PDA

View Full Version : எனக்குள் நீ! - மாலைமதி 30-06-2003



க.கமலக்கண்ணன்
04-04-2008, 05:14 AM
எனக்குள் நீ! - மாலைமதி 30-06-2003

1
கதவைத் தட்டினாள் கபிலா.

திறந்தது. மங்கை எட்டிப் பார்த்தாள். முகம் மாறியது.

‘‘இங்க எதுக்காக வந்தே?’’ என்றாள் வெறுப்புடன்.

‘‘உங்க கூட வாழ வந்திருக்கேன் அத்தை! நான் உள்ளே வரலாமா?’’ என்றாள் கபிலா.

‘‘ஏய்... எங்க கூட வாழ நீ யாரு?’’

‘‘உங்களுக்கு மருமகளாகியிருக்க வேண்டியவ. விதி விலகிப் போச்சு. என்னையும், உங்களையும் காப்பாத்தணும்னு முடிவு செய்தேன். வந்தேன். அனுமதியுங்க.’’ என்றாள். கண்கள் மினுங்கியது. குரல் அடைத்தது.

குருவரதன் எழுந்து வந்தார். மங்கையின்முன் நின்றபடி, ‘‘இதோ, பார்! எங்க மகனை மயக்கினே. அவனை இப்போ எங்களுக்கில்லாம செய்திட்டே. இன்னும் என்ன செய்யணும்? எங்களையும் சேர்த்து சீக்கிரம் கொன்னுடு.’’ என்று கரம் குவித்தார்.

‘‘மாமா!’’ என அதிர்ந்தாள் கபிலா.

‘‘யாருடி மாமா?’’

‘‘அப்படிக் கூப்பிட எனக்கு உரிமை இருக்கு. உங்களுக்கு உதவவே நான் வந்திருக்கேன். நம்புங்க.’’

‘‘பிள்ளைய பிரிச்சிட்டு; பெத்தவங்களைப் காப்பாத்தறேங்கறியா? போ, வெளியே...’’ அவளது பெட்டியைத் தூக்கி வெளியே எறிந்தார். லொக் லொக கென இருமினார்.

பெட்டி திறந்து கொண்டது. அவள் உடமைகளின் நடுவே, ஒரு போட்டோ!

அதை எடுத்தாள்.

‘மது! உன்பெற்றோர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை மது... நான் என்ன செய்வேன்?’ என கண்ணீருடன் புலம்பினாள்.

நம்பிக்கையை இழக்கவில்லை அவள்.

எழுந்து மங்கை _ குருவரதன் இருவரையும் அணுகினாள். ‘‘எந்த ஜென்மத்திலும் எனக்கு மாமா _ அத்தை நீங்கள்தான். என்னை ஆசீர்வதியுங்கள்’’ என்று நமஸ்கரித்தாள்.

சட்டென விலகிக் கொண்டனர்.

‘‘அப்படியரு நினைப்பில் மிதக்காதே. உன்னை சொந்தம் கொண்டால் ஊர் சிரிக்கும். உன்னால்தான் அது ஏற்கெனவே சிரித்து விட்டதே. மீண்டுமா?’’ என்றார். நடுநடுவே நோயாளிக்குரிய இருமல். பேசத் திணறினார்.

‘‘நீங்க சும்மா இருங்க.’’ என்ற மங்கை, ‘‘இதபாருடி! என் மகன் _ மது எங்களை விட்டுப் பிரிய காரணம் நீ. உன்னை மன்னிக்க முடியாது. என் பையனைப் போல ஏமாளி எங்கு கிடைக்கிறானோ... அந்த வீட்டைப் பார்... ஏற்கெனவே நீ அரங்கேற்றிய நாடகம் போதும்.’’ என்ற மங்கை படீரென கதவைச் சாத்திக் கொண்டாள்.

இவர்களை நம்பியே இங்கு வந்துவிட்டாள். கதவை அடைத்து விட்டனர்.

இனி எங்கு போக?

சட்டென, வீட்டின் கொல்லைப் புறமிருந்த கிணற்றடியை நோக்கிப் போனாள்...
________________________________________

2
‘நவயுகா என்டர் பிரைசஸ்’ _ நிட்டிங் கம்பெனியின் எம்.டியை சந்தித்து,

‘‘குட்மார்னிங் சார்.’’ என்றாள்.

‘‘நீங்க... மிஸ். கபிலா?’’ என்றான் மாதவ் குமார்.

‘‘யெஸ், சார்.’’

‘‘உட்காருங்க. அப்பாயின்மெண்ட் ஆக வந்திருக்கீங்க?’’ ‘‘ஆமா.’’

‘‘பர்சனல் அசிஸ்டெண்ட்டாக, ஆக வந்திருக்கீங்க. உங்க பர்சனல் விஷயம் பத்திப் பேசலாமா?’’

‘‘ம்’’

‘‘மது செய்த குற்றம் பற்றி தெரிந்திருக்கும். குற்றவாளி என்பதை அறியாமலே காதலித்தீர்கள். சுயரூபம் தெரிந்து விட்டது. தப்பித்தீர்கள். உங்களுக்கு ஆதரவு தரவே அழைத்தேன்.’’ என்றான் மாதவ் குமார்.

‘‘நீங்கள் சொன்னது நிஜம், வேலை தந்ததற்கு நான் எப்படி நன்றி சொல்வது சார்?’’

‘‘நன்றி என்கிற சம்பிரதாயமெல்லாம் வேண்டாம். பெஸ்ட் ஆப் லக்!’’ என்றவன், இன்டர்காமில் செக்ஷன் ஆபீசரைக் கூப்பிட்டான்.

கபிலாவை அறிமுகப்படுத்தினான்.

‘‘இவங்களுக்கு இருக்கையை காட்டுங்கள். எல்லோருக்கும் அறிமுகம் செய்து வையுங்கள்.’’ என்றான்.

இருவரும் வெளியே வந்தனர்.

‘‘மேடம் நல்லா பார்த்துக்கங்க.’’ என கைகளை நீட்டினான்.

‘‘என்ன சார் கைகளை காண்பிக்குறீங்க?’

‘‘எம்.டி.தானே உங்களுக்கு இரு(க்)கையை காண்பிக்கச் சொன்னாரு?’’ என்றதும் சிரித்து விட்டாள்.

‘‘ஓ.கே. உங்க நேம் தெரிஞ்சுக்கலாமா?’’

‘‘ஷ்யூர். மை நேம்? மூன் கிங்!’’

‘‘என்னது. மூன் கிங்கா?’’

‘‘யா. அதாவது நிலவரசன்.’’

‘‘அப்படின்னா உங்களை இனிமேல் நிலா, நிலான்னு கூப்பிடலாம் இல்லையா?’’

‘‘வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறும், கையில் ஒரு குழந்தையும் இருக்கும் பட்சத்தில் தாராளமாகக் கூப்பிடலாம்.’’ _ அவன் சொல்ல, மீண்டும் சிரித்து விட்டாள்.

துக்கம் மறந்த சிரிப்பு!

நிலவரசன் கலகலப்பாகப் பேசினான். பழகினான்.

அன்றைய அலுவல் கலகலப்பாகத் துவங்கியது.

மாலை.

கபிலா வீடு திரும்பினாள். விளக்குகள் பூத்திருந்தது. கேட்டைத் திறந்தாள். கிரீச்சிட்டது.

ஜன்னல் வழியே பார்த்தாள் மௌனிகா மதுவின் தங்கை!

சட்டென தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

அழகுப் பதுமையான அவள் ஊமை!

மது _ கபிலா திருமணம் முடிந்த பிறகு மௌனிகாவிற்கு நடப்பதாக இருந்தது.

நின்றுவிட்டது.

மங்களம் _ குருவரதன் இருவரும் இவளைப் பார்த்ததும் படீரென கதவை மூடிக் கொண்டனர்.

கிணற்றடியில் கபிலா வைத்திருந்த சூட்கேஸ் அப்படியே இருந்தது.

எல்லோரும் இவளை வெறுக்கிறார்கள்! நிச்சயம் புரிந்து கொள்கிற காலம் வரும்.

‘‘மாலைக் காற்றின் குளுமை அவள் மனதுக்கு இதமளித்தது.

அப்படியே கிணற்றுத் திட்டில் உட்கார்ந்து கொண்டாள்.

‘மனத்திரையில் நினைவின் அலைகள்....’
________________________________________

3
கபிலா அப்போது +2 முடித்திருந்தாள்.

டைப் ரைட்டிங் ஷார்ட்ஹேண்ட் படிக்க இன்ஸ்டிடியூட் போய் கொண்டிருந்தாள்.

அங்கு இன்ஸ்ட்ரக்டராக வேலை பார்த்தான் மது.

டைப் முடித்து, ஷார்ட்ஹேண்ட் படித்துக் கொண்டிருந்த நேரம் அது.

மது டிக்டேட் செய்வான். அவள் எழுதுவாள். முடித்ததும் பேப்பர் திருத்திக் கொடுப்பான்.

மது, அமைதி ரகம். அதிகம் பேசமாட்டான். வெகுளித் தோற்றம், அடக்கம், அவனது இந்த குணங்கள் அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது.

ஒருநாள்..., ‘‘மதுசார்! பிழை அதிகமா வருது! என்ன செய்யலாம்?’’ எனக் கேட்டு எழுதிய நோட்டை நீட்டினாள்.

வாங்கிப் பார்த்தான்.

‘‘கபிலா! ‘பிழை’ன்னா என்னன்னு சொல்ல முடியுமா?’’ என்றான்.

‘‘தடுமாற்றம்.’’

‘‘மனசிலா, உடம்பிலா?’’

‘‘செயலில்.’’

‘‘நல்ல பதில். மனமும் எண்ணமும் செயலைப் பாதிக்கிறது. செயலும் உணர்வும் தடுமாற்றத்தை உண்டாக்குகிறது. காரணம், மிகுந்த சுமை. அல்லது, வயது மீறிய வேகத் துடிப்பு. சொல்வது சரியா?’’ என்றான்.

அவன் சொல்வது நிஜம். ஆழ்மனதைத் துளைபோட அவனால் எப்படி முடிந்தது?

‘‘என்ன யோசிக்கிறாய் கபிலா?’’

‘‘நீங்கள் கேட்டதை! நான் என் அக்கா, அவள் கணவன் இருவரின் அரவணைப்பில் வாழ்கிறேன் நிறைய படிக்கணும், சாதிக்கணும்ங்கற வெறி எனக்குள்.’’

‘‘அதுதான்.. தடுமாற்றம். மனம் ஒரு பம்பரம். அது சுழலலாம். மயங்கிச் சாயலாம். ஆனால் தடுமாறக் கூடாது. பம்பரத்தின் ஆணி போன்றதுதான் பிழை. அதுதான் வாழ்க்கையைச் சுற்றின அடிச்சுவடு.’’

‘‘........................................................................................’’

‘‘பிழை என்பதே பிழைப்பு! _ அதாவது வாழ்க்கை. இதற்கு ஒரு கவிதை சொல்லட்டுமா?’’

‘‘ஹை! கவிதை கூட சொல்வீர்களா மது? ப்ளீஸ் சொல்லுங்களேன்’’ கண்கள் விரியக் கேட்டாள்!

கண்களை ஒரு கணம் மூடினான். கவிதை சொல்லத் துவங்கினான்...

‘‘காலம் களவாகி

காய்த்த மனம் கனவாகி

காளஞ் சுதி சேரத்

தாவிவரும் _ வெறுஞ் சத்தம்;

வாழும் வாழ்கையடா!

வஞ்சனைகள் பொய்மையடா!!

காலன் நிற்கின்றான்

கை கொட்டிச் சிரிக்கின்றான்...

கோலம் மாக் கோலம்

கொட்டுகிற மழை வாழ்க்கை;

நாளுமது நனைவதில்லை

நலிவில்லை துக்கமில்லை

பாலும் விஷம்தானே

பசும் கன்றும் பகைதானே

நீயும் நானும் நிஜம்

நித்திலமே சூன்ய பிழை!!

_ என முடித்தான். அவனையே இமையாது பார்த்தாள்.

அந்தக் கவிதையில் ஏதோ பிடிபட்டது. ஏதோ நெருடியது.

‘‘வாழும் பொழுது ஏற்படுகிற காயம்; வாழ்ந்து முடித்துவிட்ட களைப்பு இரண்டும் இதில் தெரிகிறது மது! உங்களைப் பற்றி நான் தெரிஞ்சிக்கலாமா?’’

‘‘என்னைப்பற்றி... குடும்பச் சாரட்டை இழுக்கும் குதிரை. (அ) பல்லக்குத் தூக்கி நான்! ஆஸ்த்துமா பேஷண்ட் அப்பா, அம்மா... ஊமைத் தங்கை... சொற்ப சம்பளத்திற்கு இன்ஸ்ட்ரக்டர் வேலை...

வாயைக் கட்டிப்போட்டு நாயை குறைக்கச் செய்வது போல்... என் அவலம் கபிலா! இதை அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய்?’’ என்றான்.

அவள் அதிர்ந்தாள்.

புத்தக மூட்டையைச் சுமக்க, மூச்சுத் திணறும் கான்வென்ட் குழந்தையைப் போலத் தெரிந்தான் மது!

‘‘தற்காலிக ஓட்டம்தான் மனிதன். நம்பிக்கைதான் ஆயுள். முயற்சிதான் பலம். நாளைய மாறுதல் நம் கையில் இல்லை மது. கவலைப் படாதீர்கள்...’’ என ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினாள். அதுதான் முதல் பேச்சு அவனோடு.

வாளியில் நீர் இழுக்கும் சப்தம் கேட்டது. கபிலா நினைவு கலைந்தாள்.

மௌனிகா அவளை நெருங்கினாள். அதற்குள் அவள் அம்மா மங்கை வந்து விட்டாள். சட்டென விலகி வீட்டினுள் நுழைந்து விட்டாள்.

‘‘இதபார்டி! உனக்கு காலையிலேயே சொல்லியாச்சு. கண்ட நாயும் நுழைய இது ஒன்னும் சத்திரமில்லை. முதல்ல வெளியே போயிடு. இல்ல, போலீசைக் கூப்பிடுவேன்’’

‘‘போலீஸ் எதற்கு அத்தை?’’

‘‘அனுமதி இல்லாமல் யாரோ ஒருத்தி வீட்டிற்குள் புகுந்து விட்டாள் என்று புகார் செய்யத்தான்.’’

‘‘கூப்பிடுங்கள். நீங்கள் தான் என்னை கூட்டி வந்து விட்டதாக நானும் சொல்கிறேன். பிறகு என்ன நடக்கும்னு நான் சொல்ல வேண்டுமா?’’ என புன்னகைத்தாள்.

இதைக் கேட்டு மங்கை அதிர்ந்து விட்டாள்.

‘‘இதபார் மகராசி! ஒரு தடவை பட்டது போதும் மகனை இழந்து, மானம் இழந்து மறுகித் தவிக்கிறோம். மறுபடியும் ஏன் எங்கள் குடும்பத்தைக் குலைக்க நினைக்கிறே? ஒண்ணு இங்கேயிருந்து போயிடு, இல்ல... எங்களையெல்லாம் கொன்னுடு!’’ என்று விட்டுத் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் மங்கை.

கபிலா திடுக்கிட்டாள்.

‘‘என்னை மன்னிச்சிடுங்க அத்தை! எனக்கு பாதுகாப்பான இடம் இதுதான்னு நெனச்சிதான் இங்கே வந்தேன்,’’ என்றவள் பெட்டியிலிருந்து ஒரு தாலிக் கயிறை எடுத்துக் காட்டினாள்.

‘‘.................... இந்த மஞ்சளுக்கும், உங்க மகனுக்கும் உள்ள தொடர்பை...., இந்த கயித்துக்கும் என் கழுத்துக்கும் உள்ள உறவை... நெஞ்சார ஒரு தடவை நெனச்சிப்பாருங்க... எல்லாம் பொய்யாத் தெரிஞ்சா, இப்பவே இங்கேருந்து நான் போயிடுறேன்...’’ என்றாள் அழுகையுடன்.

அவர்களுக்கு முன்னால் அவள் பிடித்திருந்த தாலிக்கயிறு முன்னும் பின்னும் ஊஞ்சலாடியது.

‘‘வாழ்க்கைப் பொய்யானதுக்கப்புறம், வாதம் செஞ்சு என்ன பிரயோஜனம்? இப்போ இருட்டிடிச்சு அனுமதிக்கிறேன். பொழுது விடிஞ்சதும் போய் சேர்ந்திடு’’ எனக்கூறி கதவை மூடிக் கொண்டாள்.

எதுவும் நடவாதது போல அமர்ந்து கொண்டாள் கபிலா.

உள்ளிருந்து சாம்பார் வாசனையடித்தது. சாப்பிடுகிறார்கள். சாப்பிடட்டும்.

இனிவரும் எல்லா இரவுகளும் இந்த வீட்டில்தான் கழியப்போகிறது...

இதுதான் இறுதியான தீர்மானம். வெகு நேரம் சுவரில் சாய்ந்திருந்த கபிலா அப்படியே கண்ணயர்ந்து விட்டாள்....
________________________________________

4
எம்.டி.யின் ஏ.ஸி அறை. மாதவ் குமார் கபிலாவையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘‘கபிலா!’’

‘‘சார்?’’

‘‘டிக்டேஷனுக்கு முன்னாடி கொஞ்சம் பர்சனலா பேசலாமா?’’

‘‘.................................’’

‘‘பிரம்மன் உங்கள் விஷயத்தில் முழு கவனம் செலுத்தியிருக்கான் கபிலா.

................... அதுவும் நீ எனக்கே, எனக்கு என்பது _ போல...’’

‘‘சார்!’’ என போலியாக அதிர்ச்சிக் காட்டினாள். மனம் கொந்தளித்தது.

‘‘உன் அழகு எனக்குள் பதிந்து, ஈர்த்து எவ்வளவோ நாட்களாயிற்று. விருப்பத்தை வெளிப்படுத்தும் அவகாசம் இன்றுதான் கிடைத்தது. மகிழ்ச்சிதானே கபிலா?’’

‘‘வர்க்கம் வேறு. வாழ்க்கை வேறு. நான் உங்களிடம் வேலை பார்க்கும் ஸ்டெனோ. உங்கள் விருப்பம் எப்படி பொருத்தமாகும்? எனக்கு அவகாசம் வேணும். சார். யோசிச்சிதான் பதில் சொல்லணும்.’’ _ அவள் சொல்ல, போன் ஒலித்தது.

எடுத்தான். பேசிமுடித்து,

‘‘டேக் யுவர் ஒன் டைம். பட் ஐ வான்ட் எ குட் ரிசல்ட்.’’ என்று விட்டு டிக்டேட் செய்தான் சுருக்கெழுத்தில் எழுதினாள் கபிலா.

‘‘என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம், கபிலா!’’ என்றான் நிலவரசன்.

‘‘ஓ.கே. நிலவரசன்! இப்போ நீங்க என்கூட கொஞ்சம் வர முடியுமா?’’

‘‘எதுக்கு?’’

‘‘ஒரு சின்ன ஹெல்ப் வேணும்.’’

‘‘ஓ வருகிறேனே!’’ என்றான். இருவரும் நடந்தனர்.

நகை கடைக்குப் போயினர். அவனிடம் நகையை கொடுத்து விற்றுத் தரச் சொன்னாள்.

பணம் வாங்கித் தந்தான்.

தையல் மெஷின் கடைக்கு அழைத்துப் போனாள்.

மெஷின்தேவை. நல்ல மெஷினாகத் தேர்வு செய்து கொடுத்தான் நிலவரசன்.

வாங்கி... விலையை கொடுத்து... டோர் டெலிவரி செய்யும்படி தெரிவித்துவிட்டு வெளியே வந்தனர்.

ஹோட்டல் ஒன்றில் நுழைந்து உட்கார்ந்தனர். அவள்தான் அவனை வற்புறுத்திக் கூப்பிட்டாள்.

இவ்வளவு நாட்களில் கபிலாவைப் பற்றி அவனால் யூகிக்க முடியவில்லை. அவள் பாட்டுக்கு வருகிறாள். வேலை பார்க்கிறாள். போகிறாள். வீடு... மற்ற விபரங்கள் எதுவுமே தெரியாது.

பேசிப்பார்க்கலாமா? என நினைத்தான். அப்போது

‘‘என்ன சாப்பிடுறீங்க?’’ என்றாள்.

‘‘ரசம்’’ என்றான்.

‘‘என்னது ரசமா?’’

‘‘ஆமா. அதிரசம்.’’

_ பேரரைக் கூப்பிட்டு அதிரசமும் முந்திரி பகோடாவும் சொன்னாள்.

வந்தது. பகோடாவை எடுத்து வாயில் போட்டவன்,’’ ஆஹா, அருமை.... சூப்பர்... பன்ட்டாஸ்டிக்’’ என்றான்.

‘‘எதைச் சொல்றீங்க?’’ _ பேரர் கேட்க,

‘‘அட போப்பா! நான் பாராட்டினது பகோடாவை இல்லை. அதை கொண்டு வந்த தட்டை.’’

_ நிலவரசன் சொல்ல, அமர்ந்திருந்த கபிலா சட்டென சிரித்து விட்டாள்.

‘‘ரொம்ப ஜாலியா பேசுறீங்க நிலா! உங்க பேரன்ட்ஸ் என்ன செய்றாங்க?’’

‘‘புரமோஷனுக்காக வெயிட் பண்றாங்க.’’

‘‘என்ன புரமோஷன்?’’

‘‘அப்பா _ அம்மாங்கற ஸ்தானத்திலேருந்து ‘மாமனார் _ மாமியார்’ ஸ்தானத்துக்கு.’’

‘‘எப்போ அவுங்களுக்கு புரமோஷன்?’’

‘‘அது... என் மாமனாரோட பொண்ணுக்குதான் தெரியும்’’

_ அவன் சொல்ல, மீண்டும் சிரிப்பு.

சாப்பிட்டு, பில் தந்து வெளியே வந்தனர்.

கபிலா! கூப்பிட்டீங்க. வந்தேன். கழுத்துச் செயினை விற்று... தையல் மெஷின் வாங்கி... இதெல்லாம் எதவுமே எனக்குப் புரியவில்லையே?’’ எனக் கேட்டான்.

‘‘புரியாது நிலவரசன்! இன்னும் நான் துணி வாங்கணும். மருந்துகள் வாங்கணும். இது சொல்லி அழற சோகமும் இல்ல; சொல்லி முடிக்கிறது அவ்வளவு சுலபமும் இல்ல. இதைப் பத்தி... இன்னொரு சந்தர்ப்பத்திலே பேசலாமே?’’

‘‘சரி.’’ என்ற நிலவரசன் அவளிடம் விடைபெற்றுப் புறப்பட்டான்.

அவள் மெடிக்கல் ஸ்டோருக்காக ரோடை கிராஸ் செய்தாள்.
________________________________________

5
பலநாள் பல பொருட்களை வாங்கித் தந்திருக்கிறாள் கபிலா.

மங்களமோ _ குருவரதனோ அதை வெளியே தூக்கி எறிந்தனர்.

அவள் கவலைப்படவே இல்லை.

பலநாள் திண்னையிலேயே தூங்கி எழுந்து, வேலைக்கு போய் வந்திருந்தாள்.

இன்னும்தான்...

கடையிலிருந்து வீடு திரும்பினாள். தையல் மிஷின் தைப்பதற்குத் தயாராய் இருந்தது.

மௌனிகாவிற்கு புதுப் பாவாடை தாவாணி! சுடிதார் உடைகள்!

குருவரதனுக்கு புதுச் சால்வை.

மங்கைக்கு புது மூக்குக் கண்ணாடி!

பழைய கடனுக்காகச் சத்தம் போட்டுப் போன மளிகைக் கடைக்காரன் ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருள்களை வீட்டில் இறக்கி வைத்துப் போனான்.

‘‘இதையெல்லாம் யார் அனுப்பினது?’’ என்றாள் மங்கை.

‘‘உங்க வீட்டிலே புதுசா வந்திருக்கே, அந்த அம்மாதான். பழைய பாக்கியையும் கொடுத்துட்டாங்க’’ என்றான் கடைக்காரன்.

‘‘இந்தக் கவர்லே பணம் இருக்கு. மாமாவை டாக்டர் கிட்டே கூட்டிட்டுப் போங்க அத்தை.’’ என்று கைகளில் திணித்தாள்.

மங்கையின் திகைப்பு அடங்கவில்லை. வேறு வழியில்லை.

குருவரதனுக்கு நாளுக்கு நாள் உடல் நிலை மோசமாகி வந்தது. பணம் இல்லாததால்தான் டாக்டரிடம் போகவில்லை.

பலநாள் பட்டினியை வெளிக்காட்ட கௌரவம் இடம் தரவில்லை. தேவையறிந்து அவள் செய்கிற உதவியினை மறுக்கவும் இயலவில்லை.

அவர்கள் மூன்று பேரும் மருத்துவமனை புறப்பட்டனர்.

சமையலறையில் ஒரு மணி நேரம் கழிந்தது கபிலாவிற்கு.

கிணற்றுத் திட்டில் சாய்ந்தபடி உட்கார்ந்தாள். நினைவுகள்...

மது....

அவனுடன் பேசப் பேச பரவசமாய் இருந்தது.

‘‘உங்களுக்கு ஒரு விடிவு பொறக்கணும் மது... நல்ல வேலை கிடைக்கணும். குடும்பம் சுகப்படணும்.’’ என்றாள் கபிலா.

‘‘எதைக் கொண்டு இப்படிச் சொல்கிறாய் கபிலா?’’

‘‘உங்கள் மீது கொண்ட அன்பு.’’

‘‘அன்பு என்றாய்! நம்புகிறேன். ஒரு வெற்று மனிதனை கண்டு அன்பு பொழியத் தோன்றுமா?’’ எனக் கேட்டு, குறிப்பேட்டில் அவள் எழுதியிருந்த சுருக்கெழுத்தைப் பார்த்தான்.

‘‘இது சுயநலமில்லாத அன்பின் பிரதிநிதித்துவம் மது...’’ என்றாள்.

அவன் மௌனித்தான்.

‘‘உன் போல நல்ல ஸ்நேகிதி எனக்குக் கிடைத்ததில் பெருமிதமாக இருக்கிறது கபி...!’’

‘‘நல்ல மனதின் நட்பும், அன்பும் கூட விலங்குதான். இந்தத் தோழமைத் தேர் நீண்டு இழுபடுமா?’’

‘‘நிச்சயம் படும். அன்பை விலங்கு என்றாய். அதற்கு ஒரு பொய்ட்ரி சொல்றேன், கபிலா.... கேள்!’’

என்றவன் கண்களை மூடித் திறந்தான்.

வரிகள் உதிர்ந்தது.

‘.... எலும்புக் கூடும் ஜன்னல்தான்

எட்டிப் பார்க்கும் கங்காற்று!

தழும்பும் உயிரை யார்காத்து

தவிக்கத் தந்தார் சொல்லம்மா!

எழும்பும் ஆசை ஹிதயத்தில்

எங்கும் பரவும் நீ(ர்) ரத்தம்!

புலம்பும் நெஞ்சில் ஒருகோடி

புரளும் எண்ணம் தந்தது யார்?

விளம்பும் விதியே கைவிலங்கு

விட்டால் நாமும் வாழ்ந்திடலாம்...!’’

_ மது கவிதையை முடிக்க, கண்கள் பளபளக்க அவனைப் பார்த்தாள்.

‘‘மது... இவ்வளவு திறமை இருக்கு! ஏன் இதை வெளிப்படுத்தக் கூடாது மது? கவிதை எழுதுங்களேன்...’’ என்றாள்.

‘‘வாழ்க்கையே கவிதைதான். வாசிக்க வாசிக்க சுகம். தேடத் தேட இன்பம். கவிதைக்கு எல்லை கிடையாது. காண முடியாது. முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால்... நீயும் நானும் சேர்ந்தே படிக்கலாம்.’’

‘‘ரொம்ப நன்றி மது... வாழ்வை கவிதை என்கிறீர்கள். கவிதையைப் போல வாழ்க்கையை சேர்ந்து படிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்...’’ என்றாள் கபிலா.

அவன் அதிர்ந்தான். அவள் வார்த்தையின் அர்த்தம் பிடிபட்டபோது... அந்த அதிர்ச்சி ஒரு வித பயமாக உருவெடுத்தது.

உருளை க்ரீச்சிட்டது. நினைவு கலைந்தாள் கபிலா.

மௌனிகா நீர் இரைத்துக் கொண்டிருந்தாள். கபிலாவையே பார்த்தபடி நின்றாள்.

கண்ணீர் பளபளத்தது. சொல்லத் தெரியா தவிப்புடன் விசும்பினாள்.

அவளைப் பார்த்து கரம் குவித்து விட்டு குடத்தோடு உள்ளே போனாள்.

மருத்துவமனை போயிருந்த மூவரும் திரும்பி விட்டனர்.

சமையலறையிலிருந்து வந்த வாசனை... அவர்களை அசத்தியது.

கபிலாதான் எல்லாம் நளபாகமாகச் சமைத்து வைத்திருந்தாள்.

உள்ளே போய் எல்லாம் திறந்து பார்த்தாள் மங்கை. வேகமாக மகளிடம் வந்தாள்.

‘‘மௌனிகா!’’ என சப்தமாகக் கூப்பிட்டாள்.

‘‘என்ன?’’ என சைகையால் கேட்டாள் மௌனிகா.

கிணற்றுத் திட்டில் அமர்ந்திருந்த கபிலாவிற்கும் கேட்கிற குரலில்

‘‘அப்பாவும் நீயும் வந்து என்னோட உட்காருங்க. அந்தப் பொண்ணையே வந்து பரிமாறச் சொல்லு’’ என்றாள் மங்கை.

கபிலாவின் கையிலிருந்த புத்தகம் தானாகவே கீழே விழுந்தது.

சட்டென எழுந்தாள். பாதங்களில் ஒரு பரவசத்தை உணர்ந்தாள்.

அருவியின் ஆர்ப்பரிப்போடு உள்ளே நுழைந்தாள்.

மூன்று பேருக்கும் பரிமாறத் துவங்கினாள். எல்லோருக்குமே கண்கள் பனித்தது.

உள்ளம் சொல்ல முடியாத வார்த்தையை உணர்வுகள் சொல்லின...

அன்பின் மிகைப் பாட்டிலோ, உறவைப் புரிந்து கொண்டு விட்ட உற்சாகத்திலோ யாருக்கும் சாப்பிடவே முடியவில்லை...

கண்ணீர் மட்டும் ஏனோ சிந்தியபடியே இருந்தன...

உதடுகளைக் கடித்து, தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் கபிலா.
________________________________________

6
கடற்கரை.

மாலை மனிதர்கள். கரையின் ஓரம் _ கடல் நீரில் பாதம் நனைகிற தூரத்தில் நிலவரசன்.

அருகில் கபிலா.

‘‘கபி!’’

‘‘சொல்லுங்க நிலா’’

‘‘எங்க வீட்டில் ஆயுள் தண்டனை தர தீர்மானிச்சிருக்காங்க.’’

‘‘என்னது, ஆயுள் தண்டனையா?’’

‘‘ஆமாம். கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்திருக்காங்க.’’

‘‘கங்கிராட்ஜுலேஷன் நிலவரசன்!’’

‘‘வாழ வர வேண்டிய பெண், வாழ்த்து சொன்னா எப்படி?

‘‘நீ... நீங்க என்ன சொல்றீங்க?’’

‘‘உ...ன்னைப் பார்த்து என்னோட பேரண்ட்ஸ் ‘மருமகளே!’ன்னு கூப்பிட ஆசைப்படறாங்க.’’

_ அவன் சொல்ல, ‘‘நிலா!’’ என அதிர்ந்தாள் கபிலா.

தொலைதூர அலைகள், கரையின் அருகே வந்து சளாரென அடித்துவிட்டு ஓடியது. அலைத் துளிகள் முகத்தில் தெறித்து விழுந்தது.

‘‘நேசிக்கிறேன் கபிலா, எனக்குப் பொருத்தமான துணையாய் உனை நினைக்கிறேன். அதையே சொன்னேன். இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது?’’ என்றான்.

அவள் மௌனித்தாள். மீண்டும் அந்த அலை ஓடி வந்தது. சளாரென எழும்பி, தாழ்ந்து கடல் நோக்கி ஓடியது.

‘‘என் எதிர்பார்ப்பு உங்களிடம் உள்ளது மகிழ்ச்சியே. என் மீதுள்ள விருப்பத்தைச் சொன்னீர்கள். சமயம் வரும். வீட்டிற்கு அழைப்பேன். பேசலாம். என்னைப்பற்றிய இன்னொரு பக்கம் தெரியும்.’’ என்றாள் கபிலா.

அவன் தன் விருப்பத்தைச் சொன்னதும் எழுந்த அதிர்ச்சியை மனசுக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

தன்னைப்பற்றிய உண்மை தெரியவரும் பொழுது, அவனது அதிர்ச்சி எத்தகையதாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாள்.

இருவரும் எழுந்தனர். மணலைத் தட்டிவிட்டு நடந்தபோது,

‘‘கபிலா!’’ என குரல் வந்தது.

திடுக்கிட்டுத் திரும்பினாள்.

சந்தியாவுடன் நின்றிருந்தான் சிராஜ்.

கபிலாவின் அக்காவும் அவள் கணவனும்தான் அவர்கள்!

‘‘என்ன?’’ என்றாள் கபிலா.

‘‘யார் இவன்?’’

‘‘அதை கேட்க நீயாரு? _ நிலா சார், நீங்க வாங்க போகலாம்!’’ என நடக்க, அவன் வழிமறித்தான்.

‘‘வீட்டிலே பிடிவாதம் பிடிச்சதாலே கொஞ்ச நாள் உன் விருப்பப்படி ஹாஸ்டல்ல தங்கிக்க சம்மதிச்சேன். இப்போ நீ எங்கே தங்கியிருக்கே?’’

‘‘அதை தெரியப்படுத்தணும்னு எனக்கு அவசியமில்லே!’’

‘‘அவசியம் இருக்கு. உனக்கு நான்தான் கார்டியன். உன் அப்பாவே சட்டப்படி நியமிச்சிருக்கார். உனக்கு என்ன மாதிரியான வாழ்க்கை அமைச்சுத் தரணும்னு எனக்குத் தெரியும். ஒழுங்கா வீட்டுக்கு வா.’’

_ சிராஜ் கர்ஜித்தான். சந்தியா நடுங்கியபடி நின்றாள். கணவனின் மூர்க்கம் அவளுக்குத் தெரியும். எனவே பயந்தாள்.

‘‘நீங்க இருக்கும் இடம் எனக்கு வீடாவே தெரியல. அதுக்கு ஹாஸ்டலே தேவலை. என்னாலே உங்க வீட்டுக்கு வரமுடியாது.’’

‘‘நீ எங்கேயிருந்தாலும் சரி. ஒரு வாரம் டைம் தரேன். மரியாதையா வந்து சேரு.’’ என்றான் சிராஜ்.

‘‘கபிலா!’’ என தழுதழுத்தபடி தங்கையை நெருங்கிய சந்தியாவை,

‘‘வாடி!’’ என உறுமியபடி முடியைப் பிடித்து இழுத்துப் போனான் சிராஜ்.

பொது இடத்தில் அவமானப்பட்ட அவஸ்தையோடு குறுகிப் போனாள் கபிலா.

தனது சபதமும் லட்சியமும் ஜெயிக்கும் வரையில்... தான் அவசரபடக் கூடாது. என தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டாள்.

‘‘கபிலா! என்ன இதெல்லாம்? நீயும், நடப்பதும் புதிராய் இருக்கிறதே?’’

‘‘ப்ளீஸ்... பிறகு பேசலாம் நிலவரசன்... புறப்படலாம். நாளை சந்திப்போம்.’’

_ இருவரும் கிளம்பினர்.

‘‘ஏன் இவ்வளவு நேரம் கபிலா? நான் கலங்கி விட்டேன்.’’

வாசலில் காத்திருந்த மங்கை கேட்டாள். தையல் மிஷினிலிருந்து எழுந்து வந்த மௌனிகா அவளை பார்வையில் வரவேற்றாள்.

உள்ளே வந்து காபி போட்டுக் கொடுத்தாள் மங்கை.

‘‘முகமெல்லாம் ஏம்மா ஒரு மாதிரியா இருக்கு? மகனைப் பிரிந்த வருத்தத்தில், கண்டபடி பேசிவிட்டோம். மனதில் வைத்துக் கொள்ளாதே!’’

‘‘அத்தை! அதெல்லாம் ஒன்றுமில்லை. மதுவை விரும்பியது தவிர எந்த பாவத்தையும் அறியவில்லை. அதை நம்பினால் போதும் அத்தை, மாமா எப்படி இருக்கார்?’’

‘‘டாக்டர் கிட்டே போய்ட்டு வந்தபிறகு, பரவால்லே. இருமல் குறைஞ்சிருக்கு.’’

காபியை குடித்துவிட்டு, தனது அறைக்குப் போனாள். டேபிளின் மீது மதுவின் படம் இருந்தது.

பார்த்தாள்.

அவனது டிரேடு மார்க் புன்னகை! அதைப் பார்த்ததும், பழைய நினைவுகள்...

கோவிலின் மணியோசை காற்றோடு கலந்து வந்தது.

படிக்கட்டில் அமர்ந்திருந்தனர். தெப்பக் குளம் அலையடித்தது.

‘‘என்னுடைய விருப்பத்தைச் சொன்னேன் மது! உங்கள் முடிவென்ன?’’ எனக் கேட்டாள்.

பூஜைத் தட்டிலிருந்த ரோஜாப் பூவை எடுத்து முகர்ந்தபடியே பார்த்தான்.

‘‘உள்ளன்போடு நீ சந்திக்கும் முன்வரையில் என் மனதைத் தாழிட்டு வைத்திருந்தேன். அதை நீதான் திறந்தாய். எனக்குள் பூ மழை. ஆனால், எனது நிலை உனக்குத் தெரியும் தானே கபிலா?’’ என்றான்.

வேலையைப் பற்றிச் சொல்கிறான்.

அதைப்பற்றி என்ன? ஜாப் டைப் செய்யலாம். லோன் போட்டுச் சொந்தமாக டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் நடத்தலாம்.

வழியா இல்லை?

‘‘என் மாமா ஒரு கம்பெனியிலே ஒர்க் பண்றார். ஒரு நாள் வாங்க. அறிமுகப்படுத்தறேன். உதவி செய்வார். கொஞ்சம் பழகினதும் நம் விஷயத்தைச் சொல்லலாம்’’ என்றாள்.

கோவில் கோபுரத்தை வெறித்துக் கொண்டிருந்தவன், ‘‘கபிலா... ஐ லவ்யூ...’’ என்றான்.

பின்னால் கை தட்டும் ஓசை.

சிராஜ் நின்றிருந்தான். முகத்தில் குரூரம்! இருவரும் அதிர்ந்தனர்...

மௌனிகா அவள் தோள்களைத் தொட்டு சைகையால் அவளைச் சாப்பிட அழைத்தாள்.

நினைவு கலைந்த கபிலா, போட்டோவைத் துடைத்து வைத்து விட்டு எழுந்து போனாள்
________________________________________

7
‘‘நம்ம கம்பெனியோட இன்னொரு பிராஞ்ச்ல நீ வேலை பார்க்கிறது கபிலாவுக்குத் தெரியாதே?’’

மாதவ் குமார் கேட்க, அவசரமாகச் சொன்னான் சிராஜ்,

‘‘தெரியாது சார்.’’

‘‘குட்’’ என்ற மாதவ், டாய்லெட் அருகேயிருந்த ரகசிய அறையைத் திறந்தான்.

உள்ளே போதை மருந்துகள்!

பால் பவுடர் போல ப்ரவுன் சுகர் மின்னியது.

‘‘சிராஜ்!’’

‘‘சார்?’’

‘‘பல லட்சம் மதிப்புள்ள சரக்கு இது. இந்த ட்ரிப் நீயே வண்டியை எடு.’’

‘‘எந்த ஊர் சார்?’’

‘‘கொச்சின். இன்னொரு முக்கிய விஷயம். நம் கடத்தல் பிசினஸ் பத்தி கபிலாவுக்கு எதுவும் தெரியக் கூடாது. அவள் நம்ம வலையில் வீழப்போறா. அவளை வைத்து இன்னும் எவ்வளவோ... சாதிக்க வேண்டியிருக்கு... அதுபத்தி பிறகு பேசலாம். சரக்கை எப்படி கொண்டு போகப் போறே?’’

‘‘துணி பேல்களுக்கு நடுவே வச்சுதான்.’’

‘‘சரி, நீ புறப்படு.’’

‘‘சார் ஒரு விஷயம்..’’

‘‘என்ன?’’

‘‘என்னையும் பார்ட்னரா சேர்த்துக்கறதா ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கீங்க?’’

‘‘சொன்னேன். ஆக்கறேன். அந்த கபிலாவைத் தொட்டதும்; நீ என் பார்ட்னர்.’’

_ மாதவ் குமார் சொல்ல..., சிராஜ் பெட்டிகளுடன் திரும்பினான்.

முகத்தில் மகிழ்வுக்குமிழ்.

_ இருவர் பேசியதையும் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்த கபிலா சட்டென தன் இருக்கைக்குத் திரும்பினாள்.

மனம் திடுக்கியது. நெஞ்சு படபடத்தது.

தன் மாமா _ மாதவ் குமார் இருவரது தொடர்பும் எப்படிப்பட்டது? என்பது புரிந்தது.

‘டேய்... மாதவ்! என்னையா வீழ்த்துகிறாய்? நான் உன்னுடன் பழகுவதெல்லாம் உன்னை வீழ்த்தத் தானடா...

என் மதுவின் வாழ்வை இருட்டாக்கிய உன்னை பழிவாங்கத் தானடா...? என மனதில் கறுவிக் கொண்டாள்.

மாதவ்குமார் அவளை இன்டர்காம் மூலம் அழைத்தான்,

‘‘வா, கபிலா! உட்கார். எனக்கு முக்கிய என்கேஜ்மென்ட்ஸ் இருக்கு. பெங்களுர் போறேன் நீயும் வரமுடியுமா?’’ என்றான்.

‘‘உங்ககூட நானும் வரணும்னு ரொம்ப ஆசை சார்.’’

‘‘ஓ.கே. இப்பவே ப்ளைட்டுக்கு டிக்கெட் ஏற்பாடு செய்திடுறேன்.’’

‘‘ஆனா...’’

‘‘என்ன?’’

‘‘உடம்பு தடுக்கிறது. இப்போ எனக்கு ‘டேட்ஸ்’’ என்றாள்.

அவன் முகம் மாறியது.

பயணத்தைத் தவிர்ப்பதற்கென்றே அவள் சொன்ன பொய்தான் அது.

தன் பழிவாங்கும் படலம் முடியும் வரையில் அவனிடமிருந்து விலகி நிற்கவே முடிவு செய்திருந்தாள்.

‘‘ரொம்பவும் சோதிக்காதே கபிலா! இவ்வளவு நாள் நான் அவசரப்பட்டேனா?’’

‘‘இப்போ மட்டும் ஏன் அவசரமாம்?’’

‘‘இந்த மார்கழி மாதக் குளிரிடம் போய்க் கேள்!’’ என்று எழுந்து அவளருகே வந்தபோது _

வெஜிடபுள் சூப்புடன் பியூன் உள்ளே வந்தான்.

இருவருக்கும் ஊற்றித் தந்து விட்டுப் போனான்.

ஒரு வாய் பருகியிருப்பாள். குமட்டிக் கொண்டு வந்தது.

அந்த அறையின் ஓரத்திலிருந்த வாஷ் பேசினில் குபுக் கென வாந்தி யெடுத்தாள்.

‘‘கபிலா! என்ன ஆச்சு? டாக்டரை கூப்பிடட்டுமா?’’

‘‘வே... வேண்டாம் சார். பிரேக் பாஸ்ட்ல ஆம்லெட் சாப்பிட்டேன். ஒத்துக்கொள்ளலை. வெறும் வாமிட்தான்.’’ என்றாள்.

மௌத் வாஷ் செய்து திரும்பினாள்.

‘‘இட்ஸ் ஆல் ரைட்.

நீ கிளம்பு. பெங்களூர் ட்ரிப் முடிஞ்சதும் உன்னை சந்திக்கிறேன்.’’ என்று அனுப்பி வைத்தான்.

அவளுக்குத் திகிலாய் இருந்தது.

பிரளயத்துடன் வெளியே வந்தாள். அருகிலிருந்த லேடி டாக்டரை சந்தித்தாள்.

‘‘கன்கிராஜ்லேஷன் கபிலா! நீங்க கன்ஸீவ் ஆகியிருக்கீங்க.’’

‘‘டா...க்....டர்?’’

‘‘யெஸ். நீங்க தாயாகப் போறீங்க.’’

_ அந்த வார்த்தையைக் கேட்டு திகிலும் மகிழ்வும் அவளைச் சூழ்ந்தது.

மனம் தடுமாறியது. மனம் முழுவதிலும்... மதுவின் நினைவுகள்...

‘‘நாங்க ரெண்டு பேரும் நேசிக்கிறோம். மனசார விரும்பறோம். எங்களை நீங்கதான் சேர்த்து வைக்கணும் மாமா... ப்ளீஸ்... எங்களை பிரிச்சிடாதீங்க...’’

_ எனக் கெஞ்சினாள் கபிலா.

சிராஜ் யோசித்தான். சட்டென அவன் முகம் சகஜ நிலைக்குத் திரும்பியது.

‘‘உங்க காதல் எவ்வளவு தீவிரமானதுன்னு தெரிஞ்சிக்கவே கோபப்படுற மாதிரி நடிச்சேன். ‘கவலைப்படாதீங்க’ உன் பேர் என்னப்பா?’’

‘‘மது.’’

‘‘மது... என்னை மறுபடி வீட்டில் வந்து பார். எங்க கம்பெனி எம்.டி.கிட்டே சொல்லி... உனக்கொரு நல்லவேலைக்கு ஏற்பாடு செய்றேன்...’’

_சிராஜ் சொல்ல கபிலா வியந்தாள். ‘‘சார்...’’ என தழுதழுத்தான் மது.

எல்லாம் நடிப்பு என்பதை அந்த அப்பாவி மனிதர்கள் உணரவில்லை.

அவர்கள் வாழ்வை குழிதோண்டிப் புதைக்கும் சிராஜின் கள்ளத்தை அவர்கள் எப்படி அறிய முடியும்?

பாறைக்குள் இப்படியரு ஈரத்தை கபிலா எதிர்பார்க்க வில்லை.

இருவரின் இனிய சந்திப்பும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன...

ஒருநாள்...

மழையில் முழுக்க நனைந்தபடி வந்தான் மது.

கபிலா தனியாக இருந்தாள்.

அவள் அக்கா சந்தியாவும் _ சிராஜும் அவசர வேலையாக வெளியே போயிருந்தனர்.

‘‘மது.... வாங்க. இப்படி நனைஞ்சிட்டீங்களே...?’’ எனக் கேட்டபடி தாவணித் தலைப்பை எடுத்து அவன் தலையை துவட்டி விட்டாள்...

வெளியே ‘சோ’ வென மழை கொட்டியது.

‘‘மது...’’

‘‘என்ன கபிலா?’’

‘‘எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு?’’

‘‘எதுக்கு?’’

‘‘நம்மை மாமா பிரிச்சிருவாரோன்னு.’’

‘‘நமக்கு ஆதரவாதானே பேசினார்?’’

‘‘அதெல்லாம் நடிப்புதான்னு உள்மனம் சொல்லுது மது...’’

‘‘வீணா பயப்படாதே கபி...’’

‘‘இல்லை மது... உள்மனம் சொல்லுது. நாம தனித்தனியா இல்லாம ஒன்னா ஆகிட்டா... நம்மை பிரிக்க முடியுமா?’’

‘‘கபி...!?’’

‘‘ஒரு பெண்ணே இந்த முடிவை எடுப்பதில் அதிர்ச்சியா இருக்கலாம் மது... மனசால எப்பவோ இணைஞ்சிட்ட நாம உடலால இணைஞ்சிட்டா... என்னை உங்ககிட்டேருந்து யாராலும் பிரிக்க முடியாது மது...’’

‘‘கபி! பிரிவை எண்ணி பயப்படுகிறாய். நானும்தான். மனசின் அலையில் ஆசை ஒரு கல். விழுந்தது. மூழ்கியது. கல்லாய் நீந்தலாம். கனவாய் மிதக்கலாம். வரைமுறைக்குட்பட்ட எல்லாமே புனிதம் தான். வா. கைகொடு. தொடு.’’ என்றான் மது...

ஈரக் கரங்களைப் பற்றிக் கொண்டாள். சிலிர்த்தது. வெளியே ‘மிளீர்’ என ஒரு மின்னல் அடித்தது.

அவன் ஈரமார்பில் சாய்ந்தாள். செவி மடலின் ஓரம் செவ்விதழ் பதித்து...

‘‘மதூ...’’ என்றாள்.

‘‘என்ன கபி?’’

‘‘காதில் ஒரு கவிதை வேணும்!’’

‘‘இப்பவுமா?’’

‘‘இப்பவும். இனியும்.’’

அவள் தோள்களில் வாகாய் முகம் பதித்துக் கொண்டு அப்படியே வெகுநேரம் இருந்தான்.

மெல்ல முகம் நிமிர்த்தி அவள் செவியருகே இதழ்பிரித்துச் சொன்னான்...

‘‘...காற்றுப் பையில் கருகொண்டு

கனியும் மனிதன் ஒரு வண்டு!

கூற்றுக் களமோ உடல்மேடை

கூடும் ஆசை நாடகமே!

ஆற்றுத் தண்ணீர் அலைபோல

ஆடும் மனதில் ஆசையெழ...

மாற்றுத் திருவே மனிதனென

மகிழ்ந்தான் துயரில் விதையாகி!

போற்றும் காதல் மானிடர்க்கு

போகம் யோகம் புனிதம் தான்!!

_ ஒரு மந்திரத்தைப் போல உச்சரித்து நிறுத்த... சட்டென அவன் முகம் ஏந்தி முத்த மழை பொழிந்தாள்.

புதைந்து புதைந்து இழைந்தாள். பொலபொலவென நீர்த்துளி. கண்ணீர்த்துளி. வெளியே மழை இரைச்சல். இன்னும் இன்னும் இருவரும் இறுகினர்...

அதுதான் அன்று நடந்தது. நடந்ததின் விதைதான் அவள் வயிற்றில்.

அந்த சம்பவம் நடந்தவுடனேயே சாமி படத்தின் முன் நிறுத்தி அவள் கழுத்தில் தாலி ஒன்றையும் கட்டினான்.
________________________________________

8
லேடி டாக்டர் சொன்ன அதிர்ச்சியான செய்தியைச் சுமந்தபடி வீடு வந்தாள் கபிலா.

தான் கர்ப்பமாகியிருக்கும் விஷயத்தை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என முடிவு செய்தாள்.

கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தபோது _

சிராஜ் _ சந்தியா இருவரும் நின்றிருந்தனர்.

குழப்பத்துடன் பார்த்தாள்.

‘‘அக்கா! எப்ப வந்தீங்க? என்ன இவ்வளவு தூரம்?’’

‘‘உ....ன்னை கூட்டிட்டுப் போகணும்னு இவர் சொல்றாரு.’’ _ என்றாள் சந்தியா!

‘‘அக்கா! நீ என்ன செய்வே? பாவம். வாயில்லா பூச்சியா வதைபடுறே! உனக்கு உன் கணவன் சொல் வேதமா இருக்கலாம். நான் அங்கே வரமுடியாது. வர மாட்டேன்.’’ என்றாள் கபிலா.

முன்பு நடந்ததை மறந்து விடவில்லை அவள்.

சிராஜ்... அவள் அக்காவின் கணவன் மட்டுமல்ல. அயோக்கியன்!

அந்த மழை நாள் சம்பவத்திற்குப் பிறகு, மது... வீட்டிற்கு வந்திருந்தான்.

அன்றே மாதவ்குமாரும் வந்திருந்தான். சிராஜ் மதுவை அறிமுகப்படுத்தினான்.

வேலை தருமாறு கேட்டுக் கொண்டான்.

‘‘நாளை கம்பெனிக்கு வா. அப்பாயின்மென்ட் ஆகிக் கொள்.’’ என்றான் மாதவ் குமார்.

போனான். வேலையில் சேர்ந்தான் மது. கபிலாவின் மேல் மாதவ் குமார் கண் வைத்துள்ளதை அவன் அறியான்.

நாட்கள் நகர்ந்தது.

கபிலாவைச் சந்திக்க மது வருவது நின்றது.

சிராஜ்தான் அந்த தகவலைச் சொன்னான்.

‘‘இருபத்தஞ்சாயிரம். கம்பெனி பணம். பாங்க்ல கட்ட அனுப்பினோம். தலை மறைவாகிட்டான். மதுவை இப்போ போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது.’’ என்றான்.

அதிர்ச்சியில் உறைந்தாள் கபிலா.

அவன் செய்திருக்க மாட்டான். இதில் மர்மம் இருக்கிறது.

கைதான செய்தியை கேட்டு, சிறைச்சாலை சென்று, மதுவைப் பார்த்தாள்.

‘‘என்ன நடந்தது மது?’’ என கண்ணீருடன் கேட்டாள்.

பணத்துடன் போனான். பாதிதூரம் போயிருப்பான். டாக்ஸி வந்தது.

அவனை உரசி நின்றது. சட்டென அவனை சிலர் உள்ளே இழுத்துப் போட்டதுதான் தெரியும்.

நான்கு நாட்கள் அடைத்து வைத்திருந்தனர். அதே ஆட்கள் அவனை வெளியே விட்டனர். அடுத்த நிமிடம் _

போலீஸ் ஜீப் ஒன்று அவனருகே வந்து நின்றது. அவனை அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றது.

கையாடல் வழக்கு போட்டு, சிறைக்கு அனுப்பியது.

கம்பியைப் பற்றிக் கொண்டு அழுதான்.

‘‘நீ சொன்னது உண்மை கபிலா. சதி, எல்லாம் சதி. நம்மை பிரிக்க உன் மாமன் இந்த நாடகத்தை நடத்திவிட்டான். நீ மட்டும் ஜாக்கிரதையாய் இரு கபிலா...’’ என்றான்.

சொட்டுச் சொட்டாய் கண்ணீர். அவள் கரங்களை அழுந்தப் பிடித்துக் கொண்டான். வார்த்தை வரவில்லை.

அவனுக்கு ஆறுதல் சொல்லித்திரும்பிய நிகழ்ச்சி இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.

சிராஜ் ஒரு வஞ்சகன். மதுவை தன்னிடமிருந்து பிரிப்பது அவன் சூழ்ச்சி.

மாதவ் குமாரிடம் தன்னை அடகுவைத்து தானும் அந்தக் கம்பெனியில் பார்ட்னராக நினைப்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாள்.

இதோ....

இப்போதும் அதே எண்ணத்தோடுதான் தன்னை வீட்டிற்கு அழைக்கிறான்...

நீண்ட அமைதிக்குப் பிறகு _

‘‘ஏன் வர முடியாது?’’ என்றான் சிராஜ்.

‘‘மிருகம் வாழும் கூண்டுக்குள்ளே மிருதுவான ஒரு பெண் எப்படி வரமுடியும்?’’

‘‘என்னடி சொன்னே...’’ _ அவன் கையை ஓங்க.

அவள் தடுத்தாள்.

‘‘கோவில்ல வச்சு மது எனக்குக் கட்டிய தாலியை... அறுத்து, தெருவிலே வீசினே! அவர் மேல பொய் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பி வெச்சே. நான் மேஜர் ஆகலைங்கற ஒரே காரணத்தாலே உன் அக்கிரமத்தை சகிச்சேன். ஆனா, இப்போ...’’

‘‘என்னடி செய்வே?’’

‘‘இப்ப நான் மேஜர். நீ போன அதே போலீஸை நானும் கூப்பிடுவேன். என்னைக் கடத்த முயற்சி பண்றதா புகார் கொடுப்பேன்’’ என்றாள்.

அவனுக்கு முகம் இருண்டது. ஆனாலும் சமாளித்தபடி,

‘‘திருட்டுத் தாலிய அறுத்தெறிஞ்சேன். அதிலே தப்பென்னடி?’’ மாதவ் குமார் உன்மேல உயிரையே வச்சிருக்கார். நீ மட்டும் சம்மதிச்சா... ராணியாகலாம். கம்பெனியின் பார்ட்னராகலாம்.’’

‘‘.................’’

‘‘இந்த பஞ்சப்பரதேசி குடும்பத்திலே இருந்தியானா... உனக்கு என்ன சுகம் கிடைக்கும்?’’

_ என்றான் சிராஜ்.

‘‘மிஸ்டர்! இவ்வளவு நாளா மாமாங்கற உறவு முறைல இருந்தீங்க! இப்போ, மாமா வேலையே பார்க்க ஆரம்பிச்சிட்டீங்க!’’

_ சொல்லி நிறுத்திய நிமிஷத்தில் கபிலாவின் குழலைக் கொத்தாகப் பிடித்தான் சிராஜ்.

குருவரதன் எழுந்து வந்தார். எங்கிருந்து அவ்வளவு ஆவேசம் வந்ததோ!

‘‘இத பாருய்யா! ரகசியமா தாலி கட்டினாலும்... இப்ப இவ என் மருமக. என் மருமகள் மேல கை வைக்க நீ யாரு..? கையை எடு முதல்லே...! இல்லே...’’ என்றவர் சட்டென அரிவாள் மனையைத் தூக்கி வந்தார்.

இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

சிராஜ் அதிர்ந்து நின்றான்.

ஆத்திரம் எல்லை மீறியது.

‘‘ஹாஸ்டல்ல தங்கப்போறேன்னு நீ சொன்னப்பவே நெனச்சேண்டி. சம்பாத்தியம் இருக்கறதாலே சவால் விட்டுப் பார்க்கிறே. அதுக்கே வழி இல்லாம பண்ணிட்டா... நீ என் வழிக்கு வந்துதானே தீரணும்....’’

_ என்றவன் சந்தியாவை இழுத்துப் போனான்.

மங்கை _ குருவரதன், மௌனிகா மூவரையும் பார்த்தாள் கபிலா!

தனக்காக அவர்கள் போராட வந்ததால் ஏற்பட்ட நெகிழ்ச்சியில் கண்ணீர் சுரந்தது.

மங்கை அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
________________________________________

9
அலுவலகம்.

‘‘குட்மார்னிங் கபி!’’ என்றான் நிலவரசன்.

‘‘குட்மார்னிங்..’’

‘‘ஆமா. நீங்க என்ன மர்மப் பெண்ணா?’’

‘‘ஏன்?’’

‘‘திடீர்னு வர்றீங்க. போறீங்க. லீவ் எடுக்குறீங்க! ஏன் நேற்று ஆப்சென்ட்?’’

‘‘ஒருவகையில நீங்க சொல்றது கூட உண்மைதான்.’’

‘‘எது உண்மை?’’

‘‘மர்மம்.’’

‘‘புரியலையே?’’

‘‘நானே மர்மம்தான். எனக்குள் நிறைய மர்மம். நேற்று... நான் ஜெயிலுக்குப் போயிருந்தேன்.’’

‘‘ஜெ...யிலுக்கா?’’

‘‘ஆமா.’’

‘‘எதுக்காக?’’

‘‘ஒரு ஜீவனின் விடுதலைக்காக நிலவரசன்... அட்ரஸ் சொல்றேன். சாயந்திரம் வீட்டுக்கு வாங்க. மர்மத்தோட முன்னுரை உங்களுக்குக் கிடைக்கும்.’’

என்றவள் முகவரி சொல்ல, அவன் இன்னும் அதிர்ச்சியிலேயே இருந்தான்.

முகத்தின் முன் கையை அசைத்து,

‘‘ஹலோ நிலா! என்ன ஆச்சு?

இது எத்தனைன்னு சொல்ல முடியுமா?’’

ஐந்து விரல்களைக் காட்டி கேட்டாள்.

_ வெ. தமிழழகன், சேலம்.

விழிப்புற்றவன் சட்டென சொன்னான்.

‘‘நாலே முக்கால்!’’

‘‘நாலே முக்காலா? எப்படி?’’

‘‘சுண்டு விரல் சின்னதா இருக்கே அதனாலே!’’

_ அவன் அப்பிராணியாய் சொல்ல, அந்த மனோநிலையிலும் சட்டென சிரித்து விட்டாள்.

‘‘நிலா! உங்ககிட்டே எனக்கு இந்த குழந்தைத்தனம் ரொம்ப பிடிச்சிருக்கு. எப்பவும் குழந்தைத்தனமாவே இருக்கீங்களே... இதுக்குக் காரணம் என்ன?’’

‘‘ஓ... அது வா? அது ஒண்ணுமில்லே... நான் இப்பவும் புட்டிப்பால் தான் குடிக்கிறேன். அதுதான்!’’

_ நிலவரசன் சொல்ல, மீண்டும் சிரித்தாள்.

மாதவ் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது. போனாள்.

அவளை அழைத்து அமர்த்திக் கொண்டு காரைச் செலுத்தினான் மாதவ் குமார்.

‘‘கபி! ஏன் ஒரு மாதிரியா இருக்கே?’’ _ கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்தபடியே கேட்டான்.’’

‘‘அதை உங்ககிட்டே சொல்லலாமா? நம்புவீங்களா?’’ என்றாள் கபிலா.

‘‘நீ சொல்லி நான் நம்பாமலா? சொல்லு.’’

‘‘நான் யாரு? உங்களுக்கே, உங்களுக்கென்று காத்திட்டிருக்கும் ஜீவன்!’’

‘‘ஆமா, யாரு இல்லேன்னா?’’

‘‘எ... என்னை... என்கிட்டே ஒருத்தன் தப்பா நடக்க முயற்சி செய்தான்.’’

‘‘யாரு? யார் அவன் சொல்லு! இப்பவே முடிச்சிடுறேன்.’’

‘‘பாத்தீங்களா! இதுக்காகதான் சொல்லத் தயங்கினேன். ஆத்திரப்படாதீங்க. அது வேற யாருமில்லே. என் அக்கா கணவன் சிராஜ்தான்!’’

_ அவள் சொல்ல அவன் சடாரென பிரேக் அடித்தான்.

‘‘ராஸ்க்கல்... என்ன பண்ணினான். நடந்ததை சொல்லு.’’ என்றான் மாதவ் குமார்.

அவள் யோசித்தாள். இதுதான் சமயம். சிராஜ் தன்னைப் பற்றி இவனிடம் சொல்லி விட்டால்... தன் லட்சியம் நிறைவேறாது. பழிவாங்க முடியாது. எனவே, சிராஜ் முந்திக் கொள்வதற்குள், அவன் மீது வெறுப்பை ஏற்படுத்தி விட்டால்.. இரு அயோக்கியர்களில் _ முதலில் ஒருவனை ஒழித்துவிடலாம். பிறகு, இவனை...

_ என நினைத்தவள், சட்டென கண்ணீரை வரவழைத்துக் கொண்டாள்.

‘‘அக்கா மார்க்கெட் போயிருந்தாங்க. தனியே இருந்தேன். சிராஜ் வந்தான். ஆசைக்கு இணங்கும்படி சொன்னான். மறுத்தேன். சமயத்தில் அக்கா மட்டும் வராவிட்டால்... நான் உங்களுக்குக் கிடைத்திருக்க மாட்டேன்...’’

_ எனக் கூறி விசும்பினாள்.

‘‘நீ எதுவுமே சொல்லலையா கபிலா?’’

‘‘சொன்னேன். நான் மாதவ் குமாரின் உடமை. என்னைத் தொட உனக்கு உரிமை இல்லைன்னு சொன்னேன்.’’

‘‘அவன் என்ன சொன்னான்?’’

‘‘அவன் ஜாதகமே என் கைல. நான் தொட்ட பிறகுதான் அவன் உன்னைத் தொடணும். அப்படி என்கிட்டே பகைச்சிட்டா... அவன் ஜாதகத்தையே... கடத்தல் ரகசியங்களையே வெட்ட வெளிச்ச மாக்கிடுவேன்னு சொன்னான்...’’

‘‘அப்படியா சொன்னான்?’’

‘‘ஆ... மாங்க மாதவ்.’’ என்றவள் போலியாகக் கண்ணீர் வடித்தாள்.

‘‘ஓ.கே. கபி! அவனை நான் பார்த்துக்கறேன். என்கிட்டேயே மோதப் பார்க்குறானா? நீ பயப்படாதே! நீ எப்போ எனக்கு அர்ப்பணமாகப் போறே?’’

‘‘விரைவிலே!’’

‘‘அப்படின்னா... அதுக்கு அச்சாரமா என்கூட ஹோட்டல் வர்றே.. டின்னர் சாப்பிடுறே!’’

‘‘ஒரு ரிக்வெஸ்ட்.’’

‘‘என்ன?’’

‘‘மதியம் ஹெவியா சாப்பிட்டாச்சு அதனால...’’

‘‘நோ, நோ... டின்னர் எடுத்துக் காட்டி பரவால்லே. பாதாம் கீர்னா உனக்கு ரொம்பப் பிடிக்குமே! அதை மட்டுமாவது சாப்பிட்டுப் போ.’’

‘‘சரி.’’

_ கார் ஒரு ஹோட்டலில் நின்றது.

உள்ளே சென்று, எதிர்எதிரே அமர்ந்தனர்.

‘‘இப்படி, பக்கத்திலே வந்து உட்கார் கபிலா!’’

‘‘வேண்டாங்க....’’

‘‘ஏன்?’’

‘‘எதிர் எதிர்லே உட்கார்ந்தாதான் முகத்தை முழுசாப் பார்த்துக்கிட்டே இருக்கலாம், பேசலாம்.’’

‘‘ரொம்பவும் கட்டுப் பெட்டியா இருக்கியே!’’ என்றவன் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தவன், ‘‘அடடா!’’ என அதிர்ந்தான்.

‘‘என்னங்க மாதவ்?’’ என்றாள் கபிலா!

‘‘பர்ஸ் கார்லயே இருக்கு. எடுக்காம வந்திட்டேன்.’’

‘‘அவ்வளவு தானே! பணம் என்கிட்ட இருக்கு. நானே ‘பே’ பண்ணிக்கிறேன்.’’

‘‘நோ, நோ. நான்தான் தரணும். அதுதான் முறை. பர்சை மட்டும் எடுத்து வந்திடு.’’

_ சர்வர் இரண்டு பாதாம் கீர் கொண்டு வந்து வைத்துப் போனான்.

கபிலா எழுந்துபோய் காரிலிருந்த பர்ஸ§டன் திரும்பினாள்.

சிரிப்புடன் அவளைப் பார்த்து ‘‘தேங்க்ஸ் கபிலா! நீ நடந்து வர்ற அழகு இருக்கே... அதைச் சொல்ல வார்த்தையே இல்லை!’’

‘‘ஏற்கெனவே பாதாம்கீர்ல ஐஸ் ரொம்ப அதிகமா இருக்கு...’’

‘‘அதனாலதான் சொல்றேன். சீக்கிரம் சாப்பிடு’’ என்றான் மாதவ்.

நடக்கப்போகும் விபரீதம் அறியாத கபிலா மிகவும் ரசித்துப் பருகினாள்.
________________________________________

10
ககபிலா கொடுத்த முகவரியை கண்டுபிடித்து படியேறினான் நிலவரசன்.

உள்ளே பேச்சுக்குரல். அப்படியே ஜன்னலருகே நின்றான். ஒரு பெரியவர் பேசிக் கொண்டிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது.

குருவரதனின் பழைய நண்பர்தான் அந்தப் பெரியவர்.

‘‘பழை நட்பு விடுபடக் கூடாதேன்னுதான் வந்தோம். இப்பதான் கேள்விப்பட்டோம். உங்க மகன் மது... திருடனாம். ஜெயில்ல இருக்கானாம். ஒரு திருடனோடத் தங்கச்சிய... எங்க மருமகளா ஏத்துக்க முடியாது. வர்றோம்.’’

_ என்றவர் துண்டை உதறி தோளில்போட்டுக் கிளம்பினார். அவருடன் வந்தவர்களும் போய் விட்டனர்.

மங்கை தன் கணவனை நெருங்கினாள்.

‘‘எ...ன்னங்க.. நம்ம பையன் திருடன்னு நம்ப வச்ச பாவிகளாலே வாயில்லா பெண்ணுக்கு வாழ்க்கை இல்லைன்னு ஆயிடுச்சிங்க... அவமனசு என்ன பாடுபடும்னு...’’ _ வார்த்தையை முடிக்கும் முன்பே குரல் தழுதழுக்க அழுதாள்.

குருவரதன் கல்லைப் போல தூண்மீது சாய்ந்திருந்தார்.

‘‘வஞ்சகர்கள் வாழ்கிற உலகம்மா இது. இதுல நம்மைப் போல நல்லவங்களுக்கு காலமில்லே. இப்போ, அதர்மம் தர்மத்தை ஆண்டுட்டு இருக்கு. தர்மம் அதர்மத்தை அழிக்கிற காலம் நிச்சயம் வரும்மா. அவ வாழ்க்கை அவ்வளவு தான்னா... அப்படியே போகட்டும். அதுக்காக, நமக்குன்னு ஒரு முயற்சியும் நம்பிக்கையும் இருக்கறதில்லையா? நடக்கிறது நடக்கட்டும். நம்பிக்கையோட இருப்போம்’’ என்று பெருமூச்சு விட்டார்.

சமையலறையிலிருந்தாள் மௌனிகா. மங்கை அவள் தோளைத் தொட்டாள்.

வார்த்தையில் பேச முடியாத மொழியை மௌனத்தில் பகிர்ந்து கொண்டனர்.

தாயிடம் சொல்லிக் கொண்டு மருத்துவமனை புறப்பட்டாள் மௌனிகா.

ஜன்னலருகே அதிர்ச்சியும், குழப்பமுமாக நின்றிருந்த நிலவரசன் அவளைக்கண்டு திகைத்தான்!

இவள் யார்?

தனக்கொரு தங்கை இருப்பதாக கபிலா இதுவரை சொல்லியதில்லையே?

முன்பு நடந்த சம்பவத்தால் வீட்டுக்குள் போக அவன் விரும்பவில்லை.

திரும்பி நடந்தான்.

மௌனிகாவை சமீபித்து,

‘‘கபிலா இல்லையா?’’ எனக் கேட்டான்.

‘இல்லை’ என தலையசைத்தாள்.

‘‘எங்கே?’’

மருத்துவமனையில் இருக்கிறாள் என்பதை சைகையால் செய்து உணர்த்தினாள்.

‘‘நான் அவுங்ககூட வேலைபார்ப்பவன். உங்களோட நானும் வரலாமா?’’

‘‘வரலாம்!’’ என தலையசைத்தாள்.

இருவரும் மௌனமாய் நடந்தனர்.

மருத்துவமனை வந்தது.

அவனைப் பார்த்ததும், ‘‘நிலா! நீங்களா?’’ என்றாள்.

‘‘என்னாச்சு கபிலா?’’

‘‘என்னென்னவோ ஆச்சு நிலா! இதெல்லாம் தெரியப்படுத்துற சங்கதி இல்ல.’’

_ அவள் விழிகள் கலங்கியது. திரும்பி மௌனிகாவைப் பார்த்தாள். ப்ளாஸ்க்குடன் வெளியே நடந்தாள்.

‘‘என்னை ரொம்பவுமே சோதிக்குறீங்க கபிலா! எந்த விஷயத்தையும் பகிர்ந்துக்கற அளவு என் நட்பு உண்மையானதில்லையா? உங்க நம்பிக்கைக்கு பாத்திரமானவனா என்னை ஏற்கத் தோணலையா?’’

‘‘இல்லை... நிலவரசன்... சரி. எப்பவோ தெரியப் போற விஷயம். இப்பவே தெரியட்டும். எ...னக்குள்ளே ஒரு மரணம் நிகழ்ந்திருக்கு.’’

‘‘மரணமா? என்ன சொல்றீங்க கபிலா?’’

‘‘வயித்துல உண்டாகியிருந்த கரு. அபார்ஷனாகிடுச்சி...’’

அவள் சொல்ல, ‘‘கபிலா!’’ என அதிர்ந்தான். அந்த கட்டிடமே சுழல்வது போல இருந்தது. அப்படியே நொறுங்கிப் போனான்.

‘‘அதிர்ச்சியாத்தான் இருக்கும். என் வாழ்க்கையில் புயல் சூழ்ந்துள்ளது. சிக்கலை விடுவிக்கும் சிலந்தியைப் போல நான் தவிக்கிறேன். இந்த நேரத்தில்தான் இப்படியரு சிதைவு...’’

_ அவள் சொல்ல, இவன் மௌனித்தான். அவள் கருவுற்றிருந்தாள் என்ற செய்தி அவனை ஸ்தம்பிக்க வைத்திருந்தது.

இதுவரை அவனுக்குத் தெரியாத எல்லா உண்மைகளையும் _

மதுவுடன் தனக்கு ஏற்பட்ட காதல்... சிராஜ் _ மாதவ் குமாரின் கூட்டு சதி... மது இப்பொழுது சிறையில் இருப்பது... அவனது குடும்பத்தை இப்போது _ தான் காப்பாற்றி வருவது உட்பட சொல்லி முடித்தாள்...

மௌனிகா ப்ளாஸ்க்குடன் உள்ளே வந்தாள். பாலை ஊற்றி, இருவரிடம் இரண்டு கப்புகளை நீட்டினாள்.

‘‘அப்போ.... என்னை நீங்க வீட்டிற்கு வரச் சொன்னது?’’ என குழப்பத்துடன் கேட்டான்.

‘‘அது... என் விஷயமா இல்லே. ஒரு பெண் விஷயமா...!’’

‘‘வாட்?’’

‘‘ஆமா. இதோ, அமைதியா... அழகுச் சிலையா நிற்கிறாளே மௌனிகா... இவள் விஷயமாத்தான்!’’

‘‘.................’’

‘‘நான் உங்களை நிர்பந்தப் படுத்தறதா நினைக்க வேண்டாம் நிலா! வாய் பேச முடியாததாலே வாழ்க்கையிழந்து தவிக்கிறா மௌனிகா!

...... இயலாத ஒருத்தருக்கு இதயபூர்வமா உதவறது என் லட்சியம்னு சொல்வீங்களே... அது உண்மைன்னா... நீங்க ஏன் மௌனிகாவிற்கு வாழ்க்கை தரக் கூடாது?’’

எனக் கேட்டாள் கபிலா.

சற்றுமுன் மௌனிகாவை நிராகரித்து; மாப்பிள்ளை வீட்டார் எழுந்து போன காட்சி மனதில் வந்து போனது...

‘‘...................’’

‘‘சத்தியம் தர்மம்னு வாழ்ந்த குடும்பம் சில அதிகாரப் பாவிகளால சதிராடுது நிலா. உண்மை சொல்லிட்டேன். யோசிச்சு முடிவு சொல்லுங்க....’’ என்றாள் கபிலா.

அவன் மனம் தராசுத் தட்டுகளைப் போல தத்தளித்தது.

காதலைத் துறந்து விடக் கூடாதே என்பதற்காகக் கற்பை தியாகம் செய்தது..., காதலன் சிறைக்குப் போனதால்... அவன் குடும்பத்தை காப்பாற்றுவது... அவன் தங்கைக்கும் வசந்தமான ஒரு வாழ்வை அமைத்துக் கொடுக்க துடிப்பது... இப்படி கபிலாவின் உன்னதமானப் போராட்டத்தை அசை போட்டுப் பார்த்தான் நிலவரசன்.

‘‘ஒரு தடவை பிறப்பு. ஒரே முறை இறப்பு. வாழ்ற காலம் வாழ்க்கைக்கு பயனுடையதா இருக்கணும் கபிலா! உங்களுடைய தியாகத்துக்கு முன்னால... நான் செய்யப் போறது சாதாரண விஷயம்தான். மௌனிகாவோட கழுத்துல நான் எப்ப தாலி கட்டணும்?’’

_ உணர்ச்சிப் பூர்வமாய், மனப் பூர்வமாய் அவன் கேட்க...

‘‘நிலா... நீங்க ரொம்ப உயர்ந்துட்டீங்க நிலா... வாழ்க்கையால நன்றி சொல்லப்போற உங்களுக்கு... வெறும் வார்த்தையால எனக்கு நன்றி சொல்லத் தெரியல...’’ என நெகிழ்ந்து, உருகி... கண்ணீர் கசிந்தவள்...

‘‘மௌனிகா... உனக்கு... உனக்கு... வாழ்க்கை தரும் தெய்வம் இவர்தாம்மா... கும்பிட்டுக்கோ!’’ என்றாள்.

மௌனமாக நின்றாலும், பேச்சின் அர்த்தம் புரிந்து கொண்ட மௌனிகா சட்டென அவனை விழுந்து வணங்கினாள்.

நன்றியாக... கண்ணீர் விட்டாள்.

அவன் அவள் தோளைத் தொட்டு தூக்கி நிறுத்தினான்.

ஒரு கூடைப் பூக்களை தலையில் கொட்டியது போல அவள் மனதில் பரவசம்.
________________________________________

11
எதுவுமே நடவாதது போல அலுவலகம் வந்தாள் கபிலா.

பத்து நாட்கள்! இமைக்கும் நேரத்தில் போய் விட்டது.

மாதவ் குமார் அவளை அழைத்தான்.

‘‘உடம்புக்கு என்ன?’’ என்று விசாரித்தான்.

‘‘காய்ச்சல்தான்!’’ என்றாள். இயல்பாகப் பதில் பேசினாள்.

இரண்டு கடிதங்களை டிக்டேட் செய்துவிட்டு ரவுன்ட்ஸ் புறப்பட்டான்.

கபிலா உஷாரானாள்.

சிராஜ் வந்தான். மாதவ் குமாரும் அவனும் நிசப்தமான பகுதிக்கு வந்தனர்.

அரவமற்ற இடம் அது.

அறைக்குள் அவர்கள் புகுந்து கொண்டு கதவை மூடியதும், டாய்லெட் பக்கம் சாய்ந்திருந்த கபிலா, சாவித் துவராம் வழியே கண் வைத்துப் பார்த்தாள்.

பெட்டியில் அடுக்கப்பட்ட போதைப் பொருள்கள்!

‘‘இதைத்தான் கடத்தப் போறோமா சார்?’’

‘‘ஆமா, சிராஜ்! இந்த முறை பொருளோட மதிப்பு 50 லட்சத்தைத் தாண்டும். அதனால...’’

‘‘அதனாலே?’’

‘‘போலீசுக்கு போன் பண்ணி தகவலைச் சொல்லிட்டே தில்லா _ த்ரில்லா இதை கடத்தப் போறோம்!’’

‘‘போலீசுக்குச் சொல்லிட்டு எப்படி கடத்த முடியும்?’’

‘‘கிட்டே வா.’’ என்றவன் சிராஜின் காதில் ஏதோ சொல்ல, அவன் முகம் மலர்ந்தது.

பெட்டியிலிருந்த பௌடர் பாக்கெட்டுகளை ப்ரீப்கேஸில் அடுக்கிக் கொண்டான் சிராஜ்.

‘‘நல்ல வழி. ஆனா, போலீசுக்குத் தெரியப்படுத்துற விஷப்பரீட்சை தேவையா?’’

‘‘தேவையில்லைன்னா விட்ருவோம். சில சட்ட விரோத கும்பலுக்கு இது உடனடியா தேவை. பெங்களூருக்கு கொண்டுபோய் சேர்த்திடு.

முப்பதாம் தேதி புது சரக்கு வருது. அன்டர் கிரவுன்ட் அறையிலே பதுக்கப் போறோம். மறுநாளே கடத்தப்போறோம். இதுமட்டும் முடிஞ்சிட்டா நமக்குக் கிடைக்கப் போறது ஒரு கோடி. உனக்கு அதில் பாதி.’’ என்றான் மாதவ் குமார்.

‘‘நிஜமா வா சார்?’’

‘‘என் பார்ட்னரா ஆகப் போறவன் கிட்டே பொய் சொல்வேனா? அப்புறம் இன்னொரு விஷயம்...! கபிலாவை என்ன செய்தே?’’

‘‘நான்... ஒண்ணும் பண்ணலையே சார்?’’

‘‘அப்படின்னா... அவ வயிற்றில் வளர்ந்த கரு யாரோடது?’’

‘‘நீங்க என்ன சொல்றீங்க?’’

‘‘கபிலா கர்ப்பமாகியிருந்தா...’’

‘‘நி.... ஜமாவா?’’

‘‘சந்தேகமா யிருந்தா டாக்டர் பிரபலா தேவியை போய் கேட்டுக்க...’’ என்றவன்,

அன்று.... வெஜிடபிள் சூப் குடித்தது... வாந்தி எடுத்தது... அவளை பின் தொடர்ந்து டாக்டர் பிரபலா தேவி மூலம் உண்மையை அறிந்தது... அனைத்தையும் சொன்னான்.

‘‘இந்த விஷயமே இப்ப நீங்க சொல்லிதான் தெரியும் சார். இப்பவே அவளை உண்டு இல்லைன்னு ஆக்கிடுறேன்.’’

‘‘அதுக்கு அவசியமில்லை.’’

‘‘ஏன் சார்?’’

‘‘அவ நமக்கே தெரியாம உண்டாகியிருக்கா... அவளுக்கே தெரியாம அதை நான் அழிச்சிட்டேன்.’’

‘‘எ....ப்படி சார்?’’

‘‘ஹோட்டலுக்கு கூட்டிப் போனேன். பாதாம் கீர் சாப்பிட வச்சேன். அதுலே... கரு கலைப்பு மருந்தை அவளுக்கே தெரியாம கலந்துட்டேன்.’’

‘‘..........................................’’

‘‘அதுக்குக் காரணம் யார்னு நானே கண்டுபிடிச்சுக்கறேன். அவளை காதலிக்கிற மாதிரி நடிச்சு எல்லாத்தையும் முடிச்சி.... பிசினஸ் பேச வர்ற பார்ட்டிக்கு அவளையே விருந்தாக்கலாம்னு நினைச்சேன். நினைப்பு தப்பாயிடுச்சு. பெங்களூர் ட்ரிப்பை முடிச்சிட்டு வா.... மத்ததை அப்புறம் பேசலாம்.’’

_ மாதவ் குமார் சொல்ல... இருவரும் கதவை நோக்கி வந்தனர்.

அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டு நின்ற கபிலாவின் நெஞ்சில் எரிமலை ஒன்று வெடித்தது.

‘கொலை பாதகா... உன்னைச் சும்மா விடமாட்டேன்.’ என கறுவியவள் சட்டென இடத்தை விட்டு அகன்றாள்.
________________________________________

12
‘‘நம்ம மௌனிகா வாழப் போறது இவரோடதான் அத்தை’’ என்றாள் கபிலா.

‘‘அ.......ப்படியா! வா...ங்க தம்பி!’’ என தழுதழுத்தாள் மங்கை.

‘‘மாமா...! நீங்களும் வாங்க! இவர்தான் உங்க வீட்டு மாப்பிள்ளை. நிலவரசன். என்கூட வேலை பார்க்கிறார்.’’ _ மீண்டும் கபிலா அறிமுகப்படுத்த, கட்டிலிலிருந்து எழுந்து வந்தார் குருவரதன்.

‘‘வாங்க... தம்பி. உங்களைப் பத்தி கபிலா ரொம்ப சொல்லியிருக்கு. வாய்ப் பேச முடியல. ஊமை. அதனால மௌனிகாவைப் பார்க்க வர்றவங்க நிராகரிச்சிட்டுப் போயிடுறாங்க.

... ஆனா, இப்போ... என் மகன் ஜெயில்ல இருக்கறதாலே...’’ என பேசத் திணறியவரை,

‘‘உங்க மருமக மூலமா எல்லாமே கேள்விப் பட்டிருக்கேங்க. எனக்கு வருத்தமெல்லாம் ஒரு வகையிலேதான்.’’

‘‘எந்த வகையிலே?’’

‘‘உங்க குடும்பத்தோட அறிமுகம் எனக்கு முன்னாடியே கிடைச்சிருந்தா... கல்யாணத்த முடிச்ச கையோட ஒரு பேரனையோ பேத்தியையோ உங்களுக்கு கொடுத்திருப்பேன் இல்லையா?’’

_ எனக் கேட்க, குருவரதன் மெல்ல அவனை நெருங்கி, கரங்களைப் பற்றிக் கொண்டர்.

தழுதழுத்தார். சிலீரென கண்ணீர் பூத்தது.

‘‘நீ...ங்க நல்லாருக்கணும் தம்பி. உங்களுக்கு... நான் எப்படி நன்றி சொல்றது?’’

‘‘நல்லதை செய்றதுக்கு நன்றி சொல்லத் தேவையில்லங்க. முகூர்த்தத்தை குறிச்சிட்டு நீங்களே தகவல் சொல்லுங்க. முறைப்படி நிச்சயதார்த்தம் நடத்திடலாம்.’’ என்றான் நிலவரசன்.

கொல்லைப்புறமிருந்து குடத்தில் தண்ணீருடன் உள்ளே நுழைந்தாள் மௌனிகா. நிலவரசனைப் பார்த்ததும் அங்கேயே நின்று விட்டாள்.

முகத்தில் வெட்கம் பரவியது.

குடத்தை இறக்கி வைத்து விட்டு மரத்தூணின் பின்னே மறைந்து நின்றாள்.

அவனும் பார்த்தான். தூணில் மறைந்தவள் அரை முகப் பார்வை பார்த்தாள்.

பார்வைகள் பேசின.

கபிலா இதற்குள் காபி கலந்திருந்தாள். மௌனிகாவைக் கூப்பிட்டு அவள் கையில் கொடுத்தனுப்பினாள்.

நிலவரசன் அவளையே பார்த்திருக்க அவள் காபியை நீட்டினாள்.

எடுத்துக் கொண்டான். குடித்தான்.

கிட்டத்தட்ட முறைப்படி அவளைப் பெண் பார்க்கும் நிகழ்ச்சிபோலவே இருந்தது.

உண்மையும் அதுதான்.

அவனை அவர்கள் மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சிதானே அது?

‘‘நமக்கெல்லாம் வசதியான ஒரு நாள் பார்த்து குறிக்கிறதுலே எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லே. ஆனா, தங்கச்சி மேல உயிரையே வச்சிருந்த மது... அவன் இல்லாம கல்யாணம்ங்கறதுதான்... ரொம்ப வேதனையான விஷயமா இருக்கு...’’ என்றார் குருவரதன்.

‘‘ஆமா தம்பி! கபிலாவாலே எங்க பொண்ணுக்குக் கிடைச்ச வாழ்க்கை இது. இதைப் பார்க்க மதுவும் இருந்தா... ரொம்ப சந்தோஷப்படுவான்.’’ என்றாள் மங்கை.

கபிலாவிற்கும் அதுதான் தோன்றியது.

அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டுதானே இருக்கிறாள்!

‘‘இதைப்பத்தி நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க! மதுவுடைய விடுதலை நாள்தான் _ மௌனிகாவோட கல்யாண நாள்... குற்றவாளியா குறுகிப்போன மது... நிரபராதியா நிமிர்ந்து வரப் போறாரு... கல்யாண ஏற்பாடுகளை இப்போதிருந்தே செய்யத் தொடங்குங்க!’’ என்றாள் கபிலா.

‘‘மதுவோட விடுதலை விஷயமா நாம ஒரு முக்கியமான இடத்துக்குப் போகணும் வாங்க நிலவரசன்!’’ கபிலா அழைக்க, அவர்களிடம் விடைபெற்றுப் புறப்பட்டான்.

மாதவ் குமார் கடத்தல்காரன் என்பதை கபிலா மூலம் அறிந்த நிலவரசன் திடுக்கிட்டான்.

எதையும் மறைக்காது, ‘கருச்சிதைவு’ நிகழ்ச்சி வரையில் அவனிடம் சொன்னாள் கபிலா.

‘‘ப்ளடி ராஸ்க்கல்! மாதவ்குமார் இவ்வளவு அயோக்யன், ஆபத்தானவனா? இவனை என்ன செய்யணும் சொல்லுங்க கபிலா!’’

‘‘அவசரப்படாதீங்க. இப்போதைக்கு ஒரு போன் செய்யணும்.’’

‘‘யாருக்கு?’’

‘‘போலீஸ் கமிஷ்னருக்கு!’’

‘‘சரி, வாங்க.’’ _ இருவரும் பப்ளிக் டெலிபோன் பூத்’தில் நுழைந்தனர்.

எண்களை டயல் செய்து கொடுத்தான் நிலவரசன். ரிங் போயிற்று.

எதிர் முனையில் ‘ஹலோ’ குரல் கேட்டது.

‘‘சார்... நான் சொல்றது உண்மை. முழுசா கேளுங்க. 50 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்... பெங்களூர் கடத்தப்படுகிறது.’’ என்று.... லாரியின் எண், நேரம் எல்லாவற்றையும் சொன்னாள்.

சொல்லி ரிசீவரை வைத்தாள். வெளியே வந்தனர்.

‘‘நம்ம அடுத்த நடவடிக்கை என்னங்க கபிலா?’’

‘‘முப்பதாம் தேதியன்னிக்கு ஒரு கோடி மதிப்புள்ள சரக்கு வருது!’’

‘‘எங்கே?’’

‘‘நவயுகா எண்டர் பிரைசஸ் ஆபீசிற்கு!’’

‘‘சரி.’’

‘‘அதை ஒரு நாள் அங்கேயே பதுக்கி வைக்கிறாங்க. அந்த ஒரு நாளில்... பதுக்கிவைக்கப்பட்ட சரக்கில் பாதியை மட்டும் கைப்பற்றப் போறோம்.’’

‘‘எதுக்காக?’’

‘‘அந்த கெட்டவர்கள் ரெண்டு பேருக்கும் வலை பின்னுவதற்காக...’’

‘‘ஓ.கே. மீதியை நாளைக்குப் பேசலாம்.’’

_ நிலவரசன் கிளம்பினான்.

வீட்டில் நுழைந்தாள் கபிலா.

‘‘அம்மா, கபிலா!’’

‘‘என்னங்க அத்தை?’’

‘‘உன்னை நேசிச்சான்கற ஒரே காரணுத்துக்காக மதுவை ஜெயிலுக்கு அனுப்பினாங்க. அவங்களைப் பழிவாங்க நினைக்கிறே. எதுவும் விபரீதம் நடந்திடாதே?’’

‘‘அத்தை! பொய்க்கும் சத்தியத்துக்கும் இடையே நடக்கிற போராட்டம்தான் ‘உண்மை!’ அது விபரீதமானது மட்டுமில்ல, விசித்திரமானதும் கூட. மது உங்க மகன் மட்டுமில்ல. எனக்குக் கணவனும் கூட. அவரை மீட்க வேண்டியது என் பொறுப்பு. அவருக்காக உயிரைத் தரவும் நான் தயாரா இருக்கேன்.’’

‘‘உன் முயற்சி வெற்றி பெற ஆண்டவன் அருள்புரிவாம்மா. உடனே தொடங்கு’’ என்றாள் மங்கை.
________________________________________

13
வழுக்கைத் தலையுடன் உட்கார்ந்திருந்த போலீஸ் கமிஷ்னரைப் பார்த்து,

‘‘குட்மார்னிங் சார்’’ என்றாள்.

‘‘குட்மார்னிங். நேற்று போன் மெசேஜ் கொடுத்த கபிலா நீங்கதானா?’’

‘‘ஆ... மா சார்.’’

‘‘உங்களை இப்பவே அரஸ்ட் பண்ண முடியும். தெரியுமா?’’

‘‘எதுக்காக சார்?’’

‘‘பொய் தகவலை போன்ல சொல்லி... போலீஸ் டிபார்ட்மெண்ட்டை அலைக்கழிக்க வச்சதுக்கு’’

‘‘அது பொய் தகவல்னு எப்படி சொல்றீங்க சார்?’’

‘‘நீங்க சொன்ன நேரத்துக்கு, சொன்ன நம்பர் உள்ள லாரியை மடக்கி தரோவா செக் பண்ணினோம். அதுல எந்தவிதமான பொருளும் இல்லே. ஏன் பொய்த் தகவல் கொடுத்தீங்க?’’

கோபத்துடன் கேட்டபடி, இருக்கையை விட்டு எழுந்து வந்து டேபிள் விளிம்பில் சாய்ந்தபடி உட்கார்ந்தார்.

‘‘சார்! நீங்க ஏமாந்திட்டீங்க! லாரியின் அடிபாகத்துல வெளித் தெரியாத படி எக்ஸ்ட்ரா டேங்கர் பொருத்தி... அதுக்குள்ளே போதைப் பொருளை வைத்து கடத்தியிருக்காங்க!’’

‘‘உங்களுக்கு எப்படித் தெரியும்? இதை ஏன் சொல்லவில்லை?’’

‘‘காலையில்தான் இந்த விஷயம் எங்களுக்குத் தெரியும். இன்னொரு விஷயம் சார். லாரியிலே யார் இருந்தாங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?’’

‘‘லாரி டிரைவரும், அவன் கூட சிவராஜ்னு ஒருத்தனும் இருந்தாங்க.’’

‘‘அவன் பெயர் சிவராஜ் இல்லை சார், சிராஜ்! மந்திரி சந்திர நாதனுக்கு உறவுக்காரன்னு சொல்லியிருப்பானே?’’

‘‘ஆமா. இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்?’’

‘‘சிராஜ் என் அக்காவின் கணவன்தான். அவனும் அந்த மாதவ் குமாரும் சேர்ந்துதான் கடத்தல் செய்றாங்க.’’

‘‘ஸோ, அவுங்க ரெண்டு பேரையும் காட்டிக் கொடுக்க முடிவு செய்திருக்கீங்க இல்லையா?’’

‘‘நோ, சார்! உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனையும், தண்டனையை அனுபவிச்சிட்டிருக்க, நிரபராதிக்கு விடுதலையும் வாங்கித்தர முன்வந்திருக்கோம்.’’

‘‘உங்க முயற்சியை பாராட்டறேன். இப்ப என்மூலமா என்ன உதவியை எதிர்பார்க்குறீங்க?’’

‘‘போலீஸ் டிபார்ட்மெண்ட்டோட ஒத்துழைப்பை என்றவள், தனது திட்டத்தைச் சொல்லத் துவங்கினாள்...
________________________________________

14
பஸ் நிறுத்தம்.

கபிலா நின்றிருந்தாள். அருகே காரை நிறுத்தினான் மாதவ் குமார்.

‘‘கபிலா! ஆபீஸ்தானே வர்றே?’’

‘‘ஆமா, சார்!’’

‘‘உட்கார்’’

_ கபிலா காரில் உட்கார்ந்தாள். புறப்பட்டது.

‘‘ஆர்யூ ஆல்ரைட்?’’ _ கபிலாவை கண்ணாடி வழியோ பார்த்தபடி கேட்டான் மாதவ் குமார்.

‘‘ஆல்ரைட் சார்.’’

‘‘அப்போ.... நாள் குறிச்சிடலாமா?’’

‘‘அதுதான் நானே உங்களுக்கு நாள் குறிச்சிட்டேனே?’’

_ கலி£ சொல்ல, சடாரென பிரேக் அடித்தான். கார் குலுங்கியது.

‘‘வாட்?’’

‘‘இல்ல.... எனக்காக இத்தனை காலமா ஆவலோடக் காத்திருக்கீங்களே... என்னை உங்களிடம் ஒப்படைக்க நாள் குறிச்சாச்சுன்னு சொன்னேன்.’’

‘‘குட்! நல்லாவே புரிஞ்ச வெச்சிருக்க, நாளை மகாபலிபுரம் போறோம். நீயும் நானும் மட்டும் அங்கே....

மறுநாள்... ஒரு பெரிய பிஸினஸை டீல் பண்ணும் பொறுப்பை உன்கிட்டே ஒப்படைக்கப்போறேன். அதுலதான் உன் திறமையே இருக்கு...’’

‘‘என்னை முன்னுக்கு கொண்டுவர துடிக்குறீங்க. நெனச்சமாதிரியே முடிச்சிருவேன். நல்ல மனசு கொண்ட உங்களை ரொம்ப நாள் காக்க வெச்சுட்டேனேன்னு நினைச்சு வருத்தப்படறேன் மாதவ் சார்...’’

_ என போலி வருத்தம் காட்டினாள் கபிலா. ராஸ்க்கல்.... என்னை வைத்து பிஸினஸ் பண்ணப் போகிறாயா? என்னை எப்படி அணுகுகிறாயோ..., அதே பாணியில் உன்னை நானும் அனுகுகிறேன். உனக்கு நான் குறித்த நாள் எதற்காக வென்று நீயே நாளை தெரிந்து கொள்வாய்? என மனசுக்குள் சொல்லிக் கொண்டவள், அலுவலகம் வந்து விடவே காரை விட்டு இறங்கினாள்.

நிலவரசன் எதிர்ப்பட்டான். அவனை அனுகினாள்.

‘‘நிலா! 5.15க்கு மாதவ் கிளம்புவான். போனதும் ரகசிய அறையை திறப்பேன். பதுக்கல் சரக்குல பாதியை கடத்திட்டு வரவேண்டியது உன் பொறுப்பு.’’ என்றாள்.

‘‘ஓ.கே. கபி! காரியத்தைக் கச்சிதமா முடிச்சிடலாம். டோன்ட் ஒர்ரி’’ என்றான் ரகசிய குரலில் நிலவரசன்.
________________________________________

15
‘‘நீ... நீயா!?’’ என அதிர்ந்தான் சிராஜ். பெங்களூர் ட்ரிப்பை முடித்து வந்த அவன் கபிலாவை தன் வீட்டில் எதிர்பார்க்கவில்லை.

‘‘மாமா! நம்ப முடியலயா? நானேதான். அறியாமைல ஏதோ தப்பு பண்ணிட்டேன். புத்தி வந்திடுச்சு. இனிமே நான் இந்த வீட்டில்தான் இருக்கப் போறேன். நீங்க சொல்றபடிதான் கேட்கப் போறேன்.’’ என்றாள் கபிலா.

அவளது நடிப்பை நம்பி விட்டான் சிராஜ்.

‘‘இப்பவாவது புத்தி வந்தததே. சொல்ற மாதிரி நட. உனக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கு!’’

‘‘சரி,’’ _ என அவள் தலையாட்டி கொண்டிருக்கும்போதே, மாதவ் குமார் உள்ளே வந்தான்.

நடப்பவைகளைக் கண்டு நம்ப முடியாமல் குழம்பிக் கொÊண்டிருந்தாள் சந்தியா.

‘‘வா...ங்க சார்...’’ என்று ஷோபாவை காண்பித்தான் சிராஜ்.

‘‘உன் வரவேற்பு இருக்கட்டும் சிராஜ். ரகசிய அறைல பதுக்கி வெச்சிருந்த பாதி சரக்கை எடுத்து எங்கே பதுக்கியிருக்கே?’’ கர்ண கடூரக் குரலில் கேட்டான் மாதவ் குமார்.

‘‘சார்... பெங்களூர் ட்ரிப் முடிஞ்சு இப்பதான் வரேன். எ...னக் கொன்னும் தெரியாது.’’

‘‘இதபார் உனக்கும் எனக்கும் மட்டுமே அந்த ரகசிய இடம் தெரியும். சரக்கு எப்போ வருது, எப்போ கடத்தப் போறோம்ங்கற விஷயத்தை உன்கிட்டேதானே சொன்னேன்?’’

‘‘ஆமா... ஆனா, சத்தியமா எனக்கு அந்த சரக்கைப் பத்தி எதுவும் தெரியாது.’’

_ சிராஜ் மறுக்க, சட்டென ரிவால்வரை எடுத்தான் மாதவ்குமார். இடக்கையில் ரிவால்வரைப் பிடித்தபடி, வலக்கையில் பளீரென அறைந்தான். மூக்கு விளிம்பிலிருந்து ரத்தம் எட்டிப் பார்த்தது.

‘‘மிஸ்டர் மாதவ்! என்றான் சிராஜ்.

‘‘என்னடா மரியாதை குறையுது?’’

‘‘இதுவரைதான் உனக்கு மரியாதை!’’

‘‘நான் உன்கிட்டே கேக்கறது, மரியாதையை கேட்கலை. சரக்கை!’’

‘‘அதுதான் சொன்னேனே! எனக்கு எதுவும் தெரியாது. உனக்காக எவ்வளவோ காரியமெல்லாம் செய்தேன். அதையெல்லாம் மறந்திட்டு... என்னை நீ நன்றி கெட்டத்தனமா சந்தேகப்படுறே.’’

‘‘அப்படி என்ன காரியமெல்லாம் செய்திருக்கே?’’

‘‘கபிலா, உனக்கு வேண்டுமென்கிற ஒரே காரணத்துக்காக, அவளைக் காதலிச்ச மதுவை, பணம் கையாடல் செய்ததா... பொய் வழக்குப் போட்டு... ஜெயிலுக்கு அனுப்பினேன்...’’

‘‘அப்புறம்?’’

‘‘நேற்று பெங்களூர் கடத்திய போதைப் பொருள் உட்பட... உயிரை பணயம் வச்சு பல தடவை கடத்தலில் ஈடுபட்டு லட்ச லட்சமா லாபம் சம்பாதிச்சு கொடுத்திருக்கேன்.’’

‘‘அதே போல இந்த 50 லட்ச ரூபா சரக்கையும் கொடுத்திடு.’’

‘‘நான் எடுத்தாதானே தர்றதுக்கு?’’

‘‘நீதான் எடுத்தேங்கறதுக்கான சாட்சி... இந்த வீட்லயே இருக்கு. கூப்பிடவா?’’

‘‘யார் அந்த சாட்சி?’’

‘‘கபிலா!’’ _ மாதவ் குமார் சொல்ல, சிராஜ் திடுக்கிட்டான். திகிலும் வெறியுமாக அவளைப் பார்த்தபடி கேட்டான்.

‘‘கபிலா! நீதான் அப்படிச் சொன்னியா?’’

‘‘ஆமா’’

‘‘அடிப்பாவி! உன் வயிற்றில் வளர்ந்த கருவை அழிச்ச அயோக்யன் இவன்தான். இவன் கிட்டே ஏன் அப்படி சொன்னே?’’ அவளை ஆத்திரத்துடன் நெருங்க,

‘‘சிராஜ்...! அஞ்சு நிமிஷமே அவகாசம். நீ எடுத்த சரக்கை மரியாதையா ஒப்படைச்சிடு. இல்லன்னா... அடுத்த நிமிஷமே உன் பொண்டாட்டி விதவையாகிடுவா.’’ என்று ரிவால்வரை மார்புக்கு நேரே நீட்டினான்.

சிராஜ் கடத்தியதாக கபிலாதான் பொய்த் தகவலை மாதவ் குமாரிடம் சொன்னாள்.

மர்மங்கள் வெளிப்படவே அந்தத் திட்டம்...

‘‘சட்டவிரோதமான காரியத்தை... நீங்க ரெண்டு பேருமே சேர்ந்துதான் செய்திருக்கீங்க. உண்மையை ஒத்துக்குறீங்களோ?’’

‘‘ஆமா. ஏன், தர்மதேவதையா இருந்த தீர்ப்பு சொல்லப் போறியா?’’ என்றான் மாதவ்.

‘‘என்ன சார் கேலியா பேசுறீங்க. என்னதான் தப்பு செய்திருந்தாலும் சிராஜ் என் அக்காள் கணவன். எடுத்த சரக்கைத் திருப்பிக் கொடுத்திட்டா... அவரை உயிரோட விட்ருவீங்களா?’’

‘‘விட்ருவேன்’’

‘‘ஜஸ்ட் எ மானிட்...’’ என்றவள் ஒரு பெரிய ப்ரீப்கேஸை எடுத்து, அவனிடம் காண்பித்தாள்.

‘‘அந்த சரக்கு இதுதானான்னு பாருங்க...’’ என்றாள்.

பார்த்தவன், ‘‘இதுதான்... இதேதான்...’’ என அலறினான். ‘‘இது எப்படி இங்கே வந்தது?’’

‘‘உங்க ரெண்டு பேரையும் மோதவிட்டு... உண்மையை வாங்கறதுக்காக நிலவரசன் துணையோட நான்தான் இதை கொண்டு வந்தேன்.

கபிலா சொல்ல, ரிவால்வரை அவள் மார்பை நோக்கி குறிவைத்தான்.

சுடப் போகும் கடைசி நொடியில் கதவை படீரெனத் திறந்து ரிவால்வரை தட்டி விட்டாள் சந்தியா!

கபிலா அதை எடுத்து மாதவ் குமாரின் முன் நீட்டினாள்.

‘‘அவசரப்படாதீங்க எம்.டி. சார். திரும்பிப்பாருங்க.’’ என்றாள்.

பதுங்கியிருந்த போலீஸ் உள்ளே நுழைந்தது.

‘‘மிஸ்டர் மாதவ் குமார், சிராஜ் உங்க ரெண்டு பேரையும் கடத்தல், பொய் வழக்கு, கரு கலைப்பு ஆகிய குற்றங்களுக்காக கைது செய்றோம்!’’

_ இன்ஸ்பெக்டர் இருவரையும் கைது செய்ய, கான்ஸ்டபிள் ஒருவர் வந்து படீர் சல்யூட் அடித்து, கமிஷ்னரிடம் சொன்னார்!

‘‘ஸார்... பதுக்கியிருந்த போதை மருந்துகளைக் கைப்பற்றியாச்சு. கம்ப்பெனிக்கு சீல் வச்சாச்சு. இதுக்கெல்லாம் இவர்தான் உதவி செய்தார்’’ நிலவரசனைக் காட்ட, கமிஷ்னர் அவனிடம் கை குலுக்கினார்.

பாராட்டினார்.

மாதவ் _ சிராஜ் இருவரும் பேசியதைப் பதிவு செய்த கேஸட்டைக் கபிலாவிடம் காண்பித்தார்.

‘‘சிறையிலிருக்கும் மதுவை வெளிக்கொண்டு வர்ற விஷயமா நாளை நாம் நீதிபதியை சந்திக்கலாம்...’’ என்றார் கமிஷ்னர்.
________________________________________

16
மது... விடுதலையாகி விட்டான்.

தனக்காகக் காத்திருந்த கபிலாவை மட்டும் சிறைப்படுத்தி விட்டான்.

இதயச் சிறையில்!

அவன் அணைப்பின் இறுக்கம் தாளாமல் திணறினாள் கபிலா.

அவள் நெஞ்சுத் துடிப்பை தன் நெஞ்சால் உணர்ந்த மது... கபிலாவின் முகம் ஏந்தி முத்தமிட்டான்...

இத்தனையும் தனியறையில் மண்டபத்தின் மாடியில்...

மணமக்களை அழைக்க தோழிகள் வந்தனர்.

மணவறைக்கு அழைத்துப் போகின்றனர்...

இரண்டு மணவறைகள்!

ஒன்றில் மது _ கபிலா!

இன்னொன்றில் நிலவரசன் _ மௌனிகா.

இதோ... கெட்டிமேளம் முழங்குகிறது...

நீங்களும்தான் அட்சதைத் தூவுங்களேன்...!
(முற்றும்)

நன்றி :

வெ.தமிழழகன் - மாலைமதி வார இதழ்

எனக்குள் நீ! - மாலைமதி 30-06-2003

அனுராகவன்
04-04-2008, 08:53 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
மிக நல்ல தொடர்...
பகிர்வுக்கு என் நன்றியும்....வாழ்த்தும்..
டொடர்ந்து பல தாங்க..

அக்னி
04-04-2008, 04:19 PM
ஏறத்தாழ 8 வருடங்களின் பின்னர், மாலைமதி என் கரங்களில் தவழ்கின்றது.
இப்படியொரு இதழ் இருப்பதே என் நினைவில் மறந்து போனது.
பகிர்தலுக்கு மிக்க நன்றி கமலகண்ணன் அவர்களே..

ஆமா...
இவ்வளவையும் தட்டச்சினீங்களா...

சிவா.ஜி
04-04-2008, 04:27 PM
நல்ல கதை மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றி கமலக்கண்ணன். பகிர்தலுக்கு நன்றி

க.கமலக்கண்ணன்
05-04-2008, 08:40 AM
ஏறத்தாழ 8 வருடங்களின் பின்னர், ஆமா...
இவ்வளவையும் தட்டச்சினீங்களா...

எட்டு வருடங்கள் இல்லை அக்னி 5 வருடங்கள்...

எம்புட்டு நேரம் அடிக்கிறது... கை வலிக்கிறது பார்த்தவர்களே பின்னூட்டம் இடவில்லை

என்பதை பார்க்கும் போது கை வலி பெரிதல்ல

என்று உணர்கிறேன்...

இதயம்
05-04-2008, 08:59 AM
அன்பு கமலக்கண்ணன்,
உங்களின் உழைப்பு பல நேரங்களில் என்னை பிரமிக்க வைத்திருக்கிறது. ஆனால் உங்களின் பொன்னான நேரத்தை அடுத்தவரின் படைப்பை தட்டச்சிடுவதில் செலவிட்டதில் எனக்கு சிறு கோபம் உங்கள் மீது..! நீங்கள் என்ன தான் கை வலிக்க தட்டச்சிருந்தாலும் இது உங்கள் படைப்பாகாது..!! இதற்கு இத்தனை முக்கியத்துவம் தேவையா..? இதற்கு பதிலாக உங்கள் சுய சிந்தனையில் உதித்த எதையும் அளித்திருந்தால் உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைத்திருக்கும், படைப்பும் கமலக்கண்ணனுடையதாக ஆகியிருக்கும். அது மட்டுமல்லாமல் நாங்களும் கூடுதலாக மகிழ்ந்திருப்போம். இது போன்ற தொடர்கள் வெட்டி ஒட்டுவதாக இருந்தால் மட்டுமே பதிக்க வேண்டும். இதற்காக உங்களை வருத்தி இத்தனை உழைத்திருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. காரணம், உங்கள் உழைப்புக்கான ஊதியத்திற்கு நிகரான ஊக்கம் உங்களுக்கு கிடைக்காததே.! அதற்கு உங்கள் அங்கலாய்ப்பே சிறந்த உதாரணம்..!!

எப்படியாகிலும் மற்றவர்களை மகிழ்விக்கும் உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றிகள்...!!!

மலர்
05-04-2008, 06:51 PM
மாலைமதி..... இதுல ஸ்டோரி படிச்சி எவ்ளோ நாள் ஆகுது....
இது எல்லாமே எங்கக்காக நீங்களே டைப் பண்ணுனீங்களாண்ணா... :eek: :eek: பெரிய கதை... ஆனா இண்ட்ரஸ்டிங்கா போகுது

ஹீ..ஹீ... தாங்ஸ் ண்ணா...
டைப்பண்ணுனதுக்கும் பகிர்ந்து கொண்டமைக்கும்... :D :D

அக்னி
05-04-2008, 08:09 PM
எட்டு வருடங்கள் இல்லை அக்னி 5 வருடங்கள்...

நான் தாயகத்தில் இருக்கும்போது மாலைமதி தொடர்ந்தும் (நூலகத்திற்தான்) வாசிப்பதுண்டு. தாயகத்தை விட்டு வெளிவந்து 8 வருடங்களாகின்றன. அதைத்தான் சொன்னேன்.

மீண்டும் பகிர்தலுக்கு நன்றி கூறுகின்றேன்.

விஜி
25-04-2008, 01:40 PM
நன்றாக இருக்கிறது பகிர்ந்ததைக்கு நன்றி கமலகண்ணன்...

tamilkumar
20-05-2008, 07:11 PM
இங்கே மன்ற உறுப்பினர்களுக்காக பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி கமலக்கண்ணன். சில வருடங்களுக்கு முன்புவரை விடாமல் படித்துக் கொண்டிருந்த புத்தகங்களில் மாலைமதியும் ஒன்று.

அறிஞர்
20-05-2008, 07:44 PM
என்னது இவ்வளத்தையும் தட்டச்சு செய்தீர்களா..

படிப்பதற்கு அருமையாக உள்ளது.. நன்றி நண்பரே

க.கமலக்கண்ணன்
21-05-2008, 02:45 AM
நன்றி அறிஞர் அவர்களே... மிக்க நன்றி...