PDA

View Full Version : கனவே கலைந்து விடு..



rambal
12-07-2003, 06:44 PM
கனவே கலைந்து விடு..

போலி சுகங்கொடுத்து
மனதை கற்பழிக்கும்
வஸ்து நீ..

இல்லாத பிரபஞ்சக் கூரைக்கு
வண்ணம் அடிக்க வைக்கும்
பித்தலாட்டக்காரன் நீ..

நட்சத்திரங்கள் குத்தி
நிதர்சன உலகில் ரணமெனும்
ஆபரணம் சூட்டும் கொடியவன் நீ..

இல்லாததை இருப்பதாய்...
இருப்பதை இல்லாததாய்..
கொடிய சிந்தனைக்காரன் நீ..

நிலா பிடிக்கப் போய்
வாழ்க்கை எனும்
பள்ளத்தாக்கில் வீழ்த்தாட்டியவன் நீ..

கனவு எனும் பெயர் சூட்டி
என்னை அணு அணுவாய்
கற்பழித்தது போதும்....

என் கண் கனா காணா
தூரத்திற்கு ஓடிப் போய் விடு...

நான் வாழ வேண்டிய வாழ்க்கை
வழியெங்கும் முட்களொடு
எனக்காக தவங்கிடந்து
காத்துக் கொண்டிருக்கிறது..

ஆதலினால் எனை விட்டுப் போ...

karikaalan
13-07-2003, 10:45 AM
கனவு கண்டு அந்தக்கனவை நனவாக்கும் முயற்சியே வெற்றிப்பாதையை
அமைத்துக்கொடுக்கும் என்பர். தங்களது கனவு வேறு போலும்!

நல்ல கவிதை, ராம்பால்ஜி. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

anbu
13-07-2003, 12:56 PM
கனவுகள் பல கண்டு வாழ்க்கையில் பல சாதனைகளை நிறைவேற்றிய அறிஞர்கள் பலர் ஆனால் உங்கள் கனவு உங்களை வாட்டுவதாக சொல்லி இருப்பதும் ஒரு புதுமைதான்.

"நான் வாழ வேண்டிய வாழ்க்கை
வழியெங்கும் முட்களொடு
எனக்காக தவங்கிடந்து
காத்துக் கொண்டிருக்கிறது"..

இந்த வரிகளைப் படிக்கும்போது என் நெஞ்சில் முட்கள் குத்துவதுபோல இருக்கிறது.

பாராட்டுக்கள் ராம்பால்.

kuruvikall
13-07-2003, 01:11 PM
கனவோடு கனவாக
கனத்த வாழ்க்கை கலையாது
காண வேண்டும் யதார்த்தக்கனவு
காணும் கனவு மெய்ப்பட
கனமாய் உழைக்க வேண்டும்
அப்படித்தானே கவிஞரே!

உங்கள் கவிதை வாழ்க்கைக்குப் பலன் தரு பொருள் உரைக்கிறது வாழ்த்துக்கள்!

rambal
13-07-2003, 06:15 PM
கனவு மெய்ப்பட வேண்டும் என்பதே என் ஆசையும்..
அதே சமயம்
வயதிற்கு மீறி கனவு கண்டு வாழ்க்கையை தொலைத்துவிடக்கூடாது எனும் இந்த சத்தம் ஓங்காரமாய் ஒலித்துக் கொண்டே இருப்பதால்தான்..
கனவுகளை கலைந்து செல்லச் சொல்கிறேன்...

mayuran
14-07-2003, 06:31 AM
வாழ்கையின் கனவுகள் என்றும் முட்கள் தான் அதன் வேதனை தான் வெற்றியின் பாதை.....

lavanya
14-07-2003, 06:42 AM
அப்துல் கலாம் போன்ற பெரிய மேதைகள் எல்லாம் கனவு காணுங்கள்
என்று எங்கு பேசினாலும் சொல்லிக்கொண்டிருக்க நீங்கள் இப்படி
பெஸிமிஸ்ட்டாக சொல்லியிருப்பது நிறைய யோசிக்க வைக்கிறது...
பாராட்டுக்கள் ராம்பால்ஜி

Narathar
14-07-2003, 08:14 AM
FORWARD TO : அப்துல் கலாம்

gankrish
14-07-2003, 09:35 AM
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
.................

வாழ்க்கையே கனிவில் தான் சென்று கொண்டு இருக்கிறது.
(உத).. எனக்கு இந்த வருஷம் நல்ல ப்ரமோஷன் கிடைக்கும்
நான் இந்த ஆண்டு நிச்சயம் கார் வாங்குவேன்
வெளிநாடு செல்வேன்....
இப்படி பல கனவுகள். அந்த கனவுகளை ஏன் குறை சொல்கிறீர்கள் ராம்பால்.

நீங்கள் கூறுவது எப்படி உள்ளது என்றால்..
`கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் மேகங்கள்"....

noveltv
15-07-2003, 05:12 AM
அருமையான கவிதை, திரு.ராம்பால்....

கனவுகள் ஆசையின் மறுபிறப்பு, கனவுகள் இல்லா யதார்த்த
வாழ்க்கை யாருக்கும் துன்பம் தராதது. இன்பம் இல்லையாயினும்
நிம்மதி இருக்கும். நல்லவர்களுக்கு கனவு நல்லதல்ல!

வாழ்த்துக்கள்... கனவுகள் இல்லா வாழ்க்கைக்கு!

karavai paranee
15-07-2003, 05:29 AM
வணக்கம்

கனவு எட்டிப்பிடிக்கமுடியாத உயரத்தையும் தொட்டுவிட்டுத்திரும்பும்
சாதிக்கமுடியாதவற்றை கைநழுவிப்போனவற்றை யாரும் அறியாது அனுபவிக்க வைப்பது

அந்த வகையில் எனக்கு கனவு பிடிக்கும் (பகல்கனவு அல்ல) அதை கலைந்துபோக சொல்லமாட்டேன்

நன்றி நண்பா ராம்
தொடரட்டும் உங்கள் கலையமறுக்கும் கனவு

கணணிப்பித்தன்
17-07-2003, 01:42 PM
கனவிலயாவது சிம்ரனோட நடனமாட விடுங்கப்பா :P
அதையும் கலைச்சு.....வேண்டமே Pls :wink:

பாலமுருகன்
17-07-2003, 02:11 PM
உங்கள் கவிதை வரிகளை படிக்கும் போது எனக்கு இந்த பாடல் நினைவுக்கு வருகிறது. (ஸ்டார் படத்திலிருந்து)

கனவுகள் மட்டும் இல்லையென்றால்.. கற்பனை வரைவது நின்றுவிடும்.
கற்பனை வரைவது நின்றுவிட்டால்....கனவுகள் நம்மை கொன்றுவிடும்.

ஆக.. லட்சியத்தை அடைய கனவு அடிப்படை.. கனவை வைத்து கற்பனை வரைவோம் ..வரைந்த கற்பனையை நோக்கி போரடுவோம். விட்டுவிட்டால் வழ்க்கை கேள்விகுறிதான்!!!!??????

நெஞ்சைத்தொடும் வரிகள். வாழ்த்துக்கள் ராம்பால் அவர்களே. அது என்ன வாழவேண்டிய வாழ்க்கை முட்களோடா இருக்கிறது? மலர்வனம் அல்லவா?
இல்லை நான் தவறாக புரிந்து கொண்டேனா?

பாலமுருகன்
17-07-2003, 02:13 PM
கனவிலயாவது சிம்ரனோட நடனமாட விடுங்கப்பா :P
அதையும் கலைச்சு.....வேண்டமே Pls :wink:

உங்க லொல்லு தாங்க முடியல கனினி பித்தன். சிம்ரன் தானா உங்க கனவுல?
அனுபவிங்க!!!! நல்லா!!!!

karavai paranee
17-07-2003, 03:17 PM
இன்னும் எத்தனை நாளைக்கு அனுபவிக்கிறது
அனுபவியுங்கள் பித்தா திருணமத்தின் முன்புவரைக்கும்தான்

Tamil_Selvi
19-07-2003, 09:21 PM
கவி இனிமையிலும் இனிமை

வாழ்த்துக்கள்!

- தமிழ் செல்வி

விகடன்
02-05-2008, 09:07 PM
அழகான வரிகள். அத்தனையும் நிஜமே!!!



போலி சுகங்கொடுத்து
மனதை கற்பழிக்கும்
வஸ்து நீ..

இல்லாத பிரபஞ்சக் கூரைக்கு
வண்ணம் அடிக்க வைக்கும்
பித்தலாட்டக்காரன் நீ..
இந்தவரிகள் கனவுலகத்தின் பிரதிபலிப்புக்கள்தான். அதீதமாக நம்பினால் வரும் கேடு. முழுமையாக என்னை கவர்ந்த வரிகள்தான்.



ஆதலினால் எனை விட்டுப் போ...

இருந்தாலும், வாழ்க்கையில் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திப்பவனுக்கு அதுதான் ஒரே ஒரு ஆறுதல். நிஜத்தில் நடைபெறாவிட்டாலும் கனவில் நடைபெறுகிறதே!!! அதுவே மறுநாள்ப்பொழுதை இனிமையாக்கி புத்துணர்ச்சியையும் வழங்கிவிடுகிறது. ஆகையால் கனவை வெறுமனே ஒதுக்கிவிடவும் கூடாது.




FORWARD TO : அப்துல் கலாம்
அப்துல் கலாம் சொன்ன கனவு காணுதல் வேறு. இது வேறு.