PDA

View Full Version : சோரம் போனவனிற்கு….



தீபன்
09-06-2008, 06:15 AM
சோரம் போனவனிற்கு….

தினசரி விழிப்புக்கள் உன்
விழிகளில் விளித்ததனால்
விளைந்த விபத்துக்கள்
விபரீதங்களாயின….

கண்கள் கொண்ட மோதலில்
நம்
உயிர்கள் கொண்டன காதல்!

நிகழ்காலம் கனவுகளில் கரைந்தபோது
எதிர்காலம் எண்ணிப் பார்க்க
முரண்டு பிடித்தது மனம்!

என்
கண்ணசைவில் நீ
கடலை வென்ற போது
உன் வீரம் கண்டு
அதிர்ந்து நின்றேன்!

என்
முன்னிலையில் நீ
வாடியவர்க்கு வாழ்வளித்த போது
உன் ஈரம் கண்டு
சிலிர்த்துப் போவேன்!

என்
கையசைவில் நீ
கட்டுண்டு கிடந்த போது
உன் காதல் கண்டு
களித்திருந்தேன்!

எல்லாம் நேற்றுவரை…..

ஆம்!
இன்று மட்டும் வராதிருந்தால்
நாளை கூட நமக்கு
இனித்திருக்கும்!

ஆனால்
காலங்கள் காத்திருக்குமா
காதலர்க்காய்….?

மரபென்ற பெயரில்
காதலித்தவளை கட்டுமுன்
கல்யாணம் பேச
பெற்றவள் பின் நீ
அற்பமாய் வந்தபோது,
உன்
வீரம் சோரம் போனது
கண்டு கொண்டேன்!

வறுமைக்கு கொடிபிடித்து
வதங்கி நின்ற தந்தையிடம்
பட்டியலிட்ட அன்னைக்கு
பவ்வியமாய் நீ பணிந்த போது
உன்
ஈரம் கூட சேதமாவது
கண்டேன்!

காதலித்த கடனுக்கேனும்
உன்
கொள்விலை குறையென்று
கெஞ்சிய எனைவிடுத்து
அன்னை பார்த்து நீ அஞ்சிய போது
உன்
காதல் கூட சாதலாவது
உணர்ந்தேன்!

வேண்டாம்!

உன் உயரத்தை எட்ட
என்னால் முடியவில்லை...!

இவ்வளவிற்கு கொள்வனவு செய்ய
என் பொருளாதாரம் இடந்தரவில்லை!

ஆதலால்…
காத்திருக்கிறேன்,
பொருத்தமான வரன் வாங்க…!

தெரிந்தால் தெரிவியுங்கள்
எங்கேனும் தள்ளுபடியென்றால்……!!

RRaja
09-06-2008, 06:52 AM
மரபென்ற பெயரில்
காதலித்தவளை கட்டுமுன்
கல்யாணம் பேச
பெற்றவள் பின் நீ
அற்பமாய் வந்தபோது,
உன்
வீரம் சோரம் போனது
கண்டு கொண்டேன்!
காதலும் மரபுதான். எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்ட வரதட்சணை வைரஸ் தான் தொற்றாகி நிற்கிறது. சம்மதம் பெறுவது இருவரின் சாமர்த்தியம்.

உங்கள் கவிதை அருமை தீபன்.

சிவா.ஜி
09-06-2008, 06:56 AM
அம்மாவின் முந்தானைக்குள் பதுங்கும் வீரனின் தோலை உரித்து தொங்கவிட்டிருக்கிறீர்கள். உண்மையான வரிகள். விற்கப்படும் பொருளாய் சந்தைக்கு வரும் இப்படிப்பட்டவர்கள் காதல் என்ற சொல்லை உச்சரிக்ககூட தகுதியற்றவர்கள். நல்ல கவிதை. வாழ்த்துகள் தீபன்.

சுகந்தப்ரீதன்
09-06-2008, 08:40 AM
இதைத்தான் காதலிக்கும்போது ஒற்றை கண்ணால் பார்ப்பது.. கல்யாணம் பண்ணும்போது ரெட்டை கண்ணால் பார்ப்பது என்பதோ..?! கல்யாணத்திற்கு முன்பே சாயம் வெளுத்ததில் சந்தோசத்துடன் காத்திருக்கலாம் அவள்.. அவளுக்குரிய வரனை தத்தெடுக்கும் வரை..!!

நீண்ட நாளைக்கு பிறகு தீபனின் கவிதையை கண்டது மகிழ்ச்சியை தருகிறது..!! ஆரம்பத்தில் காதல் கவிதைப்போல் தோன்ற செய்து முடிவில் சமூக அக்கறையுடன் முடித்திருப்பது நன்றாக இருக்கிறது நண்பரே.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்..!!

பென்ஸ்
10-06-2008, 12:57 AM
தீபன்....
இது ஒரு அசாதாரணமான கவிதை....
உடைந்து போய் நிற்க்கும் ஒரு பெண்ணின் மன நிலையில் இருந்து அருமையாக வெளுத்து வாங்கிவிட்டீர்கள்...

இந்த கவிதையின் ரசிகனாக...

அருமை.. அருமை....

ஆனாலும்.... ஒரு சாதாரண பென்ஸாக இதை வாசிக்கும் போது,
அன்று..
அவன் அவனாக இருந்திருக்கிறான்...
நீயும் நீயாகவே இருந்திருக்கிறாய்...
அவனில் நீ கண்டது கொஞ்சமே...
இன்று...
இவர்கள் இவர்களாகவே இருக்கிறார்கள்...
இவர்களோடு நாமும் இருக்கிறோம்...
இப்போது, காதலை விட்டு, வேறு எல்லாம் பார்க்கிறாய்...

பல வருடங்களாகவே எங்கோ ஒரு நல்ல கவிதையில் மட்டும் ஒருவரி விமர்சனத்தில் விளாசிவிட்டும் செல்லும் ஆர்.ராஜாவை போலவே நானும் "சம்மதம் பெறுவது இருவரது சாமார்த்தியம், யாரையும் குறை சொல்ல தேவையில்லை" என்பது என் கருத்து....

வாழ்த்துகளுடன்...

சுபியின் ரெட்டைகண் பார்வை என்னை வெகுவாக கவர்ந்தது....

தீபன்
10-06-2008, 01:32 AM
காதலும் மரபுதான். எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்ட வரதட்சணை வைரஸ் தான் தொற்றாகி நிற்கிறது. சம்மதம் பெறுவது இருவரின் சாமர்த்தியம்.

உங்கள் கவிதை அருமை தீபன்.

நன்றி நண்பரெ உங்கள் விமர்சனத்திற்கு.

மிக இலகுவாக பெண்களின் பிரதான சிக்கலுக்கு தீர்வு சொல்லிவிட்டீர்கள். ஆண்கள் வரதட்சணையே வாங்க விருப்பமில்லாதவர்கள் மாதிரியும் அவர்களின் பெற்றோரின் கட்டாயத்தின் பெயரில்தானதற்கு உடன்படுவது மாதிரியுமான தோற்றப்பாடு உங்கள் கருத்தில் தொனிக்கிறது.

வரதட்சனையை அவமானமானதக கருதும் ஆண்களைவிட கவ்ரவமானதாக கருதும் ஆண்களே அதிகம். அப்படியே அவமானமானதாக உணர்பவர்களிலும்பலர் தாம் கேட்டால்தானே அந்த அவமானம், பெற்றவர்கள் கேட்டால் அது பெரியவங்க விசயமென காரணம் காட்டி கண்டு கொள்ளாதிருப்பவர்கள் பலர்.

இப்படி, சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் சுயனலமாய் சிந்திக்கையில் சம்மதம் பெறுவது இருவரின் சாமர்த்தியம் என்று எப்படி சொல்ல முடியும்...? எமது சமூகத்தை பொறுத்த வரை ஆண் மனது வைத்தால் போதும், வரதட்சிணை இல்லாமலே சம்மதம் வாங்கிவிடலாம்.

கோழைத்தனம் அல்லது சுயநலம் இந்த இரண்டிலொன்று இருக்கும் ஆண்கள் இருக்கும்வரை வரதட்சிணை பிரச்சினை தீரப்போவதில்லை.

தீபன்
10-06-2008, 01:41 AM
அம்மாவின் முந்தானைக்குள் பதுங்கும் வீரனின் தோலை உரித்து தொங்கவிட்டிருக்கிறீர்கள். உண்மையான வரிகள். விற்கப்படும் பொருளாய் சந்தைக்கு வரும் இப்படிப்பட்டவர்கள் காதல் என்ற சொல்லை உச்சரிக்ககூட தகுதியற்றவர்கள். நல்ல கவிதை. வாழ்த்துகள் தீபன்.
பாராட்டுக்களிற்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி சிவாண்ணா.


இதைத்தான் காதலிக்கும்போது ஒற்றை கண்ணால் பார்ப்பது.. கல்யாணம் பண்ணும்போது ரெட்டை கண்ணால் பார்ப்பது என்பதோ..?! கல்யாணத்திற்கு முன்பே சாயம் வெளுத்ததில் சந்தோசத்துடன் காத்திருக்கலாம் அவள்.. அவளுக்குரிய வரனை தத்தெடுக்கும் வரை..!!

நீண்ட நாளைக்கு பிறகு தீபனின் கவிதையை கண்டது மகிழ்ச்சியை தருகிறது..!! ஆரம்பத்தில் காதல் கவிதைப்போல் தோன்ற செய்து முடிவில் சமூக அக்கறையுடன் முடித்திருப்பது நன்றாக இருக்கிறது நண்பரே.. வாழ்த்துக்கள்..தொடருங்கள்..!!

காதலிக்கையில் ஒற்றைக் கண்ணால் பாப்பாங்களா... எனக்கு தெரிந்து எல்லோரும் ரெண்டு கண்ணும் பத்தாம எக்ஸ்ராவா எக்ஸ்-றே கண்ணோடயும் பாத்து காதலிச்சதாதான் அறிஞ்சிருக்கேன்.... :aetsch013:

உங்கள் வரவேற்புக்கு நன்றி நன்பரே. சீரில்லாத வாழ்க்கைமுறை... நிலையில்லாத வசிப்பிடங்கள்.... அதனாலே மன்றத்தோடு செலவிடும் மணித்துளிகள் குறைவாகவே உள்ளது... நேரம் வரும்போதெல்லாம் தொடர்கிறேன்... (அவ்வளவு லேசில உங்கள விட்டிடுவேனா...:sauer028: )

தீபன்
10-06-2008, 02:02 AM
தீபன்....
இந்த கவிதையின் ரசிகனாக...

அருமை.. அருமை....

ஆனாலும்.... ஒரு சாதாரண பென்ஸாக இதை வாசிக்கும் போது,
அன்று..
அவன் அவனாக இருந்திருக்கிறான்...
நீயும் நீயாகவே இருந்திருக்கிறாய்...
அவனில் நீ கண்டது கொஞ்சமே...
இன்று...
இவர்கள் இவர்களாகவே இருக்கிறார்கள்...
இவர்களோடு நாமும் இருக்கிறோம்...
இப்போது, காதலை விட்டு, வேறு எல்லாம் பார்க்கிறாய்...

பல வருடங்களாகவே எங்கோ ஒரு நல்ல கவிதையில் மட்டும் ஒருவரி விமர்சனத்தில் விளாசிவிட்டும் செல்லும் ஆர்.ராஜாவை போலவே நானும் "சம்மதம் பெறுவது இருவரது சாமார்த்தியம், யாரையும் குறை சொல்ல தேவையில்லை" என்பது என் கருத்து....

வாழ்த்துகளுடன்...

சுபியின் ரெட்டைகண் பார்வை என்னை வெகுவாக கவர்ந்தது....



பாராட்டுகளிற்கு நன்றி பென்ஸ்.

காதலிக்கும் போது எதையும் பார்க்காமல் காதலிக்கிறார்களென்பது தவறு... எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளைபற்றி தெரியாமலிருக்கும் வயதல்ல காதலிக்கும் வயது... (நீங்கள் சொல்வதுபோன்ற காதலை பற்றியும் நான் முன்னர் பருவக் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7586)எனும் தலைப்பில் எழுதியிருந்தேன்... அது வேறு. நீங்கள் சொல்லும் கருத்து அதற்குத்தான் பொருந்தும்.)

உண்மையான காதல் எல்லாவற்றையும் எதிர்பார்த்தே வரும். எதிர்கொள்ள முடியாதவர்கள் ஒதுங்கிக்கொள்ள திடமானவர்கள் சமூகத்தையும் குடும்பத்தையும் எதிர்த்தாவது தம் காதலில் வெல்வார்கள்.

என் கவிதையில் வரதட்சிணை பிரச்சினைக்கு காரணமாக பெற்றோர்களை நான் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டிருந்தால்தான் நண்பர் ராஜாவும் நீங்களும் சொன்னதுபோல இருவரின் சாமர்த்தியமும் தேவை சம்மதம் பெறெ என்பது சரியாகும்.

நான் குறிப்பிடுவது, காதலிக்கையில் நல்லவனாக தன்னை வெளிக்காட்டிக்கொண்டு திருமணமென்று வரும்போது காதலித்த பெண் எப்படியும் தன்னைத்தானெ கட்டவேண்டுமென்ற நமது சமூகத்தின் நிர்ப்பந்தம் தந்த துர்ப்பாக்கியமான வாய்ப்பை வசமாக பயன்படுத்தி வரதட்சிணையை பல்வேறு வழிகளில் பல வித முறைகளில் கேட்கும் ஆண்களை குற்றம்சாட்டியே எழுதியுள்ளேன்.

ஆதவா
19-06-2008, 11:42 AM
இறுதிவரிகளே கவிதையைத் தாங்கிப் பிடிக்கும் சொற்கள்.... வாழ்த்துகள்...

கவிதையை இவ்வளவுதூரம் இழுத்திருக்கவேண்டாம் தீபன்.

தீபன்
20-06-2008, 02:48 AM
இறுதிவரிகளே கவிதையைத் தாங்கிப் பிடிக்கும் சொற்கள்.... வாழ்த்துகள்...

கவிதையை இவ்வளவுதூரம் இழுத்திருக்கவேண்டாம் தீபன்.

என்ன பண்றது... ஒரு வரில எல்லாம் பதிவிடக்கூடாதிண்றாங்களே...!:icon_ush:

கல்யாண வீட்ல தாலி கட்றது மட்டும்தான் முக்கியம்... அதுக்காக அத மட்டும் பண்ணினா அது கல்யாணவீடு மாதிரி இருக்காதேன்னு நெனச்சன்... அதான்...!:sprachlos020:

தீபா
09-07-2008, 06:34 AM
நல்லதொரு கவிதை தீபன்.. சொல்ல வார்த்தையில்லை.

பூமகள்
09-07-2008, 06:54 AM
மிகச் சிறந்த சமூக விழிப்பான கவிதை,...!! இத்தனை நாள் பார்க்காமல் விட்டுவிட்டேனே...!! அனைவரின் விமர்சனமும் அருமை..
ஆர்.ராஜா அண்ணா சொன்னது நிதர்சனம்...
சுகந்தப்ரீதன் சொன்ன கருத்து முத்திரை..
பென்ஸ் அண்ணா சொன்னது... உத்தமம்..


இந்தப் பெண் போன்ற பலர் வாடினாலும்..
காதலித்த மனத்துக்காக..
பொன் பொருள் எல்லாம் கொடுத்து தன் வாழ்க்கையும் கொடுக்கும்
பெண்கள் என் கண் முன்னே இப்போது நிஜத்திலும்...!!

தீபன் அண்ணாவின் கூற்று மிகச் சரி... சில ஆண்களும்.. கவுரவுத்துக்காக வரதட்சணை பெற்றோர் கேட்கையில்.. அமைதியாகிவிடுவதுண்டு... ஏன்.. அவர்களே.. கேட்பதும் உண்டு...

நேரில் கண்ட நிஜம்..
கவிதையில் படிக்கையில்
உணர முடிகிறது..

பெண்ணின் மன வருத்தத்தினை
ஒரு பெண் கவிதாயினியை விட
ஆழமாய் படைத்தமைக்கு விசேட வாழ்த்துகள் தீபன் அண்ணா.

தொடர்ந்து இது போன்ற சாடல்கள் பல தாருங்கள்..!!
அப்போதேனும்.. திருந்தட்டும்.. மனங்கள்..!

மனமார்ந்த பாராட்டுகள் தீபன் அண்ணா.

தீபன்
09-07-2008, 03:01 PM
பெண்ணின் மன வருத்தத்தினை
ஒரு பெண் கவிதாயினியை விட
ஆழமாய் படைத்தமைக்கு விசேட வாழ்த்துகள் தீபன் அண்ணா.


பாராட்டுக்களிற்கு நன்றி பாசமலரே.
பெண்களின் அவலங்களை பெண்களைவிட ஆண்களே அதிகம் புரிந்துகொள்ள முடியுமென்பது எனது நிலைப்பாடு. காரணம் அந்த அவலங்களிற்கு பெரும்பான்மை காரணம் அவர்களல்ல என்பதுதான்!