PDA

View Full Version : ஆத்தா கோயில் உண்டியல்ஆதி
15-04-2008, 06:26 AM
ஆத்தா கோயில்
உண்டியல் நிரம்பியது
காணிக்கையிலும்
வேண்டுதலிலும்..

பிள்ளை பிறக்க ஒரு காசு

பிரியம் நிறைவேற ஒரு காசு

கல்யாணம் நடக்க ஒரு காசு

காதல் கைகூட ஒரு காசு

வேலை கிடைக்க ஒரு காசு

வேளைப் பிறக்க ஒரு காசு

ஆகாதவன் கழனி விளைச்சல்
அழிந்து போகவும் ஒரு காசு
என
காணிக்கைகளின் கடமைகளில்
கனத்தாள் ஆத்தாள்..

நள்ளிரவொன்றில்
உடைக்கப் பட்டது
உண்டியல்..

மறுநாள்
அடுப்பேறிய நெருப்பிலும்
பானையிலும் அரிசியாய்
வெந்து கொண்டிருந்தது
வேண்டுதல்கள்..

களவாடியவனை மோப்பம் பிடிக்க
சாமியாடியிடம் குறி கேட்டது ஊர்..


யாரிடமும் காட்டிக்
கொடுத்துவிடாதே என்று
உண்டியலில் கைவைத்தவனிட்ட
கடைசி காணிக்கையில் மௌனம்
காத்தாள் ஆத்தாள்..

ஆதவா
15-04-2008, 06:30 AM
பிழைகள் மலிந்து கிடக்கின்றன... அதை வழித்து விடுங்கள்... ரொம்பவே பிரச்சனை பண்ணுது.....

ஆதி
15-04-2008, 06:52 AM
பிழைகள் மலிந்து கிடக்கின்றன... அதை வழித்து விடுங்கள்... ரொம்பவே பிரச்சனை பண்ணுது.....

பிழைகளைக் களைந்துவிட்டேன் ஆதவரே..

ஆதவா
15-04-2008, 07:35 AM
ஆதி... ஒரு காதல் நிலைவிட்டிறங்கிய உம் கவிதையை இங்கேதான் கவனிக்கிறேன்.

ஆத்தாக் கோயில்???

வேண்டுதலுக்கான காணிக்கை? இல்லை, நம்பி கொடுக்கப்படும் வேலைக்கான லஞ்சம். அல்லது கூலி. அடுத்தவன் கூலி திருட்டுப் போனால் நமக்கென்ன? விட்டுவிடுவோம். இறைவனுக்கான கூலியைக் காக்கத் தெரியாத அந்த இறைவன் நம்மை எப்படி காக்க இயலும்?

ஆசைகள் உண்டியலில் கொட்டப்படுகிறது. அது நிறைவேறுவது இறைவனின் கையிலல்ல. இரைப்பவன் கையில்..

ஆகாதவன் அழிந்துபோகவும் கூலி தரப்படுகிறது........ அவ்வாகாதவன் வாழவும் இறைவன் ஏற்றுக் கொள்கிறான் கூலி.... எதைச் செய்ய ? எதை விட? புரியாத குழப்பத்தில் ஆத்தா.

களவாடியவனைப் பிடிக்க வக்கில்லாதவர்கள், இறைவனை ஏவிவிடுவதிலும் வக்கில்லாதவர்களாகிறார்கள். இறுதியில் கள்வனின் காணிக்கையை ஏற்ற ஆத்தாவின் அந்தர் பல்டி யாவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

நன்றாக கவனியுங்கள்.. ஊரார் வேண்டுதலுக்கு கூலி கொடுத்தார்கள்.. நிறைவேறவில்லை. கள்வன், நிறைவேறிய பிறகே கூலி கொடுத்தான்... வெற்றியோடு திரும்பினான்.........

பிழைகள் இன்னுமுண்டு சில......... பாணைத் துளைகளாய் ஆங்காங்கே பதுங்கியிருக்கிறது........

கவிதை சொல்வது இரண்டு..

கடவுளை நம்பாதே! கூலி கொடுக்காதே!
செய்த வேலைக்குப் பின் கூலி........ (PostPaid தான் பெஸ்ட் கடவுள்..)

வித்தியாசமான கவிதை........................ இம்மாதிரி கவிதைகள் சொல்வது பல... நம் மன்றத்தினர் கவனித்து அப் 'பல' தெரிந்துகொள்ளவேண்டும்...........

ஆத்தாவுக்குக் காணிக்கையாக இப்பதிவு.........
கொள்ளையடிக்க ஆதவன்.

ஆதி
15-04-2008, 07:58 AM
வெகு நாட்களுக்குப் பிறகு ஆங்காங்கே உங்களின் விரிவான விமர்சனங்களைக் காணும் பொழுதில் அளவற்ற உவகை ஏற்பட்டது..

நிசி சொன்னதுப் போல் உங்கள் பின்னூட்டம் படைப்பாளிகளை இன்னும் ஊக்கப்படுத்தும், என்னுடையப் படைப்புக்கு அத்தகைய ஊக்கம் கிடைத்ததில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி ஆதவா..

நீங்கள் சுட்டிக்காட்டியப் பிழைகளையும் களைந்திருக்கிறேன் ஆதவா..

கவிதையின் உள் முகம் நோக்கி சென்று தக்க விமர்சனம் தந்தமைக்கு நன்றிகள் பல ஆதவா..

நாகரா
15-04-2008, 08:10 AM
மனிதா!
உன்னுள்ளே
அப்பனோடு எப்போதும்
ஒன்றியிருக்கும் ஆத்தாவை
உதாசீனப்படுத்தி விட்டு
வெளியே கல்லொன்றைச்
செதுக்கி
அதுக்கு ஆத்தா என்ற பேர் சூட்டி
நீ செய்யும்
அன்பெனும் ஒருமை
ஒரு சிறிதும் இல்லா
ஆறறிவுத் தந்திரங்களால்
உண்மையான
உன் உள் மெய்யான
ஆத்தாவைத் தாஜா பண்ணிப்
பிடிக்க முடியாது.

அன்பெனும் ஒருமை
ஒரு சிறிதும் இல்லாது
மனிதன் செய்யும்
ஆறறிவுத் தந்திரங்களைப்
படம் பிடித்துக் காட்டும்
உம் கவிதை அருமை ஆதி.
கவிதைக்கு ஆதவனின் ஆழமான
பின்னூட்டமும் அருமை.

வாழ்த்துக்கள் ஆதி.

அமரன்
15-04-2008, 08:31 AM
மறுநாள்
அடுப்பேறிய நெருப்பிலும்
பானையிலும் அரிசியாய்
வெந்து கொண்டிருந்தது
வேண்டுதல்கள்


அரிசியை அப்படியே சாப்பிட முடியாது. சோறாக்கித்தான் உண்ண வேண்டும். இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது நெருடுகிறது. வேறு ஏதாச்சும் (உலை வாய், ஊர்வாய் மாதிரியான) முகங்காட்டுகின்றனவா வரிகள்??

ஆதி
15-04-2008, 08:38 AM
அரிசியை அப்படியே சாப்பிட முடியாது. சோறாக்கித்தான் உண்ண வேண்டும். இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது நெருடுகிறது. வேறு ஏதாச்சும் (உலை வாய், ஊர்வாய் மாதிரியான) முகங்காட்டுகின்றனவா வரிகள்??

வேண்டுதல்கள் அரிசியாய்
வெந்தன அடுப்பில் என்றேச் சொல்ல முயற்சித்தேன் அமரன்,

கவிதையை யோசித்தப் போது வேண்டுதல்கள் அரிசியாய் வெந்துவிட்டமையால் ஆத்தாளுக்கு பணிபளு குறைந்தது என்றுக் கருத்துப்படும் வகையில் எழுத எண்ணினேன், அவ்வளவு தூரம் இழுக்க வேண்டாம் என்றுதான் வேண்டுதல்கள் வெந்துவிட்டன என்பதோடு முடித்துக்கொண்டேன்..

இன்னும் திருத்தம் தேவைப்படுவதாய் நீங்கள் கருதினால் சுட்டிக்காட்டுங்கள் அமர் திருத்திவிடுகிறேன்..

செல்வா
15-04-2008, 08:51 AM
அரிசியை அப்படியே சாப்பிட முடியாது. சோறாக்கித்தான் உண்ண வேண்டும். இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போது நெருடுகிறது. வேறு ஏதாச்சும் (உலை வாய், ஊர்வாய் மாதிரியான) முகங்காட்டுகின்றனவா வரிகள்??
இல்லை அமரா... கவிதை நேரடிப் பொருள் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. பசியால் வாடும் ஒருவன் கோவில் உண்டியலை உடைத்து பசியாறுகிறான். பல்வேறு பட்ட தேவைகளைக் காட்டிலும் பசிக்காக திருடிய இந்த மனிதனின் வேண்டுதலுக்கு ஆத்தா காது கொடுக்கிறாள். தனியொருமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் பாரதியின் வரிகளுக்கு ஆதி கொடுக்கும் இன்னொரு முகம். என்று தான் எனக்குப் படுகிறது .... அதோடு உண்டியல் காசு பற்றிய சிறு எள்ளலும் விரவி நிற்கிறது கவிதையில்.
பசி தீர்க்க வழியில்லாத நாட்டில் பரமனுக்கு லஞ்சம் கொடுக்கும் நிலை. இதில் கடைசி வரி இன்னும்.... தான் கண்டுபிடிக்கப் படக்கூடாது என்பதற்காக திருடியவனும் லஞ்சம் கொடுக்கிறான். ஏன் அதே பணத்தை இன்னுமொரு வறியவனுக்கு கொடுத்திருக்கலாமே... கோயில் உண்டியலை உடைக்குமளவுக்கு தைரியமிருப்பவன் தான் காட்டிக்கொடுக்க படக்கூடாது என்று கடவுளுக்கு மறுபடியும் லஞ்சம் கொடுக்கும் காரணமென்ன? ஹா...ஹ.... இன்னும் நிறைய தோன்றுகிறது... அவசர வேலை அழைப்பு பின் வருகிறேன் பின்னூட்டக் கேள்விகளுடன். ஆதியின் வழக்கமான கவிதைகளிலிருந்து கருத்தளவில் பாதை மாறிய கவிதை. மேலும்.. மேலும் ஏற்றம் பெற வாழ்த்துக்கள்.

நாகரா
15-04-2008, 10:19 AM
செல்வாவின் பின்னூட்டம் அருமை.

அமரன்
15-04-2008, 11:04 AM
குருவே.. உன்னிடமிருந்து இது போன்ற பதிவுகள் பலவற்றை எதிர்பார்க்கிறேன்..

நீ சொன்ன அர்த்தம் வாசித்த கணத்தில் கொண்டேன். ஒருவன் வீட்டில் பானையில் அரிசி.. இன்னொருவன் வீட்டில் நெருப்பு வாயில் அரிசி. வெந்த அரிசியை அரைத்து தொட்டுக்க தேடினால் பொருத்தமான சுவை கவிதையில் கிடைக்காத உணர்வு.. அதனால் எழுந்த கேள்வி அது. விரிவாக பின்னரெழுதுகிறேன்..

நன்றி ஆதி.. நன்றி செல்வா..

kavitha
15-04-2008, 11:11 AM
ஆத்தா கோயில் உண்டியல்

--------------------------------------------------------------------------------

ஆத்தா கோயில்
உண்டியல் நிரம்பியது
காணிக்கையிலும்
வேண்டுதலிலும்..

........
.......
ஆகாதவன் கழனி விளைச்சல்
அழிந்து போகவும் ஒரு காசு
என காணிக்கைகளின் கடமைகளில்
கனத்தாள் ஆத்தாள்..

நள்ளிரவொன்றில்
உடைக்கப் பட்டது
உண்டியல்..

மறுநாள்
அடுப்பேறிய நெருப்பிலும்
பானையிலும் அரிசியாய்
வெந்து கொண்டிருந்தது
வேண்டுதல்கள்..

களவாடியவனை மோப்பம் பிடிக்க
சாமியாடியிடம் குறி கேட்டது ஊர்..

யாரிடமும் காட்டிக்
கொடுத்துவிடாதே என்று
உண்டியலில் கைவைத்தவனிட்ட
கடைசி காணிக்கையில் மௌனம்
காத்தாள் ஆத்தாள்..
__________________
அன்புடன் ஆதி
எனதுகவிதைகள்

ஆதி இது அரசியல் கவிதை இல்லையே? ஆத்தாக்கோயில் உண்டியல் = அரசாங்க கஜானா வாக எனக்குக்காட்சியளிக்கிறது. எனது ஊகம் ஊர்ஜிதம் ஆனால் விளக்கத்தைத் தருகிறேன்.

ஆதி
15-04-2008, 11:17 AM
இல்லைங்க அக்கா, இது அரசியல் கவிதை இல்லை..

சிவா.ஜி
15-04-2008, 11:23 AM
எல்லாம் சரி....சாப்பாட்டுக்கில்லாதவன் ஆத்தாவின் உண்டியலை ஆட்டை போட்டான். காட்டிக்கொடுக்கக்கூடாது என்று அவன் காணிக்கை கொடுத்தது ஆத்தாவுக்கல்ல....

அந்த குறிசொல்லிக்குத்தான். அவன்தானே பிரகடணப்படுத்துகிறான் என் மேல் ஆத்தா வந்து உண்மை சொல்வாள் என்று. ஆனால் ஆத்தா என்றுமே வந்ததில்லை. வரவும் மாட்டாள். அதனால் அவனுக்கு காசு கொடுத்து ஆத்தாவை ஆஃப் பண்ணிவிட்டான் பஞ்சத்துக்கு திருடியவன். ஆனாலும் லஞ்சம் கொடுக்கத் தெரிந்தவன்.

சிந்திக்க வைத்த வித்தியாசக் கவிதை.

வாழ்த்துகள் ஆதி.

ஆதி
15-04-2008, 11:39 AM
மனிதா!
உன்னுள்ளே
அப்பனோடு எப்போதும்
ஒன்றியிருக்கும் ஆத்தாவை
உதாசீனப்படுத்தி விட்டு
வெளியே கல்லொன்றைச்
செதுக்கி
அதுக்கு ஆத்தா என்ற பேர் சூட்டி
நீ செய்யும்
அன்பெனும் ஒருமை
ஒரு சிறிதும் இல்லா
ஆறறிவுத் தந்திரங்களால்
உண்மையான
உன் உள் மெய்யான
ஆத்தாவைத் தாஜா பண்ணிப்
பிடிக்க முடியாது.

அன்பெனும் ஒருமை
ஒரு சிறிதும் இல்லாது
மனிதன் செய்யும்
ஆறறிவுத் தந்திரங்களைப்
படம் பிடித்துக் காட்டும்
உம் கவிதை அருமை ஆதி.
கவிதைக்கு ஆதவனின் ஆழமான
பின்னூட்டமும் அருமை.

வாழ்த்துக்கள் ஆதி.

அழகும் ஆர்ந்த அர்த்தமும் பொதிந்த கவிதைப் பின்னூட்டம் ஐயா..

உள்ளுக்குள் உள்ள ஆத்தாவை மறந்துவிட்டு எங்கெங்கோ தேடி அலைகிறோம் தெரியாத ஆத்தாவுக்காக..

மனிதத்தை காக்கத்தான் மதத்தைப் படைத்தோம், தற்போது மதத்தை காத்துக் கொண்டிருக்கிறோம் மனித்ததை மறந்து..

வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா..

நாகரா
15-04-2008, 11:59 AM
அழகும் ஆழ்ந்த அர்த்தமும் பொதிந்த கவிதைப் பின்னூட்டம் ஐயா..

உள்ளுக்குள் உள்ள ஆத்தாவை மறந்துவிட்டு எங்கெங்கோ தேடி அலைகிறோம் தெரியாத ஆத்தாவுக்காக..

மனிதத்தை காக்கத்தான் மதத்தைப் படைத்தோம், தற்போது மதத்தை காத்துக் கொண்டிருக்கிறோம் மனிதத்தை மறந்து..

வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா..

மனிதம் = மன+இதம்

மனிதத்தில் மதம் அடக்கம், எம்மதமாயினும்.

மதம் உள்ளே நீ புகுந்து(அது ஏம்மதமாயினும்), அதன் உட்கருத்தை, உட்போதனையை அறிந்துணர்ந்தடங்க(நீ என்ற சிறப்பு நெடில், னி என்ற பொதுக் குறிலாகப் பணிந்து) மனிதம் உனக்குப் புரியும்.

அது வரை மதம் பிடித்த யானை போல் வெளியே அழிவின் சுவடுகளைப் பதிக்கின்ற இருகாலியே அன்றி நீ மனிதம் என்ற மன இதத்துக்கு உகந்தவனல்ல.

பல ஆழ்ந்த உண்மைகளை வெளிக் கொணர உதவும் ஆத்தாவின் பிள்ளையாம் ஆதிக்கு நன்றி பல.

ஆத்தா கோயில் உண்டியலை உடைத்ததில், இந்த நல்ல சில்லறைகளும் எனக்குக் கிடைத்ததால், திருடனுக்கும் நன்றி பல.

செல்வா
15-04-2008, 12:14 PM
அவன் காணிக்கை கொடுத்தது ஆத்தாவுக்கல்ல....
அந்த குறிசொல்லிக்குத்தான்.
அடடே இப்படி ஒண்ணு இருக்கா..... தோணலியே.... கலக்குறீங்க அண்ணா...

ஆதி
15-04-2008, 12:47 PM
கோயில் உண்டியலை உடைக்குமளவுக்கு தைரியமிருப்பவன் தான் காட்டிக்கொடுக்க படக்கூடாது என்று கடவுளுக்கு மறுபடியும் லஞ்சம் கொடுக்கும் காரணமென்ன? ஹா...ஹ.... இன்னும் நிறைய தோன்றுகிறது... அவசர வேலை அழைப்பு பின் வருகிறேன் பின்னூட்டக் கேள்விகளுடன். ஆதியின் வழக்கமான கவிதைகளிலிருந்து கருத்தளவில் பாதை மாறிய கவிதை. மேலும்.. மேலும் ஏற்றம் பெற வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுக்கு நன்றி செல்வா.. தோன்றும் கேள்விகளை எல்லாம் எழுப்பு அப்பதான் நான் என்னை திருத்திக்கொள்ள இயலும்..

அமரன்
15-04-2008, 01:34 PM
வேண்டுதல் ஆண்டவனுக்கு கொடுக்கும் அட்வான்ஸ். காணிக்கை வேலை முடிந்தபின் இறைவனுக்கு கொடுக்கும் ஊதியம்/அன்பளிப்பு. பொதுவான வழக்கு இது. அகராதி படித்தவர் குறைவாதலால் தப்பாகவும் இருக்கலாம். கருத்துகளை எதிர்பார்க்கிறேன். இரண்டைப்பற்றியும் கவிதை ஆராய்கிறதா என்றால் இல்லை என்பேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று மூதாதையர் சொன்னதை சோடனையுடன் சொல்லும் கவிதை. உற்சாகம் குறைக்கும் நோக்கம் எள்ளளவும் இல்லை. நமக்கு முன்னால் எத்தனையோ கவிஞர்கள். அவர்கள் பாடாத பொருளை பாடுவது கடினம்.

ஆதி முதலாக எங்கெங்கோ சென்ற கவிதை இலக்கை அடைவது இங்கே. (நெருப்பிலும் என்பது அநாவசிய செலவீனமாக தோன்றுகிறது-கவிஞர் சொன்ன கருத்துப்படி)மறுநாள்
அடுப்பேறிய நெருப்பிலும்
பானையிலும் அரிசியாய்
வெந்து கொண்டிருந்தது
வேண்டுதல்கள்..


உள்ளவனிடம் எடுத்து இல்லாதவனுக்கு கொடுக்கும் ராபின்ஹூட் க(வி)தை.களவாடியவன் நோக்கம் சரியா தவறா.. தீர்மானிப்பது நீங்கள்.. அதற்கு முன்னர் தாமரை அண்ணாவின் சமுதாயத்திலிருந்து சமுதாயத்துக்கு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6081) வாசியுங்கள்.

யாருக்குத் தெரியும். அவனையும் இறைவனே அனுப்பி இருக்கலாம். தனது ஊதியத்தை தனக்கு சேரவைக்க கள்வனை கருவியாக்கி இருக்கலாம். சாமியாடியை இதற்கு உடந்தை ஆக்கி இருக்கலாம்.

கவிதை என்னெண்ணங்களை செலுத்திய பாதை சரியாயின், சாமி சரியாக தனது வேலையை செய்திருக்க வேண்டும். செய்துகொண்டுதானே இருக்கார். குறையில்லாதவர்கள் சிலர் குழந்தை இல்லை என்று குறைபடும் விந்தை சிந்தையை குலைக்க தலையை பிய்க்கும் மருத்துவ விஞ்ஞானம் இதற்கு அத்தாட்சி.

ஆதவா
15-04-2008, 01:59 PM
அமரன்.....

வேண்டுதலாகட்டும் காணிக்கையாகட்டும், காசில்லாமல் எதுவும் நடக்காது என்கிறீர்கள்...
இல்லையா.. அது உண்மைதான்.

ஊதியம்......... செய்த வேலைக்குக் கொடுப்பது........ ஒருவேளை அவ்வேலை வேலைசெய்யாவிடில்??
சாமிக்கு செருப்பணிவிக்க வருவார்களா?

அன்பளிப்பு... லஞ்சத்தை லாவகமாக்கும் வார்த்தை. ஆக இவ்விரண்டைக் காட்டிலும்,
அடியாளுக்கான கூலியே சரி.. (வேலை முடித்தால் கூலி, இல்லாவிடிலும்... சினிமாவில்
பார்க்கிறோமே!!)

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுதல் என்பது அக்மார்க் மனம் வெளிப்படுத்தும் புன்னகை
அதாவது போலியற்ற புன்னகையைக் காணுதல் என்ற அர்த்தமாகிறது...

பிறகு வருகிறேன்.

அமரன்
15-04-2008, 02:05 PM
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுதல் என்பது அக்மார்க் மனம் வெளிப்படுத்தும் புன்னகை
அதாவது போலியற்ற புன்னகையைக் காணுதல் என்ற அர்த்தமாகிறது...
பிறகு வருகிறேன்.

அதே...அதே...
அந்த அக்மார் சிரிப்புக்கு என்ன செய்யவேண்டும் - சாமியானாலும் ஆசாமியானாலும்..
புகல்வதற்கு நீங்கள் மட்டுமல்ல இன்னும் பலர் இங்கே வரவேண்டும்..

சாமியின் வேலை என்னவென்பதே நமக்கு புரியாத புதிர் (ஏன்?). அவரது நிர்வாகத்தை நம்மால் உணரமுடியவில்லை. பிறக்கும்போது எழுதிய ஒப்பந்தப்படி செவ்வனே சேவை செய்கிறார் என்றும் கூறுகிறார்கள். இல்லவே இல்லை என்றும் ஒருசாரார்..

தொடர்ந்து என்னைப் பேசவைப்பதுக்கு கவிஞரும் மனம் திறக்கவேண்டும்

கண்மணி
16-04-2008, 09:20 AM
பிள்ளை பிறக்க ஒரு காசு

பிரியம் நிறைவேற ஒரு காசு

கல்யாணம் நடக்க ஒரு காசு

காதல் கைகூட ஒரு காசு

வேலை கிடைக்க ஒரு காசு

வேளைப் பிறக்க ஒரு காசு

ஆகாதவன் கழனி விளைச்சல்
அழிந்து போகவும் ஒரு காசு

யாரிடமும் காட்டிக்
கொடுத்துவிடாதே என்று
உண்டியலில் கைவைத்தவனிட்ட
கடைசி காணிக்கையில் மௌனம்
காத்தாள் ஆத்தாள்..


"என் ஆசை என்ன.. எனக்கு என்ன வேண்டும்"

யோசித்துக் கொண்டிருந்தவர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர். கூலி வேலைச் செய்ய சொன்னார்கள் அங்கிருந்த ஆத்தா..வை..

வேலைகள் நடந்தனவோ, வேதனைகள் தொடர்ந்தனவோ, கல்லாய் ஆத்தா..

இது ஒரு ஃபோட்டோ கவிதை

நிகழ்வுகளை படம் பிடித்து, ஒரு சின்ன கவிக்கூற்று தற்குறிப்பேற்று..


கவிதை நன்று,, கருத்து நன்று. .ஆழம்புக உட்கருத்து?

கல்லாய் ஆத்தா!!

என்னென்னவோ நடந்து கொண்டிருந்தது அவள் முன்
முகத்தின் மீதமர்ந்த ஈயின் ஊறலால் கூட
சிலிர்த்து சுளிக்காத புன்னகை முகம்.


ஆசைகளும் வேண்டுதல்களும்
மனதில் சென்றன..
உண்டியலில் காசு சென்றபோது

ஆனால் களவு போன காசுகளுடன்
வேண்டுதல்கள் களவு போவதில்லை
ஏனெனில்
களவாடப்பட்டது யாருக்குச் சொந்தம்?

கல்லாய் சிரிக்கும் அந்த ஆத்தாவிற்கா
இல்லை
கூலிகொடுத்த அவர்களுக்கா

இல்லை கமிஷன் கொடுத்துச் சென்ற அவனுக்கா?

சொல்லப் போனால்
கவிதையின் உட்கருத்தாய்
கவிஞனின் ரெகமெண்டேஷன் - அறிவுரை - எண்ணம்
பொதிந்து வருமானால்
அழகாகும் சிறக்கும்

இல்லையெனில் அது ஒரு புகைப்படம்..

பார்த்து ஆனந்திக்கலாம்.

kavitha
26-04-2008, 10:03 AM
இல்லைங்க அக்கா, இது அரசியல் கவிதை இல்லை..
__________________
அன்புடன் ஆதி சரிங்க ஆதி. :)
-------------புகல்வதற்கு நீங்கள் மட்டுமல்ல இன்னும் பலர் இங்கே வரவேண்டும்.. ??!! ழ் -ஆ? ல்-ஆ அமரன்?

-----

இனி கவிதைக்கு....


ஆழம்புக உட்கருத்து?

கல்லாய் ஆத்தா!!

என்னென்னவோ நடந்து கொண்டிருந்தது அவள் முன்
முகத்தின் மீதமர்ந்த ஈயின் ஊறலால் கூட
சிலிர்த்து சுளிக்காத புன்னகை முகம்.
....


கவிதையின் உட்கருத்தாய்
கவிஞனின் ரெகமெண்டேஷன் - அறிவுரை - எண்ணம் பொதிந்து வருமானால்
அழகாகும் சிறக்கும்

ஆத்தாள் காணிக்கைக்கா, கள்வனுக்கா, கவிஞனுக்கா...? யாருக்குப்பா சப்போர்ட்?

ஆதி பதில் சொல்லுப்பா...

ஷீ-நிசி
26-04-2008, 02:27 PM
கடைசியில் முடித்தவிதம் மிக அழகு!

வாழ்த்துக்கள்!