PDA

View Full Version : கலகம்



நாகரா
29-04-2008, 05:57 AM
வெள்ளைச் சுவர்

உறிஞ்சிய இரத்தமெல்லாம்
உறைந்து
உள்ளே செங்கற்களாய்

எரிந்த எலும்புகளின்
சாம்பலையும்
புதைந்து மக்கிய உடம்புகளின்
மணலையும்
கண்ணீரிலும்
வியர்வையிலும்
கலந்து செய்த
சிமெண்டுக் கலவையில்
பிணைக்கப் பட்டு
வெளியே
பூசி மழுப்பப்பட்டு
அழகாகக் காட்சி தரும்
வெள்ளைச் சுவர்

சமாதானம்
சமாதானம்
சமாதானம்
என்று சதா போதிக்கிறது

இன்னொரு வெள்ளைச் சுவருக்குக்
கச்சாப் பொருளாகித்
தொலையுமுன்
இந்த வெள்ளைச் சுவரைத்
தகர்க்கப் போகிறேன்
நான்

இதன் பின்
ஏமாற்றும்
ஒவ்வொரு வெள்ளைச் சுவரையும்
தகர்ப்பேன்

சமாதானங் கற்றுப்
பிணமாவதிலுங்
கலகக்காரனாய்
வாழ்வதே மேல்

கலகம்
கலகம்
கலகம்
வாழ்வின் போர்ப்பறை
கேட்கிறது

வெள்ளைச் சுவர்கள்
அதிர

ஓவியன்
29-04-2008, 08:31 AM
போலி வேடமிட்டு,
உண்மையைத் திரிவு படுத்தி
ஊருக்கு உபதேசம் செய்வோருக்கு
உறைக்க வைக்கும் ஓர் கவி..!!

சாத்தான் வேதம் ஓதுகையில்
ஓதப்படுவது வேதமாயினும்
ஓதுவது சாத்தானென
நம் உள்ளத்தில்
உறைக்க வேண்டும்...!!

வெள்ளைச் சுவர்களையும்
முகமூடிச் சாத்தான்களையும்
வேரோடு கருவறுக்க
உலகில் கலகம் ஒன்று
பிறந்திடத்தான் வேண்டும்..!!

உங்கள் கவிக் கலகம்
புவியெல்லாம் பரவட்டும் அண்ணா...!! :icon_b:

நாகரா
29-04-2008, 09:45 AM
உம் அருமையான பின்னூட்டக் கவிதைக்கு நன்றி ஓவியன்

வெள்ளைச் சுவர்களையும்
முகமூடிச் சாத்தான்களையும்
வேரோடு கருவறுக்க
உலகில் கலகம் ஒன்று
பிறந்திடத்தான் வேண்டும்..!!

ஆம் தம்பி, கலகம் பிறக்கும்