PDA

View Full Version : மரத்து போன வாழ்க்கை.



நம்பிகோபாலன்
02-04-2008, 07:57 PM
பொருத்தம் பார்த்து
நாட்குறித்து
கெட்டிமேளம் கொட்ட
அம்மி மிதித்து
ஊர் வாழ்த்த
நடந்தேரிய திருமணம்,
நீயோ என்னுடன்
வாழ பிடிக்கவில்லை
வற்புறத்தலின் பேரில்
கரம் பிடித்தேன் என்கிறாய்,
என்னிடம் எதுவும் இல்லை என்பதயே
என்னிடம் எதுவும் இல்லாமல் இல்லை என்பவன்
என்ன வேண்டுமோ கேள்
உனக்கு தருகிறேன்
இறந்துபோன உன் காதலனை தவிர.
உன் வீட்டில் இருக்கும்
என் தங்கைகளை நினைத்து பார்
பத்திரம் நம்மை
பிரிக்க தேவையில்லை
எனக்கு உன் காதலை
பொய்யாக்க மனமில்லை
வீட்டில் பிரிந்தே வாழ்வோம்
சமுகத்திற்காக சேர்ந்திருப்போம்...

ஆதி
03-04-2008, 04:35 AM
அங்கிங்கு கவிதையை பழுதுப்பார்க்க வேண்டியுள்ளதென கருதுகிறேன் நம்பி,
மீண்டும் ஒரு முறை வாசித்து கவிதையை சரிப்பாருங்களேன்..!!

அன்புடன் ஆதி

ஆதி
03-04-2008, 05:15 AM
உன் வீட்டில் இருக்கும்
என் தங்கைகளை நினைத்து பார்


நாயகன் தன் தங்கைகளைப் பற்றிக் கவலைப் படச் சொல்கிறானா ?

அல்லது

நாயகியின் தங்கைகளைப் பற்றிக் கவலைப் படச் சொல்கிறானா ?

விளக்குங்களேன் நம்பி..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
03-04-2008, 05:51 AM
"நாயகியின் தங்கைகளைப் பற்றிக் கவலைப் படச் சொல்கிறானா ? " நாயகியின் தங்கைகளை நினைத்து பார்க்க சொல்லி எழுதியது....

ஆதி
03-04-2008, 06:19 AM
"நாயகியின் தங்கைகளைப் பற்றிக் கவலைப் படச் சொல்கிறானா ? " நாயகியின் தங்கைகளை நினைத்து பார்க்க சொல்லி எழுதியது....

அப்படியெனின் "உன் வீட்டில் இருக்கும் என் தங்கைகளை நினைத்துப்பார்" என்பதை "உன் தங்கைகளை எண்ணிப்பார் அல்லது நினைத்துப்பார்" என்று மாற்றுங்கள்..

அர்த்தப்பிறழ்வு உள்ளதாய் எனக்கு தோன்றுகிறது..

அன்புடன் ஆதி

கண்மணி
03-04-2008, 06:26 AM
உன் வீட்டில் இருக்கும் என் தங்கைகள்..

அர்த்தப் பொலிவுடன் கூடிய உறவு முறை..
சொல்லப் போனால் கவிதையில் கவித்துமாய் இருக்கும் வரி இது.

மாமியாருக்கு மருமகள் மகளானால், மாமியாருக்கு மாமனாருக்கு மருமகன் மகனாதல்..

உன் குடும்பம் என் குடும்பம் என்ற பாசம்..

மாமியாரை அம்மா என்று அழைக்கும் போது வராத கிலேசம் மச்சினியை தங்கை என்ற போது வந்து விடுமா என்ன?

பரந்த அன்பை அச்சிறுவார்த்தை காட்டுகிறது நம்பி...

அவளுக்கு இல்லாத அக்கறை அவனுக்கு...

அப்படியானால் அவர்கள் அவள் தங்கைகளா? அவன் தங்கைகளா?

விதியுறவுமுறைகள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்

ஒரு பெண்ணிற்கு திருமணம் செய்வதைப் பற்றி அக்கறையுடன் சிந்திக்கும் எந்த ஆண்மகணும் அவளுக்கு அண்ணனே!!

நம்பிகோபாலன்
03-04-2008, 06:39 AM
கண்மணி என் கருத்தை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள்.
ஆதி நாயகியின் தங்கைகளை நாயகன் தங்கையாக எண்ணுவது போல எழுதியிருக்கிறேன்.

ஆதி
03-04-2008, 06:51 AM
மாமியாருக்கு மருமகள் மகளானால், மாமியாருக்கு மாமனாருக்கு மருமகன் மகனாதல்..


மருமகள் - மரு மகள்

மரு - புதியவர்

மருமகள் - பெண்ணின் சகோதரன் மகள், ஒருவனின் சகோதரி மகள்

மருமகன் - மருகன்

மருகன் - பெண்ணின் சகோதரன் மகன், ஒருவனின் சகோதரி மகன்

அதனால் தங்கச்சி, மருகன் மகனாக முடியாது, மருமகள் மகளாக முடியாது, வாய் வார்த்தைக்கு சொல்லலாம், உங்க மகள எங்க மகளாப்பார்த்துப்போம் னு, அர்த்தப்படுத்த முடியாது..

" இந்த கவிதையும் அப்படிதான், நாயகன் நாயகி இடம் பேசுகிறான் பேசும் போது நாயகியின் தங்கைகளை என் தங்கைகள் என்று சொல்லும் அவன் மனம் மதிக்க தக்கது, படிக்கும் போது பொருள் பிறழ்வு ஏற்படுகிறது அதுவும் கவனிக்கதக்கது.

அன்புடன் ஆதி

அமரன்
03-04-2008, 07:22 AM
மச்சினிச்சியை தப்பாகப் பார்ப்பவர்களுக்கு நடுவில்,
தங்கையாக்கிப் பாசம் காட்டும் பாட்டுத் தலைவனுக்கு தலைவணங்குகிறேன்.

பாராட்டுகள் நம்பி.

இல்லாததை சொல்லும் பாணி அணியாவதில்லையா ஆதி.

ஆதி
03-04-2008, 07:34 AM
இல்லாததை சொல்லும் பாணி அணியாவதில்லையா ஆதி.

அமரன், "என் தங்கைகள்" என்று சொன்னது நாயகியின் தங்கைகள் என்று நம்பி சொல்லித்தான் தெளிவானது எனக்கு, கவிஞர் கருத்தை கவிதையை வாசிக்கும் போதே புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில்தான், சற்று பழுது பார்த்து அதே அர்த்தம் பட தர வேண்டி அர்த்தப் பிறழ்வு இருப்பதாய் சொன்னேன்.

நம்பியின் கவிதை எனக்கு மிகப் பிடிக்கும், பிடித்ததால்தான் அதிக உரிமை எடுத்துக்கொள்கிறேன்.

அன்புடன் ஆதி

அமரன்
03-04-2008, 07:44 AM
இதுபோன்ற அலசல்கள் எனக்கு அதிகம் பிடிக்கும் ஆதி. பலவற்றைக் கற்றுகொள்ள ஏதுவானவை இவ்வகை அலசல்கள். மன்றக் கவிகளோ, வாசகர்களோ அலசல்களை தவறாக எடுத்துக்கொள்ளாதது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். நிலைத்து இருக்கட்டும்..

சீரான ஓட்டத்தில் போகும் வாழ்க்கையில், அட என தலை நிமிர்த்தும் சம்பவங்களை அகக்கண்ணால் காண்கிறோமே. அதுபோல கவிதைகளிலில் உள்ளார்ந்து பார்த்தலின் போது நிகழ்ந்தால்.. அப்படியான ஒரு நல் யுக்தியாகவே என் தங்கைகள் படுகிறது. இணையின் தங்கையை தன் தங்கையாக வரிக்கும் துணைவன்.. நினைக்கும்போதே இதயபூமி புளகிக்க, உரோமங்கள் சிலிர்க்கிறனவே. இதைவிட வாசகனுக்கு என்ன வேண்டும்.

ஆதி
03-04-2008, 07:51 AM
அதுபோல கவிதைகளிலில் உள்ளார்ந்து பார்த்தலின் போது நிகழ்ந்தால்.. அப்படியான ஒரு நல் யுக்தியாகவே என் தங்கைகள் படுகிறது. இணையின் தங்கையை தன் தங்கையாக வரிக்கும் துணைவன்.. நினைக்கும்போதே இதயபூமி புளகிக்க, உரோமங்கள் சிலிர்க்கிறனவே. இதைவிட வாசகனுக்கு என்ன வேண்டும்.

இதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை அமரன், என் எண்ணம் என்னவெனில், கவிஞர் சொன்னக் கருத்தை சுமக்கும் வலிமை வார்த்தைகளில் இல்லை என்பதுதான்,

"உன்னுடம் பிறந்த
என் தங்கைகளை நினைத்துப் பார்" என இருந்திருந்தால் என்னைப் போன்ற சிற்றறிவுக் கொண்டவருகளின் புத்திக்குள் கவிஞரின் கருத்து சிரமமின்றி உட்புகுந்துவிடும் என்பது என் கருத்து.

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
03-04-2008, 08:44 AM
" நம்பியின் கவிதை எனக்கு மிகப் பிடிக்கும், பிடித்ததால்தான் அதிக உரிமை எடுத்துக்கொள்கிறேன். " தாராளமாக.

"உன்னுடம் பிறந்த
என் தங்கைகளை நினைத்துப் பார்" - ஆதி - உங்களிடம் ஏற்கனவே சொன்னது போல் உங்களிடம் கற்க வெண்டியது நிறைய இருக்கிறது.

கண்மணி
03-04-2008, 09:14 AM
கவிதை என்பது வெள்ளிடை மலையாக இருக்க வேண்டிய அவசியமே இருக்க வேண்டியது இல்லை.

உன் வீட்டில் இருக்கும் என் சகோதரிகள் எனும் பொழுது வெளிவரும் அர்த்தங்கள் என்னென்ன தெரியுமா!!!

கணவன் வீடு உன் வீடு என நீ கருதவில்லை.. உன் பிறந்த வீடே உன் வீடாய் கருதுகிறாய்.. அப்படி உன் வீடாய் நீ கருதும் அந்த வீட்டிலுள்ள அவர்களை நான் என் குடும்பமாகக் காண்கிறேன்..

கவிதைகளில் சொல் குறையக் குறைய அர்த்தங்கள் விரியும்.




சில வார்த்தைகள் மறைந்திருப்பதால்தான் அப்பொருள்கள் வெளிப்படும்..

நம்பி அவர்கள் இவ்வளவு யோசித்து இவ்வரிகளை எழுதி இருந்தாலும் இருக்காவிட்டாலும்,

புரிய வேண்டியவர்களுக்குச் சரியாய் புரியும்படி வார்த்தைகள் அமைந்தது ஆச்சர்யம்தான்,,!!!

பெண்கள் இக்கவிதையை படிக்கும் பொழுது, உன்னுடன் பிறந்த என் தங்கைகள் என்பது ஏற்படுத்தும் தாக்கத்தை விட உன் வீட்டில் உள்ள என் தங்கைகள் பெரூம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.. மிகப் பொருத்தமாய்..

இன்னும் கொஞ்சம் ஆழமாய் போனால்..

வீடு என்பது தாய் தந்தை மகன்கள் மகள்கள் மட்டுமா? கூட்டுக் குடும்பங்கள் இருக்கலாம், சொந்தங்கள் கூடி இருக்கலாம்..மகன்களின் மனைவிகள் இருக்கலாம். உடன் பிறந்த என்று தனிப்படுத்தாமல், வீடு என சொந்தங்களுடன் சொல்வதினால் அந்த வீட்டு மருமகள்களுக்கு உண்டான வேதனை அவப்பெயர் எல்லாம் கணக்கில் வந்து விடுகிறது..

வீட்டு மருமகள்களுக்கு அந்த வீட்டுப் பெண் வாழப்போன இடத்தில் வாழாமல் போனால் நல்லபெயரா கிடைக்கும்?

தெரியாமல் நல்லது செய்தாலும் நல்லது நல்லதுதானே! தெரிந்து கொள்வோம்..

கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை.!!

நம்பிகோபாலன்
03-04-2008, 09:25 AM
நேற்று இரவு இதை எழுதிய பொழுது இருந்த எண்ணங்களை விட,
ஆதி, அமரன் மற்றும் கண்மணி பின்னூட்டங்கள் என்னை பிரம்மிப்படைய செய்கிறது.மிக்க நன்றி.

ஆதி
03-04-2008, 09:37 AM
ஆண்மகனுக்குரிய மனநிலையில் படித்ததால் இந்தக் கவிதை எனக்கு புரியாமல் போயிருக்கலாம்..

கவிதை எளிமையாகவும் வெளிப்படையாகவும் இருத்தல் மிக அவசியம் என்பது என் கருத்து, படைப்பவனை மட்டுமல்ல படிப்பவனையும் படைப்பு திருப்திப் படுத்த வேண்டும்..

வைரமுத்துவுக்கு முன்பிருந்தே அப்துல் ரகுமான் கவிதை எழுதுகிறார், தமிழ் நாட்டில் எத்தனைப் பேருக்கு அப்துல் ரகுமானைத் தெரியும் வைரமுத்துவோடு ஒப்பிடும் போது..

அன்புடன் ஆதி

கண்மணி
03-04-2008, 10:25 AM
அது எழுதுபவரின் எண்ண ஓட்டத்தைச் சேர்ந்தது.. எல்லோரும் எளிமையாய் மட்டுமே எழுதவேண்டும் எனச் சட்டம் வேண்டுமா என்ன?.. இன்னாரின் படைப்பில் இது சிறப்பு என்பது கவிஞனுக்கு பெருமை சேர்ப்பது.. வெகு எளிதாய் சொல்ல வேண்டுமென்றால் நம் மன்றத்திலேயே கண்டால் கூட இக்கவிதை நடை இக்கவிஞருடையது என்று பலரும் அறிவார்கள்.

வள்ளுவன் முதல் விவேகன் வரை அவரவர்க்கே உரிய நடையில் புரிதலில், கவிதைகள் எழுதப் பட்டு வருகின்றன. இந்த வரிகளை இன்னாரைத் தவிர வேறொருவர் எழுதி இருக்கச் சாத்தியமே இல்லை எனச் சில வரிகளை அழகாகச் சொல்வர்.

நம்பி அவர்களின் தனித்துவம் இன்னும் முழுதாக மெருகேற வில்லை, அது அவர் எழுத எழுத நாம் படிக்க படிக்க தானே வெளிவரும்..

ஆரம்ப கால கவிஞர்களுக்கு அவர்களின் உள்ளுணர்வு சொல்லும் சில செய்திகளை அவர்களாலேயே புரிந்து கொள்ள இயல்வதில்லை. ஆனால் அவர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளில் அவ்வுள்ளுணர்வு சட்டென வெளிவந்து விடுகிறது..

நீர் அருந்தும் பொழுது அதன் சுவை நாக்கில் அதிகம் நீடிப்பதில்லை, காஃபீ அருந்துகிறோம் என்றால் அதன் சுவை நீடித்து இருக்கிறது. காரணம் என்றால் சுவையின் செரிவு..

சில கவிதைகளில் உள்ள கருத்துச் செறிவு மிக்க சில வார்த்தைகள் நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். அர்த்தம் புரிந்த அந்த நொடி முதல்..

முதல் வாசிப்பில் புரியாமல் போகலாம். ஆனால் அர்த்தச் செறிவுள்ள கவிதைகள் பல்லாண்டுகள் வாழும்.. நீர்த்துப் போன கவிதைகள் காணாமல் போய்விடக் கூடிய ஆபத்துண்டு..

அந்த அர்த்தச் செரிவை வெளிப்படுத்ததான் மன்றத்தில் சிறந்த விமர்சகர்கள் இருக்கிறார்களே!.. இளசு, பென்ஸ், அமரன், அக்னி, சாம்பவி, செந்தமிழரசி, யவனிகா, அறிஞர், தாமரை, எனப் பலர்..

ஒருவர் தம் இயல்பு நடையில் எழுதுவதே சிறந்தது. .அப்பொழுது தான் அவரது சிந்தனை தங்கு தடையின்றி ஓடும்..

நடையை மாத்து உன் நடையை மாத்து என்று பாடினால் எழுதுபவருக்கு தான் என்ன சொல்லவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் யோசிக்க வேண்டியதாகி விடுகிறது. அது தடுமாற்றத்தை தந்து, படைத்தலையே கடினமாக்கி விடுகிறது..

ஒருவன் எழுத ஓராயிரம் பேர் படிக்க, படிக்கும் அத்தனை பேரின் எண்ணவொட்டங்களையும் திருப்தி செய்ய யோசித்தால் படைப்புகளே குறைந்து விடும்

கவிதை என்பது கவிஞனின் எண்ண வெளிப்பாடு.. விளக்கவுரை அல்ல.. கரகோஷத்திற்கா ஆத்ம த்ருப்திக்கா, சங்கேதமா, சங்கீதமா அவன் எத்ற்காக எழுதுகிறானோ அதற்காய் அக்கவிதையின் செறிவு அமைகிறது.. குழந்தைகளுக்கான பாடலென்றால் இப்படி, வயதானவர்களுக்கு இப்படி, இளைஞர்களுக்கு இப்படி என்று நாடி பிடித்து எழுதும் தொழில் முறைக் கவிஞர்களுக்கும், ஆத்ம திருப்திக்காக எழுதும் கவிஞர்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு..

நீங்கள் யாரை நல்ல கவிஞர் என நினைக்கிறீர்கள், நான் யாரை நல்ல கவிஞர் என நினைக்கிறேன் என்பது நம்முடைய தனிப்பட்ட ரசனை. நம்பி என்ன மாதிரி கவிஞராக ஆக வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். குழந்தைகளின் மீதே நம் விருப்பத்தை திணிக்கக் கூடாது என மாறி வரும் காலமிது..

எனக்குப் புரியவில்லை அதனால் யாருக்கும் புரிய வாய்ப்பு குறைவு என்பது தவறான கண்ணோட்டம். நமக்குப் புரியாத வார்த்தையை கவிஞரிடம் கேட்டோம்.. விளக்கமும் கிட்டியது,.. நமக்கு தவறாய் சரியாய் பட்டதைச் சொன்னோம்.. இதெல்லாம் சரியானதே!!

கவிதை எளிமையாகவும் வெளிப்படையாகவும் இருத்தல் மிக அவசியம் என்பது என் கருத்து, படைப்பவனை மட்டுமல்ல படிப்பவனையும் படைப்பு திருப்திப் படுத்த வேண்டும்..


என சொல்வதினால் படைப்பாளி புதியவராக இருக்கும் பட்சத்தில் தம் இயற்கை நடையை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாம். அது அவைன் படைப்புத்திறனை சற்று குறைக்கும்..

சென்ற மின்னிதழில் வெளியான தாமரை அவர்களின் கீரைக் கவிதை நினைவிருக்கும் என நினைக்கிறேன்.. வெறும் கவிதையாய் படித்தபோது ஒன்றுமே புரியாதவர்கள் விளக்கம் தெளிந்தபின் கீரை என்றால் அக்கவிதை நினைவு வரும்படி மாற்றியது எது?

kavitha
03-04-2008, 10:54 AM
உன் வீட்டில் இருக்கும்
என் தங்கைகளை நினைத்து பார்
அடடா.. இந்தவரிகளை பின்னூட்டமாக்க எடுத்துவந்தால் இங்கே கவிதை தர்பாரே நடக்கிறது. நம் மன்றத்தின் தனித்துவமே இது தான். :) கண்மணி அவர்களின் கூற்று சரியானதே.


உன் வீட்டில் இருக்கும்
என் தங்கைகளை நினைத்து பார்
முதலில் இதைப்படித்ததும் கவிதைநாயகனின் மேல் மிகுந்த மரியாதை எழும்பியது. ஆதி அவர்கள் சொன்னது போல பார்த்தாலும்..
உன் வீட்டில் இருக்கும் (கணவன் வீட்டில்) என் தங்கைகளை நினைத்துப்பார் என்றும் பொருள் கொள்ளலாம்.


வைரமுத்துவுக்கு முன்பிருந்தே அப்துல் ரகுமான் கவிதை எழுதுகிறார், தமிழ் நாட்டில் எத்தனைப் பேருக்கு அப்துல் ரகுமானைத் தெரியும் வைரமுத்துவோடு ஒப்பிடும் போது..

அன்புடன் ஆதி
ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசிகப்பட்டாளம் உண்டு ஆதி. சினிமா என்ற ஊடகத்தாலே பாமரனுக்கும் அறியப்பட்டவர் வைரமுத்து.

படித்தவர்கள் மத்தியில் இன்னும் சொல்லப்போனால் கவிஞர்களின் மேலான மரியாதையைப் பெற்றவர் அப்துல் ரஹ்மான்.

முன்னவர் ஜனரஞ்சகவாதி. பின்னவர் கொள்கைவாதி.

நம்பி அவர்களின் கவிதைகள் ஆழமான கருத்துக்களால் வேயப்பட்ட கூரை. கூரை எதுவாக இருந்தாலும் கட்டிடம் வலுவானது. போகப்போக இது மிளிரும் என்பதில் ஐயமேயில்லை. வாழ்த்துகள் நம்பிகோபாலன்.

ஆதி
03-04-2008, 11:16 AM
தங்கச்சி.. எனக்கு புரியவில்லை யாருக்கும் புரியவாய்பில்லை என்று எங்கும் நான் சொல்லவையே..

இப்படி இருந்திருந்தால் எனக்கு புரிந்திருக்கும் என்றுதான் சொன்னேன்..

பின்நவீனத்துவ இலக்கியங்கள் வரைக் கொஞ்சம் புரிந்து கொள்ளும் அறிவு எனக்கு இருக்கு னு நான் நம்புகிறேன்.. பெருந்தேவி உமாமகேஸ்வரி, தமிழச்சி, கலாப்ரீயா, வஸந்த் செந்தில், ராமசுப்ரமணியன்,
மனுஷப்புத்திரன், தேவதேவன், அழகியப் பெரியவன் னு பட்டியல் போடலாம்..

பின்னவீனத்துவத்தில் தலித்திலக்கியங்கள் னு இன்னொரு தனி நீரோட்டம் ஓடுது.. அழகியப் பெரியவன் போன்றக் கவிஞர்கள் இலக்கிய வானில் தண்ணழகு நட்சத்திரமாய் இருக்கிறவர்கள்..

உரைநடை இலக்கியம் கவிதை இல்லை என்று மறுக்கப்பட்ட நா.காமராசனின் "கருப்பு மலர்கள்" ஒத்த பாணியில் உள்ள இலக்கியங்கள் இன்று நவீனத்துவ இலக்கியங்களாக ஏற்கப்பட்டுவிட்டன..

இந்த நா.காமராசனைப் பின் பற்றி எழுதிய கவிஞர்கள் வானம்பாடிக்கவிஞர்களாய் ஆனார்கள்..

நா.காமராசன் "செம்மண்ணை" இரத்த ஓட்டமுள்ள மண் என்று சொன்னதைதான், வைரமுத்து ரத்த ஓட்டமுள்ள மலர், இரத்த ஓட்டமுள்ள சிலை, இரத்த ஓட்டமுள்ள ரோஜா என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்..

இந்த கற்பனை நா.காமராசனுடையது எத்தனைப் பேருக்கு தெரியும் ?

"கடவுள் பாதி மிருகம் பாதி " னு சொன்னவுடனே உங்களுக்கு வைரமுத்து ஞாபகம் வரலாம்.. எனக்கு கண்ணதாசனைத்தான் ஞாபகம் வரும் ஏன்னா "பாதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா மீதி மனதில் தெய்வமிருந்து பார்த்துக் கொண்டதடா " முன்னாடியே எழுதியாச்சு..

தாமரையண்ணா என் துரோணர், எனக்கும் மிக பிடித்த படைப்பு கீரை ராமாயணம்.. ஆனால் எத்தனைப் பேருக்கு இதுப் போன்றப் படைப்புகளை படிக்கும் ஆர்வமும் பொருமையும் இருக்கு, அப்படி இருந்திருந்தா இன்றைக்கு நிறைய பேருக்கு சங்க இலக்கியத்தில் அதிக ஆர்வமும் விருப்பமும் பரிட்சயமும் இருந்திருக்கும்..

செல்வா ஓட இலக்கிய சோலையில் பலபேரோட நடமாட்டம் இருந்திருக்கும் இல்லை ஏன் ?

என்னைப் பொருத்தமட்டில் நான் படைக்க விரும்புவது பாமரனுக்குதான், அதனால் எளிமை என்பதை நான் அதிகம் விரும்புகிறேன் அதற்காக அதை நான் யார் மீது திணிக்க விரும்பவில்லை விரும்பிருந்தா முதலில் அமரன் கிட்டதான் சொல்லிருப்பேன் :D

இப்படி எழுதுங்கள் என்று சொல்லி எழுத வைக்கும் சரியான இடத்தில்தான் நம்பி இருக்கார்.. என்பது என் கருத்து..

அன்புடன் ஆதி

நம்பிகோபாலன்
03-04-2008, 11:42 AM
அம்மாடியோவ் !!!!!! என் எழுத்துக்கு விமர்சனங்கள், பின்னூட்டங்கள் .... மகிழ்ச்சியாக இருக்கிறது.
கவலையும் வருகிறது இனி அடுத்து எழுத வேண்டுமா என்று.
கண்மணி மற்றும் ஆதி அவர்களுக்கு மிக்க நன்றி.

ஆதி
03-04-2008, 11:45 AM
அம்மாடியோவ் !!!!!! என் எழுத்துக்கு விமர்சனங்கள், பின்னூட்டங்கள் .... மகிழ்ச்சியாக இருக்கிறது.
கவலையும் வருகிறது இனி அடுத்து எழுத வேண்டுமா என்று.
கண்மணி மற்றும் ஆதி அவர்களுக்கு மிக்க நன்றி.

நீங்க தொடர்ந்து எழுதுங்க.. இன்னும் நல்லா எழுதனும்..

அன்புடன் ஆதி

கண்மணி
03-04-2008, 11:59 AM
ஒரு விஷயம் தெரியுமா ஆதி நீங்கள் சொல்லிய பின் நவீனத்துவ இலக்கியவாதிகள் யாரையுமே எனக்குத் தெரியாது..

உங்கள் வரிகளுகே வருகிறேன்

"கடவுள் பாதி மிருகம் பாதி "

"பாதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா மீதி மனதில் தெய்வமிருந்து பார்த்துக் கொண்டதடா "

சிந்தனைகள் ஒன்றுதான்.. எதை யார் எழுதினார்கள் எனச் சட்டென்று தெரிகிறதல்லவா

எனக்கே புரிஞ்சிடுச்சுனா மற்றவங்களுக்கும் கண்டிப்பா புரிஞ்சுடும் னு தான் விளக்கம் போடலமா தங்கசி..

அன்புடன் ஆதி

ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்.. அதை விட இது ஒன்றும் கடினமான வார்த்தைகள் அல்ல. நீங்கள் அந்த கோணத்தை தவறவிட்டதால் உங்களால் புரிந்து கொள்ளவில்லை. எல்லாம் தெள்ளத்தெளிவாக தெரியும்படி எழுதவேண்டுமென்றால் அது உரைநடையாகவே மாறிவிடக் கூடிய ஆபத்துண்டு..

அதுவுமில்லாமல் ஒரு கவிஞனை ஒரு ரசிகன் புரிந்து கொண்டு அனுபவிக்க வேண்டும் தான் ஆனால் ரசிகன் கவிஞனின் எண்ணவோட்டத்தில் செல்லும் பொழுதுதான் அதிகப் பலன் பெறுகிறான்.

காளமேகத்தில் சாம்பவி நனைந்தார் போல, கண்ணதாசனில் நான் நனைந்தார்போல கவிஞன் என்ன சொல்கிறார் என ஆராய்ந்தறிவதே கவிதையின் சுகமாகும். கவிஞரின் எண்ணம் அப்படியே கவிதைக்குள் நுழைவது சிறப்பு.. அவன் படைக்கிறான்.. நாம் புடைக்கிறோம்..

எழுத்துப் பிழைகள், தவறான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் வார்த்தைகள், நகாசு வேலைகள் என எத்தனையோ இருக்கின்றன கற்றுக் கொடுக்க. ஆனால் நல்ல ஒரு அர்த்தம் தரும் வார்த்தையினை ஓரிருவருக்கு புரியாது என்பதற்காக மாற்றலாமே என்பது சரியில்லை - இது என் கருத்து..

சொல்லப் போனால் ஒவ்வொரு பெண்ணும் தன் தங்கையை கணவன் தன் தங்கையாக எண்ணுவானா என தவமே இருக்கிறாள் தெரியுமா? அந்தப் பெண்ணுக்கான கவிதையில் உன் வீட்டில் உள்ள என் தங்கைகள் என்று சொல்லுவது ஆழமான வார்த்தை..

அந்த வார்த்தைகள் மாற்றப் படுவதை மாற்றப்படாமல் இருந்தாலே பலம் அதிகம் அதனால்தான் இவ்வளவு வாதாடுகிறேன். கவிதா அக்காவின் வரிகளைப் பாருங்கள்.. அவர்களை கவர்ந்த வரிகளைப் பாருங்கள்...

பெண்களுக்காக எழுதப் பட்ட கவிதையில் பெண்களுக்கு பிடித்த வரியினை ஒரு ஆணுக்கு புரியவில்லை என்பதற்காக மாற்றச் சொல்லலாமா?

ஆதி
03-04-2008, 12:08 PM
அதுவுமில்லாமல் ஒரு கவிஞனை ஒரு ரசிகன் புரிந்து கொண்டு அனுபவிக்க வேண்டும் தான் ஆனால் ரசிகன் கவிஞனின் எண்ணவோட்டத்தில் செல்லும் பொழுதுதான் அதிகப் பலன் பெறுகிறான்.


எனக்கு அது கொஞ்சம் இருக்கு னு இப்பவும் நம்புறேன் தங்கச்சி..

நான் பட்ஜட் னு மாசம் மாசம் போடுறது இலக்கியங்கள் வாங்க மட்டும்தான்..



எனக்கே புரிஞ்சிடுச்சுனா மற்றவங்களுக்கும் கண்டிப்பா புரிஞ்சுடும் னு தான் விளக்கம் போடலமா தங்கசி..

அன்புடன் ஆதி

ஞாபகம் இருக்கும் னு நினைக்கிறேன்


அவ்வளவு சீக்கிரம் நான் எதையும் மறக்குறது இல்லமா :) ..






சொல்லப் போனால் ஒவ்வொரு பெண்ணும் தன் தங்கையை கணவன் தன் தங்கையாக எண்ணுவானா என தவமே இருக்கிறாள் தெரியுமா? அந்தப் பெண்ணுக்கான கவிதையில் உன் வீட்டில் உள்ள என் தங்கைகள் என்று சொல்லுவது ஆழமான வார்த்தை..

அந்த வார்த்தைகள் மாற்றப் படுவதை மாற்றப்படாமல் இருந்தாலே பலம் அதிகம் அதனால்தான் இவ்வளவு வாதாடுகிறேன். கவிதா அக்காவின் வரிகளைப் பாருங்கள்.. அவர்களை கவர்ந்த வரிகளைப் பாருங்கள்...

பெண்களுக்காக எழுதப் பட்ட கவிதையில் பெண்களுக்கு பிடித்த வரியினை ஒரு ஆணுக்கு புரியவில்லை என்பதற்காக மாற்றச் சொல்லலாமா?

நான் மாற்ற சொன்னது உண்மை, அதைப் போல் கவிஞர் விளக்கம் பெற்று தெளிந்த பிறகு, " ஒரு ஆண் மகனுக்குரிய மனநிலையோடு படித்ததால் எனக்கு இப்படி புரிந்துவிட்டதோ" என்று சொன்னதும் உண்மை..

தங்கச்சி.. ஒரு சின்னக் கேள்வி இந்த கவிதை கருவின் குடுமியைப் படித்துவிடுகிற வார்த்தை எது என்று சொல்ல இயலுமா ?


அன்புடன் ஆதி

கண்மணி
03-04-2008, 01:30 PM
குடுமியைப் பிடிப்பதெல்லாம் அல்லிக்கே தெரியும்.. இல்லியா ஓவியாக்கா!:rolleyes::lachen001:

(புரியவில்லையெனில் அவள் கூந்தல் வாசம் படிக்கவும்.)


இந்தக் கவிதையில் ஆழமான இரு வரிகள்..

உன் வீட்டில் இருக்கும்
என் தங்கைகளை நினைத்து பார்

மற்ற வார்த்தைகள் இதைச் சுற்றி விரவிக்கிடக்கின்றன.. எழுத எழுத நம்பி மெருகேறுவார்..

யவனிகா
03-04-2008, 02:23 PM
உன் வீட்டில் இருக்கும்
என் தங்கைகளை நினைத்து பார்
.

அப்ப இது பிளாக்மெயிலிங் வரிகள் இல்லையா?:lachen001::lachen001::lachen001:

அழகான வார்தைகள்...கவிதையும் கூட...வாழ்த்துகள் சகோதரா!!!

மகளே...உனக்குப் பின்னால்
காத்திருக்கிறாள்
கரையேற
உன் தங்கை!!!
உன்னை வைத்தே
ஒப்பிடும் சமூகம் அவளையும்...
மறந்து விடு காதலை
மாற்று மதத்தவனிடம்....

மகளே...தங்கைக்கு
திருமணம் குறித்தாயாயிற்று...
பல்லைக் கடித்து
வாழ்ந்து கொள்...
குடித்தனம்
கொடுமையாயினும்...

மகள் சொல்கிறாள்
அம்மா...
என்னை
இரண்டாவதாகப்
பெற்றிருக்கலாம் நீ!!!

ஆதி
03-04-2008, 02:31 PM
குடுமியைப் பிடிப்பதெல்லாம் அல்லிக்கே தெரியும்.. இல்லியா ஓவியாக்கா!:rolleyes::lachen001:

(புரியவில்லையெனில் அவள் கூந்தல் வாசம் படிக்கவும்.)


இந்தக் கவிதையில் ஆழமான இரு வரிகள்..

உன் வீட்டில் இருக்கும்
என் தங்கைகளை நினைத்து பார்

மற்ற வார்த்தைகள் இதைச் சுற்றி விரவிக்கிடக்கின்றன.. எழுத எழுத நம்பி மெருகேறுவார்..
இந்த கவிதையில் அழகான வரி என்று நீங்கள் சொல்லுங்கள்.. கருவை சுமக்கும் வரிகள் இவையில்லை..
எங்க அக்காப் பின்னூட்டக்கவிதையை படிங்க.. அழகா என் மன எண்ணங்களை எங்க அக்கா அற்புதமா சொல்லிட்டாங்க..

வற்புறுதல் - இதுதான் முக்கியமான வார்த்த.. இந்த கவிதையில்..

எதோ ஒரு வற்புறுதல் அவளை பிடிக்காமல் திருமணம் செய்ய வைத்தது.. அந்த வற்புறுதல் தங்கைகளின் எதிர்காலம் குறித்த பயமாகவும் இருக்கலாம்.. இன்ன வேறெதுவாகவும் இருக்கலாம்.. ஆனால் வற்புறுதல்தான் உண்மை.. மீண்டும் கணவன் வேறு விதமாய் வற்புறுதுறான் அவ்வளவுதான்..

அன்புடன் ஆதி

கண்மணி
03-04-2008, 02:52 PM
அக்கா பாய்ண்டைப் டப்புன்னு புடிச்சீங்க,, ஆனால் கோட்டை விட்டுட்டீங்க..

திருமணம் ஆன பின் கணவனுடன் வாழமாட்டேன் என்று சொல்பவள்.. உனக்காக வேண்டும் உன் சுற்றி உறவுகளுக்காவது வாழ் என்னும் கணவன்..

வரிகளைப் பாருங்களேன்..

நடந்தேரிய திருமணம்,
நீயோ என்னுடன்
வாழ பிடிக்கவில்லை
வற்புறத்தலின் பேரில்
கரம் பிடித்தேன் என்கிறாய்,

ஆக மணமுடிக்கும் முன் மணமகனுக்கு அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது தெரியாது. அவளின் சம்மதம் உண்டு எண்ணித்தான் மணமுடிக்கிறான்,,

இன்னும் கொஞ்சம் யோசிப்பேன்.. ஈன்ற பெற்றோர் வற்புறுத்தலுக்காய் (ஒரு வேளை தற்கொலையே செய்து கொள்வதாய் மிரட்டி இருந்தாலும்) ஒருவன் கை பிடித்த ஒருத்திக்கு உன்னுடன் வாழ மாட்டேன் என்ச் சொல்ல உரிமை இருக்கிறதா? ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படிக் குலைக்க நாம் ஒப்புக் கொள்வோமா?

இதே அந்த ஆண் பொறுமைசாலியாக இல்லாமலிருந்தால் அடுத்த நாளே அவள் தாய் வீட்டில்.. அடுத்த கல்யாணம் அந்த ஆணுக்கு உடனே நிச்சயமாகி விடும். .ஆனால் அந்தக் குடும்பம்? எண்ணிப் பாருங்கள்..

பொறுமைசாலியான அந்த ஆண் என்ன இயலாதவனா? இவளை ஒரு தலையாய் காதலித்தவனா? எத்ற்கு இந்த வாழ்க்கைத் தியாகம்..

என்னுடன் வாழ் என்று சொல்லாமல் வீட்டில் இரு என்கிறான்.

ஏன்? போட்ட மூன்று முடிச்சிற்காகவா?

கடைசி மகளாய் பிறந்ததற்கு
வருந்துகிறேன்
கூட்டுக் குடும்பத்தில்
எல்லோருக்கும் மணமாகி
எனக்கு மாப்பிள்ளை பார்க்க
யாருமில்லை

இந்தக் கவிதையும் வரலாமே! வந்து கொண்டுதானே இருக்கிறது..

பிளாக்மெயில் செய்ய முதல் இடை கடை என இடம் தேவையில்லையே அக்கா!

உண்மை நிலையை எடுத்துச் சொல்வதற்கும் பிளாக்மெயில் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு..

இந்தக் கல்யாணத்திற்கு நீ சம்மதிக்கா விட்டால் நான் செத்துவிடுவேன்
பிளாக்மெயில் செய்தது அவளின் பெற்றோர்..

என்னைத்தொடாதே செத்துவிடுவேன்..பிளாக்மெயில் செய்வது அவள்

நிலையை எண்ணிப்பாரம்மா எனச் சொல்வதைப் போய் பிளாக்மெயில் என்கிறீர்களே!

அப்பா அம்மா 10 நாள் அதிகம் வாழட்டும் என்பதற்காக இன்னொரு ஆணின் வாழ்க்கையைக் குலைப்பது தகுமா அக்கா?
எப்படியும் அவள் முடிவால், முன்னர் செய்த பிளாக்மெயில் தொடரத்தானே போகிறது..

அதை விட மாப்பிள்ளை அழகில்லை, மாப்பிள்ளை படிக்கலை, புடிக்கலை அப்படின்னு ரிஜெக்ட் பண்றது நல்லதில்லியா அக்கா..

ஒரு மனுஷன் சாகக்கூடாதுன்னு இன்னொரு நல்ல மனுஷனை சாகடிப்பது கொலை அக்கா.. அது தற்காப்பில வராது..

நடந்து விட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்தா அம்மணி ஹஸ்பெண்டோட புது வாழ்க்கையை ஆரம்பிக்கறது தான் மனுஷத்தனம்..

என்னிக்கு வற்புறுத்தலுக்காக இன்னொருத்தன் கையால தாலியைக் கட்டிக்கிட்டாச்சோ அன்னிக்கே அவள் காதலை கொலை பண்ணிட்டா..

நீங்க சொன்ன உதாரணமக்கா கல்யாணத்திற்கு முன்னால சரி.. பின்னால தப்பு..

யாருக்காக அக்கா அவள் இன்னும் வாழ்கிறாள்? காதலனோ செத்தாச்சு, கணவனோடோ வாழமாட்டாள்.. தங்கை தந்தை குடும்பமோ தேவையில்லை என்று ஆகியாச்சு.. தினம் தினம் இத்தனை பேரை சித்திரவதை செய்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?

இதில் அவளுக்கு இது ஒரு பிளாக் மெயிலா? என்ன கொடுமை சரவணன் இது?

இப்படி தெளிவா சிந்திக்காதபோது சில பெண்களின் வாழ்க்கையே அறுந்து போயிடுதக்கா.. நாம் பெண்கள் என்ன சொல்றோம்.. ஒரு பொண்ணோட மனசு நுட்பமான உணர்வுகள் கொண்டது.. அதனால் அந்த மனசுக்கு தன் காதலின் புனிதம் தன் காதலனின் நினவுகள் இதையும் விடமுடியாம, கணவனை முழுசா ஏத்துக்கமுடியாம, அவனை ஏமாத்தவும் முடியாம அல்லல் படுகிறோம்..

இது உள்பார்வை நம்ம அம்மாவுக்கும் இருப்பதினாலதானே நம்ம் அம்மா நமக்கு அந்த அட்வைஸ் செய்யறாங்க்க..

பிறக்கும் போதே கடமைகளுடன் பிறக்கிறோமக்கா.. நம்மைச் சார்ந்தவர்களைச் சந்தோஷமா வச்சுக்கிற கடமை.. நான், என் மனசு, என் விருப்பம் என்று விலகிப் போன பின்னால், மறுபடி உள்ள வரமுடிவதில்லை.. இது தான் காதலின் போராட்டம்.. இதில் பலவித நல்ல முடிவுகள், பலவித கெட்ட முடிவுகள் இருக்குது. இந்தப் பெண்ணுக்கோ காதலன் இறந்து விட காதலுக்காக வாழ முடிவெடுத்தாள்..

ஆனால் குடும்பம் விட்டதா? வற்புறுத்தல் திருமணம். கூடப் பிறந்தவங்களும் பெத்தவங்களும் கீறி கூறுபோட்ட அந்த மனசை ஒருவன் மதிக்கிறான்..

இதை வரை நடந்ததை ரிவர்ஸ் கியர்ல போட்டு அவளை அவங்க அப்பா வீட்ல கொண்டு போய் விட்டுடலாமா? அதை அவன் செய்யணுமா?

இல்லை இவள் இங்கயே இருக்கட்டும்னு இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோசமா இருக்கலாமா?

இல்லை அந்த ஆண் என்னதான் செய்ய?

இப்படி எடுத்துச் சொல்லதான் முடியுமக்கா. அந்த ஆண் அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டிருக்க முடியாதுதான்.. ஆனால் அந்த அப்ரோச் பிளாக்மெய்ல் இல்லைக்கா..

நம்பிகோபாலன்
03-04-2008, 02:56 PM
யவனிகா - நான் சத்யமாக பிளாக் மெயில்
பன்ற விததில் எழுதலை.
ஆதி - வற்புறத்தல் ---
நாயகி விட்டு செல்கிறேன் என்கிறாள்,அதற்கு நாயகன் நீ போனால் ஊர் உன்னை வைத்து தங்கையின் வாழ்க்கை பாதிப்பதாய் எழுதி
இருக்கிறேன்,
பிழை இருப்பின் மன்னிக்க.

நம்பிகோபாலன்
03-04-2008, 03:01 PM
கண்மணி எங்கேயோ போய்டீங்க...

அமரன்
03-04-2008, 03:01 PM
நம்பி...
இங்கே இருப்பவை பலரைப் புடம் போடும் நெருப்புத்துண்டங்கள். அதற்குக் காரணமான நீங்களே மன்னிப்பு என்ற ஈரத்தை போர்த்தி விடாதீர்கள்.. அதே நேரம் சோர்ந்து விடவும் இதில் ஏதுமில்லை.. சலனங்களை உதறுங்கள்..

ஆதி
03-04-2008, 03:02 PM
சரியான இடத்திற்கு வந்துடீங்க தங்கச்சி..

வற்புறுதல் செய்து பிணைக்கலாம், பிடிக்க வைக்க இயலாது.. அவளுக்கு அவனைப் பிடிச்சதா நான் எங்கும் சொல்ல வரல..

அப்பறம்.. பிளக் மெயிலை விடுங்க..

பின்னூட்டக் கவிதையைப் படிங்க..

வற்புறுதல் அவ்வளவுதான்..

நீங்க இரண்டு வரிக்காக பேசுறீங்க.. நான் மொத்தக் கவிதைக்காக பேசுறேன்..

சரி நம்ம பஞ்ஜாயத்தை விடுவோம்..

நம்பி சொல்லட்டும் கவிதையின் கருவை..

என் உளக்கருத்தை நான் சரிப்பார்க்க சரியாக இருக்கும்..

அன்புடன் ஆதி

ஆதி
03-04-2008, 03:10 PM
யவனிகா - நான் சத்யமாக பிளாக் மெயில்
பன்ற விததில் எழுதலை.
ஆதி - வற்புறத்தல் ---
நாயகி விட்டு செல்கிறேன் என்கிறாள்,அதற்கு நாயகன் நீ போனால் ஊர் உன்னை வைத்து தங்கையின் வாழ்க்கை பாதிப்பதாய் எழுதி
இருக்கிறேன்,
பிழை இருப்பின் மன்னிக்க.

நம்பி உங்களை யாரும் பிழை சொல்லல.. உங்கள் கவிதையை விமர்சனம் செய்றதா எண்ணி உங்களைக் காயமாக்கி இருந்தால் என்னை மன்னிக்கவும்..

அன்புடன் ஆதி

கண்மணி
03-04-2008, 03:15 PM
சரியான இடத்திற்கு வந்துடீங்க தங்கச்சி..

வற்புறுதல் செய்து பிணைக்கலாம், பிடிக்க வைக்க இயலாது.. அவளுக்கு அவனைப் பிடிச்சதா நான் எங்கும் சொல்ல வரல..

அப்பறம்.. பிளக் மெயிலை விடுங்க..

பின்னூட்டக் கவிதையைப் படிங்க..

வற்புறுதல் அவ்வளவுதான்..

நீங்க இரண்டு வரிக்காக பேசுறீங்க.. நான் மொத்தக் கவிதைக்காக பேசுறேன்..

சரி நம்ம பஞ்ஜாயத்தை விடுவோம்..

நம்பி சொல்லட்டும் கவிதையின் கருவை..

என் உளக்கருத்தை நான் சரிப்பார்க்க சரியாக இருக்கும்..

அன்புடன் ஆதி

அங்கதான் பிரச்சனையே! அந்தப் பெண் என்ன சொல்கிறாள் என்று உங்களுக்கு தெளிவாய் தெரியவில்லையே..

அவன் சொல்வது வீட்டில் சமுதாயத்திற்காய் இருப்போம். குடும்பத்திற்கான கடமையைச் செய்வோம் என்று..

அவள் என்ன சொல்லியிருப்பாள்?
சாகப்போகிறேன் என்கிறாளா? அதை திருமணத்திற்கு முன்னரே செய்திருக்கலாம்

விவாகரத்தா? அவ்வளவு தைரியம் உள்ளவள் கல்யாண வற்புறுத்தல்களுக்கு எப்படி ஒத்துக் கொண்டிருப்பாள்?

கண்காணா இடத்தில் காணாமல் போகப் போகிறாளா? யாருக்காக வாழப் போகிறாள்.. அப்புறம் வற்புறுத்தலுக்கு இணங்கி கல்யாணம் செய்து என்ன பிரயோசனம். அப்பவும் அவளைப் பெற்ற குடும்பம் நாசமாகத்தான் போகிறது..

இதில் வற்புறுத்தல் என்பது கணவனிடம் இருந்து வரவில்லை. அவளை அவள் பெற்றோர் வற்புறுத்த.. அவள் இப்போது அவன் கணவனை வற்புறுத்துகிறாள்..

அவன் கெஞ்சிக் கொண்டிருக்கிறான்..

முழுசையும் மனசில் ஓட விடுங்கள்.. அனைத்து கிளைகளிலும் தாவி யோசியுங்கள்..

நிஜமா இது நடக்கக் கூடிய சம்பவமா? இது கேள்வி..

நம்பி பதில் சொல்வார்.. அவருக்கு முன்னால ஒரு சின்னக் கொசுறு..

நடந்திருக்கு...!!!

கண்மணி
03-04-2008, 03:18 PM
யவனிகா - நான் சத்யமாக பிளாக் மெயில்
பன்ற விததில் எழுதலை.
ஆதி - வற்புறத்தல் ---
நாயகி விட்டு செல்கிறேன் என்கிறாள்,அதற்கு நாயகன் நீ போனால் ஊர் உன்னை வைத்து தங்கையின் வாழ்க்கை பாதிப்பதாய் எழுதி
இருக்கிறேன்,
பிழை இருப்பின் மன்னிக்க.

நம்பி, உங்கள் கவிதை என்னுள் புதைந்து கிடைந்த ஒரு பழைய கதையைக் கிளறிவிட்டன. அதனாலேயே என்னால் இவ்வளவு விவரமாக எழுத முடிகிறது.. உங்கள் கவிதை கருவில் பிழை இல்லை.

ஆதி
03-04-2008, 03:21 PM
இதத்தாம்மா நான் எதிர்ப்பார்த்தேன், எதோ ஒரு வற்புறுதலுக்காக அவள் திருமணம் செய்திருந்தால் அந்த நிர்பந்தம் நிறைவடையும் வரை அவள் தன் பந்தத்தை முறிக்க முயல மாட்டாள்.. கணவன் கீழ் உள்ள இரண்டு வாக்கியத்தைப் பேச தேவை இல்லை..

அன்புடன் ஆதி

கண்மணி
03-04-2008, 03:28 PM
இதத்தாம்மா நான் எதிர்ப்பார்த்தேன், எதோ ஒரு வற்புறுதலுக்காக அவள் திருமணம் செய்திருந்தால் அந்த நிர்பந்தம் நிறைவடையும் வரை அவள் தன் பந்தத்தை முறிக்க முயல மாட்டாள்.. கணவன் கீழ் உள்ள இரண்டு வாக்கியத்தைப் பேச தேவை இல்லை..

அன்புடன் ஆதி

ஆணுக்கே உரிய அவசரம் ஆதி உங்களுக்கு.. முழுக்கவிதையும் மனசில வாங்கலை நீங்க. எளிமையா எழுதி என்ன பிரயோசனம் சொல்லுங்க???

பத்திரம் நம்மை
பிரிக்க தேவையில்லை
எனக்கு உன் காதலை
பொய்யாக்க மனமில்லை
வீட்டில் பிரிந்தே வாழ்வோம்
சமுகத்திற்காக சேர்ந்திருப்போம்...


அவள் எடுத்த முடிவு புரியுதா? விவாகரத்து.. உன்னுடன் வாழமாட்டேன்..

இப்போ சொல்லுங்க.. விவாகரத்து கேட்பதினால தானே இந்த சம்பாஷணை நடந்தது.. அப்படி என்றால், அவளுக்கு இருந்த அந்த நிர்பந்தம் விலகிருச்சு அப்படித்தானே! அப்படின்னா அவளுடைய தங்கைகளின் திருமணம் நடந்திருக்கணுமே! அல்லது அப்பா அம்மா செத்திருக்கணும். வேறு என்ன வற்புறுத்தல்?

அப்ப அந்த வற்புறுத்தல் இப்பொ இல்லாம போயிடுச்சு.. ஆக ஒரு கல்யாணம், சில நாட்கள் இதற்காக ஒரு பிளாக்மெயில்.. உண்மையில் வற்புறுத்தலிக்கு ஆளாக்கப்பட்டிருப்பவன் அவந்தானே!..

பிடிச்சிருக்குன்னாங்க.. கல்யாணம்னாங்க.. தொடாதேன்னாங்க.. விவாகரத்துங்கிறாங்க..

அந்தப் பெண்ணிற்கு அப்படின்னா அவங்க பெற்றோர் செய்த வற்புறுத்தல் என்ன? இதுக்கு உங்களால பதில் சொல்ல முடியாது.. பெண்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.. இப்படிப் பட்ட முடிவை நம் எப்பொழுது எடுப்போம்? இல்லைன்னா நம்பி... நீங்களே யோசிச்சு சொல்லிடுங்களேன்.. (மாட்டி விட்டுட்டேன்.. அனுபவிங்க)

ஆதி
03-04-2008, 04:13 PM
எல்லாத்தைவிட எனக்கு அவசரம் அதிகம்தாம்மா..
எங்க அம்மா கூட சொல்லுவாங்க 8 மாசத்துலையே பொறந்துட்டானு.. :)

ஒரு ஆணுக்கு தன் மனைவிக்கு தன்னைப் பிடிக்கலைனு தெரியும் போது , நீங்க சொன்ன மாதாரி ஒரு ஆணுக்கே உரிய அவசரத்தில் பேசுவானா ?
உங்கை எங்கை னு சொல்லுவான.. சரி அப்படி சொல்லும் மிகப் பொறுமை சாலியான் ஆண் இந்த நாயகன் என்றால்.. கண்டிப்பா அந்தப் பொண்ணுக்கு அவனப் பிடிச்சிருக்கனும்.. அவன் கூட வாழ அவள் மனம் மாறி இருக்கனும்..

இங்க பாருமா.. கல்யாணம் முடிப்பது வாழ தொடுதல் என்பது இந்த ஆணைப் பொருத்தவரை ஒரு மேட்டரே இல்ல.. ஏன்னா ? கீழுள்ள இரண்டு வரிகள் அவன் பக்குவத்தைக் காட்டுது.. இனிமே அதைப் பற்றி பேச வேண்டாமே..

அன்புடன் ஆதி

செந்தமிழரசி
04-04-2008, 04:32 AM
தோழர் நம்பி, தோழி கண்மணி, கவிஞர் ஆதி அணைவருக்கும், எழில் பொங்கும் விமர்சனம் இங்கே வழியக் கண்டேன்.

ஒரு பெண்ணாக "உன் வீட்டில் இருக்கும் என் தங்கைகளை நினைத்துப் பார்" என்னும் வரிகளை நான் ரசித்தாலும். கவிதையின் முழுக்கருவையும் இந்த வரிகள் ஏந்திப் பயணிக்கவில்லை என்பதை சொல்லித்தான் தீரவேண்டும்.

கவிஞர் ஆதியின் கூற்றுப்படி "வற்புறுதல்" என்பதற்கு முதல் தர முக்கியம் தர வேண்டியுள்ளது. கட்டாயம் என்பதற்கும் வற்புறுதல் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

வற்புறுதல் - வற்பு - வற்பம் - உறுதிபாடு

ஒரு உறுதியான நோக்கத்திற்காக நிகழும் செயலைத்தான் நாம் வற்புறுதல் என்று அழைப்போம். வீட்டாரின் வற்புறுதல் தான் அந்த பெண் மணம் முடித்தாள் என்றால், கணவனிடம் சம்பந்தப்பட்ட உண்மைகளைச் சொல்லும் துணிவு அவளுக்கு வந்திருக்க வாய்ப்பு இல்லை. சொல்லுவதை அவன் புரிந்து கொள்வானா என்கிற இன்னொரு சிந்தனையிலையில் அவள் இன்னும் காலத்தைக் கடத்தி இருப்பாள்.

சொல்வதை அவன் புரிந்து கொள்வான் என்கிற நம்பிக்கை அவளுக்கு வரும் பட்சத்தில் அவன் கணவன் மீது அவளுக்கு ஒரு நல்ல எண்ணமும் நம்பிக்கையும் வந்திருக்க வேண்டும். சொல்லிவிட்டாள், சொன்னவள் விவாகரத்து கேட்கிறாள், இது "மௌன ராகம்" படம்.

கணவன் முதிர்ந்த அறிவுடையவன் என்றிருந்திருந்தாலும், அவன் தங்கைகளின் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப்பார் என்று சொல்லி இருக்க மாட்டான், சரியாக தன் மனையாளின் மனநிலைப் புரிந்து அவளுக்கு நிம்மதி தருவது எதுவாய் இருக்குமோ அதை செய்திருப்பான்.

தோழி கண்மணி நமக்குப் பிடித்திருக்கும் வரிகள் கவிதைக்கு அலங்காரம் சேர்க்கிறது அவ்வளவே. ஆதியின் விமர்சனங்களை சரியான திசையின் போகும் சீரானப் பயணமே..

தோழர் நம்பி, நீங்கள் நிறைய எழுதுங்க, எழுத எழுத எழுத்துக்கள் இன்ன்னும் மெருகேறும்.

தோழி கண்மணி மற்றொன்று எளிமை தற்காலத்திற்கு அதிகம் தேவைப்படுகிறது, ஆதியின் பின்னவீணத்துவக் கவிஞர்களின் பட்டியலில் இருப்பவரில் ஒருவர் என் தந்தையின் உடன்பிறந்தவர், இரண்டு தொகுப்புகள் வெளியிட்டுள்ளார், இரண்டாம் தொகுதி 1000 புத்தகத்தில் இதுவரை, 200 தான் விற்கப்பட்டிருக்கிறது வெளியிட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும்.

நன்றி

கண்மணி
04-04-2008, 04:39 AM
அப்பசரி.. முழுக்கதையையும் சொல்லி முடிச்சிடறேன்...

காபி ரைட்ஸ் கண்மணிக்கே!.. கண்மணியை ஹீரோயினா போட்டா மட்டுமே இந்தக் கதையை திரைப்படமாவோ மெகா சீரியலாவோ எடுக்க முடியும்...(VBoyzz குழுவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்).


கதையின் ஒன்லைனர்..

நான் சாகவும் தகுதியில்லாதவள். என் காதலனின் முடிவுக்குக் காரணாமான நான் அணுஅணுவாய் வாழ்க்கையில் சித்திரவதைப் பட்டு எல்லோராலும் துவேசிக்கப்பட்டு சாகவேண்டும்..
--------------------------------

காதலன் இற்ககக் காரணம் தானே என்று எண்ணிய அவள் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறாள்.. அவனை கொண்றது பத்தாதா எங்களையும் கொல்லணுமா? சாகலாம் எல்லோரும் சாகலாம்..வார்த்தைகள் திராவகமாய் அவளுள் இறங்கின...

தவறிழைத்தது நான், இறந்து போனால் ஒரு நொடியில் எல்லாம் போய்விடும், நான் செய்த தவறுக்கு அதுவா தண்டனை.. வாழ்நாள் முழுதும் அணுஅணுவாக துன்பப்படவேண்டும்..

முடிவெடுத்தவள், கல்யாணத்தை அமைதியாய் ஏற்றாள். தினம் தினம் நிந்தனை, அடி, வசைகள் என எல்லோரும் தன்னை நிந்திக்கட்டும் எனக் குரூரமாய் முடிவெடுத்தாள்.. மனநோயாளியாக

ஆனால் கணவனின் பொறுமை, அன்பு ஆகியவை அவளை சித்திரவதை செய்தன, தண்டனை கிடைக்கலியே, யாரும் வசைமொழி பொழியலையே.. இந்த அன்புக்கு நான் உரியவள் இல்லையே!!

விவாகரத்து கேட்கிறாள்.. அப்படியாவது என்னைத் திட்டுங்கள், அடியுங்கள் என.. அவன் எடுத்துச் சொல்லி பலனில்லை.. அவள் இப்பொழுது மனநோயாளி.. அவளுக்குத்ட் தேவை டார்ச்சர், துன்பம்.. உயிர்வதை

இப்படியே போனால் அவள் முடிவு ஒரு நாள் பஸ்சிலோ இல்லை கிணற்றிலோ முடியும்..

யோசிக்கும் கணவன் தன் தோழியின் உதவியை நாடுகிறான்... இவள் மனம் என்ன அறிய விழைகிறான்..

மனோதத்துவ ம்ருத்துவரின் உதவி நாடப்படுகிறது,,

மற்றவரின் வசைகளை அவள் எதிர்பார்த்து நடப்பது வெளிவர திரை மெல்ல விலகுகிறது,,

அவளின் உள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் அந்த சுயவெறுப்பு மனோதத்துவ டாக்டருக்குப் புரிய ஆரம்பிக்கிறது..

புரிய வைக்கிறார்.. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் யாரும் முழு பொறுப்பாவதில்லை என்று.. தவறுக்கு பிராயசித்தம் தண்டனை அல்ல.. மீண்டும் தவறு செய்யாமலிருப்பது என்று..

மருந்தின் உதவிக்ளோடும், மனோதத்துவ மருத்துவத்தாலும் மெல்ல மாறிய அவள்,

தன்க்குப் பிறக்கும் குழந்தைக்கு தன் காதலனின் பெயர் வைக்கிறாள்..

சுபம்..


இப்படிப் பட்ட ஒரு கதையின் இடையிலே இக்கவிதை பொருந்துகிறது..

இதுக்கு பேர் என்னன்னா, ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்குவது..

ஒரு கவிதை ஒரு மெகாசீரியல் ஆவது..

சரி இதைக் கொண்டே

எண்ணங்களும் எலெக்ட்ரான்களும் என்ற கட்டுரைக்கு கரு கிடைச்சாச்சு.. காபிரைட் ரிசர்வ்டு..

விரைவில் எழுதுகிறேன்..

கண்மணி
04-04-2008, 05:54 AM
அரசி, ஒரு பெண்ணின் மனம் எவ்வளவு நுண்ணியது பார்த்தீர்களா, நான் சொன்ன கதையைக் கவனியுங்கள், வற்புறுத்தல் என்பது எங்கே வந்தது?

ஒருபெண் ஒரு காரணம் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதன் முன்னும் பின்னும் பல விஷயங்கள் இருக்கலாம். பெண்ணின் மனம் ஆழமென்பது இதனால்தானே! உங்களுக்குப் புரியாதா? எத்தனைக் கசப்புகளை ஓரிரு பொய்களில் மறைக்கிறோமென்று.. நம்பிக்கு அது புரிந்திருக்க நியாயமில்லைதான். எனக்கென்னவோ அவர் இதுபோல் எங்கோ நேரில் கண்டிருப்பதாய் அல்லது நெருங்கியவர் சொல்லக் கேட்டதாய் தோன்றுகிறது..

நீங்கள் கவிதையை மட்டுமே பார்த்தீர்கள் என்று புரிகிறது.. நான் அதன் பின் இருக்கும் பெண்ணைப் பார்த்தேன் சகோதரி.. அதனால்தான் என்கேள்விகள் அந்தப் பகுதியில் இருந்து வந்தன். அவள் மனதில் முழுகினேன்... கேள்விகள் எழுப்பினேன்,

எனக்கு எளிய கவிதை பிடிக்கும். - இப்படிச் சொல்வது சரி..
புதிய கவிஞர்கள் எளிமையாக எழுத வேண்டும் என்பது தவறு.

அப்புறம் கவிதை எழுதுவதில் எப்படி இத்தனை தலைமுறைகள்? மாற்றம் நிரந்தரம்.. அவரைச் சுற்றி அப்படி ஒரு சூழ்நிலை இருப்பதால்தான் அவரின் ஸ்டைல் வருகிறது.. என்னைச் சுற்றி இருக்கும் சூழல்தான் என் ஸ்டைலை நிர்ணயிக்கிறது.. கோவைத் தமிழினிமை சென்னக்காரரின் பேச்சில் வராது.. இயல்பான நடை.. அவரின் சொந்த நடை.. அதுதான் எழுத்தாளனின் பலம்.

செந்தமிழரசி
04-04-2008, 06:04 AM
தோழி எளிமை என்பது எமக்கு தெரிந்த தமிழை வைத்து எழுதுவதுதான்.

ஒரு பெண்ணாக அந்த பெண்ணின் நிலையை என்னால் முழுமையும் புரிய முடிகிறது, தங்களின் கதையைப் படித்தேன் நீங்கள் முடித்த விதத்தில் அதிர்ந்து போன்னேன், அவளை நல்ல நிலைமைக்கு கொணர்ந்தவன் அவன் கணவன், ஆனால் பிறந்த குழந்தைக்கு அவள் வைப்பது காதலன் பெயர், ஆழ்ந்துப் போங்கள் அவள் வாழப்போவது கணவனுடனா ? காதலுடனா ? வெறும் உணர்ச்சிக்கு பிள்ளைப் பெற்றுக்கொண்டு காதலன் நினைவில் வாழப்போவதுதான் உண்மையானக் காதலா ? அதற்கு அவள் இறந்திருக்கலாம் தோழி..

நன்றி

நம்பிகோபாலன்
04-04-2008, 06:17 AM
"எனக்கென்னவோ அவர் இதுபோல் எங்கோ நேரில் கண்டிருப்பதாய் அல்லது நெருங்கியவர் சொல்லக் கேட்டதாய் தோன்றுகிறது.. "

மிக சரி கண்மணி.
என் சுற்றத்தில் பார்த்து அவர்களின் வலியை எனக்குள் ஏற்ப்படுத்தி எழுதியவை.
ஆதி, செந்தமிழரசி மற்றும் யவனிகா என்னை மேலும் செதுக்க ஆசைபடுகிறேன்.நன்றி.

கண்மணி
04-04-2008, 06:20 AM
இந்தக் கதை முடிவு யாருக்கும் பிடிக்க வேண்டுமென்று எழுதப்படவில்லை தோழி.. எதையும் நியாயப் படுத்த வேண்டும் என்றோ, ஒரு சம்பிரதாயத்திற்காகவோ எழுதப்பட்டதல்ல. இது உண்மையாக நடந்த முடிவு..

அதன் பின் ஆயிரம் காரணங்கள் உண்டு.. உணர்ச்சிகள் உண்டு.. உண்மைகள், புரிதல்கள் உண்டு.. வெட்டிச் செல்வதும், பட்டென ஒட்டுவதும் எல்லோரும் செய்வதல்ல..



விரித்தால் அது நிஜமாகவே மெகா சீரியல்தான்..

கண்மணி
04-04-2008, 06:22 AM
"எனக்கென்னவோ அவர் இதுபோல் எங்கோ நேரில் கண்டிருப்பதாய் அல்லது நெருங்கியவர் சொல்லக் கேட்டதாய் தோன்றுகிறது.. "

மிக சரி கண்மணி.
என் சுற்றத்தில் பார்த்து அவர்களின் வலியை எனக்குள் ஏற்ப்படுத்தி எழுதியவை.
ஆதி, செந்தமிழரசி மற்றும் யவனிகா என்னை மேலும் செதுக்க ஆசைபடுகிறேன்.நன்றி.

இதனாலேயே எனக்குத் தெரிந்த உண்மைக் கதை சொன்னேன் நம்பி!!! உதவும் என்றால் உபயோகியுங்கள்.. பெண் மனதில் ஆழமாய் இருக்கும் சிந்தனையை எளிதில் கண்டுபிடிக்க முடியாது,

ஆதி
04-04-2008, 07:35 AM
தங்கச்சி, உங்கள் வாதத்தில் இருந்தே நான் புரிந்து கொண்டேன் ஏதோ ஒரு சம்பவத்தின் தாக்கம் தான் உங்கள் வாதத்துக்கு பின்னணியா இருக்குனு, என் நோக்கம் படைப்பை விமர்சிப்பதாக மட்டுமே இருந்தது தவிர வாதமோ இதனுள் விவாதமோ இல்லை.. விமர்சனம் கவிஞனை செதுக்கும் என்ற நோக்கிதான் என் கருத்து இருக்கும் கவிஞனை தாக்கும் நோக்கில் நான் என்று விமர்சித்ததில்லை.. என் மனதுக்குப் பட்டதை நான் சொன்னேன் உங்கள் மனதில் உள்ளதை நீங்கள் சொன்னீர்கள் அவ்வளவே..
மனது என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுடையது ஆழமானதுதான்..

அன்புடன் ஆதி