PDA

View Full Version : அஃறிணையில் அடைக்கலம்!

சிவா.ஜி
11-04-2008, 09:40 AM
நீ முன்னர் எழுதிய
கடிதத் தாள்களின்
ஓரங்களையே மிக விரும்புகிறேன்....
கடிதத்தின் மற்ற பாகங்களை
உன் பேனாத் தொட.....
ஓரங்களைத்தானே
உன் விரல்கள் தொட்டன..

எழுத்தென்பது
வழக்கொழிந்த பிறகு
நீ தட்டச்சும்
விசைப்பலகை
ஈர்க்கவில்லை என்னை....
பழம் பரணிலிட்ட
அந்த கடிதமெழுதிய
பேனாவை தருகிறாயா...
உன் பற்களும் உதடுகளும்
உறவாடிய மூடியை
உறக்கமில்லா என் இரவுகளுக்கு
துணையாக்கிக்கொள்கிறேன்.....

உயர்திணைகள்
உறவை உதறிவிட்டால்
அஃறிணைகளில் அடைபட்ட
அன்புதானே அடைக்கலம்!

சாலைஜெயராமன்
11-04-2008, 09:51 AM
அவ்வளவு மயக்கம் தருமா காதல் உணர்வு. சே! இந்த ஏரியாவை கொஞ்சம் கூட தெரிஞ்சுக்காமல் விட்டுவிட்டோமே, நினைக்கையில் கொஞ்சம் வேதனைதான் மிஞ்சுகிறது.

காதல் முடிந்து கல்யாணம் ஆனவுடன், கணவன்மார்கள் அஃறிணையாவது ஏன் திரு சிவா.

இப்படி பேனா மூடி, காதல் கவிதை தாங்கிவந்த காகிதங்களை பெரிசாய் நினைக்கும் நம் அறியாமையைக் கண்டு பெண் குலம் ஆண்குலத்தை கொஞ்சம் exploit பண்றாங்களோ?

உயிரற்ற பொருள்கள் உங்கள் கவிதையால் உயிர்பெற்றது. நல்ல கற்பனையின் தாக்கம் உங்கள் கவிதையில்.

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்.

இதற்கு ஒப்பாக இருந்தது உங்கள் வரிகள்.

ஆதி
11-04-2008, 09:58 AM

சரியான விமர்சனம் ஐயா, சிவா அண்ணாவின் எல்லா கவிதைகளில் உயிரற்றவைகளும் உயிர்ப்பெற்றுவிடும்.

இந்த கண்ணதாசனின் வரிகள் எனக்கு மிகப் பிடித்தவை, அதுவும்

"தென்றலே என் தனிமைக் கண்டு நின்று போய்விடு"

அந்தப் பாடலைப் எப்போது கேட்டாலும் என்னைக் கொன்றுப் போடும் வரி இவை..

சிவா.ஜி
11-04-2008, 10:35 AM
காதல் முடிந்து கல்யாணம் ஆனவுடன், கணவன்மார்கள் அஃறிணையாவது ஏன் திரு சிவா.
விருப்பத்தோடுதான் அய்யா. அதிலும் ஒரு சுகமுண்டு.

இப்படி பேனா மூடி, காதல் கவிதை தாங்கிவந்த காகிதங்களை பெரிசாய் நினைக்கும் நம் அறியாமையைக் கண்டு பெண் குலம் ஆண்குலத்தை கொஞ்சம் exploit பண்றாங்களோ?

இல்லை. இந்த சின்னச் சின்ன பைத்தியக்காரத்தனத்தை அவர்கள் விரும்புகிறார்கள். அதற்காக தங்கள் முழு அன்பையும் நமக்காக அளிக்கிறார்கள்.

உயிரற்ற பொருள்கள் உங்கள் கவிதையால் உயிர்பெற்றது. நல்ல கற்பனையின் தாக்கம் உங்கள் கவிதையில்.

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்.

இதற்கு ஒப்பாக இருந்தது உங்கள் வரிகள்.

இந்த பிரதேசத்தில் உங்கள் உலாவை பார்த்து ஆனந்தத்தோடு கூடிய அதிர்ச்சி. அதோடு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து அந்த திருவை என் பெயருக்கு முன்னாலிருந்து அகற்றிவிடுங்கள். இன்னும் நெருங்க விரும்புகிறேன். அதற்கு அது நெருடலாக இருக்கிறது. நன்றி.

சிவா.ஜி
11-04-2008, 10:38 AM
இந்த கண்ணதாசனின் வரிகள் எனக்கு மிகப் பிடித்தவை, அதுவும்

"தென்றலே என் தனிமைக் கண்டு நின்று போய்விடு"

அந்தப் பாடலைப் எப்போது கேட்டாலும் என்னைக் கொன்றுப் போடும் வரி இவை..

உன்னை மட்டுமல்ல ஆதி என்னையும் கொன்றுபோடும் வரிகள் இவை. கவியரசுக்கு இணையான வரிகள் எழுத இன்றுவரை யாரும் பிறக்கவில்லை.

ஆதி
11-04-2008, 10:40 AM
கவியரசுக்கு இணையான வரிகள் எழுத இன்றுவரை யாரும் பிறக்கவில்லை.

இதுவே என் கருத்தும் அண்ணா..

சாலைஜெயராமன்
11-04-2008, 10:43 AM
திரு இந்த அடைமொழிக்குச் சொந்தமானது அனைத்து மனித உயிர்களும்.

உங்களுக்கு மட்டுமல்ல எந்த மனிதரையும் நான் பெயரிட்டு அழைப்பதில்லை, நான் உங்கள் கவிதையை "Last 15 Post" பகுதியில் பார்த்து உள்ளே வந்தேன். காதலும் ஒரு நல்ல உணர்வுதானே. எனக்கும் காதலிக்கத் தெரியுமாக்கும். (பெண்களை மட்டுமல்ல அனைத்து உயிரையும்தான்)

சிவா.ஜி
11-04-2008, 10:47 AM
காதலும் ஒரு நல்ல உணர்வுதானே. எனக்கும் காதலிக்கத் தெரியுமாக்கும். (பெண்களை மட்டுமல்ல அனைத்து உயிரையும்தான்)

மிக மிக சத்தியமான வார்த்தைகள். எனக்குத் திரு அந்நியமாகத் தெரிவதால்....நீங்கள் என்றுமே எனக்கு ஜெயராமன் அய்யாதான். கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை அய்யா.

நதி
11-04-2008, 11:14 AM
பழைய பரணில் அடைக்கலமான
நீ எழுதிய கடிதங்களில்
உன் விரல்கள் பயணித்த தடங்களில்
என் விரல்கள் பயணித்தபோது
செல்லரித்து போகாமல் இருந்தது
நமது பழைய பழக்கம்.

அந்திக் காலத்திலும்
இவைதான் எனக்கு
மஞ்சள் வெய்யில் கீற்றுகள்.

பாராட்டுகள் சிவா.ஜி அவர்களே

சிவா.ஜி
11-04-2008, 11:24 AM
உன் விரல்கள் பயணித்த தடங்களில்
என் விரல்கள் பயணித்தபோது
செல்லரித்து போகாமல் இருந்தது
நமது பழைய பழக்கம்.

அருமையான வரிகள் ரவுத்திரன். ரௌத்திரத்துக்குள் இத்தனைக் காதலான வரிகளா....ஆச்சர்யம். மிக்க நன்றி. தங்களைப்பற்றி ஒரு அறிமுகம் கொடுத்தால் மிக நல்லது. அறியத்தாருங்களேன்.

சாலைஜெயராமன்
11-04-2008, 04:42 PM
எனக்கு கோபமே வராது திரு சிவா. சிறுமை கண்டு பொங்குவேன். அவ்வளவே. என்னை நீங்கள் எப்படி வேண்டுமானும் அழைக்கலாம் ஏனெனில் நீங்கள் எனக்கு அன்புத் தம்பி ஆகி விட்டீர்கள் இல்லையா.

சிவா.ஜி
11-04-2008, 04:51 PM
எனக்கு கோபமே வராது திரு சிவா. சிறுமை கண்டு பொங்குவேன். அவ்வளவே. என்னை நீங்கள் எப்படி வேண்டுமானும் அழைக்கலாம் ஏனெனில் நீங்கள் எனக்கு அன்புத் தம்பி ஆகி விட்டீர்கள் இல்லையா.ஆம்

அய்யா இனி அண்ணா...

மீண்டும் சோகம் சொல்கிறானே என சலிப்படையவேண்டாம். கும்பகோணத்தில் இருந்த போது பெரும்பாலான என் உணவுத்தேவையை பூர்த்தி செய்தவர் ஜெயராமன் அண்ணா. என் தந்தையின் நன்பர். ஆனால் எனக்கு அண்ணன்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு மற்றுமொரு அண்ணன். நெஞ்சம் நெகிழ்கிறது.

பாரதி
12-04-2008, 12:04 AM
ரொம்ப நல்லா இருக்கு சிவா..!

ஒரு சின்ன சந்தேகம் - அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

பூமகள்
12-04-2008, 05:36 AM
காதலாகி கசிந்துருகுதலில்
வித்தியாசமான கோணம்..!!

அழகிய வரிகளில் தனக்கே உரித்தான பாணியில் கவிதையில் அசத்திட்டார்..!!

பிரிதலின் போது
அஃறிணைகளின் அடைக்கலத்தில்
அன்பு மனம் அமைதியுறட்டும்..!!

நல்ல கவிதை தந்தமைக்கு வாழ்த்துகள் சிவா அண்ணா..!!

இப்படியான காதல் கவிதை முதல் எல்லா வகைக் கவிதைகளையும் இன்னும் இன்னும் தாங்கள் தரவேண்டும் என்பதே என் ஆவல்..!!

ஆதவா
12-04-2008, 09:59 AM
தனிமை.

தன்னைவிட்டுப் போய்விட்டவளுக்காக ஞாபக உளறல்.

கவிதைகளில் வித்தியாசம் தான் அது மற்ற கவிதைகளைக் காட்டிலும் தனிப்பட்டுத் தெரியும். கூடவே எளிமை, அடித்தட்டு அல்லது ஆரம்ப படைப்பாளிகளின் ஈர்ப்புக்கு வழிவகுக்கும். இவ்விரண்டும் கலப்பது அவ்வளவு எளிதல்ல,. வியக்கிறேன் வரிகள் கண்டு.

காதலி எழுதிய எழுத்துக்களைவிட, அவள் சிந்திய மனத்துளிகளை விட அவள் மென்விரல் ஸ்பரிசித்த இடத்தைக் காதலிப்பது காதலின் உயர்வு. அத்தகைய உணர்வை இழந்துவிட்ட காதலி, வாழ்வில் தோற்றவள். கவிதையில் "முன்னர்" என்று குறிப்பிட்டிருப்பதால் கவிதையின் முக்கிய எல்லையான "தனிமையின் ஞாபகத்தை" முன்கூட்டியே வார்த்தைகளால் சொல்ல வந்திருப்பது தெரிகிறது.

இங்கே யோசிக்கவேண்டிய விசயம், கடிதத்தின் ஓரம்பட்ட விரல்களைக் காட்டிலும் ஏனைய பாகங்கள் அவள் எண்ணம்பட்டிருக்கிறதே! அவ்வாறெனில் அவன் காதலித்தது எது? காதலியின் பேனா பட்ட அவள் எண்ணங்களா, அல்லது வெறும் விரல்களா?

எழுத்து அவள் விசயத்தில் வழக்கொழிந்தாயிற்று. ஆனால் அவள் எண்ணம் விசைப்பலகையில் அமர்ந்துவிட்டது. என்றாலும் முன்னர் காகிதத்தின் ஓரம் மட்டுமே பட்ட அவள் விரல், இப்பொழுது விசைப்பலகை முழுவதும் தொடுகிறது... ஆனால் கொடுத்து வைக்கவில்லை காதலனுக்கு.......... சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்ட "முன்னர்" வார்த்தை இங்கே கை கொடுக்கிறது.

கடிதம் பழம்பரணில்........ என்றால்,, காதலி அவனை இன்னும் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறாள்.. முடியாத காரணம் காதலனின் உறவை அற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம்.

உறக்கமில்லா இரவு...... அவளை நினைத்து உறக்கமில்லாமல் உளறும் உறவு. கடிதம் எழுதும்போது ஏற்படும் எண்ண இடைவெளியில் எச்சில் படும் பேனாவை எடுத்தாள்வது கவிதையில் திறமை காட்டும் பகுதிகள்.

உயிரில்லா பொருள்களில் அடைபட்ட அன்பு அவள் பொதித்தது. இன்னும் காதலன் எழுதிய கடிதங்களை அவள் நினைத்துக் கொண்டிருக்கலாம்..... அல்லது ஒருவேளை திருமணமாகி மறந்திருக்கலாம்.........

இன்றைய தனிமையைத் தீர்க்க காதலியை நினைப்பது தவறல்ல. ஆனால் அது நாளைய மருந்தாகக் கூடாது..

மிக அழகிய கவிதை..............

சிவா.ஜி
12-04-2008, 04:49 PM
ரொம்ப நல்லா இருக்கு சிவா..!

ஒரு சின்ன சந்தேகம் - அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

நன்றி பாரதி. அன்பிற்கு ஏது அடைக்குந்தாழ்? அதனால்தானே அஃறினையில் அடைபட்ட அன்பையும் நாடுகிறது.

சிவா.ஜி
12-04-2008, 04:52 PM
காதலாகி கசிந்துருகுதலில்
வித்தியாசமான கோணம்..!!

மிக்க நன்றிம்மா. காதலில் பொருட்களும் காதல்தான் பேசும். இது ஒருவகையான மயக்க நிலை. சின்னச் சின்னதான வெட்டிப்போட்ட நகங்களும்,உதிர்ந்து விழுந்த முடியும் ஓராயிரம் கவிதை பேசும். அதில் ஒன்றுதான் இந்த கடிதத்தாள்கள்.

நன்றிம்மா.

சிவா.ஜி
12-04-2008, 04:55 PM
தனிமை.

தன்னைவிட்டுப் போய்விட்டவளுக்காக ஞாபக உளறல்.

கவிதைகளில் வித்தியாசம் தான் அது மற்ற கவிதைகளைக் காட்டிலும் தனிப்பட்டுத் தெரியும். கூடவே எளிமை, அடித்தட்டு அல்லது ஆரம்ப படைப்பாளிகளின் ஈர்ப்புக்கு வழிவகுக்கும். இவ்விரண்டும் கலப்பது அவ்வளவு எளிதல்ல,. வியக்கிறேன் வரிகள் கண்டு.

இன்றைய தனிமையைத் தீர்க்க காதலியை நினைப்பது தவறல்ல. ஆனால் அது நாளைய மருந்தாகக் கூடாது..

மிக அழகிய கவிதை..............

ஆதவா...எங்கேப்பா இருக்கே...? இப்படி ஒரு விமர்சனத்தைப்பார்த்து எத்தனை நாள் ஆச்சு. நீ நல்லால்லன்னு சொல்றதுகூட நல்லாத்தான் இருக்கும். நன்றிப்பா. அடிக்கடி வாப்பா.

அமரன்
14-04-2008, 10:45 AM
அய்யோ அய்யோ...
கவிஞருக்கும், விமர்சகருக்கும் இடையில் மூட்டி விட ஏதுவாக சில இருக்கு.. கை துரு துருக்குது.. கவிதையைப் பற்றிச் சொல்லி நல்ல பேரு வாங்கிட்டு பிறகு என் தொழிலை பார்ப்போம்..

உணர்வுகள் கவிதையின் கருக்கள். தனிமை தராத உணர்வுகள் எதுவும் இல்லை. ஆக தனிமையே ஒரு கவிதை.. தனிமையும், அவள் நினைவும் சேர்ந்து பிரசவித்த கவிதை.. இயல்பாகவே இறைவன் படைப்புகளை உன்னிப்பாக நோக்கினால், ஊனங்கள் ஒளிந்திருக்கும்.. ஆதவா கவிதையை நன்றாக அலசி உள்ளார். :icon_b:

மேம்போக்காக பார்த்தால் காதல் கவி. ஆழமாக பார்த்தால்/ வேறு அம்சங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்தால் காதல் தந்த கவி பல..

உயர்தினைகள்
உறவை உதறிவிட்டால்
அஃறினைகளில் அடைபட்ட
அன்புதானே அடைக்கலம்!

இந்தக்கருத்தை வலுவாக்க, பேனாவும் காகித ஓரங்களும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறன. அடைபட்ட என்பதுக்கு பதிலாக படிந்துவிட்ட இருந்திருந்தால் பாரதி அண்ணாவின் கேள்வி எழுத்திருக்காது போலும்..

பிரிவுக்கு பல நிமித்தங்கள்.. மரணமும் பிரிவுதான்.. இடப்பெயர்வும் பிரிவுதான்.. மரணித்தவர்கள் நினைவுச்சின்னங்கள் பல அஃறினைகள். நினைவுகள் என்ன தினை என்பது தெரியவில்லை. புராதனப் பொருட்காட்சியகம் கூட ஒருவகை அன்புப் படிமங்கள் காப்பகம்தான்.. இறந்தவர்கள் படத்துக்கு பிரேம் போட்டு, மாலை அணிவிக்கிறோமே.. அதுகூட ஒரு அன்பின் வெளிப்பாடுதானே.. இயந்திரங்களின் இயக்கப் பொறிமுறை, பலதரப்பட்ட கண்டுபிடிப்புகள் என அன்பு கொண்ட அஃறினை பட்டியல் நீளமானதுதானே..

உலகின் ஜீவ நதி அன்பு. இது அமைதியாகவும் ஓடும். சல சலத்தும் நகரும்.. இரைச்சலுடனும் பாயும்/வீழும்.. அதன் வழி நெடுக நிகழும் மாற்றங்களில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு.. ஆக அன்பு எங்கும் படிந்து உள்ளது. தேவைப்பட்டால் சுரண்டி எடுத்து, வேறு ஒன்றும் கரைந்த்து பருகலாம். பருகக்கொடுக்கலாம்..

அன்பு அடைக்கலம்தான்.. அடைபட்டிருந்தால் அல்ல..

பாராட்டுகள் சிவா..

அமரன்
14-04-2008, 10:56 AM
ல்ல வந்திருப்பது தெரிகிறது.

இங்கே யோசிக்கவேண்டிய விசயம், கடிதத்தின் ஓரம்பட்ட விரல்களைக் காட்டிலும் ஏனைய பாகங்கள் அவள் எண்ணம்பட்டிருக்கிறதே! அவ்வாறெனில் அவன் காதலித்தது எது? காதலியின் பேனா பட்ட அவள் எண்ணங்களா, அல்லது வெறும் விரல்களா?

அண்ணனின் கையெழுத்தை கவனியுங்கள்.. (ஒவ்வொருவரினதும் கையெழுத்தை நோண்டுவதே எனக்கு வேலையாடும் போல இருக்கே...)

சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்ட "முன்னர்" வார்த்தை இங்கே கை கொடுக்கிறது...

அதாவது... கணினி வராத காலத்தில் துவங்கி, இப்போ வரை நீள்கிறது கவிதை.. பேசாமல் சிவா அண்ணனின் வயதையே கோடிட்டு காட்டி இருக்கலாம் ஆதவா.:)

சிவா.ஜி
14-04-2008, 11:04 AM
அமரன்.....அசத்தலான.....முக்கியமாய் மிகத் தெளிவாய் ஒரு பின்னூட்டம். உங்களின் உயர்தமிழை எங்களுக்காக ஒரு படி இறக்கி கொண்டுவந்திருக்கிறீர்கள். அதற்காகவே உங்களுக்கு சிறப்பு நன்றி.

நீங்கள் பட்டியலிட்டவை அனைத்துமே அன்பின் காப்பாளராய் இருப்பவையே. பாரதிக் கேட்டதைப்போல அன்பிற்கு அடைக்குந்தாழ் நிச்சயமாக இல்லை....ஆனால் அன்பு அடங்கிய அஃறினைகள் உண்டு.

கிராமத்து தாய்க்கிழவியின், முடைநாற்றம் வீசும் சுருக்குப்பைக்குள் இல்லாத அன்பா...? குடும்பம் காக்க மண் சுமக்கும் அப்பனின் சும்மாட்டுத் துணியில் இல்லாத அன்பா..?

கொஞ்சம் கொஞ்சமாய் அன்பு சேர்ந்து, சேர்ந்து..உரியவர் மறைந்தோ பிரிந்தோ விட்டால் அவரிடத்து அவையிருந்து அன்புகாட்டுமே...

அன்பு அடைக்கப்படாது....படிந்துவிடும்...அட்சயப் பாத்திரங்களாய் ஆகிவிடும். அள்ள அள்ளக் குறையாது..ஆனால் அடையாளம் கண்டுகொண்டு அள்ளிக்கொள்ளவேண்டும்.

நீங்கள் சொன்ன மாதிரி படிந்துவிட்ட என்பது மிகப்பொருத்தம்.

நன்றி அமரன். உங்கள் பின்னூட்டம் கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

ஆதவா
14-04-2008, 11:18 AM
உலகின் ஜீவ நதி அன்பு. இது அமைதியாகவும் ஓடும். சல சலத்தும் நகரும்.. இரைச்சலுடனும் பாயும்/வீழும்.. அதன் வழி நெடுக நிகழும் மாற்றங்களில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு.. ஆக அன்பு எங்கும் படிந்து உள்ளது. தேவைப்பட்டால் சுரண்டி எடுத்து, வேறு ஒன்றும் கரைந்த்து பருகலாம். பருகக்கொடுக்கலாம்..

அன்பு அடைக்கலம்தான்.. அடைபட்டிருந்தால் அல்ல..

பாராட்டுகள் சிவா..

அசத்தல் அமரன்.. நான் ஓரடி பாய நினைக்க நீங்கள் பத்தடி பாய்கிறீர்கள்.. உண்மையில் இவ்வித கவிதைகளை எடுத்து பிரித்து மேய்ந்து ஒருவழி' யாக்காமல் விடக்கூடாதுதான்... நாம் இருவரும் அதை சரியாக செய்திருப்பதாகத் தெரிகிறது. :D

படிந்துவிட்ட........ நல்ல வார்த்தைதான். எனக்கு ஏனோ அது ஒத்துவரவில்லை. அதேசமயம் அடைபட்ட' வும் கூட..

படிதல்.... இறுக்கமாக இல்லாத அணைப்பு.. புல்லாங்குழலில் இசைக்கலைஞனின் காற்று படிகிறது........... அதனாலா குழல் பாடுகிறது? குழலில் அடைபட்ட காற்று இணையாவிடில் இசையேது?

உனக்குள் படிந்துவிட்டு போக நான் வெறும் மூச்சுக் காற்றல்ல. ஈரல்குலையில் அடைபட்டிருக்கும் சுத்த வாயு.....

சில சமயங்களில் அடைக்கும் தாழ் அன்பிற்கும் உண்டாகிறது. ஆனால் அது குழல் விழிகளைப் போல சில ஓட்டைகளைப் பெற்றிருக்கவேண்டும் என்பது எனது கருத்து.

என் மனம் உன் அன்பினால் அடைபட்டுக் கிடைக்கிறது.. அந்த அதீத அடைப்பு மயக்கம் எனும் மரணத்தை வரவழைக்கலாம்.. சற்று சந்துவிடு.. வாழ்கிறேன்.

சில இடங்களில் பார்க்கலாம். அதீத அடைபட்ட அன்பின் காரணமாக ஒரு தாய் தன் மகனை வழிநடத்துவது... ஆக மொத்தம் வள்ளுவர் ஆராயாமல் எதுவும் சொல்லவில்லை.

சொல்ல நினைத்தேன்... சொன்னேன்...
நன்றி அமரன்.............

சிவா.ஜி
14-04-2008, 11:24 AM
இங்கே யோசிக்கவேண்டிய விசயம், கடிதத்தின் ஓரம்பட்ட விரல்களைக் காட்டிலும் ஏனைய பாகங்கள் அவள் எண்ணம்பட்டிருக்கிறதே! அவ்வாறெனில் அவன் காதலித்தது எது? காதலியின் பேனா பட்ட அவள் எண்ணங்களா, அல்லது வெறும் விரல்களா?

எண்ணம் பொய்த்து வண்ணம் மாறி விட்டது. ஆனால் அந்த விரல்கள் தீண்டியபோது, அந்த நேரங்களில் அவற்றில் அன்பு மட்டுமே இருந்தது. அதனால்தான் அந்த விரல்கள் தீண்டிய பாகம் மட்டும் பிடிக்கிறது

எழுத்து அவள் விசயத்தில் வழக்கொழிந்தாயிற்று. ஆனால் அவள் எண்ணம் விசைப்பலகையில் அமர்ந்துவிட்டது. என்றாலும் முன்னர் காகிதத்தின் ஓரம் மட்டுமே பட்ட அவள் விரல், இப்பொழுது விசைப்பலகை முழுவதும் தொடுகிறது... ஆனால் கொடுத்து வைக்கவில்லை காதலனுக்கு...

காதலன் ஒருவனுக்காகவே விரல் தொட்ட காகிதம் ...கண்டதையும் தட்டச்ச விரல்கள் தொடும் விசைப்பலகை.....காதலனை எது ஈர்க்கும் ஆதவா...?

கடிதம் பழம்பரணில்........ என்றால்,, காதலி அவனை இன்னும் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறாள்.. முடியாத காரணம் காதலனின் உறவை அற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம்.

பழம் பரணில் இருப்பது கடிதங்களல்ல...கடிதமெழுதிய பேனாவைத்தான் அவள் பழம்பரணுக்குள் எறிந்துவிட்டாள். அதைத்தான் கேட்கிறான் காதலன்.

இன்றைய தனிமையைத் தீர்க்க காதலியை நினைப்பது தவறல்ல. ஆனால் அது நாளைய மருந்தாகக் கூடாது..

மிக மிகச் சரி

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆதவாவின் அழகிய பின்னூட்ட விமர்சனம். மகிழ்ச்சியாக இருக்கிறது. அடிக்கடி ஆதவா வா என அழைக்கிறேன்.

நாகரா
14-04-2008, 11:37 AM
உயர்திணைக்கும்
அஃறிணைக்கும்
பொதுவான ஈறான
இணைக்கும்
ஒருமையாம் அன்பின்
பெருமை சொல்லும்
நற்கவிதை
வாழ்த்துக்கள் சிவா.
உம் எழுத்துப் பிழை
என்னை "இணை" பற்றி
யோசிக்க வைத்தது.
அன்பொன்றே
இணைக்கும் பாலம்.
அஃறிணைகளும்
அன்பால் உயிர் பெறும்
என்பதைத் தெளிவு படுத்தும்
காதல் கவிதை.
நன்றி சிவா.

ஆதவா
14-04-2008, 11:37 AM
எண்ணம் பொய்த்து வண்ணம் மாறி விட்டது. ஆனால் அந்த விரல்கள் தீண்டியபோது, அந்த நேரங்களில் அவற்றில் அன்பு மட்டுமே இருந்தது. அதனால்தான் அந்த விரல்கள் தீண்டிய பாகம் மட்டும் பிடிக்கிறது

உண்மைதான்... ஆனால் இந்த எண்ணம் கவிதையிலிருந்து மிகவும் மறைக்கிறது. மேலோட்டமாக படித்ததால் வந்த வினையோ என்னவோ.......... :(

காதலன் ஒருவனுக்காகவே விரல் தொட்ட காகிதம் ...கண்டதையும் தட்டச்ச விரல்கள் தொடும் விசைப்பலகை.....காதலனை எது ஈர்க்கும் ஆதவா...?

காதலியின் எந்த ஒரு செயலும் எந்த ஒரு தொடுகையும் காதலன் விரும்பக் கூடியதுதானே!! (உண்மையில் நானும் ஆதரிக்கவில்லை..:icon_b:)

பழம் பரணில் இருப்பது கடிதங்களல்ல...கடிதமெழுதிய பேனாவைத்தான் அவள் பழம்பரணுக்குள் எறிந்துவிட்டாள். அதைத்தான் கேட்கிறான் காதலன்.

தவறான நோக்கில் படித்துவிட்டென்.. சுட்டியமைக்கு நன்றி அண்ணா.

மிக மிகச் சரி

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆதவாவின் அழகிய பின்னூட்ட விமர்சனம். மகிழ்ச்சியாக இருக்கிறது. அடிக்கடி ஆதவா வா என அழைக்கிறேன்

வருவதற்கான வாய்ப்புகள் தற்சமயம் அதிகம்.. இன்னும் நிறைய படைப்புகள் தாருங்கள்... நிச்சயம் நான் அந்த எழுத்துக்களைச் சுவைப்பேன்..........

அன்புடன்
ஆதவன்

சிவா.ஜி
14-04-2008, 11:49 AM
உயர்திணைக்கும்
அஃறிணைக்கும்

உங்களின் அன்பான பிழைச்சுட்டலுக்கு மிக்க நன்றி அய்யா.
அழகிய கவிதையில் அதையுரைத்தது கண்டு வியப்படைகிறேன்.

தலைப்பே பிழையென்பது பெரியதவறுதான். இனி கவனமாக இருக்கிறேன்.

சுகந்தப்ரீதன்
15-04-2008, 07:21 AM
உயர்திணைகள்
உறவை உதறிவிட்டால்
அஃறிணைகளில் அடைபட்ட
அன்புதானே அடைக்கலம்!

ம்ம்ம்....உண்மைதான்..அண்ணா..!!

உயர்திணைகள் அஃறிணையாவதும்
அஃறிணைகள் உயர்திணைகளாவதும்
காதலில் மட்டுமே சாத்தியமாகும்..!!

வாழ்த்துக்கள் சிவா அண்ணா...!!

சிவா.ஜி
16-04-2008, 12:21 PM
அன்பு படிந்திருக்கும் அஃறிணைகள், உயர்திணைகளை விட உயர்வுதான்.

மிக்க நன்றி சுகந்த்.

அனுராகவன்
24-04-2008, 04:35 AM
உயர்திணைகள்
உறவை உதறிவிட்டால்
அஃறிணைகளில் அடைபட்ட
அன்புதானே அடைக்கலம்!

சிவா.ஜி மிக நல்ல வரி..
சிந்திக்க வைக்கும் ஆன்மிக வரிகள்..
சிறப்பான கவிக்கு என் வாழ்த்துக்கள்