PDA

View Full Version : புத்த ஜோதிஷீ-நிசி
01-05-2008, 01:16 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/PuthaJothi.jpg


பச்சைக் கிளியொன்று
மிச்ச சிறகுகளோடு
வெளியில் வந்து..

அடுக்கிவைத்த
கட்டுகளைச் சுற்றி உலாவி,
கலைத்துபோட்ட
சீட்டுகளுக்குள்ளே துலாவி,

ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.

சொன்ன சொல் கேட்டால்,
தின்ன நெல் தருபவனிடம்
கொடுத்துவிட்டு,

மீண்டும் திரும்பியது
கூண்டுக்குள்ளேயே!!

போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????


ஷீ-நிசி

ஓவியன்
01-05-2008, 04:47 PM
ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.

மூளை நம்பாதே என்று கூறினாலும், எதிர்காலத்தை அறியும் ஆவலும் எதிர்கால வாழ்க்கையை திறம்பட முன்னெடுக்க வேண்டும் என்ற முனைப்புமே இந்த சின்னஞ்சிறு கிளி கொத்தியெடுக்கும் துண்டுச் சீட்டுக்காக காத்திருக்கச் செய்கின்றது....

தன் இனத்தினர் சிறகடித்து பறக்கையில், தன் மிஞ்ச இறகுகளின் அடையாளத்தினாலேயே ‘கிளி' என்ற பெயரோடு கூண்டுக்குள் அல்லாடும் இந்த ஜீவன் தன் பெயருக்கு முன்னரே ஒரு சீட்டு எடுத்துப் பார்த்திருந்தால், இந்த கிளி ஜோசியக் காரனிடம் அகப்பட்டிருக்குமா...??? :rolleyes:


போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

ஷீ..!!

எனக்கொரு சந்தேகம், போதிமரத்தின் கீழ் புத்தனமர்ந்து ஞானியானானா??, இல்லை புத்தனமர்ந்தமையால் அது போதி மரமானதா..??

அழகான கருவைச் சுமந்து வந்த அழகுக் கவி :icon_b:, ஆனால் ஷீயின் வழமையான எதுகை மோனை பொருத்தம் இந்தக் கவியில் கொஞ்சம் குறைவோ என்றொரு எண்ணமெனக்கு...

அனுராகவன்
02-05-2008, 01:09 AM
நன்றி ஷீ-நிசி அவர்களே!!

புத்தர் அடைந்த
இடம் போதி
மரம் ஞானத்தை...
போதி மரம்
அடைந்தது புகழ்
அவரின்
ஞானத்தால் ....
புத்தரால்
போதிமரத்திற்குதான்
பெருமை..

ம்ம் நன்றி கவிஞரே!!
மிக அழகிய கவிவரிகள்...
அதனுடன் படமும்...
அசத்தல் அருமை...

ஷீ-நிசி
02-05-2008, 01:41 AM
நன்றி ஒவியன்.

புத்தனமர்ந்ததால் தான் மரம் போதி மரமானது. நாம் அவனுக்குப் பின்னான காலத்தில் அதை சொல்வதாக இருப்பதால், அதை போதி மரமென்று குறிப்பிடுவதில் தவறிருப்பதாக தெரியவில்லை. அதிலும் கவிதைக்கு இவற்றிலெல்லாம் தனி சலுகை உண்டு என்பது தெரியாதா ஓவியன்?! பிழையை 'றி' காட்டியமைக்கு நன்றி.

மற்றும் அனு..

நாகரா
02-05-2008, 03:31 AM
வான சுதந்திரம் போன கிளி
ஞான சுதந்திரம் போன மனிதன்
கிளி ஜோசியத்தால்
ஐந்துக்கும் ஆறுக்கும்
மொத்தமாய் நட்டமே!

கவிதை அருமை ஷீ-நிசி, வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
02-05-2008, 07:27 PM
நன்றி நாகரா!

kavitha
06-05-2008, 10:57 AM
மூட நம்பிக்கைகளுக்கு அறிவுக்கண் திறக்கவைக்கும் கவிதை. பாராட்டுகள் ஷீநிசி.

ஆதி
06-05-2008, 11:09 AM
புத்தனமர்ந்ததால் தான் மரம் போதி மரமானது. நாம் அவனுக்குப் பின்னான காலத்தில் அதை சொல்வதாக இருப்பதால், அதை போதி மரமென்று குறிப்பிடுவதில் தவறிருப்பதாக தெரியவில்லை.ஷீ, எனக்கு தெரிந்ததை இங்கு பகிரலாம் என்று ஆசைப்படுகிறேன்..

புத்தம் ஜெய்னம் இரண்டின் வேரும், அருகதேவனால் தோற்றிவிக்கப் பட்ட அருக மதத்தில் இருந்து விரிந்ததே..

அருக தேவனின் கொள்கைகளை, புத்தம் போதி மரத்தடியில் அமர்ந்து கற்றான் பிறகு அவ்வழியில் தன்னுடைய எல்லாம் பூஜ்ஜியம் என்கிற கருத்தையும் இணைத்து நடக்கலானான், புத்தனின் குரு அருக தேவனே..

போதி - வடமொழிச்சொல்

போதி மரம் என்றால் அரச மரம் தான் வேறொன்றுமில்லை, அரச மரத்தை அக்காலத்தில் இருந்தே நாமும் வழிப்பட்டுதான் வந்திருக்கிறோம்..

ஷீ-நிசி
06-05-2008, 02:00 PM
நன்றி கவிதா...

நன்றி ஆதி! தகவலுக்கு!

ஆதவா
05-06-2008, 06:08 PM
புத்தர் போதியினடி நிழலின் காரணமாக அமர்ந்திருக்கக் கூடும். ஞானம் வழங்கியது மரமல்ல. அவர் வாழ்வின் பால் கொண்டிருந்த அறிவு. தன்னைத் தேடிக் கொண்டதன் விளைவு. ஜோதிடனுக்கோ சுயத்தைப் பற்றி சிந்திக்கவேண்டிய அவசியமிராது போகிறது. அடுத்தவன் விதியை துண்டு சீட்டுக்குள் அடுக்கி வயிற்றைக் கழுவ இருப்பதே தொழிலாகிறது.

பறவை தன்னை விட்டு பறந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக சிறகுகளை நறுக்கிவிடுகிறான் ஜோதிடன். அதை முதல் வரியில் எதுகையாக அலங்காரம் அமைத்தமை வெகு சிறப்பு.

கிளியின் நடமாட்டம், மெல்ல உலாவியும் துலாவியும் தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியின் கண் ஏதாகிலும் ஒரு சீட்டை எடுத்துத் தருவதும்..... அடுத்தடுத்த வரிகள் அழகாக அடுக்கப்படுகின்றன. பறக்க இயலாமல் முடமாக்கப்பட்ட நிலையில் ஜோதிடனின் சொற்களைக் கேட்டாகவேண்டிய நெருக்கடியில் கிளி தள்ளப்படுகிறது..... வேறு வழியில்லை. கூண்டை அடைகிறது கிளி, அடைக்கப்படுகிறது கதவு.

கவிதை விட்டுப் போன கேள்விக் குறிகளில் நிரப்பவேண்டியவை எத்தனையோ. ஆனால்

கவிதையின் வரவு இக்காலத்திற்கு ஏற்றவகையில் இல்லை. இக்கவிக்கு மாற்றாக, அம்மரத்தினடி ஜோதிடம் கேட்க எவருமில்லாமல் உறங்கும் மானிடனை குறித்து எழுதியிருக்கலாம். கிளி ஜோதிடங்கள் அழிந்து வரும் இக்காலத்தில் மூடநம்பிக்கையெனும் பெயரில் ஒரு பறவையின் அடிமைத்தன ஒழிப்பை வரவேற்பதா? அல்லது வேறெத் தொழிலும் பழக்க விரும்பாத முடியாத ஜோதிடனின் நிலை கண்டு வருந்துவதா? கிளிக்கே வெளிச்சம்.

கூடுதலாக, அருக தேவன் அருக மதம் ஆகியவை எனக்குப் புதியதாக இருக்கின்றன. புத்த, சமண மதங்கள் கிட்டத்தட்ட ஒரேகாலத்தில் தோன்றியவை என்றாலும் சரியான தோற்றுவிப்பாளர்களாக புத்த, வர்த்தமானர்களைக் குறிப்பிடுகிறார்கள். வர்தமானருக்கு முன்பு 24 தீர்த்தங்கரர்கள் (சரியான சொல்லா என்பது தெரியவில்லை) இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் மகாவீரருக்கு முந்திய தீர்த்தங்கரர் தவிர ஏனையவரின் வரலாறு காணக்கிடைக்கவில்லை.. வேறெந்த நிலையிலும் அருக மதத்தைக் கேள்விப்பட்டதில்லை.

இன்னும்... புத்தர் ஒரு முனிவரிடம் அல்லது ஒரு குருவிடம் துன்பத்தின் காரணத்தைத் தெரிந்து தெளிந்துகொள்ள முயற்சித்ததும், அது தோல்வியுற்று தன் ஞானத்தின் மூலமே அவற்றிற்கான காரணங்கள் அறிந்ததும் வரலாறில் உண்டு........

போதி - அரச மரம்......... உண்மை இதுவாக இருப்பின் தகவலுக்கு நன்றி ஆதி.

ஆதி
05-06-2008, 06:54 PM
போதி - அரச மரம்......... உண்மை இதுவாக இருப்பின் தகவலுக்கு நன்றி ஆதி.

அருளி ஐயாவை பற்றி கேள்விப்பட்டிருக்குறீர்களா ஆதவா ? தமிழேறு தேவநேய பாவாணருக்கு பிறகு வேர்ச்சொல் பற்றிய ஆராச்சியில் ஈடுப்பட்டிருப்பவர்.. இவருடைய அருங்கலை சொல் அகரமுதலி மூன்றாண்டுக்களுக்கு முன்பு தஞ்சை பல்கலைக்கழகாத்தால் வெளியிடப்பட்டது..


அவரின் ஒரு பேச்சில்தான் போதி மரம் என்றால் அரச மரம் என்பதை அறிந்தேன்..

தா.சரவணத்தமிழன் ஐயா.. தமிழ் நாடு பாட நூல் திட்டத்தின் பொறுப்பாளராக இருந்தவர்.. இவர் எழுதிய யாப்பு நூல் மதுரைக் காமராஜர் பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆராச்சிக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது, பல பெரிய எழுத்தாளர்கள் இவரின் விமர்சனங்களைக் கேட்டு இன்றும் நடக்கின்றனர், நம் முதல்வரின் சந்தத்தமிழ் பேச்சு அண்ணாவிடம் இருந்து வந்த சாரமே அன்றி சுயமில்லை என்று அவரிடமே நேரடியாக சொன்னவர்.. அருக தேவனை பற்றிய சரித்திரத்தை எனக்கு அறிமுகமாக்கியவரே இவர்தான்.. நான் கல்லூரியில் படிக்கும் பொழுதில் எல்லா மதநூல்களியும் திருக்குறளோடு ஒப்பிட்டு ஒரு சின்ன கட்டுரை சமர்ப்பித்தேன் அதற்கு உதவியவர் இவர்தான், அப்போதுதான் அருன மதத்தை பற்றியும் அறிந்து கொண்டேன்..

அறிஞர்
05-06-2008, 07:48 PM
ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.

போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????

ஷீ-நிசிஅருமை கவிஞரே...
ஆறறிவின் எதிர்காலத்தை ஐந்தறிவு தீர்மாணிக்கிறது.

கிடைக்கும் மரத்தின் கீழ் கிளி ஜோசியம்..

வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
06-06-2008, 02:22 PM
நன்றி ஆதவா... நன்றி அறிஞரே!

டாக்டர் அண்ணாதுரை
09-06-2008, 07:38 AM
மூடம் என தெரிந்தும்...
மூளையை முடமாக்கும்
மானிடர்க்கு.....
கிளிவழி...சீட்டுப்போட்ட நண்பரே...
கவிதை மணக்கிறது.

இளசு
11-06-2008, 10:37 PM
ஆறை வென்ற ஐந்து..

மிச்சச்சிறகில் தொடங்கி
மொத்தமும் அழகிய எதுகைகள் விளையாடும் கவிதை!

வாழ்த்துகள் ஷீ!

ஆதவனின் ஆழமான பின்னூட்டம்,
ஆதியின் கூடுதல் தகவல்கள் - சிறப்பு!

ஷீ-நிசி
11-02-2009, 01:28 AM
நன்றி அண்ணாத்துரை அவர்களே!

நன்றி இளசு ஜி!