PDA

View Full Version : யாரிடம் போய்ச்சொல்லி அழ...............



shibly591
10-04-2008, 04:57 AM
யாரிடம் போய்ச்சொல்லி அழ.............

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்

புயலழித்த பூவனமாய்
புலமபெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்

நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப்போனதம்மா....

காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா




அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...

அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப்போனதம்மா

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?


நிந்தவூர் ஷிப்லி
தென்கிழக்குப்பல்கலை
இலங்கை

அமரன்
10-04-2008, 10:34 AM
வளர்ச்சி, சிங்காரம், தூய்மை என பல்துறைகளில் மிளிர்ந்ததைப் பார்த்து சின்ன சிங்கப்பூர் என்று சிலாகித்து சித்தரிக்கப்பட்ட பிரதேசம் யாழ்ப்பாணம். இன்று நரம்புகளிழந்த யாழ்.. அறுபட்டு எங்கோ விழுந்த நரம்பில் காற்றுப்பட்டதால் எழுந்த சோக கீதமாகவே கண்களில் விழுகிறது இந்தக்கவிதை.

யாழ்ப்பாணம் மட்டுமல்ல.. இந்துமாவாரியின் நித்திலத்தில் பல பிரதேசங்களும் சிதைந்துதான் போய்விட்டன.. தளிர்விட்ட சமத்துவ நாசக்கிருமியை, வளர்த்த அடிவருடிகள், அகங்கார அரக்கர்கள், இரத்தக்காட்டேறிகள், நிம்மதி குலைக்கும் நாசகாரிகள் இவர்கள்தான் இந்நிலைக்கு காரணம்..

உலகத்தில் பல நாடுகளில் விரவி இருக்கும் அவலம்.. ஆதிக்க வெறியே இதன் விதை.. கோடுகளை வரைந்து நாடுகள் என்று பெயரிட்டமைதான் இதன் மூலமோ????

சாலைஜெயராமன்
10-04-2008, 10:58 AM
காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா

அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப்போனதம்மா

கண்ணீரால் கரைந்தது இதயம் ஷீபிலி. சொந்த மண்ணில் அடிமையான சோகம். இனமே இனத்தைப் பழிக்கும் இந்த இழிசெயலுக்கு விடிவு எப்போது.

நாம் நடந்து வந்த பாதையில் வெடிகுண்டின் நிழல். என்ன கொடுமை. எதற்காகப் இப்போராட்டம். பெண்டிரையும் பாலரையும் கொன்று குவித்து யாரை ஆட்சி செய்ய இந்த ஆட்டம்.

அன்புச் சகோதரனே கலங்காதே.

நீ அகதிதான்.

கவலையை விடு கௌவரவப்படு அகதியாய் இருக்க.

அகத்தில் தீயை அணையாமல் காத்துக்கொள். அன்பையும் சத்தியத்தையும் அத்தீயில் புடம்போடு. வன்முறைக்கு வன்முறை அடக்கு முறைக்கு அடக்கு முறை என்ற சித்தாந்தம் மாற்றி அஹிம்சை என்னும் அக்கினியால் அனைவரையும் ஒன்றுபடுத்து. ‘

அகத்தில் அக்னியைச் சுமந்த உன் அகத்தின் தீ கனன்று கொண்டே இருக்கட்டும். விடுதலைத் தீயை அணைக்காமல் இருக்க உன் அகத்து தீ எரியட்டும். சாந்தியையும் சமாதானத்தையும் எதிர் நோக்கும் தீயைக் கொள். அழிக்கும் தீ அக்கரமக் காரர்கள் கொள்ளட்டும். ஆக்கும் தீயால் உன்னையும் உன் நாட்டையும் உணர்விலே மாற்று.

கெடுமதி இன்னல் புரியும் கீழ்னிலை மாந்தரை காலத் தீ கவனித்துக் கொள்ளும். கலங்காதே. தமிழினம் அழிக்கப்படாது. அழிக்க முடியாது.

ஏனெனில் இனிய ஈழம் இனி உன்போல் இளைஞர்கள் கையில்தான். காலம் மாறும் கவலைப்படாதே. அரவணைக்க அன்புத் தமிழகம் அருகில் இருக்க ஏன் உனக்கு இச் சோகம். உன் சோகம் எங்களுக்கு, உன் இன்பமும் எங்களுக்கு.

kavitha
10-04-2008, 11:19 AM
வாழ்பவர்களையும், அண்டி வந்தோரையும் காப்பதே அரசின் கடமை. இலங்கை அரசின் ஓரபட்ச நிலை வருந்தத்தக்கது. இலங்கைத் தமிழர்களிடமும் எங்கே குறை இருக்கிறது என்று புரியவில்லை. விவரம் தெரியாத நாளிலிருந்து ஓயவில்லை இந்த ஓலக்குரல். சுடுகாடுகளுக்குக்கூட ஓய்வு நேரம் உண்டு. மிகவும் மனவருத்தமளிக்கிறது இந்த நிலை.

ஷில்பியில் முத்துச்சரத்தில் இன்னொன்று. பாராட்டுகள்.

shibly591
11-04-2008, 04:04 AM
உண்மையில் எங்கள் மக்களின் பிரச்சினைகளிலும் எங்கள் சோகங்களிலம் எப்பொழுதும் பங்கெடுப்பத எங்கள் அயலவன் இந்தியாதான்.சுனாமி இந்தியாவையும் தாக்கியிருந்த நிலையில் முதன் முதல் பலகோடி பெறுமதியான நிவாரணப்பொருட்களை இலங்கை உட்பட ஏனைய உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கத்துணிந்த மனம் எத்தனை உன்னதமானது.......??

இராமேஸ்வரத்தில் எங்கள் மக்களை அரவணைக்கும் அன்பை என்னவென்று சொல்வது.....?

யாரிடம் போய்ச்சொல்லி அழ? என்ற கவலை தணிகிறத.மன்றத்திலுள்ள அன்பர்களின் விரல்கள் இருக்கும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் அழலாம் போலுள்ளது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...?

நன்றிகள் கோடி கோடி....

ஆதி
11-04-2008, 04:51 AM
ஷிப்லி, என்னைப் பொருத்த மட்டில் நான் ஈழத்தமிழர் இந்தியத் தமிழர் என்றுப் பிரித்துப் பார்த்ததில்லை.. எனக்கு என்றைக்கும் ஒரு வருத்தமுண்டு, நான் ஈழத்தில் பிறந்திருதால் என் மக்களின் விடுதலைக்காக குறைந்தப்பட்சம் உயிரையாவது தந்திருக்க இயலுமே.. இங்கே இருந்து கொண்டு ஒவ்வொரு அசம்பாவிதங்களையும் கேட்கையிலோ படிக்கையிலோ வருத்தத்தை மட்டும் பட்டுக் கொண்டு கையாளாகதவனாக இருப்பதில் எனக்கு வருத்தம்தான்..

shibly591
11-04-2008, 05:08 AM
நண்பரே ஆதி...உங்களைபப்போன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை எஙகள் வாழ்வில் வீழ்ச்சியில்லை....ஸ்நேகங்களை பகிர்ந்த கொள்வோம்

அனுராகவன்
11-04-2008, 06:22 AM
நண்பரே சிப்லி அவர்களே!!
உலகங்கள் பலவானாலும் எங்கும் ,எதிலும் இருப்பவன் இந்தியன் ;குறிப்பாக தமிழ் நெஞ்சங்கள் யாரையும் பிரித்து பார்ப்பது கிடையாது...
யாரையும் பிரித்துபார்க்கும் குணம்...
அப்படியிருந்தால் பலயினம்,பலமொழி மற்றும் பல பண்பாடு இன்றளவில் நிலைத்து இருக்காது..
கவலைவேண்டாம் தோழா..
அவர்கள் எத்துனைநாட்கள் தான் சண்டையும்,மக்களை கொல்வதும் தொடரும்..
அதற்கு ஒரு முடிவு வந்தே தீரும்.
தோற்றம் இருந்தால் முடிவு இருக்கும். அதுவும் தீயவை செய்யும் அரசும்,நயவஞ்சககாரர்களும் அந்த தீயகுழியிலே இருந்த இடம் தெரியாமல் போயிவிடுவார்கள்..
மக்களை நான் உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற பேதம் இனியும் வேண்டாம்..
இன்றைய சமுதாய இளம் சிங்கங்கள் தன் முழுதிறமையெ கொண்டு நல்வாழ்க்கை அமைத்திட முயல வேண்டும்..
அனைவரும் ஒரு மக்கள் என்ற நிலையில்தான் நான் அனைவரையும் பார்க்கிறேன்..

நாகரா
11-04-2008, 09:42 AM
ஷிப்லி,
வன்பின் ஆர்ப்பாட்டம் ஒழிந்து
அன்பின் அரசாட்சி மலர்ந்து
தமிழ் ஈழம் உருவாக
அருட்பெருங்கடவுளை வேண்டுகிறேன்.

shibly591
12-04-2008, 05:10 AM
உண்மைதான் நண்பர்களே...எல்லோரும் மனிதர்கள்தான்..எவரும் எவருக்கம் தாழ்ந்தவர்கள் இல்லை...இந்த உண்மை பலருக்குப்புரிவதில்லை என்பது வருந்தத்தக்கதே...அடக்கு முறையும் ஆதிக்கமும் "தனக்கு மேலே துப்புபவனின் நிலைக்கு ஒப்பானது"எப்படியும் அவன் முகத்தில்தான் அது மீண்டும் விழும்.தாங்கள் எல்லோரதும் கருணை மெய் சிலிர்க்க வைக்கிறது.இன்னுமொன்று நான் இதுவரை யாழ் மண்ணையே மிதித்ததில்லை...நண்பர்கள் பலரின் கண்ணீர்தான் இது போன்ற எனது கவிதைக்கண்ணீரின் ஆணிவேர்.விடிவு வரும்.அதுவே விரைந்து வரும்.அதுவரை அழத்தொடங்கிய எங்கள் கவிதைகள்..கிளர்ந்தெழும் இன்னொரு யுகம் நோக்கி...................................