PDA

View Full Version : அறுந்த மரத்தின் அடித்தண்டு



நாகரா
30-04-2008, 04:11 AM
அங்கே அறுந்த மரத்தின் அடித்தண்டு
இங்கே இரத்தங் கசிகிறது
என்னெஞ்சு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அறுந்து கிடப்பது
உன் உடம்பென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
மனிதம் மிருகமாகக்
கழிந்ததொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
திறந்தது மண்ணின்
நெற்றிக் கண்ணொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ அறுத்தது
அன்னை பூமியின் முலையொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
ஈரம் போன மண்ணில்
நெருப்பைக் கக்கும் வாயொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
மனிதத்தின் சவப்பெட்டியில்
இறங்கும் ஆணியொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா சுற்றி முளைக்கும் செடிகள்
உன்னை நியாயங் கேட்குதென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அதுவுன்
உயிரைக் குடிக்கும் விஷ முள்ளென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
நன்றி கொன்றவன் நீயென்று
உன்னைச் சுட்டும் விரலொன்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அதுவுன்
நெஞ்சில் ஆறாத வடுவென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ களைந்தது
பூமித் தாயின் சேலையென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ சிதைத்தது
பூமித் தாயின் மடியென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா அங்கே சிந்தியது
கழுவவே முடியாத இரத்தக் கரையென்று

அறுந்த மரத்தின் அடித்தண்டு
இரு கால் மிருகமே ஏன் விட்டுச் சென்றாய்
இங்கொரு மாமிசத் துண்டு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
ஈரமில்லா வன்னெஞ்சின்
வரண்ட துண்டு

அறுந்த மரத்தின் அடித்தண்டு
போதுமடா மனிதா நீ செய்த நாசம்
செய்வாய் இனி மரம் வளர்க்கும் தொண்டு

சாலைஜெயராமன்
30-04-2008, 04:22 AM
கவையாகிக் கொம்பாகிக் காட்டக்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியான்
நின்றறியான் குறிப்பறிய மாட்டாதான்
நன்மரம்

உடனே இந்தப் பழம் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது திருமிகு நாகரா. எழுவான் படுவான் என்ற கோடானு கோடி தாவர வகையில் ஒவ்வொன்றும் இம் மண்ணுக்கு நன்மையையே தருகிறது.

நல்லமரமாக நின்றால் கூட இம் மனித வர்க்கத்திற்கு நலமே. நின்ற மரங்களையும் கூறுபோட்டு அன்னைபூமியை நிர்வாணப்படுத்தும் அலங்கோலம் மனத நாகரிகத்தின் அவக்கேடு.

சுற்றுச் சூழல் ஆர்வலராய் மட்டும் இக்கவிதையைத் தாங்கள் படைக்கவில்லை என நினைக்கிறேன். மனித குணத்தின் சுயநல வக்கரத்தால் இயற்கையைக் கூறுபோடுவது தனக்கே ஏற்படுத்திக் கொள்ளும் கேடு என்பதைச் சொல்லாமல் சொல்கிறீர்கள்.

அறுந்த மரத்தின் அடித்தண்டு
அறிவாயோ மனிதா நீ அறுத்தது
அன்னை பூமியின் முலையொன்று

நெஞ்சை நெகிழவைக்கும் நிதர்சன வரிகள்.

அனுராகவன்
30-04-2008, 04:42 AM
அறுந்த மரத்தின் அடித்தண்டு
போதுமடா மனிதா நீ செய்த நாசம்
செய்வாய் இனி மரம் வளர்க்கும் தொண்டு
நன்றி நாகரா!!
உந்தன் கவியில் மிகவும் பிடித்த வரி!!
மரம் வளர்ப்பது ஏதோ தன் வீட்டிற்கு நிழல் வேண்டும் என்று நடக்கூடாது.
ஒரு மரம் தோப்பாது..
ம்ம் என் வாழ்த்துக்கள் !!

நாகரா
30-04-2008, 05:20 AM
உம் பின்னூட்டங்களுக்கு நன்றி சாலை ஜெயராமன், அனு.