PDA

View Full Version : கண்டங்களைத் தாண்டி...



சிவா.ஜி
17-04-2008, 11:31 AM
கண்டம் விட்டு கண்டம் தாண்டி பணியாற்றும் வாய்ப்பை இப்போது நான் பெற்றிருக்கிறேன். ஆனால் எத்தனைக் கண்டத்தை தாண்டி வந்திருக்கிறேன் என்று இந்தப் பதிவில் உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்

கண்டம்-1

அப்போது ஆறாவது படித்துக்கொண்டிருந்தேன். கும்பகோணம் தாலுக்காவில் உள்ள ஆடுதுறையில் இருந்தோம். எங்கள் வீட்டின் பின் பக்கத்தில் வீரசோழன் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. இப்போது போலில்லாமல் அந்தக் காலங்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.

ஆற்றின் இரு கரைகளும் சிமெண்ட்டால் உருவாக்கப்பட்டிருந்தது. இடையில் படித்துறைகள். அதிலொன்றில்தான் நாங்கள் வழக்கமாய் குளிப்போம். எனக்கு அப்போது நீச்சல் தெரியாது. அன்று நானும் என் தமக்கையும் குளிக்கப் போனோம். என்னைவிட ஒரு வயதுதான் மூத்தவர் அவர். நான் அமைதியாகவெல்லாம் குளித்துவிட்டு வரும் ரகமல்ல. நீச்சல் தெரியாவிட்டாலும் ஏதாவது சாகசம் செய்ய நினைத்து, படித்துறையை விட்டு கொஞ்சம் தள்ளி, சரிவாய் இருந்த கரையிலிருந்து சறுக்கிக்கொண்டுபோய் தண்ணிரில் விழுந்து, கரையைப் பிடித்துக்கொண்டே ஆற்றின் ஓட்டத்தில் அழைத்துவரப்பட்டு படி வந்ததும் அதில் ஏறிக்கொள்வது என் அன்றாட விளையாட்டு. ஆனால் படியைத்தாண்டிவிட்டால் நீரோட்டம் அதிகரிக்கும் என்னால் சமாளிக்க முடியாது. ஆபத்தை அறியாமலேயே அந்த விளையாட்டை தொடர்ந்து வந்தேன்.

அன்றும் அப்படி விளையாடினேன். அதைப் பார்த்துக்கொண்டிருந்த என் அக்காவும் அப்படி செய்ய ஆசைப்பட்டு என்னைப் போலவே சறுக்கிப்போய் தண்ணிரில் விழுந்து கரையைப் பிடித்துக்கொண்டே படி வரை வந்துவிட்டார். ஆனால் படியில் ஏற முடியவில்லை நீர் இழுத்துக்கொண்டு போகத்தொடங்கிவிட்டது. படியில் நின்றிருந்த நான் உடனே அவருடைய கையைப் பிடித்து இழுக்க முயன்றேன். சரியாக பாலன்ஸ் செய்யாததால் அவர் இழுப்புக்கு நானும் தண்ணீரில் விழுந்துவிட்டேன். அவ்வளவுதான் இரண்டுபேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டோம்.

அப்போதுதான் எங்களைத்தேடி படித்துறைக்கு வந்த எங்கள் அம்மா இதைப்பார்த்ததும் தண்ணீரில் குதித்து விட்டார். அம்மாவுக்கு நன்றாக நீச்சல் தெரியும். அம்மா குதித்ததையும், நாங்கள் அடித்து செல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருந்த கரையில் இருந்த ஒருவரும் குதித்துவிட்டார். ஆனால் அவர்களுக்கும் எங்களுக்குமான இடைவெளி அதிகமாகிவிட்டிருந்தது. அவர்கள் எங்களை நெருங்குவதற்குள் நாங்கள் ஒருவருக்கொருவர் அழுத்திக்கொண்டதில் மூழ்கி, மூழ்கி எழுந்தோம். கரையைவிட்டு அகன்று போய்விட்டதால் பிடிமானம் இல்லாமல் புரண்டபடி ஆற்று நீரோடு அடித்து செல்லப்பட்டோம்.

அவ்வளவுதான் நம் கதை என்று நினைத்த போது, எங்களுக்கு முன்னால் கரையிலிருந்து வளைந்து தண்ணீரைத் தொட்டுக்கொண்டிருந்த இரண்டு மூங்கில்களைப் பார்த்ததும், அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, என் அக்காவையும் பிடித்திழுத்து மூங்கிலைப் பிடித்துக்கொள்ளச் செய்தேன். அக்கா மூங்கிலைப் பிடித்துக்கொண்டு நீரிலேயே இருக்க நான் அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டேன். அதற்குள் என் அம்மாவும், அந்த மற்றொருவரும் வந்து விட்டார்கள். கரையில் ஏறிக்கொண்டு எங்களையும் கரையேற்றினார்கள். கரைக்கு வந்தும் என் கால்கள் பரதம் ஆடிக்கொண்டிருந்தது. அம்மா நன்றாக என்னை நாலு சாத்து சாத்தி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனார்.

அன்று அந்த மூங்கில் இறைவனின் கரமாகவே எனக்குத் தெரிந்தது.

கண்டம்-2

அந்த சம்பவம் நடந்து நீண்ட நாட்களுக்கு ஒன்றும் நிகழவில்லை. 1981 ஆம் வருடம் கோவையில் படித்துக்கொண்டிருந்த சமயம். நானும் என் நன்பர்களும் சித்ராபௌர்ணமிக்காக வெள்ளிங்கிரி மலையேற தீர்மானித்து சென்றோம். இரவுநேரம். அடிவாரத்தில் ஊன்றி நடக்க கம்புகளை வாங்கிகொண்டு மலையேறத்தொடங்கினோம். சரியான ஏறுபாதையில்லாத மலை அது. அதனால்தான் அந்தக் கம்பின் துணை தேவைப்பட்டது. சறுக்கல்கள் நிறைந்த பாதையில் முன்னேறி ஒரு சம தளத்திற்கு வந்து சேர்ந்தோம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் கிளம்ப நினைத்த போது பயங்கரமான மழை பிடித்துக்கொண்டது.

மேலே போகவும் முடியாமல்,கீழே இறங்கவும் முடியாமல் வெட்ட வெளியில் மழையில் நனைந்து கொண்டே கீழே உட்கார்ந்துவிட்டோம். 20 நிமிடங்கள் ஆகியும் மழைவிட்ட பாடில்லை. ஏற்கனவே குளிர். இதில் மழை வேறு. உடம்பெல்லாம் நடுங்கத்தொடங்கிவிட்டது. எப்படியும் சாகத்தான் போகிறோம் என்ற எண்ணம் தோன்றத்தொடங்கிவிட்டது. ஆனால் அடுத்த பத்து நிமிடத்தில் மழை விட்டது. ஆனால் மேற்கொண்டு மேலே ஏறமுடியாமல் பாதையெங்கும் சிறு சிறு நீர்வீழ்ச்சிகளாக தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்ததால், கீழே இறங்க தீர்மானித்தோம்.

ஏறி வருவதைவிட சிரமமமானது இறங்குவது. அதிலும் மழையால் சகதி உண்டாகி வழுக்கிக்கொண்டிருந்தது. கம்பின் துணையால் மெல்ல இறங்கிக்கொண்டிருந்தவன் சடாரென்று கால் வழுக்கியதும், கம்பு கையிலிருந்து பறந்துவிட்டது. வெகு வேகமாக கீழே உருட்டிக்கொண்டு போகப்பட்டேன். ஒரு வினாடி எமனின் பாசக்கயிறுகூட கண்ணில் பட்டது. அங்கும் ஒரு மரம்தான் என்னைக் காப்பாற்றியது. மரத்தில் மோதி தொங்கினேன். கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டுவந்தது. அதற்குள் என் நன்பர்கள் வந்துவிட்டார்கள். வெகு ஜாக்கிரதையாக என்னை மரத்திலிருந்து இறக்கி இரண்டு பேர் தங்கள் தோள்களில் என் கைகளைப் போட்டுக்கொண்டு மெள்ள கீழே இறக்கிக் கொண்டு வந்தார்கள்.

அன்று மூங்கில். இன்று மரம்.


கண்டங்கள் தொடரும்

சிவா.ஜி
17-04-2008, 11:48 AM
கண்டம்-3

இந்த முறை கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டது. மும்பையில் வேலை கிடைத்து அங்கு பணியாற்றிக்கொண்டிந்த போது நிகழ்ந்தது. எங்கள் குடியிருப்புப்பகுதியில் உள்ள கட்டிடங்களெல்லாம் 14, 16, 20 அடுக்குகளாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு 14 அடுக்கு கட்டிடத்தில் இருந்த என் நன்பனைப் பார்க்க அடிக்கடி போவதுண்டு. இரண்டு லிஃப்ட்களும், பக்கத்தில் சுற்றியபடியே மேலே ஏறும் படிக்கட்டுகளும் இருக்கும்.

ஒருமுறை நானும் என் நன்பனும் வீட்டுக்கு வெளியே (13 ஆவது மாடி) படிக்கட்டின் கைப்பிடிக்கு மேல் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். ஏறிவந்து, பின் சம நிலையில் தொடர்ந்து, பிறகு மேலே ஏறிப்போகும்படி அமைந்திருந்த அந்த படிக்கட்டுகளின் சம நிலைப் பகுதியில் அமர்ந்திருந்தோம். ஒரு கையை மேலே ஏறிச்செல்லும் படியின் கைப்பிடியில் வைத்துக்கொண்டு மற்றொரு கையை நான் உட்கார்ந்திருந்த கைப்பிடியில் ஊன்றிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த தளத்திலிருந்த ஒரு வீட்டிலிருந்து இரண்டுபேர் ஒரு மேசையை எடுத்துக்கொண்டு மேல் தளத்திற்கு படி வழியே போனார்கள். படி சிறிதாய் இருந்ததால் சிரமத்துடன் மேலே ஏறினார்கள். பேச்சு சுவாரசியத்தில் அவர்களை சரியாகக் கவனிக்கவில்லை. அவர்கள் கொண்டுபோன மேசையின் முனை என் கைகளில் இடித்துவிட்டது. அனிச்சை செயலாய் பட்டென்று அந்தக்கையை எடுத்துவிட்டேன். ஊன்றியிருந்த கையும் வழுக்கிவிட்ட நிலையில் அப்படியே தலைக்குபுற படிக்கட்டுகளின் இடைவெளியில் விழுந்தேன். விழ இருந்தேன். விழுந்திருந்தால் இப்போது இதை எழுதிக்கொண்டிருக்க முடியுமா? பாதி உடல் நான் அமர்ந்திருந்த கைப்பிடியைக் கடந்துவிட்ட நிலையில் மீதி இருப்பது கால்கள்தான். அதுவும் நேர்கோட்டுக்கு வந்துவிட்டால் அப்படியே ஒரு டைவ்..தலை தரையை முத்தமிட்டிருக்கும்.

நான் கேன்வாஸ் ஷூ அணிந்திருந்தேன். கால்கள் மேலுழும்பும்போதுபடிக்கட்டின் பக்கவாட்டு கைப்பிடியில் இருந்த கிரில் கம்பிகளுக்கிடையில் வலதுகால் மாட்டிக்கொண்டது. அந்த ஒரு பிடிப்பில் என் உடல் அந்தரத்தில் தொங்கியது. உடலின் மொத்த ரத்தமும் தலைக்குப் பாய்ந்துகொண்டிருந்தது. வெகு துரிதமாக என் நன்பன் குணிந்து என் கைகளைப் பற்றி மேலே இழுத்து விட்டான். மறுபடியும் எமன் தன் பாசக்கயிறை சுருட்டி கக்கத்தில் வைத்துக்கொண்டு என்னை முறைத்துப்பார்த்தபடி போய்விட்டான். இந்த அதிர்ச்சியில் மேசையை தூக்கிப்போனவர்கள் அலறிக்கொண்டு அதைக் கீழே போட படியின் கீழ் நின்றுகொண்டிருந்தவனின் காலை அது பதம் பார்க்க அவனுக்கும் காலில் அடி. எனக்கு பாதம் சுருண்டுகொண்டது. பயங்கர வலி. தலைக்கு வந்தது காலோடு போயிற்று.

இந்தமுறை எது என்னைக் காப்பாற்றியது? க்ரில் கம்பிகளா, நன்பனா, கேன்வாஸ் ஷூவா?

கண்டம்-4

இதுவும் மும்பையில்தான். 1986 டிசம்பர் 24. நானும் என்னைப் படியிலிருந்து விழாமல் காப்பாற்றினானே அந்த நன்பனும், அவன் நடத்திக்கொண்டுவந்த டி,வி. வி.சி.ஆர் வாடகைக்கு விடும் தொழில் முறையில், ஒரு இடத்தில் வாடகைக்கு கொடுத்திருந்த அந்த பொருள்களை வாங்கிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தோம். இரவு 11:45. பயணம் செய்தது ஜீப்பில். கிளை சாலையிலிருந்து நெடுஞ்சாலையை கடந்து மீண்டும் கிளைச்சாலைக்குப் போக வேண்டும். இடதுபுறம் பார்த்தால் ஒரு கார் வந்துகொண்டிருந்தது அது வரும்முன் சாலையைக் கடந்துவிடவேண்டுமென்று வேகமாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியவன் வலது பக்கம் பார்க்கவில்லை. அந்தப்பக்கத்திலிருந்து ஒரு லாரி வெகு வேகமாக வந்து கொண்டிருந்தது. டே லாரிடா...என்று சொல்லி முடிப்பதற்குள் டமார்.

நான் அமர்ந்திருந்த பக்கம் மோதிவிட்டது. மோதிய வேகத்தில் கிட்டத்தட்ட 15 மீட்டருக்கு எங்கள் வாகனத்தை இழுத்துச் சென்றது. அதே சமயம் பின்னால் வைத்திருந்த தொலைக்காட்சிப்பெட்டி படு வேகத்தில் என் பின்னந்தலையில் மோதியது. அவ்வளவுதான் தெரியும். 20 நிமிடங்கள் கழித்து நினைவு திரும்பி எழுந்தேன். நான் அசைவதைப் பார்த்துவிட்டு அந்த லாரி ஓட்டுநர் என் அருகில் ஓடி வந்தார். நான் எழுந்திருக்க முயற்சி செய்தேன். இடதுகால் லாரிக்கும் எங்கள் ஜீப்பின் கதவுக்கும் இடையில் சிக்கிக்கிண்டிருந்தது. லாரியைப் பின்னால் எடுத்தால்தான் நான் காலை வெளியே எடுக்க முடியும். லாரி ஓட்டுநரிடம் சொன்னேன் ஓடிச்சென்று லாரியைப் பின்னால் எடுத்தார். நான் காலை வெளியே எடுத்தேன். போட்டிருந்த செருப்பு அதற்குள்ளேயே மாட்டிக்கொண்டு விட்டது. இடதுபுறமாக கீழே இறங்கினேன் காலைத் தரையில் ஊன்ற முடியாமல் மடங்கிவிட்டது. பிறகு ஒருவாறு சமாளித்துக்கொண்டு ஒரு ஆட்டோவைக்கூப்பிட்டு நானாகவே போய் எங்கள் நிறுவனத்தின் மருத்துவமணையில் சேர்ந்தேன்.

இரவு இரண்டு மணிக்கு ரத்தத்துடன் வாந்தி எடுத்தேன். இரவுப்பணியிலிருந்த செவிலியர் பதட்டத்தோடு மருத்துவரை அழைக்க அவரும் வந்து சோதித்துப்பார்த்துவிட்டு வெளிக்காயம் ஒன்றுமில்லை நாளை ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். அப்போது அந்த பிரதேசத்தின் காவலதிகாரி வந்தார். என்னை நலமுடன் பார்த்து உண்மையாகவே மகிழ்ந்தார். எங்கள் வாகனத்தின் சேத நிலையைப் பார்த்து நான் கண்டிப்பாக பிணவறையில்தான் இருப்பேன் என்று நினைத்துக்கொண்டாராம். அவ்ளோ சீக்கிரம் போய்டுவோமா?

வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்த என் நன்பனுக்கு நெற்றியில் மட்டும் காயம். அவன் நான் இறந்துவிட்டதாக நினைத்து வீட்டுக்குப் போய் அவனுடைய தந்தையை அழைத்து வரப் போயிருந்தான். சம்பவம் நடந்த இடத்தில் விசாரித்துவிட்டு மருத்துவமனைக்கு வந்தார்கள்.

எப்படியோ அடுத்த நாள் காலை ஸ்கேனிலும் நல்ல ரிப்போர்ட்டே வந்தது. முழங்காலில் மட்டும் இரண்டு எலும்புக்குமிடையிலிருக்கும் டிஸ்யூ மட்டும் சேதமடைந்து விட்டது.

இந்த முறையும் தப்பித்தாகிவிட்டது. திருமணத்திற்கு இன்னும் 45 நாட்களே இருந்த நிலையில், அதுவும் அன்று இரவு 12 மணிக்கு என் வருங்கால மனைவியை அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்வதாக ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தேன். தூங்காமல் என் அழைப்புக்காக அவள் விழித்துக்கொண்டிருக்கும்போது என்னைப் பற்றி நினைத்ததால்தானோ என்னவோ நான் பிழைத்துக்கொண்டேன்.

கண்டங்கள் தொடரும்

சுகந்தப்ரீதன்
17-04-2008, 11:50 AM
அண்ணா..உங்கள் எழுத்தை படிக்கையில் ஒருவித படப்படப்பையும் பயத்தையும் மனதில் உணர முடிகிறது..!!

இப்போதும் செய்திகளில் அடிக்கடி இரண்டு மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக செய்தி வருவதற்க்கு காரணம்.. தனக்கு நீச்சல் தெரியாது என்பதையும் மறந்து தன்னுடன் வந்தவரை காப்பாற்றிவிட வேண்டும் என்ற தன்னலமற்ற அந்த துடிப்புதான்..!!

எப்படியோ பல கண்டங்களை தாண்டி பல கண்டங்களுக்கு சென்று வந்திருக்கிறீர்கள் என்றால் உண்மையிலேயே இறைவன் அருள் என்றுதான் சொல்ல வேண்டும்..!!

ஆனாலும் எப்படியண்ணா..இவ்வளவு வேகமாக பதிவுகளை தரமுடிகிறது..எனக்கு பொறாமையாக இருக்கிறது உங்களை பார்த்து..?!:icon_rollout:

சிவா.ஜி
17-04-2008, 11:56 AM
உண்மையைச் சொன்னால் எனக்கு ஓய்வு நேரங்கள் அதிகம். என் பணியின் தண்மை அப்படி. அப்படிக்கிடைக்கும் நேரம் மொத்தத்தையும் மன்றத்திலும், மன்றத்துக்காவும் மட்டுமே செலவழிக்கிறேன். அதனால்தான் பதிவுகளைத்தர முடிகிறது. நன்றி சுபி.

சிவா.ஜி
17-04-2008, 12:35 PM
கண்டம்-5

இதுவும் ஒரு நெடுஞ்சாலை விபத்துதான். ஆனால் நடந்தது சவுதியில் அப்போது ஜுபைலில் இருந்தேன். அன்றுதான் சம்பளம் வாங்கியிருந்ததால் பை நிறைய பணத்துடன் நன்பரின் ஹுண்டாய் வேனில் மாலை 7 மணிக்கு கிளம்பினோம்.

முந்தைய சம்பவம் போலவே இந்த முறையும் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது 120 கிலோமீட்டர் வேகத்தில் வந்த ஒரு வாகனம் நான் அமர்ந்திருந்த வலது பக்கம் (இங்கே இடது பக்கம் ஓட்டுநர் இருக்கை) இடித்தது. வேன் ஒரு பக்கமாய் சாய்ந்து, மீண்டும் சாய்ந்து இப்போது தலைகீழாக...சாலையை விட்டு நகர்ந்து பள்ளத்தில்(சிறியதுதான்) சறுக்கிக்கொண்டு போய் மணலில் குத்திட்டு நின்றது. முன்பக்க கண்ணாடி உடைந்து,அதன் வழியே வெளியே வந்து தலை மணலுக்குள் புதைய விழுந்தேன். தலையை வெளியே எடுத்துக்கொண்டு எழுந்து நின்றேன். கையிலிருந்து ரத்தம் வேகமாக வழிந்துகொண்டிருந்தது. போன முறை இடதுகால், இந்த முறை இடது கை.

அவசரமாய் கைக்குட்டையை எடுத்து சுற்றிக்கொண்டு பார்த்தால் எங்களை இடித்த வாகனம் நடு சாலையில் தலைகுப்புறக்கிடந்தது. கையில் ரத்தம் வழிய ஓடிச்சென்று உள்ளே மாட்டிக்கொண்டிருந்தவனை வெளியே எடுத்தோம். 15 வயது சிறுவன். எனக்கும் எங்கள் வாகனத்தின் ஓட்ட்நருக்கும்தான் நல்ல அடி. என் நன்பன் பின்னால் உட்கார்ந்திருந்ததால் அவனுக்கு அதிகம் அடியில்லை.

எங்கள் இருவரையும் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துப்போனார்கள். அங்கு எகிப்திய மருத்துவ மகானுபாவர்கள்தான் இருந்தார்கள். பொதுவாக இங்கு பணிபுரியும் யாரும் துணிந்து அவர்களிடம் சிகிச்சைக்குப் போக மாட்டார்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழி? கண்ணாடி சரமாரியாக கிழித்துப்போட்டிருந்த கையின் சதைப் பாகத்தை, எந்த மயக்க மருந்தோ எதுவுமே கொடுக்காமல் அழுத்தி சுத்தம் செய்துவிட்டு நிற்கவைத்தே கிழிந்த துணியைத்தைப்பதைப்போல தைத்தார்கள். பிறகு உள் நோயாளியாக அனுமதித்து அடுத்த நாள் அனுப்பி விட்டார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், காரின் கண்ணாடி உடைந்தால் எப்படி இருக்குமென்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் பாளம் பாளமாய் உடையாமல் துகள் துகளாய் உடையும் அதில் ஒரு துகள் கையின் சதைக்குள்ளே இருந்துவிட அப்படியே தைத்து விட்டார்கள். காயமெல்லாம் சரியான பிறகும் அது உறுத்திக்கொண்டே இருந்தது. தையல் முடிச்சுதான் உறுத்துகிறதென்று விட்டுவிட்டேன். சரியாக எட்டு வருடம் கழிந்து நான் ஆப்பிரிக்காவில் இருக்கும்போது தானாகவே வெளியே வந்தது. அதை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அதில் ஒரு மோதிரம் செய்து போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆக இந்த முறையும் தப்பித்துவிட்டேன். என் தலை செருகிய இடம் மணலாக இல்லாமல் கட்டாந்தரையாக மட்டும் இருந்திருந்தால்....

இந்த விபத்தில் இன்னொரு நல்ல நிகழ்வையும் சொல்ல வேண்டும். விபத்து நடந்ததும்,நான் தலை கீழாய் இருந்த சமயத்தில் பையில் வைத்திருந்த மொத்த பணமும் அங்கே விழுந்து விட்டது. அன்றுதான் சம்பளம் வாங்கிய நிலையில் 500 ரியால் தாள்களாய் அனைத்தும் இருந்தது. எனக்கு மருத்துவமனையில்தான் நினைவு வந்தது. என்னை அங்கே விட்டுவிட்டு அறைக்குத் திரும்பிய நன்பனிடம் போகும் வழியில் அங்கே தேடிப்பார்க்கச் சொன்னேன். மொத்தமாய் அப்படியே இருந்தது. காலையில் கொண்டு வந்து கொடுத்தான். உழைச்ச காசு வீணாப்போகாது என்று நினைத்துக்கொண்டேன்.

இத்தனை கண்டங்களிலும் என்னைப் பிழைக்க வைத்த இறைவனுக்கு நன்றி.

இந்த வீர தீர நிகழ்வுகளில் என் உடலில் பாதிக்கப்பட்ட பாகங்களின் தொகுப்பு
வலதுகைக் கட்டைவிரல் - கராத்தே வகுப்பில் ஆசிரியரின் உதையை(பயிற்சியின்போது தானுங்கோ) தடுக்கும்போது உடைந்துவிட்டது.

இடதுகைக் கட்டைவிரல் - மைத்துனரோடு இரு சக்கர வாகனத்தில் போகும்போது அவரது ஆட்டத்தால் கீழே விழுந்து, அவர் என் மேல் விழுந்து உடைந்தது.

இடது முழங்கால்- சாலை விபத்தில் சவ்வு சேதமடைந்தது.

இடது முழங்கை - சாலைவிபத்தில் கண்ணாடி கிழித்து சேதமடைந்தது.

வலதுகை - மும்பை நகரப்பேருந்தில் நின்று கொண்டு பயணிக்கும் போது உடன் பிரேக் அடித்ததில் பின்னான் இருப்பவன் வேகமாக வந்து என்மீது மோதியதால் பந்துக்கிண்ண மூட்டு நழுவி விட்டது.

வலதுகால் பாதம் - படியிலிருந்து விழ இருந்த என்னைக் காப்பாற்ற கம்பியில் மாட்டிக்கொண்டு பாதிப்படைந்தது.

இவைகளைத் தவிர இன்னும் ஆங்காங்கே ஏற்பட்ட விழுப்புண்கள் ஏராளம். எங்க அம்மா சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது. கையைக் காலை சும்மா வெச்சிக்கிட்டு இருந்தாத்தானே....
சும்மா வெச்சிக்கிட்டிருக்க முடியுமா....நாமெல்லாம் யாரு ராஜராஜ சோழன் பிறந்த மண்னைச் சேர்ந்தவங்களாச்சே..ஹி...ஹி...

பாரதி
17-04-2008, 03:39 PM
பிரமிப்புடன் வாழ்த்துகிறேன். எத்தனை கஷ்டங்களுடன், கண்டங்களையும் தாண்டி வந்திருக்கிறீர்கள்..! வாழ்க்கையில் துவண்டு போகாமல் இருக்க உங்கள் வாழ்வும் ஒரு படிப்பினையை படிப்பவர்களுக்குத் தரட்டும்.

சிவா.ஜி
18-04-2008, 05:59 AM
வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்வுகள். அதில் சுவாரசியமாய் அமைவது வெகு குறைவே. அப்படி அமைந்த நிகழ்வுகளை மன்ற உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளவே இதை எழுதினேன். அனைவருக்கும் இவற்றைப்போல பல கண்டங்கள் இருந்திருக்கலாம். எனக்கு ஏற்பட்டவைகளும் அவற்றைப் போலவே. உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பாரதி.

aren
18-04-2008, 06:40 AM
இன்னும் படிக்கவேண்டியிருக்கிறது. பின்னர் முழுவதும் படித்துவிட்டு எழுதுகிறேன்.

மதி
18-04-2008, 11:14 AM
இவ்ளோ கண்டங்களா...?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாடா..

தங்கவேல்
18-04-2008, 12:25 PM
சிவா, பயத்தோடு படித்தாலும் , வாழ்வில் நடக்கும் இதைப்போன்ற நிகழ்ச்சிகள் தான் சுவைக்கூட்டுகின்றன அல்லவா ? பந்தங்களும் பாசங்களும் அன்றைய பொழுதுகளில் கொட்டும் அன்பு மழைக்கு முன்னால் காயமெல்லாம் போயே போச்சு....

சிவா.ஜி
18-04-2008, 01:29 PM
இவ்ளோ கண்டங்களா...?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பாடா..
கண்ணைக்கட்டுதா மதி. நடக்கும்போதுதான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் பயங்கரமானவை. நிகழ்ந்து முடிந்துவிட்டாலோ அசை போட அருமையானவை.

சிவா.ஜி
18-04-2008, 01:31 PM
ஆமாம் தங்கவேல். சில நிகழ்வுகளில்தான் பந்தங்களின் அருகாமை நமக்கு அன்பின் அர்த்தம் உணர்த்துகிறது.

பூமகள்
18-04-2008, 04:23 PM
அன்பின் சிவா அண்ணா...!!
கண்டங்கள் என்றதும்.. உலகத்தின் கண்டங்கள் பற்றி சொல்லுவீங்கன்னு ஓடி வந்து பார்த்தேன்.. ஆனால்.. உங்களை சுற்றி கொண்டு போகக் காத்திருந்த கண்டங்களைச் சொல்லி என்னை கலங்க வைத்துவிட்டீர்களே..!!

பிரமிப்பும் பயமும்.. படபடப்பும் நிறைந்தபடியே படித்தேன்..!! இவை நடந்தது பல வருடங்கள் முன்பாகினும் எனக்கு வருத்தம் அதிகமா ஆகிவிட்டது.

உண்மையில் மனதார சொல்லனும்னா... உங்களின் வாழ்க்கைப் பாடம் எங்களுக்கு பாடத்திட்டமாகவே வைக்கலாம்.... இத்தனை அனுபவங்களும் என் போன்ற இளம் தலைமுறையினருக்கு கட்டாயம் தேவை..!!
உண்மையிலேயே உங்களின் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் சிவா அண்ணா..!!

இனிமேல் எங்கு கிளம்பினாலும் "பத்திரமா போங்க சிவா அண்ணா.!!" அப்படின்னு பூவு சொல்வதாக எண்ணிக் கொண்டு தான் பயணப்பட வேண்டுமென்று அன்புக் கட்டளையிடுகிறேன்..!! :)

எழுத்து வன்மை அசர வைக்கிறது..எப்பவும் போலவே சிவா அண்ணாவுக்கு சொல்லியா கொடுக்கனும்..!!

பாராட்டுகள் சிவா அண்ணா..!!

சிவா.ஜி
18-04-2008, 04:35 PM
இனிமேல் எங்கு கிளம்பினாலும் "பத்திரமா போங்க சிவா அண்ணா.!!" அப்படின்னு பூவு சொல்வதாக எண்ணிக் கொண்டு தான் பயணப்பட வேண்டுமென்று அன்புக் கட்டளையிடுகிறேன்..!! :)



இந்த அன்புதாம்மா...என்னை எல்லாம் எழுத வைக்கிறது. இந்த மன்ற உறவுகள் என் சொந்த உறவுகள் என்பதில் எனக்கு எத்தனை மகிழ்ச்சி தெரியுமாம்மா...அதை வார்த்தைகளில் வடிக்க முடியாது. மனம் நிறைந்த நன்றிம்மா பூ.