PDA

View Full Version : கால பூதம்...rambal
15-07-2003, 08:41 AM
கால பூதம்...

என்னை மண் என நினைத்து
பானை செய்ய மனமில்லாது
அங்குமிங்கும்
உருட்டிக் கொண்டிருக்கிறது
பொழுது போகாத
குயவன் போலும்..

எல்லா கணங்களிலும்
எவரோ எறிய
எவரோ அடிக்க
இலக்கில்லா
பயணித்து எங்கோ
விழுகிறேன் ஒரு பந்து போலும்...

எதன் மீதிருந்தோ
ஆரவாரமாய் தள்ளி விட்டு
ஏளனம் செய்கிறது..
மரத்தைப் பிரிந்த
இலையை அடித்துச் செல்லும்
காட்டாறு போலும்..

பரமபதமான
வாழ்க்கையில்
என் காய்க்கு மட்டும்
உருட்டப்படும் பகடை
பாம்பால் மாத்திரமே தீண்டப்பட
கிளம்பிய இடத்திற்கே வந்து சேருமாறும்..

இரக்கமற்ற
சிறைக்காவலனின்
கண்காணிப்பில் இருக்கும்
அப்பாவி கைதியாயும்..

என்னை அலைக்கழித்து
உருக்குலைய வைக்கப்
பார்க்கிறது காலம்
ஒரு கொடிய பூதமாய்..

karavai paranee
15-07-2003, 10:44 AM
எல்லா கணங்களிலும்
எவரோ எறிய
எவரோ அடிக்க
இலக்கில்லா
பயணித்து எங்கோ
விழுகிறேன் ஒரு பந்து போலும்...

வணக்கம்
விமர்சிக்க முடியவில்லை
வீ¡¢யம் கொண்டெழுந்த வார்த்தைகள் வீழ்கின்றன
அருமை நண்பா
தொடருங்கள்
எங்கே பெற்றுக்கொள்கின்றீர்கள் உங்கள் கவிப்புலமைக்கான தமிழ்ச்சொற்களை அத்தனையும் சுட்டுசெப்பனிட்ட செம்பொன்னாக இருக்கின்றதே.. .

Narathar
15-07-2003, 11:42 AM
கால பூதத்தின் கைதிகள் பட்டியலில்
நானும் ஒருவன்................

நல்ல கவிதை

poo
15-07-2003, 12:14 PM
ஏறத்தாழ எல்லோரையும் ஆட்டிப்படைக்கும் அந்த ராட்சசனை..

பாராட்டுக்கள் ராம்!!!!!!!

anbu
15-07-2003, 01:04 PM
தங்கத்துக்கு தங்க முலாம் பூசுவார்காளா ?

இங்கே அது நிஜமாகிறதே !

ராம்பால் கவிதைக்கு பரணீதரனின் பாராட்டு அதற்க்கு "பூ"க்களின் அபிசேகம்
அடடா அற்ப்புதம்.

இன்னும் ஒரு அதிசயம் இந்த மன்றத்துக்கு மட்டும் கலகம் செய்யாத
நாரதர் கிடைத்து இருக்கிறார்.

karikaalan
15-07-2003, 02:09 PM
அப்படியொன்றும் இலக்கற்று நீங்கள் இருப்பதுபோல் தோன்றவில்லையே, ராம்பால்ஜி!!

வாழ்த்துக்கள் தங்கள் சிந்தனைக்கு.

===கரிகாலன்

lavanya
15-07-2003, 03:18 PM
அதானே.... ? அண்ணல் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க ராம்பால்ஜி

Nanban
15-07-2003, 03:37 PM
மிக அழுத்தமான கவிதை. காலத்தை மட்டும் வெல்ல ஆளில்லை. காலம் என்பது பிரபஞ்சத்தைச் சார்ந்தது. நாம் ஒரு மூலையில் அதனுள்ளே வாழ்ந்து கொண்டே அதை அளவிட முயற்சிக்கிறோம். விஞ்ஞானத்தின் துணை கொண்டும், கவிதையின் துணை கொண்டும். தத்துவத்தின் துணை கொண்டும். எல்லாவற்றிற்குமே எட்டாது, நீண்டு கொண்டே போகும் கால ஓட்டத்தை அளக்கும் அழகான முயற்சியில் ராம்பால் வெற்றியே பெற்றிருக்கிறார்.

கவிதையை வரி வரியாக எல்லோரும் பாராட்டியிருக்கின்றனர். வாழ்த்துகள் - கவிதை வாசிக்கும் பழக்கம் பெருகியதற்கு.

பாராட்டுகள் - ராம்பாலிற்கு.

rambal
16-07-2003, 04:52 AM
எங்கே பெற்றுக்கொள்கின்றீர்கள் உங்கள் கவிப்புலமைக்கான தமிழ்ச்சொற்களை அத்தனையும் சுட்டுசெப்பனிட்ட செம்பொன்னாக இருக்கின்றதே.. .

எனது பார்வைகளை பதிக்க தமிழ் ஒரு சாதனம்.
அனுபவங்களின் வெளிப்பாடாய் வருகின்றன வார்த்தைகள்..
அவ்வளவே..

rambal
16-07-2003, 04:57 AM
அப்படியொன்றும் இலக்கற்று நீங்கள் இருப்பதுபோல் தோன்றவில்லையே, ராம்பால்ஜி!!

===கரிகாலன்

இலக்கு உண்டு.. அதை அடைய போராடும் குணமும் உண்டு..
ஆனால், எத்தனை முறை வீழ்ந்து எழுந்து? என்பதுதான் கேள்வி...
ரத்தத்தில் சூடு இருக்கும் வரைதான்.. அதன்பின் எங்காவது ஒரு இடத்தில்
மூலையில் அமர்ந்து ஏதாவது ஒன்று மனதிற்கொவ்வாது செய்து கொண்டு..
தரை இறங்கிய விமானமாய்..
அப்படி ஒரு நிலை வராது.. ஆனால், அப்படி ஒரு நிலைக்கு தள்ள நினைக்கும்
காலத்தை..
இது உண்மையான அனுபவம்...
என் கையெழுத்தைப் பார்த்தாலே புரியும்..
அனுசரணையாய் விசாரித்த தங்களுக்கும் லாவிற்கும் என் நன்றிகள்..

இளசு
16-07-2003, 05:35 AM
அழகான கவிதை..பாராட்டுகள் ராமுக்கு
அருமையான விமர்சனங்கள்..விளக்கங்கள்... பாராட்டுகள் அனைவருக்கும்!

gankrish
16-07-2003, 11:33 AM
அழகான.. ஆழ்ந்த அர்த்தம் உள்ள கவிதை.

karikaalan
16-07-2003, 12:11 PM
காலம் மாறிவரும் போக்கில், orbit-களும் மாறும். மாற வேண்டும். அப்போதுதான் அடைந்த இலக்கிற்குப் பிறகு அடுத்த இலக்கை நோக்கிச் செல்லமுடியும். வீழ்ந்து எழுந்து, வீழ்ந்து எழுந்து வெற்றி கொளல் வேண்டும். வெற்றி -- நாம் எதிர்பார்த்த -- வெற்றி கிட்டவில்லையானால், அடைந்த தோல்வியையே அடுத்த வெற்றிக்கு அடிக்கல்லாகப் பயன்படுத்தவேண்டும். ஒன்றையே நினைத்துக்கொண்டிருந்தால், வாழ்க்கை நரகமாகிவிட வாய்ப்புண்டு, ராம்பால்ஜி!

===கரிகாலன்