PDA

View Full Version : போதிமரம்மதி
23-03-2008, 08:58 AM
பேருந்து மெதுவா போய் கொண்டிருந்தது. மாட்டு வண்டி கூட இதைவிட வேகமா போகும். வண்டி முழுக்க மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடைவிடாது பெய்த மழை இப்போது நின்றிருந்தது. சாலைக்கு இருபக்கமும் வயக்காடு. மழையினால் புத்துணர்ச்சியோடு தலையாட்டின நெற்கதிர்கள். ரம்மியமான சூழ்நிலை. இயற்கையை அனுபவிக்கும் யாரையும் மெய்மறக்கச் செய்யும். ரவியும் அப்படிப் பட்டவன் தான். ஆயினும் அவன் மனம் எதிலும் நிலைக்கவில்லை. காரணம் அப்பா.

ரவியும் அவன் தம்பியும் சிறுவர்களாக இருக்கும் போதே அவர்கள் தாய் செத்துப் போனாள். அப்போது ஊருக்குள் பரவியிருந்த விஷக் காய்ச்சல் அவளுக்கும் வந்து காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. அப்போது ரவிக்கு பத்து வயதிருக்கும். சின்னவன் குமாருக்கு ஏழு வயது. அதன் பின் அப்பா தான் எல்லாமே. கொஞ்சம் கொஞ்சமாய் விவரம் தெரிய ஆரம்பித்திருந்த நேரம். அப்பா விவசாயம் செய்தார். சொந்தமா ரெண்டு ஏக்கர் இருந்தது. அதை வைத்து தான் ஜீவனம்.

அம்மா இறப்பதற்கு முன் அப்பா கோவக்காரராய் இருந்தார். எதற்கெடுத்தாலும் அம்மா கூட சண்டை போடுவார். அப்போதெல்லாம் அம்மாவை அப்பாக்கு பிடிக்காதோன்னு ரவிக்கு தோன்றும். ஆனால் அம்மா இறந்த பிறகு சுத்தமா மாறிட்டார். அமைதியான பேச்சு. நிதானமான பார்வை. அதுக்கப்புறம் உறவுக்காரங்க எவ்வளவோ சொல்லியும் ரெண்டாம் கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு சொல்லிட்டார்.

வயசாக ஆக ரவிக்கு அப்பா அம்மா மேல் வைத்திருந்த அன்பு புரிபட ஆரம்பித்தது. தனி ஆளாய் பிள்ளைகளுக்கு சமைத்து போட்டு விவசாயம் பார்த்து படிக்க வைத்தார். ரவியும் குமாரும் விளையாட்டுப் பிள்ளைகள். எதுக்கெடுத்தாலும் சண்டை பிடித்துக் கொள்வார்கள். அப்போதெல்லாம் அப்பா கோவப்படாமல் இருவரையும் சமாதானப் படுத்துவார். பக்கத்து வீட்டு செல்வம் அம்மா, செல்வம் தப்பு செஞ்ச போதெல்லாம் அடிக்கறப்போ அப்பா மட்டும் அடிக்காதது அவனுக்கு ஆச்சர்யமா இருக்கும். அப்பா மேல கொஞ்சம் கொஞ்சமாய் ஈர்ப்பு வந்தது.

இருவரும் காலேஜுக்கு போன பிறகு தான் அப்பாவை பிரிய நேர்ந்தது. வெளி உலகை காண நேர்ந்தது. அப்பாவின் அரவணைப்பிலே இருந்த சுகம் உறைக்க ஆரம்பித்தது. உலகம் நினைத்தது மாதிரி வாழ அவ்வளவு சுலபமில்லை. ஏகத்துக்கும் சண்டை போட வேண்டியிருக்கிறது. அப்போதெல்லாம் அப்பா தான் நினைவுக்கு வருவார். எதனால் அவருக்கு கோவமே வருவதில்லை? எனக்கு இவ்ளோ கோவம் வருது. நாம நல்லது பண்ண நினைச்சாலும் நமக்கு கெட்டது தானே நினைக்கறாங்க.

வேலைக்கு சேர்ந்து ஒரு முறை அப்பாவை பார்க்க போன போது கேட்டே விட்டான்.

“அப்பா நீங்க ஏன்ப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கல?”

“வேணும்னு தோணல”

“உங்களுக்கு கோவமே வராதாப்பா?”

“வரும்ப்பா.. நிறைய வரும். அதெல்லாம் அப்போ. உங்கம்மா போனபிறகு வாழ்க்கையின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. வாழ்க்கையே தொலைத்தது போலருந்தது.”

“அப்புறம்…”

“இருந்த வரைக்கும் உன் அம்மா சந்தோசமா இருந்தாளான்னு தெரியல. போகும் போது கூட நோய்வாய்ப்பட்டு தான் போனா.”

“ம்..”
“அதுவரை எனக்குள் இருந்த ஆண் திமிர் குறைய ஆரம்பிச்சது. நான் கோவப் படறதால யாருக்கும் சந்தோஷமில்லேன்னு புரிஞ்சுது. ஏன் எனக்கும் தான். யாருக்குமே சந்தோஷம் தராததற்கு ஏன் கோபபடணும்னு தோணுச்சு. அன்னிலேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா கோவம் குறைய ஆரம்பிச்சுடுச்சு. இப்போ சுத்தமா இல்லே.”

“யார் உங்கள திட்டினாலும் கோவம் வராதாப்பா?”

“ஏன் திட்டறாங்கன்னு யோசிப்பேன். யோசிக்கற நேரத்துல கோவம் குறைய ஆரம்பிச்சுடும். கொஞ்ச நேரத்துல சுத்தமா போயிடும்”

இன்னும் அப்பா புரியாத புதிராய் தான் தெரிந்தார். ஆனாலும் அவர் மேல் இருந்த மரியாதை மிக மிக அதிகமானது. இப்படித் தான் ஒருமுறை அலுவலகத்தில் மேலாளருடன் சண்டை. கோவம் கோவமாய் வந்தது. அதிகமா உழைத்தது நான். ஆனால் பேர் இன்னொருத்தனுக்கா என்ற ஆதங்கம். குமுறிய நெஞ்சத்துடன் அந்த வாரயிறுதியில் ஊருக்கு வந்தவனை அப்பா வரவேற்றார். முகத்தில் வாட்டம் இருப்பதைப் பார்த்து வினவினார்.

“என்னப்பா.. என்னாச்சு?”

“இந்த உலகத்துல நேர்மை நியாயம் எதுவும் இல்லேப்பா. எங்க போனாலும் ஏமாத்தறாங்க. நான் கஷ்டப்பட்டு வேலை பாத்தேன். இன்னொருத்தனுக்கு பிரமோஷன் தர்றாங்க. இந்த காலத்துல எல்லாத்துக்கும் காக்கா பிடிக்க வேண்டியிருக்கு. நினைத்தது கிடைக்கலேன்னா எப்படிப்பா சந்தோஷமா இருக்க முடியும்?”

“இப்போ நீ சந்தோஷமா இருக்கியா இல்லியா?”

“எப்படிப்பா இருக்கறது? அதான் கிடைக்க வேண்டியது கிடைக்காம போச்சே..”

“அப்போ பிரமோஷன் கிடைச்சா உனக்கு சந்தோஷமா?”

“ஆமாம்ப்பா..அப்போ தானே சந்தோஷம். உழைப்பிற்கான பலன்”

“சரி. பிரமோஷம் கிடைக்குதுன்னே வச்சிக்க. அப்புறம் என்ன?”

“அதை வச்சு நிறைய சம்பாதிச்சு இன்னும் சந்தோஷமா இருக்கலாம்.”

“அப்போ பிரமோஷன் கிடைச்சாலும் அதிகமா சம்பாதியம் இருந்தா உனக்கு சந்தோஷம்…”

சுரீரென்று ஏதோ உறைத்தது போலிருந்தது. மனம், சந்தோஷத்திற்கான காரணம் என்ன என்று அறிய முற்பட்டது. அப்பா விவசாயம் பண்றார். ஆனா சந்தோஷமா தானே இருக்கார். எந்நேரமும் புன்னகை மாறாத முகம். தெளிவான பார்வை. அளவான பேச்சு. அப்பா சந்தோஷமா இல்லியா. பின்ன நான் மட்டும் ஏன் சோகமாய்..

உள்ளுக்குள் ஏதோ முடிச்சு அவிழ்வது போலிருந்தது. அன்றிலிருந்து அவன் தேடல் மாறிவிட்டது. சந்தோஷமாய் இருக்கப் பழகி கொண்டான். பணமோ பொருளோ அவன் சந்தோஷத்தை நிர்ணயிப்பதில்லை. மனம் தெளிவாக சிந்தனைத் திறன் வளர்ந்தது. கிடைக்காததை நினைத்து வருந்திய பொழுதுகளை விட்டொழித்து இனி செய்ய வேண்டிய காரியங்களை மட்டும் யோசித்தது. அதற்கு நல்ல பலன் இருந்தது. இதுவரை அவன் கோபப்பட்டு பார்த்தவர்கள் மாற்றத்தைக் கண்டார்கள். அவன் வேலையில் வீரியம் சேர்ந்திருப்பதை உணர்ந்தார்கள். நம்பிக்கை கொண்டார்கள். சந்தோஷமாயிருந்தது.

வண்டி நின்றது. இதோ அவன் இறங்க வேண்டிய நிறுத்தம். கைப்பையை எடுத்துக் கொண்டு இறங்கினான். தெருவில் நுழையும் போது வீட்டு வாசல் முன் போடப்பட்டிருந்த பந்தல் கண்ணில் பட்டது. ஊரே திரண்டிருந்தது. இவனைப் பார்த்ததும் குமார் ஓடோடி வந்தான்.
“அண்ணா…அப்பாஆ…” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. இவன் வருவதைப் பார்த்ததும் ஊர்க்கிழவிகளின் ஒப்பாரி அதிகரித்தது. காதில் எதுவும் விழவில்லை. பையை வைத்துவிட்டு கண்ணில் கண்ணீருடன் அப்பா கிடத்தப்பட்டிருந்த இடம் நோக்கிப் போனான். அப்பாவை கூர்ந்து கவனித்தான்.
அதே அமைதி ததும்பும் முகம். முகத்தில் மெல்லிய புன்னகை. சந்தோஷமாக இருந்ததற்கான அடையாளம் இது. அப்பா இறக்கும் போதும் சந்தோஷமாக தான் இருந்திருக்கிறார்.

மனம் சந்தோஷப்பட்டது. கண்ணீர் நின்றது. அருகில் போய் நின்று அப்பாவின் முகத்தையே கூர்ந்து கவனிக்கலானான். பள்ளிக்கூடமும் கல்லூரியும் கற்றுத் தராததை கற்றுத் தந்த போதிமரமல்லவா? ஆசை நிறைவேறி சந்தோஷமாக மரணத்தை எதிர் கொள்பவர்க்கு மறுஜென்மமும் கிடையாதாம். ஆவியாகவும் அலைய மாட்டார்களாம். அப்பா தெய்வப் பதவி அடைந்துவிட்டார்.

சிவா.ஜி
23-03-2008, 09:22 AM
வார்த்தைகள் இல்லை மதி.தந்தை என்ற போதிமரம் உணர்த்திய பாடம் என்றைக்கும் உதவும் நல்ல பாடம்....மிக அருமையான படிப்பினையோடு கூடிய கதை.வாழ்த்துகள் மதி

மதி
23-03-2008, 09:25 AM
அப்பாடி.. இப்போ தான் நிம்மதியா இருக்கு. இதுவரை இந்த மாதிரி கதைகளை எழுத முற்பட்டதில்லை. நேத்து உங்களுடன் உரையாடிய போது தோன்றியதே இந்த கரு. அதற்கு மிக்க நன்றி. இப்போது அங்கீகாரம் கிடைத்தது போன்றதொரு உணர்வு... நன்றி சிவாண்ணா..

சாம்பவி
23-03-2008, 09:35 AM
போதி மரம் வேரறுந்தாலென்ன*
போத்தித்தது மறந்திடுமோ... !
போய் வாருங்கள் தந்தையே...
( என்னவோ.... மனதில் நாகரா அவர்களின் " சிதையில் எரியும் மரணம் "...
அவரும் இப்படித்தான் நினைத்திருப்பாரோ..... ! )

அடுத்ததென்ன*
என வினவியவருக்கு
ராக்கோழியின்
பதில் இதுவெனின்...
இன்னும் இன்னும்
வினவுங்கள் அண்ணலே... !

பூமகள்
23-03-2008, 09:37 AM
நிஜமாவே அழகிய கதைக் கரு..!!
விவரித்த விதம் அதைவிட அருமை..!!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..!!

அப்பா சொல்லி கேட்பதை விட
அப்பாவை கவனித்து நிறைய கற்றுக் கொள்ளலாம்..!!

இப்படி ஒரு சாந்த சொரூப அப்பா கிடைத்தால் மகிழ்ச்சிக்கு ஏது தடை..??!!

அழகிய கதை கொடுத்து மனம் நெகிழச் செய்த மதிக்கு எமது வாழ்த்துகள்..!! :)

மதி
23-03-2008, 10:05 AM
போதி மரம் வேரறுந்தாலென்ன*
போத்தித்தது மறந்திடுமோ... !
போய் வாருங்கள் தந்தையே...
( என்னவோ.... மனதில் நாகரா அவர்களின் " சிதையில் எரியும் மரணம் "...
அவரும் இப்படித்தான் நினைத்திருப்பாரோ..... ! )

அடுத்ததென்ன*
என வினவியவருக்கு
ராக்கோழியின்
பதில் இதுவெனின்...
இன்னும் இன்னும்
வினவுங்கள் அண்ணலே... !
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சாம்பவி அக்கா.. ஏனோ மனதில் இருந்த விஷயம் சொல்ல தந்தை மகன் உறவு பாலமாய் அமைந்தது..

மதி
23-03-2008, 10:05 AM
நிஜமாவே அழகிய கதைக் கரு..!!
விவரித்த விதம் அதைவிட அருமை..!!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..!!

அப்பா சொல்லி கேட்பதை விட
அப்பாவை கவனித்து நிறைய கற்றுக் கொள்ளலாம்..!!

இப்படி ஒரு சாந்த சொரூப அப்பா கிடைத்தால் மகிழ்ச்சிக்கு ஏது தடை..??!!

அழகிய கதை கொடுத்து மனம் நெகிழச் செய்த மதிக்கு எமது வாழ்த்துகள்..!! :)


உண்மை தான்.. தந்தையை கவனித்தாலே போதும் நிறைய கற்றுக் கொள்ளலாம்.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பூமகள்.

யவனிகா
23-03-2008, 11:10 AM
கற்றுக் கொடுப்பன் தந்தை...தெளிவான ஒரு தந்தை அமையப்பெற்றாலே வாழ்க்கை சீராகச் செல்ல பாதிக்கும் மேற்பட்ட சாத்தியக் கூறுகள் திறந்து கொள்ளும்.

மதியிடமிருந்து சீரான நடையில், அழகான கருத்துடன் ஒரு கதை கிடைத்தது மகிழ்ச்சி.மதிக்குள் ஒளிந்திருக்கும் கதாசிரியர் வெளிவர ஆரம்பித்து விட்டார் போல.

நீங்களாக அனுமதிக்காதவரை எந்த சோகமும் உங்களைத் தாக்காது.
நீங்களாக அனுபவிக்காதவரை எந்த மகிழ்ச்சியும் உங்களுக்குக் கிட்டாது.

இந்த வரிகளை அழகாக கதைக்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள் மதி.

தொடருங்கள் மதி...வாழ்த்துக்களுடன்...!!

மலர்
23-03-2008, 12:10 PM
மதிக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கம்
இப்போ முழிச்சி வெளிய வர ஆரம்பிச்சிட்டு நினைக்கிறேன்...

நல்ல அருமையான கரு....
தொடந்து எழுத பாராட்டுக்கள் மதி............:icon_b: :icon_b:

மதி
23-03-2008, 12:59 PM
கற்றுக் கொடுப்பன் தந்தை...தெளிவான ஒரு தந்தை அமையப்பெற்றாலே வாழ்க்கை சீராகச் செல்ல பாதிக்கும் மேற்பட்ட சாத்தியக் கூறுகள் திறந்து கொள்ளும்.

மதியிடமிருந்து சீரான நடையில், அழகான கருத்துடன் ஒரு கதை கிடைத்தது மகிழ்ச்சி.மதிக்குள் ஒளிந்திருக்கும் கதாசிரியர் வெளிவர ஆரம்பித்து விட்டார் போல.

நீங்களாக அனுமதிக்காதவரை எந்த சோகமும் உங்களைத் தாக்காது.
நீங்களாக அனுபவிக்காதவரை எந்த மகிழ்ச்சியும் உங்களுக்குக் கிட்டாது.

இந்த வரிகளை அழகாக கதைக்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள் மதி.

தொடருங்கள் மதி...வாழ்த்துக்களுடன்...!!

சத்தியமான உண்மை அக்கா. கதாசிரியர் யாரும் உள்ளே ஒளிந்திருக்கல. எழுதலாம்னு தோணிச்சு.. அதான். ஒரேடியா கவுத்துடாதீங்க.. என்றும் மொக்க மதி தான்.:D:D

மிக்க நன்றி.. உங்க பின்னூட்டத்திற்கு

மதி
23-03-2008, 01:00 PM
மதிக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கம்
இப்போ முழிச்சி வெளிய வர ஆரம்பிச்சிட்டு நினைக்கிறேன்...

நல்ல அருமையான கரு....
தொடந்து எழுத பாராட்டுக்கள் மதி............:icon_b: :icon_b:

ஹிஹி.. நன்றி மலர். அப்பப்ப இப்படி ஏதாச்சும் எழுதி மக்கள பயமுறுத்தணும்ல.

சுகந்தப்ரீதன்
24-03-2008, 06:45 AM
கலக்கல் மதி...!!
கதைநடையும் உரைநடையும் அருமையாக அமைய பெற்றிருக்கிறது உங்களுக்கு..!!
"தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்..!!
வயதுக்கு மீறிய முதிர்ச்சியை தங்கள் எழுத்தில் காணமுடிகிறது வாழ்க்கையை பற்றி விவரிக்கும் இடத்தில்..!!
வாழ்த்துக்கள் மதி..தொடருங்கள்..!!

மதி
24-03-2008, 06:49 AM
கலக்கல் மதி...!!
கதைநடையும் உரைநடையும் அருமையாக அமைய பெற்றிருக்கிறது உங்களுக்கு..!!
"தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்..!!
வயதுக்கு மீறிய முதிர்ச்சியை தங்கள் எழுத்தில் காணமுடிகிறது வாழ்க்கையை பற்றி விவரிக்கும் இடத்தில்..!!
வாழ்த்துக்கள் மதி..தொடருங்கள்..!!

நன்றி சுபி. இன்னும் இளையவன் தான் நான். அதே மொக்க மதி. கண்ட கேட்ட விஷயங்களை மட்டுமே எழுதினேன்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி...

logini
24-03-2008, 07:14 AM
எப்பவுமே அப்பாக்கள் போதிமரம் தான் அதைப்புரிந்துகொள்ளும் பக்குவம் தான் நமக்கு இல்லை வாழ்த்துக்கள் மதி.

மதி
24-03-2008, 02:32 PM
எப்பவுமே அப்பாக்கள் போதிமரம் தான் அதைப்புரிந்துகொள்ளும் பக்குவம் தான் நமக்கு இல்லை வாழ்த்துக்கள் மதி.

மிக்க நன்றி லோகினி

தாமரை
24-03-2008, 03:26 PM
ஏறத்தாழ என் தந்தை இறந்த பொழுது எனக்கு ஏற்பட்ட அதே எண்ணங்கள் மதி.. சொல்லி இருக்கனோ என்னவோ!!!

ஆனால் கோணம் வேறு..

தன் மகன் வாழ்ந்து விடுவான் என்ற நம்பிக்கை வந்த உடனே தந்தைகள் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள் மதி.. தந்தைகளுக்கு அந்த நம்பிக்கை அவர்களின் தந்தைகளினாலும் வரலாம்..

அப்படி வந்த பின்னே தான் அனுபவப் பாடங்கள்.. இறக்கி வைக்கப்படும் பொறுப்புகள்..

தந்தையை மகனும் அப்பொழுது மகனும் புரிந்து கொண்டு விட்டால் அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்களில் இப்படி பல அபூர்வ ரத்தினங்கள் கிடைக்கும்.. எனக்கும் கிடைத்தது இரண்டு வருடங்கள். ;-)

தந்தை இறந்ததில் அர்த்தங்களை தேடிய உளப்பாங்கு...

என் தந்தை இறக்க ஒருவாரம் முன்னதாகவே நான் அதை உணர்ந்து கொண்டேன்.. இதுதான் அவர் கடைசியாக பேசுவதென்று..

அழத் தோன்றவில்லை.. நானிருக்கிறேன் என்ற ஒரு உறுதியை என்னால் கொடுக்க முடிந்தது.. தொலைபேசியில் கையைப் பிடித்து இறுக்கமாய் ஒரு சின்ன குலுக்கல் தர முடியாவிட்டாலும்.. நான் பார்த்துக் கொள்கிறேன் நிம்மதியாய் இருங்கள் என்ற ஒரு உறுதியை என்னால் கொடுக்க முடிந்தது..

அவருக்கு கொடுத்த உறுதிகளில் இன்று 80 சதவிகித நிறைவேற அடுத்து அண்ணனுக்கு.. இங்கே பேச்சுமில்லை ஒன்றுமில்லை.. வெறும் கண்ணசைவில் நிறைவு காட்டி கண்மூடினார்..

தொடரும் கடமைகள் என்னை பயமுறுத்தவில்லை. காரணம் என்னவென்று யோசித்துப் பார்க்கிறேன்.. கடைசி ஆறுமாத காலம் என் தந்தை எனக்குக் கொடுத்த உறுதி,, மரணத்தின் வாயிலில் நாட்களை எண்ணிக் கொண்டவரிடமிருந்து நான் பெற்ற வைராக்கியம்..

6 மாதத்தில் இறந்து விடுவோம் என்று தெரிந்தும் தன் மனைவிக்கும் ஏன் எனக்குமே சொல்லாமல் வாழ்ந்த வைராக்கியம்..

ஒரு மனிதன் காலப் போக்கில் எப்படி எல்லாம் தெளிகிறான் என்பதன் எடுத்துக் காட்டு

போதிமரம் தேடி வேண்டாம்.. நமக்கு அருகில்தான் நம்முடன் தான்..

சின்னத் தியானம் போதும்
தெளிவு பெற,

பூமகள்
24-03-2008, 05:54 PM
போதி மரத்தில் அமர்ந்து தியானித்த உணர்வு உங்கள் எழுத்துகளில் தெரிகிறது லோட்டஸ் அண்ணா..!!

தெளிவாக்கவும் அறிவுக் கண்ணை விசாலமாக்கவும் உங்களால் மட்டுமே முடியும்..!!

எப்போதும் உங்கள் பின்னூட்டங்கள் எங்களின் மனங்களுக்கு போதி மரங்களாகத் தான் இருக்கின்றன.. எங்கள் அறிவின் விலாசங்களைஇன்னும் விசாலமாக்குகிறோம் உங்களின் எழுத்துகளைப் படித்தபடியே..!!

அழகிய விமர்சனத்துக்கு நன்றிகள் தமிழ்ச் சிலம்பமே..!! :)

மதி
25-03-2008, 02:48 AM
போதிமரம் தேடி வேண்டாம்.. நமக்கு அருகில்தான் நம்முடன் தான்..

சின்னத் தியானம் போதும்
தெளிவு பெற,

நிதர்சனமான உண்மை. சில விஷயங்களை அசைப் போட்டதின் விளைவே இந்த கதை. இதை நேரில் கண்டதுமில்லை..கேட்டதுமில்லை. உங்கள் அனுபவங்கள் எங்கள் வாழ்க்கைப் பாடங்கள்.

மிக்க நன்றி.. தாமரை.