PDA

View Full Version : மாங்கனி காவியம் - வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்



ஆதி
25-03-2008, 07:46 AM
மாங்கனி - காவியம்

மாங்கனி கண்ணதாசனின் க(ன்)னி காவியம், சில சரித்திரக் குறிப்புகளை வைத்துக் கொண்டு அவரால் படைக்கப்பட்ட இந்த காவியம் பெரும்பேர் பெற்றது..

ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைச்சென்ற பொழுதில் சிறையில் அவரால் படைக்கப்பட்ட காவியமே இது, இதன் இன்னொரு சுவாரஸ்யம் இந்தக் காவியத்தை எழுத கண்ணதாசன் எடுத்துக்கொண்டது வெறும் ஆறு நாட்கள், அதுவும் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரமே அவர் எழுத அமருவாராம்..

இந்த காவியம் நாற்பது பாடல் கொண்டது, நாற்பது பாட்டிலும் நாற்பது சம்பவங்கள் நிறைந்திருக்கும்.. எழுதி இரண்டு வருடம் கழித்தே இந்தக் காவியம் புத்தகமானது..

மாங்கனியை நான் என் நடையில் என் வார்த்தைகளில் எழுத வெகு நாளாய் ஆசையுற்றிருந்தேன்.. கண்ணதாசனே இதைக் காவியமாக தான் எழுதி இருக்கிறார், மீண்டும் இதை தொடர்கவிதையாக எழுத என்னக் காரணம் ?

காரணம் இதுதான், நான் தமிழ் படிக்க ஆரம்பித்த காலம் முதல் காவியங்களில் கதைகளில் வெகு சில பாத்திரப் படைப்புகளை ரசித்திருக்கிறேன் கண்ணகி மாதவி மணிமேகலை பதுமை தமயந்தி என்பன சில அதில்..

கண்ணகி - மாதவி என்று வரும் போது எனக்கு இருவரையும் சமமாய் பிடிக்கும்..

அன்னைக் கண்ணகி எந்த அளவுக்கு கற்பில் சிறந்தவளோ அந்த அளவுக்கு மாதவியும் கற்புடையவளே..

அன்னைக் கண்ணகி பிறப்பால் நற்குலத்தாள், கன்னியியம் கற்பியம் என்று கட்டுப்பாடுகள் பல்துக்குள் வளர்ந்தவள்.. அதனால் அவள் வாழ்வின் நன்நெறிப்படி கணவன் இல்லாத தருணத்திலும் வாழ்ந்தாள்..

மாதவி அப்படி இல்லை கணிகையர் குலத்தில் பிறந்தவள், அவள் வாழ்வுக்கு எந்தக் கட்டுப்பாடுமில்லை, யாருடனும் எப்போதும் அவள் வாழ அவள் சமுதாயத்தில் இடமுண்டு வசதி உண்டு, இப்படி கட்டுப்பாடு இன்றி வாழ்கிறாள் என்று அவளை உலகம் இடித்தோ இழித்தோ பேசப்போவதில்லை இருந்தும் அவள் கற்புடையவளாய், கொண்ட கோவலனுக்கு மட்டும் மனைவியாய் வாழ்ந்தாளே அந்த கற்பு எனக்கு அவள்மீது அதிகமாய் மரியாதையைக் கூட்டியது..

இதைப் போல சில பாத்திரப் படைப்புகளை காதலித்திருக்கிறேன், அப்படி நான் காதலித்த முதல் பெண் மாங்கனி, இந்த பாத்திரப் படைப்பு கண்ணதாசனின் கற்பனைப் படைப்புதான் சரித்திரத்தில் இந்த பெயரோ ஆளோக் கிடையாது.. மாங்கனியின் காதல் தோற்ற போது அவளைவிட நான் அதிகமாய் அழுதேன்.. அதற்கு பிறகு நான் காதலித்த மற்றொரு பெண் கல்கி அருளிய சிவகாமி சபதத்தின் சிவமாகி.. என்னை அழவைத்த அடுத்த ஒரு நாயகி சிவகாமி இவளையும் நான் அதிகமாய் காதலித்தேன் இந்த கதையைப் படிக்கிறப் போது நரசிம்ம பல்லவனாய் நடமாடியவன் நாந்தான்..

மாங்கனிப் பற்றி சொல்லும் போது கண்ணதாசன் ஒரு இடத்தில் சொல்லியது இதுதான், இந்த காவியத்தைப் படைக்கும் போது என் உணர்ச்சி ஓட்டத்தை நான் கட்டுப்படுத்த விரும்பவில்லை.. அதனால் வார்த்தைகள் இலக்கணத்தின் வரையரைக்குள் வந்தமரவில்லை.. செந்நாப்புலவர்களே மன்னித்துவிடுங்கள் என்றுச் சொன்னார்..

காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெரும் தலைவன்

என்று பாடிய என் காதல் கவிஞனாலேயே உணர்ச்சி ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நானோ சிறுவன் உணர்ச்சிகள் கட்டவிழ்ந்து மாங்கனியைக் காதலித்ததில் தவறென்ன வியப்பென்ன இருக்கிறது..

அதனாலேயே இந்த காவியத்தை என் மொழிகளில் எழுத ஆசைப்பட்டேன், ஆசைப்படலாம் மன்றவிதிகள் அனுமதிக்குமா தெரியவில்லை.. பொறுப்பாளர்கள் அனுமதி தந்தால் உடனே காவியத்தை துவங்கி விடுகிறேன்.. கண்ணதாசன் அளவுக்கு சுவையாய் தரமுடியாது என்றாலும் என் முழு திறனையும் முயற்சியையும் கொட்டி எழுத முயற்சிப்பேன்..

வழக்கம் போல் அன்பு உறவுகளின் ஊக்கமும் உற்சாக பின்னூட்டமும் கிடைக்கும் என்று நம்புகிறேன்..

பின் குறிப்பு: அன்பு உறவுகளே, மாங்கனிக் குறித்த உங்களின் பொன்னான விமர்சனித்தைக் மாங்கனி விமர்சனத் திரியில் இடுமாறு வேண்டுகிறேன்

மாங்கனி விமர்சனத்திரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15127)


அன்புடன் ஆதி

ஆதி
25-03-2008, 11:53 AM
வள்ளுவனோ கம்பனோ இளங்கோவோ சங்க இலக்கியமோ
வாழ்த்தி இறைவனைப் பாடாமல் வளரவில்லை
தெள்ளு தமிழ்தேவி அவளை வாழ்த்தி
சின்னவன் நானென் படைப்பை துவங்குகிறேன்..

தமிழ் வணக்கம்

பெற்றது தாயெனினும்
உற்றது நீயே தமிழே
கற்றதை அறிந்ததை
கையிருப்பில் உள்ளதை
வைத்தே அன்னை உன்னை
வாழ்த்த வடிக்கிறேன் கவி..
பிள்ளைத் தமிழ்
பெரியவர் தமிழாக ஆசிகொடு
செந்நாப் புலவர்
வாய் தவழ்ந்த செந்தமிழே!
எந்நாவிலும் வந்து நடமாடு..

பின் குறிப்பு: அன்பு உறவுகளே, மாங்கனிக் குறித்த உங்களின் பொன்னான விமர்சனித்தைக் மாங்கனி விமர்சனத் திரியில் இடுமாறு வேண்டுகிறேன்

மாங்கனி விமர்சனத்திரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15127)

தொடரும்..

ஆதி
26-03-2008, 08:47 AM
பழையனின் அரசவை


"புத்தம் சரணம் கச்சாமி
தர்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி"



என்றொலித்ததும்
எழுந்தனர் அவையோர் யாவரும்..

வெண்ணிலா தேகத்தில்
மின்னலைப் பாய்ச்சியா ?
பொன்னிலா ? வைரப்பொடியிலா ?
எதில் படைத்தான் என்றே!
எண்ணிலா ஐயமெழும்
எழிலுடன் வந்தாள்
பூமீது நடந்து
பூலோக நிலவாய் ஒருத்தி..

வெளிச்ச மேகமாய்
வெண்ணிற உடை
முகத்தில் வசீகரம்
முல்லை மாலை
அகத்தின் தெய்வீகம்
அங்கமெலாம் விரிந்து
தகதகக்கும் தாரகையாய்
தரைமீது மிளிர்ந்தாள்..

மங்காத ஒளிமலரின்
வடிவழகைக் கண்டால்
கொடுங்காமரும் கைகூப்பி
கும்பிட்டுதான் போவார்
அவ்வளவு தெய்வீகம்
அவளின் அழகில்..

ராணியாக வேண்டியவள்
ஞானியாக நோம்பு கொண்டாள்

நாணமும் முகம்வர
நாணும் வீரமகள்
தானமும் தவமும்
தரித்த ஈரமகள்..
போனது துறவானாலும்
போகவில்லை நாட்டைவிட்டு

வேலேந்திய விழியாள்
வேந்தன் மகள்தான்..
பெண்ணரசிப் பெயர் "பொன்னரசி"

அனிச்ச காலெடுத்து
இனிக்க நடந்த
நனிமகளை அவையோர்
பனிக்க தலைசாய்த்தனர்..

நேரிழை துறந்து
மெய்தவம் பூண்ட
மெல்லியாள் இடை
ஒல்லியாள் அரசகட்டில்
அருகே வந்ததும்
அமைச்சன் "அறிவன்"
முன்னே வந்து
முகற்கண் வணங்கினான்..


தொடரும்..

பின் குறிப்பு: அன்பு உறவுகளே, மாங்கனிக் குறித்த உங்களின் பொன்னான விமர்சனித்தைக் மாங்கனி விமர்சனத் திரியில் இடுமாறு வேண்டுகிறேன்

மாங்கனி விமர்சனத்திரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15127)

அன்பு உறவுகளே படித்தது பிடிக்கவில்லை என்றால் "நல்லா இல்லை" என்றாவது சொல்லிவிட்டுப் போங்க, அப்போதுதான் உங்கள் உளக்கருத்து புரிந்து எதிர்வரும் பாடல்களை எனக்கும் இன்னும் நன்றாய் இனிதாய் தர முயற்சிக்க தோன்றும்..
அன்புடன் ஆதி

ஆதி
27-03-2008, 08:37 AM
புத்த மயிலைப்
புகழ்ந்து வரவேற்றான்

மோட்சம் குடிஇருக்கும்
மோகூரின் தேவியே
ஆட்சி ஏற்று
ஆளவந்த காவிநிலவே
வருக! வருக!

பழையன் பெற்ற
இளைய மகளே
விளையும் விடியலின்
விரியும் ஒளியே
வருக! வருக!~

கொற்றவன் பெற்றவன்
குலம் காக்க
உற்ற தவத்தோடு
வந்த உத்தமியே
வருக! வருக!

என்றே அண்ணவன்
பொன்னரசியை வணங்கி வாழ்த்தினான்..

பின்னே இவ்வாறு
பேசத் துவங்கினான்..

ஊழி செய்த
ஊறின் காரணத்தால்
வேலிப் போன்ற
வேந்தனை இழந்தோம்
ஆழிப் பெருங்கடலில்
அடையும் காவிரியில்
தாலிக் கட்டிய
தலைவனுடன் தென்னரசியை
இழந்தோம் நாங்கள்
அன்னை இல்லா பிள்ளையானோம்
அம்மா!

காரிட்ட நீரில் தழைத்த
காட்டுக் கொடியாய்
வேர்விட்டு வளர்ந்து
விருப்பிய வண்ணம் படர்ந்து
சீர்கெட்டு நம்குலம்
சிதைந்து போகக் கூடாது
என்றேப் பதைப்பதைத்து
எங்களை வழிநடத்த வந்த
மங்கள மணிநிலவே
சிங்க கட்டில் கொள்க என்றான்..


தொடரும்..

பின் குறிப்பு: அன்பு உறவுகளே, மாங்கனிக் குறித்த உங்களின் பொன்னான விமர்சனித்தைக் மாங்கனி விமர்சனத் திரியில் இடுமாறு வேண்டுகிறேன்

மாங்கனி விமர்சனத்திரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15127)

அன்பு உறவுகளே படித்தது பிடிக்கவில்லை என்றால் "நல்லா இல்லை" என்றாவது சொல்லிவிட்டுப் போங்கள், அப்போதுதான் உங்கள் உளக்கருத்து புரிந்து எதிர்வரும் பாடல்களை எனக்கும் இன்னும் நன்றாய் இனிதாய் தர முயற்சிக்க தோன்றும்..

அன்புடன் ஆதி

ஆதி
28-03-2008, 09:27 AM
பொன்னரசி உரை..


வஞ்சமும் பழியும்
வறுமையும் சூதும்
கொஞ்சமும் இல்லா குடிமக்களே!

வெஞ்சின நெஞ்ச வீரர்களே !

தஞ்சமென்றே வந்தவரை
தானையென்று காக்கும் தர்மர்களே!

எஞ்சியது எறும்பளவு ஆனாலும்
எல்லோருக்கும் ஈயும் கொடைஞர்களே..

விஞ்சி விசும்பையும் தமிழால்
வெல்லும் பாவலரே நாவலரே!

பொன்னாடாய் விரிந்த
பொழிவு கொண்ட
நன்னாடாய் இருந்த
நம்நாட்டு மீது
யார் கண் பட்டதோ ?
சின்னாப் பின்னமானது
சிதைக்குழி பல கண்டது!


அப்பா பழையன்
அக்காள் தென்னரசி
அத்தான் அடலேறு
அழகி மாங்கனியென
யாவரையும் இழந்தோம் – அறக்
காவலரையும் இழந்தோம்!

நாடாள அழைத்த
நல்ல உள்ளங்களே
பேடாளும் ஆட்சி
பேராட்சி யாக
ஊடூழி வென்று
உயராட்சி யாக
நீடூடி வாழ
நிறையாசீர் தருவீர்!


தொடரும்...

பின் குறிப்பு: அன்பு உறவுகளே, மாங்கனிக் குறித்த உங்களின் பொன்னான விமர்சனித்தைக் மாங்கனி விமர்சனத் திரியில் இடுமாறு வேண்டுகிறேன்

மாங்கனி விமர்சனத்திரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15127)

அன்பு உறவுகளே படித்தது பிடிக்கவில்லை என்றால் "நல்லா இல்லை" என்றாவது சொல்லிவிட்டுப் போங்கள், அப்போதுதான் உங்கள் உளக்கருத்து புரிந்து எதிர்வரும் பாடல்களை எனக்கும் இன்னும் நன்றாய் இனிதாய் தர முயற்சிக்க தோன்றும்..

அன்புடன் ஆதி

ஆதி
29-03-2008, 10:17 AM
மோகூரின் வளம்

அறுசீர் விருத்தம்


குறுவட்ட நிலவாக சிறுவண்ண மலராக
குவிந்த கோகூர்
தெருமுட்டும் தென்னைமரம் நறுகொட்டும் சோலைவனம்
செரிந்த வாகூர்
பருகற்ற முகத்தவரும் பால்வெள்ளை மனத்தவரும்
பயந்த பாகூர்
வெறுப்புற்று தேவதைகள் விண்விட்டு கணவருடன்
விரும்பி ஏகூர்

வறுமையென்று வந்தவர்க்கு மறுக்காமல் மோகூரார்
உளதை ஈவார்
மறுக்காமல் தருவோர்கள் வளமாக இருந்தாள
திருடர் இல்லை
பெருவான குணமான பெரியோர்கள் ஊராள
பொய்யும் இல்லை
ஒருமாது உறவாக உயிரேற்ற விலைமாது
குலமே இல்லை

தண்டையணி மங்கையர்கள் தண்ணழகை கண்டுமனம்
தாவி ஓடும்
கொண்டையிடை பூக்களது கொங்கைவிட கூர்மையென
சண்டைப் போடும்
நீண்டமதில் கோட்டையதில் நீந்தமுகில் கொத்தளமோ
வானம் மோதும்
மூண்டுஎழில் ஆண்டுவரும் மோகநகர் முன்னிலையில்
சொர்க்கம் தோற்கும்

அந்தநகர் ஒருபுறத்தில் ஆம்பற்பூ பூத்திருக்கும்
அழகு ஏரி
வந்தமரும் நாரைகளோ வாய்வழிய உண்டுசெலும்
மீன்கள் வாரி
மந்தமுகில் எப்பொழுதும் மழைப்பெய்யக் காத்திருக்கும்
வானம் மூடி
பந்துஎன புல்வெளியில் பகல்பொழுதில் கூடவிழும்
பனிகள் தூரி

விடிகின்ற வேளையதில் விரிந்திருந்த வெண்ணிலவும்
விளக வாடும்
படிந்திருந்த இரவிருளின் மடியிருந்த விண்மீன்கள்
பகலைச் சாடும்
முடிவின்றி இருக்கின்ற முதிராத இயற்கைக்கே
விளங்கா போது
பிடிநெருக்கம் நெகிழாமல் பிணைந்திருக்கும் இளசுகளை
சொலவா வேண்டும்!


தொடரும்....

பின் குறிப்பு: அன்பு உறவுகளே, மாங்கனிக் குறித்த உங்களின் பொன்னான விமர்சனித்தைக் மாங்கனி விமர்சனத் திரியில் இடுமாறு வேண்டுகிறேன்

மாங்கனி விமர்சனத்திரி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15127)

அன்பு உறவுகளே படித்தது பிடிக்கவில்லை என்றால் "நல்லா இல்லை" என்றாவது சொல்லிவிட்டுப் போங்கள், அப்போதுதான் உங்கள் உளக்கருத்து புரிந்து எதிர்வரும் பாடல்களை எனக்கும் இன்னும் நன்றாய் இனிதாய் தர முயற்சிக்க தோன்றும்..

அன்புடன் ஆதி

ஆதி
01-04-2008, 06:55 AM
அறிவன் வேண்டுகோள்

அறுசீர் விருத்தம்


போது கொய்த பூப்போன்ற
புன்சி ரிப்பு உடையவளே
தாது அன்ன நறுமணக்கும்
தரள மேனி தண்ணிலவே
மாது மாங்க னிவீரஏறு
மனையாள் தென்ன ரசிக்காதல்
ஓதும் காவி யமும்சிலையும்
புனைய நல்கு அனுமதியே!



தொடரும்..

அன்புடன் ஆதி

ஆதி
10-04-2008, 10:37 AM
ஏற்றாள் பொன்னரசி

அறுசீர் விருத்தம்

அறிவனவன் கருத்தை ஏற்றாள்
அதைத்துவங்கும் திருநா ளையும்
அறிவித்தாள் பெருகிப் பொங்கும்
பௌர்ணமிநா ளன்றில் மூவர்
பெருங்காதல் சிறப்பும் ஏத்தும்
பெருங்காவி யமெழில் சிற்பம்
வருங்காலம் அறிந்து வாழ்த்த
வடிவெழிலாய் வடிப்போம் என்றாள்.

ஆதி
21-04-2008, 12:01 PM
அலர்ந்தது நிலா

வானவில் கரைத்து வரைந்த போதாய்
ஆணவன் விரல்கள் அலைந்த போது
நாணவில் விரிந்த நங்கை முகமாய்
மாணவன் போல மையலில் மாதின்
பூநகில் மார்ப்பில் புனைந்த தொ(ய்)யிலில்
ஆனவில் போல அலர்ந்த தந்தி..

பாடும் இசைஞர்கள் ஒருபுறம் பரதம்
ஆடும் மஞ்ஞைகள் ஒருபுறம் வாள்கள்
சூடிய வீரகள் ஒருபுறம் பைந்தமிழ்
ஏடேந்திய புலவர்கள் ஒருபுறம் பாவையர்
கூடும் பக்கங்களில் அதிக மாய்நட
மாடும் ஆடவர் கூட்டம் ஒருபுறம்

மொட்டிள விரல்கள் கட்டிளம் பெண்கள்
தொட்டிள பூக்களில் கட்டியத் தோரணம்
நெட்டிள வீதியில் நித்தில வாரணம்
பட்டிள இதழ்கள் படிக்கும் ஆரணம்
எட்டிள உலகும் எட்டியே நிற்கும்
எட்டிட முடியா எழிலின் பூரணம்..

அப்போது..

சுழலும் பூமியில் சூரியன் வற்ற
கழலும் பகலை கரைத்தது இரவு
தழலும் வானின் தனிமையைப் போக்க
மலரென விழிகளை அவிழ்த்தன விண்மீன்
குழலில் நீவும் நெய்யினை போல
குழுமும் இருளில் குழைந்தது நிலவு..


தொடரும்...

ஆதி
29-05-2008, 11:36 AM
வில்லவன் விழா எடுத்தான்

தொல்லவர் வடவரை துமைத்து இமயத்தில்
கல்எடுத்து கங்கையில் கழுவி ஏற்றி
தலையில் சுமக்க வைத்து கொணர்ந்து
சிலையொன்று கண்ணகிக்கு சமைத்த நாளின்
நினைவாய் வில்லவன் விழாஎடுத்தான்; வற்றா
சுனையென அழகு சுரக்கும் செங்கனி
மாங்கனி அன்று அரங்கேற்றம் செய்தாள்
தேங்கனி பலமனங்களில் சீற்றம் செய்தாள்


மாங்கனி அழகு

மஞ்சள் அரைத்து பனியில் தோய்த்து
கொஞ்சம் பொன்னில் குழைத்து; பொங்கும்
வெஞ்சில் மதியில் விளாவி; மென்முகில்
பஞ்சும் அளாவி பகலில் படரும்
செஞ்சுடர் சாந்து சேர்த்து விரவி
எஞ்சி இருந்த எல்லா அழகையும்
வஞ்சம் இன்றி வார்த்து வனைந்தானோ
வஞ்சி வனப்பை வான சிலைஞன்
விஞ்சி பகையை வெருட்டிய வேந்தரும்
தஞ்ச முறுவர் தப்பி தவறி
அஞ்சுக மேனியை கொஞ்சம் பார்த்தால்
மிச்சம் மீதி இல்லாமல் போவர்!


அழகு வழியும் அமுதப் பாவை
அளந்து வைத்து அரங்கம் நுழைந்தாள்
இளகும் நெஞ்சார் இழந்தார் தன்னை
உளத்தில் ஈரமற்றோர் உருகினர் வெண்ணையாய்

தீங்கனி தேனழகில் சிந்தனை சிந்த
பூங்கனி பொன்னழகை பாடஒரு புலவன்
வெட்டி மறையும் மின்னலிலும் வேகமாய்
சட்டென எழுந்தான் சரியாக நேர்த்தியாய்
கட்டாத மாலையாய் கவிதை பூக்கள்
கொட்டினான் மயக்கதில் குழறினான் உளறினான்



எழுசீர் கும்மி - சிந்து

குழையாட காதில் குழலாட பூக்கள்
குரலோடு வந்து குயில்பாடும்
அலையாட மார்ப்பில் அலையாக விழிகள்
அலைமோதி ஆங்கே அதிலாடும்
சுளையான உதட்டில் சுவையான சாறும்
சுகப்போதை ஊற வழிந்தோடும்
விளையாத பூவாய் விரியாத அழகில்
விடியாத விரக இழையூடும்



வண்ணமற்ற ஒருமடல் பூவா?
வண்ணத்து பூச்சியா இமைகள்
வளராத பிறைகளின் இரட்டையா ?
வளைந்த மின்னலா புருவம்
விறைத்த வில்லில் கணையாய்
முறைத்துப் பார்க்கும் தனங்கள்
நிறுத்த நயகடை எடையாய்
குறைந்து போன இடையாள்
நிலவாலுன் தாய்க்கரு உற்றாளோ
நிலவையுன் தாய்க்கரு உற்றாளோ
என்றான்; பிறகென்ன சொல்ல புரியாமல்
நின்றான் நிலவை பார்த்த வாறு..

தொடரும்...

ஆதி
10-06-2008, 10:35 AM
துவங்குக ஆடல்


சேரன் அமைச்சன் அளும்பிள்வேல்; அவன்மகன்
வீரத் தளபதி அடலேறு; வில்லவன்
மனையாள் மாதரசி; மாசறு பொன்னிற்கு
இணையான சான்றோர்; தூசறு உள்ள
முடைய அரசியல் மேதைகள்; நீசரைப்
புடைக்கும் மறவர்; புலவர், கொடைஞர்
கொலைஞர், மக்கள் அனைவரின் சுற்றும்
விழியின் மைய புள்ளியாய் மாங்கனி
இருந்தாள்; அடலேறு காதல் மையலில்
இருந்தான்; யாரும் அறியாமல், இறக்காமல்
இறந்தான்; நெஞ்சை இளையவன் துறக்காமல்
துறந்தான்; காதல் துறவி யானான்

மதப்புரவி களடக்கும் மறவன் காதல்
மதம்தழுவி னான்;மனப் புரவி கொண்ட
மதத்தை அடக்க முடியாமல் தோற்றான்
மதம்முற்ற மனதை மதத்தில் ஆர்த்தான்

பட்டுநிலா கிரணம் விரியும் சத்தம்
எட்டு திசையும் எதிரொ லிக்கும்
அமைதி மொட்டு விரியும் ஓசையும்
இமைகள் முட்டும் ஓசையும் கூட
தெளிவாய் கேட்கும் திருப்பொழுதில் சேரன்
விளித்தான் துவங்குக ஆடல் என்றே!

மாங்கனி ஆடும் அழகு


வணங்கும் அபினயம் ஒன்று வைத்தாள்
மனக்குடம் நிறைந்தவரும் தழும்பினர் திங்கள்
வலக்கரம்தான் நீட்டினாள் உளக்குளம் பாதி
கலங்கின; இடக்கரம் பிறகு மடக்கினாள்
இருந்தவரில் மீதி முடங்கினர்; தாம்தீம்
என்றவளாட தத்தைப்பின் விழிகள் ஓட
இன்றுநாம் தகர்ந்தோம் என்றுசிலர் வாட
தத்தோம் என்றுகால் தூக்க மீண்டும்
செத்தோம் எனபலர் வீழ; முடித்தாள்
மாங்கனி; அவையோர் மனங்கள் எல்லாம்
ஏங்கின இன்னும் ஆட வேண்டி..

ஆதி
16-06-2008, 12:34 PM
அடலேறு காதலுற்றான்

வெண்பா


மன்னன் மனஅரசி மாதரசி மாலையொன்று
அன்னத்திற்(கு) ஈந்தாள் பரிசாக - பின்னர்
மயிலழகு மாங்கனியை வாழ்த்தினான கோதை
அயில்விழியாள் ஏற்றாள் பணிந்து!

பூரித்து எல்லோர்க்கும் புன்னகையில் நன்றிசொல்லி
நேரிழையாள் ஏகினாள் அங்கிருந்து - ஏரிடை
கட்டுண்ட மாடாய் அவையோர் மனங்களும்
சென்றன மாங்கனி யோடு!

எழுசீர் கும்மி சிந்து


தெளியாத போதை தெய்வீக வஞ்சி
..தெவிட்டாத மதுவால் ஊற்ற
பொழியாத மேகம் புளங்காத மின்னாய்
..புரியாத தாப தீமூட்ட
கிழியாது நெஞ்சை கிறங்காது கொத்தி
...கிளியாக மாது நடைபோட
எலியான வீரன் எழில்மேனி போன
...இடம்பார்த்து நின்றான் மரம்போல

வெடியாக பாவை விறகாக நெஞ்சை
...இருவேறு துண்டாய் பிளந்துவிட்டாள்
கொடியாக கோதை கொம்பாக எண்ணி
...குலவீரன் தன்னை சுற்றிவிட்டாள்
அடியோடு யாரும் அறியாத வண்ணம்
...அடலேறு தன்னை பேர்த்துவிட்டாள்
வடியாத காதல் வழியாத நெஞ்சில்
...வலியாக ஏறு வழியானான்!

(வேறு)

என்ன நிகழ்கிறது என்று அறியாமல்
அன்னம் நடந்தாள் அன்னை பின்னே!


அந்தப்புரத்தில் சேரனிருந்தான் அன்னம் மாதரசியோடு

அறுசீர் விருத்தம்


பெண்கடலில் மூழ்கி மன்னம்
...பிரியமுத்து எடுத்த அந்த
மென்பொழுதில் சொர்க்க பாவை
...மாங்கனியின் வனப்பு பற்றி
கண்சங்கால் மையல் பாலை
...காண்போர்க்கு ஊட்டி காதல்
பொன்வீட்டில் பூட்டும் இன்ப
...பொலிவையரசி புகழ்ந்து சொன்னாள்

முகநிலவை கையில் ஏந்தி
...முன்னூறு முத்த மிட்டு
அகச்சூட்டு தகிப்பு கொஞ்சம்
...அடங்கிவிட அமுதை பார்த்து
சகபெண்ணை பற்றி பேச்சு
...சரியில்லை கண்ணே என்றான்
புகையிடையை மீண்டும் அள்ளி
...புதைந்துபோனான் சேர்ந்தான் சொர்க்கம்

மனதாலும் வேறு பெண்ணை
...வருடாத மன்னன் கற்பை
நினைத்துமாது மகிழ்ச்சி கொண்டாள்
...நெகிழ்ந்திறுகி நெருக்கம் கொண்டாள்
இணைகளுக்கு இடையில் சிக்கி
...இடம்பெயர இயலா காற்று
முனகியது "விடடா! என்னால்
...மூச்சிழுக்க முடிய வில்லை"

தொடரும்...

ஆதி
19-06-2008, 12:54 PM
அடலேறு பாடுகிறான்

பாடல்


இதுவரையில் - என் இமைகரையில்
எந்த நிலவும் விரிந்து மலர்ந்ததில்லை
மலர்ந்ததில்லை - நான் கரைந்ததில்லை...

துளி ஒளியென்னும் உன் விழிகளால்
என்னை துகள்களாய் தகர்த்துவிட்டாய்
சுடும் வெளியன்ன என் இதயத்தில்
காதல் இலைவிட விதைத்துவிட்டாய்
அசையா மலைபோல் நின்றவனை
அடியோடு பேர்த்து சாய்த்துவிட்டாய்

சிரம் கொய்ய ஏவிடும் என் வாளை
பூ கொய்யும் கருவியாய் மாற்றிவிட்டாய்
ஒரு இடத்தில் நிற்காத என் மனதை
உன் நினைவு தியானத்தில் அமர்த்திவிட்டாய்
எனக்கென்று இருந்த நினைவுகளை
உனக்கென்று நீ எடுத்துக்கொண்டாய்

வெண்பா


கோதைமலர் பாவையவள் கோல நினைவினில்
போதையுற்ற வீரமகன் நீந்தினான் - சீதளமாய்
சின்னமகள் தன்னுள்ளே செய்தவிட்ட வேறுபாட்டை
எண்ணியெண்ணி பாடினான் பா!
தொடரும்..

ஆதி
23-06-2008, 04:55 PM
போதையுற்ற நெஞ்சம்


மலராக மின்விழியாள் மலர நெஞ்சில்
உலராத சருகாக உதிர்ந்தான் தீரன்
வளராத பிறைபோன்ற வாட்டம் வந்து
தளராத தளபதியின் முகத்தில் சூழ

விரவிகொன்ற தனிமையோடு வீடு சென்றான்
அரவமற்ற நினைவோடு சோலை புக்கான்
அரவமொன்று நெளிந்தாலும் அறியான் போல
மரமிடையே மரமானான் மறவன் பாவம்!

தென்றலொன்று இதமாக தேகம் தீண்ட
பெண்விரல்கள் பட்டதுபோல் அவனில் சூடு
மென்மையாக மேலெழுந்து பரவி ஊட
கண்வானில் வெப்பநிலா காயக் கண்டான்

எண்சீர் விருத்தம்


உடலாறு உற்றவளின் நினைவால் பொங்கி
...உள்ளத்தை வெள்ளம்போல் உடைத்து ஓட
அடலேறு அதில்மூழ்கி இருந்த போது
...அழும்பிள்வேல் வந்துநின்றான் அவனின் பின்னே
மடலிதழை திறந்தழகாய் மகனே என்றான்
...மயக்கத்தில் இருந்தமகன் மதிக்க வில்லை
'அடலேறு' என்றழுத்தி அழைத்தான் மீண்டும்
...அறியாத வரைப்பார்ப்ப வன்போல் பார்த்தான்

யாரென்று அவனிதழ்கள் அசையும் முன்னே
...அருகேவந் தறிவாயா மகனே மற்றோர்
பேரென்றான் அழும்பிள்வேல்; கண்வேல் இட்ட
...புண்ணேஇன் னுமாறாத போது இன்னோர்
போரென்றால் புயலுற்ற நெஞ்சம் எப்படி
...பொறுக்கும்?உ தட்டிலொரு சொல்லு மின்றி
யாரிடமோ அழும்பிள்வேல் பேசு கின்றான்
...என்பதுபோல் நின்றிருந்தான் இளைய ஏறு!



யாருடந்தெ ரியுமாபோர் ? தெரியா தென்றான்
...ஏறுஅமைச் சன்மீண்டும் தொடர்ந்தான் வேந்தன்
ஆருயிர்நண் பன்செவ்வேல் மீது மோகூர்
...அரசன்ப டைத்திரட்டி விட்டான் அந்த
கூருகெட்ட குறுமதியன் மீது தான்போர்
..போருதவி செவ்வேலுக் குசெய்ய நாளை
சேரர்ப டைப்புறப்ப டவேண்டும் நீதான்
...சேனாதி பதியென்றான் தழுவிக் கொண்டான்..

அறுசீர் விருத்தம்


துவங்கிவிட்ட போரே வெற்றி
...தோல்வியென்று ஏது மின்றி
துவண்டுநிற்க தோழ னுக்கு
...துணைசெய்ய தானை ஏற்று
துவங்குநாளை பயணம் என்று
...சொன்னால் ஏ துசெவான் பிள்ளை
நவரசத்தில் இலார சத்தை
...அவன்முகத்தில் வழிய விட்டான்

தொடரும்...

ஆதி
18-07-2008, 08:50 AM
மாங்கனி இல்லம்

ஏறின் மயக்கம்

அறு சீர் விருத்தம்


அனிச்சமலர் நினைவில் மீண்டும்
...ஆழ்ந்தான்;மான் அருகில் அற்ற
தனிமையில்தான் தத்த ளித்தான்
...தளர்ந்தநடை போட்டு; பார்வை
பனிச்சிந்து பாவை வீடு
...பயணமானான்; முற்றம் வந்து
துணிச்சலற்று நின்றான்; நீண்ட
..சுவாசமிழுத் தான்,உள் சென்றான்

(வேறு)

அமைச்சன் மைந்தன் அவ்விடம் போம்முன்
அவள்வீட்டில் நிகழ்ந்த வற்றை காண்போம்


சுற்றி போட்டாள் அன்னை


பொழிலகத்து பூமதியாள் வந்த பின்பு
எழில்குலத்து மாங்கனிக்கு சுற்றி போட்டாள்
வெளிர்குழலி அன்னை;பூவை முற்றும் காறும்
மொழிமறுத்து நின்றாள்;தன் அறைக்கு சென்றாள்

மாங்கனியின் அறைக்கு சென்றாள் அன்னை

அறுசீர் விருத்தம்


வெற்றிலை சிவந்த செவ்வாய்
...வெண்மணி யாடும் மார்பள்
முற்றிய வயதள்; சிந்தை
...முதிர்ந்தவள்; இளங்கா ளைகள்
சுற்றிமுன் வட்ட மிட்ட
...சொப்பண பூ;சு ருங்கி(ய)
நெற்றியாள்; எதையோ பேச
...நிலவவள் அறைக்கு சென்றாள்

அன்னையின் ஆசையும் மாங்கனியின் கோபமும்

எண்சீர் விருத்தம்


அறைபோன இளநங்கை; அரசி தந்த
...அழகுமாலை ரசித்திருந்தாள்; எண்ண வெள்ளம்
கரைபுரண்டு நெஞ்சிலோட அவையில் பெற்ற
...கரஓசை காததிர அரும்பின் செல்வி
உறைந்திருந்தாள் பெருமிதத்தில்; சுருக்கம் கொண்ட
...பிறைபோன்ற நெற்றியோடும் நெருக்கம் கொண்ட
கறையான பல்லோடும் அங்கே அன்னை
...கனியோடு உரையாட வந்து நின்றாள்


தோய்ந்திருக்கும் நினைவுகளின் மகிழ்ச்சி ஆற்றில்
...தொலைதூரம் போனவளோ திரும்பி மீள
காய்ந்திருக்கும் மலர்போன்ற இதழை கூப்பி
...கனியேயென கூப்பிட்டாள்; விரியும் பூபோல்
சாய்ந்திருக்கும் இமைதூக்கி தாயை பார்த்தாள்
...ஜாடையிலே சங்கதியென்ன என்றாள்; அன்னை
ஓய்ந்திருக்கும் குலதொழிலோ உன்னால் மீண்டும்
...ஒளிகொள்ள வேண்டுமென விருப்பம் சொன்னாள்

அவ்வார்த்தை கேட்டவுடன் கோதை வெப்ப
...அணல்க்கக்கும் கோபமுற்றாள், உன்னை போன்று
ஒவ்வொருநாள் ஒவ்வொருத்தன் என்று தாவி
...உடைகழட்டி வாழஎனக்(கு) விருப்ப மில்லை
அவ்வாழ்க்கை வாழுதற்கு மாறாய் சாதல்
...அமுதமென்றாள்; அடித்தபுயல் ஓய்ந்தார் போல
மௌனமானாள்; மாங்கனியின் கற்பை பேச்சை
...மனதுக்குள் எண்ணியெண்ணி மகிழ்ந்தாள் அன்னை!

தொடரும்..

ஆதி
21-07-2008, 11:14 AM
இந்த உலகம்

எண்சீர் விருத்தம்


இத்தெளிவு எனக்கு முன்பே இருந்தி ருந்தால்
...இவ்வாழ்வில் உழன்றிருக்க மாட்டேன்; என்று
தத்தளித்தாள் தனக்குள்,த வித்தாள் காலம்
...சாய்ந்தபின்பு உணர்ந்தென்ன ஆகும் என்றே
அச்சுருங்கி ய,தோலினாள்தான் தேற்றி கொண்டாள்
...அழகைபார்த்து வேசிவீட்டில் பிறந்த உன்னை
இஜ்ஜெகத்தில் கற்போடு யார்தான் பார்ப்பர்
...இல்வாழ்க்கை நமக்கெல்லாம் வாய்கா தென்றாள்

அறுசீர் விருத்தம்


மாதவி குலத்தில் வந்த
...மாதவி, மனதில் கொண்ட
காதலன் நினைவில் கற்பை
...காக்கலை யா?பூ போன
பாதையில் நானும் ஏகி
...பத்தினி தன்மை காப்பேன்
மாதவன் எய்யும் அம்பாய்
...வாடகை மகளாய் வாழேன்!

என்றாள், சீதை யைநெருப்பில்
...இறங்கி கற்பை நிரூபிக்க
சொன்ன உலகம் கணிகைகுல
...தோகை உன்னை யாநம்பும்
அன்னை கூறி ய,அனைத்தும்
...அழகின் நெஞ்சில் அமிலமூற்ற
எண்ணம் கலங்கி இளயசெல்வி
...வெம்மை கண்ணீர் உகுத்திருந்தாள்..

தொடரும்...

ஆதி
26-08-2008, 12:34 PM
பாவம் ஏறு


அப்போது அங்கேறு வந்தான்; யார்க்கும்
ஒப்பேதும் இல்லாத வீரன் மீது
தப்பேது? அன்னைமகள் உற்ற ஊடல்
எப்படிதான் அறிந்திருப்பான் அந்த பிள்ளை..

வெங்கனியாய் மாங்கனியாள் கண்ணீர் வேகும்
சங்கதியை உணராமல் மையல் கையால்
செங்கனியாள் கண்ணிரண்டை சேர்த்து மூட
தங்கமகள் தோழியென்று தட்டி விட்டாள்..

வேறுஇதம் கைகளிலே விரிய கண்டு
யாருஎன்று கோபமாக திரும்பி பார்த்தாள்
ஏறுமகன் காதலோடு ஏங்கி நிற்க
தாறுமாறாய் வார்த்தைகளை இதழ்த ரித்தாள்..

காமனை மாமனாய் எணும்கு லத்தாள்
ஆமென ஆசையில் அடைவேன் என்று
ஏமமுற வந்தீரோ நாட்டைக் காக்கும்
தூமகரே நாடுகாக்கும் திறம்தான் ஈதோ ?

நீர்ப்பட்ட கனகாம்ப ரவிதை போல
நீர்முட்டும் கண்ணுடையாள் வெடித்தாள் தூய
தீர்வொன்று காதலுக்கு தேடி வந்து
சீர்க்கெட்ட பேருற்றான் திரும்பும் வீரன்..

ஆதி
19-03-2009, 01:12 PM
சோர்ந்தான் ஏறு

பனிக்காற்று போல்ப்பாவை பிணைந்தி ணைந்து
பருவநெஞ்சில் பக்குவமாய் படர்ந்து றைந்து
மணிக்கணக்கு தெரியாமல் மயங்கி ஆர்ந்து
மயிலிறகு போன்றுமேனி முழுதும் ஊர்ந்து
இனிக்காற்று நுழைந்துவிட இடமே இல்லை
என்பதுபோல் நெருங்கிடுவாள் என்று எண்ணி
மனக்கணக்கு போட்டுவந்த நினைப்ப னைத்தும்
மரத்தூளாய் பொடிந்ததனால் மறவன் சோர்ந்தான்

வெறுமையொன்று வேகமாக ஊடி நெஞ்சின்
விளிம்புவரை மீதமின்றி இருப்பு கொள்ள
இறும்பாடை பூண்டிருக்கும் சேர வீரன்
வெறும்பானை போலானான் வஞ்சி சொன்ன
வெறுப்பான வார்த்தைகளும் நெஞ்சில் வந்து
நெருநெருக்க வெடித்திட்டான் அவ்வப் போழ்து
கறுத்துப்போ னமுகில்போல் முணுமு ணுத்தான்
கருத்துப்போ னால்முனகா தென்ன செய்வான் ?

திருவோடாய்த் தனைஏந்தி பாவை வீட்டுத்
தெருவோடு பொடிநடையாய் நடக்க லானான்
ஒருநிலையில் புத்திநிற்க வில்லை; எண்ணம்
ஒருநொடியும் மௌனமாக இல்லை; தாபம்
பெருமணலாய் அவனுள்ளே விரிய; தானே
சிறுகாசாய் அதில்தொலைத்து விட்டான்; போரில்
பெருயானை எலாம்வீழ்த்தும் வீரன் பாவம்
மனயானை அடக்கமுடி யாமல் தோற்றான்

ஆதி
22-09-2009, 06:12 PM
நெஞ்சம் தெளிந்தான் ஏறு

நிமிர்ந்துநடக் கும்சேரன்
நினைவுநோவ முதன்முதலில்
நிலைசாய்ந்த மரம்போல
தலைசாய்ந்து நடந்தான்..

சிம்மம் போன்ற வீரன்
விம்ம தயரானான்

கூர்வேலோடு வந்தொருவன்
குனிந்து வணங்கி "தளபதி
தார்வேந்தன் தன்மனைக்கு
தங்களை அழைக்கின்றான்"
என்று தகவல் சொன்னான்

"இம்"மென்று சொன்னான் எனினும்
"உம்"மென்றே இருந்தான் ஏறு

அடர்ந்த மௌனம் உடைய
அதிரும் குரலால் சேவகன்
"அரசன் உம்மை
அழைக்கிறான்" என்றான்

ஆழ்ந்த உறக்கதில்
அரண்டு எழுந்தவன் போல்
எதிர் நின்றவனைப் பார்த்து
விதிர்விதிர்க்கும் இதழ்களால்
"வருகிறேன்" என்றான்

விடைபெற்றான் சேவகன்
நடையிட்டான் சேனாதிபதி
அவனுக்கு பதில் கொடுக்காமல்..

கொடியிடையாள் வார்த்தை
இடிப்படையால் தன்னை
தாக்கியதில் தப்பில்லை
நோக்கத்தையும் உண்ட
ஏக்கத்தையும் சொல்ல
சென்றநேர முமிடமும்
நன்றில்லை என்பதனால்
நன்மனதின் எண்ணத்தையும்
நஞ்சென்று எண்ணிவிட்டள்..

தவநிலையே பூண்டாலும்
சரசத்துக் கேயழைக்கும்
அவலநிலை அவள்நிலை
துவன்றமன தைத்தானே
சமாதானம் செய்தான்..

தொடாமல் பேசியிருந்தால்
சுடாமல் பேசியிருப்பாள்
கெடாமல் இருந்திருக்கும்
கௌரவமென்று காற்று
உலவும் சருகாக
புலம்பிக் கொண்டான்..

ஆறாத ரணம்தான்
ஆனாலும் அவளுகாய்
ஆற்றிக் கொண்டான்
அவள்தானே பேசினாலென்று
தேற்றிக் கொண்டான்

கொஞ்சம் தெளிந்ததும்
கோமனை நோக்கி ஏகினான்..

ஆதி
24-09-2009, 12:50 PM
வெங்கனியாள் கனிந்தாள் செங்கனியாய்

தாபமகன் போனபின்பு
கோபமயில் படுகையிலே
தூபபுகை போல்மெல்ல அமர்ந்தாள் - தனை
தூக்கத்தில் எறிந்துவிட நினைந்தாள்..

தலையணையில் தலைசாய்த்தாள் தளிர்மங்கை
உலையிட்ட இறும்பாய்ச் சிவந்தகண்கள்
இளைப்பாற மெல்லிமைப்போர்த் தினாளெனினும்
அலகழிக்கும் எண்ணங்கள் தேங்கனியை
உறங்கவிட வில்லைஉள்ளம் வெதும்பினாள்
கரமிட்டு தன்காதல் சொன்னாலும்
தரம்கெட்டு நடக்காத அம்மகனை
சுரம்கெட்ட வார்த்தைகளால் தூற்றினோமே
வருந்தமுற்றாள் கருத்தெல்லாம் அவனையள்ளி
இருத்திவிட்டாள் தந்தவறை எண்ணியெண்ணி
இறுக்கமுற்றாள் நினைவலையை அவந்திசையில்
திருத்திவிட்டாள் காதல்தீ கொளுத்தவிட்டாள்..

கடைப்பால் உடைப்பெடுத்த மடைப்போல் பொங்க
இடைப்பால் ஈர்ப்புண்டோர் மத்தியில் காம
தடைப்போட்டு காதல்நி னைப்புக்கு என்பால்
விடைக்கேட்டு வந்தவரின் நெஞ்சம்புண் ணாக
நப்பளித்து பேசிவிட்டே னேநொந்து கொண்டாள்
தப்பாய் நம்மிடம் நடந்தி ருந்தாலும்
இப்பால் அதனையெவர் பெரிதாக நினைப்பார்
குப்பைப்பூ தானேவென் றிழித்துரைத் திருப்பார்
ஆனால் அந்தமகன் அறத்தோடு நின்றார்
தானாய் ஊறும்பால் கிண்ணத்தை மண்ணில்
வீணாய் தள்ளிவிட்டேன் தேடிவந்த வாழ்வை
நானே தவறவிட்டேன் வெங்கனியாள் கண்கள்
தழும்பினாள் இனியென்னை காண்பாரோ என்று
புலம்பினாள் சம்மதம் சொன்னாலும் கொள்வாரோ
குழம்பினாள் எவ்வாறு அவர்முன்போய் நிற்பேன்
கலங்கினாள் வெதும்பினாளே வேதனைநெஞ் சோடு..