PDA

View Full Version : ஒப்பிய ஒப்புமைகள் (5) கடலாகும் அடர் வனமே



செல்வா
30-03-2008, 10:00 AM
(இது என்னோட முதல் முயற்சி இந்தவகைப் பாடல்களில். இலக்கணத்தை தேர்வுக்காக மட்டும் படித்தவன் இப்போது தான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். தட்டித் திருத்தினால் புரிந்து திருத்திக் கொள்வேன். )

வெண்சுருட்டாமே கரையானும

வெண்ணுடல் கொண்டிருக்கும்
கொண்டாரின் உடலோடு - புற்று
கொண்டு உயிர் குடிக்கும்
கண்டுடனே நீக்கிவிடு
வெண்சுருட்டாகும் கரையானே...

இப்படி எழுதியதை கீழேயுள்ளபடி மாற்றியுள்ளேன்

வெண்ணுடல் கொண்டிருக்கும்
கொண்டாரின் உடலோடு - புற்று
கொண்டு உயிர் குடிக்கும்
வெண்சுருட்டாமே கரையானும்.
(திருத்தியமைக்கு நன்றி சாம்பவி)

anna
30-03-2008, 10:14 AM
அருமையான புது கவிதை வாழ்த்துக்கள்.

யவனிகா
30-03-2008, 11:21 AM
கரையானும் சுருட்டுமா...
சிலேடை நன்றாகப் பொருந்துது...
நல்ல முயற்சி செல்வா...
இன்னும் மருந்தடிக்கலையா கரையானுக்கு...???

சிவா.ஜி
30-03-2008, 12:34 PM
வெண்ணுடல் கொண்டிருக்கும்
கொண்டாரின் உடலோடு - புற்று
கொண்டு உயிர் குடிக்கும்
கண்டுடனே நீக்கிவிடு
வெண்சுருட்டாகும் கரையானே...
வெண்சுருட்டுக்கொரு வெண்பாவா....நல்லாருக்கு செல்வா.நிச்சயமாய் இது கரையான்தான்.....தன்னுயிரைக் கரைத்து அடுத்தவரின் உயிரையும் கரைக்கும் கரையன்....ஆனால் கரையான்.
வாழ்த்துகள்....(அக்கா சொன்னதைக் கேட்டீங்களா...மருந்தடிச்சிட்டீங்களா?)

செல்வா
30-03-2008, 01:13 PM
மனம் பிரளும் மயக்கம் தரும்
மானம் அழிய நல்மனை யும்கெடும்
நிறைவாழ்வை விலைகேட்கும் -கெடு
மதுவாகும் விலைமாதே

செல்வா
30-03-2008, 01:19 PM
வெண்சுருட்டுக்கொரு வென்பாவா....
ஐயோ.. அண்ணா.... வெண்பாவா? இது வெண்பா இல்லையண்ணா.. அந்தளவுக்கு நான் இன்னும் வளரலீங்க...


(அக்கா சொன்னதைக் கேட்டீங்களா...மருந்தடிச்சிட்டீங்களா?)
அடிச்சிர வேண்டியது தான்....

நன்றி அண்ணா பின்னூட்டத்துக்கு

செல்வா
30-03-2008, 01:20 PM
கரையானும் சுருட்டுமா...
சிலேடை நன்றாகப் பொருந்துது...
நல்ல முயற்சி செல்வா...

நன்றி அக்கா...ஆனா
நான் கேட்டதுக்கு பதில் சொல்லல...
:sauer028::sauer028::mad::mad:

செல்வா
30-03-2008, 01:21 PM
அருமையான புது கவிதை வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணாமலை அவர்களே...

ஆதி
30-03-2008, 02:42 PM
மாப்பு, அசத்தலோ அசத்தல்..

கரையும் கரைக்கும்
புகைப்பவனைப் புகைக்கும் புகை

குடி கெடும் கெடவைக்கும்

செல்வா வெண்பா முயற்சித்திருந்தால் இன்னும் இனிப்பும் அழகும் கூடி இருக்கும்.. அடுத்த சிலேடை வெண்பா வாய் எதிர்ப்பார்க்கிறேன் உன்னிடம் இருந்து..

அன்புடன் ஆதி

சுகந்தப்ரீதன்
30-03-2008, 02:43 PM
மனம் பிரளும் மயக்கம் தரும்
மானம் அழிய நல்மனை யும்கெடும்
நிறைவாழ்வை விலைகேட்கும் -கெடு
மதுவாகும் விலைமாதே


ம்ம்ம்.. கலக்குற செல்வா தொடரட்டும் உன் முயற்சிகள் அனைத்தும்...!!

வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!

சாம்பவி
30-03-2008, 02:53 PM
(இது என்னோட முதல் முயற்சி இந்தவகைப் பாடல்களில். இலக்கணத்தை தேர்வுக்காக மட்டும் படித்தவன் இப்போது தான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். தட்டித் திருத்தினால் புரிந்து திருத்திக் கொள்வேன். )

வெண்ணுடல் கொண்டிருக்கும்
கொண்டாரின் உடலோடு - புற்று
கொண்டு உயிர் குடிக்கும்
கண்டுடனே நீக்கிவிடு
வெண்சுருட்டாகும் கரையானே...

இப்படி எழுதியதை கீழேயுள்ளபடி மாற்றியுள்ளேன்

வெண்ணுடல் கொண்டிருக்கும்
கொண்டாரின் உடலோடு - புற்று
கொண்டு உயிர் குடிக்கும்- புற்றை
கண்டுடனே நீக்கிவிடும்
வெண்சுருட்டாமே கரையானும்.

:O :O :O :O
இதென்ன புதுக்கதை.... !!!!!!

அமரன்
30-03-2008, 03:03 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10070

இங்கயும் கொஞ்சம் இருக்குங்கோ..

செல்வா
30-03-2008, 03:30 PM
புற்றை
கண்டுடனே நீக்கிவிடும்
வெண்சுருட்டாமே கரையானும்.
:O :O :O :O
இதென்ன புதுக்கதை.... !!!!!!

மரப் பொருட்களில் கரையான் புற்று படிவதைப் கண்டாலோ - அல்லது
மனித உடலில் புற்று படிவதைப் கண்டால் உடனே அதை நீக்குவர்
- இதைத்தான் சொல்ல வந்தேன்.
தவறோ...?

செல்வா
30-03-2008, 03:32 PM
செல்வா வெண்பா முயற்சித்திருந்தால் இன்னும் இனிப்பும் அழகும் கூடி இருக்கும்.. அடுத்த சிலேடை வெண்பா வாய் எதிர்ப்பார்க்கிறேன் உன்னிடம் இருந்து..

எனக்கும் எழுத ஆசை தான் ஆதி
வெண்பாவோட இலக்கணம் எல்லாம் மறந்து போச்சுடா... நீ சொல்லிக்குடு முயற்சி பண்றன்.

செல்வா
30-03-2008, 03:34 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10070

இங்கயும் கொஞ்சம் இருக்குங்கோ..

நீ சுட்டிய திரிய பாத்த பிறகுதான் புரியுது.. அமரன். இது சிலேடையல்ல இரட்டுற மொழிதல். இரண்டு பொருளைப்பற்றி ஒரே வார்த்தைகளால் பாடுவது.

சிலேடையும் இரட்டுற மொழிதலும் ஒன்றா? - தமிழாசிரியர்கள் விடைகூறுங்களேன்.

செல்வா
30-03-2008, 03:35 PM
ம்ம்ம்.. கலக்குற செல்வா தொடரட்டும் உன் முயற்சிகள் அனைத்தும்...!!

வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!
நன்றி சுகந்தா....

சாம்பவி
30-03-2008, 03:49 PM
மரப் பொருட்களில் கரையான் புற்று படிவதைப் கண்டாலோ - அல்லது
மனித உடலில் புற்று படிவதைப் கண்டால் உடனே அதை நீக்குவர்
- இதைத்தான் சொல்ல வந்தேன்.
தவறோ...?

"புற்றைக் கண்டவுடன்
நீக்கிவிடும் வெண்சுருட்டும் கரையானே... "

1. வெண்சுருட்டும் கரையானும்
புற்றை உடனே நீக்கி விடுவதாக
பொருள் தருகிறதே.... கவிஞரே.... !!!!!!!!!!!

2. மேலே கூறிய பிழையைக் களைந்தாலும்....
புற்றைக் கண்ட பிறகு நீக்குதலைக் காட்டிலும்..
வருமுன் காத்தல் நலமன்றோ...



வெண்ணுடல் கொண்டிருக்கும்
கொண்டாரின் உடலோடு - புற்று
கொண்டு உயிர் குடிக்கும்
வெண்சுருட்டாமே கரையானும

நான்காவது வரியையே நீக்கி விட...
சொல்ல வந்த பொருளழகு மிளிராதோ...... !

செல்வா
30-03-2008, 03:58 PM
வெண்ணுடல் கொண்டிருக்கும்
கொண்டாரின் உடலோடு - புற்று
கொண்டு உயிர் குடிக்கும்
வெண்சுருட்டாமே கரையானும

நான்காவது வரியையே நீக்கி விட...
சொல்ல வந்த பொருளழகு மிளிராதோ...... !
இதைத்தான் எதிர்பார்த்தேன் தங்களிடம்.
பாரதி அண்ணாவும் இதைத்தான் சொன்னார்.
இப்போதுதான் புத்திக்குப் புரிந்தது.
நன்றி சாம்பவி.
மாற்றி விடுகிறேன்.

சாம்பவி
30-03-2008, 04:43 PM
மனம் பிரளும் மயக்கம் தரும்
மானம் அழிய நல்மனை யும்கெடும்
நிறைவாழ்வை விலைகேட்கும் -கெடு
மதுவாகும் விலைமாதே

விலைமகளுக்கும் மனதுண்டு...
அவளுக்கும் வாழ்க்கையுண்டு...!

மாதவியால் கோவலனின்
நிறைவாழ்வு கெட்டதாக
சரித்திரம் சொன்னதில்லை... !!!!!

சாம்பவி
30-03-2008, 08:14 PM
நீ சுட்டிய திரிய பாத்த பிறகுதான் புரியுது.. அமரன். இது சிலேடையல்ல இரட்டுற மொழிதல். [b]இரண்டு பொருளைப்பற்றி ஒரே வார்த்தைகளால் பாடுவது. [/b[

சிலேடையும் இரட்டுற மொழிதலும் ஒன்றா? - தமிழாசிரியர்கள் விடைகூறுங்களேன்.

இரட்டுற மொழிதல்
இரண்டு அல்லது பல பொருள்பட இயம்புதல்
உதாரணம்...
"ஆண்டவன்"...
ஆண்ட அவன்.... அரசன்...
ஆண்டவன்... இறைவன்..

பல திரைப்படப் பாடல்கள்
இரட்டுற மொழிந்து
தமிழ் வளர்க்கின்றன ..... !!!!!!!!

சிலேடை....
இரண்டு பொருளை ( objects )
ஒரு பொருள்பட ( meaning )
உரைத்தல்....

உதாரணம்...
திரைப்படப் பாடலில் இருந்து .....
சக்கரை நிலவே பெண் நிலவே பாடலில் வருமே...
இந்த வரிகளையே உதாரணமாய் எடுத்துப்போம்...

"காதல் என்ற ஒன்று அது கடவுள் போல*
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை... "

உணர முடிதல்... எனினும் உருவமின்மை.. என்பது
காதல்.,, கடவுள் என்ற இரண்டு பொருள்களுக்கும்....
பொதுவான தன்மையாம்...
எனவே.. இது கடவுளுக்கும் காதலுக்குமான சிலேடை.....

ஆக...
உங்களின் இந்த வெண்சுருட்டு கவிதை....
சிலேடை தான்..
சிலேடையைத் தவிர வேறொன்றுமில்லை.... !

பி.கு.:
"டோலு டோலு தான் " பாடல் நினைவுக்கு வந்தால்
அதற்கு நான் பொறுப்பில்லை..
ஆனால் அதுவும் சிலேடை தான்...
இறைவனுக்கும் இடைக்குமானது.... !



தமிழாசிரியர்கள் விடைகூறுங்களேன்.
ஒன்பதாம் வகுப்பில்
தமிழாசிரியை கற்பித்தவை... !
ஆகவே விடை சொன்னது
தமிழாசிரியை தானே.... !

krishnanmca_mku
31-03-2008, 01:07 AM
இது ஒரு அருமையான விடயம், இதுபோல நான் முன்னர் பார்த்ததில்லை...!!


This is wonderful article. i had never see in my life.

ஓவியன்
31-03-2008, 02:11 AM
அடடா இங்கே ஒரு தமிழ் பாடமே நடக்கிறதா.....???

தொடருங்க மக்களே, அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.....!!

அனுராகவன்
31-03-2008, 02:41 AM
அருமையான புது கவிதை...
என் வாழ்த்துக்கள்,.....
தொடர்ந்து தருக,....

செல்வா
31-03-2008, 07:19 AM
அலையடிக்கும் நுரை மிதக்கும்
கலை படைக்க காரணியாம்
வளம் பெருக வழிகொடுக்கும் - உயிர்
வாழ்வதற்கு உணவளிக்கும்
பொறுமை கொண்ட நங்கையிவள்
பொறுமை விட்டு பொங்கி விட்டால்
கரை உடைத்து உயிர் குடிக்கும் -பெருங்
கடலாமே காட்டாறும்
(திருத்தலுக்கு நன்றி ஆதி...)

செல்வா
31-03-2008, 07:32 AM
இரட்டுற மொழிதல்
இரண்டு அல்லது பல பொருள்பட இயம்புதல்
உதாரணம்...
"ஆண்டவன்"...
ஆண்ட அவன்.... அரசன்...
ஆண்டவன்... இறைவன்..

சிலேடை....
இரண்டு பொருளை ( objects )
ஒரு பொருள்பட ( meaning )
உரைத்தல்....

உதாரணம்...
திரைப்படப் பாடலில் இருந்து .....
சக்கரை நிலவே பெண் நிலவே பாடலில் வருமே...
இந்த வரிகளையே உதாரணமாய் எடுத்துப்போம்...

"காதல் என்ற ஒன்று அது கடவுள் போல*
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை... "

உணர முடிதல்... எனினும் உருவமின்மை.. என்பது
காதல்.,, கடவுள் என்ற இரண்டு பொருள்களுக்கும்....
பொதுவான தன்மையாம்...
எனவே.. இது கடவுளுக்கும் காதலுக்குமான சிலேடை.....

விளக்கத்திற்கு நன்றி சாம்பவி. நான் தலைகீழாக நினைத்துக் கொண்டிருந்தேன். காளமேகப் புலவரின் "ஆடிகுடத்தடையும் ஆடும்போதே இரையும்..." பாடலை இரட்டுற மொழிதலுக்கு எடுத்துக்காட்டாக இலக்கண வகுப்பில் படித்ததாக ஞாபகம் அதோடு
இரண்டும் ஒன்றுதான் என்று சொல்வோரும் இருக்கின்றனர். சில தளங்களில் பார்த்தேன். அதுதான் குழப்பமாகி விட்டது.


ஒன்பதாம் வகுப்பில்
தமிழாசிரியை கற்பித்தவை... !
ஆகவே விடை சொன்னது
தமிழாசிரியை தானே.... !

முடியல.....:traurig001:

செல்வா
31-03-2008, 07:43 AM
விலைமகளுக்கும் மனதுண்டு...
அவளுக்கும் வாழ்க்கையுண்டு...!

இதைப்பற்றி கவிதையில் சொல்லவில்லை மதுவருந்தும் ஆடவனுக்கும் விலைமகளிரிடம் செல்லும் ஆடவனுக்கும் உள்ளஒற்றுமைகளைப் பற்றிதான் எழுதினேன்.



மாதவியால் கோவலனின்
நிறைவாழ்வு கெட்டதாக
சரித்திரம் சொன்னதில்லை... !!!!!
கெடாத நிறைவாழ்வை விட்டு தரித்திரனாய் திரும்பிய காரணமென்னவோ..
நிற்க... கோவலன் என்ற காவியத்திலிருப்பவனை கருத்தில் கொண்டு எழுதவில்லை...

ஆதி
31-03-2008, 07:47 AM
கெடாத நிறைவாழ்வை விட்டு தரித்திரனாய் திரும்பிய காரணமென்னவோ..


சலனம்..


ஒருத்தி ஒருவனைப் பாட்டு ஞாபகம் வந்திருச்சுடா அதான் ஒத்த வார்த்தையில் பதில்..

அன்புடன் ஆதி

ஆதி
31-03-2008, 07:59 AM
பிரிச்சு மேயிறது, பின்னிப் பெடல் எடுக்குறது நா இதுதானா ?? :D

கடலாமே காட்டாறும் அசத்தல், கலக்குற சந்த்ரு.. :)

எல்லா சிலேடைக்கும் மேலும் தலைப்பை இட்டுவை அப்பதான் புதிதா வந்து திரிப் பாக்குறவாளுக்கெல்லாம் புலப்படும் எல்லா சிலேடையும்..

கடலாமே காட்டாறில் சின்னதா சில மாற்றம் இருந்தா நல்லா இருக்குமோ நு தோனுச்சு, பொருள் சிதையுமா மாற்றம் இருக்குதானு பாரு..

அலையடிக்கும் நுரை மிதக்கும்
கலை படைக்க காரணியாம்
வளம் பெருக வழிகொடுக்கும் - உயிர்
வாழ்வதற்கு உணவளிக்கும்
பொறுமை கொண்ட நங்கையிவள்
பொறுமை கொன்று பொங்கி விட்டால்
கரை உடைத்து உயிர் குடிக்கும் -பெருங்
கடலாமே காட்டாறும்

சத்தம் சரியாய் இருக்கும் என்று மாற்றிப்பார்த்தேன்..

மறக்காம அந்தந்த சிலேடைக்கு மேல் தலைப்பிடு..

உன் சிலேடைச் சிற்பங்களுக்கு பாராட்டுக்கள் பல..

அன்புடன் ஆதி

செல்வா
31-03-2008, 08:13 AM
கடலாமே காட்டாறில் சின்னதா சில மாற்றம் இருந்தா நல்லா இருக்குமோ நு தோனுச்சு, பொருள் சிதையுமா மாற்றம் இருக்குதானு பாரு..

அலையடிக்கும் நுரை மிதக்கும்
கலை படைக்க காரணியாம்
வளம் பெருக வழிகொடுக்கும் - உயிர்
வாழ்வதற்கு உணவளிக்கும்
பொறுமை கொண்ட நங்கையிவள்
பொறுமை கொன்று பொங்கி விட்டால்
கரை உடைத்து உயிர் குடிக்கும் -பெருங்
கடலாமே காட்டாறும்

திருத்தியமைக்கு நன்றி ஆதி இப்படி வாத்தியார்கள் இருக்குறதாலதான் நான் துணிந்து கவிதை எழுத முயற்சிக்கிறது. கிழிஞ்சு போன பழசையும் ஒட்டுபோட்டு .... தோரணமாக்கிடுவீங்க தானே.

ஆனா இதை எழுதுனபிறகு சந்தேகம்டா... குணத்தால் வேறுபட்ட வற்றை ஒப்புநோக்கி பாடுவதுதானே... சரி... கடலும் காட்டாறும் சிலேடையாகுமானு?
தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்..........

அல்லிராணி
31-03-2008, 09:53 AM
சிலேடையணி

76. ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்.


சிலேடைக்கு எடுத்துக்காட்டுகள் மன்றத்தில் மிக உண்டு

முல்லையின் தேவை
கொம்பு மட்டுமல்ல
பந்தலும் தான்

ஒரு குச்சி மட்டும் இருந்தால் மட்டும் இருந்தால் போதாது முல்லை படர.. அதற்கு பந்தலிட்டால் மட்டுமே படர்ந்து வளரும்.

முல்லைக்கொடியாளின் தேவை ஒரு மஞ்சள் கொம்பு கட்டிய தாலி மட்டுமல்ல பந்தலிட்டு நடக்கும் திருமணம் (அதாவது திருட்டுத் தாலி வேணாம், ஊரறிய கல்யாணம் வேண்டும்)

சேலை(கண்ணை) உயர்த்திப் பார்
பாவாடை

விழிகளை உயர்த்திப் பார், இது பாக்களால் ஆன ஆடை (நன்றி : அமரன்)

"மணியாவுக்கு மாமி வாங்கிய புடவை". எப்படி இருக்குது தலைப்பு (முந்தானை) - (ஐவர் அணி அரட்டை..தாமரை)

இரு பொருட்களின் பண்பு குறித்து ஒப்புமை கொடுத்து சொல்லுதல் சிலேடை இல்லை எனக் கருதுகிறேன்,

வெகு நாட்களுக்கு முன்பு படித்தது.. எது சிலேடை என்று தெரியும்.. இது என்ன என்பதை அறிய படிக்க வேண்டும். காளமேகப் புலவர் இது போல் பல பாடல்கள் எழுதி இருக்கிறர். அவற்றை சிலேடை என்று சொல்வர். ஆனால் சிலேடை இலக்கணத்தின் படி, பொருளை கவிஞர் நேரடியாக சொல்வதில்லை. இருபொருள்படும்படியே கூறுவார். இரட்டுறமொழிதல் சிலேடையின் வகையே ஆகும்.

ஒப்புமைக்கூட்டவணி
80. கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத்
தொருபொரு ளுரைப்ப தொப்புமைக் கூட்டம்.


ஒரே குணத்தைக் கொண்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு ஒரு பொருளை உரைத்தல் ஒப்புமைக் கூட்டவணி..

ஒட்டணி

52. கருதிய பொருடொத் ததுபுலப் படுத்தற்
கொத்ததொன் றுரைப்பினஃ தொட்டென மொழிப.


ஒட்டணி வகை

53. அடையும் பொருளு மயல்பட மொழிதலும்
அடைபொது வாக்கி யாங்ஙன மொழிதலும்
விரவத் தொடுத்தலும் விபரீதப் படுத்தலும்
எனநால் வகையினு மியலு மென்ப.

இதனால்,.. இதனால்.. இதனால்.. இதனால்.. இதுவும் இதுவும் இதுவும் ஒன்று எனச் சொல்லல் சிலேடை அணி அல்ல என்பது மாத்திரம் தெளிவாய் தெரியும். அது ஒட்டணியோ, ஒப்புமைக்கூட்டவணியோ
இல்லை வேறு எதாவது அணியாகவோ இருக்கலாம்.

செல்வா
31-03-2008, 12:23 PM
இதனால்,.. இதனால்.. இதனால்.. இதனால்.. இதுவும் இதுவும் இதுவும் ஒன்று எனச் சொல்லல் சிலேடை அணி அல்ல என்பது மாத்திரம் தெளிவாய் தெரியும். அது ஒட்டணியோ, ஒப்புமைக்கூட்டவணியோ
இல்லை வேறு எதாவது அணியாகவோ இருக்கலாம்.

முதலில் எனது நன்றிகள் தங்களது எளிமையான இலக்கண விளக்கத்திற்கு.
பத்தாம் வகுப்புத் தேர்வில் இரட்டுற மொழிதலுக்காக காளமேகப் புலவரின் பாடல்களைத் தான் அணி இலக்கண விளக்கத்திற்கான எடுத்துக் காட்டாக எழுதிய நினைவு இருக்கிறது. தற்செயலாக அவரது கவிதைகள் வாசிக்கப் பெற்றபோது உருவான மனத்தூண்டலில் கருவானவை இவை... ஆக அந்தப் புரிதலில் படித்ததை வைத்து கொடுத்த தலைப்புதான் சிலேடை. எனவே இந்த விவாதத்தை இத்தோடு முடித்து விடாமல் முழுக்க ஆராய்ந்து இவ்வகைப் பாடல்களுக்கான சரியான அணியை கண்டறிய முயலுவோம் என்று இலக்கணமறிந்தோரை அன்புடன் கேட்கிறேன்.
தவறைத் திருத்திக் கொள்ளும்... வாய்ப்பு உருவாக்கியமைக்கு நன்றி அல்லிராணி அவர்களே....

சாம்பவி
31-03-2008, 01:33 PM
சிலேடையணி

76. ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி
தெரிதர வருவது சிலேடை யாகும்.
.

இதிலேதும் மாற்றமில்லை தாயே...
இங்கே
பல பொருள் என்பது...
பல பொருட்களை ( object )
குறிப்பது.... !

ஆக...
ஒரு வகை சொற்றொடர்...
பாடற்பொருளாக பல்வேறு
பொருள்களை கொள்ளுமேயாயின்...
அது சிலேடை..... !!!!!!

காளமேகமும்.. அதைத் தான்
கையாண்டிருக்கிறார்......
பாம்பும் எள்ளெண்ணையும்
தாங்கள் அறியாததோ.... !




இரு பொருட்களின் பண்பு குறித்து ஒப்புமை கொடுத்து சொல்லுதல் சிலேடை இல்லை எனக் கருதுகிறேன்,

வெகு நாட்களுக்கு முன்பு படித்தது.. எது சிலேடை என்று தெரியும்.. இது என்ன என்பதை அறிய படிக்க வேண்டும். காளமேகப் புலவர் இது போல் பல பாடல்கள் எழுதி இருக்கிறர். அவற்றை சிலேடை என்று சொல்வர். ஆனால் சிலேடை இலக்கணத்தின் படி, பொருளை கவிஞர் நேரடியாக சொல்வதில்லை. இருபொருள்படும்படியே கூறுவார். இரட்டுறமொழிதல் சிலேடையின் வகையே ஆகும்.



காளமேகத்துக்கே
கல்தாவா... :O :O :O :O

அல்லிராணி
31-03-2008, 03:37 PM
சிலேடை என்பது எல்லா மொழிகளிலும் இருக்கக்கூடிய ஒரு "அணி". ஒரு சொல் அல்லது சொற்றொடர் தனியாகவோ அல்லது பிரிந்தோ பல்வேறு கருத்துக்களை தருவது சிலேடை. ஒருமுறை படிக்கும்போது ஒருவகை கருத்தையும், சொற்களை பிரித்துவிட்டால் இன்னொரு கருத்தையும் தருவது "பிரிமொழிச் சிலேடை". அவ்வாறில்லாமல் சொற்கள் பிரிக்கப்படாமலே வெவ்வேறு கருத்துக்களை தருவது "செம்மொழிச் சிலேடை".


ஒரு சொல் / அல்லது ஒரே பொருள் வெவ்வேறு சொல்லாக ஒன்றிற்கு மேற்பட்ட தடவை வருவது பின்வருநிலையணி

42. முன்வருஞ் சொல்லும் பொருளும் பலவயிற்
பின்வரு மென்னிற் பின்வரு நிலையே




சிலேடையை பார்ப்போம்.

ஒரு சொல் இரண்டு அர்த்தத்தில் வருவதை சிலேடை என்று சொல்வார்கள். பின்வரு நிலையணிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் வரவேண்டும். சிலேடையில் ஒரு முறைதான் குறிப்பிட்ட சொல் வரும். ஆனால் பல அர்த்தங்களை கொண்டிருக்கும்.

1.வாரும் இரும்படியும் (மாதுகா எழுதியது)
இதிலே இரும்படியும் என்ற ஒரு சொல், இருந்து படியும் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது. இரும்பை அடியும் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது.

2. பூவை (மாதுகா எழுதியது)
இதுவும் இரண்டு அர்த்தங்களை கொடுக்கிறது.

3. தலைவரின் மாவீர உரைக்காக காத்திருக்குது பார்
இங்கே பார் என்று சொல்லும் பார்க்கவும் என்ற அர்த்தத்தையும் உலகம் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது.

இப்படி ஒரு சொல் இரண்டு அர்த்தங்களை கொடுப்பதை சிலேடை என்று சொல்வார்கள்.

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!!

பூசணிக்காயானது :

அடி நந்தி சேர்தலால் - அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்
ஆகம் வெளுத்துத் - உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு - அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் - வளைவான் தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! - பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக !!

சிவபெருமான் :

அடிநந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
ஆகம் வெளுத்துத் - திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு - சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.

இது சிலேடை அணி! ஏன் தெரியுமா?

அடி நந்தி சேர்தலால் –
1. அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்;
2. திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு –
1. ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
2. ஒரு பக்கத்திலே கொடியிடையாள் உமையினைக் கொண்ட
மாசுணத்தை பூண்டு –
1. சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டு
2. அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு

வளைத் தழும்பு பெற்றதனால் –

1. தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர்
2. வளைவான் தழும்புகளை மேல் கொண்டதனால்

இப்படி ஒரே சொற்றொடருக்கு இரு பொருள் தருதலால் சிலேடை அணியே தவிர பூசணியையும் சிவனையும் ஒப்பிட்டதால் அல்ல. வெறும் ஒப்பீடு சிலேடை அணி ஆகாது. ஒப்பீடு என்பது ஒட்டணி ஆகலாம்.

நம் அமரன் கற்ற பிரித்து மேய்தல் பிரிமொழிச் சிலேடையாம்..

காளமேகரின் சிலேடையில் ஒரே சொற்றொடர் இரு விதப் அர்த்தம் கொடுத்தல் இல்லாமல் இருக்கும் ஒரு சிலேடைக்கவியை உதாரணம் காட்டுங்கள்..


அப்பொழுது பொருள் என்றால் நீங்கள் சொல்லும் Object இல்லாவிட்டால்... I object. (இது மடக்கு :icon_b:)

இது பிறிமொழிச் சிலேடை
அங்கயற்கண்ணி = அழகிய மீன் விழியாள்
அங்கு அயற் கண்ணி = அங்கே அயர்ந்த (தூக்கம் கலந்த) கண்களைக் கொண்டவளாய் இருப்பவள்.

இது பின்வருநிலையணி

கண்ணடித்தது கண்டு
கண் நடித்தது
கண் அடி மை யழகில்
கண் அடிமை யானவன்
கண் அடியிட்டது
காதல்

பிறிமொழிச் சிலேடை
தச்சன் முனகுவதேன் - பழம் சுணங்குவதேன் - பல-கை பட்டதால்

இது பின்வருநிலையணி



குறும் பா(திருக்குறள்)
காட்டாக் குறும்பா?

உப்பு உறைக்க
காரமும் உறைக்க
நானென்ன உரைக்க?
உரைக்கும் உறைக்கும்
தள்ளாடி
குத்திய முத்திரைகளின்
கருமை
முகத்தில் பூசியது கருமை!!

சாம்பவி
31-03-2008, 05:19 PM
இப்படி ஒரு சொல் இரண்டு அர்த்தங்களை கொடுப்பதை சிலேடை என்று சொல்வார்கள்.

அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!!



இப்படி ஒரே சொற்றொடருக்கு இரு பொருள் தருதலால் சிலேடை அணியே தவிர பூசணியையும் சிவனையும் ஒப்பிட்டதால் அல்ல. வெறும் ஒப்பீடு சிலேடை அணி ஆகாது. ஒப்பீடு என்பது ஒட்டணி ஆகலாம்.

நம் அமரன் கற்ற பிரித்து மேய்தல் பிரிமொழிச் சிலேடையாம்..

காளமேகரின் சிலேடையில் ஒரே சொற்றொடர் இரு விதப் அர்த்தம் கொடுத்தல் இல்லாமல் இருக்கும் ஒரு சிலேடைக்கவியை உதாரணம் காட்டுங்கள்..


அப்பொழுது பொருள் என்றால் நீங்கள் சொல்லும் Object இல்லாவிட்டால்... I object. (இது மடக்கு :icon_b:)


இத... இத... இத தான்
நானும் எதிர்ப்பார்த்தேன்...

ஒரு சொற்றொடர்...
ஒரு தன்மையை...
இருவேறு பொருட்களை
உணர்த்துமாயின்... ( refers to two different objects ... )
அது சிலேடை... !


அதாவது...
அந்த பூசணிக்காய் கவிதையில்...
ஒவ்வொரு தன்மையும் ( properties.. )
இரு வேறு பொருட்களான.. ( objects .... not the meaning... !!!! )
பூசணிக்காய் மற்றும் சிவனுக்கும்
ஆகி வருவதால்...
அது சிலேடை எனவாம்... !!!!!

என்ன தான் நீங்கள்
object பண்ணினாலும்...
இரு வேறு objects...
இங்கே தவிர்க்க முடியாதது.... !!!!


objects objection ஆகி..
பொருள்....
பொருளாகும் பட்சத்தில்...
அது
இரட்டுற மொழிதல்...

அதையும் சிலேடையாக்கி
திரைப்பட பாடலாசிரியர்களை..
காளமேகமாக்கி விடாதீர்கள் தாயே.... !

அதெல்லாம் சரி...
இந்த வெண்சுருட்டு கவிதை...
சிலேடையா...
இரட்டுற மொழிதலா..... ;)

அல்லிராணி
01-04-2008, 03:00 AM
இத... இத... இத தான்
நானும் எதிர்ப்பார்த்தேன்...

ஒரு சொற்றொடர்...
ஒரு தன்மையை...
இருவேறு பொருட்களை
உணர்த்துமாயின்... ( refers to two different objects ... )
அது சிலேடை... !


அதாவது...
அந்த பூசணிக்காய் கவிதையில்...
ஒவ்வொரு தன்மையும் ( properties.. )
இரு வேறு பொருட்களான.. ( objects .... not the meaning... !!!! )
பூசணிக்காய் மற்றும் சிவனுக்கும்
ஆகி வருவதால்...
அது சிலேடை எனவாம்... !!!!!

என்ன தான் நீங்கள்
object பண்ணினாலும்...
இரு வேறு objects...
இங்கே தவிர்க்க முடியாதது.... !!!!


objects objection ஆகி..
பொருள்....
பொருளாகும் பட்சத்தில்...
அது
இரட்டுற மொழிதல்...

அதையும் சிலேடையாக்கி
திரைப்பட பாடலாசிரியர்களை..
காளமேகமாக்கி விடாதீர்கள் தாயே.... !

அதெல்லாம் சரி...
இந்த வெண்சுருட்டு கவிதை...
சிலேடையா...
இரட்டுற மொழிதலா..... ;)


இரண்டு அர்த்தங்கள் என்றால் இருவேறு பொருள்களை குறிக்கத்தான் செய்யும் சாம்பவி..

கரி - என்றால் அடுப்புக் கரி, யானை என இரு அர்த்தங்கள் உண்டு.. இரண்டும் இரு வேறு பொருட்கள்... ஒரு சொல்..

இரு Object இல்லாமல் இரண்டு அர்த்தங்கள் எப்படி வரும் சாம்பவி?

இலக்கணத்திற்கு பொருந்தி வருவதெல்லாம் கவிதை ஆகி விட இயலாது..கவிதை என்பது சின்ன இலக்கணம் என்றால் எல்லோருக்கும் தலைக்கனம் பிடித்துவிடும்.

இரு அர்த்தங்கள் வராத இரு பொருட்களைக் குறிக்கும் சொல் ஒன்றைச் சொல்லுங்கள் பார்ப்போம்..:icon_b:

சிலேடை என்பது ஒர் வார்த்தை பல அர்த்தங்கள்.. சிலேடை அணி என்பது ஒரு செய்யுள் பல அர்த்தங்கள்.. சிலம்பத்தில் தாமரை சில கவிதைகள் சொல்லி இருப்பார்..

அல்வா என்று நீங்கள் தருவதற்கும் திருநெல்வேலி அல்வாவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு சாம்பவி.. சிலேடை என்பது ஒரு சின்ன வரையறை.. அது மட்டுமே கவிதை ஆகி விடுவதில்லை.. சொல்லப் போனால் அணி இலக்கணம் என்பதே யாப்பின் கட்டாய விதி அல்ல.,. அணி என்பது அழகு.. கவிதைக்கு அழகூட்டுவது. ஒரு கவிதையில் அணி அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை,

வலியப் பொருத்தப்பட்ட சிலேடைகள் முகப் பூச்சுகளாய் திட்டுத் திட்டாய் தெரிவது போல அழகைக் கெடுக்கும்..

நீங்கள் இரட்டுறமொழிதல் வேறு சிலேடை வேறு என்று தீர்க்கமாய் நம்புவதால்தான் உங்களுக்கு இந்தக் குழப்பம். இரண்டும் ஒன்றுதான் என்று தெளிந்தாலே உங்கள் குழப்பம் தீர்ந்து விடும்..


திருவோடு திரு, நீர் இருக்க*
திருவோடு நானேனேந்த....!

இதில் திருவோடு என்பது பின்வருநிலையணி, ஆனால் திருநீறு (திரு நீர்) என ஒலிநயம் செய்திருக்கிறீர்களே அது சிலேடை.ஆனால் பின்னால் அதே திருநீறை மீந்தும் உபயோகித்துவிட்டதால் அதுவும் பின்வருநிலையணியாய் மாறவேண்டிய கட்டாயம்.

மண்டு(டின்) ஊகம் சரியல்ல
மண்டு அகப் படி இருந்தாலும்
(படி)அளப்பவன் பரமனல்லோ

இங்கே அளப்பவன் என்பது படி அளப்பவன், கதை அளப்பவன் என இரு பொருள் படும்

மண்டூகம் என்பது தவளை, முட்டாளின் ஊகம் என இருபொருள் படும்
மண்டகப்படி என்பது - திட்டு, வீட்டு வாசலில் முட்டாள் என்றும் இரு பொருள் படும்.. இதனால் இது சிலேடை..

கடைசியில் இரண்டும் வெவ்வேறு என் இரு பொருள் சொன்னாலும் சரி, ஒரு பொருளை மட்டுமே வலியுறுத்தி மற்றதை விட்டு விட்டாலும் சரி அது சிலேடைதான்


பாவும் பாவியும் பாவையும் பாவின்
ஊடே ஊடையாய் ஊடலும்
நெய்யும் அணி

இதுவும் சிலேடைதான்,, ஒரே காரணம் அணி என்ற வார்த்தை இரு அர்த்தங்கள் கொண்டு அழகு என்றும் ஆடை என்றும் பொருள் தருதலால்..


பாவின் ஊடே ஊடை நூல் புகுந்து வர நெய்வது ஆடை.அதேபோல பாவையும், பாவியும் ஊடலால் ஒருவருக்கு ஊடே ஒருவர் பா நூலால் நெய்யும் கவிதை அழகு.


இதில் நெய்தல் அணி எனச் சொல்லி இருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும். ஆனால் பொருந்தி இருக்குமா? நெய்தல் அணியின் இலக்கணங்களான, மீனோ, கடல் சார்ந்த இடங்களோ அகத்திணையில் உள்ள் இரங்கலோ இல்லாததால் பொருந்தி இருக்காது.. ஊடல் மருதத் திணை அல்லவா?

காளமேகர் இரு அர்த்தம் வராத சொற்களைக் கொண்டு சிலேடை பாடிய எந்தக் கவிதையும் மேற்கோளாக வரவில்லையே சாம்பவி!

அர்த்தம் என்பது வேறு. .அர்த்தப் படுத்திக் கொள்ளல் என்பது வேறு சிலேடை பாட காளமேகர் உபயோகித்த நுணுக்கங்களில் ஒன்று இரு பொருட்களின் குணங்களை ஒப்பிடுதல்.


சிலேடைக்கு நான் பள்ளியில் படித்தபோது பாநலம் பாராட்டுதல் பகுதியில் நாங்கள் படித்த் பாடல் இது..

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் \பாணி
வம்பதாம் களப மென்றேன் பூசுமென்றாள்
மாதங்க மென்றேன் யாம்வாழ்ந்தோ மென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னுமென்றாள்
பகடு என்றேன். ''உழும்'' என்றாள் பழனந்தன்னை.
கம்பமா என்றேன் நற்களியாமென்றாள்
கைமா என்றேன் சும்மா கலங்கினாளே பாணீ


களபம் - சந்தனம், யானை
மாதங்கம் - அளவில்லாத தங்கம், யானை
வேழம் - யானை, கரும்பு
பகடு - யானை, காளை
கம்பமா - யானை, கம்பு மாவு
கைமா - யானை, (இப்பொ கொத்துக்கறியையும் கைமான்னு சொல்கிறார்கள்)

இதில் ஒப்புமை உண்டா? இல்லை. பாணன் ஒரு அர்த்ததில் சொல்ல பாணி தவறாய் புரிந்து கொள்கிறாள்.. அவ்வளவுதான். இது சிலேடைதான். ஆக, ஒரு எக்ஸெல் சீட் எடுத்துக் கொண்டு, இது இரண்டும் ஒன்று என்று பட்டியலிடுதலால் மட்டும் சிலேடை இல்லை என தெளிவாய் தெரிந்து கொள்ளல் நன்று..

இங்கு குண அளவில் யானையோ, சந்தனமோ, கரும்போ, காளையோ, கம்புமாவோ ஒப்பிடப் படவில்லை..சிலேடைக்கு அது தேவையில்லை,

இரட்டுறமொழிதல் என்பது சிலேடையின் இன்னொரு பெயர் அவ்வளவுதான்.

-----------------------------------------------------------

இப்போது

வெண்ணுடல் கொண்டிருக்கும்
கொண்டாரின் உடலோடு - புற்று
கொண்டு உயிர் குடிக்கும்
கண்டுடனே நீக்கிவிடு
வெண்சுருட்டாகும் கரையானே...

இதை எடுத்துக் கொள்வோம்..

வெண்ணுடல் - ஒரே அர்த்தம் தான்
புற்று கொண்டு உயிர் குடிக்கும் - புற்று என்பது, கரையான் புற்று, புற்றுநோய் என இரண்டைக் குறித்தாலும், கரையான் புற்று போல் கட்டி வேகமாய் வளருதலால் புற்று நோய் என்ற காரணப் பெயர் வந்த காரணத்தினால் இதுவும் இரு பொருள் அல்ல..


ஆக இதில் இருப்பது வெறும் ஒப்புமை மட்டுமே! சிலேடை அணிக்கு கடைசி வரியில் இரு பொருளையும் சொல்லிவிடுதல் தேவையில்லை. அது கவிஞனின் விருப்பம். சொன்னாலும் சரி.. சொல்லாவிட்டாலும் தவறில்லை,

-------------------------------------------------------------------
அது மட்டுமல்லாமல் முதலில் எது வரவேண்டும் என்றும் கவிதைகளில் ஒரு வரையறை இருக்கிறது.. வெண்சுருட்டு கரையானாகுமா? கரையான் வெண்சுருட்டாகுமா?

கடவுள் கவிதையில் தாமரை இதைச் செய்ய முயற்சித்திருப்பார்..

இடை கடவுளா? கடவுள் இடையா? எதற்கு எதை ஒப்புவமை கூறுவது,,
பகதனுக்கு கடவுள் பெரிது, கடவுள் இடையைப் போன்றது என்று சொன்னால் தவறாய்ப் படும்.. காதலனுக்கு காதலிதான் பெரிது, அப்படியானால் அவனுக்கு அவள் இடைதான் பெரிது,, ஆக கடவுள் உன் இடையைப் போல எனச் சொல்லும் பொழுது காதலன் ஆனந்த மடைகிறான், என்னதான் உவமை என்பது சம பொருட்கள் என்றாலும் இது ஒரு சமமில்லா சமன்பாடு..

வெண்சுருட்டாகும் கறையானே என்றால் வெண்சுருட்டின் தீமையை அனைவரும் அறிந்திருக்கின்றார்கள், நீங்கள் கறையானை வெண்சுருட்டுக்கு ஒப்பிடுகிறீர்..

கறையான் வெண்சுருட்டாமே என்றால் கறையானின் தீமையை எல்லோரும் அரிந்திருக்கின்றனர், நீங்கள் வெண்சுருட்டின் தீமையை சொல்கின்றீர்கள் என அர்த்தம்.. சமக் குறியின் இரு புறமும் சமமில்லை..
--------------------------------------------------------------------

நான் எப்படி சிலேடைக்கு பண்புகளை ஒப்பிடாத ஒரு செய்யுளை எடுத்துக் காட்டி இருக்கிறேனோ அது போல் இரு அர்த்தங்களைத் தராத சொற்றொடர் கொண்ட சிலேடை கவிதை ஒன்றை எடுத்துக் காட்டாய் காட்டுங்கள்..

காளமேகர் ஒப்புமையையும் சிலேடையையும் கலந்து பரிமாறினார். நீங்கள் ஒப்புமைதான் சிலேடை என எண்ணிக் கொண்டு விட்டீர்கள் எனக் கருதுகிறேன்..

இன்னும் சில ஒப்புமை இல்லாத சிலேடைப் பாடல்களை தேடித் தருகிறேன்..

அல்லிராணி
01-04-2008, 05:56 AM
முப்பத்திரண்டு உத்தி
1. நுதலின் புகுதல்
2. ஓத்துமுறை வைப்பே
3. தொகுத்துச் சுட்டல்
4. வகுத்துக் காட்டல்
5. முடித்துக் காட்டல்
6. முடிவிடங் கூறல்
7. தானெடுத்து மொழிதல்
8. பிறன்கோட் கூறல்
9. சொற்பொருள் விரித்தல்
10. தொடர்ச்சொற் புணர்த்தல்
11. இரட்டுற மொழிதல்
12. ஏதுவின் முடித்தல்
13. ஒப்பின் முடித்தல்
14. மாட்டெறிந் தொழுகல்
15. இறந்தது விலக்கல்
16. எதிரது போற்றல்
17. முன்மொழிந்து கோடல்
18. பின்னது நிறுத்தல்
19. விகற்பத்தின் முடித்தல்
20. முடிந்தது முடித்தல்
21. உரைத்தும் என்றல்
22. உரைத்தாம் என்றல்
23. ஒருதலை துணிதல்
24. எடுத்துக் காட்டல்
25. எடுத்த மொழியி னெய்த வைத்தல்
26. இன்ன தல்ல திதுவென மொழிதல்
27. எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்
28. பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்
29. தன்குறி வழக்க மிகஎடுத் துரைத்தல்
30. சொல்லின் முடிவி னப்பொருள் முடித்தல்
31. ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்
32. உய்த்துணர வைப்பென உத்தியெண் ணான்கே

-----------------நன்னூல்..

இதில் சிலேடை என்ற பதம் வருவதில்லை சாம்பவி..
தமிழில் இரட்டுற மொழிதல் என்பது சிலேடையைக் குறிக்கும் இலக்கியம்.
சிலேடை என்பது

இரட்டுறல் இரட்டு + உறு-. Paronomasia, in which a word or phrase has a double sense; சிலேடை. (மாறன. 299, உரை.)

சிலேடை - Paronomasia, figure of speech in which a word or phrase admits of two or more interpretations, of two kinds, செம்மொழிச்சிலேடை பிரி மொழிச்சிலேடை என்ற இருபிரிவுடையதாய் ஒருவடி வாக நின்ற சொற்றொடர் பலபொருளுடையதாக வரும் அணி. (தண்டி. 75.)

நியமவிலக்குச்சிலேடை - A figure of speech in which an expression capable of many applications is restricted to one of them in the first instance and then extended to another; நியமஞ்செய்து கூறிய சிலேடையை வேறொன்றற்குங் கூறி அந்நியமத்தை விலக்கும் சிலேடை யணி. (தண்டி. 76, உரை.)


விரோதசிலேடை - Verbal antithesis following a verbal similitude; முன்னர்ச் சிலேடிக்கப்பட்ட பொருள்களுள் ஒன்று பின்னர் வரும் பொருள்களோடு விரோதிப்பத் தொடுக்கப்படுஞ் சிலேடை. (தண்டி. 75, 6.)


ஆக சிலேடை என்பது இரட்டுற மொழிதல்.
சிலேடையாய் இரு பொருட்களை ஒன்று படுத்தலாம்
எதிரெதிர் அர்த்தம் கொடுக்கலாம்.

ஆனால் அனைத்திற்கும் பொதுவாய் ஒன்றுண்டு ஒரு சொல் அல்லது சொற்றொடருக்கு வெவ்வேறு அர்த்தங்கள் காண்பிக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி..

செல்வா
01-04-2008, 06:18 AM
வருவதைக் கண்டதும் சிவப்பதும்
எரிவதை உண்டதும் கறுப்பதும்
இறுகிய குளிர்ச்சியில் அழுவதும்
கதிர் கண்ட கொண்டலோ தன்
காதல் கண்ட முகமோ...?

(இதையே சற்று மாற்றி.... எழுதியுள்ளேன்... )

எரிவதைக் கண்டதும் கருத்தனள் - தலை
தெரிவதைக் கண்டதும் சிவந்தனள் - மனம்
நிறைந்த நல் மகிழ்ச்சியில் அழுதனள் - அவள்
தன் கதிர் கண்ட கொண்டலோ - இல்லை
என் உயிர் கொண்ட காதலோ(லியோ) ?

செல்வா
01-04-2008, 06:24 AM
ஆக சிலேடை என்பது இரட்டுற மொழிதல்.
சிலேடையாய் இரு பொருட்களை ஒன்று படுத்தலாம்
எதிரெதிர் அர்த்தம் கொடுக்கலாம்.

ஆனால் அனைத்திற்கும் பொதுவாய் ஒன்றுண்டு ஒரு சொல் அல்லது சொற்றொடருக்கு வெவ்வேறு அர்த்தங்கள் காண்பிக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி..
தங்களது விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. தலைப்பை மாற்றிவிடுகிறேன் ஒப்புமை என...
இதோடு விட்டு விடாமல் இன்னும் எங்களுக்கு கற்பிக்க வேண்டுகிறேன்...

கண்மணி
01-04-2008, 06:46 AM
வருவதைக் கண்டதும் சிவப்பதும்
எரிவதை உண்டதும் கறுப்பதும்
இறுகிய குளிர்ச்சியில் அழுவதும்
கதிர் கண்ட கொண்டலோ தன்
காதல் கண்ட முகமோ...?

(இதையே சற்று மாற்றி.... எழுதியுள்ளேன்... )

எரிவதைக் கண்டதும் கருத்தனள் - தலை
தெரிவதைக் கண்டதும் சிவந்தனள் - மனம்
நிறைந்த நல் மகிழ்ச்சியில் அழுதனள் - அவள்
தன் கதிர் கண்ட கொண்டலோ - இல்லை
என் உயிர் கொண்ட காதலோ(லியோ) ?


கொண்டல் என்றால் என்ன அண்ணா?

சிவா.ஜி
01-04-2008, 06:52 AM
அடடா...இரு தமிழ் வித்தகியரின்...விளக்கங்கள்...பாமரனையும் பா எழுதவைத்துவிடும்.இதுநாள்வரை சிலேடை என்றால் ஒரு வார்த்தை இரு பொருளைக் குறிப்பிட உபயோகிப்பது என்றுதான் நினைத்திருந்தேன்.ஆனால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என ஆச்சர்யத்தில் அயர்ந்து நிற்கிறேன்.

பத்தாம் வகுப்பில் தமிழ் இலக்கணம் படித்ததோடு சரி...முப்பது வருடங்களுக்கு முன்....அதற்குப்பின்னால் இம்மன்றத்தில்தான் அதை எளிமையாய் படித்து புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்காக செல்வாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அழகான கவிதைகளை எழுதி...அதற்கு விளக்கமளிக்க இந்த தமிழரசிகளை இங்கே வரவழைத்த செல்வாவுக்கு நன்றி.

வாழ்த்துகள் செல்வா.

செல்வா
01-04-2008, 07:05 AM
கொண்டல் என்றால் என்ன அண்ணா?
மேகம்.....

ஆதி
01-04-2008, 07:18 AM
வருவதைக் கண்டதும் சிவப்பதும்
எரிவதை உண்டதும் கறுப்பதும்
இறுகிய குளிர்ச்சியில் அழுவதும்
கதிர் கண்ட கொண்டலோ தன்
காதல் கண்ட முகமோ...?

(இதையே சற்று மாற்றி.... எழுதியுள்ளேன்... )

எரிவதைக் கண்டதும் கருத்தனள் - தலை
தெரிவதைக் கண்டதும் சிவந்தனள் - மனம்
நிறைந்த நல் மகிழ்ச்சியில் அழுதனள் - அவள்
தன் கதிர் கண்ட கொண்டலோ - இல்லை
என் உயிர் கொண்ட காதலோ(லியோ) ?

வெய்துயர் ஒப்புமை அருமை..

சிலாகிக்க இன்னும் நிறைய ஒப்புமைகளைக் கொடு..

அன்புடன் ஆதி

செல்வா
01-04-2008, 07:31 AM
பச்ச சட்டைகளுக்கு ஒரு வேண்டுகோள்... இந்த திரியில் இடம் பெற்ற இலக்கணம் தொடர்பான விவாதங்களையும் விளக்கங்களையும் தனித்திரியாக்கினால் இன்னும் பலரும் பார்த்து பயனுறவும். மேலும் பல விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும் வசதியாகும் என எண்ணுகிறேன் ஆவன செய்வீர்....

அமரன்
01-04-2008, 07:35 AM
இங்கே(யும்) இருக்கட்டும் செல்வா.. உதாரணத்துடன் பயிற்றுவித்தமை பயன் மிக்கதாக உள்ளது.

அல்லிராணி
01-04-2008, 07:40 AM
மேகம் கறுத்தல் நீருண்டதால் கதிர் எரிந்து வெய்யிலில் நீராவியானதால்
அவள் முகம் கறுத்தது நீர் எரிந்து விழுந்ததால்

அவள் முகம் கறுக்க நான் எரிந்து விழுந்தால் போதும். மேகம் கருக்க சூரியன் எரிய வேண்டும்.. மேகத்தின் மேலல்ல.. நீரின் மீது.. பாலைவனத்தில் சூரியன் எரிந்தால் மேகம் கருப்பதில்லை. இங்கு இன்னொரு பொருள் வந்து விடுகிறது.

கதிர் முகம் கண்டதும் சிவந்தது மேகம். இது ஒரு நிகழ்ச்சி. அதே போல் உயிர் முகம் கண்டது நாணிச்சிவத்தலும் ஒரு நிகழ்ச்சி.

ஆனால் கதிரவன் மறையும் பொழுதும் மேக முகம் சிவக்கும். காதலி முகம்? இது மறைபொருளாய் தொக்கி கொஞ்சம் உரசுகிறது..

(சூரியன் வந்தாலும் சரி, போனாலும் சரி மேகம் முகம் சிவக்கும்.. அதையும் சேர்த்துச் சொல்லணும்.. ஏனென்றால் சிவப்பது என்பது ஒரு பொழுது மட்டுமல்லவே! பிரியும் காதலன் கொடுத்த முத்தத்தில் சிவக்கும் முகத்தையும் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.)


இறுகிய குளிர்ச்சி - நிறைந்த மகிழ்ச்சி அடைமொழி நெருடுகிறது. குளுமை என்பதற்கும் (கூல்) குளிர் (கோல்ட்) என்பதற்கும் சிறிய வித்தியாசம். இறுகிய குளிர்ச்சி என்பது மகிழ்வுச் சொல்லா? உறைய வைக்கும் குளிர்.. சிலீரென குத்தும் குளிர் என சற்று மாறித் தோற்றம் காட்டுகிறது.. அந்தக் குளிரில் உறைபனியாய் பனிமழை பெய்யும்.

ஆக முதல் கவிதையை விட இரண்டாம் கவிதை பொருத்தமாய் தெரிகிறது,,


குளிர்ந்த மேகம் மழைபொழியும் பொழுது கதிர் கண்ட மேகமா எனப் பார்த்தால் இல்லையே செல்வா! கதிர்கானா மேகமும் அல்லவா!

கதிர் கண்ட மேகம், உயிர் கண்ட காதல் என சொல்லும் பொழுது அப்பொழுதைய இயக்கங்களை மட்டுமே ஒப்பிட வேண்டுமல்லவா? பொதுவாய் இருத்தலை தள்ளி வைத்தல் நலம்..

மேகம் மழை பொழிதல் இரவிலும் நடக்கும்..
சொல்லப் போனால் கதிர் காணா மேகமே அதிக மழை தரும்.
இரவிலேயே அதிக மழைப்பொழிவு இருக்கிறது.

கொண்டல் என்றால் கிழக்கில் இருந்து வீசும் காற்று என படித்திருக்கிறேன்

கிழக்கு - கொண்டல் காற்று
மேற்கு - மேலைக் காற்று
தெற்கு - தென்றல் காற்று
வடக்கு - வாடைக் காற்று

இவை திசையொட்டிய காற்றின் பெயர்கள்..

தென்றல் சுகமானது என அறிந்த நாம் அதன் பண்பைக் கொண்டு தென்றலை உபயோகிக்கிறோம். இது தெற்கிலிருந்து வருவதால், ஈரப் பதமும், மிதமான வெப்பமும், கொண்டது.. வடக்கிலிருந்து (சைபீரியா, இமயமலை வழியாக ) வீசும் காற்று சில்லென இருப்பதால் ஜில்லென்ற காற்றை வாடைக் காற்றாக்கி விட்டோம்.

இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் இன்னும் பட்டை தீட்டலாம்.

அமரன்
01-04-2008, 08:08 AM
தெற்கிலிருந்து வீசும் காற்றை எமதூரில் சோளக்காற்று (சோலைக்காற்று மருவி சோளக்காற்று ஆயிற்று??) என்றும் சொல்வார்கள்.

செல்வா
01-04-2008, 09:09 AM
முதலில் தங்களது மேலான விமர்சனத்திற்கு எனது நன்றி அக்கா (என்றழைக்கலாம் அல்லவா?).



ஆனால் கதிரவன் மறையும் பொழுதும் மேக முகம் சிவக்கும். காதலி முகம்? இது மறைபொருளாய் தொக்கி கொஞ்சம் உரசுகிறது..

(சூரியன் வந்தாலும் சரி, போனாலும் சரி மேகம் முகம் சிவக்கும்.. அதையும் சேர்த்துச் சொல்லணும்.. ஏனென்றால் சிவப்பது என்பது ஒரு பொழுது மட்டுமல்லவே! பிரியும் காதலன் கொடுத்த முத்தத்தில் சிவக்கும் முகத்தையும் சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.)

:) நான் இதை எழுத நினைத்ததும் விழுந்த வார்த்தை "கண்டதும் சென்றதும் சிவந்தனள்" என்பதே... ஆனால் பிரியும் போது காதலி ஏன் சிவக்கிறாள் எனும் கேள்விக்கு விடை புத்திக்கு எட்டாததால் விட்டு விட்டேன்.


இறுகிய குளிர்ச்சி - நிறைந்த மகிழ்ச்சி அடைமொழி நெருடுகிறது. குளுமை என்பதற்கும் (கூல்) குளிர் (கோல்ட்) என்பதற்கும் சிறிய வித்தியாசம். இறுகிய குளிர்ச்சி என்பது மகிழ்வுச் சொல்லா? உறைய வைக்கும் குளிர்.. சிலீரென குத்தும் குளிர் என சற்று மாறித் தோற்றம் காட்டுகிறது.. அந்தக் குளிரில் உறைபனியாய் பனிமழை பெய்யும்.

இறுகிய குளிர்ச்சி எனக்கும் நெருடியதால் தான் இரண்டாவதை எழுதினேன் நான் எண்ணிய பொருள்.. இறுகிய குளிர்ச்சி.. முதலில் எரிந்தவன் பின் தணிந்து குளிர்ந்த வார்த்தைகளால் இறுக்கினான் - அணைத்தான்
(கோபத்தில் அழாமல் குளிர்ச்சியில் அழுவது பலருக்கு இயல்பு தானே.)

நிறைந்த மகிழ்ச்சி - எனும் போது மகிழ்ச்சி சரியான பதம் அல்ல என நினைக்கிறேன். நான் சொல்ல நினைத்தது. நிறைந்த மகிழ்ச்சி யால் அவள் அழுதாள். நிறைந்த நீரினால் மேகம் மழையாக அழுதது.


ஆக முதல் கவிதையை விட இரண்டாம் கவிதை பொருத்தமாய் தெரிகிறது,,
குளிர்ந்த மேகம் மழைபொழியும் பொழுது கதிர் கண்ட மேகமா எனப் பார்த்தால் இல்லையே செல்வா! கதிர்கானா மேகமும் அல்லவா!
கதிர் கண்ட மேகம், உயிர் கண்ட காதல் என சொல்லும் பொழுது அப்பொழுதைய இயக்கங்களை மட்டுமே ஒப்பிட வேண்டுமல்லவா? பொதுவாய் இருத்தலை தள்ளி வைத்தல் நலம்..

ஓ.... சந்திப்பை தொடரும் நிகழ்வுகள் தானே... என எழுதினேன். இனி கவனத்தில் கொள்கிறேன்.



கொண்டல் என்றால் கிழக்கில் இருந்து வீசும் காற்று என படித்திருக்கிறேன்

மேகம் என படித்த ஞாபகம் அதனால் தான் எழுதினேன்.


இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் இன்னும் பட்டை தீட்டலாம்.
நிறைய வாசிக்கவும் யோசிக்கவும் வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். தற்போது நான் தமிழ் வாசிப்பது மன்றத்தில் மட்டுமே. பணி முடிய கிடைக்கும் இடைவெளியில் மனதில் தோன்றுவதை மன்றில் பதிகிறேன்.
விழுந்து எழும் என்னில் தூசு தட்டுதலுக்கு நன்றி அக்கா....
இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் ஆவலைக் கிளப்பியிருக்கிறது. அதோடு ஊர் செல்லும் போது தமிழாசிரியரைச் சந்திக்க வேண்டிய அவசியத்தையும்.
நன்றி அக்கா...

செல்வா
01-04-2008, 09:12 AM
இங்கே(யும்) இருக்கட்டும் செல்வா.. உதாரணத்துடன் பயிற்றுவித்தமை பயன் மிக்கதாக உள்ளது.
சரி அமரா அதுவும் நல்லதுதான்.

செல்வா
01-04-2008, 10:19 AM
மழை கொடுக்கும் மணல் தடுக்கும்
அலையலையாய் அடைத்திருக்கும்
பலவுயிரும் பு(மி)குந்திருக்கும்
பார்முழுதும் விரிந்திருக்கும்
கார் முகிலின் பிறப்பிடமாய்
கடலாகும் அடர் வனமே

செல்வா
01-04-2008, 10:27 AM
பிரிச்சு மேயிறது, பின்னிப் பெடல் எடுக்குறது நா இதுதானா ?? :D

இல்லடா ஆதி அதுக்கு மன்ற புலவர்கள் கிட்ட இன்னும் நிறைய கத்துக்கணும். நான் கொடுக்குறது எல்லாமே நேரடி வார்த்தைகள் தான்.


பொறுமை கொண்ட நங்கையிவள்
பொறுமை கொன்று பொங்கி விட்டால்
சத்தம் சரியாய் இருக்கும் என்று மாற்றிப்பார்த்தேன்..

கொன்று எனும் போது பொருள் சற்று நெருடியது டா... கொன்று விட்டால் மறுபடி பொறுமை வராது. ஆனால் கடலும் காட்டாறும் அப்படி அல்ல பொங்கி விட்டு மறுபடியும் பொறுமை கொள்ளும் எனவே இங்கு விட்டு என்பதே பொருத்தமாக தோன்றுகிறது.
சரிதானே..?

ஆதி
01-04-2008, 10:29 AM
கொன்று எனும் போது பொருள் சற்று நெருடியது டா... கொன்று விட்டால் மறுபடி பொறுமை வராது. ஆனால் கடலும் காட்டாறும் அப்படி அல்ல பொங்கி விட்டு மறுபடியும் பொறுமை கொள்ளும் எனவே இங்கு விட்டு என்பதே பொருத்தமாக தோன்றுகிறது.
சரிதானே..?

நீ சொன்னா சரிதான் மாப்பு.. :D

அன்புடன் ஆதி

செல்வா
01-04-2008, 10:30 AM
சிலாகிக்க இன்னும் நிறைய ஒப்புமைகளைக் கொடு..

நன்றி ஆதி... முயல்கிறேன்...

செல்வா
01-04-2008, 10:32 AM
நீ சொன்னா சரிதான் மாப்பு.. :D

அன்புடன் ஆதி
அடேய் நான் சொன்னதால் சரியல்ல நான் சொன்னது சரியானால் தான் சரி

செல்வா
01-04-2008, 10:35 AM
இதற்காக செல்வாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அழகான கவிதைகளை எழுதி...அதற்கு விளக்கமளிக்க இந்த தமிழரசிகளை இங்கே வரவழைத்த செல்வாவுக்கு நன்றி.

அநியாயம் அண்ணா.... எழுதியவன் இருக்க கோலுக்கு நன்றியா?


வாழ்த்துகள் செல்வா.
வாழ்த்துக்கு நன்றி அண்ணா...

ஆதி
01-04-2008, 10:35 AM
அடேய் நான் சொன்னதால் சரியல்ல நான் சொன்னது சரியானால் தான் சரி

சரியை நீ
சரியாய் சொன்னதால்
சரியை சரி என்றேன்
சரியை நீ
சரியாய் சொல்லவில்லை என்றால்
சரியில்லை சரி என்றிருப்பேன் :D

அன்புடன் ஆதி

செல்வா
01-04-2008, 10:37 AM
சரியை நீ
சரியாய் சொன்னதால்
சரியை சரி என்றேன்
சரியை நீ
சரியாய் சொல்லவில்லை என்றால்
சரியில்லை சரி என்றிருப்பேன் :D

அன்புடன் ஆதி
அ(இ)து சரி :D

அக்னி
01-04-2008, 10:52 AM
பயன்மிக்க இந்தத் திரியை கவிதைப் பட்டறை (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=85)க்கு மாற்றுகின்றேன்.
நன்றி~

பொறுப்பாளர்
~அக்னி

கண்மணி
01-04-2008, 10:56 AM
அ(இ)து சரி :D

புதிரோ புதிர் திரியில்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3092&page=92

2298 ஆம் பதிவிலிருந்து படிக்கவும்.

ஹி ஹி

சிவா.ஜி
01-04-2008, 01:32 PM
மழை கொடுக்கும் மணல் தடுக்கும்
அலையலையாய் அடைத்திருக்கும்
பலவுயிரும் பு(மி)குந்திருக்கும்
பார்முழுதும் விரிந்திருக்கும்
கார் முகிலின் பிறப்பிடமாய்
கடலாகும் அடர் வனமே

இந்த ஒப்பிய ஒப்புமைகளின் வரிசையில்...அதிக கருத்து வேற்றுமைகள் வராதவாறு இந்தக் கவிதை விளங்குகிறது. மிக அழகான ஒற்றுமைகள்.
கடலும் வனமும் ஒன்றாய் காட்சியளிக்கும் அழகை கவிதையில் காண முடிகிறது. ஒன்று பச்சையாடை உடுத்தி...பிறிதொன்று நீல ஆடைக்கட்டி...
காற்று அசைவில் ஆடும் இலைகள்....அங்கே அலைகளாய்...

அசத்தலான கவிதை செல்வா.வாழ்த்துகள்.

அல்லிராணி
16-04-2008, 03:23 PM
http://www.textbooksonline.tn.nic.in/Books/12/AdvTamil/PAGES%20215-258.pdf


கோப்பில் 21 ஆம் பக்கம் / புத்தகத்தின் 235 ஆவது பக்கம் பாருங்கள்!!!