PDA

View Full Version : கருவறை உறவிது!ஷீ-நிசி
09-06-2008, 04:20 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/KaruvaraiUravithuNew.jpg

சத்தம் சூழ்ந்த இவ்வுலகில்
பூத்த உறவல்ல இது!
இரத்தம் சூழ்ந்த கருவுலகில்
பூத்த உறவிது!

நானிருந்த கருவறையில்
எனக்குப்பின் வந்தவள் நீ!
நான் தமக்கை என்ற பதவியை
எனக்குத் தந்தவள் நீ!

காற்றில் இரு பூக்கள்
உரசிக்கொள்ளும் கவிதைதான்
உனக்கும் எனக்குமான
மோதல்கள்!!

இப்பொழுதெல்லாம்
மோதல்களில் நீயே
வெற்றிக்கொள்கிறாய்..

நம் ஆயுதங்கள்,
அதிகபட்சம் தலையணைகள்!

காலங்கள்
வினாடிகளை விடவும்
வேகமாய் ஓடுகின்றன!

பால்ய காலங்களை கடந்து -இன்று
பருவ காலத்திலே நாம்!

ஒரே அறையில்
ஒன்றாக பயில்கிறோம் -பின்
நன்றாக துயில்கிறோம்!
எப்போதும் மகிழ்கிறோம்!!

இருவரும் பிரியும் தருணங்கள்
எதிர்காலங்களில் வரலாம்!
சில கண்ணீர்காலங்களை
அவை நமக்கு தரலாம்!

அந்த கணங்களில் எல்லாம்
என் கண்களின் வழியே வழியும்
உனக்கும் எனக்குமான
செல்ல மோதல்களின் நினைவுகள்!!!

சிவா.ஜி
09-06-2008, 04:46 PM
சகோதரிக்குள்ளான பாச உணர்வுகளை மிக அழகான கவிதையாய் வடித்திருக்கிறீர்கள் ஷீ.


காற்றில் இரு பூக்கள்
உரசிக்கொள்ளும் கவிதைதான்
உனக்கும் எனக்குமான
மோதல்கள்!!

அவர்களுக்குள்ளான செல்ல மோதல்களை சொல்ல நீங்கள் கையாண்ட அந்த உதாரணம் அசத்தல். கவித்துவம் வழிந்து நிற்கிறது.

வாழ்த்துகள் ஷீ-நிசி.

அறிஞர்
09-06-2008, 04:47 PM
இருவரும் பிரியும் தருணங்கள்
எதிர்காலங்களில் வரலாம்!
சில கண்ணீர்காலங்களை
அவை நமக்கு தரலாம்!

அந்த கணங்களில் எல்லாம்
என் கண்களின் வழியே வழியும்
உனக்கும் எனக்குமான
செல்ல மோதல்களின் நினைவுகள்!!!
பாசமலர்களுக்கு ஏற்படும்
அனுபவங்கள் அழகான வரிகளில்.,....

அடித்துக்கொண்டாலும்...
அதில் ஒரு இன்பம்...
அதை பிரிதொரு நாள்
நினைக்கும்பொழுது....
வாயில் புன்னகை.....

வாழ்த்துக்கள் ஷீ-நிசி..

ஷீ-நிசி
09-06-2008, 04:49 PM
நன்றி சிவா.ஜி! நன்றி அறிஞரே!

இளசு
09-06-2008, 07:15 PM
வாங்க ஷீ.. நலமா?


அழகுணர்வுக்கு மறுபெயர் நீங்கள்..

இங்கே உறவுகளில் ஒரு அழகான உறவை
இதமான வரிகளால் பரிமாறிய பாங்கு - அடடா!

நான் சந்தித்த சில நல்ல சகோதரி-கள் நினைவுக்கு வந்தனர்..

அழகுகள் வளரட்டும் இன்னும்..

வாழ்த்துகள் ஷீ!

பென்ஸ்
10-06-2008, 12:16 AM
உறவுகளை கவிதையாக கொடுக்கும் போது அதில் ஒன்றாய் மாறிபடிக்கும்

அந்த கணங்களில் எல்லாம்
என் கண்களின் வழியே வழியும்
உனக்கும் எனக்குமான
செல்ல மோதல்களின் நினைவுகள்!!!

அருமையான கவிதை ஷீ...

இந்த உறவை போலவே
வரிகளும் மென்மையாய்...
வாசிக்கும் போது மனதில்
மெல்லியதாய் ஒரு அன்பு கீறல்...

அத்தனை வரிகளையும் தனி தனியே பிரித்து ரசிக்கலாம்

இருந்தாலும் சிவா எடுத்த கொடுத்தா இந்த வரிகளுக்காக

காற்றில் இரு பூக்கள்
உரசிக்கொள்ளும் கவிதைதான்
உனக்கும் எனக்குமான
மோதல்கள்!!


உங்களுக்கு 1000 இ-பணம் பரிசு,,,,,

சுகந்தப்ரீதன்
10-06-2008, 02:35 AM
அருமை கவிஞரே.. மெல்லிய உணர்வுகளை மென்மையாய் கவிதை வரிகளில் படரவிட்ட உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்..!!

வெண்பா வகை கவிதை எழுதுவதில் இங்கே உங்களை வெல்ல முடியாது என்றே தெரிகிறது..கவிஞரே..!!
எனக்கு எழுத எத்தனிக்கும் எத்தனையோ கருக்கள் வார்த்தை கிடைக்காமல் உருக்குலைந்து போயிருக்கின்றன..!!
ஆகையால் உங்களை குருவாய் எண்ணி உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. இதுபோல அழகியலுடன் கவிதைகள் எழுதும் வித்தையை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிதாருங்களேன்..!!

ஓவியன்
10-06-2008, 06:54 AM
அன்பின் ஷீ...!!

எல்லோருடைய மனதின் ஆழத்தினை மென்மையாகத் தட்டி எழுப்பி அவர்களையும் படைப்பின் கதாநாயகர்களாக உணரவைக்கும் யுக்தி உங்களுடையது, சேரனின் ஆட்டோகிராப் போல...

சரியான கோணத்தில் சரியான் இடத்தில் வார்த்தைகள் வாய்த்திருப்பதால் இங்கும் உங்களுக்கு வெற்றியே..!!

நான் சகோதரிகளுடன் பிறந்ததில்லை, ஆனால் உங்கள் கவிதை வரிகள் அப்படியே என் சகோதரனுடனும் இசைந்து நிற்பது ஒரு கவிஞனாக உங்களின் வெற்றியே....

பாராட்டுக்கள் ஷீ..!!

kavitha
10-06-2008, 09:25 AM
நானிருந்த கருவறையில்
எனக்குப்பின் வந்தவள் நீ!
நான் தமக்கை என்ற பதவியை
எனக்குத் தந்தவள் நீ!
எனக்கிந்த பாக்கியமும் உண்டு.
செல்ல சண்டைகளும் நடந்தது, நடப்பது, நடக்கப்போவதுமுண்டு. "எனக்கு எனக்கு" என்ற நிலை மாறி கண்ணீர் மல்கி புக்காத்து போய் பிறகு "எல்லாத்தையும் நீயே வச்சுக்கோ" னு கொடுத்த பொழுதுகளும் உண்டு. "அவ தான் உனக்கு செல்லப்பிள்ளைனு" வம்பிழுத்து அம்மா கிட்ட இன்னும் ரெண்டு கூடுதல் முத்தங்கள் பெற்றதும் உண்டு.

எனக்கு எனக்கு என்று
பிடுங்கிய பொம்மைகள்
நீயும் எனது தான்
என்றுணர்ந்தபோது - எறிந்து
என் மடியில் நீ
விளையாட்டுப்பொம்மை ஆனாயடி.

அக்னி
10-06-2008, 10:16 AM
தாயின் வயிற்றின் மேட்டில்
எதிர்பார்ப்போடு முத்தமிடும் தருணம்..,
பாசத்தின் பாகப்பிரிவை மறக்கடிக்கும் பந்தத்தின் தோற்றம்...
இந்தப் பந்தம் ஏற்படாதுபோனால்..,
சகோதர பாசம் விரோதமாய்த்தான் போகும்...
சகோதரம் பிரிவினையல்ல,
பிரியாத இணை என்று
புரியவைத்தல் பெற்றோரின் கடமை...
இந்தப் புரிதலைத் தவிர்த்தால்
சகோதர மனங்களில் விரோதமை
தடம் பதித்(ந்)துவிடும்...

பிறக்கப் போகின்ற, பிறந்த குழந்தைகள் மேல் காட்டும் அதீத கவனிப்பு,
தன் மேலான பாசத்தைக் குறைத்துவிட்டது என்ற எண்ணத்தை,
மூத்த குழந்தைகளிடம் ஏற்படாது தவிர்ப்பதில் பெற்றோரின் அக்கறை அவசியமானதாயிருக்கவேண்டும்...

கருவறை உறவிது...
நான் வாழ்ந்த கருவறை உனது இன்று...
வெளியே வா காத்திருக்கின்றேன்,
உன் பிஞ்சு விரலின் பிடியில்,
என் ஒரு விரலைப் பிணைக்க
எதிர் பார்த்திருக்கின்றேன்...

அழகிய கவிதை... மனதில் பாச அழுத்தத்தைத் தரும் கவிதை...
மிகுந்த பாராட்டுக்கள் ஷீ-நிசி...
கவிதைக்கு எனது சிறு கௌரவிப்பாக 500 iCash.

நம்பிகோபாலன்
10-06-2008, 10:39 AM
அருமையான கவிதை.
எனக்கு தங்கைகள் கிடையாது என்பதால் என் தோழிகளை தங்கையாக பாவித்து உரிமையோடு என்னை கன்டிக்கும் பொழுதும் கிடைக்கும் ஆனந்தம் உங்கள் கவிதையை படிக்கும் பொழுது கிடைக்கிறது.
மனமார்ந்த பாராட்டுக்கள்

மலர்
10-06-2008, 10:57 AM
ஷீ.. ஒரு நிமிடம் என்னையே
மறந்து ரசித்தேன்...

எத்தனை அழகான வரிகள்....
பாராட்ட வார்த்தையே சிக்கவில்லை...

இருந்தாலும்...
தொடர்ந்து எழுத பாராட்டுக்கள் ஷீ...

ஷீ-நிசி
10-06-2008, 02:07 PM
எப்படி இருக்கீங்க இளசு ஜி! நான் நலமே!
உங்கள் வாழ்த்துதலுக்கும், பாராட்டுதலுக்கும் என் அன்பின் நன்றிகள்!

ஷீ-நிசி
10-06-2008, 02:09 PM
நன்றிகள் பென்ஸ்!

ஷீ-நிசி
10-06-2008, 02:10 PM
அருமை கவிஞரே.. மெல்லிய உணர்வுகளை மென்மையாய் கவிதை வரிகளில் படரவிட்ட உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்..!!

வெண்பா வகை கவிதை எழுதுவதில் இங்கே உங்களை வெல்ல முடியாது என்றே தெரிகிறது..கவிஞரே..!!
எனக்கு எழுத எத்தனிக்கும் எத்தனையோ கருக்கள் வார்த்தை கிடைக்காமல் உருக்குலைந்து போயிருக்கின்றன..!!
ஆகையால் உங்களை குருவாய் எண்ணி உங்களிடம் ஒரு வேண்டுகோள்.. இதுபோல அழகியலுடன் கவிதைகள் எழுதும் வித்தையை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிதாருங்களேன்..!!

சுகந்தாப்ரீதா... என்னை கிண்டல் செய்யவில்லையே! இது வெண்பா வகை கவிதையா?!

வித்தையெல்லாம் எதுமில்லை.... மனதில் தோன்றியதை வடித்தேன்! அவ்வளவுதான்... நன்றிகள் சுகந்தா!

ஷீ-நிசி
10-06-2008, 02:11 PM
நன்றி ஓவியன்! எங்கள் வீட்டிலும் நாங்கள் மூவருமே சகோதரர்கள்! :)

ஷீ-நிசி
10-06-2008, 02:16 PM
எனக்கு எனக்கு என்று
பிடுங்கிய பொம்மைகள்
நீயும் எனது தான்
என்றுணர்ந்தபோது - எறிந்து
என் மடியில் நீ
விளையாட்டுப்பொம்மை ஆனாயடி.[/QUOTE]

அழகியல் கவிதை கவிதா அவர்களே!
உண்மைதான்.... அந்த செல்ல நினைவுகள் மனதில் என்றும் பசுமையாய் இருந்திடும்!

ஷீ-நிசி
10-06-2008, 02:16 PM
அழகிய கவிதையில் விமர்சனம்... நன்றி அக்னி!

ஷீ-நிசி
10-06-2008, 02:18 PM
நன்றி நம்பிகோபாலன்

நன்றி மலர் ( நீ தொடர்ந்து படிப்பேன் என்றால் எழுதுகிறேன் :) )

சுகந்தப்ரீதன்
10-06-2008, 03:21 PM
சுகந்தாப்ரீதா... என்னை கிண்டல் செய்யவில்லையே! இது வெண்பா வகை கவிதையா?!!
அய்யோ..கவிஞரே..நான் கிண்டல் எல்லாம் பண்ணவில்லை.. (ஏம்பா எல்லோரும் என்னை காமடியனாக்குறீங்க..??:traurig001:)
உண்மையில் எனக்கு இலக்கணத்தைப்பற்றி எதுவுமே தெரியாது கவிஞரே..!! படிக்க சுவையா ஒரேமாதிரி ஒலியளவுக் கொண்ட வார்த்தைகளை கொண்டு அமைக்கப்படுபவற்றை வெண்பா என்றே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.. நீங்கள் கூறுவதை பார்த்தால் அது தவறுபோல் தெரிகிறதே..?! அப்படித்தானா நண்பரே..?!

நன்றி மலர் ( நீ தொடர்ந்து படிப்பேன் என்றால் எழுதுகிறேன் :) )
ஏம்மா.. மலரு நீ கவிதையெழுதி எங்களை கலக்கவேண்டாம்...:fragend005::fragend005::fragend005:
குறைஞ்சபட்சம் அப்பப்ப வந்து கவிஞரோட கவிதைக்கு பின்னூட்டம் கொடுத்துட்டு போம்மா..!!
எங்களுக்கும் கவிஞருக்கிட்டருந்து கவிதை கிடைச்ச மாதிரியிருக்கும்.. உனக்கும் புண்ணியமா போகும்..!!:sprachlos020::icon_rollout::icon_rollout:

ஷீ-நிசி
10-06-2008, 03:34 PM
அய்யோ..கவிஞரே..நான் கிண்டல் எல்லாம் பண்ணவில்லை.. (ஏம்பா எல்லோரும் என்னை காமடியனாக்குறீங்க..??:traurig001:)
உண்மையில் எனக்கு இலக்கணத்தைப்பற்றி எதுவுமே தெரியாது கவிஞரே..!! படிக்க சுவையா ஒரேமாதிரி ஒலியளவுக் கொண்ட வார்த்தைகளை கொண்டு அமைக்கப்படுபவற்றை வெண்பா என்றே நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.. நீங்கள் கூறுவதை பார்த்தால் அது தவறுபோல் தெரிகிறதே..?! அப்படித்தானா நண்பரே..?!


சுபி சரிதான்.... நாம கவிதையில போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கப்பு...

தாமரை, கவிதா, ஆதவா, எல்லாரும் இப்ப கையில கொம்ப வச்சிகிட்டு உன்ன தேடிட்டிருக்காங்களாம் :icon_ush:

வெண்பா சொல்லிகொடுக்கத்தான்... :lachen001:

சுகந்தப்ரீதன்
12-06-2008, 03:08 AM
சுபி சரிதான்.... நாம கவிதையில போகவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கப்பு...
என்ன மிஞ்சிப்போனா இன்னும் ஒரு எட்டுக்கிலோமீட்டர் இருக்குமா கவிஞரே..??

தாமரை, கவிதா, ஆதவா, எல்லாரும் இப்ப கையில கொம்ப வச்சிகிட்டு உன்ன தேடிட்டிருக்காங்களாம் :icon_ush:
வெண்பா சொல்லிகொடுக்கத்தான்... :lachen001:
எல்லா வாத்தியாரும் இன்னமும் அப்படியேத்தான் இருக்காங்க போலிருக்கு..:fragend005::fragend005:
ஆதவா - மன்றத்தில் இப்போது அவுட் ஆப் ஆர்டர்..!!
கவிதா - அக்கா அப்பப்ப ஆப்சண்ட்..!!
தாமரை - கத்துத்து தராரோ இல்லியோ கடிச்சி எடுத்துடுவாரு..!!

அதனால கவிஞரே.. நீங்களே சொல்லிக் கொடுத்துங்களும்..:wuerg019:

சூரியன்
12-06-2008, 04:33 AM
இருவரும் பிரியும் தருணங்கள்
எதிர்காலங்களில் வரலாம்!
சில கண்ணீர்காலங்களை
அவை நமக்கு தரலாம்!

உண்மைதான் நிசி அண்ணா.

அழகிய கவிதை இதற்கு என்னுடைய சார்பில் இ-பணம் அன்பளிப்பு.

இதயம்
12-06-2008, 04:48 AM
இரத்த உறவை மிகுந்த இரசனையுடன் கூறியிருக்கிறீர்கள். உங்கள் கவிதை சுகமென்றால் அதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்த "வயிற்றுக்குள் இருக்கும் இரத்த உறவை முத்தமிடும்" அழகான அந்த படம் ஆயிரம் கவிதையை சொல்லி சுகமோ சுகம் என்றாக்கி விட்டது.! நன்றி ஷீ..!!

ஆதவா
12-06-2008, 07:49 PM
என்ன மிஞ்சிப்போனா இன்னும் ஒரு எட்டுக்கிலோமீட்டர் இருக்குமா கவிஞரே..??

எல்லா வாத்தியாரும் இன்னமும் அப்படியேத்தான் இருக்காங்க போலிருக்கு..:fragend005::fragend005:
ஆதவா - மன்றத்தில் இப்போது அவுட் ஆப் ஆர்டர்..!!
கவிதா - அக்கா அப்பப்ப ஆப்சண்ட்..!!
தாமரை - கத்துத்து தராரோ இல்லியோ கடிச்சி எடுத்துடுவாரு..!!

அதனால கவிஞரே.. நீங்களே சொல்லிக் கொடுத்துங்களும்..:wuerg019:

கவலைப்படாதீங்க சுபீ... சீக்கிரமே வந்துடுவேன். :icon_b:

ஆதவா
13-06-2008, 01:20 PM
அருமை.. அருமை......... மிக அருமை.

இறுதி வரி என் கண்களுக்குள் சென்று கவிதை வழிவதைக் காணமுடிகிறது.

மனித வாழ்நாளில் இறுதியாக வரிக்கப்பட்ட ஆயுட்காலம் அறுபதாக இருந்தாலும் பலநூறு ஆயிரம் வருடங்கள் உள்ளடக்கிய வாழ்வை உண்ட செரிமானத்தில் சிலர் இறந்து போகிறார்கள். உடன் பிறந்தார் என்பது தம் பெற்றவர்கள் புகுத்தும் இன்பமாக இருப்பினும் எல்லோருடைய வாழ்விலும் இவ்வகைத் திணிப்பு இருப்பதாக இல்லை. கருவறையில் படுத்துருளும் இரு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கவிதைகள் கிடைப்பதும் அபூர்வமாகவே இருக்கிறது.. உண்மைதான். ஒரு அறையில் இருவர் என்பது அத்துணை சாதாரண விசயமா என்ன? ஒன்றன்பின் ஒன்று என்பது (அதாவது இப்படத்திற்குத் தக்க) வழமையில் நடக்கும் சங்கதி.

சத்தம் சூழ்ந்த இவ்வுலகில்
பூத்த உறவல்ல இது!
இரத்தம் சூழ்ந்த கருவுலகில்
பூத்த உறவிது!

உறவுகள் எப்படி சத்தம் சூழ்ந்த உலகில் பிறக்கும்? ஆம்.. பிறக்கத்தான் செய்கிறது. இவ்வுறவுகளுக்கு நிறம் தேவையில்லை, வடிவம் தேவையில்லை, எண்ணம் ஒன்றே போதுமானது. (இம்மன்றத்து உறவுகள் எல்லாருமே சத்தம் சூழ்ந்த உலகில் பிறந்த உறவுகள் தானே!) இன்னும் கவனிக்க.. உறவுகள் பிறக்கும் என்று எழுதப்பட்டிருக்கிறதே தவிர உறவெனும் உயிர் என்று சொல்லப்படவில்லை. அவ்வகை உறவுகளுக்கு உயிர் தேவையில்லை என்று சொல்லவருவதே கவிஞரின் கணிப்பு என்பது என் கருத்து. கருவறையில் இரத்தம் இருக்குமா என்ற மருத்துவ ஆய்வுகளைத் தவிர்த்துவிட்டு, தன்னோடு இணையாக, துணையாகப் பிறக்கும் ஒரு உறவினை சந்த அழகியல் சேர்த்துத் தந்த கவிதை.. இனிப்பு உப்புமா.

நானிருந்த கருவறையில்
எனக்குப்பின் வந்தவள் நீ!

நானிருந்த என்றால் இப்போது சத்த உலகில் (கவிஞர் பாணியில்) இருப்பதாக அர்த்தம். இரட்டைக் குழந்தைகள் அல்ல என்பதை இவ்வரிகளே தெளிவுபடுத்திவிடுவதால் மேற்கொண்டு இடவெளி விட்டுப் பிறந்த சகோதர/சகோதரியின் கவிதையாக எடுத்துக் கொள்ளலாம். இதில் கவிதை வாசிப்பது அக்கா.. தங்கை பிறப்பதால் தனக்கு ஒரு பதவி கிடைப்பதாக எண்ணுகிறாள். தங்கை எனும் பதவியும் தன் தங்கைக்குக் கிடைப்பதால் அடுத்து பிறப்பவளே பதவியினை உறுதி செய்பவளாகவும் இருக்கிறாள்.

பின்,

இரு சகோதரிகளின் மோதல் எவ்வாறு இருந்தது?

காற்றில் இரு பூக்கள்
உரசிக்கொள்ளும் கவிதைதான்
உனக்கும் எனக்குமான
மோதல்கள்!!

இந்த இடத்தில் எனக்குத் தோன்றியது.... தவறாக எண்ணவேண்டாம். இக்கவிதை வரிகளை கவனிக்கும்போது கணவன் மனைவியின் ஆரத்தழுவலுக்கிடையே தோன்றும் மெல்லிய இடைவெளியை நினைவுறுத்துகிறது.. பிணைப்பின் எதிரி மெல்ல ஊடுறுவும் போது இம்மாதிரி தோன்றுவதுண்டு. நிற்க.
சகோதரிகளின் பாசம், வம்புகள் கலந்து இருக்கிறதையும் அவ்வம்பு எத்தனை மெல்லியது என்பதையும் சொல்வதற்கு இதைவிட சிறந்த வரிகள் இருப்பதாக இதுவரை நான் அறியவில்லை.

அக்காள் மெல்ல விட்டுக் கொடுக்கிறாள். தன் வயதிற்கான பக்குவத்தை அடைந்துவிட்டாள். தங்கையின் துடுக்குத் தனத்தைப் பார்த்து மனமகிழ்பவளாகத் தன்னை மாற்றிக் கொள்கிறாள்.. மோதல்கள் திட்டமிடுகின்றன. வெற்றி பெறுவது தங்கை.

நம் ஆயுதங்கள்,
அதிகபட்சம் தலையணைகள்!

இந்த வரிகளை தங்கை வெற்றிகொள்ளும் வரிகளுக்கு முந்தி அமைத்திருக்கலாம் என்பது என் கருத்து. என்றாலும் கரு சிதைந்துவிடவில்லை. தலையணைகள் சண்டையிட்டால் மனதுக்குள் மகிழ்ச்சி பெருகலாம். எனக்கும் அவ்வகை அனுபவங்கள் நேர்ந்திருக்கின்றன. காகிதக் கவிதைகள் நெருக்கி வைக்கப்பட்டிருக்கும் தலையணையைத் தூக்கி அடிக்கும் போது மனம் வலிக்காது.. மாறாக சந்தோசம் ஆறாக பொங்கும். தலையணைகள் பொறுத்தவரை பலவகையான உணர்வுகளைக் கொடுக்கவல்லது. அதை உணர்ந்தால் உணர்ந்தவர்களுக்குப் புரியும்.

பிந்தைய மாற்றங்கள். நவீன யுகத்தில் சுருங்கிப் போன காலம், வெகுகாலம் நீளும் கால அளவுகளைக் குறுக்கியதன் விளைவு, வினாடிகள் தறிகெட்டு ஓடுகின்றன தன்னையும் மறந்து.. பருவங்கள் மாறுகின்றன. இயற்கையிலும் வாழ்க்கையிலும்..... பிரபஞ்சத்தில் எப்பொருளும் நிலையானதல்ல. பருவ அல்லது விளைவு மாறுபாடுகளைச் சந்தித்தே ஆகவேண்டிய நிர்பந்தம் ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. மனித காலங்கள் மனித உறவுகள் அதற்கு விதிவிலக்கல்ல.

ஒன்றாக பிறந்ததும், ஒன்றாக வளர்ந்ததும், ஒன்றாக அழுததும்.. ஒன்று இரண்டாவதன் முன்னர் ஒன்று, ஒன்றாகவேதான் இருக்கும். சமுதாய மேம்பாடு என்று சொல்லவேண்டாம், சீர்கேடு என்று சொன்னாலும் தகும், கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து இன்று தந்தை ஒருபக்கம் தனயன் ஒருபக்கம், தாய் ஒருபக்கம் என்று பிரிந்து வாழும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம். சகோதரிகள் பிரிவது எதிர்பாராததல்ல.

சில கண்ணீர்காலங்களை
அவை நமக்கு தரலாம்!

அருகருகே இருந்தும் ஒரு கண்ணின் நீரை இன்னொரு கண் பார்க்க இயலாது. இப்படிப்பட்ட ஒருமைகளும் சமுதாயத்தில் உண்டு. சகோதரத்துவம் திருமணத்திற்கு அப்பால் பிய்த்து எறியப்பட்டு இரத்த உறவுகள் இரத்தம் பார்க்கும் நிலையும் நடக்கிறது........... அதுவும் ஒரு கண்ணீர் காலம் தான். சமுதாயத்திற்கு.

இவையெல்லாவற்றின் நினைவுகளும் அசைபோடும்பொழுது நம்மை அறியாமல் மனம் அழுக எத்தனிக்கிறது... நம்மை அறியவைக்க கண்ணீர் பொத்திட்டு வருகிறது. இன்றைய மொபைல் உலகில் கண்ணீர் கண்களை எட்டும் முன்னர் நம் எண்கள் அங்கே எட்டி, எலக்ட்ரான்கள் கண்ணீர் விடுகின்றன. என்றேனும், கணவனால் தன் குடும்பமோ அல்லது தன் கணவன் குடும்பத்தால் தன் குடும்பமோ பிரிந்து எலக்ட்ரான்கள் வழியே கண்ணீரைப் பீய்ச்சி அடிக்க இயலாத தருணத்தில் புடவைக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குடும்பப் புகைப்படம் திரவ மழையில் நனைந்துகொண்டிருக்கலாம்.

ஆக மொத்தம் கருவறைக்குள் சென்று கவிதை படிக்கவேண்டியதாகிவிட்டது இக்கவிதையினைப் படிக்கும்போது. எதுகைகள் அழகு.. அதனை நன்கு பொறுத்தி எழுதியமையும் அழகு. சில உருவகங்கள் இன்னும் அழகு. (நினைவுகள் கண்ணீர் ஆவது.) எனக்கும் ஒரு தங்கை இருப்பதாக உணரும் போது கவிதையின் வீரியத்தை நன்கு உணரமுடிகிறது.. அதனுள் ஆழ சென்று கண்ணீர் உகுப்பது எளிதாகிறது........

நல்ல கவிதை......


எனக்கு எனக்கு என்று
பிடுங்கிய பொம்மைகள்
நீயும் எனது தான்
என்றுணர்ந்தபோது - எறிந்து
என் மடியில் நீ
விளையாட்டுப்பொம்மை ஆனாயடி.

நல்ல கவிதை கவிதா.. புரிதலின் தொடக்கத்தில் தனக்கேயான மாற்றத்தை நன்கு உணரமுடியும், தனக்கு, தாந்தான் என்று எல்லாமே எண்ணுவதைக் காட்டிலும் தனக்குப் பிடித்தமானவரைத் தனக்கு என்று எண்ணுவதன் நோக்கமே பாசமழையில் முழுமையாக நம்மைக் கொடுக்கும் நம்பிக்கை.

மிக நல்ல இரு கவிதைகள்....................

ஆதவன்

ஷீ-நிசி
16-06-2008, 03:03 PM
நன்றி சூரியன்! நன்றி இதயம்!

ஷீ-நிசி
16-06-2008, 03:04 PM
ஆதவா! மறுபடியும் மிக அழகிய விமர்சனம்.. ஒரு படைப்பாளிக்கு இதைவிட சிறந்த சன்மானம் ஒன்று இராது என்றே கருதுகிறேன்..

நன்றி ஆதவா!