்..

பார்த்திபன்
12-06-2008, 04:43 PM
அன்பு அண்ணா...

மீண்டும் அந்த காலத்தை நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள்.


கதையாக இதை நீங்கள் தந்தாலும், இந்நிஜம் இன்று வரை தொடர்கிறதே...




“யாழ்ப்பாணப் பேச்சு” தமிழில் கதையை கலக்குறீங்கையா....

அன்புரசிகன்
12-06-2008, 04:51 PM
நோட்டீஸூம் புள்ளட் கோதும்

ஆடையை மாற்றி விட்டு வீட்டுக்கு நுழையும் போது இரண்டு சியாமா செட்டி ரக குண்டுவீச்சு விமானங்கள் அந்த ஊரின் வான்பரப்பில் நுழைந்தன. அவனோ பயமறியாதவன். ஐ......... அம்மா இங்க பாருங்கோ இரண்டு பொம்பர் வந்து சுத்துது என்றுவிட்டு முற்றத்திலிருந்தவாறே துள்ளிக்குதித்தான். அந்தநேரம் பார்த்து வீட்டுக்கு மதிய உணவுக்காக வந்த தந்தையார் டேய் கொம்மாவ கூட்டிக்கொண்டு பங்கருக்குள்ள ஓடு என்றான். நேற்று நோட்டீஸ் போடேக்கயே நினைச்சனான். இன்டைக்கு ஏதோ வில்லங்கம் நடக்கப்போகுது என்று சொன்னவாறே சோதி வெளியே வந்தாள். அம்மா…. அண்ணா இன்றும் வரேல... என்று சொல்லவும் அந்தப்பக்கம் பிரச்சனை இல்ல. அது இங்க இருந்து 5 கிலோமீட்டர் வரும். அங்கயும் பங்கருகள் வெட்டி வைச்சிருக்கிறாங்கள் என்று சொல்லி ராசு சொல்லி முடிக்கும் முன் அங்கப்பா குத்துறாங்கள் குத்துறாங்கள் என்றான் பவி. ஒரு விமானம் மிக தாழ்வாக பறந்து வந்து இரண்டு குண்டை வீசிவிட்டு சென்றது. இவர்களது வீட்டிலிருந்து 200 m தொலைவிலிருக்கும் வீடொன்றிற்கு அருகில் வீழ்ந்து வெடித்தது. சோதி தன் மகனை அணைத்துக்கொண்டே பங்கருக்குள் ஓடினாள். இஞ்சருக்கோ... இங்க வாங்கோ. உந்த புதினம் எல்லாம் பிறகு பாக்கலாம். என்று தன் கணவனையும் அழைத்தாள் சோதி. அனைவரும் அவர்களது வீட்டிற்கு அருகிலிருந்த பங்கருக்குள் பதுங்கினார்கள்.

இஞ்சருங்கோ.. மண்ணெண்ணெய் சொன்னான். வாங்கினீங்களே... இவன்ட உடுப்பு வேற ஊறப்போட்டிருக்கு. அதுவும் தோய்க்கவேணும். இன்டயோட அந்த மில்க்வைட் சவுக்காரம் முடிஞ்சிடும். இன்னொரு கட்டி வாங்கிட்டு வாங்கோ... என்றாள் சோதி. நீ கான் தந்தனியே... நானும் மறந்திட்டன். போகேக்க அந்த கான எடுத்து தா... அதுக்கு வேற க்யூ நிக்கவேணும். ஒப்பீஸூக்கும் போகவேணும். எத்தின தலயிடி... இதுக்க இந்த அறுந்து போவாங்கள். நேரங்கெட்ட நேரத்தில வந்து சொறிஞ்சுகொண்டிருக்கிறாங்கள். என்று எரிச்சலுடன் புறுபுறுத்தார் ராசு. (மில்க்வைட் சவர்க்காரம் என்பது நம் உள்ளூர் தயாரிப்பு. காரம் சற்று அதிகமாகவே இருக்கும். உடுப்பென்னமோ வெள்ளையாக ஜொலிக்கும். ஆனால் ஆடைகளின் இழைகளுக்கு உகந்ததல்ல) உந்த பிளேனுக்கு மண்ணெண்ணை முடிஞ்சு விளாதோ என்று நக்கலாக சொன்னாள் சோதி. தேவைப்பட்டால் அவங்கள் அந்த பைப்ப ஊதி ஊதியே பிளேன தள்ளிக்கொண்டு போயிடுவாங்கள் என்று தன் மனைவியின் குசும்புக்கு குசும்பு சேர்த்தார் ராசு... அம்மா அதுக்கு மண்ணெண்ணெய் இல்ல. அது பெற்றோல். என்று தன் புத்திசாலித்தனைத்தை தன் பெற்றோர் முன் மீண்டும் ஒருமுறை நிரூபித்தான். அந்த குழாய் பற்றி சொல்லியாகவேண்டும். பெற்றோலின் விலை ஒரு அவுன்ஸ் அளவு ஏறத்தாள 150 இருந்த 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. (ஆகவே ஒரு லீட்டரின் விலையை நினைத்துப்பாருங்கள். 200 ரூபாய்க்கு பெறுவது ஏறத்தாள 30 ml மட்டும் தான்) மண்ணெண்ணெயில் தான் வாகனங்கள் ஓட்டுவார்கள். இதில் வாகனத்தை இயக்கும் முன் கார்பரேடருக்கு (carburetor) ஒரு சில துளி பெற்றோல் இடுவார்கள். அதற்கு வசதியாக சேலைன் குழாயை கார்பரேட்டருடன் இணைத்து வெளியே தொங்கவிடுவார்கள். அந்த குழாயினூடுசெல்லும் ஒருசில துளி பெற்றோலினால் தான் வாகனம் இயங்க ஆரம்பிக்கும்.

பின்னர் தான் மண்ணெண்ணெய் விநியோகம் அந்த வாகன இயக்கத்துக்கு கிட்டும். காரணம் மண்ணெண்ணெயின் எரியும் விகிதம் பெற்றோலைவிட குறைவென்பதற்காக வாகன எந்திரத்தை ஏமாற்றி இயங்க வைக்கும் செயல் தான் அந்த குழாய் விடையம். பெற்றோல் கார்பரேட்டரை துரிதமாக சென்றடையச்செய்யத்தான் ஊதுவார்கள். மோட்டார் சைக்கிளில்; தையல் இயந்திரத்திற்கு எண்ணை ஊற்றப்பயன்படுத்தும் சிறிய இறப்பர் போத்தல் ஒன்று எப்போதும் கட்டிதொங்கவிடப்பட்டிருக்கும். பெற்றோலுக்குப்பதிலாக வர்ணங்கள் கலப்பதற்கு பாவிக்கும் டின்னர் மருந்துக்கு பாவிக்கும் ஸ்பிரிட் என பல மாற்றீடு பெருட்கள் வந்தன. ஏன் நீர் இறைக்கும் பம்புக்கு சாம்பிராணிப்புகைகூட காட்டியிருக்கிறோம்.

அந்த பங்கருக்குள் சோதி தன் கடைக்குட்டியை இறுக்க அணைத்துக்கொண்டிருந்தார். அம்மா.... ச்சிக்... என்ட சேட் எல்லாம் மண்ணெண்ணை மணக்குது. என்ன பண்ணினீங்கள் என்று சிணுங்கினான் பவி. ஓம் எனக்கும் மணக்குது. என்று தன்மகனுக்கு துணை கொடுத்தார் ராசு... இல்லேங்க.. அது ஜாம் போத்தில் விளக்குக்கு திரி போட்டுக்கொண்டிருந்தனான். அந்த நேரத்தில தான் இந்த குறுக்கால போவார் வந்ததால வெளியால ஓடிந்தனான் என்றாள். மண்ணெண்ணெயை சேமிப்பதற்கு பஞ்சு இரும்புக்கம்பித்துண்டு மற்றும் சிறு ஜாம்போத்தல் கொண்டு தயாரிக்கப்பட்டது தான் அந்த ஜாம் போத்தல் விளக்கு. உப்பு சற்று தூவிவிட்டால் இன்னும் சற்று பிரகாசமாக ஒளிரும் என்பதும் அவர்கள் அனுபவ பரிசோதனைகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று.

வழமையாக குண்டை மட்டும் வீசிச்செல்லும் இந்த வான் கழுகுகள் அன்று அந்த 50 கலிபர் துப்பாக்கிவேட்டுக்களையும் தீர்த்தது. யாரையோ கண்டுட்டாங்கள் போல. அதுதான் சுடுறான் என்று சொல்லிக்கொண்டிருந்தார் ராசு.... பவியின் மனதில் குதுகலம் பிறந்தது. இன்று தனக்கும் அந்த புள்ளட் கோது கிடைக்கப்போகுது என்று அவன் மனம் துள்ளியது. இரண்டு வீமானங்களும் சரமாரியாக குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு தங்கள் இருப்பிடத்தை நோக்கி விரைந்தன. போட்டாங்கள் போல என்று சோதி சொல்லவும் வெளியே ஓடிவந்தான் பவி.

விதானையாற்ற வளவுக்கு பக்கத்தில ரண்டு பொடி (body) இருக்காம் என்று சொன்னவாறெ வீதியால் சில வாலிபக்கூட்டங்கள் துவிச்சக்கரவண்டியில் விரைந்தார்கள். இவனுக்கு புரிந்தது. அங்க தான் சுட்டிருக்கிறாங்கள் போல... என்றுவிட்டு அம்மா நான் விதானயாற்ற வளவுப்பக்கம் போட்டு வாறன் என்றான். டேய் இப்ப அங்க போகாத. அதுதான் கேட்டியெல்லே. அங்க இரண்டு பொடி இருக்காம். நீ இரத்தத்தை பார்த்தால் பிரச்சனை. இப்ப போகவேண்டாம். என்றார் தந்தை. உண்மை தான். இவனுக்கு இரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வந்துவிடும். உள்ளுக்கு வா என்று தாயார் அழைத்தாள். இல்லம்மா. நான் பொடிப்பக்கம் போகாம போய்ட்டு வாறேனே என்று கெஞ்சினான். பதிலுக்கு கிணற்றடியில் கை கால் கழுவிக்கொண்டிருந்த தந்தையின் முகத்தை பார்த்தான். தந்தையாரும் புன்முறுவலுடன் கவனமா போட்டு கெதியா வாடாப்பு... என்று செல்லமாக சொன்னார். கணவருக்கு உணவுக்காக அழைத்த சோதி நீங்கள் இவனுக்கு ஓவரா செல்லம் குடுக்கிறீங்கள். பாருங்கோ பள்ளிக்கூடத்தால வந்தவன் இன்னமும் சாப்பிடேல. வெறும் வயித்தோட போறான் என்று தன் கணவரை கடிந்தாள் சோதி. அவன் இப்ப வந்திடுவான் என்று சமாதானப்படுத்தினார் ராசு... உணவை முடித்துக்கொண்டு மண்ணெண்ணெய் கானுடன் அலுவலகம் திரும்பினார்.

விதானையாரின் பனை வளவினுள் நுழைந்த பவி வீதியோரத்தில் இருந்த கூட்டத்தை அவதானித்தான். அங்க சூடு விழுந்திருக்கெண்டால் இந்தப்பக்கமாத்தான் கோது இருக்கும் என்று சூடு விழுந்தத இடத்திற்கு எதிர் புறமாக அந்த கோதுகளைத்தேடிச் சென்றான். அவன் நினைத்தது மாதிரியே அங்கு கோதுகள் காணவே ஆவலுடன் பொறுக்கினான். டேய் ஹெலி வரூது போல என்று அந்த இறந்த உடலங்களுக்கு அருகிலிருந்த சிலர் கூச்சலிட்டனர். ஒரு உலங்குவானூர்தி ஒன்று அவ்விடத்தினுள் மிகவும் தாழ்வாக நுழைந்தது. எல்லோரும் ஓடி ஒழித்தனர். பவியோ அந்த கோதுகளை பொறுக்குவதிலேயே முனைப்பாக இருந்தான். தன் காற்சட்டைப்பைகளை அந்த கோதுகளால் நிரப்பினான். அது ராசுவின்ட பொடியனெல்லே... என்று அருகில் ஒழித்திருந்த ஒருவர் கூற டேய் அவன் சுடப்போறான்டா... இங்க ஓடிவாடா என்று சொன்னார் அந்த பெரியவர். அவன் சின்னப்பிள்ளயள சுடமாட்டான் என்று பதில் சொல்லிவிட்டு அந்த கோதுகளை தேடித்தேடி பொறுக்கிக்கொண்டேயிருந்தான். இந்த விடையத்தில் அவனது அனுமானம் பிழைத்தது. டேய் ஓடிவாடா. அவன் பதியுறான்டா என்றார் அந்த பெரியவர். அவன் திரும்பி பார்க்கும் முன் அந்த அரக்கர்கள் அதே 50 கலிபர் துப்பாக்கியால் அந்த பாலகனை குறிவைத்தார்கள். அவனது முதுகை பல குண்டுகள் பதம்பார்த்தன... ஐயோ ஐயோ என்று அந்த பெரியவர் அவனை தாங்குவதற்காக ஓடினார். ஆனால் அதற்குள் அந்த பாலகனின் உடல் மண்ணை முத்தமிட்டது. அந்த அடுத்த குறி அந்த பெரியவர் தான். அவரையும் குறிபார்த்தது அந்த வானரக்கன். அவரது உயிரும் அவ்விடத்திலேயே பறிபோனது.

இந்த பயல் எங்க போனவன். இவ்வளவு நேரமாச்சு. அந்தப்பக்கமா ஹெலிவேற வந்திட்டு போனது. இன்னும் காணேல. இந்த நேரம் பார்த்து இந்த மனுசனும் வீட்ல இல்ல. இந்த நேரத்தில கண்டறியாத வேல. என்று மனதுக்குள் புறுபுறுத்தாள் சோதி. கல்லூி சென்ற தமையன் வரவே டேய் இவன் உந்த விதானயாற்ற வளவுப்பக்கம் போனவன். ஒருக்கா போய் அவன கூட்டிக்கொண்டு வாடா என்றாள் சோதி. ஏனம்மா வந்ததும் வராததுமாக கலைக்கிறியள். கொஞ்சம் பொறுங்கோ என்றான். இல்லடா. போய் கனனேரம். ஹெலிவேற வந்து சுட்டுட்டு போகுது. அந்தப்பக்கம் தான் இவனும் போனவன். போய் கூட்டிட்டு வாடாப்பு என்று சொல்லவும் சரி என்றுவிட்டு அந்த வளவுப்பக்கம் விரைந்தான் தமையன். அங்கு இரண்டு உடல் இருப்பதை கண்டவனுக்கு நெஞ்சு படபடத்தது. கடவுளே அது பவியாக இருக்கக்கூடாது என்று பிரார்த்தனை செய்துகொண்டே அண்மித்தான். தமிழனுக்கு கடவுள் என்றுதான் துணையாக இருந்திருக்கிறார். தனது தம்பியின் உடல் அந்த சுட்டெரிக்கும் வெய்யில் மண்ணில் இருப்பதை பார்த்த அண்ணனுக்கு என்னமோ பித்துப்பிடித்தவனாய் டேய் சுடப்போகுது எழும்பு என்று சொன்னவாறு உடலுக்கு அருகில் சென்றான். அவனுக்கு இன்னும் கடவுள் மேலிருந்த நம்பிக்கை போகவில்லை. அவன் மனம் சுக்குநூறாகியது அவனுக்கு மட்டும் தான் தெரியும். தன் சகோதரனை அணைத்து தூக்கிக்கொண்டே வீடு நோக்கி விரைந்தான் தமையன். அனைவரும் விநோதமாக அவனை பார்த்தார்கள். காரணம், கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லை. அவனது சேகத்தை அவன் அழுது வெளியிடவில்லை. அத்தனையையும் உள்ளே அடைத்தான். வீட்டு படலைக்கு ஒரு உதை கொடுத்தான். அது இரண்டு தடவை முடித்திறந்தது. அப்போது தான் புரிந்தது. அவனுக்கு இருந்தது சோகமல்ல. சகோதரனின் இழப்பால் வந்த கோபம் என்று. தம்பியை அப்படியே வீட்டு முற்றத்தில் படுக்கவைத்துவிட்டு பக்கத்தில் தானும் அருகிலேயே படுத்தான். அவனுக்கு தாயை அழைக்க தோன்றவில்லை. சிறிது நேரத்தில் அவள் வெளியே வந்து முற்றத்தில் கண்ட காட்சியால் அவளுக்கு நெஞ்சே அடைத்திருந்தது. அப்படியே மயங்கிவிட்டாள். அருகிலிருந்தவர்கள் அவளை தாங்கிப்பிடித்து தண்ணீர் தெளித்தார்கள். ஆனால் அந்த தமையனோ எந்தவித அசைவுமின்றி வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.

அதற்கிடையில் ராசுவிற்கு செய்தி கூறி அனுப்பப்பட்டது. அவரும் விரைந்துவந்து தன் செல்லத்தை அணைத்து குமுறினார் அவனது காற்சட்டை புள்ளட் கோதுகளால் நிறைந்திருந்தது. அதே நேரத்தில் அவனது உடல் புள்ளட்டால் நிறைந்திருந்தது. தன் பிள்ளை தன்னால் தான் பறிபோனதாக அவர் மனதிலிருந்த குற்ற உணர்வு அவரை உறுத்தியது. கண்கள் பனித்தனவே அன்றி சத்தம் போட்டு அழமுடியவில்லை. அவனது பாட்டி சுற்றத்தினர் அனைவரும் பவியின் வீட்டுக்கு விரைந்தனர். எனக்கு பந்தம் பிடிக்கும் காலத்தில் உனக்கு ஒப்பாரி வைக்க வைத்துவிட்டாயே என்று கதறினார் அவனது பாட்டி... அவர்களது பரம்பரையின் கடைக்குட்டி என்பதால் அவர்களால் அந்த இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை.

கிணற்றடியில் ஊறப்போட்டிருந்த அவனது சீருடையை தாயார் தானாகவே துவைத்து உலர்த்தி அவனுக்கு அணிவித்தார். நாளை அவன் பாடசாலை போகவேண்டும். அவனிடமிருந்த புள்ளட்டுக்களை அவன் நண்பர்களுக்கு காட்டவேண்டும் என அவனுக்கு பல கனவுகள் உண்டு. தன் பாலகனை தன் மடியிலயே இரவு முழுவதும் வைத்திருந்தார். கன்றுக்குட்டியின் கைகள் அந்த பசுவை அணைக்க மறுத்ததுதான் கொடுமை. இரவுமுழுவதும் சுவரில் சாய்திருந்தார் சோதி. மறுநாள் அவனது உடலம் அவனது பாடசாலையில் கண்ணீர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவனது நண்பன் அந்த புள்ளட் கோதுகளை அவனுக்கு காணிக்கையாக வைத்தான். தன்னால் தான் இவன் உயிர் பறிபோனதோ என்ற குறுகுறுப்பு இவனது மனதிலும்.

சுற்றத்தார் சிலர் அவனது புகைப்படமிட்டு அந்த ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் ஒட்டினர். அந்த குறும்பு பாலகனால் மதில்களில் மாங்காய் குற்றப்பட்ட கறைகளை இந்த நோட்டீஸ்கள் மறைத்தன. இனி அந்த வேலிகளை தட்டிவிளையாடும் பிரம்பும் இருக்காது. வெட்க்கத்தால் சுருங்கும் தொட்டாச்சிணுங்கிகளுக்கும் வெட்கம் வராது. பேரினவாத அரசின் கணிப்பில் ஒரு பயங்கரவாதி குறைந்திருக்கிறான். ஆனால் அந்த அரசுக்கு தெரியாது. ஒருவன் குறைந்ததால் இன்னொன்று உருவாகிவிட்டதை....


(முற்றும்)

இளசு
12-06-2008, 06:37 PM
கண்கள் கலங்கி மறைகின்றன எழுத்துகள்..

என்ன எழுத அன்பு?

இதைப் பதிப்பித்த உன் நெஞ்சம் வெடித்துச் சிதறியிருக்குமே..

பொங்கிக் கதறினாயா.... எப்படி முடிவு வரை எழுதினாய்?

ஏன்..ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு?

விடிவுகாலம் தெரிந்தாலாவது காயங்கள் ஆறத்தொடங்கலாம்..

இன்னும் காயக்கணக்கு தொடர்வதை எண்ணினால்...?

ஆற்றாத சோகம் என்னுள்...

அக்னி
12-06-2008, 07:03 PM
வார்த்தைகள் இல்லை அன்பு....
நான் ஈழத்தில் வளர்ந்திருந்தாலும், யுத்தப் பிரதேசங்களில் குறிப்பிட்ட காலம் இருந்திருந்தாலும், இப்படியான நிகழ்வுகளை அனுபவிக்கும் கொடுமை எனக்கு நேர்ந்ததில்லை. கேட்டும், ஒளிப்பதிவுளைப் பார்த்தும் வேதனைப்பட்ட என்னை நேரடியாகவே இழுத்துச் சென்று காட்டுகின்றது உங்கள் எழுத்து.

அதிலும்,

அவனது நண்பன் அந்த புள்ளட் கோதுகளை அவனுக்கு காணிக்கையாக வைத்தான். தன்னால் தான் இவன் உயிர் பறிபோனதோ என்ற குறுகுறுப்பு இவனது மனதிலும்.
இந்த வரிகளின் வீச்சம் மேலோட்டமான பார்வை இல்லை. ஆழ் உணர்வின் வெளிப்பாடு. சின்னச் சின்ன விடயங்களையும் கவனித்துச் சேர்த்துச் செதுக்கியுள்ளது உங்கள் எழுத்து உளி.

இது கதையென்றாலும் கூட இன்றும் தொடரும் நிஜம் என்பதுதான் வேதனையான உண்மை.

அன்புரசிகன்
12-06-2008, 10:00 PM
கண்கள் கலங்கி மறைகின்றன எழுத்துகள்..

என்ன எழுத அன்பு?

இதைப் பதிப்பித்த உன் நெஞ்சம் வெடித்துச் சிதறியிருக்குமே..

பொங்கிக் கதறினாயா.... எப்படி முடிவு வரை எழுதினாய்?



இந்த கதையை எழுதும் போது இந்த முடிவை நினைத்து எழுத ஆரம்பிக்கவில்லை. அதுதான் உண்மை. பின்னர் திடீரென மனதில் இப்படி எழுதினால் என்ன என்று எழுதி முடித்தது தான் இந்த முடிவு... ஆனால் இதை எழுதிமுடித்த நேரத்தில் ஏறத்தாள 2 லீட்டர் தண்ணீர் குடித்திருப்பேன். இன்னொரு விடையம். நான் இரண்டாவது பாகத்தின் அரைவாசிப்பகுதியை இதுவரை மீள வாசிக்கவே இல்லை. எழுத்துப்பிழைகள் இருக்க வாய்ப்பு அதிகமாகவே உண்டு. எப்படி எழுதினேன் என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

கருத்திட்ட அண்ணலுக்கு நன்றிகள்.... இவ்வாறு யாழ் மண்ணில் பல பாலகர்களுக்கு பயங்கரவாதிப்பட்டம் சுமத்தப்பட்டதென்னமோ கசப்பான உண்மை...

அன்புரசிகன்
12-06-2008, 10:08 PM
இது கதையென்றாலும் கூட இன்றும் தொடரும் நிஜம் என்பதுதான் வேதனையான உண்மை.

உண்மை தான்... இதில் சில என்வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தவை... அந்த நோட்டீஸ் புள்ளட் கோது ஷெல் துண்டு குண்டுவீச்சின் போது வரும் துகழ்களை சேகரிப்பது போன்றவை.... இந்திய அமைதிப்படையின் காலத்திலேயே எனக்கு அந்த பழக்கம் ஆரம்பித்துவிட்டது... ஆனால் நான் இன்று உயிருடன் இருக்கிறேன். ஆதலால் தான் இது கதையாகிவிட்டது. ஆனாலும் பல நிஜங்கள் இதில் புதைந்திருக்கிறது உண்மை தான்.

நன்றி அக்னி.

மதி
13-06-2008, 02:54 AM
நெஞ்சம் கனக்கிறது..அன்புரசிகரே..!
கதையானாலும் அன்றாடம் நடக்கிற யுத்தத்தில் பலியாகும் எண்ணற்ற இளம்சிறார்களை நினைத்தால்...
பவியை துறுதுறு பாலகனாய் படைத்து இறுதியில் கண்கள் கலங்க வைத்து விட்டீர். அதற்காகவே உம் மீது கோபம் வருகிறது.

பங்கருக்குள் நடந்த உரையாடல் மூலம் குண்டு வீசும் விமானங்கள் எங்ஙனம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கின்றன என்னும் வலி கலந்த உண்மையை உணர முடிகிறது.

மலர்
13-06-2008, 03:28 AM
கண்கள் பனிக்கிறது ரசிகரே.......!!!
வலி மிகுந்த வேதனையான வாழ்க்கை...

மனிதனை மனிதனே கொன்று குவிக்கும் அவலம்...
சிறுவர்களை கூட விடாது தாக்கும் வெறிபிடித்த மனிதர்களை
நினைக்கையில் கோவம் தான் வருகிறது..

ஓவியன்
13-06-2008, 04:06 AM
அன்பு ரசிகா கதையை விளக்கி விமர்சிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை....

அதனால், நிஜத்தை கதையாக பல இடங்களில் சேர்த்தமைக்கு என் கண்ணீர் கலந்த நன்றிகள் பல....

சிவா.ஜி
13-06-2008, 06:05 AM
வாசித்து முடித்ததும் மனது பாரமாகிப் போனது. என்றோ ஒருநாள் யுத்தமென்றாலும் பரவாயில்லை. தினம் தினம் யுத்தம், ரத்தம், இழப்பு என அவல வாழ்க்கையின் அங்கங்களாக இருக்கும்....இந்தக் கதை மாந்தர்களைப் போன்றோரை, நிம்மதி என்றுதான் வந்தைடையுமோ?

பாராட்டிச் சொல்லவும் வார்த்தையின்றி கண்கள் பனிக்கின்றன அன்பு.

அன்புரசிகன்
13-06-2008, 06:19 AM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள். கண்கள் பனிக்கும். மறுக்கவில்லை. ஆனால் இவ்வாறான செய்திகள் பல யாழில் தினசரி செய்தியாக வந்திருக்கிறதே.... அதுதான் நெஞ்சை கனக்கிறது.

சுகந்தப்ரீதன்
14-06-2008, 09:09 AM
கடவுளே அது பவியாக இருக்கக்கூடாது என்று பிரார்த்தனை செய்துகொண்டே அண்மித்தான். தமிழனுக்கு கடவுள் என்றுதான் துணையாக இருந்திருக்கிறார்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. கடவுள் இருக்கிறா என்பதே சந்தேகத்திற்குரியதாகி விடுகிறது.. இதுபோன்ற சமயங்களில்..!! குழந்தையும் தெய்வமும் ஒன்றாம்.. இங்கே தெய்வத்தையும் அழிக்க ஆரம்பித்துவிட்டது மனித இனம் என்பதற்க்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்..?? தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்ல.. அவர்கள் அதற்கு தூண்டப்படுகிறார்கள் என்பதை உரக்கச்சொல்லும் படைப்பாக உங்கள் எழுத்து இருக்கிறது...!! ஆறுதல் சொல்லவும் வழியில்லை.. அணைத்து தேற்றவும் தெம்பில்லை.. மீண்டும் அந்த இறைவனைத்தான் நாம் நம்பவேண்டியிருக்கிறது.. இந்தநிலை நிரந்தரமாய் மாறவேண்டி..!!

அன்புரசிகன்
14-06-2008, 10:25 AM
யார் கவலைப்பட்டும் ஒன்றும் ஆகப்போவதில்லை. சிங்கள அரசு நிஜமாக கவலைப்பட்டால் தான் உண்டு. மற்றப்படி இந்த கதையில் வந்தவை தமிழீழப்பிரதேசத்தில் சர்வசாதாரணம்....

பாரதி
15-06-2008, 08:31 AM
அன்பு,

சாதாரணமாக கதைத்துக்கொண்டிருக்கும் போது பெட்ரோல், இரவு நேர சினிமா, வாகனம் இவற்றைப்பற்றியேதானே பேச்சு இருந்தது. 'நீங்கள் எழுத நிறைய விபரங்கள் இருக்கிறதே ; எழுதுங்களேன்' என சொல்லும் போது கூட நீங்கள் இதை சொல்லவே இல்லியே..?

முதல் பாகத்தை படித்த போதே மனம் பதைத்தது. முடிவு அவ்விதம் இருக்கக்கூடாது என வேண்டிக்கொண்டே படித்தேன். என்னை ஏமாற்றி விட்டீர்கள்.

கண்முன்னே இம்மாதிரி கொடுமைகளை காண்பதை போல துயரம் இருக்குமா..? சாதாரணமானவர்களையும் அதி தீவிர போக்குக்கு தள்ளக்கூடியது என்பதென்னவோ நிஜம்தான்.

ரொம்ப கஷ்டமா இருக்கு அன்பு.

அன்புரசிகன்
15-06-2008, 01:44 PM
அண்ணா... உண்மை எப்போதும் ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கும். இதைப்பற்றி உங்களுடன் கதைத்து கிடைத்த சில மணிநேரங்களையும் வீணாக்க விரும்பவில்லை. சந்தோசமாக இருக்க நினைத்தேன். தவறில்லையே.... உங்களின் பின்னூட்டம் கிட்டியதில் மகிழ்ச்சி...

விகடன்
16-06-2008, 08:21 PM
கதை என்ற பேரில ஏதோ என்னையும் என்னோட படிச்ச பெடியளிண்ட (பல வருடங்களுக்கு முன் நான் சிறுவனாகத்தான் இருந்தனான்)விளையாட்டேம் பக்கத்தில இருந்து பாத்துப்போட்டு இங்க வந்து சொல்லுற மாதிரியெல்லோ கிடக்குது.
ஞாயந்தான். எல்லாத் தமிழண்ட வாழ்க்கேலேம் இப்படி ஒரு வடு இருக்காட்டி எப்படி..........

இருந்தாலும் ரசிகா உமக்கு கெட்டித்தனம் நிறைய கிடக்குது. இல்லாட்டி போன இந்தளவு கெட்டித்தனமா பழசுகளை ஞாபகப்படுத்தியது போல எப்படி சொல்லலாம்? சொல்லும்.

அது சரி ஐசே....
உம்மட்ட எத்தனை சன்னம் இருந்தது? அதை முதல்ல சொல்லும். பிறகு அமரன் சொல்லுவார் :D

விகடன்
16-06-2008, 08:37 PM
பகுதி 2
மனதின் ஆழத்தில் கேட்டிருந்த பல கதைகளை மீள கிளறிவிட்டு சென்றுவிட்டன. இப்போது நான் 2008 இல் இல்லை அன்பு. 1989 இற்கே போய்விட்டேன்.

உமது எழுத்தாற்றலை மட்டுமில்ல ஞாபக சக்தியையும் கண்டு மெய் சிலிர்க்கின்றேன்.

பங்கர் என்றால் என்ன என்று பலரிற்கு புரியாமல் இருந்திருக்கும். அதனையும் அதை யார் வடிவமைப்பது, எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றியும் உமது எழுத்தால் சொல்லிவைத்துவிடும்.

அதுக்கு பிறகு அந்த சிக்கன விளக்கையும்.....
ஏற்கனவெ சொலியிருந்தாலும் தனியே மீண்டும் ஒருதடவை சொல்லிவிடப்பா. மன்ற உறவுகள் தாங்களும் ஒருதடவை வீட்டில் பரீட்சித்து பார்க்கட்டும். :) . வறுமையிலும் தமிழன் எப்படி செழிமையாக வாழ்ந்திருக்கிறான் என்பது புலனாகும்.

kavitha
17-06-2008, 05:38 AM
பங்கர் என்றால் என்ன என்று பலரிற்கு புரியாமல் இருந்திருக்கும். அதனையும் அதை யார் வடிவமைப்பது, எவ்வாறு வடிவமைப்பது என்பது பற்றியும் உமது எழுத்தால் சொல்லிவைத்துவிடும்.

அதுக்கு பிறகு அந்த சிக்கன விளக்கையும்.....
ஏற்கனவெ சொலியிருந்தாலும் தனியே மீண்டும் ஒருதடவை சொல்லிவிடப்பா. மன்ற உறவுகள் தாங்களும் ஒருதடவை வீட்டில் பரீட்சித்து பார்க்கட்டும். :) . வறுமையிலும் தமிழன் எப்படி செழிமையாக வாழ்ந்திருக்கிறான் என்பது புலனாகும்.

ஆமாம் நானே கேட்கவேண்டும் என்றிருந்தேன். பதுங்கு குழியை பங்கர் என்பார்களா?



இது கதையென்றாலும் கூட இன்றும் தொடரும் நிஜம் என்பதுதான் வேதனையான உண்மை.

உண்மை தான்... இதில் சில என்வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தவை... அந்த நோட்டீஸ் புள்ளட் கோது ஷெல் துண்டு குண்டுவீச்சின் போது வரும் துகழ்களை சேகரிப்பது போன்றவை.... இந்திய அமைதிப்படையின் காலத்திலேயே எனக்கு அந்த பழக்கம் ஆரம்பித்துவிட்டது... ஆனால் நான் இன்று உயிருடன் இருக்கிறேன். ஆதலால் தான் இது கதையாகிவிட்டது. ஆனாலும் பல நிஜங்கள் இதில் புதைந்திருக்கிறது உண்மை தான்.
கதையை முழுவதும் படித்துவிட்டு மனம் கனத்து கண்ணீர் ததும்பியது நிஜம்.

சின்னப்பையன் பவி, இன்னும் கண்முன்னே திரியும் சுட்டிச் சிறுவனாகவே காட்சியளிக்கிறான். அந்த அளவிற்கு கதையில் உயிரோட்டம் கலந்த எழுத்தோட்டம்.

கதை இரண்டு இடங்களில் நம்பிக்கை எழுப்பியது.
1. சின்னபையனை பொம்பர் ஒன்றும் செய்யாது என்று பவி வைக்கும் நம்பிக்கை
2. கடவுள் காப்பாற்றுவார் என்ற தமையனின் நம்பிக்கை.

இரண்டும் அங்கே பொய்யாய் போனது கதையின் வெற்றி; எதிர்பார்ப்பின் தோல்வி.

இருந்தாலும் இந்த கேள்விகள் துளைக்காமல் இல்லை.
சிறுவனா பயங்கரவாதி?
(பயங்கரம்) இல்லாத ஒன்றை (சிசுவை) அழித்து இருக்கும் ஒன்றை (இன்னுமொரு போராளீ)அழிவிற்கு ஆக்கவேண்டுமா?
இதன் தீர்வுதான் என்ன?

அன்புரசிகன்
17-06-2008, 01:52 PM
ஆமாம் நானே கேட்கவேண்டும் என்றிருந்தேன். பதுங்கு குழியை பங்கர் என்பார்களா?


அதே அதே.... அதிலும் இருவகை உண்டு.


முற்றிலும் மூடிய பதுங்கு குழி : குழி முதலில் வெட்டப்பட்டு பின் பனை மரக்குற்றிகளால் குறுக்காக அடுக்கப்பட்டு அதன் மேல் மண் மூடைகள் அடுக்கப்படும்.
மூடாத பதுங்கு குழி. இது திறந்ததாகவே காணப்படும்.இவை ப - ட வடிவங்களில் காணப்படும். விடுதலைப்புலிகள் எல்லைப்புறங்களில் வளைந்த கோடாக நீளப்பாட்டிற்கு வெட்டிவைப்பர். குறைந்தது ஒருவரி உயரத்தின் 3/4 பங்கு உயரத்திற்காவது இருத்தல் வேண்டும்.





இருந்தாலும் இந்த கேள்விகள் துளைக்காமல் இல்லை.
சிறுவனா பயங்கரவாதி?
(பயங்கரம்) இல்லாத ஒன்றை (சிசுவை) அழித்து இருக்கும் ஒன்றை (இன்னுமொரு போராளீ)அழிவிற்கு ஆக்கவேண்டுமா?
இதன் தீர்வுதான் என்ன?

முதலாவது கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை. ஆனால் அன்றய மாலை செய்தியில் "அரசபடையின் வெற்றிகர வான் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" இவ்வாறு வானொலியும் தொலைக்காட்சியும் அலறியிருக்கும். இதையே ஒன்றும் விடாது என்றோ எடுத்த காட்சியை ஒலிபரப்பி தொலைக்காட்சியின் வலதுபக்க மேல் மூலையில் கோப்பு என்ற சொற்பதத்துடன் BBC CNN SUNNEWS DDNEWS போன்றன ஒலிபரப்பும். இதெல்லாம் நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். பொது அறிவில் ஒரு வினா. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்கு செல்தாக்குதல் நடத்தி 2 மணித்தியாலம் கூட ஆகாது இலங்கை அரசு படங்கள் வெளிவிடும். இது எப்படி சாத்தியம்??? இதனை உலகமே நம்புகிறது. அல்லது நம்புவதாக நடிக்கிறது.

இரண்டாவது கேள்விக்கு பதில்... பட்டால் தான் தெரியும் என்றே சொல்வேன். அனுபவித்தவனுக்கு தான் அந்த வேதனை புரியும். பார்த்தவனுக்கோ கேட்டவனுக்கோ அல்ல. சில நேரங்களில் நம் சிந்தை நம் கட்டுப்பாட்டில் இருக்காது. சூழ்நிலையே காரணகர்த்தாவாகிவிடும். இந்த கதையில் வருவது ஒரு காரணியே... பல காரணிகள் உண்டு. ஒரு விதை தேடல்கள் ஆரம்பிக்க.....

ஓவியன்
17-06-2008, 02:36 PM
(பயங்கரம்) இல்லாத ஒன்றை (சிசுவை) அழித்து இருக்கும் ஒன்றை (இன்னுமொரு போராளீ)அழிவிற்கு ஆக்கவேண்டுமா?
இதன் தீர்வுதான் என்ன?

அக்கா, இந்தக் கேள்விக்கு அன்புவே பதிலளித்திருந்தாலும் கிட்டத் தட்ட இதே போன்றதொரு உண்மைச் சம்பவத்தையும் அதன் முடிவையும் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11491) காணுங்கள்...

அன்புரசிகன்
17-06-2008, 04:23 PM
நீங்கள் கேள்விப்பட்டதொன்றாக இருக்கலாம். ஆனாலும் ஒரு நாளில் ஒரே குண்டுவீச்சில் கொல்லப்பட்ட செஞ்சோழல சிறார்களின் படங்கள். இதோ

http://www.nitharsanam.com/images/adverts/sencholai_children.jpg

mukilan
16-07-2008, 10:50 PM
அன்பு நான் இந்தக் கதையை முதல் பாகம் மட்டும் படித்தேன். முழுவதையும் படித்துவிடலாம் எனக் காத்திருக்கையில் இன்று மன்ற மின்இதழில் மறுமுறை படிக்க நேர்ந்தது. நண்பர்கள் அனைவரும் கூறியுள்ள படி மனசு கனத்தது நிஜம். ஓடி விளையாட வேண்டிய வயதில் இப்படி தினம் தினம் பயந்து பயந்து ஏதோ போர்க்களத்தில் வாழ்வது போன்ற நிலைமயா? நினைத்தாலே பாரமாக இருக்கிறது. அன்றாடம் இந்த அவலத்தைச் சந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கும் என் ஈழத்துச் சொந்தங்களுக்கு சீக்கிரம் விடிவு வாராதா? ஒவ்வொரு அநியாயக் கொலையும் ஒரு போராளியை உருவாக்கும் இந்தக் கொடுமை ஐ.நா என்ற காட்சிப் பொருளாகிவிட்ட அமைப்புக்குத் தெரியாதா? எத்துணை கேள்விகள்? விடை தருவது யாரோ?அருமையான படைப்பு அன்பு! உங்களின் படைப்புக்கு நானும் ரசிகன்.

அன்புரசிகன்
17-07-2008, 02:00 AM
அண்ணனை மீண்டும் இந்த திரிக்கு அழைத்து பின்னூட்டமிடவைத்த நம் இதழுக்கு நன்றிகள்...

உங்களைப்போன்றவர்களின் உற்சாகத்தினால் தான் என்னைப்போன்றவர்கள் வளர்கிறார்கள். அதிலும் கதை எழுதுவதில் சக்கரவர்த்தி நீங்கள்....

கதையை கதையாக பார்க்காது அதில் உள்ள நிஜங்களை கண்டறிந்து பின்னூட்டம் கிடைத்திருக்கிறது. அதனாலும் எனக்கொரு திருப்தி கிடைத்திருக்கிறது. வெறுமனே சொன்னால் சிலவேளை யாரும் ஏற்றுக்கொள்ளாது போகலாம். இவ்வாறான கதைகள் (???) மூலம் சொல்லவர முயற்சித்தால் அதற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதற்கு உங்களின் மற்றும் மற்ற உறவுகளின் பின்னூட்டத்திலிருந்து நான் அறிந்த உண்மை...

மிக்க நன்றி அண்ணா.

Keelai Naadaan
28-07-2008, 04:51 PM
நண்பரே, இது கதையல்ல. சிறுகதையில் ஒரு காவியம் படைத்திருக்கிறீர்கள்.
உங்கள் எழுதும் திறனுக்கு பாராட்டுகள். குழந்தை பிராயத்து உணர்வுகளை கண்முன் கொண்டு வந்து காட்டப்பட்டுள்ளது.
கதை நகரும் விதமும் அருமை. படித்து முடிக்கும்போது நெஞ்சை உலுக்குகிறது.
ஓவியன் அவர்கள் சொன்னது போல் போராளிகள் தானே உருவாவதில்லை மாறாக உருவாக்கபடுகிறார்கள்.

அன்புரசிகன்
28-07-2008, 05:13 PM
உங்கள் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி கீழை நாட்டான்... உண்மை தான். யாரும் உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்.