PDA

View Full Version : எனக்கே எனக்கான வலிகள்



shibly591
05-04-2008, 03:11 AM
சடுதியாக என்
முகம் மோதிப்போகும்
எவருக்குமே
எனக்குள் உறைந்து கிடக்கும்
வலிகளின் ஆணிவேர் தெரியப்போவதில்லை

நசுங்கிப்போன
எதிர்காலம் மீதான கனவுகளை
பசியடங்கிய பின்னும்
தின்று தீர்த்ததே வாழ்க்கை?

வினாடி தோறம்
சிலுவையில் அறையப்படும்
என் உயிரில்
எரிமலைப்பிழம்புகளின் மாநாடு

உங்கள் ஒரு சொட்டுக்கருணைக்காக
என் மனச்சிதைவுகளின்
காட்சிப்படிமங்களை
விளம்பரம் செய்வது
அர்த்தமற்ற ஆலிங்கனம்..

எரிந்து
சிதைந்து
வெந்து
கருகி
துகள் துகளாய்
தூர்ந்து போனதே
எனது சுயம்

விழுங்கப்படும் உரிமைகளும்
சுதந்திரத்தின் மீதான
ஆதிக்க அழுத்தங்களும்
எனக்குள் வெறியேற்றும்
பிரயளத்தை கொஞ்சம் கொஞ்சமாய்
விதைத்தக் கொண்டிருக்கிறது

விரைவில் வெகுண்டெழப்போகும்
எனது ஆழ்கடல் ஏகாந்தம்
மனம் தின்னும் வலிகளைப்போலவே
யாராலும்
அடையாளம் காண முடியாதவை

நிறமற்ற கனவுகள்
மிக மிகப்பயங்கரங்களை
வலிகளின் புதைமணலில்
திணித்துக்கொண்டிருப்பது
முற்றுப்புள்ளியின் பக்கத்தில்தான்...

விரைவில்
ஒட்டுமொத்த வலிகளைத்திரட்டி
உங்கள் மீது
எறிகணையாய் எறியப்போகிறேன்..

பின்
மெல்ல மெல்ல நீங்களும்
உணரத்தொடங்குவீர்கள்
எனக்கே எனக்கான
வலிகளின் உள்ளார்ந்தங்களை..

அப்போது
வலிகளற்ற வானவெளியில்
எனது சிறகுகளுக்கு
களைப்பேயிராது....!

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை

அமரன்
05-04-2008, 08:03 AM
அன்பரே...
தொடர் கவிதையில் பதிந்தால், உங்களுக்குக்கான வலிகளும் தொடராகிவிடும். :)

இதுபோன்ற தனிக்கவிதைகள் புதியகவிதைகள், பாடல்கள் பகுதியில் பதியவேண்டியவை..

தொடர்கவிதை பகுதியில் எவ்வகையான கவிதைகள் இடம்பிடித்துள்ளன என்பதை அவதானித்துப் பாருங்கள்.

பென்ஸ்
05-04-2008, 09:07 AM
நல்ல நடிப்பு, நல்ல ஒளிப்பதிவு, காமிரா, வசனம், பெரிய நடிகர்கள்
என்று இருந்தாலும் பல திரைபடங்களை பார்த்து விட்டு வெளியே வரும் போது
கதை கரு நன்றாக இல்லை என்றால் ஒரு நிறைவு இல்லாத உணர்வு இருக்கும்....
அதே போல் இந்த கவிதையை உணர்கிறேன் சிப்லி....

நல்ல எழுத்தாளர், வார்த்தைகள் விளையாடுகின்றன...
அருமையான வடிவமைப்பு என்ற பாராட்டுகள் வரும்போதும் கவிதையின் கரு....
சமுதாயத்தின் மீது வெறுப்பு கொண்டிருக்கும் ஒரு மனிதனின் உணர்வுகள்....

அந்த உணர்வுகளை அப்படியே கொடுத்த உங்களுக்கு பாராட்டுகள் கொடுத்தாலும்....
அவன் உணர்வுகளை நியாயபடுத்துவது போல் இருக்கிறதே.....

நல்ல கவிதை.. திருந்த வேண்டிய கரு.

shibly591
05-04-2008, 09:24 AM
உங்கள் விமர்சனத்துக்கு நன்றிகள்...

"விழுங்கப்படும் உரிமைகளும்
சுதந்திரத்தின் மீதான
ஆதிக்க அழுத்தங்களும்
எனக்குள் வெறியேற்றும்
பிரயளத்தை கொஞ்சம் கொஞ்சமாய்
விதைத்தக் கொண்டிருக்கிறது

விரைவில் வெகுண்டெழப்போகும்
எனது ஆழ்கடல் ஏகாந்தம்
மனம் தின்னும் வலிகளைப்போலவே
யாராலும்
அடையாளம் காண முடியாதவை"

இது உரிமைகள் மறுக்கப்படும் ஒருவனின் மனப்பதிவு.சொந்த நாட்டில் அகதிகளாய் வாழும் ஆயிரம் உறவுகளின் வலிகள் அவனை அடக்கியாள்பவர்களுக்கு புரிவதில்லை.விரக்தியின் விளிம்பில் அவனால் இப்படித்தானே நண்பரே பாட முடியும்???(நான் இலங்கை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்)...

shibly591
05-04-2008, 01:52 PM
விமர்சனங்கட்கு நன்றி