PDA

View Full Version : தாலாட்டுKeelai Naadaan
03-04-2008, 05:40 PM
அன்புள்ள அனைவருக்கும் வணக்கங்கள்.

முன்பெல்லாம் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடல்கள் பாடுவார்கள். அதை கேட்டு ரசிப்பது உண்மையிலேயே அத்தனை சுகமாயிருக்கும். அதுவும் படிப்பு குறைவானவர்கள், படிக்காதவர்கள் கூட அத்தனை அழகாய் லயித்து, வார்த்தைகளை கோர்த்து பாடுவார்கள். திரைப்பட பாடல்கள் அதிக பிரபலமான பிறகு சமீப காலங்களில் தாலாட்டு பாடல்கள் எங்கும் கேட்பதில்லை. அத்தி பூத்தாற்போல் ஏதாவது ஒரு திரைப்படத்தில் இடம் பெற்றால் உண்டு. தாலாட்டு பாடல்கள் பாசவுணர்வை வளர்க்கும் என்பது என் அபிப்ராயம். பாடி பழகியவர்களுக்கு பலர் முன்னிலையில் பேசுவதும் எளிது. தாய்மை ஒரு வரப்பிரசாதம். தாலாட்டும் பாடும் வாய்ப்பும் அப்படியே. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை.

தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழின் உச்சரிப்பு மாறுவது போல் தாலாட்டு பாடலும், அந்தந்த பகுதிகளின் இயற்கை சூழலுக்கேற்ப ஒவ்வொரு விதமாய் இருக்கும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. இலங்கை தாலாட்டு பாடல்களை அறிய மிக ஆவல். இந்த தாலாட்டு பாடல்களை அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்லவேண்டியது அவசியம் என நான் நினைக்கிறேன். ஆதலால், உங்களுக்கு தெரிந்த அல்லது உங்களால் திரட்ட முடிந்த தாலாட்டு பாடல்களை இங்கே பதிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஆராரோ ஆரிரரோ என்பதற்கு யார் யாரோ...யாரிவரோ என்று பொருள் என கேள்விபட்டிருக்கிறேன். எனக்கு தெரிந்த சில தாலாட்டு பாடல் வரிகளை இங்கே பதிக்கிறேன். இது வீடுகளில் பெரியவர்கள் பாடக் கேட்டது. கீழ்காணும் இந்த பாடல்வரிகளில் ஏதேனும் பிழை இருந்தால் அது என்னுடைய ஞாபக குறைவே தவிர அந்த பாடல்களில் இல்லை.

இதோ தாலாட்டு.....


லுலுலுலுலுலுலுவாயி....
சூ....ரே..ரே..ரே..ரே...ரே..ரே...ஏ
கண்ணே உறங்கு என்னம்மா
கண்மணியே நீயுறங்கு
பொன்னே உறங்கு
என்னம்மா நீ
பெட்டகமே கண்ணுறங்கு.
ராரிக்கோர் ராரி மெத்த
என்கண்ணே உனக்கு
ராமரோட பஞ்சு மெத்த
பஞ்சுமெத்த மேலிருந்து
பசுங்கிளியே கண்ணுறங்கு.
............................................................................................ஆராரோ....ஆரிர..ரோ....ஓ
எங்கண்ணே ராமர் உன்னை தந்தாரோ...!
யாரடிச்சா நீயழுத-எங்கண்ணே
அடிச்சவர சொல்லியழு

வடக்க உறகிணறாம்
வாசல் எல்லாம் பால் கிணறாம்
பால் கிணத்த பாக்கவந்த
பசுங்கிளிய யாரடிச்சா

ஆத்தா அடிச்சாரோ
அல்லிப்பூ செண்டால
தாத்தா அடிச்சாரோ
தாழம்பூ செண்டால
மாமா அடிச்சாரோ
மல்லிகைப்பூ செண்டால
அத்தை அடிச்சாளோ
அரளிப்பூ செண்டால
அக்கா அடிச்சாளோ
ஆவாரம் பூ செண்டால

யாரும் அடிக்கவில்ல-என்னம்மா
ஐவரும் தீண்டவில்ல
பசிச்சு அழுதேனம்மா-நான்
பசிச்சழுதேன் தாயாரே

ராமர் பசு வளர்க்க
லச்சும்ணர் பால்கறக்க
சீதாங்கனி அம்மன் வந்து
தீமூட்டி பால்காய்ச்ச

போட்டுப்பால் போட்டாட்டி-என்கண்ணே
பசுந்தொட்டிலிலே போட்டாட்டி
ஆடுமாம் தொட்டில்-என்கண்ணே
அசையுமாம் பொன்னூஞ்சல்
பொன்னூஞ்சல் மேலிருந்து- நீ
பொய்யுறக்கம் கொண்ட கண்ணோ.


கண்ணாண கண்மணிக்கு
காதுகுத்த என்னாகும்
ஏலம் ஒரு வீசை
இளந்தேங்கா முன்னூறு
சீனி ஒரு போது
செல்ல மக(ன்/ள்) காது குத்த

தட்டில அரிசி வரும்
தங்க மாமா சீரு வரும்
பொட்டி(யி)ல அரிசி வரும்
பொன்னு மாமா சீருவரும்

சுத்தி சிவப்புக்கல்லு
தூருக்கோர் வெள்ளக்கல்லு
வரிச ஒரு நூறு ******
வாங்கி வந்தார் உங்க மாமா


நாளிநறுக்கு மஞ்ச
நறுநாளி பச்ச மஞ்ச
அரைச்சு குளிச்சாலும்
அங்கம் மினுமினுக்க
தேச்சு குளிச்சாலாம்
தெப்பம் கலகலங்க

மஞ்ச குளிச்சு- கண்ணே
உங்கள் அம்மா
மாதவம் செய்கையிலே
பாக்க வந்த பரமசிவர்
********
பூவு தந்தா வாடுமின்னு
பொன்னு/பிள்ளை தந்தார் தாலாட்ட
மாலை தந்தா வாடுமின்னு
மங்கை/மழலை தந்தார் தாலாட்ட


******** இந்த வரிகள் மறந்து விட்டேன்.
இன்னும் நிறைய மறந்துவிட்டேன்.

நீங்கள் உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்களை ஆவலாய் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்.....கீழை நாடான்.

அனுராகவன்
03-05-2008, 02:34 AM
நன்றி கீழைநாடான் அவர்களே!!
ம்ம் மிக அருமையாக இருக்கு..
அதாங்க தாலாட்டு ,உங்க மனைவி கொடுத்துவச்சவங்க..
என் வாழ்த்துக்கள்!!

Keelai Naadaan
03-05-2008, 02:45 AM
நன்றி கீழைநாடான் அவர்களே!!
ம்ம் மிக அருமையாக இருக்கு..
அதாங்க தாலாட்டு ,உங்க மனைவி கொடுத்துவச்சவங்க..
என் வாழ்த்துக்கள்!!

அப்பாடா..! இந்த திரி ஆரம்பிச்சு சரியா ஒரு மாசம் ஆகுது. இப்பதான் முதல் பின்னூட்டம் வந்த்திருக்கு. மிக்க நன்றி அனு. பாராட்டினா மட்டும் போதுமா..? உங்களுக்கு தெரிந்ததை நீங்களும் பதியுங்கள்.

lolluvathiyar
11-05-2008, 08:43 AM
ஆகா மிக்க நன்றி கீழை நாடார் அவர்களே இந்த பாட்டி முழுமையாக கொடுத்ததுக்கு. இது போன்று இன்னும் பாடல் இருந்தால் தரவும்.

எங்கள் ஊரில் பிஞ்சு குழந்தைகளை கொஞ்சும் போது
உங்கு வேனுமா உங்கு உங்கு என்று தான் கொஞ்சுவார்கள். உங்கு என்றால் தாய் பால் என்று அர்த்தம், ஏன் அப்படி அழைக்கிறார்கள் என்றால் பசிக்கும் போது குழந்தை ங்கு ங்கே என்று அழும் அதுக்கு தெரிந்தது ங்கு என்றால் பால் என்று அதனால் தான் அப்படி கொஞ்சுவார்கள்

Keelai Naadaan
11-05-2008, 05:01 PM
இந்த பாட்டினை முழுமையாக கொடுத்ததுக்கு. இது போன்று இன்னும் பாடல் இருந்தால் தரவும்.


மிக்க நன்றி வாத்தியார் அவர்களே.
நான் ஆசையாசையாய் இந்த திரியை ஆரம்பித்தேன். அனுவை தவிர யாருமே பின்னூட்டம் தரவில்லை. யாருக்கும் விருப்பமில்லையோ என நினைத்தேன். உங்கள் பின்னூட்டம் உற்சாகம் அளிக்கிறது. மீண்டும் சேகரித்து பதிக்கிறேன்.
தாலாட்டு எவ்வளவு சுகமான விஷயம்.
கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது
ம்...ம்.. அதெல்லாம் அந்த காலம்.

ஆதி
19-05-2008, 06:07 PM
இன்றுதான் இந்த திரியைப் பார்த்தேன்... கம்பம் ராமாயணம் எழுத தூண்டுதலாய் இருந்ததே தாலாட்டுப் பாட்டுதானே.. தாலாட்டுப் பிடிக்காதவர் யார் உளர்..

மண்ணில் வந்த நிலவே.. மடியில் பூத்த மலரே.. - நிலவே மலரே

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. - நீங்கள் கேட்டவை

அழகிய கண்ணே உறவுகள் நீயே... - உதிரிப்பூக்கள்

அந்தி நேரத் தென்றல் காற்று.. அள்ளி தந்த தாலாட்டு - இணைந்தக் கைகள்

தாலாட்டு கேட்காதப் பேரிங்கு யாரு.. - பாட்டுக்கு நான் அடிமை

இந்தப் பாடல்களைக் கேட்டப் பிறகே இரவில் உறங்கப் போவது வழக்கம்..

உங்கள் தாலாட்டுத் தொகுப்பு மிக அருமை.. இன்னும் தாருங்கள் வாசிக்க மட்டும் இல்லை இரவில் மனதுக்குள் இசைத்துக் கொண்டே அந்த சுகத்தில் தூங்கவும் காத்திருக்கிறேன்..

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

செல்வா
19-05-2008, 07:48 PM
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே.... வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே...
இந்த பாட்ட மறக்க முடியுமா டா... ஆதி...

அந்த பாட்டுக்குள்ள கடைசி வரில கதை சொல்லி தூங்க வைக்கணும் குழந்தைய ஆனா எந்த கதைய சொல்றது...

"சிறகில் எனைமுடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இதை வந்து பிரித்த கதை சொல்லவா? "
என்ன பிரச்சனை வந்தாலும் எங்க பாசத்திற்கு பிரிவு கிடையாது
"கண்ணின் மணிபோல மணியின் இமைபோல
கலந்து பிறந்தோமடா...
இந்த மண்ணும் கடல் வானும்
மறைந்து போனாலும் மறக்க முடியாதடா
உறவை பிரிக்க முடியாதடா...."
இதுக்கு மேல ஒரு தாலாட்டு பாடலையும் அந்த இசையையும். இதுவரை வந்த வேற எந்த பாடல்களிலும் நான் கேட்டதில்லடா...

இன்னுமொரு பாடலை கண்டிப்பா சொல்லணும்...

"இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்....
அதில் பட்டுத்துகிலுடன் அன்னச் சிறகினை மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட இன்னும் ஆராரோ வந்து சீ(பா)ராட்ட"
இந்த வரிகள் சிறுவயதிலிருந்தே என் தந்தையின் குரலாய் மனதிற்குள் பதிந்து.. மயக்கம் தந்தது..... அறிவுரையும் தாலாட்டும் ஒருங்கே அமைந்த இந்த பாடலின் மீதிருந்த மயக்கம் இந்த பாடலின் காட்சியமைப்பை கண்டதும் குறைந்து விட்டது.

இது மட்டுமா இன்னும் எவ்வளவோ இருக்கின்றன தாலாட்டைப் பற்றி பேச.... வருகிறேன் மீண்டும்.... வாழ்த்துக்கள் கீழைநாடன் அவர்களே..
உனது தொகுப்புக்கும் வாழ்த்துக்கள்டா ஆதி...

Keelai Naadaan
20-05-2008, 02:53 AM
நண்பர்கள் ஆதி, செல்வா இருவருக்கும் நன்றிகள்.
தமிழ் திரைப்படங்களில் உள்ள மிகச்சிறந்த பத்து பாடல்களில் நீங்கள் குறிப்பிட்டுள்ள "மலர்ந்து மலராத" பாடலை சொல்லலாம்.

எனக்கு பிடித்த ஒரு பாட்டு ..

சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்ணத்தில் மையிட்டு பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா.

பிற தளத்து திரைப்பட தாலாட்டு பாடல்களின் திரியை இங்கே தரலாமா என தோன்றுகிறது. உங்கள் கருத்துகளை அறிய தாருங்கள்.
நன்றி

ஆதி
20-05-2008, 09:27 AM
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே.... வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே...
இந்த பாட்ட மறக்க முடியுமா டா... ஆதி...இந்தப் பாட்ட எப்படி நான் மறந்தேன்.. ஞாபகமூட்டியமைக்கு நன்றி டா செல்வா...

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே..

இதுப் போல் ஒரு வரி எழுத இனி எவனும் பிறக்கப்போவதில்லை

அமரன்
25-05-2008, 06:35 PM
குழந்தைகள் கண்வளர்வதற்காக அம்மாக்கள் தாலாட்டும் பாடினார்கள். கால மாற்றத்தால் அம்மாக்கள் வேலைக்குப் போக பாட்டிமாரும் பாடினார்கள். இப்போது தாலாட்டுக் கேட்டுத் தூங்கும் பாக்கியம் பல பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. நகரப்புறத்தில் அருகிவிட்ட தாலாட்டும் பழக்கம், கிராமங்களில் இன்றும் நிலைத்திருப்பது மனதுக்கு ஆறுதலானது. தாலாட்டின் சுகத்தை, மீண்டும் உணரவைத்த நண்பர்களுக்கு நன்றி..

முந்தானை முடிச்சுப் படத்தில் வருகிற "சின்னஞ்சிறு கிளியே சித்திரைப் பூவிழியே" என்ற அருமையான பாடலையும் பட்டியலில் சேருங்கள்.


பிற தளத்து திரைப்பட தாலாட்டு பாடல்களின் திரியை இங்கே தரலாமா என தோன்றுகிறது. உங்கள் கருத்துகளை அறிய தாருங்கள்.
நன்றி

அன்புள்ள கீழைநாடான்.
ஒலிவடிவத்தையா ஒலிவடிவத்தையா குறிப்பிட்டுக் கேட்கின்றீர்கள்

பூமகள்
26-05-2008, 06:01 AM
நல்லதொரு திரி... தாலாட்டுப் பாடல்களை இனி ஆவணப்படுத்தி கேட்க வேண்டிய ஒரு நிலையில் தான் நம் எதிர்கால சந்ததி இருப்பது வருத்தத்துக்குரியது..

இந்த பதிவில்.. நிறைய தாலாட்டுப் பாடல்கள் பதித்து.. கிராமத்தில் பாடும் பாடல்களையும் தொகுத்து.. ஒரு ஆவணமாக போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

தாமதமாக வந்து பார்த்தமைக்கு மன்னிக்கவும் கீழை நாடான் அண்ணா. அழகிய திரி ஆரம்பித்தமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.:icon_b:

தென்றலே.. தென்றலே... மெல்ல நீ வீசு..
பூவுடன் மெல்ல நீ பேசு ---> காதல் தேசம் (இதுவும் தாலாட்டு பாடல் லிஸ்டில் சேர்க்கலாமா என்று சொல்லவும்..!:icon_ush::confused:)

பிஞ்சுத் தென்றலே.. என் பிஞ்சுத் தென்றலே... ---> மஜ்னு

தேனே தென்பாண்டி மீனே..
இசைத் தேனே.. இசைத் தேனே..
மானே இளமானே.. ---> (இதுவும் தாலாட்டுப் பாடலென எடுக்கலாம் தானே?:icon_ush:)

இன்னும் நிறைய பாடல்கள்.. நினைவுக்கு வர மறுக்கிறது..

ஆல்டைம் ஃபேவரட்... "மண்ணில் வந்த நிலவே...!!" சின்ன வயதில்.. இந்த பாடல் கேட்டு..அழுகையை நிப்பாட்டிய நாட்கள் அதிகம்..!! ;)

ஆதி
26-05-2008, 06:14 AM
முந்தானை முடிச்சுப் படத்தில் வருகிற "சின்னஞ்சிறு கிளியே சித்திரைப் பூவிழியே" என்ற அருமையான பாடலையும் பட்டியலில் சேருங்கள்.

இந்தப் பாடல் என்னிடம் இல்லை அமரன், ஆனால் வரிகளை வாசிக்கும் போதே அந்தப் பெண்குரல் என் காதுகளிலும், வார்த்தைகள் இதயத்தின் உதடுகளிலும் எதிரொலிக்கிறது.. ஞாபகமூட்டியமைக்கு நன்றி அமரரே..


தென்பாண்டி சீமையிலே
தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே
யாரடுச்சாரோ யாரடுச்சாரோ.. - நாயகன்

இந்தப் பாடலையும் எப்படி மறந்தேனென தெரியவில்லை..

இந்தப் பாடல் இளையராஜா கமல் இருவரின் குரலிலும் ஒலிக்கும்..

இளையராஜாப் பாடும் போது பின்னனி இசை எதுவுமே இருக்காது, வெறும் குரல் மட்டும்தான் ஒலிக்கும், பின்னனி இசையே இல்லாத தன் குரலே இசைதான் என்று நிறுப்பித்திருப்பார் இளையராஜா... கமலின் குரலும் அசத்தலாகத்தான் இருக்கும்

Keelai Naadaan
26-05-2008, 08:03 PM
அன்புள்ள கீழைநாடான்.
ஒலிவடிவத்தையா ஒலிவடிவத்தையா குறிப்பிட்டுக் கேட்கின்றீர்கள்

நண்பரே
ஒலிவடிவத்தை தான். ஒளி வடிவத்தை அல்ல.


நல்லதொரு திரி...

இந்த பதிவில்.. நிறைய தாலாட்டுப் பாடல்கள் பதித்து.. கிராமத்தில் பாடும் பாடல்களையும் தொகுத்து.. ஒரு ஆவணமாக போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.


நானும் அந்த ஆசையில்தான் இந்த திரியை துவக்கினேன். முதலில் நண்பர் அமரன் அவர்களிடம் தனிமடல் அனுப்பி விசாரித்தேன். அவர் தான் இலக்கிய பகுதியில் துவங்கும் படி ஆலோசனை வழங்கினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்


மஜ்னு மற்றும் காதல் தேச பட பாடல்கள் நான் கேட்டதில்லையம்மா. நீங்கள் விரும்பும் தாலாட்டு பாடல் எல்லாமே தரலாம்.
(கண்ணன் ஒரு கைக்குழந்தை... மாதிரி பாடல் வேண்டாம் என நினைக்கிறேன்)
நான் இணைப்பு கொடுக்க விரும்பும் பாடல்கள்: குழந்தைகளை பற்றிய பாடல்கள், அவர்களை பாராட்டும் பாடல்கள், குழந்தைகளை தாலாட்டும் பாடல்கள்...

நண்பர்கள் சொன்னது இல்லாமல் எனக்கு நினைவுக்கு வரும் பாடல்கள்:

கண்னான பூமகனே கண்ணுறங்கு சூரியனே...

சிங்கார புன்னகை கண்ணார கண்டாலெ...

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே..

அத்தை மடி மெத்தையடி ஆடிவிளையாடம்மா...

இப்படியோர் தாலாட்டு பாடவா...

ஆழக்கடலில் தேடீய முத்து....

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே....

முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ..

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்..

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்..

வரம் தந்த சாமிக்கு வகையான லாலி...

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா..(வண்ணக்கிளி)

ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்ப கனியே..

பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா...

தேனூறும் நேரம் நான் பாடும்ராகம் விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே....

செல்லக்கிளியே மெல்லப்பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு....

என் தெய்வம் தந்த பூவே..

பூஞ்சிட்டு கண்ணங்கள் பொன்மணி தீபத்தில்....

பத்து மாசம் சுமக்கவில்லை செல்லையா..

மற்றும் திரையில் வராத நாட்டுப்புற தாலாட்டு பாடல்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக,

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று...

சொல்லடா வாய் திறந்து அம்மா என்று...

இந்த இரண்டு பாடல்களும் கூட.
பிள்ளை இல்லாதவர்களின் வேதனை இந்த பாட்டில்தான் தெரியும்

Narathar
27-05-2008, 03:01 AM
கீழை நாடானின் பாடல் வரிசைக்கு நன்றி....

திரைப்பாடல் களை நினைவூட்டுவதில் தவறில்லை அதை வரவேற்கின்றேன்... ஆனால் நம்மவர்கள் மத்தியில் வழக்கிளுள்ள பாடல்களை இங்கு முடிந்த அளவு ஆவணப்படுத்தினால்... எதிர்கால சந்ததிக்கு பேருதவியாக இருக்கும்.

Keelai Naadaan
27-05-2008, 03:30 AM
கீழை நாடானின் பாடல் வரிசைக்கு நன்றி....

திரைப்பாடல் களை நினைவூட்டுவதில் தவறில்லை அதை வரவேற்கின்றேன்... ஆனால் நம்மவர்கள் மத்தியில் வழக்கிளுள்ள பாடல்களை இங்கு முடிந்த அளவு ஆவணப்படுத்தினால்... எதிர்கால சந்ததிக்கு பேருதவியாக இருக்கும்.

அப்படியே ஆகட்டும் நண்பரே.
வழக்கில் உள்ள பாடல்கள் என்றால்....
சரியாக புரியவில்லை. ஓரிரு உதாரணம் சொல்லுங்களேன்.

Narathar
27-05-2008, 03:44 AM
அப்படியே ஆகட்டும் நண்பரே.
வழக்கில் உள்ள பாடல்கள் என்றால்....
சரியாக புரியவில்லை. ஓரிரு உதாரணம் சொல்லுங்களேன்.


வழக்கிளுள்ள பாடல்கள் என்று நான் சொல்ல வந்தது... காலம் காலமாக நம் பாட்டிம்மார் தாய்மார் பாடி வந்த பாடல்கள்...

அமரன்
27-05-2008, 10:45 AM
நாரதர் சொன்னது போல, வட்டாரத்து வட்டாரம் வேறுபடும் செவிவழி இலக்கியமான தாலாட்டுப்பாடல்களை ஆவணப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவோம். மூத்தோரைக் கேட்டால் பலரகங்களில் கிடைக்கும்..

கீழை நாடான்..
ஒலிவடிவத்தை கொடுப்பதில் சிக்கல் இல்லை. காப்புரிமை சிக்கல் வராதென்றால் பாடலின் சுட்டியைத் தாருங்கள்.

Keelai Naadaan
27-05-2008, 04:35 PM
வழக்கிளுள்ள பாடல்கள் என்று நான் சொல்ல வந்தது... காலம் காலமாக நம் பாட்டிம்மார் தாய்மார் பாடி வந்த பாடல்கள்...


நாரதர் சொன்னது போல, வட்டாரத்து வட்டாரம் வேறுபடும் செவிவழி இலக்கியமான தாலாட்டுப்பாடல்களை ஆவணப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவோம். மூத்தோரைக் கேட்டால் பலரகங்களில் கிடைக்கும்..

கீழை நாடான்..
ஒலிவடிவத்தை கொடுப்பதில் சிக்கல் இல்லை. காப்புரிமை சிக்கல் வராதென்றால் பாடலின் சுட்டியைத் தாருங்கள்.


இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்.
ஆம். மூத்தோர்களுக்கு தெரிந்த பாடல்களை சேகரித்து பதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஒலி வடிவத்தை இங்கு கொடுப்பதில் எனக்கு அனுபவம் இல்லை. முயற்சி செய்கிறேன. அனைவருக்கும் நன்றிகள்

Narathar
27-05-2008, 05:29 PM
இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்.
ஆம். மூத்தோர்களுக்கு தெரிந்த பாடல்களை சேகரித்து பதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஒலி வடிவத்தை இங்கு கொடுப்பதில் எனக்கு அனுபவம் இல்லை. முயற்சி செய்கிறேன. அனைவருக்கும் நன்றிகள்


நீங்க வரிவடிவத்தை பதியுங்கள்...

ஒலிவடிவத்தை நம்ம பய திலீப்... அதுதான் உங்க ரஹுமான்கிட்ட சொல்லி டியுனாப்போட்டு இங்க பதிஞ்சுக்கலாம்........

அமரன்
31-05-2008, 08:54 AM
அந்த ஆளு சொல்லாத விசயமே இல்லைன்னு சிலரைச் சொல்லுவோம். அவர்களுள் எனக்குத் தெரிந்தவர்கள்.

1.வள்ளுவர் அய்யா
2.கண்ணதாசன் அய்யா
3.இளசு அண்ணன்

இங்கே ஏனிந்த பதிவு என்கிறீங்களா? சுட்டியை தட்டுங்கள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3899

Keelai Naadaan
20-06-2008, 07:43 AM
அந்த ஆளு சொல்லாத விசயமே இல்லைன்னு சிலரைச் சொல்லுவோம். அவர்களுள் எனக்குத் தெரிந்தவர்கள்.

1.வள்ளுவர் அய்யா
2.கண்ணதாசன் அய்யா
3.இளசு அண்ணன்

இங்கே ஏனிந்த பதிவு என்கிறீங்களா? சுட்டியை தட்டுங்கள்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3899

மிக்க நன்றி நண்பரே. இன்றுதான் இந்த திரியை படித்தேன்.

அமரன்
16-09-2008, 08:43 AM
ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ
ஆரடித்து நீயழுறாய்
அடிச்சாரை சொல்லியழு

கண்ணே ஒன்னை யாரடிச்சார்
கண்மணியைத் தொட்டது யார்
பொன்னே உன்னை யாரடிச்சார்
பொன்மணியை தொட்டது யார்

அத்தை அடிச்சாளோ
அல்லி பூச்செண்டாலே
மாமன் அடிச்சானோ
மல்லிகைப் பூச்செண்டாலே

பாட்டி அடிச்சாளோ
*பாலூட்டுங் கையாலே
அக்கா அடிச்சாளோ
*அமுதூட்டும் கையாலே..

ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ
ஆரடித்து நீயழுறாய்
அடிச்சாரை சொல்லியழு

*பாலூட்டும் பாட்டி - அந்தக்காலம் தொட்டு புட்டிப்பாலூட்டல் இருக்கு. தேவை வேறாக இருக்கலாம்
*அமுதூட்டும் அக்கா - பிள்ளைகளுக்கிடையே சீரான இடைவெளி இருக்க வேண்டும் என்கிறார்களோ. (எப்படியோ அக்கா இன்னொரு அம்மா)

Keelai Naadaan
03-10-2015, 04:33 PM
சமீபத்தில் நான் கேட்டு ரசித்து மயங்கிய இந்த தாலாட்டு பாடலை மன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

https://www.youtube.com/watch?v=hkwSYV560LU

சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இது போன்ற பாடலை தினமும் இரவு நேரத்தில் கேட்க முடிந்தது.

இனி இது போன்ற பாடலை கேட்க முடியுமா?

Keelai Naadaan
03-10-2015, 04:34 PM
சமீபத்தில் நான் கேட்டு ரசித்து மயங்கிய இந்த தாலாட்டு பாடலை மன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

https://www.youtube.com/watch?v=hkwSYV560LU

சுமார் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இது போன்ற பாடலை தினமும் இரவு நேரத்தில் கேட்க முடிந்தது.

இனி இது போன்ற பாடலை கேட்க முடியுமா?

ravisekar
30-10-2015, 02:07 AM
மிக அருமையான தொகுப்பு. திரி. கீழைநாடான் , ஆதி, செல்வா, பூம்கள், அமரன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பதிபக்தி பாட்டு

சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய் மலர் எனக்கு பிடித்த தாலாட்டு