PDA

View Full Version : கையேந்தும் கடவுளர்!!சிவா.ஜி
15-04-2008, 01:31 PM
அய்யா சாமி பசிக்குது
அய்யப்பன் சாமிக்கு அன்னமிடுங்க
ஆத்தா ஒரு எட்டணா கொடு இந்த
குமரக் கடவுள் கோவணம் துவைக்கனும்

பாம்பு பால்குடிச்சி மூணுநாளாச்சு
பரமசிவன் சோறு தின்னு நாளு ரெண்டாச்சு
பாருக்கே படியளக்கும் பரமனுக்கு
யாராச்சும் ஒரு பிடி சோறு போடுங்க

சஞ்சீவி மலை தூக்கிய ஆஞ்சநேயர்
கெஞ்சிக்கேக்குறேன்....சாமிகளா
கொஞ்சமாச்சும் கஞ்சி ஊத்துங்க...

விக்னம் தீர்க்கும் விநாயகருக்கு
வக்கனையா இல்லைன்னாலும்
வாய்க்கும் வவுத்துக்குமாவது
வெந்த சோத்தை போடுங்கய்யா

வேலனும், பரமனும்
அனுமனும், அய்யப்பனும்...
ஆளுக்கொரு திருவோடேந்தி
கடைவீதியில் காட்சி தந்து
காசுக்குக் கையேந்தும்
மாசில்லா மகாதேசம்.........
ஆண்டவனுக்கே பிச்சைப் போடும்
அதிசய தேசம்........!

ஆதவா
15-04-2008, 02:12 PM
சுமார் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர், நான் ஒருவரிடம் வேலை செய்துகொண்டிருந்த பொழுது தெய்வம் என்னிடம் பிச்சை
கேட்டது. அத்தெய்வத்திற்கு வயது பதினொன்று இருக்கலாம். முகத்தில் கண்ணன் களை. நிறத்தில் கருப்பசாமி. கண்ணனும்
ஆஞ்சிநேயனும் இதிகாசத்தை இடித்துவிட்டு வந்து ஒருசேரக் கேட்டார்கள். என்னால் எவ்வளவு கேவலமாகத் திட்டமுடியுமோ
அவ்வளவு கேவலமாகத் திட்டி அனுப்பிவிட்டேன். கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் இப்படி கடவுள் வேடமிட்டு பிச்சையெடுத்தல்
எனக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தது. அன்றிலிருந்து இன்று வரையிலும் கடவுள் (உண்மையான கடவுளுங்க)நேரே வந்து கால்
அணா கேட்டாலும் காறித் துப்பத்தான் தோன்றுகிறது.

பெரும்பாலும் ஆஞ்சிநேயர்கள் தான் அதிகம். வேடமிட்டால் அது வேடமாகத் தெரிவதுவும், எளிதில் வேடமிடுவதுமானது.
கடவுளர்கள் என்றும் குறைந்த வயதில்தான் கண்டிருக்கிறேன். வயது மிகுந்த நொண்டிக் கடவுள்களைக் காணமுடிவதில்லை.

ஏன் கடவுள் வேடம்? மக்கள் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இது ஆரம்ப காலம் தொட்டு வழிவந்த பிச்சை'பாணியாக
இருக்கலாம். வெறுமே பிச்சை எடுப்பதைக் காட்டிலும் கடவுள் வேஷம் அதிக பிச்சை கொடுக்கும் என்ற நம்பிக்கையே காரணம்.

இன்னும் சில ஆசாமிகள் பக்த வேடத்தில் பிச்சை எடுப்பார்கள்.. சபரிமலைக்குப் போகவேண்டும், பணம்கொடுங்கள், திருப்பதிக்குப்
போகவேண்டும் பணம்கொடுங்கள் என்று பயணப்பிச்சை எடுப்பார்கள். அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்???
கடவுள், பக்தன் என்ற வித்தியாசம் தவிர வேறென்ன?

இவ்வளவு இருந்தாலும் இவர்களுக்குப் போஜனக் குறைவில்லை... அதுதான் அவர்களின் வெற்றி..........

கவிதை செல்லும் பாதை அப்படித்தான். முடித்தவிதம் அழகு. அறிவுரைகள் இல்லாத முடிவு........... எத்தனை நாளைக்குத்தான்
அறிவுரைக் கவிதைகள் வருவது?? பொதுவாக இவ்வித கவிதைகள் அறிவுரைகளை உள்ளடக்கிய அதேசமயம் சற்று சமூகப்
பிழைகளைக் குத்திக் காட்டும் கவிதையாக இருப்பது வித்தியாசப் போக்கு.........

ஒவ்வொரு பத்தியிலும் ஒருவிதமான ரைமிங்க் போல (எப்படி சொல்வதென்று தெரியவில்லை) தோன்றுகிறது. அது அப்பத்திகளின்
மோனைகள் செய்யும் வேலையாக இருக்கலாம். உதாரணத்திற்கு, 'வ'கர மோனைகள் நிறைந்த பத்தியாக "விக்னம் தீர்க்கும்
வினாயகர்கள்" இருப்பதைக் காணலாம்...... படிப்பதற்கு சுவாரசியமான எழுத்துக்கள் இவை. (ஆஞ்சிநேயர் "ஞ"கர எதுகையைக்
கையாளுகிறார்...)

கவிதையின் நடை.. இறுதி பத்திவரையிலும் நேரடி டயலாக்.. டயலாக் முடிந்த பின்னர் கவிஞர் பேசுகிறார்.. இடைப்பட்ட (ப்ளூடூத்
பாலம்) பாலம் உடையாமல் இருக்கிறது.. இது இக்காலக் கவிதையில் படைப்பாளியின் நோக்கத் திறனால் உடைபடாமல் இருப்பது
கவனிக்கத்தக்கது,.

தேச எதிர்ப்பாக இருந்தமையால் "மாசில்லா தேசம்" என்ற வரிகள் தேவைப்படுகின்றன. அல்லாது போனால் பிழையாக இருக்கக்
கூடும்...

ஆக மொத்தத்தில் இன்னும் கடவுள் எடுக்கும் பிச்சை, குறைந்த பாடில்லாமையால் சூழலுக்குப் பொருத்தமான கவியாக
இருக்கிறது..........

வாழ்த்துகள் அண்ணா..

சிவா.ஜி
15-04-2008, 02:21 PM
ஆதவா நினைவிருக்கிறதா...கருவைச் சொல்லிக் காலங்கள் கடந்துவிட்டது. கவிதை பிறக்க இப்போதுதான் நேரம் பிறந்தது. பலமுறை நீங்கள் சொன்ன இந்தக் கருவைக் கையாண்டு கவிதை எழுத முயற்சித்தேன். ஆனால் நீங்கள் சொன்னதைப்போல எனக்கும் கோபம் வந்தது. கோபத்தில் வார்த்தைகள் வசப்படவில்லை. இன்று நிதானமாய் எழுதினேன்.

கரு ஆதவாவுடையது..கவி வரிகள் மட்டும் என்னுடையது. அதற்கு ஆதவாவுக்கு நன்றி.

அறிவுறை சொல்லி ஆகப்போவது என்ன...? ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தமுடியும்.

மாசில்லா தேசமென்று சொல்லியது நக்கலுக்காக.

மிக அழகிய பின்னூட்டம். நன்றி ஆதவா.

ஆதவா
15-04-2008, 02:47 PM
ஆதவா நினைவிருக்கிறதா...கருவைச் சொல்லிக் காலங்கள் கடந்துவிட்டது. கவிதை பிறக்க இப்போதுதான் நேரம் பிறந்தது. பலமுறை நீங்கள் சொன்ன இந்தக் கருவைக் கையாண்டு கவிதை எழுத முயற்சித்தேன். ஆனால் நீங்கள் சொன்னதைப்போல எனக்கும் கோபம் வந்தது. கோபத்தில் வார்த்தைகள் வசப்படவில்லை. இன்று நிதானமாய் எழுதினேன்.

கரு ஆதவாவுடையது..கவி வரிகள் மட்டும் என்னுடையது. அதற்கு ஆதவாவுக்கு நன்றி.

அறிவுறை சொல்லி ஆகப்போவது என்ன...? ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தமுடியும்.

மாசில்லா தேசமென்று சொல்லியது நக்கலுக்காக.

மிக அழகிய பின்னூட்டம். நன்றி ஆதவா.


சென்றமுறை பார்த்த போது சொன்னேன்.. பிறகு நானும் மறந்துவிட்டேன் அண்ணா. உங்களைப் போலவே இன்னொருவருக்கும் சொன்னேன். (உங்களுக்கு முன்னரேயே) அவர் முந்தவில்லை.

மாசில்லா தேச நக்கலைப் புரிந்தேன். நான் எனது பதிவில் சிறு பிழையேற்படுத்திவிட்டேன். நீங்கள் தேச எதிர்ப்பாக இல்லாமல் தேச அறிவுரையாக கவிதை எழுதியிருந்தால் மாசில்லா தேசம் பிழையாகியிருக்கும் என்பதைச் சொல்லவந்தேன். மேலும்

இந்தியாவில் மட்டும் தான் இது நடக்கிறது என்று நினைக்கிறேன். எங்கேனும் இயேசு வேடமிட்ட பிச்சைக்காரர்களைக் காணமுடிகிறதா? இசுலாமியர்களுக்கு உருவ வழிபாடில்லாமையால் அவர்களைப் பேச வழியுமில்லை.

அன்புடன்
ஆதவன்.

சிவா.ஜி
15-04-2008, 02:54 PM
ஆமாம் ஆதவா இந்தக் கூத்து இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். இவர்களாவது பரவாயில்லை. வயிற்றுப்பிழைப்புக்கு கடவுள்களாகிறார்கள்...சில அம்மாக்கள், சில பகவான்கள்....செய்யும் அக்கிரமங்கள் இருக்கிறதே....ஆண்டவன் அவர்கள் அருகில் போகவே அஞ்சுவான். நல்ல பக்தர்கள்.

அமரன்
15-04-2008, 02:56 PM
ஆதவாவுக்கு எனது கண்டனங்கள். முந்திப் பின்னூட்டமிட்டு திக்குமுக்காட வைப்பதுக்கு.. சிறப்பான ஆய்வு.:icon_b: எனது மரமண்டை வேர்பரப்பவும், கிளைபரப்பவும் நேரமெடுக்கும். அப்புறமாக வருகின்றேன்.

எண்ணம்
15-04-2008, 03:20 PM
எப்பொழுது இந்த நிலை மாறுமோ அல்லது மாற்றப்படுமோ????

ஆதவா
15-04-2008, 03:49 PM
ஆதவாவுக்கு எனது கண்டனங்கள். முந்திப் பின்னூட்டமிட்டு திக்குமுக்காட வைப்பதுக்கு.. சிறப்பான ஆய்வு.:icon_b: எனது மரமண்டை வேர்பரப்பவும், கிளைபரப்பவும் நேரமெடுக்கும். அப்புறமாக வருகின்றேன்.

:D:D:D உண்மையை ஒத்துக் கொள்ள சிலரால்தான் முடியும்... :D:D:D

நன்றிங்க.. :)

ஷீ-நிசி
15-04-2008, 03:58 PM
கடவுள் உருவில் வந்து கேட்டு இல்லையென்று சொல்லி பழக்கப்பட்டு, என்றாகிலும் ஒரு நாள் கடவுளே வந்து காட்சி தந்து தானம் கேட்டாலும் நாம் இல்லையென்று சொல்லி மறுக்கும் நிலையில் இருப்போம்...

இதுதான் கடவுளுக்கே வந்த சோதனை போல....

நல்ல கரு சிவா.ஜி... வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
16-04-2008, 05:49 AM
கடவுள் உருவில் வந்து கேட்டு இல்லையென்று சொல்லி பழக்கப்பட்டு, என்றாகிலும் ஒரு நாள் கடவுளே வந்து காட்சி தந்து தானம் கேட்டாலும் நாம் இல்லையென்று சொல்லி மறுக்கும் நிலையில் இருப்போம்...

இதுதான் கடவுளுக்கே வந்த சோதனை போல....

நல்ல கரு சிவா.ஜி... வாழ்த்துக்கள்!

ரொம்பச் சரி ஷீ. பூஜிக்கும் கடவுளையே பிச்சையெடுக்கப் பயண்படுத்துவதென்பது சகிக்க முடியவில்லை.

கரு ஆதாவாவினுடையது. உங்கள் பாராட்டுக்கள் ஆதவாவுக்குத்தான் போகவேண்டும். நன்றி ஷீ.

தாமரை
16-04-2008, 06:08 AM
புரிந்து கொள்ளாமை

சமுதாயத்திற்கு தேவையான ஒன்றைக் கூட கொடுக்காமல், சமுதாயத்தில் இருந்து பெற்று மட்டுமே வாழ்வது தவறு..

ஒரு உழவனை எடுத்துக் கொண்டால் உணவுப் பொருளை உற்பத்தி செய்து தருகிறான். ஒரு லாரி டிரைவரை எடுத்துக் கொண்டால் இந்த உணவுப் பொருளை பல இடங்களுக்குச் சேர்ப்பிக்க உதவுகிறான். அட வங்கிப் பணியை எடுத்துக் கொள்ளுங்கள்.. உபயோகம் இன்றிக் கிடக்கும் பணத்தை உபயோகப்படுத்துபவருக்கு பெற்றுத் தருகிறது..

ஒவ்வொரு தொழிலும் சமூகத்திற்கு பகிர்ந்து கொள்ள எதாவது ஒன்று உண்டு. அப்படிப் பகிர்ந்து கொள்ளாதது தொழிலல்ல

நாம் செய்வது தொழிலா இல்லையா யோசித்துப் பார்க்க வேண்டும்..

கடவுள் வந்து, "நான் கடவுள், எனக்கு இது வேண்டும்" எனக் கேட்டால்...

நான் தரமாட்டேன்.

இந்நிகழ்ச்சிகளுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை..

சிவா.ஜி
16-04-2008, 07:42 AM
மிக அழகான சிந்திக்கவைக்கும் கருத்துகள்.

கடவுள் வந்து தான் கடவுள் தனக்கு இது வேண்டுமெனக் கேட்டால்

நான் தரமாட்டேன்.

ஏன் தரவேண்டும்? உழைக்காமல் கேட்கப்படும் எதுவுமே திருட்டுக்கு சமமானது. நீங்கள் சொல்வதைப்போல இதைத் தொழிலென்று அவர்கள் சொல்லிக்கொண்டாலும்..நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சமுதாயத்திற்கு பங்களிக்காத எதுவும் நிராகரிக்கப்படவேண்டும்.

மிக நல்ல பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தாமரை.

ஆதி
16-04-2008, 08:55 AM
எளிய நடையில் அழகிய கவிதை வாழ்த்துக்கள் சிவா அண்ணா, ஆதவாவின் பின்னூட்டமும், தாமரையண்ணாவின் கருத்தும் அருமை..

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

என்னும் பொதுவுடமையும் இவர்களுக்கு பொருந்தாது.. உழைக்க விரும்பாதவர்கள் ஏன் எல்லாம் பெற வேண்டும் என்று எண்ணத் தோன்றும்..

இரவலர்களுக்கு வழங்கி வழங்கி சிவந்த கை.. என்று பாடிய இனம் நம்மினம்.. இரந்தவனுக்கு இல்லை என்றுச் சொல்வது தனக்கு பெருமை இல்லை என்று கருதிய வள்ளல்கள் வாழ்ந்த குமுதாயம் நம் குமுதாயம்..
இவையனைத்தையும் மனதில் வைத்துதான் இன்றைய திரைப்பட காட்சிகளும் வனையப்படுகின்றன.. பணக்காரன் ஏழைகளுக்கு குடம் கொடுப்பது மாதிரி, சேலைக் கொடுப்பது மாதிரி, இன்ன பிற..
நம் அரசியல் மேடைகளும் இதை எதிரொலிக்கும், கறை வேட்டி கறை சேலை என்று அங்கும் ஈகை தோகை விரிக்கும்.. இவை எல்லாம் இன்னும் இன்னும் சோம்பேரிகளை உருவாக்கும்..

என்னைப் பொருத்த மட்டில் பசித்தவனுக்கு அவ்வேளை உணவிடுதலை விட அவனுக்கு நித உணவு கிடைக்க வழி செய்து தருதலே சிறந்த தானம்.. என் நண்பர்கள் சிலர் அவ்வகை தானத்தை ஏதோ தங்களால் இயன்றதை செய்துவருகிறார்கள்..

ஓவியன்
16-04-2008, 09:57 AM
கடவுள் வேடமிட்டுப் இரப்போரை இது வரை நான் நேரிலே பார்த்ததில்லை, திரையிலும் எழுத்திலும் பார்த்ததுடன் சரி. என்னதான் இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை ''தலைக்கு மேலே போன வெள்ளம் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன...?'' என்ற நிலைதான். அதாவது பிச்சை எடுப்பதே தப்பாக இருக்க, அதனை என்ன வேடத்தில் எடுத்தாலென்ன...??
கடவுள் வேடமிட்டு பிச்சை எடுப்பது தவறென நாம் கூறுவது, மறுதலையாக நோக்கினால் கடவுள் வேடமிடாமல் பிச்சை எடுப்பது சரி என்ற கருத்தினைத் தோற்றுவித்து விடுமோ என்ற ஐயப்பாடு என்னுள்ளத்திலே.....

என்றொருவர் கூட பிச்சைக்காரர் என்ற அடை மொழிக்குள் அடக்க முடியாத நிலை நம் நாடுகளுக்கு வருகிறதோ, அன்றுதான் உண்மையிலே எல்லோருக்கும் திரு நாள்.

வித்தியாசமான கோணத்தில் அழகாக படைக்கப்பட்ட இந்தக் கவியமுதுக்கு என் மனதார்ந்த பாராட்டுகள் சிவா..!! :)

சிவா.ஜி
16-04-2008, 11:11 AM
என்னும் பொதுவுடமையும் இவர்களுக்கு பொருந்தாது.. உழைக்க விரும்பாதவர்கள் ஏன் எல்லாம் பெற வேண்டும் என்று எண்ணத் தோன்றும்..


நிச்சயமாய் இவர்களைப் போன்றவர்களுக்கு எந்த தகுதியுமில்லை. இவர்கள் வேடமிட்ட பிச்சைக்காரர்களென்றால்....அரசாங்கத்தால் இலவசமாய் கொடுக்கும் எதையும் பெறும் அனைவரும் இவர்களைவிட பெரும் பிச்சைக்காரர்களே. இருப்பவர்களும் இல்லாதவர்களாய் வேடமிடுகிறார்கள். 500 ரூபாய் வருவாய்த்துறை அதிகாரிக்கு லஞ்சமாய் தூக்கிவீசினால் லட்சாதிபதியையும் பிச்சாதிபதிகளாய் மாற்றிவிடுவார்கள் அந்த குலைக்கும் வர்க்கங்கள்.

வேடமிட்டுப் பிச்சையெடுக்கும் இவர்களைவிட வேசிகளே மேல்.

நன்றி ஆதி.

சிவா.ஜி
16-04-2008, 11:21 AM
கடவுள் வேடமிட்டுப் இரப்போரை இது வரை நான் நேரிலே பார்த்ததில்லை,

அதாவது பிச்சை எடுப்பதே தப்பாக இருக்க, அதனை என்ன வேடத்தில் எடுத்தாலென்ன...??
கடவுள் வேடமிட்டு பிச்சை எடுப்பது தவறென நாம் கூறுவது, மறுதலையாக நோக்கினால் கடவுள் வேடமிடாமல் பிச்சை எடுப்பது சரி என்ற கருத்தினைத் தோற்றுவித்து விடுமோ என்ற ஐயப்பாடு என்னுள்ளத்திலே.....

http://www.tamilmantram.com:80/vb/

பார்த்திருக்க நியாமில்லை ஓவியன். இந்த அசிங்கங்கள் அரங்கேறுவது பாரதத்திருநாட்டில் மட்டுமே.

அடுத்து நீங்கள் சொன்ன கருத்து சிந்திக்க வேண்டியதே. பிச்சையெடுப்பதே கேவலம் அதில் கடவுளரின் வேடமிட்டு பிச்சையெடுத்தல் மட்டும் சரியல்ல என்று சொல்வதும் சரியல்ல.

ஆனால் குற்றமிழைப்பவர்களுக்கு தண்டனை ஒரே சீராக இல்லாமல் குற்றத்தின் கடுமையைப் பொறுத்தே தண்டனையின் கடுமையும் இருக்கிறது. அதைப்போல இவர்கள் ஒரு பிரிவினர். அதனால்தான் இந்தப் பிரிவினரை தனியே பார்க்கிறோம்.

பிச்சையெடுப்பவர்கள் மக்களின் இரக்க குணத்தை மட்டுமே பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் இந்தப் பிரிவினர், இரக்க குணத்தோடு கடவுள் நம்பிக்கையையும் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கிறார்கள்.

திருடினால் 3 வருட சிறைத்தண்டனை என்றால், திருட்டோடு கொலையும் செய்தால் ஆயுள் தண்டனை அடைவதைப்போல...இவர்களைத் தண்டிக்கவேண்டும். அரசாங்கம் இதனைத் தடை செய்யவேண்டும். பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்களுக்கு சிறைதான் சரியான தண்டனை.

மிக்க நன்றி ஓவியன். (மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது புது மாப்பிள்ளை)

ஓவியன்
17-04-2008, 06:00 AM
மிக்க நன்றி ஓவியன். (மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பின்னூட்டம் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது புது மாப்பிள்ளை)

என்ன செய்வது சிவா, எப்போதும் குடும்பத்திற்குத் தானே முதலிடம் - அதனால் தான் இந்த இடைவெளி. இனிவரும் காலங்களில் நேரம் கிடைக்கையில் எல்லாம் இணைந்திருப்பேன்.

கண்மணி
17-04-2008, 06:02 AM
அப்போ அண்ணன் இப்போ பின்னோட்டம் தான் செய்யறீரா?:lachen001::lachen001:

ஓவியன்
17-04-2008, 06:08 AM
அப்போ அண்ணன் இப்போ பின்னோட்டம் தான் செய்யறீரா?:lachen001::lachen001:

ஆமா,
அப்பப்போ மேலோட்டம்,
முடியும்னா பின்னூட்டம்
இல்லைனா பின்னோட்டம்...!!:rolleyes:

சிவா.ஜி
17-04-2008, 06:12 AM
ஆமா,
அப்பப்போ மேலோட்டம்,
முடியும்னா பின்னூட்டம்
இல்லைனா பின்னோட்டம்...!!http://www.tamilmantram.com:80/vb/

ஆஹா...ஒரு குட்டிக் கவிதையாவே சொல்லிட்டாரு நம்ம தூரிகைநாயகன். அசத்துங்க.

இதயம்
17-04-2008, 06:13 AM
கையேந்தும் கடவுளர்..! மகா சக்தியே மனிதர்களிடம் பிச்சை கேட்டல், பன்மையில் கடவுள் என்று முரண்பாட்டு மூட்டையாய் ஒரு நெத்தியடி தலைப்பு..! நிறைய பார்த்தாகி விட்டது, பேசியாகி விட்டது கடவுள் தொடர்பான சிந்தனைகளை.! இனி இது பற்றி யோசிக்க வேண்டியது கடவுள் வேடமிட்டு கையேந்தும் கடவுளரும்(!), கடவுளுக்கே நிதி உதவி செய்யும் மகா மனிதர்களும்(!) தான்.!! ஒரு கட்டுரைக்குள் கொண்டு கடவுள் தொடர்பான தவறான சிந்தனைகள் உடைக்க செய்யும் முயற்சியை, இந்த சிறிய கவிதை மிக சுலபாக செய்து விடுகிறது. பகுத்தறிவை பக்குவமாக மக்களிடம் சொல்லாவிடில் விளைவு எதிர்மறையாகிப்போகும் ஆபத்து இருக்கிறது. சொல்லவேண்டிய ஆள், இடம், சூழ்நிலை எல்லாவற்றையும் சரியாக அறிந்தே சொல்ல வேண்டிய விஷயம் ஆன்மீகமும், பகுத்தறிவுக்கு எதிரான கருத்தும்.! சிவாவுக்கு இவை அனைத்தும் இலகுவாக பொருந்தி வருவதால் அவர் கவிதையின் எடை கூடுகிறது. பகுத்தறிவற்ற போக்குகளுக்கும், குற்றங்களும் செய்யப்படுவதற்கு கல்வியறிவின்மை காரணமாக சொல்லப்படுவதுண்டு. இதை நான் வன்மையாக மறுக்கிறேன். பட்டதாரிகள் போலி சாமியாராக அவதாரமெடுக்கிறார்கள். படித்தவர்கள் மிகவும் திட்டமிட்டு தெளிவாக குற்றங்களை செய்கிறார்கள். முதலில் ஏமாறுபவர்கள் விழித்து கொள்வது தான் வெளிச்சம் வருவதற்கான முதல் நிலையாக இருக்கும்.

இக்காலத்திற்கு மிகவும் அவசியமான கவிதை..! பாராட்டுக்கள் சிவா..!!

சிவா.ஜி
17-04-2008, 06:35 AM
பகுத்தறிவற்ற போக்குகளுக்கும், குற்றங்களும் செய்யப்படுவதற்கு கல்வியறிவின்மை காரணமாக சொல்லப்படுவதுண்டு. இதை நான் வன்மையாக மறுக்கிறேன். பட்டதாரிகள் போலி சாமியாராக அவதாரமெடுக்கிறார்கள். படித்தவர்கள் மிகவும் திட்டமிட்டு தெளிவாக குற்றங்களை செய்கிறார்கள். முதலில் ஏமாறுபவர்கள் விழித்து கொள்வது தான் வெளிச்சம் வருவதற்கான முதல் நிலையாக இருக்கும்.

மிக மிகச் சரியான கருத்து. நான் முற்றிலும் உங்களுடன் ஒத்துப்போகிறேன். ஏமாறுபவர்களும், ஏமாற்றுகிறவர்களும் பெரும்பான்மையாகப் படித்தவர்களே இருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது படிப்பதால் வருவதில்லை.

பகுத்து அறியும் பக்குவத்தை அனைவரும் பெற்றுவிட்டாலே பெரும்பான்மையான ஏமாற்றுதல்கள் நடைபெறாது.

கருத்தாழமிக்க பின்னூட்டம் தந்த இதயத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அமரன்
18-04-2008, 01:44 PM
கவிதைகளும், கருத்துகளும் நன்று. இரந்துண்டு வாழுவதை சொல்லும் மதமல்லவா? அதனால்த்தான் யாசகத்தை மார்க்கமாகக் கொண்டோருளர்.

சாதாரண தரிசனம், விசேட தரிசனம் என்று கட்டணம் போட்டு தரிசனம் கொடுக்கும் கடவுளர்களை விட/ வியாபார முகவர்களை விட இவர்கள் மேலானவர்கள்.

வறுமை, அழுக்கு சுமந்து பாசிப்பவர்களை விட, சிங்கார உழைப்பை கொடுத்து கூலி பெறும் இவர்கள் மேலானவர்கள். இவர்களை விட தெருவோரத்தில் சாமிப்படங்களை வரைந்து சம்பாதிப்போர் உயர்ந்தவர்கள்.

இவ்வாறு ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டு மனதை ஆற்றிக்கொள்ளத்தான் முடியும். மாற்ற முயற்சித்தால் பித்தன் பட்டம்தான் மிஞ்சும்..

பாடல்களால் மாற்றம் வரும் நாட்கள் மீண்டும் மலரும். இந்தக்கவிதை அப்போது முன்னின்று போராடும். அதுவரை வேதனைப்படுவோம்.

பாராட்டுகள் சிவா.

அனுராகவன்
24-04-2008, 05:17 AM
கையேந்துவது நம் நாட்டில் புதிதல்ல..எங்கு பார்த்தாலும் அதுவும் கோயில்களில்,கூட்டம் அதிகம் காணாப்படும் இடங்களில் இவர்கள் எதோ ஒரு கடவுள் உருவத்தை போட்டுக்கொண்டு பிச்சை கேட்பது எவ்வளவு பெரிய சோம்பேறிதனமாக காரீயம்..
இவர்கள் இதை ஒரு தொழிலாக தான் செய்கிறனர்..
நன்றி சிவா.ஜி மற்றும் ஆதவாவிற்கு...