PDA

View Full Version : நரக நகரத்தில்



நாகரா
01-05-2008, 08:39 AM
என் வீட்டுக் கிணற்றருகில்
நீர் தேங்கிய
சிறு சிறு பள்ளங்களில்
குளித்துக் கும்மாளமடிக்கும்
சிட்டுக் குருவிகள்

என் மாணவப் பருவத்தின்
அந்த இனிய நாட்கள்
சிட்டுக் குருவிகளோடு
பறந்து விட்டன

இன்றோ
வற்றி விட்டது
கிணறு

வரண்டு கிடக்கின்றன
பள்ளங்கள்

உள்ளங்கைகளைக்
குழித்து
நீர் தேக்கிக்
கிணற்றருகே
சிட்டுக் குருவிகளுக்காகக்
காத்திருக்கிறேன்

விரல் இடைவெளிகளில்
நீர் வழிந்து கொண்டிருக்க
இனிய நாட்களின்
ஒரு கணங் கூடத்
திரும்பவே இல்லை

உள்ளங்கைகளும்
வற்றி உலர்ந்து விட
கான்க்ரீட் காடுகளுக்கு
எருவாகும் சருகாய்
நரக நகரத்தில்
விழுகிறேன்

ஓவியன்
01-05-2008, 11:59 AM
அது ஒரு காலம்தான் அண்ணா, இயற்கையுடன் இயற்கையாக பறவைகள் சிறு விலங்குகளுடன் நம் வீட்டிலும் நம் வயலிலும் விளையாடி மகிழ்ந்த அந்தக் காலம் மலையேறித்தான் விட்டது. இப்போது நாம் விரும்பி விளைந்தாலும் கிடைப்பதில்லை அந்த வசந்த காலம்....

காரணம் - காலமும் சூழலும் மாறித்தான் விட்டன, காலத்துடனும் சூழலுடனும் நாமும் மாறியிருந்தால் பிரச்சினை இல்லாதிருந்திருக்குமோ...??

வீதியில் கால் வைக்க முடியா வெம்மை நாட்டில், நாலு சுவருக்குள் மூர்க்கமாக வேலை செய்து கொண்டிருக்கும் குளிரூட்டி துணையுடன் என்னை நானே அடைத்து வைத்துக் கொண்டிருக்கையில்தான் மலையேறிவிட்ட வசந்த காலங்கள் நினைவில் வந்து என் கண்களை நனைத்து விட்டுச் செல்லும்....

இப்போது உங்கள் கவிதையைப் பார்த்த கணத்திலும்.... .


விரல் இடைவெளிகளில்
நீர் வழிந்து கொண்டிருக்க
இனிய நாட்களின்
ஒரு கணங் கூடத்
திரும்பவே இல்லை

நிரம்பவும் இரசிக்க வைத்த வரிகள் அண்ணா, இந்தக் கவிதையின் முதுகெலும்பு வரிகளாக இருந்து கவிதைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கின்றன. :icon_b:

நாகரா
01-05-2008, 01:00 PM
உம் ஆழமான பின்னூட்டத்துக்கு நன்றி, ஓவியன்

அனுராகவன்
02-05-2008, 01:03 AM
நன்றி நாகரா அவர்களே!!
ம்ம் கவிமழையில் நனைந்தேன்..
மிக ஆழமான வரிகள்!!
என்றும் நீக்காதாவை!!
என் வாழ்த்தும்,பாராட்டும்..

நாகரா
02-05-2008, 03:07 AM
உம் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அனு.