PDA

View Full Version : ஒரு பயணம்



shibly591
10-06-2008, 08:22 AM
நீண்ட
ஒற்றையடிப் பாதையில்
இலக்கின்றி
பயணிக்கும்
ஒரு வழிப் போக்கனாய்
என்னை நான்
உணர்கிறேன்

சில சமயம்
சொந்த நிழலில்
இளைப்பாறி
சில சமயம்
அது கூட இன்றி
தொடர்கிறது பயணம்

ஆங்காங்கே
தென்படும் பிற
பாதச் சுவடுகள்
இன்னும் பயணிக்கலாம்
என்ற நம்பிக்கையில்
நீரூற்றுகின்றன

அடிக்கடி
ஒரு சந்தேகம்
அவசரமாய்
எழுந்து மறையும்
நான் போவது
மனம் போன போக்கிலா?
கால் போன போக்கிலா?

முன்னாலும்
பின்னாலும்
என் போலவே
பயணிக்கும்
பலருடன்
எதுவும் பேசாமல்

சூழ்ந்திருக்கும்
இயற்கை வனப்பை
நின்று பார்த்து
ரசிக்காமல்
எதற்கோ
எங்கோ
எப்படியோ
நீண்டு கொண்டிருக்கும்
இதுவெல்லாம்
ச்சே
ஒரு பயணமா?

kavitha
10-06-2008, 08:43 AM
சூழ்ந்திருக்கும்
இயற்கை வனப்பை
நின்று பார்த்து
ரசிக்காமல்எதற்கோ
எங்கோ
எப்படியோ
நீண்டு கொண்டிருக்கும்
இதுவெல்லாம்
ச்சே
ஒரு பயணமா? "வாழ்க்கை ஒரு ஒருவழிப்பயணம்", "துயரம் இல்லாதவன் ஞானியும், குழந்தையும்" என்பர். ஓடிக்கொண்டே இருப்பது இங்கே வாடிக்கை. எதற்காக ஓடுகிறோம் என்பதே பலருக்குத்தெரிவதில்லை. அது புரியும்போது ஏறக்குறைய நமது பாதையின் இறுதிக்கு வந்திருப்போம். ஞானியாலும், குழந்தையாலும் மட்டும் எப்படி துயரம் இன்றி இருக்கமுடிகிறது என்றால் இருவரும் ஒன்றில் தம்மை இருத்திக்கொள்வதில்லை. ஒவ்வொருவரும் விரும்புவது மகிழ்வுடன் இருப்பதைத்தான் அந்த மகிழ்ச்சி மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.

குழந்தைக்கு அன்னையின் சிரிப்பு, சாதிக்க ஓடுபவனுக்கு வெற்றி இதையெல்லாம் தாண்டி இறைவனின் படைப்பில் களிப்புறுவது கலையில் நிற்கும் அந்த நொடிப்பொழுதில் கிடைக்கும். நாம் படைக்கும்போதும், ஒரு படைப்பின் அதியசத்தை வியக்கும்போதும் இத்தகைய இன்பம் நமக்குத் தாமாகவே கிடைக்கிறது, அதை உணரும்போது.

"அறை எண் 305-ல் கடவுள்" படத்தில் ஒரு பாடல் வரும்... "காதல் செய், காதல் செய்" , மேற்சொன்ன வசனங்களூம் கூட வந்திருக்கும்.

அதற்காக நீங்கள் ரசித்துக்கொண்டே நின்றுவிட்டால் இங்கே கவிதை எழுதியிருக்கமுடியாது. பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட பணியில் நமது முத்திரையைப்பதிப்பதே பிறப்பின் நோக்கம் என நான் நினைக்கிறேன். உலகம் என்பது ஒரு பெரிய நிறுவனம். இங்கே நாம் அனைவருமே தொழிலாளிகள். மேலே இருப்பவன் தான் முதலாளி. நமக்கு உயிர் எனும் உணவை தினம் வழங்குபவன். அவனிடமிருந்தே வந்தோம். அவன் படைப்புகளை ரசிப்பதே நன்றி கூறுதலுக்கு சமானம் தான்.

இளசு
15-06-2008, 12:06 AM
அழகிய சுயப்பார்வைக் கவிதை..

ஆழமான கூர்பார்வை பின்னூட்டம்..

வாழ்த்துகள் ஷிப்லி!

பாராட்டுகள் கவீ!