PDA

View Full Version : காதலென்றும் தலைப்பிடலாமிதற்கு ! எம்.ரிஷான் ஷெரீப்,



shibly591
09-04-2008, 05:43 AM
நெருப்பு விழுங்கும் பறவையொன்றென்
நிழலிலேயே
உட்கார்ந்திருக்கிறது !

உங்கள் கனல்களை
அதன்மேல் கொட்டலாம்,
சாபங்களை அள்ளியெறியலாம் ;
அத்தனையையும் விழுங்கியது - நிலம்
அதிர அதிரச் சிரிக்கும் !

அதன் அருகாமை
வெப்பம் பரவியென் உடலசையுமெனில்
ஒருகணம் உற்றுப்பார்க்கும்,
விழிகளிரண்டும் எரிகற்களென எச்சரிக்கும்
நொடியில் நான் பொசுங்கிப்போவேன் !

சீண்டிப்பார்க்கலாம் - அதனை
சிரிக்கவைக்கவும் முயற்சிக்கலாம்,
தலைகோதித் தடவலாம்,
செல்லமாய்ச் சிறிது தட்டக்கூடச் செய்யலாம்;
அத்தனையையும்
மெதுவாய்ப் பார்த்து வாய்திறந்து
உங்களை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் !

நுனிவிரல் தீண்டி
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...

இதுவரையில் காதலிக்காதவர் பட்டியலில்
நீங்கள் இருப்பதாக
உறுதிபட உரக்கச் சொல்வேன் !

நெருப்பு விழுங்கும் பறவையது
தொடர்ந்தும் தன் சிறகினை உதறும் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

எனது நண்பரின் கவிதை இது...எனக்கு வெகுவாக பிடித்திருந்தது.நீங்களும் ரசியுங்கள்....

M.Rishan Shareef
15-01-2009, 07:11 AM
அன்பின் ஷிப்லி,

இக் கவிதையை தமிழ்மன்றத்தில் இட்டமைக்கு நன்றி நண்பரே !

அறிஞர்
15-01-2009, 01:08 PM
நெருப்பு விழுங்கும் பறவையொன்றென்
நிழலிலேயே
உட்கார்ந்திருக்கிறது ! ..
காதலை அனுபவிப்பவரின்.... பார்வையில் ஒரு கவிதை......
அருமை ரிஸான்

M.Rishan Shareef
16-01-2009, 06:05 AM
அன்பின் அறிஞர்,
//காதலை அனுபவிப்பவரின்.... பார்வையில் ஒரு கவிதை......
அருமை ரிஸான்//

கருத்துக்கு நன்றி நண்பரே !