PDA

View Full Version : பூக்களைப் பறிக்காதீர்கள்!ஷீ-நிசி
09-04-2008, 03:52 PM
மன்றத்தில் 4000-வது பதிப்பாய் ஒரு கவிதை இடலாமென...

http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/PookalaiParikaatheergalNew.jpg

செடியவள் சிரசிலிருந்து
பிடுங்கப்பட்ட ரோஜா ஒன்று,
நொடியிலிவள் சிரசினிலே
இடம் மாறியது இன்று!

நேற்றிரவு செடியவளுக்கு,
சூடிச்சென்ற அவள் காதலன்
இன்றதைக் காணாமல்,
தேடிக் கண்ணீர்விடுகிறான்..

அவை வழிந்தன,
பனித்துளிகளாய்!!
செடியின் மீது….

ஓ! அதனால்தான்
பூங்காக்களில் எல்லாம்,
“பூக்களைப் பறிக்காதீர்கள்”
என்ற பலகையோ?!

சாலைஜெயராமன்
09-04-2008, 04:21 PM
கண்ணீரும் பனிநீராய் மாறுவது காதலில்தானோ?

கண்ணீருக்கும் காதலுக்கும் அதிகத் தொடர்பு இருக்கும்போல.

4000 ம் பதிப்பை காதலுக்கு அர்ப்பணித்த கவிதை வரிகள் அற்புதம் ஷீ-நிசி,

நடுநிசி தான் ஞாபகம் வருகிறது உங்கள் பெயரை வாசிக்கும்போது, பெயர்க் காரணம் யாதோ? வித்தியாசமாக இருக்கிறது.

மன்றத்தில் ஒரு நெடிய பயணம் உங்களது. உற்சாகம் குறையாத பகிர்தலுக்கு நன்றிகள் பல ஷீ-நிசி. தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு,

lenram80
09-04-2008, 05:30 PM
ஓ!
ரோஜாவின் காதலன் தொட்டதால் தான்
வெட்கத்தில் அது சிவப்பாக பூத்ததோ?

இவள் அதை இடம் மாற்றியதால் தான்
கோபத்தில் அது சிவப்பாகவே இருக்கிறதோ?

நல்ல கற்பனை ஷீ-நிசி !!!

ஷீ-நிசி
10-04-2008, 02:57 PM
நன்றி ஜெயராமன், நன்றி லெனின்...

அமரன்
10-04-2008, 03:02 PM
இந்நாள் அழகிக்கு
முன்னாள் அழகி கிரீடம் சூட்டுவது போல
பூ சூடுவதை சொன்னவிதம்.:icon_b:

இந்நாள் அழகி
முன்னாள் அழகியிடமிருந்து
கிரீடத்தைப் பறிக்கிறாள்!

முன்னாள் அழகியின் கண்ணில் கண்ணீர்..
ஆளாக்கியவன் கண்ணிலும் கண்ணீர்..

சூடுபவள் இதய தேவதையாயின்
செடியின் கண்ணீர் பன்னீராகும்..
மேகத்தின் கண்ணீர் பனியாகும்..

அழகியல் தோய்த்து வரைந்த
அற்புதக் காதல் சித்திரம்..
பாராட்டுகள் ஷீ-நிசி.

உங்கள் ஒவ்வொரு கவிதையும்
என்னை அடிமை ஆக்கும் சாசனம்..:)

பூங்கா என்பதே
பொழுது போக்கு அம்சம்..
அதனால தான் -பல
பூங்கா காதல் கருமையாகிறது..

பூங்காவில் பறிக்கும் பூக்கள்
அநேகமாக
காதுலதான் வைக்கப்படுகின்றன..

அதனால்தான்
பூங்காக்களில் நட்டுள்ளார்கள்
பூக்களை பறிக்காதீர்களென்று!

ஷீ-நிசி
10-04-2008, 03:37 PM
இந்நாள் அழகிக்கு
முன்னாள் அழகி கிரீடம் சூட்டுவது போல
பூ சூடுவதை சொன்னவிதம்.

அருமை அமரன்.. நன்றி!

அறிஞர்
10-04-2008, 04:21 PM
செடியிலிருந்து... ரோஜா மலர் பிடுங்கப்படுதலும்...
பனித்துளிகள்... இலைகளில் காணப்படுவதும்
இயற்கை..

இந்த இயற்கை செயல்கள்...
கவிஞரின் சிந்தனையில்
கற்பனை கூடி....
அழகாக தெரிகிறது.....

வாழ்த்துக்கள்....

மனோஜ்
10-04-2008, 04:59 PM
பூக்கலின் அழகு அருகே அழைக்கும்
அருகில் சென்றால் முற்கலாய் குத்தும்

அருமை க விதை 4000 திற்கு வாழ்துக்கள் ஷீ

அக்னி
10-04-2008, 05:16 PM
செடியிலிருந்து கூந்தலுக்கு...
பசுமையிலிருந்து கருமைக்கு...
அழகு,
பூவுக்கா... பூவைக்கா...

பூவை(யை)க் கவரவோ பறிக்கின்றாய்...

ஷீ-நிசியின் அழகுக் கவியும், அமரனின் விரிவுக் கவியும்
பூச்சொரிகின்றன மனதில்...

பூமகள்
10-04-2008, 06:08 PM
பூவுக்கு காதலன்..??!!
யாரென்று சிந்திக்க
பனித்துளிகள் சொல்லி
பனிபொழியும்
மேகமைந்தன் தானென
சொல்லியது அறிய
ஆனந்தம்..!

மோகத்தில் முட்டி
மோதல்களில் வென்று
முதல் பூ காதலாகி
விரிகிறது..!!

முகிலவன் காண
கரு முகிலிடுக்கில் மறைய..
பூக்காம்பு மட்டும்
வாடிய படி நிற்கிறது..!

கருமுகிலில் இருண்ட
கண்ணில் பனித்துளி
பொழிந்து மேகமைந்தன்
தவித்துத் துடிக்கிறான்..!!

-------------------------
ஆஹா.. ஷீ..!! அசத்திட்டீங்க..!!
ஒரு காதலனின் காதல் பூ.. காணும் முன்னே.. மற்றொரு காதலிக்கு பரிசளிக்கப்பட்டுவிட்டது..!!

படமும் கவி அதில் பதிந்த பதமும் அருமையோ அருமை..!! வாழ்த்துகள்..!! :)

நாலாயிரம் கவிதைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் ஷீ..!!

இதயம்
10-04-2008, 06:42 PM
அசத்தல் ஷீ-நிசி..! உங்களின் உருவகங்கள் அழகாய் பொருந்தி, அற்புதமாய் கருத்தை தூக்கி நிறுத்துகின்றன. ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்கு தெரியும் என்பார்கள். அது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. ஆனால், காதலைப்பற்றி கவிஞனுக்குத்தான் தெரியும்..!! அதற்காக காதல் செய்பவர்கள் எல்லாம் கவிஞர்களாக முடியாது.!!

ஷீ-நிசியின் கவிதைகளில் ஒரு சிறப்பு அதற்கு பொருத்தமாய் ஒரு அழகிய அல்லது நெஞ்சை வருடும் புகைப்படம் இணைந்திருக்கும். இங்கும் அப்படியே..! ஆனால் கவிதையின் பொருளான ரோஜாவைக்காட்டிலும் பெண்ணின் முகம், குறிப்பாய் இதழ்கள் கவர்ச்சியாய் இருப்பதால் இந்த கவிதையோடு பொருந்தாமல் உறுத்துவது போன்ற உணர்வெனக்கு...!! (தலையில் ரோஜா இருக்கும் படம் கிடைக்கவில்லையோ..?)

என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள் ஜெயராமன்..? உலகில் பெரும்பான்மையான கண்ணீருக்கு காதலும் ஒரு காரணம். நம்முடைய காதல் காவிய நாயகர்கள் யாராவது காதலித்த பெண்ணை மணந்து மகிழ்வுடன் வாழ்ந்த சரித்திரம் உண்டா..? இதிலிருந்தே புரியும் காதலும், கண்ணீரும் உடன்பிறந்தவை என்று..!!

அற்புதமான கவிதையை படைத்த ஷீ-நிசிக்கு என் பாராட்டுக்கள்..!!

ஆதவா
10-04-2008, 07:53 PM
ரோஜா ரகக் கவிதைகள் பல கண்டாயிற்று. பெரும்பாலும் காதற்கவிதைகளாக இருக்கும். ஆனால் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுவதில்லை. பெரும்பாலான ரோஜாக்கவிதைகள் ஒப்பீடாக இருப்பதைக் காணலாம். அதாவது நாயகியின் நிற குண அங்க ஒப்பீடாக அமையலாம். பெரும்பாலனான இக்கவிதைகள் ரசிப்புத் திறன் காட்டுவதைக் காட்டிலும் சலிப்பைக் காட்டுவதையே அக்கவிதைக்கோ அல்லது அப்படைப்பாளிக்கோ ஒருவித சரிவை ஏற்படுத்துவதையும் எடுத்துக் காட்டலாம்.

சற்று வித்தியாசப்பட்டு எழுதும் எண்ணமுடைய ஷீ-நிசி போன்றவர்கள், பூக்களைப் பறித்து கவிதையை வளர்க்கிறார்கள் என்பது உண்மை. இம்முறை இதழை உதட்டுக்கோ அல்லது அவள் குணத்திற்கோ ஒப்புமை கூறியிருக்கலாம் என்றோ அல்லது வேறெவ்வாறோ நினைத்துதான் படிக்கவேண்டியிருந்தது. நல்லவேளையாக அவ்விதம் எழுதியிருக்கவில்லை. அதற்காக ஒரு வணக்கம் ஷீ-நிசி.

ஒரு தாவரத்தை , பதவியுயர்த்தி அதனை உயர்திணை ஆக்கியதற்கு முதற்கண் வாழ்த்துகள். செடியவள் எனும் போதே நொடியவள் பிறந்திருக்க வாய்ப்புண்டு. அதனை சரியாக உபயோகப் படுத்தியதும் திறமைக்கான அத்தாட்சி. செடிக்கோ இன்னும் தலை'கள் முளைக்கலாம். நமக்கோ முளைத்தவைக்குள் முளைத்தவை எத்தனையோ!

சிரசின் மீது இடமாற்றம் செய்வது காலம் காலமாக நடந்து வருகிறது.. பெண்களுக்குப் பூக்கள், ஆண்களுக்கு முடி' (தலைமயிர் அல்ல, ஆட்சி பீடம் )

நேற்றிரவு சூடிச்சென்ற காதலன் யாராக இருக்கமுடியும்? ஆனால் காதலர்'கள்' இருக்கிறார்கள் என்பது நிச்சயம். குறிப்பிட்டு ஒருவரை மட்டும் சொல்ல இயலாது.. ஆனால் அப்படி ஒரு காதலன் பனித்துளியை கண்ணீராகக் கொண்டிருக்கவேண்டுமென்பது கவிதைக்குப் பின்னே ஒளிந்திருக்கும் வார்த்தை.

கவிதையின் இறுதியில் காரணம் சொல்லப் படுகிறது. பூக்களைப் பறிக்க வேண்டாம் என்று. தலையிழந்த செடியவள் வேதனைபட்டாலும் சிரசில் அமர்ந்த இச்சிரசு மென்மையின் தலைக்கேறிய மேன்மையை நினைத்து உருகாதா என்ன? அதற்கேனும் பனித்துளிகளை உதிர்க்காமல் இருக்கலாம்.... (காதலன் விடுவதாக இல்லை.)

அந்த இடத்தில் வார்த்தை நன்றாக அமைந்துவிட்டது. கண்ணீர் விட்டது செடி அல்ல. அவள் காதலன். தப்பித்தீர்கள்.. இல்லையென்றால் பிழையாகியிருக்கலாம்...

சரி குறையென்று ஏதேனும் சொல்லவேண்டுமல்லவா?

அவைகள் வழிந்தன என்பது பிழையாகக் கருதப்படும். கண்ணீருக்கு பன்மை இல்லை. எனினும் மொத்தமிருக்கும் பதினைந்து வரிகளும் நெருக்கமான பிசகில்லாத (இக்குறை தவிர்த்து) வார்த்தை விரயமற்ற கவிதையாக மலர்ந்தது..

வாழ்த்துகள்

ஷீ-நிசி
11-04-2008, 02:06 AM
நன்றி அறிஞரே.... (சரியாக நிதானித்தீர்கள்)
நன்றி மனோஜ்
நன்றி அக்னி

நன்றி பூ.. (காரண கவிதை அருமை)
நன்றி இதயம். (இந்தப் படம் கொஞ்சம் பொருந்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரே காரணம் இந்த படத்தை போட்டதற்கு. அவள் அந்த ரோஜாவை சூடிக்கொள்ளப்போகிற தருணம். அதற்காகவே இந்தப் படம்)

ஆதவா.... ஒவ்வொருமுறையும் உன் விமர்சனம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.. விமர்சனங்கள் கலைஞனை வளர்க்கும் எனபதில் சந்தேகமில்லை.. இதுபோன்ற விமர்சனங்கள் அவனை செதுக்கவும் செய்கின்றன.. உன் விமர்சனம் தொடரவேண்டும் என்பதே என் ஆவல்.

நன்றி ஆதவா.

அக்னி
11-04-2008, 03:45 PM
ஆதவா.... ஒவ்வொருமுறையும் உன் விமர்சனம் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.. விமர்சனங்கள் கலைஞனை வளர்க்கும் எனபதில் சந்தேகமில்லை.. இதுபோன்ற விமர்சனங்கள் அவனை செதுக்கவும் செய்கின்றன.. உன் விமர்சனம் தொடரவேண்டும் என்பதே என் ஆவல்.
ஆதவாவின் விமர்சனம் பார்த்து உண்மையிலேயே வியந்தேன். சின்னச்சின்ன விடயங்களையும் அவதானித்து பகுப்பாய்வு செய்யும் ஆதவாவின் திறன், தொடர்ந்தும் என்றும் மன்றத்தில் கிடைக்க, தற்போதுள்ள தனிப்பட்ட கால நெருக்குதல்கள் தீர்ந்து மன்றத்தில் பழைய ஆதவாவைக் காண காலம் கைகூட வேண்டும். மன்றத்தில் விளையும் கவிகளுக்கு ஆதவாவின் விமர்சனமும் பெரும் உரமே என்றால் மிகையில்லை.

சிவா.ஜி
11-04-2008, 07:32 PM
பெரிய பெரிய கவிஞர்களெல்லாம் என்னென்னவோ சொல்றீங்க எனக்கு எதுவும் விளங்கல

ஷீ-நிசி
12-04-2008, 01:42 AM
பெரிய பெரிய கவிஞர்களெல்லாம் என்னென்னவோ சொல்றீங்க எனக்கு எதுவும் விளங்கல

மிகப்பெரிய கவிஞர்களுக்கு சிறியவர்களின் பேச்சுக்கள் எளிதில் விளங்காது... :icon_b:

ஷீ-நிசி
12-04-2008, 02:30 AM
இதயம் சொன்னதுபோல, கவிதைக்கு மிகச்சரியாய் பொருந்தும்படி படம் இணைக்கப்பட்டுள்ளது.. ஆதவா கூறின "அவைகள்" என்பதற்கு பதிலாய்" "அவை" என்றும் பிழை சரிசெய்யபட்டுள்ளது.

நன்றி நண்பர்களே.. உங்களின் வெளிப்படையான விமர்சனங்களுக்கு.