PDA

View Full Version : காணாமல் கண்டதை...

நாகரா
12-05-2008, 03:21 PM
அதிகாலையில்
தூரத்தில்
சிரிக்கும் செவ்வரளிப் பூக்களை
விழிகள் கேட்டு மகிழும்

அருகே
பாதையில்
உதிர்ந்து கிடக்கும்
பாரிஜாத மலர்களை
விழிகள் ஒவ்வொன்றாய்ப் பொறுக்கும்

காற்றில் மணக்கும்
பட்டாம்பூச்சிகளை
விழிகள் நுகர்ந்து கிறங்கும்

பசிய புல்வெளியில்
பரிமாறப் பட்டிருக்கும்
பனித்துளிகளை
விழிகள் நக்கிச் சுவைக்கும்

கேட்டும்
தொட்டும்
நுகர்ந்தும்
சுவைத்தும்
போதையேறிய விழிகள்
பார்க்க மறக்கும்

காணாமல் கண்டதைக்
கவிதையாய்ப் பேச
விரல்களிலிருந்து
நாவு நீளும்

சாலைஜெயராமன்
12-05-2008, 03:53 PM
வித்தியாசமான சிந்தனைக் கருவுடன் வெளியிடப்பட்டிருப்பது பற்றி மகிழ்ச்சி, பாராட்டுக்கள்.

ஒவ்வொரு புலனும் தன் சுயதொழிலைத் தவிர்த்து இன்னொன்றைப் பற்றிப் பணியாற்றுவது போல் வடித்தது அருமை.

"காற்றில் மணக்கும் பட்டாம்பூச்சிகளை விழிகள் நுகர்ந்து கிறங்கும்"

காற்றில் மணக்கும் பட்டாம் பூச்சிகள் சற்று விளக்குங்களேன்

நாகரா
12-05-2008, 04:10 PM

ஐயா, உம் பின்னூட்டத்துக்கு நன்றி.

வண்ணத்துப்பூச்சியின் வண்ணத்தை வாசமாக்கி உம் நாசியில் வாசி வழியே சேர்க்கவே இவ்வாறு கவிதையில் பேசியிருக்கிறேன். வெளியே ஊர்ந்த கம்பளிப்புழு தன்னுள்ளே ஒடுங்கிக் கூட்டுப் புழுவாகித் தியானஞ் செய்ய, அதிசயமாய்த் தான் பறக்கும் வண்ணம், மனிதமும் தேவமாய்ப் பரிணமிக்கும் வாசத்தை உம் நாசி உணராதோ!

சுகந்தப்ரீதன்
16-06-2008, 01:33 PM
காணாமல் கண்டதைக்
கவிதையாய்ப் பேச
விரல்களிலிருந்து
நாவு நீளும்
கண்டதை பற்றி எழுதுவது சரி..!!
காணமல் கண்டதை பற்றி எழுதுவது என்பது கண்டு உணர்ந்தவர்களால் மட்டுமே முடியும்.. நானும் முயற்சிக்கிறேன் கண்டுக்கொள்ள.. நன்றி நாகரா அண்ணா..!!

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா..!!
நான் சொல்வது சரிதானே அண்ணா..?!

நாகரா
19-06-2008, 03:08 PM
உம் பின்னூட்டத்துக்கு நன்றி சுகந்தத் தம்பி