PDA

View Full Version : வெந்நீர்



சிவா.ஜி
06-06-2008, 09:05 AM
"இந்த வருடம் குளிர் அதிகம்தானா அல்லது எனக்குத்தான் குளிரைத்தாங்கும் சக்தி குறைந்து வருகிறதா தெரியவில்லை. இந்தக்குளிரில் விடியற்காலையில் பச்சைத்தண்ணியில் குளிப்பது பெரும்பாடாக இருக்கிறது. ம்...என்ன செய்வது மருமகள் மகராசி வந்ததிலிருந்து கேஸ் அடுப்பில் வெந்நீர் வைக்கக்கூடாது என்று தடை போட்டுவிட்டாள். சிவகாமி இருந்தவரையிலாவது பரவாயில்லை. எங்கிருந்தாவது சுள்ளிகளைப் பொறுக்கிவந்து கொல்லையில் அடுப்புமூட்டி வெந்நீர் வைத்து கொடுத்துவிடுவாள். அவள் போனதிலிருந்து அந்த சுகமும் அவளோடே போய்விட்டது." மனதிற்குள் நினைத்துக்கொண்டு கையை ஊன்றி படுக்கையிலிருந்து எழுந்தார் சுந்தரம். வெந்நீர்க்குளியலை மிகவும் விரும்புவார். ஆனால் அது நின்று 5 வருடங்கள் ஆகிவிட்டது.


72 வயதாகிறது. அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு இப்போது ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கிறார். அந்த ஓய்வூதியம்தான் அவரை கொஞ்சமாவது காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. ஊதியம் வாங்கியதும் அதை அப்படியே கொண்டு வந்து மருமகளிடம் கொடுத்துவிட வேண்டும். அவளாகப் பார்த்து அவரது தேநீர் செலவுக்கு ஏதாவது தருவாள். கெட்ட பழக்கங்கள் ஏதுமில்லாததால் பெரிதாக ஏதும் செலவில்லை. காலையிலும், மாலையிலும் மட்டும் தெருவில் உள்ள டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டே தேநீர் அருந்துவது ஒன்றுதான் அவருக்கு கிடைக்கும் சந்தோஷமே. வீட்டில் ஆங்கில செய்தித்தாள்தான் வாங்குகிறார்கள். அவருக்கு தமிழில் படித்தால்தான் நிறைவாக இருக்கும். ஓய்வு பெறும்வரை மருமகள் கையால் காலையும் மாலையும் தேநீர் கிடைத்துக்கொண்டிருந்தது. பிறகு நின்றுவிட்டது. சிவகாமிக்கு அந்தப் பழக்கம் இல்லாததால் அவளுக்குப் பிரச்சனை இல்லாமலிருந்தது.


அதிகாலையிலேயே படுக்கையைவிட்டு எழுந்துவிடும் பழக்கத்தால் அந்தக் குளிரிலும் எழுந்து கொல்லைப் புறத்துக்குப் போய் குளியலறையின் குழாயைத்திறந்து அதனடியில் அப்படியே உட்கார்ந்துகொண்டார். ஆரம்பத்தில் வரும் அந்த வெதுவெதுப்பான நீரை வீணாக்க விருப்பமில்லாமல் அப்படி செய்வதை வழக்கமாக்கிக்கொண்டார்.


தான் கட்டிய வீட்டிலேயே ஒரு அகதியாய் வாழ்வது எத்தனைக் கொடுமையானது என்பதை ஒவ்வொருநாளும் அனுபவித்துக்கொண்டிருந்தார். அவருக்காக ஒதுக்கப்பட்ட அறை அவரால் பழைய சாமான்களைப் போட்டுவைக்க உபயோகப்படுத்தப்பட்டது. இன்று தானும் ஒரு பழைய பொருளாய் முடங்கிப்போயிருந்தார்.


மகனும் மருமகளும் இருக்கும் படுக்கையறைக்குள்ளேயே குளியலறை இருந்தது. தண்னீரைச் சூடாக்க மின்சார சாதனமும் இருந்தது. ஆனால் இவருக்குத்தான் அதனுள் நுழைய அனுமதி இல்லை. பாவம் மகனைக் குற்றம் சொல்லி புன்னியமில்லை. அவனும் தன் மனைவியின் காட்டுக்கத்தலுக்கு அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது. திருமணம் ஆகும் வரைதான் மகன் பெற்றோருக்குச் சொந்தம். மனைவி என்று ஒருத்தி வந்து விட்டால் அவளுடனான வாழ்க்கையை நிம்மதியாக வாழ அவளோடு ஒத்துப்போக வேண்டியிருக்கிறது.


நான் மட்டும் என்னவாம். சிவகாமி என் வாழ்க்கையில் வருவதற்கு முன் என் அம்மா சமையலைப் போல இந்த உலகத்தில் வேறு யாரும் சமைக்க முடியாது என்று ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், சிவகாமியின் கைப்பக்குவத்தை ருசித்த பிறகு அம்மா சமையலை மறந்துவிடவில்லையா? அவளுக்காகவே தன் பழக்கங்கள் எத்தனையோ விட்டுக்கொடுக்கவில்லையா? என் மகனும் அதைப்போலத்தானே. இருந்தாலும் சிவகாமியிடம் எனக்குக் கிடைத்த நிம்மதியான வாழ்க்கையைப் போல இவனுக்கு கிடைக்கவில்லையே....பாவம் அவன் மனதுக்குள் மறுகுவதை என்னாலும் உணர முடிகிறது. மனைவிக்குத் தெரியாமல் அவ்வப்போது செலவுக்கு ஏதாவது கொடுத்துக்கொண்டுதானேயிருக்கிறான். இப்படியெல்லாம் ஏதேதோ நினைத்துக்கொண்டே டீக்கடைக்கு கிளம்பினார்.


அன்று மகனும் அவர்கள் குடும்பமும் மருமகளின் சொந்தக்காரர் திருமண விசேஷத்துக்குக் கிளம்பினார்கள். இரவு தங்கிவிட்டு காலையில்தான் வருவதாக சொன்னதும் சுந்தரத்துக்கு உடனடியாகத் தோன்றியது "அப்பாடா நாளைக்காவது காலையில் வெந்நீர் சுடவைத்து ஆனந்தமாகக் குளிக்கலாம்" என்பதுதான். காலையில் கிடைக்கப்போகும் அந்த சுகத்துக்காக இரவிலிருந்தே அவர் உடல் ஏங்கத் தொடங்கியது. அனைவரும் கிளம்பிப்போனதும் தனியாக அந்த வீட்டிலிருந்த சுந்தரத்தை பழைய நினைவுகள் ஆக்ரமித்துக்கொண்டன.


சர்வ சுதந்திரத்துடன் அந்த வீட்டில் அவர் வசித்த நாட்களை நினைத்து ஒரு ஏக்கப் பெருமூச்சு அவரிடமிருந்து வெளிப்பட்டது. போகும்போது மறக்காமல் தங்கள் அறையை பூட்டிவிட்டுப் போயிருந்தாள் மருமகள். அந்த அறையைத் தவிர அனைத்து பகுதிகளையும் ஒவ்வொன்றாய் சுற்றி வந்தார். கதவுகளை ஆசையாய் தடவிக்கொடுத்தார். அவரும் சிவகாமியும் அமர்ந்த இடத்திலெல்லாம் அமர்ந்து பார்த்தார். மகன் சிறுபிள்ளையாய் இருந்தபோது அவனைத் தூங்கவைக்க கட்டிய தூளி இருந்த இடத்த ஆவலோடு பார்த்தார். இரவு நெடு நேரம் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தவர் எண்ணங்களின் அழுத்தத்தில் தன்னை மறந்து கண்ணயர்ந்துவிட்டார்.


வழக்கம்போல வெகு விடியலிலேயே விழிப்பு வந்துவிட்டது. மகனும் மகளும் வீட்டில் இல்லாததை சுத்தமாக மறந்தவராக கொல்லைப்புறம்போக முயன்றவர் வழியில் அவர்களின் அறையில் தொங்கும் பூட்டைப் பார்த்ததும்தான் அவர்கள் இல்லாததை உணர்ந்துகொண்டார். உடனே அவருடைய வெந்நீர் ஆசை உடம்பெங்கும் ஒரு பரபரப்பைத் தோற்றுவிக்க சமையல் கட்டுக்கு வேகமாகப் போனார். அங்கே மூலையில் வைக்கப்பட்டிருந்த அவருக்காக சிவகாமி வெந்நீர் வைத்து தரும் பாத்திரத்தை எடுத்து நன்றாக கழுவி, தண்ணீர் பிடித்து கேஸ் அடுப்பில் வைத்தார். நேரமாக ஆக தண்ணீரிலிருந்து கிளம்பும் ஆவியை சின்னக் குழந்தையைப்போல ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
நன்றாகக் கொதிக்கட்டுமென்று காத்திருந்தார். இன்று கிடைக்கப்போகும் இந்த வெந்நீர்க்குளியலுக்குப் பிறகு இனி எப்போது கிடைக்கப் போகிறதோ? அதனால் இன்றே ஆசைதீர சூடான நீரில் ஆனந்தமாகக்குளிக்கலாமென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தைத் தூக்கப் போகும்போது வாசல் மணி அடித்தது. விதிர் விதிர்த்துப்போய்விட்டார். வந்து விட்டார்களோ? அல்லது வேறு யாராவதா? மருமகளாய் இருந்தால் இன்று தன் கதி அதோகதிதான் என்ற நடுக்கத்துடனே சென்று கதவைத் திறந்தார். தன் மகனையும் மருமகளையும் பார்த்ததும் அவருக்கு சர்வநாடியும் அடங்கிவிட்டது.


அவர்கைகளில் தெரிந்த நடுக்கத்தைப் பார்த்ததும் அந்த மருமகள், ஏதோ தனக்குப் பிடிக்காததை செய்திருக்கிறது இந்த கிழம் என்று தெரிந்துகொண்டு, நேராக சமையலறைக்குத்தான் போனாள். சிறிது நேரத்தில் அவளுடைய கூக்குரலைக் கேட்டு மகன் என்னவோ ஏதோவென்று பதறிக்கொண்டு அங்கே போனான்.


அய்யோ அய்யோ...இந்த அநியாயத்தைப் பாத்தீங்களா? எப்படா இவ வெளியேப் போவான்னு காத்துக்கிட்டிருந்த மாதிரி உங்க அப்பா செஞ்சிருக்கிற காரியத்தைப் பாருங்க. கேஸ் விக்குற விலையில இவ்ளோ பெரிய பாத்திரத்துல தண்ணியை சூடு பண்ணியிருக்காரே? இந்த வயசுல சுகம் கேக்குதா இந்த கிழவருக்கு?
என்று தொடங்கி அவள் நடத்திய ருத்ர தாண்டவத்தில் மகனே ஆடிப்போய்விட்டான். பரிதாபமாக நிற்கும் அப்பாவைப் பார்த்து அவனுக்கு சங்கடமாக இருந்தாலும் எதுவும் செய்ய இயலாதவனாக பெட்டியைத் தூக்கிக் கொண்டு தன் அறைக்குப் போய் பூட்டைத் திறந்தான். அவனுடைய செய்கையைப் பார்த்ததும் இன்னும் ரௌத்திரமானவளாக...

இங்க ஒருத்தி ஆத்தமாட்டாம கத்திக்கிட்டிருக்கேன் எதுவுமே நடக்காதமாதிரி இப்படிப் போனா என்ன அர்த்தம். இந்த மனுஷனை நாலு கேள்வி கேக்க மாட்டீங்க...அப்பா பாசமா? அடடா எவ்ளோ பெரிய மனுஷன், இவரைப் போய் எப்படி கேக்கறதுன்னு இருக்கா? அந்த பெரிய மனுஷனுக்கு அறிவு வேணாம்? திருட்டுத்தனம் செஞ்சிட்டு எப்படி கல்லுளிமங்கனாட்டம் நிக்கறதைப் பாரு? சொரனைக் கெட்ட ஜென்மம்..............


சம்மட்டியாய் விழும் திட்டுக்களைத் தாங்க முடியாதவராக...சுந்தரம் கண்களில் நீர் கட்டிக்கொள்ள மெல்ல அங்கிருந்து நகர்ந்து கொல்லைப்புறத்துக்குப் போனார். குளியலறைக்குள் நுழைந்து கொண்டு கதவைத் தாளிட்டுவிட்டு குமுறிக் குமுறி அழுதார். சிவகாமியை நினைத்து அழுதார், தன் நிலையை நினைத்து அழுதார். ஒரு வெந்நீருக்கா இத்தனை திட்டுக்கள்? தாங்கமுடியாதவராக குலுங்கினார். ஒருவாறாக தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு குளித்துவிட்டு வந்தவர் உடனடியாக வெளியே புறப்பட்டுப் போய்விட்டார்.


வீட்டுக்குத் திரும்ப மனமில்லாமல் சிறிது தொலைவிலிருந்த பூங்காவுக்குப் போய் நிழலான மரத்தினடியில் படுத்துக்கொண்டார். அன்று மாலை வரை அங்கேயே இருந்துவிட்டு பாரமான மனதுடன் வீட்டுக்குத்திரும்பியவரை வரவேற்றது மருமகளின் இரண்டாவது சுற்று அர்ச்சனை.

"இன்னைக்கு ரேஷன் கடைக்குப் போகனும், பையனோட யூனிபார்ம் தைக்கக்குடுத்திருக்கிறதை வாங்கிட்டு வரனும்...எல்லாத்தையும் விட்டுட்டு இப்படி ஊர் சுத்திட்டு வந்தா எப்படி? இந்த வயசுல ஊர் சுத்தறது ரொம்ப அவசியமா?"

காதில் விழுந்த அவள் கத்தலைக் கேட்டுக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டார்.
அவருடைய இந்த செயல் அவளை இன்னும் கோபப்படுத்த சத்தம் அதிகரித்தது. கேட்பதற்கு யாருமில்லை என்றவுடன் தன் கத்தலை நிறுத்திவிட்டு முனகலோடு தன் அறைக்குப்போய்விட்டாள். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சுந்தரத்தின் மகன், கண்கள் கலங்க அமர்ந்திருந்தான். அந்த ராட்சசிக்குத் தெரியாமல் கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரை விரலால் சுண்டிவிட்டான்.


இரவு முழுவதும் மனம் சரியில்லாமல் தவித்தவன் காலை தன் தந்தை எழுவதற்குள் எழுந்து அவரைப் போய் சமாதானப் படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு அவருடைய அறைக்குப் போய்க் கதவை மெல்ல தட்டினான். இரவு இயற்கை உபாதைக்காக வெளியே போய்விட்டு வந்தவர் கதவைத் தாளிடாததால், அந்தக் கதவு திறந்துகொண்டதும் உள்ளே நுழைந்து அப்பாவை தட்டி எழுப்பினான். ஒரு சிறு அசைவுக்கே விழித்துவிடும் அவர், அவனுடைய தட்டலுக்கு எழவில்லை என்றதுமே ஏதோ விபரீதத்தை உணர்ந்தான். அவன் நினைத்ததைப் போலவே சுந்தரம் இறந்திருந்தார். அவமானத்தின் பாரத்தை தாங்க முடியாமல் அவருடைய இதயம் தன் துடிப்பை நிறுத்திக்கொண்டிருந்தது.


அதிர்ந்து போனவன் ”அப்பா...............” என்று பெருங்குரலெடுத்து கதறினான்.


நடுக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சுந்தரத்தின் உடலைச் சுற்றி உறவுகளும், சுற்றத்தாரும் அமர்ந்திருந்தார்கள். வழக்கம்போல இறந்தவரின் பெருமைகள் பேசப்பட்டன. அப்போது ஒரு உறவினர் சுந்தரத்தின் மகனிடம் சென்று "வர வேண்டியவங்க எல்லாம் வந்துட்டாங்க உடம்பை குளிப்பாட்டிடலாம்" என்று சொன்னதும் மெல்ல தன் மனைவியைப் பார்த்து "போய் வெந்நீர் வச்சுக் கொண்டு வா" என்றான். அந்த உறவினர் அவனிடம் "பச்சத்தண்ணியே போதும்ப்பா எதுக்கு வெந்நீரெல்லாம் என்றதும்,

ஆவேசமாய்..."இப்பவாச்சும் எங்கப்பா வெந்நீர்ல குளிக்கட்டுங்க...இந்த ராட்சசியால அவர் நிறைய வேதனைப் பட்டிருக்கார். அந்த வேதனையோட வலியெல்லாம், அவ கையாலையே வெக்குற வெந்நீர்ல குளிச்சு மறைஞ்சு போகட்டும்" என்று அவரிடம் சொன்னவன் திகைத்துப்போய் நிற்கும் தன் மனைவியைப் பார்த்து,


"என்னடி மரம்மாதிரி நிக்கற? போ போய் வெந்நீர் வெச்சு எடுத்துக்கிட்டு வா" என்றான்.

kavitha
06-06-2008, 09:38 AM
வெந்நீரை கண்களில் கொதிக்கவைத்து விட்டீர்கள் சிவா அண்ணா.
நல்ல கதை.

சம்சாரம் அது மின்சாரம் - படத்தில் விசு ரகுவரனைப்பார்த்து ஒரு வசனம் பேசுவார்.
பெற்றவர்களுக்கும், உடன்பிறந்தவர்களுக்கும் செய்வதற்கு கணக்குப்பார்க்கக்கூடாது என்று.
கமலா காமேஷ் -ம் "பத்து மாசம் தான் னு டாக்டர் கணக்கு சொன்னாங்க... அதிகமா ரெண்டு நாள் நீ இருந்தேங்கறதுக்காக இறக்கி வச்சிடலடா" னு...
சம்மட்டியால் அடிக்கிறா மாதிரி இருக்கும்.

இது போன்ற கதைகள் வளரும் தலைமுறைக்கு நிறைய தேவை அண்ணா. இன்னும் எழுதுங்கள்.

சிவா.ஜி
06-06-2008, 09:47 AM
சம்சாரம் அது மின்சாரம் படத்தின் உரையாடல் உண்மையாகவே ஒரு சம்மட்டி அடிதாம்மா. பிள்ளைகள் யோசிக்க வேண்டும்.

நல்ல பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றிம்மா கவிதா.

logini
06-06-2008, 10:07 AM
மகன் கடைசியாக செய்ததை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம். இருக்கும் போது செய்யாததை இறந்த பின் செய்து என்ன பிரயோசனம்?.
கதை அருமையாக இருக்கு படித்து முடிக்கும்போது மனசு கனத்திருச்சு.

அமரன்
06-06-2008, 10:35 AM
குடும்பம், வாழ்க்கை என்றாலே பலதும் பத்தும் இருக்கும். இந்தக் குடும்பக்கதையும் அப்படித்தான். எழுத்தாளரின் கருத்தை நேரடியாகச் சொல்லாமல் நிகழ்வு வலைகளை வி(ப)ரித்து வாசகர்களை விழவைக்கும் தந்திரோபாயம். வெற்றிகரமான ஃபோர்முலா. எனக்குப் பிடித்தமானதுங்கூட..

எங்கே தவறு.. மகனிடமா? "மரு"மகளிடமா? மரணத்தின் பின்னர் செய்ததை உயிருடன் இருக்கும்போது செய்திருந்தால் மருமகள் வீட்டை விட்டுப் போயிருப்பாளா?

அப்படிப்போனால், தகப்பனுக்காக கட்டியவளை கைவிட்டான் என்று அவன்மீது பழியா? மருமகளுக்கு அடங்காப்பிடாரிப் பட்டமா?

எப்படியானாலும், பிள்ளையின் சிதைந்த வாழ்க்கையை பார்த்தபடி வாழ எந்த பெற்றோருக்கு மனம் ஒப்பும். அந்த நிலையை பெத்தவங்களுக்குக் கொடுக்க விரும்பாத பிள்ளைகளும் உண்டு என்று சொல்கிறது "அந்த ராட்சசிக்குத் தெரியாமல் கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரை விரலால் சுண்டிவிட்டான்" என்ற வசனம். கடைசீல அவஞ்சொன்ன "என்னடி மரம்மாதிரி நிக்கற? போ போய் வெந்நீர் வெச்சு எடுத்துக்கிட்டு வா" கூட அதைத்தான் சொல்றது. (பிரிவு அவனை பேசவைத்ததோ????)


ஒருவாறாக தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு குளித்துவிட்டு வந்தவர் உடனடியாக வெளியே புறப்பட்டுப் போய்விட்டார்.
வீட்டுக்குத் திரும்ப மனமில்லாமல் சிறிது தொலைவிலிருந்த பூங்காவுக்குப் போய் நிழலான மரத்தினடியில் படுத்துக்கொண்டார்.

நிழலாக நினைத்துத்தான் சில பெத்தவர்கள் முதியோர் இல்லம் சேர்கின்றனரோ? மகன், மருமகள், முக்கியமாக பேரன் உறவு, நிழல் என அங்குமிங்குமாக அவர்கள் மனது அலைவது.. அப்பப்பா வேதனை..

இதுக்கு என்னதான் தீர்வு..

பாராட்டுகள் சிவா.

சிவா.ஜி
06-06-2008, 10:44 AM
மகன் கடைசியாக செய்ததை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம். இருக்கும் போது செய்யாததை இறந்த பின் செய்து என்ன பிரயோசனம்?.
கதை அருமையாக இருக்கு படித்து முடிக்கும்போது மனசு கனத்திருச்சு.
இதுதான் சகோதரி பிள்ளைகள் செய்யும் தவறு.அதாவது பலதையும் இறந்த பிறகு உணர்வது. இருக்கும்போது உணராத அந்த பலதை இறந்தபின் உணர்ந்து என்ன பயன்?

மிக்க நன்றி தங்கையே.

சிவா.ஜி
06-06-2008, 10:47 AM
நன்றி அமரன். தந்தையின் சோகம் அறிந்தும் அதை தக்க சமயத்தில் வெளிப்படுத்தாத மகன்கள் பரிதாபத்துக்குரியவர்களே.

மதி
06-06-2008, 10:56 AM
ஆழமான கருத்துள்ள கதை...
சிலருக்கு கண்கெட்ட பிறகு சூரிய நம்ஸ்காரம். அருகில் இருக்கையில் அதன் அருமை புரிவதில்லை. அதைப் போல் தான் சுந்தரம் மகன் நிலைமையும்.

இளைய தலைமுறையினருக்கு நல்ல பாடம். அருமையான கதைக்கும், தெளிவான கதையோட்டத்திற்கும் பாராட்டுக்கள் சிவாண்ணா..

பூமகள்
06-06-2008, 11:38 AM
கண்களில் கண்ணீர் திரை போட்டது... எப்படியாவது... ஓடிச் சென்று.. அவருக்கு சுடுநீர் வைச்சி கொடுத்துடலாமான்னு மனம் துடித்தது... :traurig001::traurig001:

சிறந்த படைப்பு.. மனம் தொட்டுவிட்டது சிவா அண்ணா.:icon_b::icon_b:(நானும் தான் இருக்கேனே..:icon_ush::icon_ush:ஒரு கதை கூட இந்த அளவுக்கு அழகா எழுத தெரியல...!!:frown::frown:)

நிஜத்தில் பார்க்கும் பல சங்கடங்களை ஒரு உதாரணத்தில் கதையை நகர்த்தி அசத்திட்டீங்க சிவா அண்ணா..!! இளையோருக்கு மட்டுமல்ல.. பெற்றோரைக் கவனிக்கத் தவறிய அனைவருக்குமே நல்ல பாடம்...:icon_rollout:

வழக்கம் போலவே மிகுந்த பாராட்டுகள்..!:icon_b::icon_b:

மனத்தில் பாரத்தை ஏற்படுத்திவிட்டது.. இப்படியான பெண்மணிகளை நினைத்து கோபமும்.. கையில் கிடைத்தால் தோய்த்து எடுத்துவிடும் ஆத்திரமும் வருகிறது...:sauer028::sauer028:

மாமனாரை அப்பாவாக பார்த்தாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.. இன்றும் பல வீடுகளில்.... "அப்பா" என்று அழைக்கும் மருமகள்களைப் பார்த்திருக்கிறேன். :)

அமரன்
06-06-2008, 11:57 AM
மனத்தில் பாரத்தை ஏற்படுத்திவிட்டது.. இப்படியான பெண்மணிகளை நினைத்து கோபமும்.. கையில் கிடைத்தால் தோய்த்து எடுத்துவிடும் ஆத்திரமும் வருகிறது...:sauer028::sauer028:


அவள்மேல்தான் தப்பு அவன் மேலல்ல என்கிறீங்களா

செல்வா
06-06-2008, 12:16 PM
அவள்மேல்தான் தப்பு அவன் மேலல்ல என்கிறீங்களா

இத இத இதத்தான் எதிர்பார்த்தன்.... ஆரம்பிங்கப்பா... ;)

அமரன்
06-06-2008, 12:17 PM
இத இத இதத்தான் எதிர்பார்த்தன்.... ஆரம்பிங்கப்பா... ;)
சந்தோசத்தைப் பாரு..:rolleyes:

பூமகள்
06-06-2008, 12:59 PM
அவள்மேல்தான் தப்பு அவன் மேலல்ல என்கிறீங்களா
தவறை ஒரு பக்கம் மட்டும் அவசரமாக பார்ப்பதாக எழுதியது என் பிழை தான்.. மன்னிக்கவும்...

இக்கதையில் மருமகள் ஏன் மகளாக நடந்து கொள்ளவில்லை?? எவை அவளை இப்படி மாற்றியது??

மகன் ஏன் தன் மனைவியை எதுவுமே சொல்லவில்லை.. இறந்த பின் இரக்கம் ஏன்??

எங்கே தவறிருக்கிறது என்று ஆராயலாம் வாங்க..

முதலில் பெண்ணை எடுத்துக்கொள்வோம்..

அப்படி வெறுப்போடு நடந்து கொள்ள சில காரணங்கள்..

1. ஒருவேளை காதல் திருமணமாக இருக்கலாம்.. அதனால் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள்.. வஞ்சம் தீர்க்க வெறுப்பை உமிழ்ந்திருக்கலாம்.
2. இயல்பு
3. சுயநலம் - தன் கணவர், தன் குழந்தை தான் என்ற குறுகிய வட்டம்
4. ஆதிக்க மனப்பான்மை.. எங்கிருப்பினும் தன் பேச்சு தான் எடுபட வேண்டுமென்ற ஆதிக்க குணம்..

இன்னும் விவாதிப்போம்.. அடுத்தது யார்...??
மகன்...!!

பாரதி
06-06-2008, 01:57 PM
அன்பு சிவா,
உங்கள் கதை முன்பு மன்றத்தில் படித்த பூவின் கதையொன்றை நினைவு படுத்துகிறது. சுந்தரத்தின் பார்வையில் தொடங்கிய கதை மகனின் ஆவேசத்தில் முடிகிறது. பலரின் பார்வையில் மிகவும் சிறியதாக தோன்றும் விடயங்கள் சிலருக்கு மிகப்பெரிதாக தோற்றம் தரும். மனங்களை சரியாக புரியாத வரை பிரச்சினைகள் தொடரத்தான் செய்யும். படிப்பினை தரும் கதை தந்ததற்கு பாராட்டு சிவா.

அன்புரசிகன்
06-06-2008, 02:37 PM
படிக்கும் போதே கண்கலங்குதே சிவா... அனுபவித்தால்.... முடியல... சுந்தரம் போன்ற பொறுமை சாலிகளுக்குப்பிறந்த பிள்ளைகளும் பொறுமை காத்தது தான் மிக கொடுமை....

சொந்த நாட்டில் நொந்த அகதியின் நிலை... மிக பொருத்தமான உவமானம் சிவா... பாராட்டுக்கள்....

அன்புரசிகன்
06-06-2008, 02:47 PM
1. ஒருவேளை காதல் திருமணமாக இருக்கலாம்.. அதனால் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள்.. வஞ்சம் தீர்க்க வெறுப்பை உமிழ்ந்திருக்கலாம்.
2. இயல்பு
3. சுயநலம் - தன் கணவர், தன் குழந்தை தான் என்ற குறுகிய வட்டம்
4. ஆதிக்க மனப்பான்மை.. எங்கிருப்பினும் தன் பேச்சு தான் எடுபட வேண்டுமென்ற ஆதிக்க குணம்..

1. காதல் திருமணமாக இருந்தால் வஞ்சம் தீர்ப்பதற்கு அவரது முதுமை தகுந்த இடமல்ல. இன்று போய் போர்க்கு நாளை வா என்பதற்கு தான் சிறப்பு... எதிரி வலிமையாக இருக்கும் போது தான் உங்களுக்கு கிடைக்கும் வெற்றியில் உங்கள் திறமை காணப்படும். தவிர காதல் அவர்களுக்கு அன்பை தான் புகட்டியிருக்கவேண்டுமே தலிர வன்மையை அல்ல...

2. இயல்பு... இயல்பாக இருப்பதற்கு முதலில் அவர் மனிதனாக இருக்கவேண்டும். மனிதனாக இல்லாத பட்சத்தில் இயல்பு என்பது இல்லையே...

3. சுயநலம். மன்னிக்க வேண்டும். இந்த கதையின் பிரகாரம் சுயநலமே இல்லை. இது கொலைக்குற்றவாளியை கையாளுவதிலும் கேவலம்.

4. ஆதிக்க குணம். இருக்கலாம். அதனையே தகுந்த வழிமுறைகளில் கையாளலாம். இந்த மருமகள் கையாண்டது மிருகத்தனமான சர்வாதிகாரம்.



தவறை ஒரு பக்கம் மட்டும் அவசரமாக பார்ப்பதாக எழுதியது என் பிழை தான்.. மன்னிக்கவும்...

இக்கதையில் மருமகள் ஏன் மகளாக நடந்து கொள்ளவில்லை?? எவை அவளை இப்படி மாற்றியது??

மகன் ஏன் தன் மனைவியை எதுவுமே சொல்லவில்லை.. இறந்த பின் இரக்கம் ஏன்??


என்னைப்பொறுத்தவரை பிழைகளின் பெரும்பான்மை முதலாவது மகனில். மனைவியை மதிப்பது தான் சரி. மனைவியின் மகுடிக்கு நடனமாடுவது அல்ல... தந்தை இறந்த பின் அவளிடம் வெந்நீர் கேட்ட திடத்தின் 10 வீதமாவது முன்னர் வந்திருந்தால் தந்தை இறந்திருக்கமாட்டார். இது ஒரு கொலைக்கு ஒப்பானது. மனோரீதியான ஒரு கொலை... அப்படியே எனக்கு தெரிகிறது.

ஆதவா
06-06-2008, 02:58 PM
அருமை அருமை... நீண்ட நாட்களுக்குப் பிறகு மன்றத்தில் படித்த முதல்கதையே மிகவும் பிரம்மாதமாய்


மாமியார் மருமகள் கொடுமைகளில் மறந்து போவது மருமகன்/மகன்/மகள் அல்லது மாமனாரின் நிலைகள்.. மாமியார் இல்லாவிடில் மருமகள் ஆட்சி. பெண்ணாதிக்கம் குடும்பத்தில் தலைதூக்க, பரிதாபத்திற்குரியவர்கள் ஆண்களே!


கதையின் போக்கு.... நினைவுகளாக ஆரம்பித்து கதைசொல்லியாக இடையில் வந்து நிகழ்வாக முடிகிறது. அப்பாவின் மனத்தை மிக அருகிருந்து ஒரு பரிதாபத்திற்குரிய மகனால் பார்க்க முடியும். வெந்நீர் பிரச்சனைகள் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்.


ஒட்டுமொத்தமாக படித்தால் "மாண்புமிகு வரதட்சனை" ஐ நினைவுபடுத்துகிறது கதை.. இரண்டுக்குமான முடிவு கிட்டத்தட்ட ஒன்றேதான்.


கவிதா, நல்ல எடுத்துக் காட்டு,


அமரன், நல்ல விமர்சனம்.

சிவா.ஜி
06-06-2008, 04:56 PM
பூ....இது அவளுடைய தவறு மட்டுமல்ல. சரியான நேரத்தில் தட்டிக் கேட்காத மகனின் தவறும்தான். இந்த தவறை செய்த என் அண்ணனை, அவரின் பழுதுபட்ட வாழ்க்கையைப் பார்த்தவன் நான். பெண்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல. ஆனால் இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை மறுக்க முடியாது.

நேற்று வெந்நீர் என்று யாரோ சொன்னபோது திடீரென்று தோன்றிய கரு இது. நேரில் பார்த்த சிலதையும் இணைத்து எழுதினேன். உன்னாலும் முடியும்மா. உன் எழுத்தின் ஆழம் எனக்குத் தெரியும். இன்னும் அனுபவம் ஏற்படும்போது உன்னாலும் முடியும்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிம்மா.

சிவா.ஜி
06-06-2008, 05:25 PM
அன்பு சிவா,
உங்கள் கதை முன்பு மன்றத்தில் படித்த பூவின் கதையொன்றை நினைவு படுத்துகிறது. சுந்தரத்தின் பார்வையில் தொடங்கிய கதை மகனின் ஆவேசத்தில் முடிகிறது. பலரின் பார்வையில் மிகவும் சிறியதாக தோன்றும் விடயங்கள் சிலருக்கு மிகப்பெரிதாக தோற்றம் தரும். மனங்களை சரியாக புரியாத வரை பிரச்சினைகள் தொடரத்தான் செய்யும். படிப்பினை தரும் கதை தந்ததற்கு பாராட்டு சிவா.

நன்றி பாரதி. மகன்களின் இயலாமையைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேரில் பார்த்ததால் அதன் தாக்கத்தை உணரமுடிகிறது. அதற்காக அனைத்து பெண்களையும் குற்றம் சொல்ல முடியாது பூமகள் சொன்னதைப் போல மாமனாரை அப்பாவாக நினைக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்.

மகன்கள் மகனாக நடக்க முயற்சித்தாலே போதும். இப்படிப்பட்ட அவலங்கள் குறையும்.

அமரன்
06-06-2008, 05:27 PM
ஆக, மருமகள்மீதும் மகன்மீதும் தவறு என்கிறீர்கள்.. அவர்கள் தவறுகளுக்குக் காரணம் அல்லது காரணங்கள் எவையாக இருக்கலாம்? அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது? .

சிவா...
புகுந்த வீட்டை எந்த முகாந்திரமும் இல்லாமல் பகையாளிகளின் பாசறையாக நினைப்பவர்களையும், சிற்சில விட்டுக்கொடுப்புகளை இருசாராரும் செய்து வாழ்வாங்கு வாழ்வோரையும் எங்கள் குடும்பத்திலும், ஆணாதிக்க அயல்குடும்பங்களையும் கண்டு குழம்பியுள்ளேன். அதற்கான கரணியங்களை அறியும் நோக்கில்த்தான் இந்தக்கேள்விகள்.

கதையின் திசை திருப்பும் கேள்விகளெனில் இப்படியே விட்டு விடுவோம்

பூமகள்
06-06-2008, 05:55 PM
மிக நல்ல கதைக் கரு அமைந்திருக்கிறது சிவா அண்ணா.. இது பற்றிய மேற்கொண்ட விவாதங்கள் நிச்சயம் பல நல்ல உள்ளங்களை உருவாக்கும் என்று நம்புகிறேன்..:icon_ush:

ஆகவே.. உங்களின் அனுமதி கிடைத்தால் இன்னும் ஆழமாக..விசாலமாக... விவாதிக்கலாம்.. கூடவே.. எல்லார் மனங்களையும் அவ்வகையில் விசாலமாக்கிய பெருமையும் கொள்ளலாம்.. என்பது எனது வேண்டுகோள். :icon_rollout:

சிவா.ஜி
06-06-2008, 05:58 PM
ஆக, மருமகள்மீதும் மகன்மீதும் தவறு என்கிறீர்கள்.. அவர்கள் தவறுகளுக்குக் காரணம் அல்லது காரணங்கள் எவையாக இருக்கலாம்? அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது? .

சிவா...
புகுந்த வீட்டை எந்த முகாந்திரமும் இல்லாமல் பகையாளிகளின் பாசறையாக நினைப்பவர்களையும், சிற்சில விட்டுக்கொடுப்புகளை இருசாராரும் செய்து வாழ்வாங்கு வாழ்வோரையும் எங்கள் குடும்பத்திலும், ஆணாதிக்க அயல்குடும்பங்களையும் கண்டு குழம்பியுள்ளேன். அதற்கான கரணியங்களை அறியும் நோக்கில்த்தான் இந்தக்கேள்விகள்.

கதையின் திசை திருப்பும் கேள்விகளெனில் இப்படியே விட்டு விடுவோம்

கதை என்பது வெறுமனே படித்துவிட்டு போவதற்காக அல்ல. அதனால் இந்த கேள்வி கண்டிப்பாய் திசை திருப்பும் கேள்வியல்ல.

எனக்கும் இன்றுவரை புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம் மருமகள்களின் புகுந்த வீட்டு வெறுப்புதான். காரணமே இல்லாமல் மாமியாரையும், மாமனரையும் ஏன் வெறுக்கிறார்கள்? ஆராய்ச்சியாளர்கள் ஆராய வேண்டிய விஷயம் இது.

சிவா.ஜி
06-06-2008, 06:02 PM
மிக நல்ல கதைக் கரு அமைந்திருக்கிறது சிவா அண்ணா.. இது பற்றிய மேற்கொண்ட விவாதங்கள் நிச்சயம் பல நல்ல உள்ளங்களை உருவாக்கும் என்று நம்புகிறேன்..:icon_ush:

ஆகவே.. உங்களின் அனுமதி கிடைத்தால் இன்னும் ஆழமாக..விசாலமாக... விவாதிக்கலாம்.. கூடவே.. எல்லார் மனங்களையும் அவ்வகையில் விசாலமாக்கிய பெருமையும் கொள்ளலாம்.. என்பது எனது வேண்டுகோள். :icon_rollout:

என்னம்மா இது. என்னைப்பற்றி தெரிந்துமா இந்த கேள்வி? அனுமதி தேவையா? விசாலமாக விவாதிக்கலாமே. பலருக்கும் பயனாக இருக்கும்.

மன்றத்தின் பெருமைகளில் இதுவும் ஒன்று. எனக்கென்ன என போகாமல், சமுதாயத்திற்காக சிந்திக்கும் உள்ளங்கள். பெருமைப் படுகிறேன்.

பூமகள்
06-06-2008, 06:12 PM
மன்னியுங்கள் அண்ணா....!! :icon_03::icon_03:
தங்கையாயினும் அண்ணன் அனுமதியோடு தான் செய்யும் செல்லப் பிள்ளையல்லவா...??!! ;)

மிக்க நன்றிகள் அண்ணா... தாராளமாக இனி விவாதிப்போம். :)

கண்மணி
06-06-2008, 07:59 PM
பட்டினியில்
செத்த அப்பனுக்கு
திதி கொடுத்தான்
மகன்

மன்றத்தில படிச்ச ஒரு கவிதை.. இங்கே உயிரோவியமாக எழுந்து நிக்குது.

வாழ்த்துக்கள் சிவாஜி..

ஆமாம் அதுக்கு பின்னாடி அந்த மகன் குளிக்க வெந்நீர் கிடைச்சதோ?

நியாயமான கவலையுடன்

இங்கே கதையாக

செல்வா
07-06-2008, 06:50 AM
எனக்கும் இன்றுவரை புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம் மருமகள்களின் புகுந்த வீட்டு வெறுப்புதான். காரணமே இல்லாமல் மாமியாரையும், மாமனரையும் ஏன் வெறுக்கிறார்கள்? ஆராய்ச்சியாளர்கள் ஆராய வேண்டிய விஷயம் இது.
அப்படியும் சொல்லிவிட முடியாது அண்ணா.... காரணமில்லாமல் யாரும் யாரையும் வெறுக்க மாட்டார்கள். புகுந்த வீடு போவதற்கு முன்பே... பிறந்த வீட்டில் சொல்லிக்கொடுக்கும் தாய் தந்தையர்களாக இருக்கலாம்.
அல்லது சிறுவயதில் எதிர் வீட்டில் பக்கத்து வீடுகளில் நடக்கும் பிரச்சனைகளைப் பார்த்து மனதிற்குள் மாமியார்கள் என்றாலே ஒருவித கசப்பு ஏற்பட்டிருக்கும்.
ஊடகங்கள் பூதாகரமாக்கிக் காட்டும் குடும்பப் பிரச்சனைகளால் பாதிக்கப் பட்டிருக்கலாம்.
இல்லை என்றால் கல்யாணத்திற்குப் பின் கணவன் தன்னைவிட தாயிடமே பாசமாக இருப்பதாக எண்ணலாம்...
இப்படி பல பல காரணங்கள் இருக்கின்றன.
ஒரு மாமியாருக்கும். அதுவரை தனது மகன் அவனது சம்பாத்தியம் அவர்களுடைய சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டிருப்பர்...
புதிதாக ஒருத்தி வந்து மகனுடன் இணையும் போது... எங்கே மகன் தன்னை விட்டுப் போய்விடுவானோ...
வயதான காலத்தில் நாதி இல்லாமல் போய்விடுமோ என பல எண்ணங்கள். மேற்கூறிய அனைத்துக் காரணங்களும் இவர்களுக்கும் பொருந்தும்....

சரி இந்த கதைக்கு வருவோம்.... இந்த கதையைப் பொறுத்த வரை நான் முதல் குற்றவாளியாக மகனைத்தான் சொல்லுவேன்...
எப்படி என்றால்... தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது மகனின் கடமை. அவன் கடமை தவறியவனாகத்தான் நான் காண்கிறேன். சரி ஐயா... எரிவாயு பயன்படுத்துவது செலவு அதிகம் என்றால் அவன் மனைவிக்குப் புரியவைத்திருக்க வேண்டும். தன் வாழ்நாள் முழுக்க தன்னை காப்பாற்றிய தந்தைக்கு தான் இதுகூட செய்யாவிட்டால் மகனென்று இருந்து என்ன பயன் என்று. அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும் அவள் தந்தை இந்நிலையிலிருக்க அவன் தடுத்தால் அவள் பொறுத்திருப்பாளோ என?
அப்படி அவனால் சொல்ல இயலவில்லை என்றாலும் அவனிடம் தவறு இருக்கிறது. ஆரம்பத்திலேயே மனைவியை மேலேபோக விட்டுவிட்டான். அல்லது இவன் தவறு ஏதோ செய்து அவளிடம் மாட்டிக்கொண்டிருப்பான்.
சரி இப்படி இருந்தாலும்... எரிவாயுவில் தான் வெந்நீர் வைக்க முடியுமா என்ன? அவன் நினைத்திருந்தால் விறகு வாங்கி கொடுக்கலாமே. அவன் வெந்நீர் வைக்க வேண்டிய அவசியமில்லை.
விறகு வாங்கிக் கொடுத்திருந்தால் அவரே வெந்நீர் வைத்துக் குளித்திருப்பாரே....
பிரச்சனைகளை நினைத்து அழுது கொண்டிராமல் தீர்வு என்ன என்று சிந்தித்தால் ஒரு வழி அல்ல பல வழிகள் தென்படும். என்ன உணர்ச்சிகளை அடக்கி மூளையை உபயோகப் படுத்த வேண்டும்.

ரொம்ப நாளக்கி அப்புறம் இப்படி துருபிடிச்சிருந்த என்னோட மூளைய உபயோகப்படுத்த வச்ச சிவா அண்ணாக்கு நன்றிகள் :D

அமரன்
07-06-2008, 09:13 AM
அப்படியும் சொல்லிவிட முடியாது அண்ணா.... காரணமில்லாமல் யாரும் யாரையும் வெறுக்க மாட்டார்கள்.


இந்த அப்பாக்களால் எத்தனை டாச்சர். அன்பாக பேசுவது குறைவு.. அதிகாரத்தோரணை.. அதிக கெடுபிடி.. மகனிடம் பனிப்போர்... எக்ஸெக்ரா... எக்ஸெக்ரா.... அதை எல்லாம் நினைவில் வைத்து பாசவிழையில் நெய்த சட்டையை கசக்குவதே மகன்களுக்கு வேலையாகப் போயிட்டுது..

செல்வா
07-06-2008, 09:17 AM
இந்த அப்பாக்களால் எத்தனை டாச்சர். அன்பாக பேசுவது குறைவு.. அதிகாரத்தோரணை.. அதிக கெடுபிடி.. மகனிடம் பனிப்போர்... எக்ஸெக்ரா... எக்ஸெக்ரா.... அதை எல்லாம் நினைவில் வைத்து பாசவிழையில் நெய்த சட்டையை கசக்குவதே மகன்களுக்கு வேலையாகப் போயிட்டுது..
அத்தனை வெறுப்பு நிறைந்த மகனின் கண்கள் அவர் நிலை கண்டு நீரை வடித்தது ஏனோ...

அமரன்
07-06-2008, 09:29 AM
அத்தனை வெறுப்பு நிறைந்த மகனின் கண்கள் அவர் நிலை கண்டு நீரை வடித்தது ஏனோ...

நீர் வடித்த கண்கள், தகப்பனின் துடிப்பைக் கண்டு துடிச்சிருக்கு. (தானாடாவிட்டாலும் தசை ஆடிருக்கு..:))

ஆனால் கண்டத்தை மனதுக்கு அனுப்பல.. மனது துடிக்கல.. மனைவிக்கு எதுவும் சொல்லலை.. (அவந்தான் தப்புச் செய்து மாட்டிக்கிட்டானே..:rolleyes:)சொன்னால்தானே அவளுக்குத் தெரியும். கண்கள் ஏன் அனுப்பலை???? (அப்பனின் அராஜகத்தை கண்டது அந்தக்கண்கள்தானோ)

என்ன செய்வது? சில அவயங்கள் சில நேரங்களில் இச்சையின்றி இயங்குதசைகளாகின்றன..

அமரன்
07-06-2008, 10:48 AM
இங்கே எத்தனை கருத்துக்கள்.. அதிலும் ஒருபக்கச் சாடல் கருத்துகள் அதிகம். இருபக்கப் பார்வை குறைவு. மூன்றாவது கோணம் மிகக்குறைவு.. பிரச்சினைகள் என்று வரும்போதும் நாம் அப்படித்தான்..

இரண்டுபக்கமும் காரணங்கள் இருக்கும். அவற்றுள் ஞாயங்களும் இருக்கும். அவற்றை அலசி வேரை கண்டறிந்து அறுக்க எத்தனை பேர் முயல்கிறோம்? என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்.

செல்வா
07-06-2008, 11:11 AM
நீர் வடித்த கண்கள், தகப்பனின் துடிப்பைக் கண்டு துடிச்சிருக்கு. (தானாடாவிட்டாலும் தசை ஆடிருக்கு..:))
ஆனால் கண்டத்தை மனதுக்கு அனுப்பல.. மனது துடிக்கல..
மனது துடிக்காமல் எப்படி ஐயா கண்ணீர் வரும் முரணாகத் தெரியவில்லையா?
அந்த கண்ணீருக்கு இரண்டு பொருள்....
ஒன்று தன் தந்தையின் நிலை கண்டு வந்த கண்ணீர்.....
இரண்டு ஏதும் செய்ய இயலா சுயகழிவிரக்கம்.....

அத்தனை வெறுப்புடையவன் இறந்த பின் மட்டும் இப்போதாவது வெந்நீரில் குளிக்கட்டும் என்று சொல்வானா? வார்த்தைகளை உன்னிப்பாகப் பாருங்கள்.....
இந்த கதை சுட்டும் அடிப்படையில் என் மனதில் தைப்பது...
முதல் தவறாக மகன்
இரண்டாவதாக மருமகள் மட்டுமே...
மூன்றாவதாக ?? எனக்குத் தெரியவில்லை...
ஏனென்றால் அந்த வயதிலும் அவர் வீட்டிற்குத் தேவையான அவரால் இயன்ற வேலைகளை செய்து கொண்டு வந்திருக்கிறார். குழந்தையை அழைப்பதிலிருந்து கடைகளுக்குச் செல்வது வரை.
தனது மனைவியுடன் நல்ல புரிதலுடன் வாழ்ந்த கணவராகத்தான் அவர் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். நீங்கள் சுட்டும் அளவு வெறுப்பு வரும்படி அவரின் நடத்தை இருக்காது எனும்படியே கதை படிக்கப் பட்டுள்ளதாகக எனக்குப் படுகிறது. கதையின் தாக்குதல்... முழுக்க மருமகளிடமே இருக்கிறது. மகனை பரிதாபத்திற்குரியவனாகவே சித்தரிக்கிறது. ஆனால் என் பார்வைக்கு மகன் தான் தாக்கப் படவேண்டியவனாகத் தெரிகின்றான்.
காரணம் ஆசிரியர் அனுபவத்திலிருந்து எழுதுகிறார்... நான் அறிவிலிருந்து சொல்கிறேன்.

அமரன்
07-06-2008, 11:19 AM
"தூசு" விழுந்து உறுத்தி இருக்கும்.


. நீங்கள் சுட்டும் அளவு வெறுப்பு வரும்படி அவரின் நடத்தை இருக்காது
என் முதல் பின்னூட்டத்தைப் பாருங்கள். நடத்தை எதுக்காக இழுக்கப்பட்டது என்பது புரியும்,

அவன் சொல்லாமைக்கு அவன் ஏதோ தப்புச் செய்து மாட்டிக்கிட்டான்னு சொன்னீங்க.. நெகட்டிவ்வா பாத்திருக்கீங்க... புரிய வைக்க முயன்று தோற்றும் இருக்கலாம் அல்லவா? அதுவே பொண்ணு ஏனப்படி நடந்திருக்குன்னு சொன்ன காரணங்கள்?? பொசிட்டிவ்வான பார்வை.

இப்படியான ஆண்பக்கச்சார்பு/பெண்பக்கச்சார்பு பார்வைகள் சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்றன. நீங்கள் சொன்ன மூன்றாவது காரணம், என் பார்வையில் முதன்மைக் காரணங்களில் ஒன்று..

பெண்ணின் மனநிலைக்கு நீங்கள் சொன்ன சொந்தவீடு,அயல்வீடு, எதிர்வீடு,ஊடகங்கள் எல்லாம் சமுதாயத்தின் அங்கங்கள்தானே.

மனைவியை மேலே விட்டு விட்டான்.. கொஞ்சம் விளக்கமாக சொல்லு செல்வா..

செல்வா
08-06-2008, 07:20 AM
புரிய வைக்க முயன்று தோற்றும் இருக்கலாம் அல்லவா?

புரியவைக்க முயன்று தோற்று இருந்தால் அதற்குப்பின் எதற்காக அவள் செய்வாள் என்று எதிர்பார்க்க வேண்டும். அதற்குரிய தீர்வாகத்தான் நான் விறகு வாங்கிக் கொடுப்பதைச் சொன்னேன்.... அதை விட்டு விட்டீர்களே..



நீங்கள் சொன்ன மூன்றாவது காரணம், என் பார்வையில் முதன்மைக் காரணங்களில் ஒன்று..

கொஞ்சம் விளக்கமாக வார்த்தைச் சிக்கனம் இல்லாமல் சொல்லுங்களேன் :D


மனைவியை மேலே விட்டு விட்டான்.. கொஞ்சம் விளக்கமாக சொல்லு செல்வா..
பணியழைக்கிறது வந்து சொல்கிறேன்... இதே பதிவில்...

SivaS
09-06-2008, 08:27 AM
தற்கால உண்மை நிலை..
இப்படி எனக்கு ஒரு மனைவி அமைந்தால் நானே பெற்றோரின்
தெவைகலை நிரைவேற்ற முயற்சி செய்வேன்
ஏதோ கடவுள் விட்ட வழி

இளசு
12-07-2008, 06:58 PM
அன்பு சிவா

இன்றுதான் வாசிக்க அமைந்தது..

கவீயும் அமரனும் நெஞ்சில் தைக்கும் வண்ணம் சொல்லிவிட்டார்கள்.

(கவீ இதை ''கவர்ந்த சினிமா வசனங்கள்'' திரியிலும் பதிக்க வேண்டுகோள்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=1998)
----------------------------------------

கதையைப் பற்றி -

நெஞ்சில் தைக்கும் நிதர்சன நெருஞ்சி முள்..

வலிக்கிறது... தவறு என்பதால் - இல்லை என்றாகாது..

இருக்கிறது இவ்வகை நிலைகள் ..எங்கெங்கும்!

தவறு - ? யார் மீது?

யார் மீதும் தவறில்லை..
எல்லார் மீதும் தவறு..

இரண்டுமே சரி..

இரண்டும் சரியானாலும்
இவ்வகை நிகழ்வுகள் சரியாகா!

என்ன நிவாரணம்?
என்ன தீர்வு?
என்ன தடுப்பு?

குமைய வைத்த கதை!

கொந்தளிக்கும் உணர்வே பாராட்டாய்!


( சுஜாதா கதையில் கோட்டு சூட்டு போட்டு மகனைப் பார்க்க ஆசைப்பட்ட தாய் இறுதியில் அமெரிக்காவில் கொல்லப்பட்டு சவப்பெட்டியில் அக்கோலத்தைப் பார்க்கும் அதே அவல உச்சம் இக்கதையில்... )

mukilan
12-07-2008, 08:27 PM
முதுமையில் ஏராளமானோர் எதிர் நோக்கும் பிரச்சினையைக் கருவாகக் கொண்டு அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள். என்னதான் மனைவி இப்படி இருந்தாலும், தன் தந்தை மீது உண்மையிலேயே பாசம் கொண்ட சுந்தரத்தின் மகன் வாய்மூடி மெளனிக்க வேண்டிய அவசியம்..... என்பது விளங்கமுடியாத, விளங்க வைக்க முடியாத புதிர்தான்.
இன்றைக்கு நாம் நமது பெற்றோர்களுக்குச் செய்வதை நமது பிள்ளைகள் கவனித்து நாளை நமக்குச் செய்யும்பொழுதுதான் ஞானம் வர வேண்டுமா என்ன? பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்து ஓய்வில் இருக்கும் முதியோர்கட்கு அன்பும் ஆதரவும் தேவை என்பதை அனைவரும் நினைவு கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திய கதை. பாராட்டுக்கள் அண்ணா.

--------
பாரதி அண்ணா சொல்லி இருப்பது போல் பூ அவர்கள் ஜானு என்ற பெயரில் பாசம் கொண்ட மகன் - தந்தை- மனைவி ஜானு என்ற பாத்திரங்களோடு ஒரு கதை படைத்திருந்தார்.

சிவா.ஜி
13-07-2008, 04:08 AM
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் முகிலன். பிள்ளைகளுக்கு பெற்றோர்தான் நல்லது கெட்டதைக் கற்றுக்கொடுக்கும் ஆசான். இன்று அவர்கள் செய்வதை நாளை பிள்ளைகள் செய்வார்கள்.

இதில் மனைவியின் காட்டுக்கத்தலுக்கு பயந்தே மகன் மௌனமாக இருக்கிறான். என்ன செய்வது. வயது மூப்பு சிலருக்கு வரம், சிலருக்கு சாபம். நன்றி முகிலன்.

சிவா.ஜி
15-07-2008, 07:42 PM
தற்கால உண்மை நிலை..
இப்படி எனக்கு ஒரு மனைவி அமைந்தால் நானே பெற்றோரின்
தெவைகலை நிரைவேற்ற முயற்சி செய்வேன்
ஏதோ கடவுள் விட்ட வழி

அன்புத்தம்பியின் பெற்றோர் பாசமறிந்து நெகிழ்கிறேன். அப்படியோர் மனைவி அமைந்தால்.......என்ற சந்தேகமே இல்லாமல்.....மனமறிந்த மனைவியமைய வாழ்த்துகள் சிவா.

கடவுள் உங்களுக்கு விடும் வழி நல்லதாய் இருக்கும். நல்ல மகனாய் நீங்கள் விளங்கி.....வெந்நீர் விரும்பியும் கிடைக்கா விரக்திநிலையடைய பெற்றோரை விட்டுவிட மாட்டீர்களென நிச்சயம் நம்புகிறேன்.

நன்றி தம்பி.

சிவா.ஜி
15-07-2008, 08:40 PM
அடுத்தடுத்து வந்த அலசல் ஆற்றில் பரிசலாய் பயணப்பட்டுவிட்டதில்.....பாசத்தம்பிகள் மதி, அன்புரசிகன் மற்றும் ஆதவாவின் பின்னூட்ட பரிசில்களை ஏற்கத்தவறியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

பின்னூட்ட உற்சாக ஊட்டத்துக்கு நன்றிகள் பல தம்பிகளே.

ஓவியா
16-07-2008, 10:52 PM
அண்ணா,
உங்கள் கதையை படித்து எனக்கு கண்ணில் வெந்நீர்தான் கொட்டியது.

ஆனாலும் அந்த மகன் போல் பல கல்லுலிமங்கன்'ஸ் இருக்கிறார்கள்.

தன்னை பெற்ற தெய்வங்களுக்கு சாதாரண அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொடுக்காத பிள்ளைகள் இருந்து என்ன பயன்.

என்னதான் பொண்டாட்டிதாசனாக இருந்தாலும் வாயை திறந்து பேச வேண்டிய இடத்தில் ஆண்கள் பேசியே ஆக வேண்டும்.

கதையிலில் வருவது போல் கண்கெட்டப்பின் சூரிய நமஷ்காரம் பண்ணுவது கோழைத்தனம்.

எப்பொழுதும் நான் கடவுளிடம் வேண்டும் வரத்தில் ஒன்று 'என் மாமா மாமியை நன்கு உபசரித்து காக்கவேண்டும்' என்று :)

சிவா.ஜி
17-07-2008, 04:18 AM
அன்புத் தங்கையின் பாச உள்ளம் கண்டு மகிழ்கிறேன். தன் சுயநலத்துக்காக வரம் கேட்பவர்களிடையில், மாமனார்,, மாமியாரை நன்கு உபசரிக்கும் நல்ல மனம் எப்போதும் இருக்க வேண்டும் என வரம் கேட்பதை நினைத்து பூரிப்படைகிறேன்.

நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும். இன்னொரு அன்னை, தந்தையாக அவர்கள் உங்களுக்கு அமைவார்கள் தங்கையே. நன்றி ஓவியா.

ஓவியா
17-07-2008, 09:17 AM
அன்புத் தங்கையின் பாச உள்ளம் கண்டு மகிழ்கிறேன். தன் சுயநலத்துக்காக வரம் கேட்பவர்களிடையில், மாமனார்,, மாமியாரை நன்கு உபசரிக்கும் நல்ல மனம் எப்போதும் இருக்க வேண்டும் என வரம் கேட்பதை நினைத்து பூரிப்படைகிறேன்.

நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும். இன்னொரு அன்னை, தந்தையாக அவர்கள் உங்களுக்கு அமைவார்கள் தங்கையே. நன்றி ஓவியா.

நன்றி அண்ணா.

ஆனாலும் மருமகள் மேல் உள்ள கோபா ஆவேசத்தில் பின்னூட்டம் போட்டதால் உங்களை பாராட்ட மறந்துட்டேன். :D

சிறந்த கதையார்சிரியர்கள் வருசையில் உங்களையும் சேர்த்து விட்டோம். கதை பிரமாதம். வாழ்த்துக்கள்.

MURALINITHISH
30-08-2008, 10:12 AM
சில இடங்களில் இப்படி சில இடங்களில் மருமகளின் நியாமன ஆசைகளுக்கு கூட தடை விதிக்கும் முதியோர்கள் மனதில் கனத்தோடு கதையை வாசித்தேன் நமக்கு இந்த நிலை நாளை வருமோ என்ற பயத்தோடு