PDA

View Full Version : கவிதையை பிரித்து - முற்றிடுமா??!!!



தாமரை
17-04-2008, 08:29 AM
வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழே.

இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோமா தோழர்களே!..

இந்தப் பாடல் நிமிடங்களில் எழுதப்பட்டதால் பிழைகளும் இருக்கலாம்..:icon_ush:

ஆனால் விரிக்க விரிக்க 4 வித பொருளாவது வருமாறு அமைத்திருக்கிறேன். துவங்குங்கள்..

பிரித்து மேய..

தாமரை
17-04-2008, 10:44 AM
பிழை 1 : தமிழே என வெண்பா முடியக் கூடாது.

நாள், மலர், காசு, பிறப்பு போன்ற நான்கில் ஒன்றே இறுதிச் சொல்லாய் வருதல் வேண்டும். காசு, பிறப்பு என ஈரசை சொல்லாய் வரும் பொழுது குற்றியலுகரம் போன்ற மாத்திரை அளவு குறைந்த சொல் வருதல் நன்று.. அதனால் தமிழே என்பது தமிழ் எனப் மாற்றப்படல் மலர் என்ற அசைக்கு மாற்றப்படுகிறது.


நான்கு அடிகளைக் கொண்டு தனிச் சொல் இன்றி ஒரு அடிகளனைத்தும் ஒரே எதுகையக் கொண்ட இன்னிசை வெண்பா..

வெண்பாவில்

இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வரலாம்

வெண்டா - வெண்+டா =நேர்+நேர் = தேமா
மரைவெட்கிச் - மரை+வெட்+கிச் = நிரை+நேர்+நேர் = புளிமாங்காய்
செந்தா - செந்+தா = நேர்+நேர் = தேமா
மரைமலர - மரை+மல+ர = நிரை+நிரை+நேர் = கருவிளங்காய்
வண்டா - வண்+டா = நேர்+நேர் = தேமா
ரருந்தமிழ் - ரருந்+தமிழ் = நிரை+நிரை = கருவிளம்
தேனிதழ் - தே+னிதழ் = நேர்+நிரை = கூவிளம்
உண்டா = உண்+டா = நேர்+நேர் = தேமா
ரமரர்தேன் = ரம+ரர்+தேன் = நிரை+நேர்+நேர் = புளிமாங்காய்
உண்ணா - உண்+ணா = நேர்+நேர் = தேமா
ரமரரே = ரம+ரரே = நிரை+நிரை = கருவிளம்
கண்டாரா = கண்+டா+ரா = நேர்+நேர்+நேர் = தேமாங்காய்
திச்செந் - திச்+செந் = நேர்+நேர் = தேமா
தமிழ் - மலர் = நிரை

ஆக மா முன் -நிரை, காய் முன் நேர் என வெண்சீர் வெண்டளையும்,
விளம் முன் நேர் என இயற்சீர் வெண்டளையும் பொருந்தி வருகிறது.

ஆக இலக்கண விதிகள் படி இதை வெண்பா ஆக்கினால்

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.

இது இன்னிசை வெண்பா என்னும் பாவகையை சேர்ந்தது.

இனி அடுத்துப் பார்க்க வேண்டியது பதவுரை - கருத்து

வெள்ளைத் தாமரை வெட்கத்தில் சிவந்து செந்தாமரையாய் மொட்டவிழ்ந்து
வண்டுகளை மொய்க்க வைக்கும் இனிக்கும் தேன் போன்ற தமிழை தன் இதழில் கசியவிட

அந்த பழமையான செந்தமிழ்த் தேனைக் கண்டோரில் உண்டோர் அமரத்துவம் பெறுகின்றனர்,

உண்ணாதோர் இருப்புக் கொள்ளாமல் அமரமுடியாமல் தவிக்கின்றனர். உண்ணுதல் வேண்டி அலைகின்றனர்.

இன்னும் கருத்துக்கள் பின்னர் தருகிறேன். இது நேரிடையான கருத்து..

கருத்தினுள்ளே இருக்க வேண்டியது உட்கருத்தாயிற்றே.. அந்த உட்கருத்தை அறிய பொழிப்புரை அதாவது கவிஞன் எந்நிகழ்ச்சியை சொல்லுகிறான் என அறியவேண்டும்..

பொழிப்புரை:

வெண்ணிறமுகம், வெட்கத்தில் சிவந்து செந்நிறமாக, மலர்ந்து, அந்த முகத்திலிருக்கும் இதழ்களில் இருந்து தேன் போன்ற தமிழ் கசிகிறது.
இப்படி செந்தமிழ் எனத் தமிழுக்கு சிவப்பு நிறம் ஏற ஆதி - அதாவது மூலம், காரணம் கண்டோரில், கேட்டோர் சோமபானம் உண்ட தேவர்கள் போல மயங்கிக் கிடக்கின்றனர். கேட்காதவர் எப்போது கேட்போமோ எனத் துடிக்கின்றனர்.

பதவுரைக்கும் பொழிப்புரைக்கும் வித்தியாசம் பாருங்கள்,

பதவுரையில் நேரடியான அர்த்தம் மட்டுமே கண்டோம். ஆனால் சில வார்த்தைகளுக்கு இடையே இருக்கும் அந்தப் பிணைப்பு, கவிஞன் கண்ட அந்தக் காட்சியை நாம் காணுதலால் மட்டுமே முடிகிறது. அதாவது

ஒரு பெண் நாணி முகம் சிவந்து, தேன் குரலில் பாடுகிறாள். அதைக் கண்டோர், இருவகை,

1, அருகில் உள்ளோர், அவர்களால் பார்க்கவும் முடிகிறது இசையைக் கேட்கவும் முடிகிறது. கேட்டோர் மயங்கிக் நிற்கின்றனர்.

2. தொலைவில் உள்ளோர் அவர்களால் அவளைப் பார்க்க முடிகிறது. மற்றவர்கள் கானத்தில் மயங்கி சிலாகிப்பதைக் கேட்க முடிகிறது. கேட்கத் துடிக்கிறார்கள்..

உட்கருத்து:

இதில் என்ன உட்கருத்து.. கவிஞர் என்ன சொல்கிறார்?

அமரன்
17-04-2008, 11:08 AM
அண்ணா உங்ககூடக் கா...
இவ்வளவு சீக்கிரம் நீங்களே பிழையை சொன்னதுக்கு.
அடுத்து நன்றி..
தமிழாசான் அவதாரம் கொண்டமைக்கு.

தாமரை
17-04-2008, 11:10 AM
அண்ணா உங்ககூடக் கா...
இவ்வளவு சீக்கிரம் நீங்களே பிழையை சொன்னதுக்கு.

காய் முன் நேர் வர வேண்டும்
-- அது வெண்சீர் வெண்டளை. எப்ப நேரில் வரப்போறீங்க? :D

தாமரை
17-04-2008, 01:56 PM
உட்கருத்துக்கு போறதுக்கு முன்னால

இதே கவிதையைக் கொஞ்சம் திரும்பப் பார்ப்போமா!!!

ஏன்னா, நாம படிச்ச பாடத்தின் படி, அது என்ன பாவகை, அதன்,கருத்து, பொழிப்புரை, உட்கருத்து எழுதிட்டு, அப்புறம் சொல்நயம், சந்த நயம், எதுகை மோனைச் சிறப்புகள், அணி நயம் என உள்ள புகுந்திடுவோம்..

ஒரு கவிதையில இருக்கிற நயத்தை சொல்ல அந்தக் கவிதையை திருப்பி திருப்பிபடிக்கணும். லிட்டரலா திருப்பி கூட படிக்கலாம்.. எப்படின்னா

கண்டார் ஆதிச் செந்தமிழ்

அதாவது செந்தமிழ் என்பது முதன்மையான மொழி.. ஆதிச் செந்தமிழ்
அதைக்கண்டவர்களில்

உண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே

உண்டார் அதை அனுபவிப்பர்கள் அதின் அமிழ்தான சுவையை உண்பதால் அமரர்களாகி விடுகின்றனர். தேன் உண்ணார், அப்படி அதன் சுவையை பருக இயலாதவர்கள், அமரார், தம்மொழி இப்படி இல்லையே என இருக்க முடியாமல் பரிதவிப்பர்.

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

அப்படி வண்டுகள் மொய்க்கும்படி இனிய தேனை தமிழ் வார்த்திட


வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர

வெண்தாமரைகள் தம்மில் அச்சுவைமிகு தேனில்லையே என வெட்கமடைந்து முகம் சிவந்து செந்தாமரையாகி மலரும்.


இவ்வளவுதானா அர்த்தம்??

இன்னும் இரூக்கா?

பூமகள்
17-04-2008, 02:18 PM
உண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே
தேன் போன்ற சுவையை உடைய மொழியான தமிழ் மொழியை.. கேட்டு புரிந்து கொண்டவர்கள் அமரத்துவம் எய்தும் பேறு பெற்று சிறப்புற, அத்தகைய தேன் மொழியை கேட்டு புரிய இயலாதவரும் அமரத்துவம் அடையும் பெரும் பேறு பெற்ற சிறந்த மொழி நம் தமிழ் மொழி என்று கூட ஒரு பொருள் வருகிறதே தாமரை அண்ணா??!! :rolleyes::icon_rollout:

மூன்றாவது கோணத்தில் சரியாக பிரிச்சிருக்கேனா பாருங்க..! :icon_ush:

தாமரை
17-04-2008, 03:40 PM
சரியாகப் பிடித்தாய் பூ!

கண்டார் ஆதிச் செந்தமிழ்

அதாவது செந்தமிழ் என்பது முதன்மையான மொழி.. ஆதிச் செந்தமிழ், அதைக்கண்டவர்களில்

உண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே

உண்டாரும், உணர்ந்து அனுபவித்தவர்களும் அமிர்தம் உண்ட மாதிரி தேவர்களாகின்றனர். உண்ணாமல், அதாவது புரிந்து அனுபவிக்காமல் வெறுமனே கேட்டவர்களும், அதன் இனிமையில் அமரத்துவம் அடைகின்றனர். அமிர்தம் உண்டால் மட்டுமே அமரத்துவம் தரக்கூடியது. தமிழோ, புரிந்தாலும் சுவைதான் புரியா விட்டாலும் சுவைதான்.

இதுமட்டுமா வேறுபட்ட அர்த்தம்.... இன்னும் இருக்கிறதே!!!

ஓவியன்
17-04-2008, 03:43 PM
வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்....

என்னவோ தெரியலை தாமரை அண்ணா, இதனைப் பார்க்கையில் எனக்கு ஏனோ கொஞ்சம் வில்லங்கமாக விளங்குகிறது...!! :rolleyes:

நம்ம அமரன் இருக்காரில்லையோ அமரன் (:D), அவர் தன் காதலியை வெட்கப்படுத்தி செந்தாமரையாக மலர வைத்து, அவர் தம் காதலி அதர சுவையிலும் தேன் சுவையற்றதாக கருதி தேனினை உண்ணாமல் இருக்கிறார், அப்படி காதல் மயக்கத்தில் தேன் உண்ணாதிருக்கும் அமரனைப் பார்த்து ஆதிச் செந்தமிழின் சுவை பருகினாரா என வினவப்பட்டுளது. :D:D:D

(அப்பாடா நம்ம வேலை முடிஞ்சிட்டுது :icon_rollout:)

தாமரை
17-04-2008, 03:47 PM
வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்....

என்னவோ தெரியலை தாமரை அண்ணா, இதனைப் பார்க்கையில் எனக்கு ஏனோ கொஞ்சம் வில்லங்கமாக விளங்குகிறது...!! :rolleyes:

நம்ம அமரன் இருக்காரில்லையோ அமரன் (:D), அவர் தன் காதலியை வெட்கப்படுத்தி செந்தாமரையாக மலர வைத்து, அவர் தம் காதலி அதர சுவையிலும் தேன் சுவையற்றதாக கருதி தேனினை உண்ணாமல் இருக்கிறார், அப்படி காதல் மயக்கத்தில் தேன் உண்ணாதிருக்கும் அமரனைப் பார்த்து ஆதிச் செந்தமிழின் சுவை பருகினாரா என வினவப்பட்டுளது. :D:D:D

(அப்பாடா நம்ம வேலை முடிஞ்சிட்டுது :icon_rollout:)

அப்படியும் ஒன்று அல்ல இரண்டு அர்த்தம் வைத்திருக்கேன் ஓவியன்..

கிட்டத்தட்ட சரியாய்ச் சொல்ல்லி இருக்கீங்க..

வரிகளைக் கொண்டு விளக்கினால் நன்றாக இருக்கும்.

ஓவியன்
17-04-2008, 05:59 PM
வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வெந்தாமரையாக இருந்தவர் காதலன் (அமரன் :D) சில்மிசத்தால் வெட்கி செந்தாமரையாக சிவக்க, சிவக்க...
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
வண்டருந்தும் தேன் சுவை தமிழை பொழியும் காதலியின் வார்த்தைகளை(வார்த்தைகளுடன் அதரத்தையும் தான்..!! :D)
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
பருகியதாலும் காதல் மயக்கத்தாலும் அதனிலும் தேன் சுவையற்றதென தேன் உண்ணாத அமரன்
கண்டாரா திச்செந் தமிழ்....
இந்த செந்தமிழைக் கண்டாரா...???

Keelai Naadaan
17-04-2008, 07:41 PM
அருமையான விளக்கமளிக்கும் நண்பர் தாமரை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
பள்ளியில் படிக்கும் போது நடைபெற்ற சம்பவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருமுறை எங்கள் பள்ளி மாணவர் சாலையில் கிடந்த மனிப்பர்சை அதிலுள்ள முகவரியை பார்த்து அவர்கள் வீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்து விட்டு வந்தனர். அதில் பணமும் இருந்தது.
மறுநாள் காலை அதன் உரிமையாளர் எங்கள் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரை அணுகி விசயத்தை சொல்லி அந்த மாணவர்களுக்கு பேனா பரிசளித்தார்.
எங்கள் தமிழாசிரியரிடம் சொன்னார்

"சார் உங்க பையன்ங்க தங்கமானவங்க"
அதற்கு தமிழய்யா சொன்னார் "ஆமாம் தங்க மாணவர்கள்"
அதற்கு அந்த நபர் சொன்னார் "ஆமாம், தங்கம் ஆனவர்கள்" .

சில சமயம் மேகத்தை உற்று பார்க்கும் போது நம் கற்பனைக்கேற்ற உருவமாய் பலவிதமாய் தெரியும். தமிழும் அப்படித்தானோ? படிப்பவர் மனநிலைக்கேற்ப பொருள் மாறுமோ..?

ஷீ-நிசி
18-04-2008, 01:24 AM
மிக சிறப்பான கருத்து கீழை நாடான் அவர்களே!
தங்கமானவங்க என்ற வார்த்தையில் எத்தனை விதமாய் பிரிந்து மாறியிருக்கிறது. மேகம் போல தமிழும் அவரவர் கற்பனையை பொருத்தது என்று கூறலும் உண்மைதான்.

தாமரை
18-04-2008, 02:19 AM
வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வெந்தாமரையாக இருந்தவர், காதலன் (அமரன் :D) சில்மிசத்தால் வெட்கி செந்தாமரையாக சிரித்துச் சிவக்க

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
வண்டுகள் மொய்க்கின்ற(வண்டார்) தேன் சுவை தமிழை பொழியும் காதலியின் இதழ்கள் பொழிய


உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
பருகிய அமரர் தேன் சுவையற்றதென கருதி தேனை உண்ண மாட்டார்

கண்டாரா திச்செந் தமிழ்....

பழமையும் செழுமையும் மிகுந்த அந்த செந்தமிழ் ருசி கண்டவர்.


அதாவது நாணத்தில் சிவந்த காதலியின் உதடுகளில் கசியும் செந்தமிழ் ருசி கண்ட அமரர், தேனை ஒரு போதும் உண்ண மாட்டார்.

ஓவியா, (:D), அமரனை இவ்வளவு பொருத்தமாய் பதித்த உனக்கு, மன்றத்தில் இன்னும் இருவரை பொருத்தலாம் என்றும் தெரியுமே!:lachen001::lachen001:

அதுசரி, இப்படி ஒரு கவிதையில் பல்வேறு விதமான விஷயங்கள் வரும்பொழுது எப்படி உண்மை உட்கருத்தை கண்டறிவது?

இதற்குத்தான் திணை பயன்படுகிறது? இது அகத்திணையா? புறத்திணையா? எழுதியது காதலியின் தேன்சொட்டும் மொழிகளைப் பற்றியா? இல்லை தமிழின் இனிமை பற்றியா?

அகத்திணையில் இது குறிஞ்சித் திணையின் பாற்படும் - கூடலும் கூடல் நிமித்தமும் அல்லவா?

புறத்திணையில் இது பொதுவியல் திணையாம்..

அதான் அல்லி இலக்கணப் புத்தகச் சுட்டியை, ஒப்புமை கவிதை திரியில் குடுத்து இருக்காங்க இல்லையா? மின்னிதழில் ஜேபிஎல் அகத்திணை பற்றியும் எழுதி இருக்காங்க இல்லையா? ஒரு முறை படியுங்கள்..

:D:D:D

இது குறிஞ்சித் திணை, ஆமாம், தேனிருக்கு, வண்டிருக்கு, காதலி இருக்கிறாள், தேனுண்ட மயக்கம் இருக்கு, ஆனால் நெருடுவது

காலம் - யாமம், தாமரை மலர்வதோ காலை, இது மருதத் திணை காலம்
மலர் - தாமரை இதுவும் மருதத்தின் மலர், குறிஞ்சி, காந்தள் போன்ற குறிஞ்சித் திணை மலர்கள் இல்லை

ஆனால் மருதத்தின் கருப்பொருளோ - ஊடலும் ஊடல் நிமித்தமும்..

கவிதையில் ஊடல் பொருளும் உண்டோ???

இருக்கிறதே!!! கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் :icon_b:

க்ளூ தரட்டுமா? இதுவரை ஒரு ஆண் சொல்வதாக இருந்த இந்தக் கவிதையை, ஒரு பெண் சொல்வதாக எண்ணிப் பாருங்கள். :D:D:D

தாமரை
18-04-2008, 03:37 AM
வித்தியாசமான அர்த்தங்களை கண்டு பிடித்து பங்குகொண்ட

பூவுக்கு - 500 இ பணம்
ஓவியனுக்கு - 500 இ பணம்

பென்ஸ்
18-04-2008, 04:44 AM
ஆகா... ஆகா... அருமை

(ஏன்னா எனக்கு எதுவும் புரியலை..... இன்னும் நாலு தடவை பழைய தமிழ் புத்தகத்தை படித்துவிட்டு வாறேன்....)

தாமரை
18-04-2008, 04:47 AM
ஆகா... ஆகா... அருமை

(ஏன்னா எனக்கு எதுவும் புரியலை..... இன்னும் நாலு தடவை பழைய தமிழ் புத்தகத்தை படித்துவிட்டு வாறேன்....)

இப்படி வெட்ட வெளிச்சமா இன்னொரு க்ளூ தர்ரீங்களே பென்ஸ்.. இது தான் போட்டு வாங்கறதா?

ஆக, சொல்வது பெண், ஆதிச் செந்தமிழ், பழைய தமிழ் புத்தகம், இரண்டு க்ளூ இருக்கே, மக்கள் கண்டு பிடிக்க மாட்டாங்களா என்ன???:D:D:D

தாமரை
18-04-2008, 05:23 AM
கல்யாணம் ஆகியும் மன்றம் வர்ரவங்களைப் பற்றி,


கல்யாணமாகி நாளாச்சு, நம்ம தலைவனுக்கு மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் முடிஞ்சு, தமிழ் மன்றத்தில வந்து உட்கார்ந்து இதைப் படிச்சுகிட்டு இருக்காரு,,

இது காட்சி,



தலைவி சொல்றாங்க

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்

அதாவது, புதுப்பெண்ணாய், அறியாப்பெண்ணாய் பயத்தில் வெளுத்திருந்த வெண்தாமரை அவள், அவள் வெட்கிச் சிவந்து செந்தாமரையாய் ஆகி, வண்டுகள் மொய்க்கும் தேன் போன்ற இனிய குரலில் தமிழ் பேச உண்டார் என் தேவன்.. அது ஒருகாலம்..

தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.

அந்தத் தலைவன் இப்பொழுது அந்த பழைய சிவப்புத்தோல்காரி தமிழைக் கண்ட பின் இந்தத் தேனை உண்ண மாட்டேனென்கிறார்..

ஊடலாய், மன்றத்தில் தமிழ் படித்துக் கொண்டிருக்கும் தலைவனைப் பார்த்து அங்கே என்ன பழைய பஞ்சாங்கத்தை புரட்டிக்கொண்டிருக்கிறீர்கள், இங்கு இருக்கும் தேன் உண்ணாமல் எனக் கேட்கிறாள்..!!!

ஆக
முதல் கருவில் தமிழ்,
இரண்டாம் கருவில் காதலியின் இனிய மொழி,
மூன்றாவது கருவில் தமிழ் மேல் காதலி கொண்ட பொறாமை


இவ்வளவுதானா இந்த நான்கு வரிகளில்? இன்னும் இருக்கு..

தாமரை
18-04-2008, 05:54 AM
ஏற்கன்வே சொன்னேன் இல்லையா, கவிதை பிறந்த சூழ்நிலைக்கும் கவிதையின் பொருளுக்கும் தொடர்பு இருக்கும் என்று..

அப்படி என்ன சூழ்நிலை இருந்தது? இக்கவிதை எழுதும் பொழுது கவிஞன் கண்டதென்ன நிஜத்தில்??


எழுத்துக்களில் நீயமர்ந்து இருக்க வேண்டும் - உனை
எழுதாத கவிதையினி இறக்க வேண்டும்
பொழுதுகளை உனையெண்ணிப் போக்க வேண்டும் - என்
புன்னகையும் உன்நினைவில் பூக்க வேண்டும்
விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்
கொழுந்துதீயாய் என்னில்நீ எரிய வேண்டும் - தமிழ்
கொட்டும்மே கமாய்என்நா மொழிய வேண்டும்


வேண்டுமென கேட்டால் நான்
வந்திடுவேனோ... !
கொழுந்தீயினில் நானுந்தான்
வெந்திடுவேனோ.... !

நானில்லா உன்கவிதை
வேண்டாமென்றாயே... !
நானிருக்க என்னிருக்கை
வெண்டாமரையே... !


இந்த இரண்டு கவிதைகள் படித்து முடித்த உடன் இதன் தொடர்ச்சியாய் இக்கவிதை வெளிப்பட்டிருக்கிறது..

அப்படியானால் இது இன்னொரு கோணத்தில் பார்க்கப் பட வேண்டியது..

இது நான்காவது கோணம் நண்பர்களே!!!

ஆதி என்ன சொல்கிறார்? சாம்பவி என்ன சொல்கிறார்?

தாமரை
18-04-2008, 07:35 AM
கவிதைகளில் இருக்கும் எழுத்துப் பிழைகள் வேண்டாம், நெருடல்கள் மட்டும் சொல்கிறேன்

மேலோட்டமாய் ஆதியின் கவிதையைப் படித்தால் அவர் தமிழ் பித்து கொண்டு தமிழ் மட்டுமே எழுத வேண்டும், தமிழ் மட்டுமே வாழ வேண்டும், தமிழினைத் துணை கொண்டே தன் பொழுதுகள் போகவேண்டும், தன் உதட்டில் உதிர்க்கும் புன்னகை கூட தமிழ் சுவை கண்டு மகிழ்ந்ததால் இருக்க வேண்டும் தமிழ் அவருள் விழுது விட்டு வளர, தமிழ் தாகத்தில் அவர் அலைய, தமிழ் அவருள் கொழுந்து விட்டு எரிய அவர் மழை போல் பலகவிதை பொழிய வேண்டும் என கூறுகிறார்..

ஆனால், கவிதையை ஊன்றிக் கவனித்தால் சட்டென தெரியும் வித்தியாசம்..

தமிழில் தமிழினைப் பற்றி மட்டுமா எழுத முடியும்?

முரண் 1 : எழுத்துக்களில் நீ அமர்ந்து இருக்க வேண்டும்.. என்றால் ஆங்கில எழுத்துக்களில் தமிழ் இருக்க வேண்டும் என அர்த்தமா? இல்லை.. பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி என்ற பாரதியின் வரிகள் இங்கு மாறுவேடம் போட்டு அமர்ந்திருக்கிறது.

முரண் 2: என்னதான் தமிழ் பித்தனென்றாலும், எல்லா மொழிகளும் தமிழினைப் பற்றிதானே எழுத வேண்டும் எனச் சொல்லுவான்? தமிழ் மட்டுமே இருக்க வேண்டும், அதில் தமிழைப் பற்றியே பாடவேண்டும்..

முரண் 3:

பொழுதுகளை உனையெண்ணிப் போக்கவேண்டும், என் புன்னகையும் உனையெண்ணிப் பூக்க வேண்டும்..

அப்படி என்றால் இப்பொழுது அப்படி இல்லை என்று அர்த்தமா? அதாவது இது விருப்பம்.. இதற்கு தமிழறிவு தேவையில்லை..

முரண் 4:
விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்

இதுவரை உன்னை, உன்னை என்ற ஆதி, இப்பொழுது தமிழ் எனப் படர்க்கையில் போகிறார். அப்படியானால் உன்னை என முன்னிலையில் அவர் வைத்தது யாரை என கேள்வி போகிறது..

இது போன்ற இட மாறுதல்கள், ஆதியின் கவிதையில் சாம்பவி சில சமயம் சுட்டிக் காட்டி இருப்பார்..

முரண் 5 :

கொழுந்துதீயாய் என்னில்நீ எரிய வேண்டும் - தமிழ்
கொட்டும்மே கமாய்என்நா மொழிய வேண்டும்

ஆக மீண்டும் இவ்வரிகளில் பாடப்படும் பொருளும், தமிழும் இரண்டாய் பிரிகிறது

அப்படிப் பார்க்கப் போனால் மூன்றாம் வரியில் உள்ள

விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்

என்ற வரியில் உள்ள தமிழ் என்ற வார்த்தை மாற்றப்பட்டது கண்கூடாய் தெரிகிறது..

அவசரகதியில் எழுதிய கவிதையில் இப்படி முரண்கள் வருவது சகஜம்..

ஆதியின் கவிதையின் உட்கருத்து ::

நான் தமிழ் பைத்தியம்.. தமிழ் தமிழ் தமிழ் இது மட்டுமே!!

இப்படிக் காட்ட முயன்றிருக்கிறார்..

அதற்குச் சாம்பவி என்ன சொல்கிறார்?

ஆதி
18-04-2008, 07:51 AM
இந்த பாட்டில் இந்த கவிதை எழுதிய பொழுதில் சில தடுமாற்றம் கொண்டமை உண்மையே

என் எழுத்துக்களில் என்று துவங்கினேன், எண்சீர் எழுத ஆசை வந்ததால் "என்"னை நீக்கிவிட்டேன்..

எழுத்துக்களில் நீயமர்ந்து இருக்க வேண்டும் - உனை
எழுதாத கவிதையினி இறக்க வேண்டும்
பொழுதுகளை உனையெண்ணிப் போக்க வேண்டும் - என்
புன்னகையும் உன்நினைவில் பூக்க வேண்டும்
"அலுக்காமல் உனைமட்டும் பேச வேண்டும் - உனை
அடுத்தபிறப்பிலேனும் பிழையின்றி எழுத வேண்டும்"

என்று எழுதினேன், விருத்தம் இலக்கணத்துள் அமரவில்லை அதனால் அந்த வரிகளை நீக்கிவிட்டு

விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்

இந்த இருவரிகளை சேர்த்தேன்.. நான் கொண்ட தடுமாற்றத்தை கடைசி வரிகள் தெளிவாக ஒளிபரப்பிவிட்டது..

கொழுந்துதீயாய் என்னில்நீ எரிய வேண்டும் - தமிழ்
கொட்டும்மே கமாய்என்நா மொழிய வேண்டும்

அமரன்
18-04-2008, 08:33 AM
அப்பப்பா பல்பாடக் கதம்பமிது.
ஆரம்பித்த அண்ணனுடன் பழம்.

அண்ணா இன்னொரு க்ளூ தாருங்களேன்..
சாம்பவி சொல்வது வெள்ளை உள்ளம் இருந்தால் வருவேன் என்பதா??

ஆதி
18-04-2008, 08:36 AM
தமிழில் தமிழினைப் பற்றி மட்டுமா எழுத முடியும்?

தமிழினை தமிழாய் எழுதுவதில்லையே நாம்.. தமிழினை தமிழாய் எழுத ஆசைப்படுதல் தவறில்லை..

எடுத்துக்காட்டாக..

இலக்கணம் - இலக்கம் - இலக்கு

இலக்கு - லஷ்சியம் என்னும் வேரில் இருந்து பிறந்தது இலக்கு தமிழில்லை, இலக்கணம், இலக்கியம் தமிழில்லை..


முரண் 1 :
எழுத்துக்களில் நீ அமர்ந்து இருக்க வேண்டும்.. என்றால் ஆன்கில எழுத்துக்களில் தமிழ் இருக்க வேண்டும் என அர்த்தமா? இல்லை.. பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி என்ற பாரதியின் வரிகள் இங்கு மாறுவேடம் போட்டு அமர்ந்திருக்கிறது.

அயல் மொழியில் அன்னைத் தமிழை எழுத இயலாது, அயல் மொழியை அன்னைத் தமிழில் எழுத வேண்டாமே தமிழைத் தமிழாய் எழுத எண்ணுதல் தவறோ ?

முரண் 2:

என்னதான் தமிழ் பித்தனென்றாலும், எல்லா மொழிகளும் தமிழினைப் பற்றிதானே எழுத வேண்டும் எனச் சொல்லுவான்? தமிழ் மட்டுமே இருக்க வேண்டும், அதில் தமிழைப் பற்றியே பாடவேண்டும்..


தமிழால் தமிழைப் பாட கேட்கிறேன்..

அப்படியானால் தற்போது எழுதுவது தமிழ் இல்லையா என்றால் இல்லை, வார்த்தை என்பதே தமிழ் இல்லை சொல் என்பதே தமிழ்..

ஹிருதயம், ஷணம் என்ற சொற்களைப் பயன்படுத்தி வேண்டுமெனே கவிசமரில் ஒரு பாடல் புனைத்தேன் யாரும் எதிர்க்கவில்லை கண்டிக்கவில்லை..

முரண் 3: பொழுதுகளை உனையெண்ணிப் போக்கவேண்டும், என் புன்னகையும் உனையெண்ணிப் பூக்க வேண்டும்..

என் புன்னைகையும் தமிழெழுத்தில் பூக்க வேண்டும் என்று எழுத விழைந்தேன் தமிழ் பற்றிப் பாடுகிறோம் என்று கடைசி வரியில் கண்பிக்கலாம் என்று எண்ணியே அதை கைவிட்டேன், போக்க பூக்க ஓசை ஒருங்கே இசைந்ததால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன்

அப்படி என்றால் இப்பொழுது அப்படி இல்லை என்று அர்த்தமா? அதாவது இது விருப்பம்.. இதற்கு தமிழறிவு தேவையில்லை..

தமிழறிவு தேவையில்லைதான், அறிவுக்கு தமிழ் தேவைப்படுகிறது

முரண் 4:
விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்

இதுவரை உன்னை, உன்னை என்ற ஆதி, இப்பொழுது தமிழ் எனப் பட்ர்க்கையில் போகிறார். அப்படியானால் உன்னை என முன்னிலையில் அவர் வைத்தது யாரை என கேள்வி போகிறது..

இது போன்ற இட மாறுதல்கள், ஆதியின் கவிதையில் சாம்பவி சில சமயம் சுட்டிக் காட்டி இருப்பார்..

தமிழைப் பற்றியே பாடுகிறேன் என்று சுட்டவே வலிந்து இழுத்து வார்த்த சொல்தான் தமிழ்..


ஆதியின் கவிதையின் உட்கருத்து ::

நான் தமிழ் பைத்தியம்.. தமிழ் தமிழ் தமிழ் இது மட்டுமே!!

இப்படிக் காட்ட முயன்றிருக்கிறார்..

காட்ட அல்ல தமிழ் தமிழ் என்று எழுத முயன்றிருக்கிறேன் அண்ணா..

இந்த பாட்டு அக்கா கையெழுத்தைத் தழுவி எழுதியதே..

தாமரை
18-04-2008, 08:36 AM
அவங்க இலேசுப்பட்டவங்க இல்லை அமரா, அதுவும் ஒரு க்ளூ,

இன்னொன்னு என்னான்னா, அவங்களுக்கு என் நாற்காலி வேணுமாம்!!!

வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள் இந்தப் பாட்டையும் பாருங்க

தமிழாக ஒரு பதில். கலைமகளா ஒரு பதில்.., சாம்பவியா ஒரு பதில்..

மூணையும் யோசியுங்கள்..

தாமரை
18-04-2008, 10:35 AM
வேண்டுமென கேட்டால் நான்
வந்திடுவேனோ... !
கொழுந்தீயினில் நானுந்தான்
வெந்திடுவேனோ.... !

நானில்லா உன்கவிதை
வேண்டாமென்றாயே... !
நானிருக்க என்னிருக்கை
வெண்டாமரையே... !


கல்வியின் தலைவியாக :

கல்வி என்பது வேண்டிப் பெறுவது அல்ல, அந்தக் கல்வி தீயில் இட்டாலும் வேகாது அழியாது..

கலைமகளுக்கு வெண்தாமரை தான் இருக்கை. அதாவது தூய்மையும் மென்மையும் இனிமைகொண்ட தேனும் கொண்டது. அந்த கலைமகள் வாழுமிடம் அதே போல், இனிமையாக தூய்மையாக, மென்மையாக இருத்தல் வேண்டும்..

ஆக நானில்லாத உன் கவிதை இருக்க வேண்டாம் என்றாயே!! அப்படி இருக்க வேண்டுமானால் உன் கவிதையில் இவை இருக்க வேண்டும் எனச் சொல்கிறார்.

தமிழாக :

வேண்டுமெனச் சொன்னால் நான் வந்திடுவேனா! இப்படிப் பிழைகள் மலிய எழுத அந்தக் கொழுந்து விட்டெறியும் தீயில் நான் வெந்திடுவானா?

நானில்லாத என் கவிதை உன் கவிதை வேண்டாமென்றாயே!.. கவிதை வேண்டாம்.. நானிருக்க வெண்தாமரை போன்ற இனிய உள்ளங்கள் இருக்கின்றன.


சாம்பவியாய் :

(ஏன்னா அவருக்கும் இந்தத் தமிழ்க் குழப்படி தெரிஞ்சு போச்சு)

சாம்பவியாய் அவர் சொன்னது இறுதி வரிகள் மட்டுமே..

நானிருக்க ஆசைப்படுவது, என் இருக்கை யாக இருக்க வேண்டியது வெள்ளை உள்ளம் கொண்ட தாமரையின் இருக்கை.. அவரைப் போல வர வேண்டுமென ஆசைப்படுகிறேன் எனச் சிலேடையாய் எழுதி விட்டிருக்கிறார்.

-------------------------------

இதையெல்லாம் இப்படி அர்த்தப்படுத்திக் கொண்ட தாமரை சொல்ல நினைத்தது

கண்டார் ஆதிச் செந்தமிழே

நேர்ப் புகழ்ச்சியாய் ஒரு அர்த்தம்,
வஞ்சப் புகழ்ச்சியாய் ஒரு அர்த்தம்,
மறைபொருளாய் ஒரு அர்த்தம்..


அதனுடன் இந்த தாமரையின் இருக்கை பற்றிப் போற்றி பேசினதாலே
உண்டான கூச்சம், வெட்கம்.. இதையும் இணைத்து ஒரு கவிதை எழுதவேண்டும் என ஆரம்பிக்கப் பட்டது.

பாரதி சின்னப் பயல் எப்படி பார் அதிச் சின்னப்பயல் ஆனதோ அது மாதிரி இம்மூன்று அர்த்தங்களையும் போட

வெண்டாமரை என்ற முதற்சொல்லுடன் ஆரம்பித்ததால், வெட்கத்துடன் ஆரம்பித்தேன்.

சரி சரி, ரொம்பச் சொல்லியாச்சு.. இரு நாட்கள் மன்றம் வரமுடியும்னு தோணலை.. ஆகவே உங்க சந்தேகங்கள், விளக்கங்கள், எல்லாத்தையும் போட்டு திரியை உயிரோடு வைங்க. திங்கள் கிழமை மீண்டும் தொடங்கறேன்.. பிரிச்சு மேய..

அந்த மூணு அர்த்தங்களையும் அதற்கு முன் கண்டு பிடிப்போருக்கு தக்க ஈ பணம் சன்மானம் கிடைக்கும். :icon_b::icon_b::icon_b:

பாரதி
18-04-2008, 11:16 AM
வேண்டுமென கேட்டால் நான் வந்திடுவேனோ... !
கொழுந்தீயினில் நானுந்தான் வெந்திடுவேனோ.... !

நானில்லா உன்கவிதை வேண்டாமென்றாயே... !
நானிருக்க என்னிருக்கை வெண்டாமரையே... !

நான் வேண்டுமென்று கேட்டால் வந்து விடுவேனா..?
கொழுந்தி(யாள்) நீ இனி எனில் நானும் மனதில் நினைத்து வாடி வெந்து விடுவேனா...?

என்னைப்பற்றி எழுதாத உன் கவிதை வேண்டாம் என்றாயே... (ஏன்?)
நா (பேச விடாமல்) நிற்க என் இரு கைகளும் வெண்தாமரையாக காட்சி தருவதாலா..?

-------------------------------------------------------------

தாமரை... கடைசியாய் அழுத்தம் கொடுத்த வார்த்தைகள் மிகச்சரியானவை!!

தாமரை
18-04-2008, 11:23 AM
நான் சொல்ல வேண்டாமென நினைத்தேன்,, நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.. பாரதி!!


தமிழ் என்பது தமிழாக அங்கே முன் நிற்காததால் ஒரு பெண்ணாய் பார்த்து அந்தப் பதிலைப் போட்டிருக்கிறார்..


சபாஷ் இன்னும் கொஞ்சம் உள்ளே வெண்பாவுக்குள் வாங்க..!!!

தாமரை
18-04-2008, 07:21 PM
பித்தா என இறைவன் எடுத்துக் கொடுத்த அடியைப் போல் என்னிருக்கை வெண்டாமரை என என் இதயத்தில் சட்டமாய் அமர்ந்து கொள்வேன் என சாம்பவி சொன்னது "தமிழுக்கு ஒரு தாலாட்டில்"

-----------------------------எந்தன்
உள்ளத்தில் கோயில்கட்டி உள்ளே எழுந்தருளி
--- உட்கார்ந்து கொண்டாயடி

என்று என்றோ எழுதிய ஒரு வரிக்கு தமிழே வந்து ஒப்புதல் சொன்னது போல் அமைந்திருந்தது..

வெண்டாமரை புகழ்ச்சி தந்த வெட்கத்தில் முகம் சிவக்க யோசித்தது..

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர

என் உணர்ச்சியை அப்படியே எழுதி விட்டு

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

வண்டாருந்தமிழ் என்பதை வண்டாரும் அருந்தமிழாய் தளைக்காய் சீரமைத்தேன்..

தமிழாய் இங்கே அமர்ந்திர்ப்பது சாம்பவி.. அந்தத் தமிழ் தன் இதழிலிருந்து வார்த்தது தேனை.. உதடுகளுக்கும் இதழ்கள் என்றுதானே பெயர்.. ஆக அந்த இதழ்கள் பூவிதழ்கள் இல்லை.. தமிழின் இதழ்கள்..


உண்டார் அமரர்

தமிழே அமிர்தமல்லவா? அதை உண்டவர் அமரர் அல்லவா? அதாவது தமிழே நீ பொழிந்த தேன்சுவை அமிர்தத்தை உண்டார் அமரர்..

உண்ணார் அமரர் கண்டார் ஆதிச் செந்தமிழே!!

அப்படி உன் தமிழினிமையைக் உண்டு அனுபவித்தவர்கூட ஆதியின் தமிழைக் கண்டால் -- தமிழை உண்ண மாட்டார்கள் (அவ்வளவு பிழை மலிந்திருக்கிறது ) என எழுதினேன்

இது தளைக்காக

உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்

என்று மாறியது..

எழுதிய பிறகு, இதில் புகழ்ச்சி எப்படி இருக்கிறது எனச் சரிபார்த்தேன்

இப்போது


வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட - என்பதில் தமிழின் இதழ்கள் வடித்த தேன் என்பது மறைந்து அந்த இதழ்கள் தாமரைக்குச் சொந்தமானதாக ஒலிப்பதை அறிந்தேன்..

ஆக இரண்டாம் பொருள் பிறந்தது.. இப்பொழுது அமிர்தத் தேன்சுவை தாமரை இதழில் பொழிந்த தமிழுக்கு என மருவியது..

ஆக வெண்டாமரையில் தமிழமர புகழ்ச்சியில் வெட்கிச் சிவந்த தாமரை இதழ்களில் அருந்தமிழ் தேன் கசிய, (தமிழமிழ்திலமிழ்ந்தமிழ்ந்து கசியும் இதழமிழ்ததமிழ் - நினைவிருக்கிறதா??)

அதை உண்பார் அமிழ்துண்ட அமரர் ஆவார். அந்தத் தேனை உண்ணாதார் இவர்களுக்குச் சமமாக அமராமல் ஆதியின் தமிழைச் செந்தமிழ் எனக் கண்டார் எனப் பொருள் வந்தது..

தமிழே, எடுத்துக் கொடுத்த அடி, வீணாய்ப் போகுமா?

ஆதி என்பது நம் ஆதி மட்டும் தானா பழைமை என்றும் பொருளல்லவா? பழமை என்பது மட்டுமல்ல, ஆரம்பகால

ஆக, பழையச் செந்தமிழ் என்றால் என்ன பொருளாகிறது?

முதலில் மனதில் தொன்றிய உருவம், தமிழ் பாட்டி.. பழைய தமிழ் என்பது ஒரு கிழவி தானே..

ஆக ஒரு இளம்மனைவி, ஒரு வயது முதிர்ந்தவள்.. மத்தியில் ஒரு ஆண் அப்ப ஊடல் வரத்தானே செய்யும் என யோசிக்க

அந்த மருதத் திணை அர்த்தம் பொருந்தியது..


இதன் பிறகு கவிதை பதியப் பட,

அதன் பின்னர்தான் மறுபடி சாம்பவியின் தமிழவதாரத்தை மறந்து படித்த பொழுது, அர்த்தங்கள் மொட்டு விட்டு மலரத் தொடங்கின..

ஆனாலும்.. ஆனாலும்

ஆரம்பத்தில் சொன்னேனே மறை பொருள்.. அதாவது வலிய வைத்த பொருள்..

அது இன்னும் பாக்கி இருக்கிறது..

தாமரை
19-04-2008, 03:28 AM
எப்படி இத்தனைப் பொருட்கள் தோண்டத் தோண்ட புதையல் போல வந்து கொண்டே இருக்கின்றன..

கண்டார் ஆதியின் செந்தமிழ் என ஒரு இன் விகுதி வந்திருந்தால் ஒரு பொருளாகி இருக்க வேண்டியது

கண்டார் ஆதிச் செந்தமிழ் என்ற போது

ஆதியின் செந்தமிழ்
பழமைச் சிறப்பு பொருந்திய செந்தமிழ்
வயதான தமிழ்க் கிழவி


இது மட்டுமல்ல

உண்டார் அமரர் - அமரர் இத்தேனைப் பருகினார்
கண்டார் ஆதி இச் செந்தமிழ் - ஆதி இச்செந்தமிழைக் கண்டார்
உண்ணார் அமரரே - மெல்லவும் முடியாமல் ஜீரணிக்கவும் முடியாமல், என்போமல்லவா அப்படி இதைச் சுவைக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தவிப்பார்

இன்னும் இருக்கே!!!

கண்டு+ஆராதி+(இச்)+செந்தமிழ்

அதாவது இச் செந்தமிழின் பெருமையைக் கண்டு ஆராதியுங்கள்..

உண்ணார் அமரரே

இதுவரை சுவைக்காமல் அமர்ந்திருப்பவர்களே!
கண்டுகொண்டு போற்றுங்கள் இச் செந்தமிழை

என

அழகாக சிலேடை ஒளிந்து கொண்டு விளையாடுவதை கவனிக்க தவறி இருப்பீர்கள்..

இதில் உள்ள அணியும் சிலேடை அணிதான். அமரர், கண்டாராதிச் செந்தமிழ், தாமரை எனப் பலசொற்கள் பல அர்த்தங்களைத் தருமாறு உபயொகப்படுத்தப் பட்டுள்ளன. கவிதைகளில் ஒரு அணி மேலோங்கி நின்றாலும் மற்ற அணிகளும் இருக்கும்..

வெண்தாமரை / செந்தாமரை ஆகி தேன் சொரிந்தது என்பது உவமேயம் இல்லாத உவமை. இது பிறிதுமொழிதல் அணியாகி விடுகிறது.. உவமேயப் பொருளாய் கூறப்பட்டது எது என்பது வாசகரின் கருத்துக்கு விடப்பட்டு விடுகிறது..

அமரர் அமரரே என்பது பின்வரு நிலையணி என்ற போதும் இரண்டாம் அமரரில் சிலேடை மிக்கச் சிறப்பதால், பின்வருநிலையணி மயங்கி விடுகிறது..

பலாப்பழத்தின் ருசி காண எத்தனைப் போராட்டம் நடத்தவேண்டுமோ அத்தனை போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது இப்படி சுவை துய்க்க,,

அமரன் சொல்வது போல வார்த்தைகள் எல்லாம் எளிய வார்த்தைகள், அவற்றை அடுக்கிய விதம் தான்.. செய்யுளை இப்படிச் சுரங்கமாக்கி விட்டது.

அதாவது வார்த்தைகள் தெளிக்கப்பட்டு அவற்றிற்கு இடையிலுள்ள தொடர்புகள் நீக்கப்பட்டு விட்டன.

வார்த்தைகளுக்கு இடையேயான அந்த உறவுகளை நிர்ணயிப்பது வாசகனின் மனம்..

குழந்தைகள் விளையாடும் துண்டுகளைப் பொருத்தி உருவம் கொண்டுவரும் முயற்சி..


கலைடாஸ்கோப் தெரியுமே உங்களுக்கு, வண்ணமணிகளை உள்ளே போட்டுக் குலுக்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தால் பல ஒழுங்குள்ள உருவங்கள் கிடைக்கும்.

இதிலும் பலவித புதிய உருவங்கள் வருகின்றன.. அர்த்தமுள்ள உருவங்கள், அர்த்தமில்லா உருவங்கள் என..

கவிதை அதனால் ஆழ்ந்து படிப்பவனுக்கு புதியதாகவே இருக்கிறது, மனம் சலித்துப் போகும் வரை..

இக் கலைடாஸ்கோப்பில், கலைதான் ஸ்கோப், கலையா ஸ்கோப் (நன்றி : சாம்பவி - சொற்சிலம்பம்).

ஆக அருமைச் செந்தமிழுக்கு நேர்புகழ்ச்சி, ஆதியின் தமிழுக்கு வஞ்சப் புகழ்ச்சி என அணிகளிலேயே சிலேடை அமர்ந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட

மறைபொருளாய் இருப்பதை அறிந்து கொள்வதை வாசகர்கள் பார்வைக்கே விட்டு விடலாம்.

இனி எதுகை மோனை சந்தம் என பிரித்து அழகு சொல்ல வேண்டியதுதானே

சந்தம் எனப் பார்த்தால்

வெண்டாமரை செந்தாமரை

அமரர் அமரரே என முதலாவது அடியிலும் மூன்றாம் அடியிலும் சந்த நயம் பொருத்தப்பட்டு இருக்கிறது

வெண்டா, வண்டா, உண்டார், கண்டார் என அடி எதுகைகள் ஒரு விகற்பமாய் வந்திருப்பது சுவை கூட்டுவதாகும்


ஆக, பதவுரை, பொழிப்புரை, உட்கருத்து, திணை, அணி, நயம் என கவிதையை ஆராய்ந்தோம்..

மறை பொருள் இன்னும் சொல்லவே இல்லையே!!!

மறைபொருள் வைப்பதே மறைக்கத்தானே!.. மன்றத்தில் சில உறுப்பினர்களுக்கு இதிலே ஒரு சேதி வைத்திருக்கிறேன்.. ஒரு சமிக்ஷை, சிக்னல் அதாவது சைகை..

அந்தச் செய்திக்கும் இத்தனை விளக்கங்களுக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லை.

:food-smiley-012:

கவிதையைச் சுவைப்பது என்பது மிக இன்பமானது, சுவை தெரிய வரும்பொழுது..

பத்ம வியூகம் சிக்கலானதாம், பாரதம் சொல்கிறது.. உடைக்கத் தெரிந்தோர் இருவர்தானாம்.. ஆனால் உள்சென்று திரும்பத் தெரிந்தோன் அர்ச்சுனன் மட்டும் தானாம்..

இது ஒன்றும் அப்படி அல்ல..

பிக்காஸோவின் மாடர்ன் ஆர்ட்டைப் போல கை கால் மூக்கு கண் என அங்கங்கே வார்த்தைகள் தெளிக்கப்பட்டு கவிஞனின் சிந்தனைத் திறனை விட வாசகனின் ரசனைத் திறனை நம்பி இருக்கும் இது ஒரு நவீன அணி.

எப்பொழுதாவது மாடர்ன் ஆர்ட்டை ரசித்து அர்த்தம் சொல்வதாய் கதை விடும்பொழுது உதட்டோரம் நெளியும் புன்சிரிப்பிலிருந்து கசியட்டும்


"தாமரைக் கவிதைகள்"


தேடித் தேடி வந்து தேன் ருசித்துச் சென்ற வண்டுகளுக்கு - நன்றி!!!


:music-smiley-009: :icon_give_rose: :auto003: :angel-smiley-026:

சிவா.ஜி
19-04-2008, 04:47 AM
உண்மைதான்...இது உண்மைத்தேன். சுவைக்க வந்தவரை, மலைக்க வைத்த தமிழ்த்தேன். அசை, சீர், அடி, தொடை என எந்த இலக்கணமும் மண்டைக்குள் ஏறவில்லையானாலும், ஒரு கவிதையின் பல முகங்களை மாறி மாறி காட்டியிருப்பது தேன்மாரியில் நனைந்ததைப் போன்ற சுகத்தைக் கொடுத்தது மிக மிக உண்மை. தமிழை எப்படிப் படித்தாலும் இனிக்கும்....அதை இப்படிப்படித்தால் மயக்கும்.

வியந்து பாராட்டுகிறேன் தாமரை. வாழ்த்துகள்.

அமரன்
19-04-2008, 07:24 AM
ஹையோ... தலை சுத்துத்து. அடுத்தது???
(கடைசீல போட்டிருக்கீங்களே தாமரைக் கவிதைகள்னு அதில ஏதும் சிலேடை இல்லையே)

சாம்பவி
19-04-2008, 09:39 AM
மாமனாரோடு சேர்ந்து..
இந்நாரும் மணம் பெற்றிற்று... !

ஆயின்...
முற்றிற்றெனின்.. ;)
முற்றுமோ....
தொடருமே... !

இரட்டைத்தாழ்ப்பாளில்....
ஒன்றைத்தானே திறந்தீர்,...
மாமனாரே...
மற்றொன்று...... ????
தொடரட்டுமே... !!

தாமரை
19-04-2008, 06:24 PM
அது தாழ்ப்பாளல்ல
பூட்டு!

திறப்பதற்குச் சாவி வேண்டுமே!!!

தாமரை
20-04-2008, 02:54 AM
மறைபொருள் இதுவல்ல.. மறைபொருளை, அவ்விருவரும் இன்னும் உணரவில்லை என்பது இன்று உணர்ந்து கொண்டேன். :icon_ush::lachen001:



வேண்டுமென கேட்டால் நான்
வந்திடுவேனோ... !
கொழுந்தீயினில் நானுந்தான்
வெந்திடுவேனோ.... !

நானில்லா உன்கவிதை
வேண்டாமென்றாயே... !
நானிருக்க என்னிருக்கை
வெண்டாமரையே... !

தமிழன்னை திட்ட மட்டுமா செய்வாள்?
தட்டிக் கொடுத்து வட்டிலில் அன்னமிட்டு நிலா காட்டிச் சோறூட்டவும் செய்வாளே!

நானில்லா கவிதைகள் வேண்டாம் என்றாயே! கலீல் ஜிப்ரான் போன்றவரின் கவிதைகளை படிக்கும் ஆதியே, அவைகள் எல்லாம் கவிதைகள் இல்லையோ?

சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்குச் சேர்ப்போம் என்றார் பாரதி..

ஆக
அப்படி நானில்லா உன்கவிதை வேண்டாம் என்றாயே

அப்படி நான் இருக்க வேண்டுமானால் என் இருக்கை இருப்பு வெண்டு (பழுக்காமலேயே உதிரும் காய்கள்) ஆம் அரையே!(வெண்டாமரையே)

அதாவது நான் பாதித் தமிழாய் மட்டுமே இருப்பேன்..!!


இன்னொரு பார்வை!!!

நானில்லா கவிதைகள் வேண்டாம் என்றாய்.. அப்படி இல்லாவிட்டால், நான் இருக்க (அதை மொழிமாற்றம் செய்ய, அதில் நான் இருக்க) என் (இருக்கை) இரு கைகளும் தேன் வாரி வழங்கும் வெண் தாமரைகளன்றோ!!!


சாம்பவி இப்படியும் எழுதி இருக்க...

இதன் பதில் எப்படி இருக்கிறது??

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர

வாரி வழங்கும் வெண்தாமரை கைகள் செந்தாமரையாய் மலர்ந்து..

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

வண்டுகள் மொய்க்கும் சுவைத்தேனை இதழ்களின் மூலம் அருமைத் தமிழ் வார்த்திட

வெண்டாமரை செந்தாமரையாகக் காரணம் வெட்கம். என்ன வெட்கம்?

புது இடமல்லவா? ஏன் புது இடம், தமிழ் இடம் பெறாத உமர்கய்யாம், கலீல்ஜிப்ரான் போன்றவரின் கவிதைகளில் தமிழ் அமர்கிறாள்..

அப்படி அமரும் பொழுது வெட்கத்தில் சிவந்து வெண்டாமரைக் கைகள் சிவக்குமளவுக்கு தேனை வார்க்கிறாள்..

உண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே
கண்டா ராதிச் செந்தமிழ்

அதை உண்டு மகிழ்பவர்கள் அமுதுண்டவர்..
ஆதியின் செந்தமிழைக் கண்ட அமரர் இனி தேனை உண்ணார், அந்தத் தமிழை மட்டுமே உண்ணுவார்

இப்படி ஒரு அர்த்தப் பொதிவும் நேர்ப் புகழச்சியாய் மறைந்து நின்று எட்டிப் பார்ப்பதை

எப்படி யாரும் பார்க்க முடியவில்லை?

காரணம் உணர்ச்சி எனும் பூட்டு. பாட்டில் குறை என்று முதலில் கண்டதும், அந்தப் பூட்டு பூட்டப் பட்டு விட்டது..


அதைத் திறக்கச் சாவி, திறந்த மனம்.. தமிழூட்டிய அமுது..



இல்லா விடத்தில் இருக்குந் தமிழது
பொல்லா விடத்தில் பிறக்குந் தமிழது
செல்லா விடத்தில் செழிக்குந் தமிழது
கல்லா விடத்துத் தமிழ்.

அமரன்
20-04-2008, 07:42 AM
ஏங்க விடதில் விடத்தில் என்று வருகிறதே. வேறு பொரு(ட்க)ளும் தருமே. இதுவும் பிரித்து மேயத்தானா. தலைப்பை பார்த்தால் முடிவு கத்துக்குடிகள் கையில் போலிருக்கே... தமிழது - எப்படி அண்ணா

தாமரை
20-04-2008, 08:14 AM
அமுது என்று சொல்லி விட்டு விடத்தில் விடத்தில் என எழுதி விட்டிருக்கிறாரே! முரணாய்..

அமுதைத் தேடிக் கடைய முதலில் கிட்டியது ஆலகாலம் தானே!!!

இங்கும் ஒரு ஈசன் விடமுண்ண, மேலும் கடைந்தால் அமுதுண்டு..

அமுதுண்டதால் தானே அமரன்!!
விடம் கண்டதும் போகலாமோ வேறிடம்?

இதன் முதற் பொருள் எடுக்க க்ளூ

கவிதையைச் செய்யுளை ஆரம்பத்தில் இருந்து படிக்காமல் முதலடியின் மூன்றாம் சீரில் ஆரம்பித்தால்

இருக்கும் தமிழது பொல்லா விடத்தில்
பிறக்கும் தமிழது செல்லா விடத்தில்
செழிக்கும் தமிழது கல்லா விடத்து தமிழ் இல்லாவிடத்தில்


இப்பொழுது இருக்கும் தமிழ் பொல்லாத விஷம் தாக்கி கெட்டுப்போய் இருக்கிதது
இனிப் பிறக்கும் தமிழிடம் இந்த விஷம் செல்லாது,, தமிழ் செழிக்கும்.. தமிழ் கல்லாத மக்கள் இருக்குமிடம் இல்லா இடம் என மாறும்.


அதாவது இனி பிறக்கும் தமிழை தமிழ் கல்லோரிடத்தில் தமிழ் பிறந்து செழிக்குமாறு பயன்படுத்துவேன் என கவிஞன் சொல்லுகிறேன்

ஆ விடம் - என்பதற்கு நீங்கள் எப்படியெல்லாம் பொருள் கொள்கிறீர்களோ அப்படி எல்லாம் மாறக் கூடியது இச்செய்யுள்

மற்ற மொழிகளை ஒப்பிடுவதாக கொண்டால்

மற்ற எந்த மொழியுமே இல்லாத இடத்தில் இருக்கும் தமிழ்
பொல்லாத விஷத்திலும் உயிர்ப்பைத் தரக் கூடியது
எந்த மொழியுமே செல்லமுடியாத உலகிற்கு உயரத்துக்கு அழைத்துச் செல்லக் கூடியது

கல் - ஆ - இடத்துத் தமிழ்...

அந்த இடத்தைப் பெற்ற தமிழைக் கற்றுக்கொள்

அது தமிழுக்கு கொடுத்த வாக்கு.. இது தமிழனுக்கு தரும் நோக்கு

அடுத்து என்ன

காலத்தின் போக்குதானே!!!

அமரன்
20-04-2008, 10:33 AM
இருக்குந் தமிழது = ஆதிக் கவிதைகளில்/யில் இருக்கும் தமிழ்
பொல்லா விடத்தில் பிறக்குந் தமிழது = பொல்லாத விடமாகிய காதலினால் பிறக்கும் தமிழ். (காதல்= தமிழ்பொருள்/மனிதம்/மனிதன்......மீதானது)
செல்லா விடத்தில் செழிக்குந் தமிழது=எங்கெங்கே தமிழ் செல்லுபடி ஆகாதோ.. (நாட்டாமை படத்துல விசயகுமார் சொல்வாரே=இந்த சாட்சி செல்லாது, செல்லாகாசு என்று சுருக்கமாக சொல்லி இருக்கலாமேன்னு யாரோ டப்பிங்க் கொடுக்கிறாங்க.) அங்கே கூட தமிழ் செழிக்கும். (எடுத்துக்காட்டு=ஈழம்)
கல்லா விடத்துத் தமிழ்: கல் ஆ: ஆ=ஆன்மா: ஆன்மா=மனம். கல்மனதிலும் அந்த தமிழ் இருக்கும். (எடுத்துக்காட்டு= தீவிர தமிழ் எதிர்பாளரான சிங்கள அரசியல்வாதி, நாடாளுமன்றத்தில் "சிங்களத்தீவினுக்கோர் பால*மமைப்போம்" என்ற பாடலை தேடிப்பிடித்து சொன்னாராம்). அப்படிப்பட்ட, எல்லாரும் எட்டக்கூடிய இடத்தில் இருக்கும் தமிழ், எந்த மொழியும் எட்ட முடியாத இடத்தில் உள்ளது.

இன்னும் என்னன்மோ தோன்றுகிறது. பதிக்க பயமாக உள்ளது சரியா பிழையா என்பதல்ல காரணம். கா ரணமாகிடுமோ என்ற பயமே காரணம் :)

தாமரை
20-04-2008, 10:45 AM
அமரன் இந்தக் கவிதை உங்களூக்கே! மூழ்கி முத்தெடுங்கள்..

அதற்காய் தமிழ் கோபம் கொள்ளாது.. ;)

அமரன்
20-04-2008, 10:49 AM
நேரம் கிடைக்கும்போதேல்லாம் அச்சமின்றி மூழ்குவேன்.
மூச்சடைக்க நேர்ந்தால் தூக்கி விடப் பலர் உள்ளனரே!!
சிப்பியை வைத்தும் அலங்காரம் செய்யலாம்!

தாமரை
20-04-2008, 01:25 PM
ஆ என்ற இந்த ஒரு எழுத்துக்கு

ஆகும் என்றும் அர்த்தம் உண்டு.. இல்லை என்றும் அர்த்தம் உண்டு

அமரன் சொன்ன ஆன்மா என்றும் அர்த்தம் உண்டு

lolluvathiyar
21-04-2008, 07:39 AM
இந்த ஏரியாவுக்கே நான் அதிகமா வந்தது இல்ல, கவிதை பகுதி எனக்கு அலர்ஜியான பகுதி, அங்கு நான் ஏதாவது பதித்தா அது மற்றவர்களுக்கும் அலர்ஜி.
ஒரு கவிதைக்கு இத்தனை விளக்கங்களா, அப்பா தலையை சுத்துது.

தாமரை
22-04-2008, 02:43 AM
சரி அமரன் ஒரு வரி எடுத்துக் கொடுக்கிறேன்

இல் + ஆவிடத்து - இல்லங்கள் உண்டாகும் இடத்து.. இல்லங்கள் உண்டாவது என்றால், உறவுகள் உண்டாவது அண்ணன் தம்பி அக்காள் தங்கை, அப்பா அம்மா உண்டாவது சுருக்கமாகச் சொன்னால் நம் மன்றம்..

இல் ஆவிடத்து இருக்குந் தமிழ்..

இப்படிச் சொந்தங்கள் உண்டாகும் இடத்திலெல்லாம் தமிழ் இருக்கும்.. இது தமிழ்ப் பண்பாடு இல்லையா!!!!

புலம் பெயர்ந்த தமிழருக்கு புது இடம் இல்- ஆகிறது.. அப்படி இல் ஆகிய இடத்தில் தமிழ் இருக்கிறது.. இல்லையா?

தாமரை
23-04-2008, 02:25 AM
பொல்லா விடத்தில் - ஆகாத இடங்கள்.. வேண்டாத இடங்கள்.. இப்படி தமிழ் எங்கு வேண்டும் பிறக்கலாம்..

பொல்லாத ஒன்று - நாக்கு.. அது புரண்டு புரண்டு பேசுகின்ற பொல்லாத் தன்மை கொண்டது.

நாவில் பிறக்கும் செந்தமிழ்

செல் ஆ விடம் - - செல் ஆகும் இடங்கள் செல்லுகின்ற அந்த இடங்களில் எல்லாம் செழிக்கும் தமிழ்

கல் ஆ விடத்தில் - கல் இது போன்ற இடங்களில், தமிழை இது போன்ற இல்லங்களிலும், செல்கின்ற இடங்களில்,

ஆக தமிழ் பிறந்து வளர்ந்து வாழ்கின்ற அத்தனை இடங்களில் இருந்தும் தமிழைக் கற்றுக் கொள்..

இது ஒரு பொருள்

தாமரை
23-04-2008, 02:56 AM
விஷத்தை முறிக்கும் விஷம் - தமிழ் (இகழ்வது போல் புகழ்தல்)

விடத் தமிழ் --- விஷமான தமிழ்

பொல்லாத விஷம்.. அங்கே பிறக்கும் தமிழ் அதைச் செல்லா விஷமாக(விஷப் பண்பு முறித்து செல்லாததாக, பிறர் மீது செல்லாத விதமாக) மாற்றி, இல்லாத விஷமாக அதை மாற்றிச் செழிக்கிறது.. இப்படிப் பட்ட விஷமுறிப்பு தன்மை கொண்ட விஷமான தமிழைக் கற்றுக்கொள்.

இதை நேர்பொருளில் கொண்டால்

பொல்லாத ஆகாத இடங்களிலும் தமிழ் பிறக்கும்
இதுவரை செல்லாத இடங்களிலும் தமிழ் செழிக்கும்..
இதுவரை இல்லாத இடங்களிலும் தமிழ் இருக்கும்
அப்படிப்பட்ட பெருமைக்குரிய இடத்தைப் பெற்ற(ஆவிடத்து)
தமிழைக் கற்றுக் கொள்

2 நிமிடங்களில் எழுதிய ஒரு வெண்பா! இத்தனைப் பொருள்களை அடக்கி இருப்பதின் காரணம் என்ன?

அமரன்
23-04-2008, 06:35 AM
சொற்சுருக்கம். ஒரு சொல் பல பொருள் தரும் தமிழின் சிறப்பு... சொற்றொடர்களுக்கிடையிலான அறுந்த பிரம்மை தொடர்பு. இவற்றை திறம்படக் கையாண்ட நீங்கள்..

தாமரை
23-04-2008, 07:15 AM
சொற்களுக்கு இடையே உள்ள பிணைப்பை மனதில் போட வைப்பதால் தான் பலபொருள் கொண்ட கவிதைகள் உருவாகின்றன, வார்த்தைகள் இணைத்து விட்டால் பொருள் நிலைத்து விடுகின்றன..

வார்த்தைகள் இழுத்து பொருத்தி நிறுத்துவதை விட இரண்டு வார்த்தைகளை ஒரு நைந்த நூல் வார்த்தைக் கொண்டு இணைப்பதை விட
இயல்பான வார்த்தை ஓட்டம் தவறுகள் தலை தூக்காமல் பார்த்துக் கொள்கிறது..

பண்டைக் காலத்திலே வாழ்வியலுக்கென கவிதைகள் எழுதும் பொழுது இப்படி காற்றுக் கவிதைகளை எழுதி விட்டால் அர்த்தங்கள் அனர்த்தங்கள் ஆகி விடக் கூடிய வாய்ப்புண்டு என்று கருதி அர்த்தங்கள் பழுது படாமல் இருக்க மிகக் கவனம் எடுத்துக் கொண்டிருப்பார்கள்..

ஆனால் அதே மருத்துவம் போன்ற சாத்திரங்கள் என்னும் பொழுது தவறானவர் கையில் சிக்கி, தீமைக்குத் துணை போகக் கூடாது என்பதற்காக
இப்படி பல பொருள் தெரியுமாறு எழதி... அதைக் கற்கவேண்டுமெனில் குருவின் துணை தேவை என்ற நிலையை ஏற்படுத்தினார்கள்..

இம்மாதிரிக் கவிதைகள் திடீரென ஒருவரின் கையில் கிடைக்கும் பொழுது,

அதை எழுதியவர் யாரென்று தெரியாத பொழுது நம் அந்தக் கவிதையை புரிந்து கொள்ளவியலாமல் தவிக்கிறோம். நம்முடைய இன்றைய அறிவுக் கேற்ப இது இதைக் குறிக்கிறது என அர்த்தப் படுத்திக் கொள்ள முயற்சிக்கிறோம்

இதை எழுதியவர் அகத்தியர், இதை எழுதியவெ புலிப்பாணி என்று தெரிந்தால் அவர் என்ன எழுதி இருப்பார் என்று இலக்கணம், ஜோதிடம், மருத்துவம் என்று அந்தத் துறையை ஊகித்து அது சம்பந்தப் பட்ட அர்த்தங்களைத் தேடுகிறோம்

பொருள் கொடுக்கும் பொழுது - கொடுத்ததை மட்டும் பெற்றுக் கொள்கிறோம்

பொருள் எடுக்கும் பொழுது - என்ன எடுப்பது என ஆராய்ந்து நமக்குத் தெரிந்தவை எல்லாம் எடுத்துக் கொள்கிறோம்..

இரண்டாம் கவிதை எழுதும் பொழுது.. சொல்லப் போனால் முரண் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்ததே தவிர இப்படிப் பொருளிருக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இல்லை..

இயக்கியவள் தமிழ்.. எழுதும் பொழுதும் எழுதி முடித்த பொழுதும் எண்ணமாறுபாடுகள்..

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - தெரிந்த பழமொழி
அளவாய் இருந்தால் நஞ்சும் மருந்து - தெரிந்த மருத்துவம்.

எதிரெதிர் விஷயங்கள் ஆனால் அடிப்படை ஒன்றுதான்.. இவை இரண்டிலும் இருக்கும் வலியுறுத்தல் என்ன? அளவறி! அளவை அறிந்துகொள்..

அந்த அடிப்படையை மட்டும் எழுதுகிறேன், பலபொருட்கள் தோன்றிவிடுகின்றன.. ஏனெனில் அள்வு என்பது அமிர்ததிற்கும், நஞ்சிற்கும் மட்டுமா? உடல் எடை, நட்பின் ஆழம், உறவின் தூரம், பேச்சு என பல் இடங்களில் பயன்படுகின்றது..

ஆக மருந்தைப் பற்றி எழுதாமல் அளவறிதலைப் பற்றி எழுதுவதால் உங்களால் எங்கும் பொருத்த முடியும்..

யவனிகா
23-04-2008, 02:12 PM
ஆகா... ஆகா... அருமை

(ஏன்னா எனக்கு எதுவும் புரியலை..... இன்னும் நாலு தடவை பழைய தமிழ் புத்தகத்தை படித்துவிட்டு வாறேன்....)

நீங்க படிச்சு முடிச்சதும் எனக்கு பார்சல் அனுப்புங்க பென்ஸ்....!!!

சாலைஜெயராமன்
23-04-2008, 07:07 PM
முதலில் இலக்கண விதி மரபு வழி தமிழ்க் கவி தந்த தங்களுக்கு பாராட்டுக்கள்.

என் பார்வையில் மறைபொருளாய் நின்று விளங்கும் நமது தமிழ் மொழியில் மனிதப் பிறப்பெடுத்த நாம் அமரத்துவம் என்னும் அழியா நிலையை அடைய எண்ணற்ற வழிமுறைகள் நம் மொழியைத் தவிர வேறெந்த மொழியிலும் வெளியாகவில்லை என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. அந்த வகையில் அமரத்துவ நிலையை அழகான தமிழ் கவிதையால் சித்தர்களால் மட்டுமே தரக்கூடிய பொருள் பொதிந்த ஒரு கவிதையாக இதைக் காண்கிறேன்.

இதை விளக்குமிடத்து,

அளப்பறிய மனித ஆற்றல் அனைத்தையும் தன்னகத்தே தாங்கி நிற்கும் ஒரு இறை திருமேனியர், தூல உடல் தாங்கி அவதார மகிமை எடுத்து வரும்போது மாசற்ற கருணையால் தன் கஜானாப் புதையலிருந்து ஓசை அசைவு நடனமாகிய திரு நாவு கொண்டு வெளியாக்கும் ஆராஅமுதத் பொருள் பொதிந்த வாய்மையால் மனிதனை அமரனாக்கும் பிரம்ம வித்தைச் செயலை தேன் மொழியாம் தமிழ் மொழியின் மூலமாக வெளிப்படுத்தும் சிறப்பைப் போற்றிப் புகழ்ந்து அமைக்கப்பட்ட பாடலாக நான் கருதுகிறேன் திரு தாமரை.

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்

அன்பின் கருணையால் எமபடரெனும் நோய் பற்றாதிருக்க தன் உளம் குளிர்ந்த மெய்யடியார்களைப் பீடித்திருக்கும் கூற்றினை உதைத்துத் தள்ளி தொடர்ந்து அருள்பாலித்திருக்கும் தன்மையினால் சிவந்திருக்கும் திருப்பாத திருவழகின் தன்மையைக் கண்டு நாணியது வெண்தாமரை மலர்கள். அம்மலர்கள் தன் சூலில் கொண்டுள்ள தமிழ்த்தேன் என்னும் அமிர்தமானதின் சிறப்பு யாதெனில் சாவாவரம் தரும் செயல் விளக்க நெறிகளை தன்னகத்தே கொண்டுள்ள மொழியாகியது நம் உயிர் மொழியாம் தமிழ் மொழி

உண்ணாக் கென்னும் அண்ணாக்கில் தமிழ்தேனை தக்கவைத்திருக்கும் ஆற்றலாகிய அறிவைப் பெற்றால் உண்ணாமலேயே சாவாநிலையெனும் அருட்பேராற்றலை யாவருக்கும் அளிக்கவல்லது நம் மொழி.

நாக்கை நீட்டி அதன்மேல் சர்க்கரையை வைத்தால் சர்க்கரையின் சுவை தெரியாது. அதாவது இனிப்பென்னும் சுவையை நாவில் வைத்து பின் அதை அண்ணாக்கில் சேர்க்கும்போது தான் அதன் சுவையை உணர முடியும் அதைப் போல, ஆதி புராதன அருள் தேன் மழை பொழியும் ஊற்றை தன்னகத்தே கொண்ட நமது அன்னை ஆதித் தமிழ் மொழியை அண்ணாக்கில் வைக்கும் வகையறிந்தால் அமரத்துவம் என்பது எளிமையான ஒரு செயலாகும். தேனின் இனிமைக்கு ஒப்பானது நமது தமிழ் மொழி.

இவ்வாறு அகத்தியரும், திருமூலரும் தந்த சொற்பதங்களுக்கு ஒப்பானதாக நல்ல ஒரு மறைபொருளை உள்ளகத்தே வைத்துள்ள கவியாக வெளியாக்கியுள்ளீர்கள் திரு தாமரை. வாழ்த்துக்கள்

தாமரை
24-04-2008, 05:24 AM
ஆதி என்னும் சொல்லுக்கு, அனைத்திற்கும் ஆதியான இறைவனை பொருளாய் கொள்வதினால் நீங்கள் கடைந்து திரட்டிய வெண்ணெய் கிடைக்கப் பெறுகிறது சாலை அவர்களே!

தமிழ்ப் பாடல் சுவைத்துணர்ந்து மகிழும் ஆதிசிவன். தமிழினின் இனிமை உணர்ந்து தானே புலவன் வடிவம் தரித்து தமிழ் பாடி, புலவர்களுடன் விளையாடி ருசித்த தமிழ்...

வெண்டா மரைவெட்கிச் செந்தாமரை மலர

சம்பந்தன் இறை மயங்கிக் கைத்தாளமிட வெண்தாமரைக் கைகள் சிவந்து செந்தாமரையாக ( கண்டு பொற்றாளம் தந்தவர்..)

உண்டார் அமரர்தேன்

நாவுக்கரசனின் பாடல்களில் தேனருந்தி அமர்ந்தவர்..( வேதங்களினால் பூட்டப்பட்ட கதவை திறக்கச் சொல்லி அப்பர் பாட, அதன் சுவையினில் மகிழ்ந்து உண்டு அமர்ந்திருந்த இறைவன்)

உண்ணார் அமரரே

சுந்தரன் தமிழை இழக்க மண(ன)மின்றி தடுத்தாட்கொண்டவர் (அதுவரை சுந்தரன் பாடாதிருக்க, அவன் தமிழுண்ணா பெருமான், ஓடி வந்து பித்தா என அடியெடுத்துக் கொடுத்து பாட வைத்து தமிழமுதுண்டாரே )

இவையெல்லாம் எதற்கு..?


வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

அடியார்களின் இதழ்கள் தமிழ் பாடி இனிமை தருவதற்கன்றோ, வண்டார் தேன்சுவை தமிழ் அவர் வாய்மொழி பொழிய

கண்டாரா திச்செந் தமிழ்

ஆதிசிவன் கண்டார் (படைத்தார்) செந்தமிழை!!!


என்பது சித்த உட்பொருள். தமிழில் கலந்திருக்கும் இனிமையே இறைவனல்லவா!!!

சாலைஜெயராமன்
24-04-2008, 03:56 PM
பூட்டுடைக்கும் சாவியை கோடிக்கு ஒருவரே கொண்டுள்ளனர். அதுவும் அச் சாவியானது நம் தெய்வ மொழியாம் தமிழில் மட்டும்தான் உள்ளது. எழுத்துவடிவம் பெற்றிருந்தாலும் மனன மொழி வித்தையில்தான் நம் மொழியின் அத்தனை பொக்கிஷங்களும் மாசடையாது இன்று வரை விளங்கிவருகிறது.

அப்பர் அவர்கள் வெளியாக்கிய பூட்டுடைத்த வித்தையானது தமிழ் மொழியால்தான் சிறப்படைந்தது. காலகாலங்களுக்கும் அழியாத பெரும் கைமுதலைக் கை வரவாகப் பெற்ற மெய்யடியார்களின் நாவிலிருந்து வெளிவந்த இறைச் செய்தியினால்தான் சாவாவரம் தரும் சகல சூட்சும ரகசியங்களை எழுத்தில் கொணராது வாய்வழிச் செய்தியாக தந்து தேவைபட்ட இடங்களில் மட்டும் பரிபாஷை மௌன மொழியால் பூட்டிவிட்டு வழிவழியாய் வரும் ஆத்மானுபூதி பெற்ற தேவமக்களால் இன்றளவும் தன் கன்னித்தன்மை மாறாது பட்டொளி வீசி வருகிறது நம் அன்னை மொழி.

திரு+நாவினை அரசாண்டதால் திரு நாவுக் கரசர் என்ற பெயர் பெற்று கோடி சூரியப் பிரகாச அறியாமை இருள் நீக்கும் அமுத வெள்ளம் அப்பருக்கு கரைபுரண்டோடியது கண்கூடு,

இச் செய்தியோடு ஒத்த இன்னுமொரு தமிழ் மறை பாடலொன்று.

ஆட்டிவெந்து சாம்பலாய்ப் போன வித்து
அப்புறமு முளைத்துக்கனி யருந்து மாறும்
ஏட்டிலெழு தியவெழுத்தைக் குறுக்கு மாறும்
எழுந்துசிற கிழந்தபட்சி பறந்த வாறும்
பூட்டடங்ஙாச் சாவிகொண்டு திறக்கு மாறும்
புலியின்மேற் பசுபாய்ந்து சாய்த்த வாறும்
னாட்டியவீ தனைத்தும் தன்னு ளறிந்த பேரை
ஞானகுரு பெருமானென் றுரைக்க லாமே

ஒன்பதுக்கொன் பதுமூன்று லட்ச லக்கம்
ஒருமிக்கக் கூட்டவா றான வாறும்
ஐம்பத்தோர் தொகைப்பதமா றதிற்க ழிக்க
ஆனமிச்ச மொன்றாகக் கண்ட வாறும்
தன்பாலந் தர்முகமாம் பிரண வத்தின்
தனிப்பொருளாம் பதப்பிரிவை யறிதல் வேண்டும்
ஒண்பொருளிற் பிரிவறியார் பாவியென்று
ஓதிவரும் திருமறையின் பாடம் தன்னில்

ஆமெனவு மீராறி லக்கத்தோடு
அப்புறமு மீரைந்தோ ராறும்கூட்ட
வாமதுகை யிரண்டேகா லானவாறும்
வைத்ததனி லீரைந்நீர் கழித்துப் பார்க்கத்
தாமொன்றே காலாக மீந்த வாறும்
தன்னிடத்தி லறிந்துகணக் குரைத்த பேர்கள்
மூமீனாம் ஞானபிதா மகனுமாவான்
முன்னிலறு சுவையொளிக்கும் பொருளைக் கூடும்

இது மெய்ஞான ஏறுதுறைப் பாடலாக உள்ளது

இது கைவரவானபின் தன்னிலக்கணம் பிறருக்கு உணர்த்த ஒரு பாடல்

அறங்ங ளொருங்ஙுதி ரண்டொரு வீடுவ
ரங்ஙொடை யின் பெருமான்
பரங்ஙிள ரங்ஙொளி யூசர ரங்ஙிதி
ரண்டுற விண்ணுறவின்
உரங்ஙுர வங்வுனெ ருங்ஙவ ருங்ஙுரு
வங்ஙமு ழுங்ஙுளிரும்
சரங்ஙுனெ ருங்ஙிரு பாகர ரென்ஙுரு
செங்ஙம லம்பதமே.

இவ்வாறு இன்னும் கோடான கோடி அருட் பொக்கிஷங்கள் நம் மொழியில் உண்டு. இன்னும் நேரம் வாய்க்கும்போது பகிர்ந்து கொள்கிறேன்.

அறிவு சால் திரு தாமரை அவர்களின் தன் முயற்சிப்பாட்டால் அடியேனும் ஒரு சில கருத்துக்களை முன்வைத்தேன். மேதாவிலாசம் காட்டும் எச் செய்தியும் இதிலிருந்தால் மன்றத்து மக்கள் மன்னித்து அருள வேண்டும்.

விரும்பும் நல் உள்ளங்களுக்கு விருந்தளிக்கும் அன்னை அவள் இந்த அற்பனுக்கும் அருளமுது தந்துள்ளாள். யான் பெற்ற இன்பம் இவ்வையம் முழுதும் பெற அன்னை அவள் திருப்பாதம் தொழுது இறைஞ்சும்

சாலை ஜெயராமன்

தாமரை
25-04-2008, 07:13 AM
ஆட்டிவெந்து சாம்பலாய்ப் போன வித்து
அப்புறமு முளைத்துக்கனி யருந்து மாறும்
ஏட்டிலெழு தியவெழுத்தைக் குறுக்கு மாறும்
எழுந்துசிற கிழந்தபட்சி பறந்த வாறும்
பூட்டடங்ஙாச் சாவிகொண்டு திறக்கு மாறும்
புலியின்மேற் பசுபாய்ந்து சாய்த்த வாறும்
னாட்டியவீ தனைத்தும் தன்னு ளறிந்த பேரை
ஞானகுரு பெருமானென் றுரைக்க லாமே

இப்பாடலை எடுத்துக் கொள்ளலாமே அய்யா!..

ஞான குரு என்று யாரை கொள்ளலாம் என அடையாளம் காண்பதற்கு அழகான வழி முறைகள்..

சூட்சுமச் செய்தி..

ஆட்டிவெந்து சாம்பலாய்ப் போன வித்து
அப்புறமு முளைத்துக்கனி யருந்து மாறும்

உடைந்து எரிந்து சாம்பலாய் போன விதை
மறுபடி முளைத்து அருந்தும் கனி ஆகும் வழி

ஞானிகளுக்கும் - மற்றோருக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதானே. இறைவன் சித்தம் கிடைத்தால் எளிமையாய் விளக்குகிறேன்..


குறிப்பாய் பூட்டு அடங்காச் சாவி கொண்டு திறக்கும் ஆறும்..

இங்கு சொல்லப்பட்ட ஆறு(வழி) என்ன என்பதை புரிந்து கொண்டதால் கேட்கிறேன்..

இதை முழுதும் அறியலாமா இல்லை இத்தோடு மறைபொருளாக விட்டு விடலாமா?

பாரதி
29-04-2008, 05:43 PM
ஞானிகளுக்கும் - மற்றோருக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதானே. இறைவன் சித்தம் கிடைத்தால் எளிமையாய் விளக்குகிறேன்..


குறிப்பாய் பூட்டு அடங்காச் சாவி கொண்டு திறக்கும் ஆறும்..

இங்கு சொல்லப்பட்ட ஆறு(வழி) என்ன என்பதை புரிந்து கொண்டதால் கேட்கிறேன்..

இதை முழுதும் அறியலாமா இல்லை இத்தோடு மறைபொருளாக விட்டு விடலாமா?

அன்பு சாலை ஐயா,

தாமரைக்கு இதை விளக்குவதற்கு அனுமதி தாருங்கள். அல்லது நீங்களாவது விளக்குங்கள்.

நன்றி.

சாலைஜெயராமன்
30-04-2008, 04:13 AM
நன்றி திரு தாமரை, திரு பாரதி. தாமதமாய்ப் பார்த்ததன் விளைவு உடன் பின்னூட்டமிடமுடியவில்லை.

திரு பாரதி திரிகளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொள்வது எப்படி என்பதை எனக்குக் கொஞ்சம் விளக்குங்களேன்.

திரு பாரதி உங்களைப் போல் நானும் திரு தாமரையின் விளக்கங்களை அறிய ஆசையாய் உள்ளேன்.

அறிவது அறிவு. அடைந்த அறிவினை பிறருக்கு ஏற்றிவைப்பது ஞானம்.

ஞானம் வாழவைக்கும். அறிவு அழிக்கவும் ஆக்கவும் வல்லது.

ஆக்கமான கருத்துக்களைத் தாருங்கள் திரு தாமரை.

சாம்பலான வித்தானது பின் முளைத்து கனி தருவதற்குப் பதிலாக கனியை அருந்துவது என்பதுதான் இந்தப் பாடலின் முழுப் பயன்பாடுமே. அதை முன்னிறுத்தி விளக்குங்கள்.

நன்றி

பாரதி
30-04-2008, 05:03 AM
நன்றி திரு தாமரை, திரு பாரதி. தாமதமாய்ப் பார்த்ததன் விளைவு உடன் பின்னூட்டமிடமுடியவில்லை.

திரு பாரதி திரிகளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொள்வது எப்படி என்பதை எனக்குக் கொஞ்சம் விளக்குங்களேன்.


அன்பு சாலை ஐயா,

மன்ற முகப்பில் மேலே இருக்கும்
Quick links - Messaging and notification - default Thread Subscription Mode -க்கு செல்லுங்கள்.

அதில்
No email notificaton
Instant email notificaton
Daily email notificaton
Weekly email notificaton என்ற தேர்வுகள் இருக்கின்றன.

உங்களுக்கு எந்த வகை விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

நன்றி.

செல்வா
21-05-2008, 10:26 AM
திரு பாரதி உங்களைப் போல் நானும் திரு தாமரையின் விளக்கங்களை அறிய ஆசையாய் உள்ளேன்.

அறிவது அறிவு. அடைந்த அறிவினை பிறருக்கு ஏற்றிவைப்பது ஞானம்.

ஞானம் வாழவைக்கும். அறிவு அழிக்கவும் ஆக்கவும் வல்லது.

ஆக்கமான கருத்துக்களைத் தாருங்கள் திரு தாமரை.

சாம்பலான வித்தானது பின் முளைத்து கனி தருவதற்குப் பதிலாக கனியை அருந்துவது என்பதுதான் இந்தப் பாடலின் முழுப் பயன்பாடுமே. அதை முன்னிறுத்தி விளக்குங்கள்.

நன்றி

தாமரை அண்ணா...... அனுமதி கிடைத்துவிட்டதே......

தாமரை
17-06-2008, 03:49 PM
இந்தப் பாடல்களைப் பற்றி சாம்பவி அவர்கள் என்னுடன் விவாதித்தார்கள். அவரின் அர்த்தமாக்கல் வியக்க வைப்பதாய் இருக்கிறது.

அவரையே ஆரம்பித்து வைக்குமாறு அழைக்கிறேன்,,

விரைவில் வந்து தொடங்குவார்!!!

செல்வா
05-07-2008, 03:30 PM
அடடா....
கத்துக்கறதுக்காக காத்திருக்கோம் கத்துக் குடுக்க யாரயும் காணோமே....

Ravee
05-07-2011, 09:35 AM
கல்யாணம் ஆகியும் மன்றம் வர்ரவங்களைப் பற்றி,


கல்யாணமாகி நாளாச்சு, நம்ம தலைவனுக்கு மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் முடிஞ்சு, தமிழ் மன்றத்தில வந்து உட்கார்ந்து இதைப் படிச்சுகிட்டு இருக்காரு,,

இது காட்சி,



தலைவி சொல்றாங்க

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்

அதாவது, புதுப்பெண்ணாய், அறியாப்பெண்ணாய் பயத்தில் வெளுத்திருந்த வெண்தாமரை அவள், அவள் வெட்கிச் சிவந்து செந்தாமரையாய் ஆகி, வண்டுகள் மொய்க்கும் தேன் போன்ற இனிய குரலில் தமிழ் பேச உண்டார் என் தேவன்.. அது ஒருகாலம்..

தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.

அந்தத் தலைவன் இப்பொழுது அந்த பழைய சிவப்புத்தோல்காரி தமிழைக் கண்ட பின் இந்தத் தேனை உண்ண மாட்டேனென்கிறார்..

ஊடலாய், மன்றத்தில் தமிழ் படித்துக் கொண்டிருக்கும் தலைவனைப் பார்த்து அங்கே என்ன பழைய பஞ்சாங்கத்தை புரட்டிக்கொண்டிருக்கிறீர்கள், இங்கு இருக்கும் தேன் உண்ணாமல் எனக் கேட்கிறாள்..!!!

..


அட போங்கண்ணா உங்க சொந்த கதையை எல்லாம் இங்க சொல்லுறீங்க ... :D :lachen001: :D

தாமரை
05-07-2011, 09:52 AM
அட போங்கண்ணா உங்க சொந்த கதையை எல்லாம் இங்க சொல்லுறீங்க ... :D :lachen001: :D

உங்கச் சொந்தக் கதையும் தான் தெரியுமே.. கேள்வியெல்லாம் இல்லை... :sport-smiley-008: