PDA

View Full Version : இலக்கியமும் நூலும்



shibly591
17-04-2008, 09:28 AM
நூல் என்றால் இப்பொழுது புத்தகம் என்ற பொருளில் வழங்குகின்றோம், நில நூல், வான நூல், உடல் நூல், உள நூல், மருத்துவ நூல், கணக்கு நூல், விஞ்ஞான நூல், அரசியல் நூல் என்ற பொதுப் பொருளிலேயே இச்சொல் வழங்கி வருகின்றது. ஆயினும் இன்று இலக்கியம் என்ற சொல் எப்படிச் சிறப்புப் பொருள் கொண்டு வழங்குகின்றதோ அது போலவே நூல் என்ற சொல் பண்டைக் காலத்தில் சிறப்புப் பொருள் கொண்டு வழங்கி வந்திருக்கின்றது. இலக்கியம் என்ற சொல் முன்பு பொதுச் சொல்லாக வழங்கி வந்தது. இன்று சிறப்புச் சொல்லாக வழங்கி வருகின்றது. நூல் என்ற சொல்லே முன்பு சிறப்புச் சொல்லாக அதாவது இன்று இலக்கியம் என்ற சொல் எப்பொருளைக் குறிக்கின்றதோ அப்பொருளைக் குறிக்கும் சொல்லாக வழங்கி வந்தது; இன்று பொதுச் சொல்லாக புத்தகம் என்பதைக் குறிக்கும் பொதுச் சொல்லாக வழங்கி வருகின்றது. இவைதான் இவ்விரண்டு சொற்களுக்குமுள்ள வேற்றுமை. முன்னோர்கள் இலக்கியத்தை நூல் என்ற பெயரால் அழைத்திருக்கின்றனர். நூல் என்றால் பல சிறந்த கருத்துக்கள் நிறைந்தவை; சுவையுள்ள கற்பனைகள் நிரம்பியவை; உள்ளத்தைக் கவரும் இனிய செய்யுட்களின் தொகுப்பு; என்று கூறிவிடலாம். பண்டைக் காலத்தில் நூல் என்பது இந்தப் பொருளில் வழங்கிற்று என்று கூறுவது பொருந்தும். இதில் தவறில்லை. உரைநடை இலக்கியங்களுக்கும், இக்கருத்துப் பொருத்தமானதுதான்.அறம் பொருள் இன்பங்களைக் கூறுவதே செய்யுள், இச் செய்யுட்களின் தொகுதியே நூல் என்று முன்னோர்கள் கூறினர்; கருதினர்.

""செய்யுட்கள் அறம், பொருள், இன்பம் முதலிய மூன்று பொருட்களையும் அமைத்துப் பாடுவதற்கு உரியவை'' என்று தொல்காப்பிய ஆசிரியர் கூறியிருக்கின்றார். அவரும் தாமே இக்கருத்தைப் புதிதாக எடுத்துக் காட்டுவதாகச் சொல்லவில்லை; நமக்கு முன்னிருந்த அறிஞர்கள் கருத்து இது; அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்றுதான் கூறியிருக்கின்றார். இதனை, ""அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய மும்முதற் பொருக்கும் உரிய என்ப''என்ற தொல்காப்பியச் செய்யுளியல் சூத்திரத்தால் காணலாம்.

இன்றுள்ள தமிழ் நூல்களிலே, அதாவது தமிழ் இலக்கண நூல்களிலே பழம் பெரும் நூல் தொல்காப்பியம். அது முழு முதல் நூலுமாகும். ஆதலால் தொல்காப்பியக் கருத்தை ஒரு வரலாற்று உண்மையாக வைத்துக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆகவே, நூல் என்றால் அறத்தைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் உரைப்பதே என்று அறியலாம். அறம் என்பது மக்களின் கடமைகளைப் பற்றிக் கூறுவது, அவர்களுக்கு எத்தகைய பண்பு வேண்டும் என்பதைப்பற்றி வலியுறுத்துவது; அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை விளக்கிக் காட்டுவது; அவர்கள் இன்புற்று வாழ்வதற்கு வழிகாட்டுவது, இவை போன்றவைகள் எல்லாம் அறத்தில் அடங்கும். பொருள் என்பது செல்வத்தின் அவசியத்தைப் பற்றி உரைப்பது; அதைத் தேடும் வழிவகைகளைப் பற்றிக் கூறுவது; எந்த வழியிலே பொருள் ஈட்ட வேண்டும் எந்தெந்த வழியிலே வரும்பொருள் நன்மையளிக்கும் என்பதை விளக்குவது. அறத்திற்கும் இன்பத்திற்கும் அடிப்படையானது பொருளாகும். ஆதலால் அதை ஈட்ட வேண்டிய முயற்சி மக்களுக்கு வேண்டியது அவசியம் என்பதையும் வலியுறுத்துவது, இவை போன்ற செய்திகளைப் பற்றிக் கூறுவதே பொருளாகும்.

இன்பம் என்பது உலக வாழ்வில் ஒவ்வொரு மனிதரும் தனித்த முறையில் அனுபவிக்கும் இன்பமாகும். இன்பத்திற்கு அடிப்படை அன்பு. அன்பு வளரும் இடம் இல்லறம், மனைவி, மக்கள் இவர்களே அன்பைத் தழைக்கச் செய்யும் பருவ மழைகள், இவர்களோடு கூடி இன்புறுவதைப் பற்றியும், இதே சமயத்தில் மனித சமுதாயத்துடன், ஒன்றுபட்டு இணைந்து வாழ வேண்டிய அவசியத்தைப் பற்றியும் கூறுவதே இன்பமாகும்.

மனித வாழ்க்கையைக் கூட்டுறவு வாழ்க்கையாக மாற்றியது இன்ப உணர்ச்சியும் அதன் அடிப்படையான அன்புந்தான். இல்லறத்திலே வாழ்கின்றவர்கள் தங்கள் சொந்த வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதால் பயனில்லை; அது மனிதப் பண்புள்ள வாழ்க்கையும் அன்று; அவர்கள் விருந்தோம்பல், வறியோரைக் காத்தல், பிறருக்கு உதவுதல், நாட்டின் நன்மைக்கான பொதுக் காரியங்களுக்கு உதவுதல் போன்ற அறங்கள் இல்லறத் தார்க்குக் கடமைகளாக வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன. இக்கடமைகள் எல்லாம் மனித சமுதாயத்துடன் ஒன்றுபட்டுக் கலந்து வாழ்வதற்குக் காட்டும் வழிகளாகும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அறம், பொருள், இன்பம் என்ற இந்த மூன்று தலைப்பின் கீழ் மனித வாழ்வைப் பற்றிய எல்லா விஷயங்களையும், மனித வாழ்விற்குத் தேவையான எல்லா விஷயங்களையும் விரிவாகக் கூறிவிட முடியும். ஆதலால்தான் அறம், பொருள், இன்பங்களைப் பற்றிக் கூறுவதே செய்யுள் என்று கூறினர்; அச்செய்யுட்களின் தொகுப்பே இலக்கியம், நூல் என்று கொண்டனர். இதுதான் இன்று நாம் விரும்பும் இலக்கியம் பற்றி முன்னோர்கள் கொண்டிருந்த முடிவாகும். பிற்காலத்தில் மனிதன் மறுவுலக வாழ்வைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில்தான் வீடு என்ற பொருளும் அந்த மூன்றுடன் சேர்ந்தது. தெய்வ பக்தியும் மத நம்பிக்கையும் மத ஒழுக்கங்களும் வளர்ந்த காலத்தில்தான் அறம் பொருள் இன்பங்களுடன் வீட்டையும் சேர்த்தனர்.அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூல் பயனே என்று கூறினர். நூல்களிலே இலக்கியங்களிலே இந்த நான்கு பொருள்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று கூறினார்கள்.

தொல்காப்பியருக்கு முன்னே வாழ்ந்த நமது முன்னோர்கள் வீட்டைப் பற்றிக் கவலைப்பட்டதாகத்தெரியவில்லை. அவர்கள் இவ்வுலக வாழ்வைப் பற்றித்தான் கவலைப்பட்டார்கள். இவ்வுலகில் இன்புற்று வாழ்வதற்கான காரியங்களைத்தான் முதன்மையானவை என்று எண்ணினார்கள். இறந்தபின் அடையும் உலகம் ஒன்று உண்டு என்று நம்பிய காலத்தில் கூட, இதைப்பற்றி மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்ட காலத்தில்கூட அவர்கள் வீட்டுலகைப் பெறுவதில் அவ்வளவு அதிகமாகக் கவனம் காட்டவில்லை. இவ்வுலகிலே மக்கள் வாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்தால் போதும். அதுவே வீட்டு வாழ்க்கை; மோட்சம்; இன்ப வாழ்வு; என்று நினைத்தார்கள். செத்த பின் அடையக் கூடும் என்று எண்ணுகின்ற சிவலோக வைகுந்த வாழ்வைப் பற்றி அவர்கள் சிந்தித்தார்களா? என்பது ஆராய்ச்சிக்குரிய செய்தியாகும். இவ்வுலகத்தில் துன்பம் இல்லாமல் நன்றாக மகிழ்ச்சியுடன் கவலையில்லாமல், விரும்பும் தேவைகளையெல்லாம் பெற்று வாழ வேண்டும் என்பதே பழந்தமிழர் குறிக்கோள்; எண்ணம். ஆதலால் அவர்கள் பாடல்களிலோ, நூல்களிலோ வீட்டைப் பற்றி, மோட்சத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று சொல்லவில்லை.

திருவள்ளுவரும் இதைத்தான் சொன்னார், முன்னோர்களைப் பின்பற்றி, அவர் வீட்டைப் பற்றிக் கூறவில்லை. அறம், பொருள், இன்பங்களைப் பற்றியே திருக்குறளில் கூறி வைத்தார். பண்டைத் தமிழர் கருத்தைப் பெரும்பாலும் திரட்டித் தொகுத்துத் தரும் நூலே திருக்குறள். இவ்வுலகில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்கின்றவன் தேவ ருலகில், இன்புற்று வாழும் தேவர்களில் ஒருவனாக வைக்கப்படுவான் என்று வள்ளுவர் சொல்லியிருப்பதே அவர் கருத்தைக் காட்டு வதாகும்; முன்னோர் கொள்கையையும் உணர்த்துவதாகும்.""வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்'' என்ற குறள், மேற்கூறிய கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம். இதனால் பிற்காலத்தினர்தான் மதப் பிரசாரம் தமிழகத்தில் வேரூன்றிய பிறகுதான், நான்கு பயனும் அமைய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் அமைத்து நூல்களை இயற்ற வேண்டும்; இலக்கியங்களை ஆக்க வேண்டும்; என்று பிற்காலத்தினர் இலக்கணம் வகுத்தனர். இந்த நான்கையும் பெறுவதே மனிதப் பிறப்பின் பயன் என்றும் கூறினர். முன்னோர்கள் அறம், பொருள், இன்பங்களைப் பற்றி எழுதப்படுவனவே நூல்கள், இலக்கியங்கள் என்று கூறினர். இவ்வாறு எழுதப்படுகின்றவைகளையெல்லாம் நூல்கள், இலக்கியங்கள் என்று கொண்டனர். பின்னாளில்தான் வீட்டைப் பற்றியும் நூல்களில் பேச வேண்டும் என்று உரைத்தனர்..

முன்னோர்கள் கருத்தையும் பின்னோர் கருத்துக்களையும் ஒன்றாக வைத்து எண்ணிப் பார்த்தால் இருவர் கருத்தும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதைக் காணலாம். முன்னோர்கள், நூல் என்று கூறுவதும் பின்னோர்கள் இலக்கியம் என்பதைப் பொதுப் பெயராகக் கொள்ளாமல் ஒருவகை நூலுக்கு மட்டும் சிறப்புப் பெயராக வைத்து வழங்குவதும் ஒத்த கருத்துடையன என்பதை அறியலாம்..

நன்றி-வீரகேசரி