PDA

View Full Version : ப்ரத்யேகம், ப்ரதானம், நிதானம், நிதர்சனம்



ஆதி
06-06-2008, 07:44 AM
சன் செய்திகளில் மிகுந்து அடிபடும் சொற்களில் இந்த ப்ரத்யேகம் 'தனித்தன்மை'க்காக செய்திகளில் அடிக்கடி வாசித்தலின் போது வருகிறது. இந்த சொல்லுக்கு மாற்றுச் சொல்லே இல்லையா ? என்று சிந்தனை செய்து பார்த்தேன். ப்ரத்யேக ஆடை, ப்ரத்யேக தயாரிப்பு என்றெல்லாம் சொல்கிறார்கள். அத்தகைய ஆடைகள், தயாரிப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்ததாம்.

சிறப்பு என்ற சொல்லிற்கு பதில் ப்ரத்யேகம் என்ற சொல் வழங்கப்படுகிறது. சிறப்பில் 'சிறப்பு' இல்லை என்று சன் செய்தியாளர்களுக்கு மட்டும் தெரிகிறது போலும் என்று நினைத்துக் கொண்டேன். சிறப்பை சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால் தனிச்சிறப்பு என்று மிகச்சிறப்பாக சொல்லலாம். ஒற்றைச் சொல்லாக (vocabulary) செல்லவேண்டுமென்றால் 'தனிப்பட்ட' அல்லது 'தனித்துவ' என்றும் ப்ரத்தியோகத்திற்கு மாற்றாக சொல்லமுடியும்.

சிங்கையில் ப்ரதானவிழா என்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ் தொலைக்காட்சியான வசந்தம் சென்டரலில் நடத்துகிறார்கள். முதன்மைக்கு முதன்மைத்துவம் கொடுக்காமல் போனது முதன்மையின் பொருள் புரியாததாலா என்று மிகவும் வியப்பாக இருந்தது. முதன்மையென்றால் எல்லாவற்றையும் விட மிகச்சிறப்பானது என்ற பொருளில் தான் செங்கிருதச் சொல்லான ப்ரதானமும் வழங்கப்படுகிறது. ப்ரதானம் என்று தமிழில் ஒற்றெழுத்துக்களை (மெய்யெழுத்து) முன் வைத்து எழுதுவதில்லை 'பிரதானம்' பிரத்தியேகம் என்று தான் எழுதுகிறோம். பயன்படுத்த பொருள் பொதிந்த சொற்கள் தமிழ் குவியலில் இருக்கிறது. அதுவும் கண்ணில் அகப்படும் வகையில் இருக்கிறது. ஒப்புமைத்துப் பார்த்து சரியான சொல்லை பயன்படுத்துவதில் சற்று சோம்பலாக ... பிறமொழிச் சொற்களை தமிழ்'படுத்தி' அந்த இடத்தில் பொருத்தி வருகிறோம்.

'நிதானமே ப்ரதானம்' என்று தெலுங்கில் பழமொழி சொல்லுவார்கள். இதற்கு பொருள் தமிழர்களுக்கும் நன்கு தெரியும். 'நிதானம்' இழக்கக் கூடாது என்று நினைத்து பொறுமை குறித்து சொல்லும் போது 'பொறுமை' இல்லாது, 'பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு' என்று அதை எதோ ஒரு எல்லைக்குள் எங்கேயோ நிறுத்திவிட்டு அறிவுரை சொல்லும் போது எல்லையற்று நிதானமே ப்ரதானமாக வருகிறது.

பொறுமையின் சிகரம் என அடைமொழிச் சொற்களும், பொறுமையுடையோர் பெருமை அடைவர் என்ற பழமொழி பத்தி (வாக்கியம்) பொறுமைக்கு பெருமை சேர்க்கின்றன. பொறுமைக்கு முதன்மைதரலாம் பொருளில் தொய்வு இல்லை, சுவையிலும் குறைவில்லை.

'நிதர்சனமான உண்மை' என்று உண்மையை அறுதியிட்டுச் சொல்ல அவ்வப்போது 'நிதர்சனம்' 'அப்பட்டமி'ன்றி அப்பட்டமாக பயன்படுகிறது. நிதர்சனமும் அப்பட்டமும் ஒரே பொருள் என்பது அப்பட்டமான உண்மை.

-குமரன்
கூடல்

ஆதவா
06-06-2008, 09:38 AM
சரிதான் ஆதி.. நாம்தான் வந்தாரை வாழவைக்கும் தமிழர்களாயிற்றே! ப்ரதான் ஐ பிரதானம் ஆக்கி பிரதானமாக தமிழ் வங்கி சேமிக்கிறதே!.. இப்படியெல்லாம் நாம் கணக்குப் பார்த்தால் நம்மால் தமிழ் பேச முடியாது.....

நாம் பேசும் தமிழ் சொக்கத் தங்கம் போன்று சுத்தத் தமிழில்லை. அப்படி சுத்தம் ஆக்கும் எண்ணம் தமிழருக்கும் இல்லை.........

அமரன்
06-06-2008, 09:41 AM
நல்லாத்தான் இருக்கு தமிழ் 'விளக்கம்'. கொஞ்சம் வில்லங்கமான விளக்கம். கடைபிடித்தால் நன்று. எல்லாரும் சேர்ந்து கடைபிடித்தால் மிகவும் நன்று. சொல்றது போய் சேரவேண்டுமன்றோ. ஊடகங்கள் உழைக்கவேண்டும்.

அமரன்
06-06-2008, 09:49 AM
நாம் பேசும் தமிழ் சொக்கத் தங்கம் போன்று சுத்தத் தமிழில்லை. அப்படி சுத்தம் ஆக்கும் எண்ணம் தமிழருக்கும் இல்லை.........
அப்படிச் சொல்ல இயலாது ஆதவா! மிகக்குறைந்தளவு தமிழருக்கு இந்த எண்ணம் உள்ளது. தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்தும் ஆரம்பச்சிக்கலை உடைத்துவிட்டால் எண்ணம் கிளைபரப்பி பயன்பாடு அதிகமாகும்.

தமிழ்ச்சேதிக் கோணத்திற்காக மட்டும் : ஈழத்தில் புலிகள் அமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், புலங்களில் சேவையாற்றும் பெரும்பான்மை ஊடகங்களில், தமிழகத்தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சியில் தனித்தமிழாட்சி நடக்கிறது.

சிக்கல்: வீட்டில் பேசும் தமிழையும் ஊடகத்தமிழையும் போட்டுக் குழப்பும் இளையோர்.

ஆதவா
06-06-2008, 09:57 AM
அப்படிச் சொல்ல இயலாது ஆதவா! மிகக்குறைந்தளவு தமிழருக்கு இந்த எண்ணம் உள்ளது. தமிழ்ச்சொற்களை அறிமுகப்படுத்தும் ஆரம்பச்சிக்கலை உடைத்துவிட்டால் எண்ணம் கிளைபரப்பி பயன்பாடு அதிகமாகும்.

தமிழ்ச்சேதிக் கோணத்திற்காக மட்டும் : ஈழத்தில் புலிகள் அமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில், புலங்களில் சேவையாற்றும் பெரும்பான்மை ஊடகங்களில், தமிழகத்தொலைக்காட்சியான மக்கள் தொலைக்காட்சியில் தனித்தமிழாட்சி நடக்கிறது.

சிக்கல்: வீட்டில் பேசும் தமிழையும் ஊடகத்தமிழையும் போட்டுக் குழப்பும் இளையோர்.

வாய்ப்பில்லை.. ஒரு பிறமொழிச் சொல்லைத் தமிழ்படுத்துதலினால் அச்சொல் பிறமொழியைக் காட்டிலும் தமிழில் கடினமாகவே அமைகிறது. இதற்குப் பல உதாரணங்களை வழங்க முடியும்.. எல்லாம் அறிந்த ஒரு பெரும் தமிழரிடம் முழுக்க முழுக்க தமிழினால் ஆன விண்டோஸ் ஐக் கொடுத்தால் விபரம் புரியும்..

ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்பதைப் போல, நம்மைப் போன்ற தமிழ் ஆர்வலர்களேனும் தமிழ் உபயோகப்படுத்தலை மிகுதிப் படுத்தி பிறமொழியினைத் தவிர்க்க முயற்சிக்கலாம். ஆனால், செந்தமிழும் சேறுந்தமிழும் மிகுதியாக கலந்து இருப்பதால் நமக்கு கன்னித்தமிழைக் கண்டுபிடிக்க நேரம் பிடிக்கும்..

அமரன்
06-06-2008, 10:04 AM
நடைமுறை சிக்கலுண்டு... கன்னித்தமிழ் பாவனையும், கலப்புத்தமிழ்ப்பாவனையும் இடத்தைப்பொறுத்து அமையும். பழமை பேசிக்கொண்டும் இருக்க இயலாது.. பழமையை முழுமையாக விட்டுவிடவும் இயலாது.. பழமை கலக்காத புதுமை உலகில் இருக்க நிகழ்தகவு குறைவு. :)