PDA

View Full Version : கள்ளும் நானும்.....



தங்கவேல்
30-05-2008, 02:20 AM
இந்தக் கள் இருக்கே.... அதன் சுவையும் போதையும் ஒரு அலாதியான விஷயம்.

சின்ன வயதில் எங்க வீட்டு வேலைக்காரர் அம்மாவிடம் என்னை தோப்புக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு கிடைத்த பின்பு, மாட்டு வண்டியில் பயணம் செய்தோம். தோப்பில் 20 தென்னை மரங்களும், 30 பலா மரங்களும் இடையிடையே கொய்யா மரங்களும் இருக்கும். வடக்குப் பக்கமாக ஒரு அகன்ற கேணி ஒன்றும் உண்டு. அதில் மாடுகளைக் கட்டி ஏற்றம் இறைக்க ஆரம்பித்தார் ஜெயராஜ். பெரிய அகன்ற பாத்திரம் போல ஒரு தொட்டியினை கிணற்றுக்குள் இறக்கி தண்ணீரை நிறைத்து அதை மேலே இழுத்து அடிப்புறம் பிளாஸ்டிக் டியூப்பினை கயிற்றால் இழுத்தால் தண்ணீர் வாய்க்காலில் கொட்டி அப்படியே சென்று நிலக்கடலை பயிறுக்குள் பாயும். பார்க்க பார்க்க பரவசமாய் இருக்கும். வாய்க்காலின் மேல் உட்கார்ந்து கொண்டு அந்த தண்ணியில் கையை வைத்தால் சிலீரென்று இருக்கும். அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும்.

அப்போது தென்னையில் கள் இறக்க ஆள் ஒருத்தர் வந்தார். ஜெயராஜ் ஓடிப்போய் ஒரு மரத்துக் கள்ளினை வாங்கி வந்து,
” இதைக் குடிடா “ என்று சொல்ல நான் மறுத்தேன்.
”அம்மா அடிக்கும் “
” உடம்புக்கு நல்லதுடா தங்கம். கொஞ்சமா குடி “
“ வேணாம் ஜெயராசு... ”
“ அம்மாட்டே நான் சொல்லுறேன். நீ குடிச்சுப்பாரு “
தயக்கத்துடன் கள்ளை வாங்கி வாயருகில் கொண்டு செல்ல புளிச்ச வாடை அடிக்க, முகத்தை சுளித்தேன்.
“ ஒன்னும் பண்ணாது. குடி ... “ என்று மீண்டும் சொல்ல

கண்ணை மூடிக்கொண்டு அரை லிட்டர் அளவுக்கு குடித்து வைத்தேன். கள்ளைக் குடித்ததும் முன்பே வாங்கி வைத்திருந்த இட்லியும், காரச் சட்டினி, தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து பிரித்து வைத்தார். காரச் சட்டினியுடன் இட்லி தேவாமிர்தமாக இருக்க, சுவைத்து ரசித்து சாப்பிட்டேன். பச்சை வாழை இலையில் சிவப்பாய் காரச்சட்டினி, வெள்ளை கலரில் இட்லி மஞ்சள் கலரில் சாம்பார் என்று அந்தக் கலர் காம்பினேஷனே பார்க்க நவீன ஓவியம் போல இருக்கும்.

பலா மரத்தடியில் வைக்கோலை போட்டு துண்டு விரித்து வைத்து இருந்தார். அதில் சென்று படுத்தேன். ஆரம்பித்தது சோதனை...
போதை.. தலை சுற்ற என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை. பக்கத்து தோட்டத்தில் இருந்த தக்காளிச் செடியில் பழுத்து இருந்த தக்காளிப் பழங்களை பறித்தும், வெண்டை, கத்தரிக்காய்களை பிடிங்கி எறிந்தும் ரகளை பண்ணியிருக்கிறேன். ஏதோ செய்து ஜெயராசு என்னை படுக்க வைத்தார் போலும். தூங்கிவிட்டேன்.

மாலையில் அம்மாவிடம் பக்கத்து தோட்டக்காரர் விஷயத்தை போட்டு உடைக்க, அம்மாவின் தம்பியான மாமாவின் பிரம்படி ஒன்று கிடைத்தது. தாத்தாதான் தடுத்தார் மேலும் பிரம்படி கிடைக்காமல். ஜெயராசுக்கு திட்டு விழுந்தது.

ஆனால் அந்தக் கள்ளு சுவையாகத்தான் இருந்தது.....

Narathar
30-05-2008, 03:23 AM
இதுவும் ஒருவகை "சிறுவர் துஷ்பிரயோகம் தானே? " நாராயணா!!!!!

ஓவியன்
30-05-2008, 03:41 AM
உடன் கள்ளு சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் நல்லதாமே...??? :D

logini
30-05-2008, 05:08 AM
ஆனாலும் சின்ன வயதில் கள்ளு குடிப்பது தப்புதானே தங்கவேலண்ணா???

தாமரை
30-05-2008, 06:12 AM
உடன் கள்ளு சுவையாக இருப்பதுடன் உடலுக்கும் நல்லதாமே...??? :D

நல்லது என்பது தகவல். நல்லதாமே என்பது வதந்தி..

கள்ளை வடிகட்டும் போது பார்த்திருக்கிறீர்களா ஓவியன்.

தென்னைக் குருத்தினை சீவினால் பால் சொட்டுச் சொட்டாக வடியும், அந்தப் பாலை ஒரு சின்ன முட்டியின்(கலயம், சிறு பானை) வாயில் வெள்ளைத்துணிப் போட்டுச் சேகரிப்பார்கள். (சிறிய பானை)

ஒரு நாள் முழுவதும் இறங்கியப் பால் இதில் இருக்கும்.

இந்தப் பாலை அடுத்த நாள் கலயத்தில் இருந்து மறுபடி வடிகட்டிக் குடிக்க உபயோகிப்பார்கள்.

வெள்ளைத்துணியில் வண்டுகள், சிறுபூச்சிகள் முதல் நட்டுவாக்கழி என்னும் தேள்வகைகளும் இருக்கும். மிகச் சிறிய பூச்சிகள் துணியில் தங்காமல் கள்ளின் உள்ளே இறங்கி இருக்கும். அவற்றை காலையில் வடிகட்டிப் பிரிப்பார்கள்.

கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். புளிப்பாகவும் இருக்கும்.

கள்ளில் சுண்ணாம்பு சேர்ப்பதால் கள் வெள்ளை நிறத்தில் இருந்து தெளியும். இதைத் தெளுவு, பதநீர் எனச் சொல்வார்கள். இது கள்ளின் புளிப்புத் தன்மையைக் குறைத்து இனிப்புச் சுவையைத் தரும். போதை அளவு குறையும்.

கள்ளில் சர்க்கரைச் சத்து மிக அதிகம். கொழுப்புச் சத்தும் உண்டு.

கள் உடலுக்கு நல்லது என்பது செவி வழிச் செய்தி. கள் குடிப்போர் உடலுழைப்பாளராய் இல்லாத பட்சத்தில் கள் கெடுதியானது.

கள் காலை வேளையில் அருந்தி விட்டு, உழைக்க வேண்டும். குடித்து விட்டுப் படுத்து விடுதல் கெடுதியானது.

அமரன்
30-05-2008, 07:50 AM
அண்ணா...

எங்கூரில் கருப்பணி என்று ஒன்று உள்ளது. முட்டி கட்டும்போதே சுண்ணாம்பு சேர்ப்பார்கள். அதனால நொதித்தல் தடைப்பட்டு வெறிக்காதென்பார்கள். வெக்கை வருத்தங்களுக்கு உகந்ததாம். நீங்கள் சொன்னது போல உழைப்பு இல்லாவிட்டால் உடம்புபோட்டு கொழுப்புக் கூடி பக்கவிளைவுகள் ஏற்படும் என்று சொல்வார்கள்.

இன்னும் சிலர் வெப்புநோய்வாய்ப்பட்டிருக்கும்போது, கள்ளையும் குடிப்பார்கள்..

நல்ல "சுவை"யான சம்பவம் தங்கவேல். பகிர்ந்தமைக்கு நன்றி.

விகடன்
30-05-2008, 07:51 AM
உடம்புக்கு குளிர்மையென்று சின்னமுத்து வந்தபோது அம்மா தந்திருக்கிறார். அதுவும் ஒரு கிளாஸ்த்தான்.

ஆக, கேள்விப்பட்டதன்படி கள்ளு குளிர்மையானது, அளவோடு இருந்தால் உடல் நலத்திற்கும் கேடிருக்காது :D

lolluvathiyar
30-05-2008, 08:21 AM
இதுவும் ஒருவகை "சிறுவர் துஷ்பிரயோகம் தானே?

இல்லை இது துஸ்பிரயோகம் இல்லை. அப்படி பார்த்தால் அடம்பிடிக்கும் குழன்தைக்கு சாப்பாடு ஊட்டுவதும் கூட துஸ்பிரயோகம்.


உடலுக்கும் நல்லதாமே.

சந்தேகமே இல்லை உடலுக்கு நல்லது. எந்த கெட்டதும் இல்லை.


ஆனாலும் சின்ன வயதில் கள்ளு குடிப்பது தப்புதானே

கெட்ட செயல் என்த வயசிலும் செய்தாலும் கெட்டதுதான். ஆனால் கள்ளு குடிப்பது என்பது கெட்ட செயல் அல்ல அதனால் எந்த வயதிலும் குடிக்கலாம். சின்ன வயதில் குடித்திரு ந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நிரைந்திருக்கும்.


கள் உடலுக்கு நல்லது என்பது செவி வழிச் செய்தி. கள் குடிப்போர் உடலுழைப்பாளராய் இல்லாத பட்சத்தில் கள் கெடுதியானது.

அது செவி வழி செய்தியல்ல, காலம் காலமாக அனுபவபூர்வமாக உனர்ந்த அறிந்த உன்மை. உடலுழைப்பாளராய் இல்லாத பட்சத்தில் அரசி சோறும் கூட கெடுதலானதுதான்.

கள் குடித்து கொன்டிரு ந்த காலத்தில் ஆஸ்பத்திரிக்கு அவசியமே இல்லாமல் இருந்தது. ஆனால் கள் இறக்குபவர்கள் எல்லாம் வலிமை இல்லாத ஏழை விவசாயிகள். குடிப்பவர்களும் ஏழை உழைப்பாளிகள்.
பெரிய மதுபான நிறுவனங்களுக்கு லாபம் சம்பாரிக்க இதை அநியாமாக தடை செய்து விட்டார்கள்.

தாமரை
30-05-2008, 10:05 AM
அப்படின்னு சொல்ல முடியாது வாத்யாரே ரெகுலரா கள்ளு குடிச்ச எங்க மாமன்களுக்கு பக்கவாதம், பிளட் பிரஸர், ஆஸ்துமா போல பல வியாதிகள் ஐம்பது வயசுக்குள்ளயே வந்து கஷ்டப்படறாங்களே!!!

அமரன்
30-05-2008, 12:38 PM
தென்னங்கள்ளு பக்கவாதத்தை தரும்.. பனங்கள்ளு தராது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

Narathar
30-05-2008, 12:58 PM
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள்... இங்கு கள்ளு கெட்டதா என்று ஒரு விவாதம்.........

அன்பர்களே.. அபின் அபின் என்று ஒன்றை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அதுவும் ஒருவகை மருந்துதான் உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. ஆனால் அதை ஒரு அளவுக்கு மேல் எடுத்தால் போதை... அதுபோலத்தான் கள்ளும். என்ன இது அதை விட கொஞ்சம் வீரியம் குறைவு.

அப்படிப்பார்த்தால் அந்தக்காலத்திலிருந்தே எங்க "அப்புத்தா" வெற்றிலை போடுறா அவவுக்கு இப்ப வயது தொன்னூறு அவ திடமாக வாழ்வதற்கு அவ போடுற வெற்றிலைதான் காரணம் என்று சொல்வீர்கள் போல? அப்படியும் இங்கு சிலர் சொல்லலாம்

மேளுள்ளவர்களின் வாதங்களை பார்க்கும் போது கள்ளு உடலுக்கு ரொம்ப நல்லது என்பதுபோல் ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்லதாகவே நான் நினைக்கின்றேன்......

எங்களூர்காரர் பாடிய "கள்ளுக்கடை பக்கம் போகாதே,
காலை பிடித்து கெஞ்சுகின்றேன்" பாடலை உங்கள் முன்னாள் முதல்வர் MGR அவர்கள் தனது தேர்தல் பிரசாரத்திற்கே பயன் படுத்தினார்..? ஏன் அதனால் விளையும் கேட்டை உணர்த்ததான்.

சின்ன வயதிலிருந்தே நம் வாழ்வில் ஒரு விடயம் ஒன்றினைந்து இருக்கின்றது என்பதற்காக அது நல்லது என்பதோ...

அதை குடிப்பவர்கள் தங்களைக்காப்பற்ரிக்கொள்ள சொல்லிக்கொள்ளும் காரணங்களை விட...

மூன்றாவது மனிதனாக இருந்து அதிலுள்ள நன்மை திம்மைகளை சீர் தூக்கிப்பார்த்தால் புரியும் கள்ளின் சீர்கேட்டை

அமரன்
30-05-2008, 01:09 PM
நாரதரே..
கள்ளாதரவுக் கட்சியில் ஒருபோதும் இருக்கமாட்டேன்.
கள்ளு உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை புறந்தள்ளி,
கள்ளுண்டவர்களால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் எடுத்தால் கள்ளு விசந்தான்.

Narathar
30-05-2008, 01:15 PM
தயக்கத்துடன் கள்ளை வாங்கி வாயருகில் கொண்டு செல்ல புளிச்ச வாடை அடிக்க, முகத்தை சுளித்தேன்.
“ ஒன்னும் பண்ணாது. குடி ... “ என்று மீண்டும் சொல்ல

கண்ணை மூடிக்கொண்டு அரை லிட்டர் அளவுக்கு குடித்து வைத்தேன். கள்ளைக் குடித்ததும் முன்பே வாங்கி வைத்திருந்த இட்லியும், காரச் சட்டினி, தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து பிரித்து வைத்தார். காரச் சட்டினியுடன் இட்லி தேவாமிர்தமாக இருக்க, சுவைத்து ரசித்து சாப்பிட்டேன். பச்சை வாழை இலையில் சிவப்பாய் காரச்சட்டினி, வெள்ளை கலரில் இட்லி மஞ்சள் கலரில் சாம்பார் என்று அந்தக் கலர் காம்பினேஷனே பார்க்க நவீன ஓவியம் போல இருக்கும்.

பலா மரத்தடியில் வைக்கோலை போட்டு துண்டு விரித்து வைத்து இருந்தார். அதில் சென்று படுத்தேன். ஆரம்பித்தது சோதனை...
போதை.. தலை சுற்ற என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை. பக்கத்து தோட்டத்தில் இருந்த தக்காளிச் செடியில் பழுத்து இருந்த தக்காளிப் பழங்களை பறித்தும், வெண்டை, கத்தரிக்காய்களை பிடிங்கி எறிந்தும் ரகளை பண்ணியிருக்கிறேன். ஏதோ செய்து ஜெயராசு என்னை படுக்க வைத்தார் போலும். தூங்கிவிட்டேன்.

மாலையில் அம்மாவிடம் பக்கத்து தோட்டக்காரர் விஷயத்தை போட்டு உடைக்க, அம்மாவின் தம்பியான மாமாவின் பிரம்படி ஒன்று கிடைத்தது. தாத்தாதான் தடுத்தார் மேலும் பிரம்படி கிடைக்காமல். ஜெயராசுக்கு திட்டு விழுந்தது.

ஆனால் அந்தக் கள்ளு சுவையாகத்தான் இருந்தது.....


இல்லை இது துஸ்பிரயோகம் இல்லை. அப்படி பார்த்தால் அடம்பிடிக்கும் குழன்தைக்கு சாப்பாடு ஊட்டுவதும் கூட துஸ்பிரயோகம்..


அம்மா சோறு ஊட்டுவதும் வீட்டு வேலைக்காரன் தோட்டத்துக்கு கூட்டிக்கொண்டு போய் தான் செய்யும் தப்புக்கு துணையாய் அந்த பச்சை பாலகனை ( அட நம்ம தங்கவேலைத்தான் ) கூட்டுச்சேர்த்திருப்பது துஸ்பிரயோமல்லாமல் வேறு என்ன?

அவர் குடிப்பது கள்ளென்றே தெரியாத காலத்தில் குடித்திருக்கின்றார்.

அதுவும் அவருக்கு போதை தலைக்கேறி கிட்டத்தட்ட மயக்க நிலைக்கே சென்றிருக்கின்றார். தோட்டதில் என்ன நடந்தது என்பது கூட பக்கத்து தோட்டதுக்காரன் சொன்ன பிறகே அவருக்கு தெரிந்திருக்கிறது.

அம்மா சோறூட்டியதற்காக மாமா பிரம்படி கொடுப்பாரா? இங்கு அவருக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. அதுபோல் வேலையாளுக்கு திட்டும் விழுந்திருக்கின்றது. அப்படியானல் அந்த குழந்தைக்கு நல்லது செய்ததாலா திட்டு விழுந்தது????


கள்ளுண்டவர்களால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் எடுத்தால் கள்ளு விசந்தான்.

பென்ஸ்
30-05-2008, 03:56 PM
ஹ ஹ ஹா....
கள்ளுனாலே எனக்கு உடனே என் சின்ன வயசு நியாபகம் கண்டிப்பா வந்திடும்....
எங்களுக்கு ஒரு பனங்காடு இருந்தது. இதில் இருந்து பதநீர் இறக்க என்று ஒரு குடும்பம் அங்கு குடில் கட்டி இருக்கும். காலையில் ஒருமுறையும் மாலையில் ஒரு முறையும் இறக்குவார்கள்...
காலையில் இறக்கும் பதநீர் எங்களுக்கு என்றும், மாலையில் இறக்கும் பதநீர் இறக்குபவருக்கும் என்பது உடன்பாடு. (அது மட்டுமே அவருக்கு சம்பளம்)
வீட்டில் மிக பெரிய அன்டாவில் பதனிரை காய்ச்சுவார்கள். வாண்டுகளாகிய நாங்கள் அதை சுற்றி காத்திருப்போம், பதனீர் காய்ந்து வரும்போது, ஒருவித ஜெல்லி போன்ற நிலைக்கு வரும், இதை "கூப்பைனி" என்று எங்கள் ஊரில் சொல்லுவார்கள்.. இது சவ்வுமிட்டாய் போலவே சுவையாக இருக்கும்.
அதே போல காய்ச்சும் பதநீரில் மரவல்லி கிழங்கை சமைத்து எடுத்து சாப்பிடுவது ஒரு அலாதி. அந்த அடுப்பிலையே சாளை போன்ற மீனையும் சுட்டு எடுத்து சாப்பிடுவது என்றால்.. ஆகா சொல்லவே வேண்டாம்....
நன்கு காய்ந்த பதனீரை எடுத்து தேங்காய் கூடு (செரட்டை என்று சொல்லுவோம்) அல்லது இரும்பு கூட்டில் வைத்து , அது குளிர்ந்த உடன் அதை எடுத்து கருப்பட்டி என்று வைத்து கொள்வோம்.
சுக்கு காப்பி அல்லது காப்பி போடும் போது சீனிக்கு (சர்க்கரைக்கு) பதிலா இந்த கருப்பட்டியை போட்டு பாருங்க என்ன சுவை என்று உங்களுக்கே தெரியும்....
பனையில் பதனீர் பொடுவது ஒரு கலை, ஆண் பனையில் பூக்கள் உள்ள குருத்துகள் மட்டும் வரும், இந்த பனையில் நுங்கு கிடைக்காது. பெண் பனையில் நுங்குகான குருத்து வரும். பதனிக்காக விடப்படும் மரங்களில் இந்த குருத்துகளின் நுனியை இடுக்கியால் இடுக்கி பின்னர் அரிவாளால் செதுக்கி விடுவார்கள்... இதனால் அது பதநீரை சுரக்கும். இதை ஒரு மண்கலயத்தில் சுண்ணாம்பு தடவி சேகரிப்பார்கள்... சுண்ணாம்பு தடுவுதால் பதநீர் கெட்டு விடாது, மேலும் அதில் வரும் தேனீ, பூச்சிகள் இறந்துவிடும். இதை குடிப்பதால் எந்த கெடுதலும் இல்லை (பதனி சாப்பிட்டு யாரும் சுகமில்லாமல் ஆனது இல்லை)... ஆனால் அளவுக்கு அதிகமாக பதநீர் சாப்பிடுவது வயிற்று இளக்கத்தை கொடுக்கும்.
நுங்குக்காக விடபடும் மரங்களில் பதநீரோ, கள்ளோ கட்டுவது இல்லை.
இப்படி பதநீர் இறக்கும் இடங்களில் சிறந்த பெண் பனைகளை தேர்ந்தெடுத்து கள்ளுக்காக விட்டுவிடுவர். சுண்ணாம்பு தடவாத கலயம் பதநீரை கள்ளாக மாற்றும். அதிக நேரமான சுண்ணாம்பு தடவிய பதநீரும் புளித்து கள்ளாகும், ஆனால் இதை யாரும் குடிப்பது நல்லதல்ல, இதை கெட்டு போனதாக சொல்லி கீழே கொட்டிவிடுவர்.
நல்ல கள் அளவாக குடித்தால் நல்லதே. எங்கள் வீட்டில் "ஆப்பம்" செய்ய, மாவு புளிக்க கள் சேர்ப்பதுண்டு. இதனால் சுவை அதிகமாக இருக்கும்.
ஒரு நாள் நான் இதை அறியாமல் எடுத்து குடித்து விட்டு அப்பாவிடம் சென்று
"பதனீர் நன்றாக இருந்தது அப்பா..!!" என்று சொல்ல.. அ
தோடு என் வீட்டில் ஆப்பதிற்கு கள் சேர்ப்பது நின்றது.

ஆனாலும்..
அதன் பிறகு அப்பாவிற்க்கு தெரியாமல் நானே கள் கலயம் கட்டி இறக்கி குடித்தது வேறு கதை....:D:D

தங்கவேல் சொல்லுவது போல் .. அதன் சுவை தனிதான்....:rolleyes::rolleyes:

மலர்
30-05-2008, 04:04 PM
பதனீர் காய்ந்து வரும்போது, ஒருவித ஜெல்லி போன்ற நிலைக்கு வரும், இதை "கூப்பைனி" என்று எங்கள் ஊரில் சொல்லுவார்கள்.. நன்கு காய்ந்த பதனீரை எடுத்து தேங்காய் கூடு (செரட்டை என்று சொல்லுவோம்) அல்லது இரும்பு கூட்டில் வைத்து , அது குளிர்ந்த உடன் அதை எடுத்து கருப்பட்டி என்று வைத்து கொள்வோம்.
ஆஹா..... பென்ஸ் அண்ணா..
கூப்பைனி,செரட்டை ன்னு நம்மூரு பாஷையை கேக்குறப்போ
ஹீ..ஹீ..... அதுல ஒரு சந்தோஷம்..

சுக்கு காப்பி அல்லது காப்பி போடும் போது சீனிக்கு (சர்க்கரைக்கு) பதிலா இந்த கருப்பட்டியை போட்டு பாருங்க என்ன சுவை என்று உங்களுக்கே தெரியும்....
சான்ஸே இல்லை...
கருப்பட்டி போட்ட காப்பின்னா மட்டும் ரெண்டு டம்ளர் காப்பி.... :D :D

அமரன்
30-05-2008, 04:06 PM
இந்த திரியில் மலரின் பதிவு இல்லாமலா?? இத்திரி கள்ளுத்தமிழ் தொடராக அமையட்டும்....

பூமகள்
30-05-2008, 04:22 PM
பிறந்தது நகரமாகையால் கிராமிய வாசம் இல்லாவிட்டாலும்...
அப்பப்போ.... முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைகளில்.. நான் அனுபவித்த கிராமத்து அனுபவங்கள் அலாதி..!!

பென்ஸ் அண்ணாவின் பதிவு..... இன்னும் தெளிவாக தெ(க)ள்ளு பகர்ந்தது..

தெளுவு மட்டுமே குடித்த அனுபவம் உண்டு... இன்றும்.. கருப்பட்டி... கடிக்காத நாளில்லை... வேர்க்கடலையை வேக வைத்தோ.. வறுத்தோ சாப்பிட்டால்.... அதனால் ஏற்படும் பித்தம் முறிபட.. கருப்பட்டியோ..சுக்குக் கருப்பட்டியோ சில துண்டுகள் சாப்பிட வேண்டும்.. (சித்த மருத்துவர்கள் சொன்னதாக நினைவு :rolleyes:) இன்று வரை இதைச் செய்து வருவதால்... வீட்டில் கருப்பட்டிக்கு என்றுமே ராஜ மரியாதை தான்..!! :)

எனக்கு குட்டி குட்டியாக அச்சுகளில் வார்த்த சுக்கு கருப்பட்டினா கொள்ளைப் ப்ரியம்...!! :icon_rollout::icon_rollout:

உங்கள் அளவுக்கு அனுபவிக்க இயலாவிட்டாலும்.. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும்... தெளுவு இறக்கி குடித்த அனுபவம் நிறைய...

குடிக்க குடிக்க... இனிப்புச் சுவையில்.. அதிகம் குடிக்கவே முடியாமல் போன நாட்களை நினைத்து இப்போதும்.. ஏங்குகிறேன்..

இன்றும் எங்காவது... தெளுவோ... நுங்கோ இருந்தால்.. நிறுத்தி அடம்பிடித்து சாப்பிடாமல் விடுவதில்லை..:icon_rollout::icon_rollout:

அதே போல.. கம்பங்கூலும்...!! :p:cool:

மழலைப்பருவ நினைவுகளைத் தட்டி எழுப்பிய பதிவுக்கு நன்றிகள் பென்ஸ் அண்ணா.. மற்றும் அனைத்து சகோதர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்..!! :)

மலர்
30-05-2008, 04:27 PM
இந்த திரியில் மலரின் பதிவு இல்லாமலா?? இத்திரி கள்ளுத்தமிழ் தொடராக அமையட்டும்....
:icon_shout: அமரு....:icon_cool1:
:waffen093::waffen093:ஏன் இந்த திரி கொலைவெறி....:violent-smiley-010::violent-smiley-010:
ஏதுனா சொல்லுங்க.... :icon_nono:
அடிச்சி புடிச்சாச்சும் ஒரு இடத்தை புடிச்சி உக்காந்து பேசி தீத்துக்கலாம்...:icon_03::icon_03:
ஒரு நல்லபுள்ளை....:icon_smokeing:
A to Z ன்னா :icon_drunk: என்னன்னு கூட தெரியாத
பச்சை புள்ளையை :icon_tongue: பாத்து என்ன சொல்லிட்டீங்க.. அமரு.. :D :D
:traurig001: :traurig001: கண்ணுல இருந்து :traurig001: :traurig001:தண்ணி :traurig001: :traurig001: நிக்கவே இல்லை.... :traurig001: :traurig001:
டேரக்டா கூவத்துக்கு கனெக்ஷன் போட்டிருக்கேன்...:icon_rollout: :icon_rollout:

செல்வா
30-05-2008, 07:52 PM
ஹ ஹ ஹா....
கள்ளுனாலே எனக்கு உடனே என் சின்ன வயசு நியாபகம் கண்டிப்பா வந்திடும்....
எங்களுக்கு ஒரு பனங்காடு இருந்தது.....
அடடா.... நம்ம ஏரியாவா... இருக்கே நிறைய சொல்லலாம்னு வந்து பாத்தா.... அண்ணாச்சி முந்திக்கிட்டாரே... ஆனாலும் சொல்லுறதுக்கு சில விசயமிருக்கில்ல கைவசம்...

இதுவரைக்கும் நேரடியா கள்ளு குடிச்சதில்லங்க... :traurig001::traurig001:
அப்புறம் மறைமுகமா குடிச்சியானு கேக்கபடாது....
ஆப்பமாவுல ஊத்தி ஆப்பமா சாப்பிட்டுருக்கேன்...

ஆப்பத்துக்கு கள்ளு வாங்க நானும் அண்ணணுமா போய் கள்ளுக்கடை எங்கருக்குணு தெரியாமா பொட்டிகடையில போய் 1ருவாக்கி கள்ளுணு கேட்க அவன் சின்ன பயலுவளா இருக்கானுவளேனு ஏற இறங்க பாத்துட்டு சாராயம் இருக்கு வேணுமாலேனு... விரட்ட...
என்னடா இது வம்பாப் போச்சு... வீட்டுல சொல்லிதானே வாங்க வந்தோம்.. புரியாம முழிச்சிட்டுருக்கும் போது பக்கத்திலருந்த ஒருத்தர் நீங்க இங்கேயே இருங்கணு சொல்லிட்டு போய் வாங்கிட்டு வந்து தந்தாரு...

ஆனா.... பாருங்க இந்த பதனீர் இருக்குல்ல .. அது அதிகமாவே குடிச்சிருக்கன்.
பதனீர் பத்தி பென்ஸ் அண்ணாச்சி நிறைய சொல்லிருக்காரு....
அவரு சொல்லாத... இன்னும் கொஞ்சம்....

பதனீரையும் இறக்குனதுக்கப்புறம் ரொம்ப நேரம் அப்படியே... வச்சிருந்தா புளிக்க ஆரம்பிச்சுரும்...
அதனால லேசா சூடாக்கி வைப்பாங்க...
பதனீரையே... கொதிக்க வச்சி நல்ல சம்பா அரிசி போட்டு கஞ்சியா காச்சி குடிக்கலாம் அந்த சுவையே அலாதி... எங்க பாட்டியோட கைப்பக்குவமே தனி பைனிகஞ்சிக்கி...

பதனீரை நல்லா காச்சி வர கூப்பனி (கூழ் பதனீர் தான் இப்படி ஆயிடுச்சு) அப்படியெ... ஒரு பானைல ஊத்தி மூடி வச்சுடுவாங்க... அது உறஞ்சு போய்... பரல் பரலா... ஒரு நிலைல வரும்... மிட்டாய் மாதிரி பைநிறைய வச்சுகிட்டு ... தின்னு தின்னு .... ஊரு சுத்தின காலமெல்லாம்... அடபோங்கப்பா.. ஒரே பீலிங்ஸா.. போகுது...

அதே கூப்பைனிய பானைல ஊத்தி அதுல புளியும் (விதை நீக்கிவிட்டு) போட்டு வச்சுடுவாங்க. அந்த இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை.. அலாதியானது..

இப்பவும் ஊருக்கு போனா ரெண்டு மூணு நாள்ல அப்பா எங்கருந்தாவது பதனீர் வாங்கி வந்துடுவாங்க...

பனையேறுவதை வைத்து ஒரு சாதிப்பிரிவே இருக்கிறது... அதற்கு ஒரு கதையும் இருக்கிறது... மன்றம் அனுமதிக்குமானால் அதைப்பற்றி எனக்குத்தெரிந்ததை சொல்கிறேன்...

இன்னுமொரு விசயம்.... வில்லுப்பாட்டிற்கு வில் செய்வதற்கு பனங்கம்பைத்தான் பயன்படுத்துவார்கள்....

முற்றிய பனைமரத்தின் வேரோ.... அடிமரமோ மிக ஊறுதியானது. அத்தனைவிரைவில் அழிந்து போகாது. சதுப்புநிலம் போன்ற இடங்களில் வீடு கட்டுவதாக இருந்தால் அஸ்திவாரம் பலமாக இருக்கும் பொருட்டு பனைமூடுகளை அடித்து இறக்குவார்களாம் பார்த்ததில்லை மரம்வெட்டுமிடத்தில் வேலைசெய்த போது அவர்கள் கூறிய விசயமிது.

ஓவியன்
31-05-2008, 02:05 AM
அடடா, தங்கவேல் அண்ணாவின் நினைவுகள் பலரது கள்ளுப் பானை நினைவுகளை உருட்டி விட்டதே...!! :)

________________________________________________________________________________________

தெளிவான விளக்கத்திற்கு நன்றி தாமரை அண்ணா..!!

பென்ஸ்
31-05-2008, 02:12 AM
பதனீரை நல்லா காச்சி வர கூப்பனி (கூழ் பதனீர் தான் இப்படி ஆயிடுச்சு) அப்படியெ... ஒரு பானைல ஊத்தி மூடி வச்சுடுவாங்க... அது உறஞ்சு போய்... பரல் பரலா... ஒரு நிலைல வரும்... மிட்டாய் மாதிரி பைநிறைய வச்சுகிட்டு ... தின்னு தின்னு .... ஊரு சுத்தின காலமெல்லாம்... அடபோங்கப்பா.. ஒரே பீலிங்ஸா.. போகுது...

அதே கூப்பைனிய பானைல ஊத்தி அதுல புளியும் (விதை நீக்கிவிட்டு) போட்டு வச்சுடுவாங்க. அந்த இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை.. அலாதியானது..
.


அடடா.. செல்வா... நாக்கில் தண்ணி ஊற வைத்துவிட்டீர்கள்... பானையில் வைத்திருக்கும் புளிமிட்டாயை திருடி எடுத்து சாப்பிடுவதில் ஒரு அலாதி (அம்மாவிடம் கேட்டால் கொடுப்பார், இருந்தாலும்...).

புளியோட நெல்லிகாயும் போடுவது உண்டு....

பனையேறுவதை வைத்து ஒரு சாதிப்பிரிவே இருக்கிறது... அதற்கு ஒரு கதையும் இருக்கிறது...

இது இங்கு வேண்டாம் செல்வா.. இவை மிக சென்சிடிவான விடயங்கள், கேள்விக்குளாகும் போது பிரச்சினைகள் வரலாம்....

விகடன்
31-05-2008, 05:56 AM
[FONT="Latha"][COLOR="DarkRed"]அடடா, தங்கவேல் அண்ணாவின் நினைவுகள் பலரது கள்ளுப் பானை நினைவுகளை உருட்டி விட்டதே...!! :)



உம்முடைய மலரும் நினைவுகள்தான் பாக்கி. (பயமிருந்தால்) துணைவிக்கு தெரியாமல் விரைவில் எழுதிவிடவும்.

lolluvathiyar
31-05-2008, 06:39 AM
எனக்கு குட்டி குட்டியாக அச்சுகளில் வார்த்த சுக்கு கருப்பட்டினா கொள்ளைப் ப்ரியம்..

அதுல (அச்சு கருபட்டி) கொஞ்சம் கலப்படமும் இருப்பதாக கேள்வி பட்டிருகிறேன். சோதித்து வாங்குமா. காங்கயத்தில் பஸ் நிலையத்துக்கு அருகில் நல்ல கலப்படம் இல்லாத கருபட்டி கிடைக்குதாம். ஆனால் அச்சுகளில் வார்த்து இருக்காது.

செல்வா
31-05-2008, 08:00 AM
அடடா, தங்கவேல் அண்ணாவின் நினைவுகள் பலரது கள்ளுப் பானை நினைவுகளை உருட்டி விட்டதே...!! :)

ஏண்டா.... கள்ளுபற்றிய திரில பதிவு போட்டா கள்ளு பற்றிதான் பதியிறோமா.... ஒழுங்கா வாசிக்கிறதில்லியா... கள்ளைவிட பதனீர் பற்றிதானே அதிகமா பேசிருக்கோம்.... பாத்து சொல்லு...

வள்ளுவர் சொன்னதுல தப்பே இல்ல.. பனைமரத்துக்கடிலருந்து (பாலை) பதனீர் குடிச்சாலும் கள்ளு குடிச்சதாதான் நெனப்பாங்கண்ணு...

என்ன கொடுமை ஓவியன் இது...

செல்வா
31-05-2008, 08:22 AM
அடடா.. செல்வா... நாக்கில் தண்ணி ஊற வைத்துவிட்டீர்கள்... பானையில் வைத்திருக்கும் புளிமிட்டாயை திருடி எடுத்து சாப்பிடுவதில் ஒரு அலாதி (அம்மாவிடம் கேட்டால் கொடுப்பார், இருந்தாலும்...).

புளியோட நெல்லிகாயும் போடுவது உண்டு....

அதோட.... எள்ளோடு கருப்பட்டியை சேர்த்து எண்ணை வருமளவிற்கு இடித்து சிறு சிறு உருண்டைகளாக... உண்பதற்கு தருவார்கள். சுவையான அதே நேரத்தில் உடலுக்கு மிக ஆரோக்கியமாம்.
ஆனால் அதை இடித்து பதத்திற்கு கொண்டு வருவதற்குள் போதும் போதுமேன்றாகிவிடும்.
செக்கில் ஆட்டி எண்ணை எடுப்பதற்கு சமமானது.. அத்தனை தூரம் உரலிலிட்டு கையாலேயே... இடித்து எடுப்பர்.
எங்கள் பகுதியில் சர்க்கரை என்றால் அது கரும்புவெல்லத்தை குறிக்கும். சர்க்கரையை சீனி என்று கூறுவர். ஆனால் இவையிரண்டும் அதிகமாக பயன்படுத்துவதே கிடையாது... பாயாசம் வைப்பதற்கும் பண்டிகை காலங்களில் அச்சு முறுக்கு சுடுவதற்கும் தான் வாங்கி வைப்பார்கள்.
மற்றபடி அனைத்திற்கும் கருப்பட்டி (பனைவெல்லம்) தான். எல்லாவீடுகளிலும் கருப்பட்டி போட்டு வைக்க தனிப் பானையே வைத்திருப்பார்கள். காலையில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்த முந்தின நாள் சாதத்தை பிசைந்து கஞ்சியாக்கி கருப்பட்டியை கடித்துக் கொண்டு குடிப்பது தான் பலநேரங்களில் காலைஉணவு.
பதனீரில் சுண்ணாம்பு... கலப்பதால் கால்சியம் மிகுந்திருக்கும். அது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. எலும்புகள் வலுவாகும்.
துளித்துளியாக சேரும் பதனீர் உயரமான பனையில் ஏறிச்சென்று அதை எடுத்து வருவது... சாதாரணமான காரியம் இல்லை...

பனை மரமெங்கும்... சிறுசிறு சிலாம்புகள் இருக்கும் எனவே மார்புக்கு தோல்கவசம் போட்டுக் கொண்டு தான் ஏறவேண்டும். அதிலும் கைகளால் மரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உடல்எடைமுழுவதையும் தூக்கி மரத்தோடு உராயாமல் வாகாக ஏறவேண்டும். சற்று தவறினாலும் உடல் இரணகளம் தான்... (அதிலும் கூட நம்மாளுங்க கவசம் எதுவுமே போடாம போய் கள்ளு திருடுறது உண்டு)
இப்படி பலகடினங்கள் இருப்பதால் இப்போதெல்லாம் பனைத்தொழில் நலிந்து வருகிறது.
பனைமரத்தின் பயன்களையும் சொல்லிலடக்க முடியாது...
ஓலையில் கைவினைப் பொருட்களிலிருந்து.... சுவடிகள், பாய்... பெட்டி... முதலன பலபொருட்கள் செய்யப் பயன்படுகிறது...
கல்யாணவீடுகளில் சோறாக்கி பனைஓலை பாயில் தான் கொட்டிவைப்பர்..
அது கெடாமல் பாதுகாப்பதோடு... ஒரு வித இனிய மணமும் கொடுக்கும்.
பனைமட்டையிலிருந்து உரித்தெடுக்கப்படும் நார் மிக உறுதியானது.. அதைகட்டில் பின்னுவதற்குப் பயன்படுத்துவர்.
பனைமரத்தின் தளிர் இலையில் கொழுக்கட்டை செய்து சாப்பிட்டு பாருங்கள்... அதன் மணமும் சுவையும் அலாதி...
கருப்பட்டி விலை கைக்கெட்டாமல் போய்விட்டதால்... இப்போதெல்லாம் வீடுகளில் கருப்பட்டி பானைகளுக்குப் பதிலாக கருப்பட்டி காகிதக் கூடு தான் இருக்கிறது...