PDA

View Full Version : அழகு!!!அனுராகவன்
05-04-2008, 12:57 AM
அழகு

பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர் தாயகத்திற்குச் சென்ற புஷ்பாவிற்கு எல்லாமே புதிது போலக் காணப்பட்டது. பலாலியிலிருந்து காரில் ஊருக்குச் செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. பாதைகளெல்லாம் பள்ளமும் திட்டியுமாக இருந்ததால் நீண்ட நேரம் எடுத்தது மட்டுமல்லாமல் உடம்பு எல்லாம் நோவு எடுத்தது.

வீட்டிற்குப் போனவுடன் நன்றாகத் தூங்கவேண்டுமென நினைத்துச் சென்றவளுக்கு அங்கே போனதும் உறவுகளை எல்லாம் கண்டபோது வந்த நித்திரை எங்கே போனதென்று தெரியாமல் சந்தோஷப்பட்டாள். நீண்ட காலமாய்க் காணாமலிருந்துவிட்டுக் கண்ட சந்தோஷத்தில் தாய் அவளைக்கட்டிக்கொண்டு அழுதாள்.

இரவு படுக்கைகக்குப் போய் படுத்துக்கொண்டபோது அம்மாவும் அருகில் வந்து படுத்துக்கொண்டாள். புஷ்பாவின் கணவன் அவளுடன் சேர்ந்து வராததது குறித்து அம்மா கவலைப்பட்டாள். பாரிசில் சொந்தக்கடை வைத்திருப்பதால் அவரால் வரமுடியாமல் போய்விட்டதாகப் புஷ்பா சமாதானம் கூறினாள். ஊர்ப் புதினங்கள் பற்றி விசாரித்தபோது பக்கத்துவீட்டுச் சாரதாவைப் பற்றிக் கேட்டபோது புஷ்பாவின் தாயார் மௌனமானாள். ஏன் அந்த மௌனம் எனப் புஷ்பா கேட்டபோது சாரதா இன்னமும் திருமணம் செய்யவில்லையெனவும் திருமணம் செய்யமாட்டேன் என அடம்பிடிக்கிறாள் எனவும் புஷ்பாவின் அம்மா கூறினாள்.

புஷ்பாவின் எண்ணமெல்லாம் கடந்த காலத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன..... புஷ்பாவும் பக்கத்து வீட்டுச் சாரதாவும் சிறிய வயதிலிருந்து ஒன்றாகவே படித்தவர்கள். பதினாறு வயதுப் பருவம் வந்தபோது சாரதாவைப்போல் அழகியொருத்தி அந்த ஊருக்குள்ளேயே இல்லையென்றுதான் கூறவேண்டும். சிவந்த மேனியும் நீண்ட கருங்குழலும் நீலக் கண்களும் கொண்ட சாரதாவின் அழகை ரசிக்காதவர்களே கிடையாது. புஷ்பாவும் சாரதாவும் நல்ல நண்பிகளாக இருந்தாலும் அழகைப் பொறுத்தவரையில் புஷ்பா சாரதாவுக்கு எதிர்மாறானவள். புஷ்பா அதிகம் கறுத்த நிறமும் உயரத்தில் குறைந்தவளாகவும் இருந்தாள். இரண்டு பேரும் பாடசாலைக்குப் போகிற வேளைகளில் சாரதாவின் அழகில் மற்றவர்களின் கண் பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் பக்கத்தில் புஷ்பா போவதாக எத்தனையோ வாலிபர்கள் கிண்டல் செய்த சம்பவங்களும் நிறைய நடைபெற்றன. அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் புஷ்பா தான் கறுப்பாகவும் அசிங்கமாகவும் பிறந்துவிட்டதற்காகத் தன்னைத்தானே நொந்துகொண்டிருக்கிறாள்.
பாடசாலைப் படிப்புக்களை முடித்துக்கொண்ட இருவருமே சில மாதங்களாக வேலை எதுவும் கிடைக்காத காரணத்தினால் பத்திரிகைகளில் வருகின்ற வேலை வாய்ப்புக்களுக்கெல்லாம் விண்ணப்பம் செய்தார்கள். கொழும்பிலுள்ள நிறுவனம் ஒன்றில் இருவருக்கும் ஒன்றாகவே நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு வந்தது. இருவரும் ஒன்றாகவே கொழும்பிற்குச் சென்றபோது ஓமந்தை இராணுவ முகாமில் பஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எல்லோருடைய அடையாள அட்டைகளும் பரிசோதனை செய்யப்பட்டு எல்லோரையும் பஸ்ஸில் ஏறும்படி கூறினார்கள். சாரதாவை மாத்திரம் விசாரணைக்காக மறித்து வைத்தார்கள். புஷ்பாவும் அவர்களுடன் விசாரணை முடியும்வரை நிற்கப்போவதாகக் கூறியும் இராணுவம் அதனை அனுமதிக்கவில்லை. சாரதாவை மாத்திரம் விட்டுவிட்டு அந்த பஸ் புறப்பட்டது. இராணுவ முகாமில் சாரதாவை மாத்திரம் மறித்து வைத்ததற்கு அவளின் அழகுதான் காரணம் என பஸ்ஸிற்குள் இருந்தவர்கள் முணுமுணுத்தது புஷ்பாவின் காதுகளில் விழுந்தது. தான் கறுப்பாகவும் அசிங்கமாகவும் பிறந்ததையிட்டு அப்போதுதான் புஷ்பா முதல் முதலாகக கடவுளுக்கு நன்றி செலுத்தினாள். சாரதாவுக்கு நடந்ததைத் தாங்கமுடியாமல் இருந்ததால் புஷ்பா கொழும்பிற்குத் தொடர்ந்து செல்ல மனமில்லாமல் பாதி வழியிலேயே ஊருக்குத் திரும்பிச் சென்றாள்.

புஷ்பா ஊருக்குப் போய் விபரம் கூறியபோது சாரதாவின் வீட்டிலுள்ளவர்கள் பரபரத்தார்கள். எத்தனையோ முயற்சிகளின் பின்னர் சுமார் மூன்று மாதங்களின் பின் சாரதாவை எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில் பெரும் பணம் செலவு செய்து வீட்டிற்குக் கொண்டுவந்தார்கள். அவள் பைத்தியம் பிடித்தவள்போல இருந்தாள். அவளின் கோலமே மாறிப் போயிருந்தது. நீண்ட தலைமுடியெல்லாம் கட்டையாக ஒழுங்கில்லாமல் வெட்டப்பட்டிருந்தது. யாரையுமே தான் பார்க்க விரும்பவில்லையெனவும் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவேண்டாமெனவும் மறுத்துவிட்டாள். ஒரு சில வருடங்களுக்குப் பின்னர் சாரதாவின் சகோதரங்கள் அவளை ஒரு மாதிரியாக வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவருக்குத் திருமணம் செய்துகொடுப்பதற்கு அவளைச் சம்மதிக்க வைத்தார்கள். இங்கிலாந்திலிருந்து வந்த மாப்பிள்ளை ஒருவர் அவளை வந்து பார்த்துவிட்டுச் சம்மதம் தெரிவித்துவிட்டுப் போனார். இரண்டு நாட்களின் பின்னர் மாப்பிள்ளையின் அப்பா வந்து மூன்று மாதங்களாக இராணுவ முகாமிலிருந்த சாரதாவைத் தன் பிள்ளைக்குக் கட்டிக்கொடுக்க மாட்டேன் எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அதற்குள் ஊரிலுள்ள யாரோ சாரதாவைப் பற்றி மாப்பிள்ளை வீட்டாரிடம் பற்றி வைத்திருக்கிறார்கள். அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் எனச் சாரதா திடமாகக் கூறிவிட்டாள்.
சில நாட்களின் பின்னர் பிரான்சிலிருந்து விடுமுறைக்கு வந்த மனிதர் ஒருவர் தனது மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டதாகவும் தான் இரண்டாவது தடவையாகத் திருமணம் செய்ய விரும்புவதாகவும் தரகர் ஒருவரிடம் கூறினார். புஷ்பாவின் வீட்டிற்கு வந்து தகவல் கூறிய தரகரின் பேச்சிற்கு புஷ்பாவின் பெற்றோர் உட்பட புஷ்பாவும் சம்மதித்து அவருக்கு இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்படச் சம்மதித்தாள். புஷ்பாவின் கறுப்பு நிறத்தைப் பற்றியோ அழகுக் குறைவைப் பற்றியோ தான் கவலைப்படவில்லையெனவும் தனக்குத் தேவiயானதெல்லாம் நல்லதொரு மனத்துணைதான் எனவும் அந்த மனிதர் கூறியிருந்தது புஷ்பாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் இருக்கின்ற பணத்திற்கு எத்தனையோ அழகான பெண்களைத் திருமணம் செய்திருக்கமுடியும். அப்படியிருந்தும் தன்னை மணக்க முன்வந்த அந்த மனிதரின் பண்பை புஷ்பா மிகவும் நேசித்தாள். சில நாட்களில் அவரின் ஸ்பொன்சர் அலுவல் ப10ர்த்தியாகிப் புஷ்பா பாரிசுக்குப் போனாள். அவர் புஷ்பாவை மிகவும் நேசித்தார். முதல் மனைவியின் இழப்பால் குடிக்க ஆரம்பித்திருந்த அவர் புஷ்பாவின் சொல்லைக் கேட்டு அடியோடு குடியை விட்டுவிட்டார். புஷ்பாவின் உடல் அழகைவிட அவளின் மன அழகை மிகவும் நேசிப்பதாகக் கூறினார். புஷ்பாவும் அவரையும் அவரின் முதல் தாரத்துப் பிள்ளைகளையும் மிகவும் நேசித்தாள். பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்னர் அம்மாவைப் பார்த்துவிட்டு வரும்படி கணவனின் வற்புறுத்தலினால் தற்போதுதான் முதல் தடவையாகத் தாயகத்துக்கு வந்திருக்கிறாள் புஷ்பா.

நினைவுகளில் மூழ்கியிருந்த புஷ்பாவை அவளின் தாயார் தட்டியெழுப்பினாள். சாரதாவை நினைத்தபோது புஷ்பாவிற்குத் தாங்கமுடியாத கவலையாக இருந்தது. ஊர் முழுவதும் பார்த்து வியந்த அழகி இன்று நாட்டைக் காக்கவேண்டிய ஓநாய்களுக்குத் தன் அழகைப் பறிக்கொடுத்துவிட்டு இப்படி ஆகிவிட்டாளே. அதுதான் போகட்டுமென்றால் சாரதாவை மணப்பதற்காக லண்டனிலிருந்து வந்த சம்பந்தத்தைக்கூடச் சில ஓநாய்கள் குழப்பிவிட்டனவே என நினைத்தபோது புஷ்பாவிற்குத் தொண்டையை அடைத்துக்கொண்டது.

படுக்கைக்குப் பக்கத்தில் செம்பிலிருந்த தண்:ணீரை மடக்கு மடக்கென்று குடித்துவிட்டு நுளம்பிகளின் சத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகப் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு படுத்தாள் புஷ்பா

மலர்
06-04-2008, 06:06 AM
அன்பான அனுக்கா........!!
அருமையான கதையை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றிகள்....
சிறிய விண்ணப்பம்..
பிற தளங்களில் இருந்து எடுத்து நம் மன்றத்தில் பகிரும் போது
அத்தகைய தளங்களுக்கு நன்றி சொல்லிவிடுங்கள்...

மனோஜ்
07-05-2008, 09:28 AM
அழகு ஆபத்து என்பதை கதை அழகாய் குறிப்பிடுகிறது
பகிந்தமைக்கு நன்றி அனு அக்கா

arun
07-05-2008, 06:02 PM
அழகு புறத்தில் அல்ல அகத்தில் என்று இந்த கதை உணர்த்தி விட்டது நேர்த்தியாக படைத்தமைக்கு பாராட்டுக்கள்