PDA

View Full Version : மேற்கில் ஒரு உதயம்.அமரன்
13-05-2008, 07:40 AM
"என்ன சரசம்மா. பொழுது படமுன்னமே வெளிக்கிட்டாய்" குரலில் அதிர்ச்சி கலந்த பரிவு தொனித்தது. அமாவாசை நாளில் கூட, இரவு ஏழு எட்டு மணிமணிவரை, தோட்டத்தில் வேலை பார்ப்பவள், பௌர்ணமி நாளில், நிலவு காலிக்க முதல் வீட்டுக்குப் போனால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இராது. அதுவும் சரசம்மா மேல கிராமத்து சனங்கள் எல்லாருக்கும் கொள்ளை பாசம். அவளது நடத்தை; பேச்சில் கலந்திருக்கும் கனிவு; எல்லாத்துக்கும் மேலாக கட்டிய புருசனானாலென்ன பெத்த புள்ளையானாலென்ன தப்பை தப்பென்று போட்டுடைக்கும் நேர்மை; இதெல்லாம் சேர்ந்து அவள்மீதான அதீத நேசத்துக்கு காரணமாயின. அந்த அன்பின் ஆழத்தை சுருக்'கமாக சொன்னால் "சரசம்மாவை கைம்பெண்ணாக்கும் அளவுக்கு ஊராரின் பிரியம் இருந்தது."

ஊராரைப் போலவே, சசரசம்மா மீது கொண்ட சுந்தரம் அன்பு, காதலாகி கல்யாணம் வரை சென்றது. காதலிக்கும்போது கற்கண்டாக இருந்த சரசம்மாவின் குணவியல்புகள், மனைவியான பின்னர் சிறிது சிறிதாக கசக்கத் துவங்கியது. சரசம்மா, சுந்தரத்தின் நிறை குறைகளை பொதுவில் போட்டுடைப்பது, அவனுக்கு மூக்குடைபடுவது போல இருக்க உள்ளுக்குள் குமைந்தான். ஊர்ச்சனம் வேறு எல்லாத்திலும் மூக்கை நுழைத்து, சரசம்மாவின் பக்கம் சாய்ந்து, அவனை கொடுமைக்காரன் என்று பட்டம் சூட்டிய போது இனந்தெரியாத உணர்ச்சிக்கு அடிமையானான். அன்றும் அப்படித்தான்..

மெல்லிய வார்த்தை வாதம், ஊர்ப்பெருசுகளால் ஊதப்பட்டு தடித்து விட, சரசம்மாவிலிருந்து வழுக்கிவிழுந்த "பேசாமல் பிரிந்து விடலாம்" என்ற வார்த்தைகளால் சுந்தரம் காயப்பட்டான் . துடித்தான்.. தன் நேசத்திற்குரிய எட்டு மாதக் குழந்தையை ஒரு நொடி மறந்தான். நிரந்தரமாகப் பிரிந்தான்.

"இண்டைக்கு வெய்யில் அதிகமாக சுட்டுட்டுது. லேசாக தலையிடிக்குதக்கா. அதான் வெள்ளனவே வீட்டை போறன்" குரலைக் காற்றில் கரைத்தாள் சரசம்மா.. விவரம் தெரிஞ்ச நாள் முதலாக, தினமும் வெயிலில் குளித்து கறுத்த தோலுடைய அவளுக்கு, வேக்கையால் தலைவலின்னு சொன்னால் யார்தான் நம்புவார்கள். என்னவோ பிரச்சினை என்று புரிந்தவள் பார்வையால் ஆறுதல் சொல்லியவாறு மௌனமாகிக் கடந்தாள்.

சுந்தரத்தின் மரணத்தின் பின்னர் விஷேசங்களிலிருந்து விலகி இருந்த சரசு, சுந்தரத்தின் அக்கா பொண்ணு, தன் மஞ்சள் நீராட்டுக்கு, கட்டாயப்படுத்தி கூப்பிட்டதால் போனாள். சடங்குகள் சம்பிராதயங்கள் நடந்தபோது ஓரமாக நின்று கவனித்தவளை திடுக்கிட வைத்தது "தாய்மாமன் முறை செய்யவேணும்; தாய்மாமனைக் கூப்பிடுங்கோ" என்ற பெரிசொன்றின் குரல். திடுக்கிடல் நிமிர்த்தியபோது, சுந்தரத்தின் குடும்பத்தினர் அத்தனை பேரும், ஒத்தை ஆம்பிளைப் பிள்ளையை இழந்த சோகத்தை விழிக்கடை நீர் சுண்டிச் சொல்லினர். கிட்டமுட்ட மறந்திருந்த சுந்தரத்தின் மறைவு வலி அந்த நொடியில் வலுவாகத் தாக்கி, சரசம்மாவின் தலையில் வலியாகக் குடிபுகுந்தது.

"ஆ" கத்திய படி காலைத் தூக்கினாள். குத்திய முள்ளை எடுக்க விடாமல் தலையில் இருந்த புல்லுக்கட்டு இடைஞ்சல் செய்ய மண்பாதையில் காலைத் தேய்த்தவாறு நடந்தாள். கடந்த சிலநாட்களாக அவளையே அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஒருவாரகாலமாக குடிகொண்ட வலியின் தாண்டவத்தைக் கட்டுப்படுத்த முயன்று இன்று தோற்றுவிட்டாள். இந்த ஏழு நாளும், ஏழுவயது மகனில் சீறி விழுந்தாள். பெத்த ஆத்தா, அப்பன் மேல் அனலைக் கொட்டினாள். நெருக்கமான அனைவருக்கும் நெருப்பை உமிழ்ந்தாள். சின்னச் சின்ன விசயங்களுக்காக வயக்காட்டு வேலையாட்களை கடிந்து கொள்ள, முகச்சுழிப்புகளை காணிக்கையாகப் பெற்று படியளந்தாள். அந்தளவுக்கு இருந்த மன உளைச்சலுடன், இப்போது காலேறிய முள்ளு நோவும் சேர்ந்துகொள்ள அதிக எரிச்சலை அனுபவித்தாள்.

"என்ன சரசு. என்ன யோசனை" மாட்டுக்கார வடிவேலுதான் கேட்டான்.
பட்டியில் அடைபடப் போகும் விரக்தியில் மாடுகள் கிளப்பிய புளுதி நெடி நாசியைத் துளைத்தது. முதன் முதலாக கிராமத்து கரிசனை, மண்வாசனை இரண்டும் சரசம்மாவை இம்சித்தது. முதலில் சொன்ன பல்லவியை மறுபடியும் பாடினாள்..

அவளது உட்புழுக்கத்தை, மொட்டைப் பனையில் இலைகளாக இருந்த பச்சைக்கிளிகள் உணர்ந்தன போலும். காற்றில் படபடத்து மறைந்தன. வீட்டண்டை ஆயில்மரத்தின் கீழ் விளையாடிய சிறார்களின் இனிமை மொழி, பஞ்சு கழன்ற காது குடையும் குச்சியால் காது குடைந்த வேதனையைத் தந்தது.

"ஏப்பா.. உதைகாலிக்கு பக்கத்தில போகாதை எண்டு எத்தனை தரம் சொல்லுறது" என்று, வீட்டின் பின்பக்கம் நின்ற தகப்பனை செல்லமாக வைஞ்சபடி, வீட்டு வளவின் பின்பக்க படலையால் உள்ளே நுழைந்தாள். சுமையை இறக்கினாள். எல்லாரையும் முட்டித்தள்ளும் மாடு, வழக்கம்போலவே இவளைக் கண்டு சாந்தமாகி, போட்ட தீனியைத் தின்னத் துவங்கியது.. மாட்டை தடவிக் கொடுத்துவிட்டு, நொண்டியபடி முத்தத்துக்கு வந்தபோது "என்னம்மா என்னாச்சு" என்று பதறி வரவேற்றான் அவளது மகன்..

"அதொண்டுமில்லை..முள்ளுக் குத்திப் போட்டுதடா" சொல்லிக்கொண்டு ஆயாசமாக முத்தத்து மல்லிகைப் பந்தலில் அமர்ந்தாள்.

"குத்தின முள்ளை எடுக்காட்டால் ஆணியாக்கி நடக்கேலாமல் போகுமெண்டு பாட்டி சொல்லுறவா"..

சொல்லியவன் அவளைக் குத்திய முள்ளை அகற்ற ஆரம்பித்தான்.. முள்ளு சிறிது சிறிதாக வெளியேற, தன்னைப் பிடித்தாட்டிய வலி விட்டகன்றதாக உணர்ந்த சரசம்மாவின் கண்களுக்கு, மகனுக்குப் பின்னாலிருந்த செக்கச்சிவந்த மேல்வானம் இதம் தநதது.

Keelai Naadaan
14-05-2008, 05:03 PM
நல்ல மண்வாசனையுடன் கூடிய யதார்த்த சிறுகதை.
கதையில் சற்று சோகம் விரவியிருந்தாலும் நம்பிக்கை ஊட்டும் விதமாக முடித்திருப்பது சிறப்பு.
நன்றிகள்

அமரன்
17-05-2008, 11:24 AM
எனது பேச்சுத்தமிழ் இரண்டுங்கெட்டான் நிலையில்.. ஈழவழக்கும், தமிழக வழக்கும் கலந்திருக்கும். அதனால வட்டார வழக்கில் எழுத முயன்று குவிந்த குப்பை அதிகம். குப்பைக்குள் இருந்து மீள் சுழற்சிப்பாவனைக்காக வந்தது இந்தக்கதை. பாவனைக்கு நன்றி கீழைநாடான்..

பாரதி
19-05-2008, 03:49 PM
நல்ல கருத்துள்ள கதை அமரன். பாராட்டுக்கள்.

ஆங்காங்கே தென்படும் சில எழுத்துப் பிழைகள், நடையில் இருக்கும் சில சிறிய பிறழ்வுகள் ஆகியவற்றை நீக்கி அமைத்தால் இன்னும் சிறப்பு பெறும்.

வட்டார வழக்கில் நீங்கள் எழுதியவற்றையும் இங்கே தாருங்கள் அமரன்.

அமரன்
24-05-2008, 02:08 PM
நன்றி அண்ணா..

எழுத்துப் பிழைகளை விரைவில் களைந்து விடுகின்றேன். நடையையும் விரைவில் சீரமைத்து விடுகின்றேன்.

இதுவரை காகிதங்களில் எழுதியதில்லை. மனதில் எழுதி இணையத்தில் பதிப்பேன். பதிக்காதவை மனக்குப்பையில் சேரும்.. மனக்குப்பையிலே போட்ட வட்டார வழக்கில் அமைந்த கதைகளை தர முயல்கிறேன்..

இளசு
23-07-2008, 09:33 PM
நாள்பட்ட மனவலிக்கும் சிலநேரம் தலைவிரித்தாடும் ஆவேச படலங்கள் உண்டு.

உசுப்பிவிட சடங்குவீடு போல சில ஊதல்களும் உண்டு..

கதை சொன்ன சேதியைவிட

1) புற்கட்டுச்சுமையால் கால்முள்ளை வரப்பில் தேய்த்தது
2) பனையோலை இலையாட்டம் பச்சைக்கிளிகள்
3) பஞ்சுபோன குச்சி போன காதின் வலி
4) இதம் தரும் கிராமத்துக் கரிசனம் இன்று ரணம் தருவது..

என நுண்ணிய பதிவுகளில் மனம் லயித்தே விட்டேன்.

ஒரு கருணைமிக்க, கவனம் கூர்ந்த மனதால் மட்டுமே இவற்றைக்
கிரகித்து வெளியிட இயலும்..

உச்சிமோந்து வாழ்த்துகிறேன் உன்னை.. அமரா!

பூமகள்
24-07-2008, 07:00 AM
பெரியண்ணாவின் விமர்சனத்தை மீறி எழுத என்னில் ஏதும் பாக்கியிருப்பதாக தெரியவில்லை..

1) புற்கட்டுச்சுமையால் கால்முள்ளை வரப்பில் தேய்த்தது
2) பனையோலை இலையாட்டம் பச்சைக்கிளிகள்
3) பஞ்சுபோன குச்சி போன காதின் வலி
4) இதம் தரும் கிராமத்துக் கரிசனம் இன்று ரணம் தருவது..
இப்படியான நுட்பமான உணர்வுகளை குட்டி குட்டியாக ஆங்காங்கே தூவி இருப்பது மனம் லயிக்கச் செய்கிறது.. மிகவும் ரசித்தேன்..

மிக மெல்லிய வலியைக் கூட அடுத்தவர் மனத்திலிருந்து உணரக் கூடிய ஒருவரால் மட்டுமே இவ்வகை படைப்புகள் எழுத முடியும்..

உங்களின் பரம ரசிகை நான்... என்றென்றும்...

குப்பைகளென்று உங்களுக்கு தோன்றுபவை.. எங்களுக்கு வைரங்களாக தோன்றும்... விரைவில் அனைத்து படைப்புகளையும் இங்கு பதியுங்கள் என்று அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்..

மெச்சுகிறேன்.. உங்களை நினைத்து பெருமையும் படுகிறேன்..

பாராட்டுகள் அமரன் அண்ணா...!! :)

சிவா.ஜி
24-07-2008, 07:40 AM
வலிமையான இதயம்தான். வலியைத்தாங்கும் இதயமும்தான். ஆனால் இழப்பின் தாக்கம் இறுக்கும்போது, இருக்கும் உறுதி இளகிவிடுகிறது. மகன் உருவத்தில் மறைந்த கணவனைக் கண்ட சரசம்மாவின் மேற்கு உதயம் அவளுக்கு நல்ல விடியலைக் கொடுக்கட்டும்.

சரளமான நடை. வட்டார வழக்கு, அழகான எதார்த்த உவமானங்கள் என கதை தனித்தன்மையைக் கொடுத்திருக்கிறது. வாழ்த்துகள் அமரன்.

அமரன்
24-07-2008, 10:34 PM
ஆஹா அண்ணா!
அச்ந்தேன் உங்கள் ஊட்டத்தால்.. அசல்த்தேன்!
ஆ!பத்தில் சொல்லி இருப்பேன்.. சின்ன வயசில் பார்த்ததை, மருகியதை, பொங்க நினைத்ததை, சொல்ல விரும்பியதை அடைகாத்து இப்போது தருகிறேன்.. அவை வற்றும் போது என் படைப்புகளின் பாதை மாறுமோ தடைப்படுமோ.. நான் அறியேன்..

mukilan
24-07-2008, 10:51 PM
எனக்கு ஈழத்தமிழ் கேட்பதற்கு இனிமையான சங்கீதமாகவே எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. இந்தக் கதையும் அவ்வாறான இனிய உணர்வைத் தந்ததில் மகிழ்ச்சி.

வட்டார மொழி வழக்கில், கிராமத்தில், ஒரு கைம்பெண்ணின் உள்ளத்து உணர்வுகளை ஆங்காங்கே உவமைகளோடு தந்த பாணி அழகு. நீங்கள் மேலும் பல படைக்க வேண்டும் என்பது என் விருப்பம். பாராட்டுக்கள் அமரன்.

அமரன்
25-07-2008, 12:29 AM
அண்ணன் தடம் பற்றி பூமாலை சூட்டிய பாமகள்,
கருப்பிடித்து உரமிட்ட கதைப்பேரசு சிவா
இவரைப்போல எழுதனும்னு நினைக்க வத்தவர்களில் ஒருவரான இனிய முகில்ஸ்..
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..

MURALINITHISH
19-08-2008, 09:40 AM
விதவையின் எண்ணங்களை வெளிபடுத்தில விதம் அருமை

அமரன்
23-08-2008, 10:31 AM
மிக்க நன்றி முரளி.
கதைகளைப் படிக்கின்றீர்கள்; கருவை நாடி பிடித்துக் கச்சிதமாக நறுக்கென்று கருத்திடுகின்றீகள். நீங்கள் ஒரு கதைப்பிரியர் என்பதை நிரூபிக்கின்றீர்கள். கதைப்பிரியரான உங்களால் நிச்சயமாக சிறந்த கவிதைகளைத் தர இயலும். எப்போ தருவீங்க....

MURALINITHISH
01-09-2008, 08:40 AM
நீங்கள் ஒரு கதைப்பிரியர் என்பதை நிரூபிக்கின்றீர்கள். ..

ஐயோ அதை ஏன் கேட்குறீங்க படிக்கிற வயதில் ஏதாவது கதை புத்தகம் கையில் கிடைத்தால் போதும் படித்து முடிக்கும் வரை வேறு எதிலும் மனம் செல்லாது சாப்பிடும் போது தூங்கும் போது என்று படிப்பேன் சில வேளைகளில் பாடபுத்தகங்கள் நடுவில் வைத்தும் படிப்பேன்


உங்களால் நிச்சயமாக சிறந்த கவிதைகளைத் தர இயலும். எப்போ தருவீங்க....

கதைகள் தர இயலும் ஆனால் உங்களை மாதிரி சிவா மாதிரி உயிரோட்டமான கதைகள் தர இயலுமா என்றால் சந்தேகம்தான்


எப்போ தருவீங்க....

அதிகபடியான வேலைகள் காரணமாக படிக்கவே நேரம் இல்லை இதில்படைப்பு என்பது கடினம்தான் முதலில் இங்கு உள்ளே கதைகள் முழுவதையும் படித்துவிட்டுதான் அடுத்து எல்லாம்