PDA

View Full Version : ஒலியற்ற ஓசைகள்-1



indiran
08-04-2008, 04:52 AM
சுமப்பதே வாழ்வாகிப் போன பாலைவன
ஒட்டகங்களுக்கு சுகமும் ஒன்றுதான் வாட்டும்
துக்கமும் ஒன்றுதான்.
பாலையின் முட்புதர்கள் எங்கள் பசியைத்
தீர்க்கும் போது பழுத்த பழங்களைப்
பற்றி என்ன கவலை?
முட்களைச் சுவைத்து சுமப்பதே
வாழ்வானாலும் நேசமும், , பாசமும், நட்பும்,
காதலும் பின்னிய இதயம்
எங்களுக்கும் உண்டு .
அதன் ஒவ்வொரு துடிப்பிலும் அலையலையாய்
எழும் கீதங்களை நீங்கள் உணர முடியாது.
சுமப்பதையே சுகமாக்கிக் கொண்டவர்களின்
சுகமும், துக்கமும், கண்ணீரும், காதலும்
சுமைகளின் பாரத்தில் நீர்த்துப் போவதால்
சுமப்பதே வாழ்வாகிப் போன
எங்கள் கவிதைகள்
ஒலியற்ற ஓசைகள்.

RRaja
08-04-2008, 06:13 AM
வெளிநாடுவாழ் இந்தியர்களின் நிலையை உணர்த்துவதாக இருக்கிறது கவிதை. சரிங்களா இந்திரன்?

அமரன்
08-04-2008, 08:04 AM
குறியீடுகளைப் பயன்படுத்தி, புலம்பெயர்ந்த தாயகப்பறவைகளின் புலம்பல் க(வி)தை...

பறவைகளின் ஓயாத ஓசை பெரும்பாலும் அடர்த்தியாவது உதயத்தின் போதும் அஸ்தமனத்தின் போதும்.. உதயத்தில் புள்ளினங்களின் கீதமே, பலருக்கு விடியலை பறைசாற்றும்.. அந்தியில் கதைகள் பேசியபடி கூடு திரும்பும் போது பறவைகளும் மகிழும்.. கூடும் நிறையும்..

சத்தமின்றி நடக்கும் நவீனயுக யுத்தத்தில் இருசாரார் வெற்றியே பெரும்பான்மை. உணர்வு பூர்வமாக உறவுகள் அறுவதும் மிகசொற்பமே.

சுகந்தப்ரீதன்
15-04-2008, 10:02 AM
இன்றோ...
எங்கள் கவிதைகள்
ஒலியற்ற ஓசைகளாக..
நாளையாவது அவை மாறுமா
சத்தமற்ற சங்கீதமாகவேனும்...?!

ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடன்
நகர்ந்துக்கொண்டே இருக்கிறது
நாடுதாண்டியவர்களின் நாழிகைகள்..!!

அடுத்த ஓசையை கேட்க ஆவலுடன் நான்...
தொடருங்கள் இந்திரன்..!!

ஓவியன்
17-04-2008, 06:34 AM
சுமப்பது சொந்தங்களின்
சுகத்திற்கென்பதால்
சுகமன்றோ
கனக்கும் சுமைகளும்...