PDA

View Full Version : இரை(றை)யுண்மை



நாகரா
23-05-2008, 12:17 PM
இரைக்குள் இறை கண்டு
அவ்விறையையே எப்போதும் உண்டு
அவ்விறையையே பசித்தோர்க்குந் தந்து
இறைக்கு இரையாகத்
தன்னைத் தான் உவந்து தந்து
உற்ற நோய் நோன்று
உயிர்க்கு ஊறேதுஞ் செய்யாத
அருந்தவத்தில் எப்போதும் நின்று
அன்பே சிவமாம் ஒருமையை
நனி விரும்பி மனந்திரும்பி
அன்னை பூமியே சொர்க்கமாகும்
அதிசயத்தைக் காண்பீரே
மன இதமே மனிதமென்று
நன்குணர்ந்தே மனிதர் நீவிர்!

அப்பாலுக்கப்பாலாம் பெரிய கடவுள்
எங்கும் எதிலும் எப்போதும்
இறைந்திருக்கும் நிறைந்திருக்கும்
எளிமையினை
அங்கையில் நெல்லிக்கனி போல்
அகத்தில் கண்டு
பெரிது சிறிது பேதம் விட்டு
தனக்குச் சமமாகவே
யாவுங் காணும்
ஆதிக் கடவுட்கண்
சமாதியில் நின்று
சமாதானம் காண்பீர்
மன இதராம் மனிதர் நீவிர்!

மன இதம் அறியாது
வன்பே உருவாய்
மருளே பொருளாய்
வாழுமட்டும்
நீ
புழுவினும் இழிஞன்
மன இதம் அறிந்து
அன்பே உருவாய்
அருளே பொருளாய்
வாழ
நீயே
கடவுளெனும் பெரியோன்

ஆணவ ஆரவாரம் அறவே விட்டு
மனத்துக்கண் மாசிலனாகி
மன இதனாம் மனிதனாகும்
தலையாய அறத்தில் ஊன்றி நின்றால்
நீயே
பெரிதினும் பெரிய சாமி
இஃதன்றி
சாமிக்கே அடிமையென்று
சாமி பேரில்
நீ செய்யும்
ஆரவாரக் கூச்சலாலே
ஆன்ம லாபம் ஏதுமில்லை
எனவே
அன்பே சிவமான
பெரிய கடவுள் போலே
எளிமையாயிரு
நீ

இறையே இரையாகி
உன் பசி நீக்கும்
உண்மையினை
நீ
நன்குணர்ந்தால்
அவ்விறையையே இரையாக
யாவர்க்கும் அளிக்கின்ற
அதிசய வித்தையினை
நிச்சயம்
நீ
செய்வாய்
பசி தீர்வாய்
பசி தீர்ப்பாய்