PDA

View Full Version : புதிய பூக்கள் மலரட்டும்!lenram80
07-04-2008, 06:28 PM
(தேனீ - தன் வரலாறு கூறுதல்)

முழு மதி நிலவில் முழுமையாக நனைந்ததுண்டா?
கார்முகில் மழையில் கானம் பாடி குளித்ததுண்டா?
தென்மாங்குத் தென்றலை தேகத்தில் பிடித்ததுண்டா?
ஊஞ்சலே இருப்பிடமாய் உறங்கும் போதும் ஆடியதுண்டா?

ஆம்!
அந்தரத்தில் தொங்கும் ஆச்சரியம் நாங்கள்!
சிறகுகளை கொண்டே சங்கீதம் பாடும் சிம்பொனி நாங்கள்!

இசை அமைப்பாளர்கள் தேவை இல்லை!
பக்கத்தில் அமரும் பறவை இனங்களே போதும்!

இசையில் நனைய மார்கழி தேவை இல்லை!
மாதம் பனிரெண்டும் மார்கழி தான்!

எங்களின் இசைக்கு... பறவைகள் பாட
இலைகள் ஆட, கிளைகள் கைதட்ட
தினமும் எங்களுக்குத் திருவிழா தான்!

இதோ எங்கள் வாழ்க்கை முறை!
எங்கள் கருவிழி விழிக்க இரு வழி கொண்டோம்!
சூரியன் கண் திறப்பதும்! பறவைகள் அலகு திறப்பதும்!
முன்னது விழிக்கு! பின்னது செவிக்கு!
தூக்கம் கழட்டி புது பகல் உடைவோம்!

பூக்களின் தேடலும்,
பகல் முழுக்க பாடலும் - தான்
எங்களின் குலத் தொழில்!

நினைத்த பூவை தொடுவோம்!
அவை எங்களுக்காய் பூத்த பூக்கள்!

பூக்கள்!
எஙகளின் சத்துணவுக் கூடம்!
எங்களின் அரட்டை அறை!
எங்கள் கனவுகளின் ஆராய்ச்சி மையம்!
எங்களின் திறந்த வெளிப்பல்கலை கழகம்!
சுருக்கமாக,
எங்களுக்கு உலகமே அது தான்!

காலை வந்ததும்
அன்று புதிதாய் பூத்த பூக்களுக்காய் வாழ்த்து பாடலோடு
எங்கள் வேலை ஆரம்பிப்போம்!
அதன் காது மடல்களில் முத்த நாதம் மீட்டுவோம்!
மது உண்டு மதி கிறங்கி மயங்குவோம்!
மகரந்தப் படுக்கையில் மதியம் உறங்குவோம்!
மாலை நேரம் அன்றோடு வாடும் மலர்களுக்காய் இரங்கல் கூட்டதோடு
எங்கள் வீடு திரும்புவோம்!

பூக்களுக்கு,
வானிலை முன்னறிப்பு செய்யும் வானொலி நாங்கள் தான்!
காதலுக்கு தூது செல்லும் காதல் பரப்பிகள் நாங்கள் தான்!
அவைகளின் இலக்கியங்களில் "தேனீ விடு தூது" தான்
அதிகம் விற்கப்பட்ட புத்தகம்!

எங்களைப் பார்த்து பூக்கள் வெட்கப்பட
அவைகளைப் பார்த்து நாங்கள் கூச்சப்பட
மகரந்த சேர்க்கை* செய்வது தான்
எங்களை சிலிர்க்கச் செய்யும் செய்கை!

ஈ தானே என்று பூக்கள் எங்களை வெறுப்பதில்லை!
பூ - என்று தலைக்கணம் அவைகளுக்கில்லை!
வர்க்க வேறுபாடு இல்லாமல் சொர்க்க வாழ்க்கையும்
சச்சரவு இல்லாத சமத்துவ வாழ்க்கையும்
எங்கள் குடியரசின் கொள்கைகள்!

அடுத்த வகை பூக்களைப் பற்றி
இந்த பூக்களிடம் வசை பாடுவோம்!
பக்கத்தில் யாராவது "மனித பெண்" வந்தால்,
"இவர்கள் உங்களை விட அழகு!" என்போம்!
அவைகள் சிரிக்கும்!
"வாசமே இல்லாத, நீள உருவம் கொண்ட
முடி உடல் கொண்ட இவர்களுடனா
எங்களை ஒப்பிடுவது?
மதி கெட்ட தேனீயே!
நாங்கள் பொறாமை கொள்ளுவது
ஒளி முக நிலவை பார்த்து மட்டும் தான்"!

மனிதர்களை நாங்கள் இப்படி ஆதரித்தாலும்
எங்களின் முழுமுதற் எதிரி அவர்கள் தான்!
எங்களை கொலை கொள்ளை செய்யும் கொடியவர்கள்!

சரி! விடுங்கள்!
எங்களின் சோகக் கதை எதற்கு இங்கு?
அதோ புதிய பூக்கள் மலருது அங்கு!
வாழ்த்துப் பாடல் சங்கென முழங்கு!
இதோ என்னுடைய பங்கு!
"ஓஹோஹோ....."

-------

*மகரந்த சேர்க்கை - பூக்கள் கருவுறுதலின் தாவரவியல் பெயர். சூலகத்தில் மகரந்தங்களைச் சேர்ப்பதில் வண்டு மற்றும் ஈ இனம் பெரும்பங்கு வகிக்கிறது.

நாகரா
08-04-2008, 04:31 AM
கவிதை அருமை லெனின். வாழ்த்துக்கள்


ஈ தானே என்று பூக்கள் எங்களை வெறுப்பதில்லை!
பூ - என்று தலைக்கணம் அவைகளுக்கில்லை!
வர்க்க வேறுபாடு இல்லாமல் சொர்க்க வாழ்க்கையும்
சச்சரவு இல்லாத சமத்துவ வாழ்க்கையும்
எங்கள் குடியரசின் கொள்கைகள்!


நான் மிகவும் ரசித்த வரிகள், தேனீக்களின் இச்சமத்துவ போதனைக்கு மனிதம் செவி மடுத்து ஒருமையுணர்வில் ஓங்க வேண்டும். நன்றி.

kavitha
08-04-2008, 12:31 PM
பாடல் நன்றாக இருக்கிறது.


அடுத்த வகை பூக்களைப் பற்றிஇந்த பூக்களிடம் வசை பாடுவோம்!
பக்கத்தில் யாராவது "மனித பெண்" வந்தால்,
"இவர்கள் உங்களை விட அழகு!" என்போம்!
அவைகள் சிரிக்கும்!
"வாசமே இல்லாத, நீள உருவம் கொண்ட
முடி உடல் கொண்ட இவர்களுடனா
எங்களை ஒப்பிடுவது?
ஈவ் டீசிங் என்பது இதுதானோ?

ஷீ-நிசி
08-04-2008, 05:23 PM
வர்க்க வேறுபாடு இல்லாமல் சொர்க்க வாழ்க்கையும்
மிக அழகிய எளிதில் சிக்காத வார்த்தை கோர்வைகள்..

வாழ்த்துக்கள் லெனின்

சாலைஜெயராமன்
08-04-2008, 07:50 PM
எங்கள் கருவிழி விழிக்க இரு வழி கொண்டோம்!
சூரியன் கண் திறப்பதும்! பறவைகள் அலகு திறப்பதும்!
முன்னது விழிக்கு! பின்னது செவிக்கு!
தூக்கம் கழட்டி புது பகல் உடைவோம்!

நான் ரசித்த வரிகள் இவை. சமத்துவ சித்தாந்தத்தை சரளமாக வடித்துள்ளீர்கள். கருத்துச் செறிவுள்ள சீரிய வரிகள்.

புதிய பூவிது பூத்தது.

நல்ல தமிழ் கேட்டோம், படித்தோம்

lenram80
09-04-2008, 01:36 AM
இந்த தேன் கூட்டில் தேன் குடித்த அன்பு நெஞ்சங்கள் நாகரா, கவிதா, ஷி-நிசி - நன்றி