PDA

View Full Version : தமிழருக்குத் திருப்பள்ளியெழுச்சி

நாகரா
09-04-2008, 03:48 AM
நினைப்பதற்குத் தமிழிடத்து எழுத்து வாங்கி
மனைதனிலும் மற்றிடத்தும் இனியதமிழ் பேசும்
மனிதரிவர் தமிழ்படித்து என்னபயன் என்று
இனியும்இழி சொல்கூறும் பாதகம் சாகட்டும்

தாயிடத்துப் பாசங்காட்டிப் பேசுதற்குத் தமிழ்வேண்டும்
சேயிடத்துப் பாசங்கொட்டிக் கொஞ்சுதற்குத் தமிழ்வேண்டும்
மனைவியிடம் நேசங்கூட்டிப் பழகுதற்குத் தமிழ்வேண்டும்
தனைமறந்து “அம்மா” எனஅழுதற்கும் தமிழ்வேண்டும்

எண்ணத்தைத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்ததமிழ்
கண்விழிக்குத் தனைக்காட்டி மனவிழி திறந்ததமிழ்
இதழ்களிலே மழலையாய் மகிழ்வுடன் தவழ்ந்ததமிழ்
பதங்களிலே எழுத்தாக விரலிருந்து விழுந்ததமிழ்

உனைப்பார்த்து உனைப்படித்து உனைப்பேசி உனைஎழுதி
தனைவளர்த்து மனிதரென்று பேரேற்று வாழுமிவர்
மதியிழந்து நன்றிகெடத் தூற்றுவதைக் கேள்தமிழே
நதிபிறந்த முகட்டைத்தான் மறந்தோடுவதைப் பார்தமிழே

தென்றலுன்னை வாடையென்று வருத்தமின்றிப் பேசுமிதழ்கள்
இன்றுங்கூட ஆடையாக உன்னைத்தான் உடுத்தவேணும்
தாய்மொழியைத் தகாமொழியெனத் தரங்கெட்டு எழுதும்விரல்கள்
தாய்உந்தன் எழுத்துமடியில் தான்என்றும் தவழவேணும்

தனித்திறன் இல்லா வடமொழி இயக்கம்
இனித்திடும் உன்குரல் மறந்திடும் மயக்கம்
பிறமொழி விரும்பி தம்மொழி எழுத்தின்
உறவுகள் மறத்தல் எம்மின உறக்கம்

இந்தஏச்சுகள் இதழ்வானில் இரவுகளின் உதயம்
சொந்தஎழுத்துகள் உதவாதெனல் தெள்ளறிவின் உறக்கம்
தேவனுக்கு ஏற்றதல்ல தெள்ளுதமிழ் என்பவர்கள்
கோயிலுக்குக் காவல்செலக கல்லறையாக்க யாம்வருவோம்

நோய்கொண்ட இவர்மனது தாய்மொழியைத் தூற்றுதய்யோ
தேய்ந்திட்ட இவர்மதியும் பிறமொழியைப் போற்றுதய்யோ
காய்தன்னைக் கனியென்று கருத்தழிந்துப் புகழ்வதாலே
வாய்த்தநல் இனிமையினை என்தமிழும் இழந்திடுமோ

அறமும் மறமும்நல் அறிவுடைக் காதலும்
புறமும் அகமுமாய்ச் செறிவுசேர் கவிதையாய்
வழங்கி அதன்வழி திறம்பட வாழ்ந்தஇனம்
பழமைப் புகழிது கனவாய்ப் போனதின்று

எழிலார்ந்த தமிழேநின் விழியோரம் கசிவதேனோ
மொழியமுது வாய்த்தநின் இதழிசையும் நின்றதேனோ
வீழ்ந்திருக்கும் உன்னினத்தார் இழிநிலையைக் கண்டுநீயும்
தாழ்தலுற்றுக் கலங்கிநின்றால் எமைத்தேற்றுவார் யார்தாயே

வரம்வேண்டி வருகின்றோம் உன்னிடத்துத் தமிழ்த்தாயே
சிரந்தாழ்ந்து வருத்தத்தில் குரலிழந்து விழிபொழிய
நீயேநின்றால் யாமெல்லாம் செல்வதெங்கு நிமிர்ந்திடுக்
தாயேஉந்தன் குரல்தன்னை எம்விரல்கள் எழுதவிடு

பழுதான மடமைகளை அழிப்பதெம் கடமையினி
உழுவோம் யாம்தமிழ் நிலத்துவயிர உளக்கலப்பை
கொண்டுபுது எழுச்சியினைப் பயிராக்கி எம்முயிரை
எண்ணத்துப் பாத்திகளில் நீராக்கிப் பாய்ச்சிடுவோம்

வித்துக்கள் உன்னிடத்து எழுத்தாகப் பெற்றேயாம்
சித்தத்தின் சத்தத்தில் சந்தப்பயிர் இயற்றிடுவோம்
சத்திபெற்ற வித்தகராய் வியனுலகில் உலவிடுவோம்
சத்தியமும் சமத்துவமும் பத்தியுடன் போற்றிடுவோம்

மொழிப்பற்று இல்லாரை எள்ளியாம் தூற்றிடுவோம்
அழிவற்ற தமிழிசைத்து அழியாமை எய்திடுவோம்
வழக்காறு இழந்துபோன வடமொழியே மந்திரமாய்
வழங்கிவரும் இழவுகட்கு இடமின்றிச் செய்திடுவோம்

எம்கவிப் பொழிலதனில் நற்றமிழ்நீ தென்றலாக
தெம்மாங்குச் சத்தமிட்டு வீசிடுக என்னாளும்
கருத்துமலர் வாசமது மனிதமன வண்டுபல
அருகிழுத்து இன்பமது நனிதரவே செய்திடுக

இனியுந்தன் பேரழகை எம்விரல்கள் தாமெழுத
பனியுருக்கும் சூரியனாய்க் கவிவானில் தோன்றிநீயும்
மனபூமியிலே பவனிவரும் இருளறுப்பாய் விடியுமந்த
கனலதனில் கயமைகளும் காரிருளின் கதியடையும்

பி.கு: 1996ல் வெளியான "விழிப்புத் தவங்கள்" என்ற என் கவிதைப் புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு கவிதை.

ஆதி
09-04-2008, 04:20 AM
உங்கள் கவியில் பரந்து விரிந்திருக்கும் ஆதங்கம் உண்மைதான் ஐயா, எத்தனையோ பேர் பேசக் கேட்டிருக்கிறேன் தமிழ் பேசவோ படிக்கவோ தெரியாததால் ஒன்றும் ஆகப்போவதில்லை.. சென்னையில் ஒரு சாலையோரக் கரும்பு சாறு விற்கும் கடையில் கரும்பு சாறு அருந்த சென்றேன், அந்தக் கரும்புக் கடைக்காரப் பையனிடம் திருக்குறள் அகிலனின் நாவல் இப்படி சிலப் புத்தகங்கள்.. பார்த்ததுமே வியப்பு விழிகளில் விரிந்தது, சாறு அருந்திவிட்டு குவளையை கீழ் வைக்க முயன்ற போது, வாசகம் ஒன்று "தமிழால் வளர்ந்தோம், தமிழை வளர்ப்போம்" எழுதி வைத்திருந்தான் அந்த கரும்பு சாறு பிழியும் வண்டியில்... இப்படி பிள்ளைகள் பிறந்த கொண்டிருக்கும் வரை நம் அன்னையின் புகழுக்கும் வளர்ச்சிக்கும் குறைவிருக்காது..

நாகரா
09-04-2008, 04:28 AM

உம் பின்னூட்டத்துக்கு நன்றி ஆதி
"தமிழால் வளர்ந்தோம், தமிழை வளர்ப்போம்"
தமிழன் ஒவ்வொருவனும் தன் இருதயத்தில் எழுத வேண்டிய வாசகம்.

சாலைஜெயராமன்
09-04-2008, 05:06 AM
இனியுந்தன் பேரழகை எம்விரல்கள் தாமெழுத
பனியுருக்கும் சூரியனாய்க் கவிவானில் தோன்றிநீயும்
மனபூமியிலே பவனிவரும் இருளறுப்பாய் விடியுமந்த
கனலதனில் கயமைகளும் காரிருளின் கதியடையும்

அன்னைத் தமிழைத் தவிர எந்த மொழிக்கு இப்படியொரு ஆளுமை உண்டு, இருளின் வழியை/வலியை வெருண்டோட வைக்கும் வல்லமை நம் மொழிக்குத்தானே உண்டு. தெய்வீகம் நாடுவோர் தமிழறிந்தால் மட்டுமே சிறப்பர். ஏனெனில் இருள் போக்கும் பல பொக்கிஷங்கள் இங்குதான் உண்டு.

திருமூலரும், புசுண்டரும். இன்னும் கோடானு கோடி தவச் செம்மல்கள் இயம்பிய இன் மொழி நம் தமிழில்தானே.

பொருளுக்கு ஆங்கிலம்,

அருளுக்கு அன்னைத் தமிழைவிட்டால் நாதியில்லை.

அருமையான சொற்பத சந்தங்களுடன் அமைக்கப்பட்ட ஆழமான கருத்துக்களைத் தந்த திருமிகு நாகரா நீங்கள் போற்றுதற்குரியவர்.

நாகரா
09-04-2008, 05:12 AM

உமது பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.

ஆதி
09-04-2008, 06:43 AM
அன்னைத் தமிழைத் தவிர எந்த மொழிக்கு இப்படியொரு ஆளுமை உண்டு, இருளின் வழியை/வலியை வெருண்டோட வைக்கும் வல்லமை நம் மொழிக்குத்தானே உண்டு. தெய்வீகம் நாடுவோர் தமிழறிந்தால் மட்டுமே சிறப்பர். ஏனெனில் இருள் போக்கும் பல பொக்கிஷங்கள் இங்குதான் உண்டு.

பொருளுக்கு ஆங்கிலம்,

அருளுக்கு அன்னைத் தமிழைவிட்டால் நாதியில்லை.

உண்மையானக் கருத்து ஐயா, இயற்கையிலேயே நம் மொழி ஞானமொழி..

உயிர் + பெய் = உயிர்மெய் என்னும் இலக்கணம் நமக்கும் பொருந்தும்..

ஆங்கிலத்தில் "I am not feeling well" என்று சொல்வதை

தமிழில் " என் உடம்புக்கு சரி இல்லை" என்றுதான் சொல்லுவோம்..

நான் என்பது வேறு உடல் என்பது வேறு என்னும் மறைமுகக் கருத்தை காண்க.. இதுயே தாய் தமிழின் சிறப்பு ஞானம் இயற்கையாகவே இழைக்கப்பட்ட மொழி நம் மொழி..

செல்வா
09-04-2008, 10:04 AM
முதலில் அண்ணா என்னை மன்னிக்க வேண்டும் திருப்பள்ளியெழுச்சி என தலைப்பைப் பார்த்ததும் ஆன்மீகக் கவிதை என நினைத்து பாராமல் விட்டுவிட்டேன். ஆனால் படித்துப் பார்த்ததும் தான் தமிழர்களின் பள்ளிஎழுச்சி பற்றியது என்பது தெரிந்து என்னை நானே நொந்துகொண்டேன்.
நாகரா அண்ணாவின் தமிழுக்கு எப்போதும் அடிமை நான். இந்த கவிதை அதன் கருத்துக்கும் அடிமையாக்கி விட்டது. உண்மைதான் அண்ணா... ஊரில் ஒரு வீட்டிற்கு சென்றிருந்த போது அங்கிருந்த சிறுவனிடம் தமிழில் பேசினால் ஒவ்வொரு வார்த்தைக்கும் அப்படின்னா என்ன? என்று கேட்க அவன் பெற்றோர் ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தனர். மிகவும் நொந்து போன விடயம் என்ன வென்றால் "தலை பற்றி பேச்சு வந்தது.... அவன் தலை என்றால் என்ன என்று கேட்க head என்று விளக்கம் கொடுத்தார்கள்" வெறுத்துப்போய் நான் போய்ட்டு அப்புறமா வரேன்னு சொல்லி வந்து விட்டேன்

நாகரா
09-04-2008, 10:27 AM

உம் பின்னூட்டத்துக்கு நன்றி செல்வா. "தமிழருக்குத் திருப்பள்ளியெழுச்சி" என்று தலைப்பை மாற்றி விட்டேன்

Keelai Naadaan
12-04-2008, 03:55 PM
ஆம். தமிழால் வளர்ந்தோம். தமிழை காப்போம்.
இப்படியொரு திருப்பள்ளி எழுச்சியை தான் விரும்பினேன்.
அழகான வெண்பா வடிவ திருப்பள்ளி எழுச்சிக்கு மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த தலைமுறை நம் தமிழின் சுவையை எந்த அளவுக்கு பருகுவார்கள் என்பது கேள்விக்குறியே.
என் பிள்ளைகளை அம்மா, அப்பா என்றழைக்கத்தான் பழக்கபடுத்தியிருக்கிறேன். அந்த வார்த்தையின் சுவையே தனி தான்.
........................................................................................................

தாலாட்டு பாடல் சேகரிக்கும் என் முயற்சிக்கு ஆதரவும், கருத்தும் தாருங்கள். நன்றி. இங்கே திரி தாலாட்டு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15186)

நாகரா
13-04-2008, 02:33 AM
உம் பின்னூட்டத்துக்கு நன்றி கீழை நாடன்.

அனுராகவன்
13-04-2008, 05:05 AM
நன்றி நண்பரே!!
திருபள்ளிகள் எழுச்சி பெற வாழ்த்துக்கள்..
தொடர்ந்து உங்கள் பங்கு பெருங்கள்..
என் நன்றி!!!

நாகரா
13-04-2008, 05:17 AM
உம் உற்சாக வரிகளுக்கு நன்றி அனு