PDA

View Full Version : உளறல்கள்..



poo
04-04-2003, 03:16 PM
***
நான் "தான்" என்றிருந்தேன்..
நீ நீயாக இருந்தவரை...
உன் நிழல் நிஜமானது-
தானென்பது ம(றை)றந்து
நான் யாரென்று தேடுகிறேன்..

உன்னில் என்னை
தொலைத்துவிட்டு
என்னில் என்னைத் தேடும்
வித்தியாச வியாதி..

காதல்..காதல்..காதல் !!!...


***

உன் பெண்மையின் பாதிப்பில்
என் ஆண்மையை தொலைத்தேன்..

அடங்கா காளையாய் அலைகிறேன்..
அன்பே உன் குரல் கேட்டால்-ஒடுங்கிப் போகிறேன்..

பாதிப்புகள் அதிகமாய்..
ஆனாலும் இனிமையாய்..

அறிவிலாதவனையும் அறிஞனாக்குகிறாய்..
அறிஞனையும் பித்தனாக்குவாயாமே?!!

காதல் கொடிதா ..
காதலி கொடிதா ??!!


***

பிரம்மனுக்கும் மின்னஞ்சல்..
பிறந்த நாள் வாழ்த்து இண்டர்நெட்டில்
ஆனாலும் காதலே நீ மட்டும்
மனதில்தான் உதிக்கிறாய்..

வேதனைகளின் வேதங்களாய்
மனங்கள் மாறிப்போனதாலா?..

காதலே உனக்கொரு
கோரிக்கை..
இம்சிக்காத இரவொன்றை
இரவலாய் வாங்கி வா..
இரக்கமில்லா பிரம்மனிடம்!!!


***

சத்தமில்லா யுத்தப் புரட்சி
சத்தான சதைப்பற்றுள்ள பெண்கள்-
சலனங்கள்..

கோயில் ஒலி உறக்கத்திற்கு
இடைஞ்சலாய்..
சலங்கை ஒலி சங்கீதமாய்..
சலனங்கள்..

மனதில் சம்மனமிட்டு
அமர்ந்துள்ள சர்வாதிகாரி-
சலனங்கள் ...


***

இருபதில் இனித்தாய்..
காதல்...
நாற்பதில் மருத்துவன் சொன்னான்..
இனிப்பை சேர்க்காதேவென..
அவருக்கெப்படி தெரியும்
நமக்குள் கசந்து போன காதல்!!!

***

இளசு
04-04-2003, 03:26 PM
இந்த இதயத்தின் பனிச்சிதறல்கள்தான்
உன் உளறல்கள் என்றால்...
தம்பீ...
நீ தெளியாதே......

rambal
04-04-2003, 04:50 PM
இன்றுமுதல் நீ காதல்கவி..
நீ தான் உண்மையான காதல் கவி..
பாராட்டுக்கள் காதல்கவியே..

மன்மதன்
29-08-2004, 09:12 AM
பூவுக்குள் ஒரு காதலன்..

அந்த காதலனின் கவியில் ஒரு பூகம்பம்..

என்றும் காதலனாய் இரு பூ..

கவிகள் எங்களுக்கு கிடைக்கும்..

அன்புடன்
மன்மதன்

kavitha
30-08-2004, 07:19 AM
அவருக்கெப்படி தெரியும்
நமக்குள் கசந்து போன காதல்!!!


அது அறுசுவை.
அதனால்
எப்போதும் சுவைக்கும்.
கசந்த காதல்
மீண்டும்
கசிந்துருகும் ஓர் நாள்!

மீண்டும் கவிதைகள் படைக்க நேரம் கிடைக்கட்டும்.
அந்த நாள் விரைவில் வரட்டும்.
:)

இளந்தமிழ்ச்செல்வன்
30-08-2004, 07:50 AM
பூவின் காதல் நமக்கு கவிதை விருந்து.

இளசு இனிமையாய் சொன்னதை கவனித்தீரா? பூ.....
ராம்பால் அவர்களின் பாராட்டை பெற்றுக்கொள்ளவும் வரவில்லை போல பூ...
மன்மதன் சொன்னதுபோல் பூகம்பமும், கவிதா சொன்னதுபோல் அறுசுவையும் படைத்துள்ளீர்கள்.

கடைசி கவியை நம் கவிதை சொல்லியதுபோல் படிக்கவே ஆசை

Nanban
02-09-2004, 08:28 PM
தானென்பது ம(றை)றந்து
நான் யாரென்று தேடுகிறேன்..


உங்களுக்கும் இந்தக் குழப்பங்கள் உண்டா? எனக்கு மட்டும் தான் இந்தக் குழப்பங்கள் உண்டு என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். நல்லவேளையாக துணைக்கு ஒருவர் இருக்கிறார்.



ஆனாலும் காதலே நீ மட்டும்
மனதில்தான் உதிக்கிறாய்..


நீங்கள் எழுதிய வரிகள் அனைத்திலும்மே, எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை தான். எத்தனை ஊடகங்கள் வந்தாலும், காதல் மட்டும் மனதின் வழியே தான் பயணப்படுகிறது.



இம்சிக்காத இரவொன்றை
இரவலாய் வாங்கி வா..
இரக்கமில்லா பிரம்மனிடம்!!!


இம்சிக்காத
இரவொன்றை
இரவல் தருவதாய்
அறிவித்தான் பிரம்மன்....

இரவல் வாங்க
அலைமோதிய
வரிசையில் காத்திருந்து
இம்சிக்காத இரவொன்றை வாங்கி
படுக்கை விரித்தான்
நித்திரை கொள்ள -
கல்லறையில்.



மனதில் சம்மனமிட்டு
அமர்ந்துள்ள சர்வாதிகாரி-
சலனங்கள் ...


காதலில் இருப்பதால், சலனப்படக்கூடாது என்கிறீர்களா... இல்லை. சலனப்படுங்கள். கற்பனை கனவுலகில் சஞ்சாரியுங்கள் - நீங்கள், நீங்களாக இருப்பதாக அர்த்தம். விடாப்பிடியாக நான் அப்படி இல்லை என்று அடம் பிடிப்பவர்கள், ஒரு மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது. ஏனென்றால், 'fantacize' செய்ய முடியாதவர்கள் மனதளவில் பாதிப்புடையவர்களே...



இருபதில் இனித்தாய்..
காதல்...
நாற்பதில் மருத்துவன் சொன்னான்..
இனிப்பை சேர்க்காதேவென..
அவருக்கெப்படி தெரியும்
நமக்குள் கசந்து போன காதல்!!!


அப்படித் தான் தோணும். இருபதில் இயற்கையாய் இனிப்பிருந்தது. நாற்பதில், செயற்கையாக இனிப்பைச் சேர்க்க முடியும். இருபதில் இயல்பாய் காதல் எழுந்தது. கிரியாஊக்கியாய், இளமை, இனக்கவர்ச்சி, இதெல்லாம். நாற்பதில் காதல் பண்பட்டதாய், கடமை நிறைந்ததாய், போராட்டங்கள் நிறைந்த களமாய் .... யுத்தகளத்தில் யாரும் கொஞ்சிக்கொண்டிருப்பதில்லை. ஓய்வெடுக்கும் நாளிலே, மீண்டும் காதல் பூக்கும், இன்னும் உயர்ந்ததாய்...