PDA

View Full Version : உணர்தலுமான கவிதை மற்றும் சில எண்ணங்கள்



ஆதவா
26-04-2008, 08:38 PM
உணர்தலுமான கவிதை மற்றும் சில எண்ணங்கள்

வெகு நாட்கள் ஆயிற்று கவிதைகள் இட்டு; இயற்றி. இத்தகைய கால இடைவெளி சில மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது, அது, கவித்திறனைக் குறைப்பதாகவோ அல்லது அதிகரிப்பதாகவோ நம் கால இடைவெளியின் பயண நெருக்கடியைப் பொறுத்து அமையலாம். அப்படி ஒரு மாற்றம் எனக்குள் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. என்றாலும் ஒன்றிரண்டாக அவ்வப்போது எழுதிக் கொண்டுதான் இருந்தேன்.

இப்பொழுதெல்லாம் கவிதைக்கான கருத்தேடல் எளிதாக அமைவதில்லை, புதியவகையினை அறிமுகப் படுத்தவோ அல்லது புதிய கருவினைத் தேடவோ ருசு அமையாத சூழ்நிலையில், தான் எழுதும் அத்தனையும் புதுமை படைத்ததாக எண்ணிக் கொண்டிருக்கும் மனச்சூழ்நிலை எனக்கேற்படவில்லை என்பதே எனக்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது. எதை எழுதினாலும் அதை ஏற்கும் களமிருக்கையில் பெரிதாக எந்தக் கவலையுமில்லை.

சமீபத்திய நாட்களில் மேலுமொரு எண்ணம் எனக்கு ஓங்கியது. எண்ணங்களைக் குழைத்து வடிக்கின்ற நவீன ஓவியங்களைப் போல கருக்களுக்கு முக்கியத்துவமில்லாத, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அல்லது படிப்பவர் மனதில் ஊறும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும் (இசங்களை இழைக்கும்) கவிதைகள் படைத்தால் என்ன என்பதுதான். நம்முடைய தேடல்கள் யாவும் கரு நிறைந்த கவிதையில் மட்டுமே சார்ந்து இருப்பதால்தான் இசங்களை வெறுக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. வெறும் புரிதலில் மட்டுமில்லை கவிதை, அஃது உணர்தலிலும் உண்டு. புரியாமலிருப்பதன் காரணம், நாம் உணராமல் இருப்பது. மேலும் நாம் புதுமையை நாடுவதற்கும் அது ஏதுவாகிறது.

ஆக, ஒரு கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதோடு, என்ன உணர்வைத் தருகிறது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும், ஆனால் இது யாவருக்கும் சாத்தியமில்லை, சாத்தியப்படுவது நமது எண்ண,மன வெளிப்பாட்டின் ஆழத்தில் இருக்கிறது என்றாலும் முயற்றின்மை இன்மையையே தரும். வெகு நாளையத் தேடலுக்குப் பின் எனக்கொரு சிற்றிதழ் கிடைத்தது. மிகப்பெரும் இலக்கியப் பேச்சுக்கள் ஒரு வட்டத்திற்குள் மிக அழகாக இயங்கிக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட நான், அச்சிற்றிதழை வாங்கிய பின்னர் இன்னும் ஆழமாகத் தெரிந்துகொண்டேன்.. ஆங்கே உணர்தலுக்குண்டான கவிதைகள் நிரப்பப்பட்ட பக்கங்களே இருந்தன என்பதால் கருவை முக்கியத்துவம் வைத்த எளிய கவிதைகள் காணக் கிடைக்கவில்லை. அத்தகைய கவிதை வகைகள் எளிதில் புரிவதற்கு மறுக்கின்றன. இசங்களைத் தோய்த்து வரையப்பட்டிருந்தன.

சமீபத்திய என்றல்ல, மன்றம் இணைந்த காலம் முதற்கொண்டே எனது சில கவிதைகளும் அப்படி புரியாமல் போனதாக மன்றம் தந்த உள்ளங்கள் கூறுவதுண்டு. ஆனால் அவை இசங்கள் வகையிலோ அல்லது வேறு எந்த வரி வடிவ வகையிலோ எழுதப்படவில்லை, அல்லது அது எத்தகைய வடிவம் என்பது தெரியவில்லை. ஆனால் எனக்கு நானே சமாதானம் கூற வந்தது என்னவெனில், வார்த்தைகளை அடக்கி எழுதப்படுவதால் வந்த புரியாத வடிவம் என்பதே!

ஆக எளிதில் மனதில் புக மறுக்கும் கவிதைகளை படைக்கும் நிலையைக் கடந்து வந்துவிட்டேன். உணர்தலுக்குண்டான கவிதை படைக்கும் படைப்பியலை இம்முறை புதிதாக(அல்லது மீண்டும்) நுழைப்பதன் மூலம் இலகுரக கவிதை படைப்பவர்கள் அல்லது எளிமை விரும்பிகள் எமது கவிதையை உதாசீனப்படுத்த மிக அதிக வாய்ப்புண்டு. ஆனால் எனது இந்நிலையை, எளிமையை மனதிற்கொண்டு மாற்றும்படியான எண்ணம் துளியும் ஏற்படவில்லை. எனக்கென ஏற்படுத்திக் கொண்ட ராஜபாட்டையில் பயணிப்பதையே மிகவும் விரும்புகிறேன்.

இச்சமயத்தில் மேலுமொரு எண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன். ஒரு படைப்பியல் சார்ந்த தளத்தில் படைப்பியலையும் மீறிய சக்கைகளாக உரையாடல்கள் நிறைந்து காணப்படுவது வருத்தத்திற்குரியதாக இருக்கிறது. இலக்கியம் சார்ந்ததாகவோ அல்லது படைப்பியலை மையப்படுத்தியோ அதிகமான பகிர்வுகளைப் பார்க்க முடிவதில்லை, அதாவது, அத்தகைய பகிர்தலுக்கான ஆட்கள் இருந்தும் அவர்களது எண்ணம் விலகிப் போவதை, போகவைக்கப்படுவதைக் காணமுடிகிறது. இது தவிர்க்கப்படவேண்டும். (குறிப்பு : இது சித்திரைக்கு முன்னர் எழுதப்பட்டது.) அர்த்தப்படாத, வீணாகிப் போகும் எழுத்துக்களுக்கு நாம் ஏன் அதிக இடம் கொடுக்கவேண்டும் என்பது எனது கேள்வி, ஆனால் அதே சமயம் கேளிக்கை என்பது நமது வாழ்வில் மிகச் சிறு பகுதி போல அரட்டைகள் ஆங்காங்கே தொடர்வதும் வேண்டும். சில சமயங்களில் அது நமது மனபாரத்தைக் குறைக்க வல்லனவாக இருக்கும். அரட்டை, குறைக்கப்படவேண்டுமே தவிர தவிர்க்கப்படவேண்டியதல்ல.. இது குறித்து ஒரு சிலர் என்னிடம் எதிர்விதமான கருத்துக்களையே வெளியிட்டிருக்கிறார்கள். மன்ற முன்னேற்றத்திற்கான தடைக்கற்களாக இவ்வகை அரட்டைகளைக் கருதுகிறார்கள். என்னுடைய கருத்தும் அதுவே, அரட்டை இன்பம் கருதி தொடர்வோமேயானால், நல்லதொரு இலக்கியச் சூழ்நிலையை மன்றம் இழக்க நேரிடும் என்பது உண்மையே! (அரட்டைப் பகுதியைத் தொடங்கியவர் ஆதவா என்பதையும் இங்கே நினைறுத்துகிறேன்.)

அரட்டைப் பகுதி போன்று, கவிதைக்கான பகிர்தலும், அது சம்பந்தமான விளக்க, ஆராய்வுகள் மற்றும் தொடர்புகள் குறித்த ஒரு இலக்கிய அரட்டையைத் தொடங்க வேண்டுமென்ற ஆவல் இருந்து வருகிறது. ஆனால் அத்தகைய அரட்டையில் தொடங்கிய நான்கூட உள்ளே பதிவிடுவேனா என்ற சந்தேகமான தற்காலிகச் சூழ்நிலையை தக்க வைத்திருக்கிறேன். மேலும் அத்தகைய பகிர்தலுக்கு எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற சந்தேகமும் வலுப்பெறுகிறது. எனினும், தொடங்காமை தோல்வியே தரும் என்பதால், தொடங்குவோம்..

தொடர்ந்த பங்களிப்பு அல்லாவிடினும் தொடரும் உங்களிடம் எண்ணப்பகிர்தலை என்றைக்கும் பகிரும் உரிமை தரும் மன்றத்திற்கும் அதற்கீடான மக்களுக்கும் எனது நன்றிகள்.

ஆதவன்.

விகடன்
26-04-2008, 08:49 PM
உண்மைதான் ஆதவா.
விடயத்திலும் பார்க்க அரட்டை அதிகம் இருக்கும் திரிகளும் இல்லாமல் இல்லை.

அவற்றை அவதானித்து கட்டாயம் அத்திரியிலிருந்து களையப்பட வேண்டும். அப்படி ஒரு ஏற்பாட்டை செய்தால்த்தான் குறிப்பிட்ட திரியின் குறிக்கோளும் தரமும் பேணப்படும்.

தங்களின் இந்தக்கருத்தை வரவேற்கின்றேன்.
(எனது இந்த பதிப்பும் அரட்டையாக இருக்குமோ என்றுகூட ஒரு கூச்சம் இருக்கிறது.... :) )

ஆதவா
26-04-2008, 08:54 PM
உண்மைதான் ஆதவா.
விடயத்திலும் பார்க்க அரட்டை அதிகம் இருக்கும் திரிகளும் இல்லாமல் இல்லை.

அவற்றை அவதானித்து கட்டாயம் அத்திரியிலிருந்து களையப்பட வேண்டும். அப்படி ஒரு ஏற்பாட்டை செய்தால்த்தான் குறிப்பிட்ட திரியின் குறிக்கோளும் தரமும் பேணப்படும்.

தங்களின் இந்தக்கருத்தை வரவேற்கின்றேன்.
(எனது இந்த பதிப்பும் அரட்டையாக இருக்குமோ என்றுகூட ஒரு கூச்சம் இருக்கிறது.... :) )

இல்லை விராடன்.. விவாதித்தல் அரட்டையாகாது. வீண் அரட்டைகள் எத்தனையோ உள்ளன. அவற்றைக் களைவது குளத்து நீரைக் கல்லால் எறிவதைப் போல.. இருப்பது இருக்கட்டும். அரட்டைக்கெனத் தனிப்பக்கம் இருக்கிறது. பெரும்பாலும் அங்கே போய் செலவு செய்கிறோம் என்றாலும், பரவலான அரட்டைப் பதிவுகள் பலவும் காணக்கிடைப்பதை மறுப்பதற்கில்லை. அது நிறுத்தப்படவேண்டும்.. வேறு இடத்தில் ஒதுக்கி, குறைக்கப்படவேண்டும்...:icon_b:

விகடன்
26-04-2008, 08:59 PM
அதற்கு ஆதவா இரண்டு வழிகள் செய்யலாம்...
1. குப்பைத்தொட்டிக்கு வேண்டாத பதிவுகளை அனுப்பிவைக்கலாம்.
2. ஒவ்வொரு மன்றத்திலும் ஒரு அரட்டைப்பகுதியைப் போட்டுவைத்தால் அந்த அந்த மன்றத்தை சார்ந்த அரட்டைகளை அங்கேயே வைத்துக்கொள்ளலாம். மசாலா போல கண்டவற்றையும் பேசிக்கொள்ள நம்மோட வழமையான அரட்டைப்பகுதி.

ஷீ-நிசி
27-04-2008, 12:55 AM
பொதுவாக இசங்கள் எனப்படும் கவிதைகள், புரிதலுக்கு எளிதில் உட்படுவதில்லை.. இணையத்தில் இசங்கள் எழுதும் ஒரு கவிஞையோடு நான் விவாதித்தேன். எதற்கு இப்படி படிப்பவனுக்கு புரியாதவகையில் எழுதுகிறீர்கள் என்று. அதற்கு அவர்கள் சொன்ன விளக்கமும் இசங்கள் போலவே இருந்ததால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

அந்த விவாத்தத்தின் முடிவில் எனக்கு தோன்றிய வரிகளே இவை...

"பூக்களை தரிசிக்க பூதக்கண்ணாடிகள் எதற்கு"

எதற்கு கவிதைகளை உற்றுநோக்கி அதன் அர்த்தம் புலப்படவேண்டும் என்பதே என் கேள்வி.

எல்லா கேள்விகளும், எல்லா பதில்களும் தீர்வை தர வல்லவை அல்ல...

அரட்டை அதிகம் என்று ஆதவா சொன்னதை இங்கே நானும் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன். இங்கே இதை யாரும் மறுக்கமுடியாது.
நம் மன்றம் வெறும் அரட்டைகளுக்குள்ளேயே சிக்கிவிடாமல், படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதே என் ஆவல்.

kavitha
16-06-2008, 06:01 AM
சமீபத்திய நாட்களில் மேலுமொரு எண்ணம் எனக்கு ஓங்கியது. எண்ணங்களைக் குழைத்து வடிக்கின்ற நவீன ஓவியங்களைப் போல கருக்களுக்கு முக்கியத்துவமில்லாத, உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அல்லது படிப்பவர் மனதில் ஊறும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும் (இசங்களை இழைக்கும்) கவிதைகள் படைத்தால் என்ன என்பதுதான்.
அத்தகைய உணர்வியல் கவிதைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் ஆதவா. தொடரவும்.

ஆதவா
18-06-2008, 04:50 AM
அத்தகைய உணர்வியல் கவிதைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் ஆதவா. தொடரவும்.

அப்படி ஒன்று (தலைப்பில்லா கவிதை 2) எழுதியிருப்பதாக நினைத்திருக்கிறேன். உங்கள் கருத்தைக் கூறவும் அக்கா..

அன்புடன்
ஆதவன்

kavitha
18-06-2008, 05:26 AM
அப்படி ஒன்று (தலைப்பில்லா கவிதை 2) எழுதியிருப்பதாக நினைத்திருக்கிறேன். உங்கள் கருத்தைக் கூறவும் அக்கா..

அன்புடன்
ஆதவன் படித்தேன் ஆதவா. அந்தத்திரியில் பார்க்கவும்.

பென்ஸ்
07-09-2008, 06:24 PM
ஆதவா...

நான்கு மாதங்களுக்கு முந்தய பதிவிற்க்கு பதில் இடும்போது , "ஏன் தேவையில்லாமல்..?" என்று ஒரு எண்ணம் தோன்றினாலும்...

உங்கள் இந்த பதிவை ஒரு தேடலாகவே பார்க்கிறேன்...
உங்கள் பல கேள்விகளின் குழப்பமான தேடல்...
1) உங்கள் பதிவு குறைய காரணம்..!!!
2) உங்கள் பதிவுக்கு திறமையான , அதிகமான பின்னூட்டம் கிடைக்காமை.
இன்னும் பல.... அது தேவையில்லை என நினைக்கிறேன்...

தமிழுக்காக துவங்க பட்ட மன்றம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை...
ஆனால் இங்கு அரட்டை அடிக்க வந்து, கவிதையால் கவரபட்டு எழுத துவங்கியவர்கள் நிறைய...
கவிதை எழுத வந்து தன் மனபாரம் களைய அரட்டை அடித்தவர்களும் உண்டு....

தங்கவேல் அவர்களின் கையெளுத்தில் ஒரு வரி இருக்கும்
"தன் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றி கொள்ளுபவன் வெற்றியாளன்"

ஆனால் நான் சொல்லுவேன்...
"தனக்கேன ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொள்பவன் புரட்சியாளன்"

தன்னையும் , சூழ்நிலையையும் அறியாமல் செய்யும் புரட்சி தோல்விபெறும்...
"தோல்வி பெற்ற புரட்சி.. கலகம்" (நன்றி: இளசு)

நான் நம்மையும் அறிந்து, நாம் இருக்கும் சூழ்நிலையையும் அறிந்து எது செய்தலும் தகும்...

இந்த மன்றம் ஒரு சுகமான சமுதாயம்...
இதற்க்கான வரம்புகளை வரையறுத்தது நாமே...
மாற்றம் வேண்டும் என்றால், அது எற்றுகொள்ள படுவையாக இருக்கவேண்டும்...

அதை நீயே கொடு....

வாழ்த்துகள்...