PDA

View Full Version : உப்பு சப்புள்ள காதல்!



ஷீ-நிசி
21-03-2008, 06:43 AM
நான் படித்து ரசித்த ஒரு கதையின் அடிப்படையில் உண்டான கவிதை இது!

(நன்றி: மன்மதன்)

அவள் ஒரு தேவதை!
பலமுறை சொல்லியது அவன் நாவதை!

அவளைக்கண்டு,
என்றும் மயங்கி மயங்கி நின்றவன்
இன்று தயங்கி தயங்கி சென்றான்!

எனக்காய் சில நிமிடங்கள்
ஒதுக்கமுடியுமா?

விழிகளும் புருவங்களும்
ஆச்சரியத்தில் விரிந்தன முதலில் -பின்

மெல்லிய புன்னகையொன்று,
எட்டி பார்த்தது அவள் இதழில்

எகிறி எகிறி குதித்தாடியது
அவன் இதயமும் காதலும்!

அருகிலிருந்த ஓட்டலில்
நுழைந்தனர்!

என்ன சாப்பிடறீங்க....
தேநீர் சொல்லவா என்றான்!

தண்ணீர் மட்டும் போதுமென்றாள் -அந்த
வெண்தேக நங்கை

உண்மைதான்...
"தேன்" நீர் மட்டும் அருந்தினாலே -அது
தேநீர்தானே என்றான்!

திடீரென்று,
ஒரு நூறு புறாக்கள் ஒன்றாக
பறந்திடும் சப்தம் கேட்டதங்கே....

அவளின் சிரிப்பொலியில்!

கைதட்டி வெற்றியென்று
விரலால் சைகை செய்தான்!

இரு தேநீர் கோப்பைகள்
வந்தமர்ந்தன மேஜை மீது!

மெல்ல தேநீரை சுவைத்தவனின்
உதடுகள் சர்வரை அழைத்தன!

கொஞ்சம் உப்பு கொண்டுவாங்க....

விழிகளும், புருவங்களும்
ஆச்சரியத்தில் விரிந்தன
இரண்டாம் முறையாய் அவளுக்கு!

சர்வரும் அவனை
ஏற இறங்க பார்த்தபடியே சென்றான்..

என்னங்க உப்பு கேட்கறீங்க
என்றாள்.. அவள்!

மெளனமாய் இருந்தவன்
மெல்ல தலையை உயர்த்தினான்...

அவனின் கண்களில் சில நீர்பந்துகள்,
கீழே விழுந்திட தயாராய் நின்றிருந்தன..

கடலோர கிராமத்திலே
உப்புக்காற்றின் வாசத்தில் பிறந்தவன்.

கடலில் நீராடும்போதும்
வாய்க்குள்ளே செல்லும்
உப்பு நீரினை ருசித்தவன்..

இன்று அந்த கடலும் இல்லை
என் பெற்றோரும் இல்லை
அந்த பால்ய காலமும் இல்லை.

ஒவ்வொரு முறை
தேநீரில் உப்பினை போடும்போதும்
நான் ருசித்துக்கொண்டிருப்பது...

தேநீரை அல்ல...
என் பால்ய கால நினைவுகளை!

என்று சொல்லிமுடித்தபோது,
அவனுள்ளிருந்த உப்புத்துளிகள்
சில மேஜை மீது கிடந்தன...

அவள் அவனை அப்படியே
பார்த்தபடி இருந்தாள்...

அறிமுகம் காதலாகி,
காதல் பின் கனிந்து,
திருமணமாய் மணம் வீசியது!

ஒவ்வொருநாள் காலையும்
உப்பிட்ட தேநீரையே,
அன்பாய் அவள் கொடுத்தாள்...

ஆசையாய் அவனும் பருகினான்...

பல வருடங்களுக்குப் பின்,
இறக்கும் தருவாயில்,

கோதையவளின் மடிமீது
தலைவைத்தபடி கூறினான்...

மன்னிப்பாயா அன்பே என்னை?!

அன்று நம் முதல் அறிமுகத்தில்,

சர்க்கரையென்று கேட்பதற்குபதிலாய்
உப்பு என்று உளறிவிட்டேன்...

உன்முன் அவமானப்படுவதை
தவிர்க்க நினைத்து பொய்யாய்
சில காரணங்களை கூறினேன்...

அவள் அழுதபடியே கேட்டாள்..

பின் ஏன் இத்தனை நாளாய்
அதை குடித்தீர்கள்?

ஒவ்வொருமுறை,
சொல்ல நினைக்கும்போதும்
எதோ என்னை தடுத்தது..

ஒவ்வொரு முறையும் நீ,
தேநீரில் கலந்தது உப்பல்ல
முழுக்க முழுக்க நம் காதலை!

அவள் அவனை
கட்டியணைத்துக் கொண்டாள்...

அடுத்தபிறவியிலும்
நானுனக்கு கணவனாய்
இறைவன் படைத்திட வேண்டும்!

உன் கையால் தினம்,
உப்பு தேநீரை குடித்திடவேண்டும்!

நம்பிகோபாலன்
21-03-2008, 07:18 AM
இறக்கும்தருவாயில் காதலை
உயிரோடு கொண்டு வந்த விதம் மிக அருமை....

ஆதவா
24-03-2008, 02:11 PM
வணக்கம் ஷீ-நிசி,

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் கவிதையை நம் மன்றத்தில் படிக்கிறேன். மீண்டு(ம்) வந்து படைப்பை அள்ளித்தரும் உங்களை முதற்கண் வரவேற்கிறேன். :)

காதல் படைப்பியலில் தனிரகம் உங்களது எழுத்துக்கள். உங்கள் எதுகைகள் எழுத்தை சுவாரசியமாக்கும், கவிதையின் பாதை மென்மையாக இருப்பதால் நடப்பதற்கும் எளிதாக இருக்கிறது. சரி இனி கவிதைக்கு......

உப்பு காபி கதையை நானும் படித்தேன் (நன்றி மன்மி) அந்த இறுதிநேர திருப்பம் என்னை மிகவும் கவர்ந்தது. கதாநாயகன் தன் பொய்யை தக்கவைப்பதோடு மட்டுமல்ல, ஏமாற்றம் தரவும் விரும்பவில்லை. ஆனால் இறுதியிலாவது உண்மை தெரியவேண்டும் என்ற நடத்தையும் கவர்கிறது. அவன் பொய்யும் சொல்லவில்லை; உண்மையும் சொல்லவில்லை. காதலைச் சொல்லியிருக்கிறான்.

கதையிலிருந்து கவிதைக்காகவோ என்னவோ சிறு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. கதையின் போக்கு சற்றும் கெடாமல் இருப்பது கவிதையின் வெற்றி. முதல் பத்தியிலேயே பற்றுகிறது எதுகை வார்த்தைகள். தேவதை எனச் சொல்லும் அவன் நா அதை.. அந்த தேவதையினால் மயக்கத்திலிருந்தவன் தயங்கியாவது செல்வது காதலில் அவன் காட்டியிருக்கும் தைரியம். கதைப்படி பலர் கதாநாயகியை அணுக முயற்சித்திருக்கிறார்கள். எவருக்கும் தைரியமில்லை. இங்கே காதலின் முதல் படியில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறான்.

எனக்காய் சில நிமிடங்கள்
ஒதுக்க முடியுமா?

அவன் கேட்கும் கேள்வி என்பது தெளிவாகத் தெரிகிறது. கதை மூன்றாம் நபருக்குச் சொல்லும் பாதையை விட்டு விலகி, வசனத்தை அடையும் போது வாசகர்களுக்குத் தெரியவேண்டிய நடையை கதையில் எந்த கமா போட்டுக்கூட கொடுக்கலாம். கவிதையில் அது அசாத்தியம். ஆனால் சொல்லவந்தது சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

மீண்டும் ஒருமுறை ரசித்த இடம், முதலில்-இதழில்.. அழகிய வார்த்தைக் கோர்ப்பு. ஆச்சரியம் விரிந்த அவள் முகத்தில் நாகரீகப் புன்னகை எழுந்தது. காதல் கயிறுகள் ஒன்றோடொன்று இணைவதற்கான அறிகுறிகள். அத்தோடு,

கதையாகச் சொல்லும்போது அந்த இடத்தில் யாராவது ஒரு கதாநாயகியைக் கற்பனித்து நாமாக விழிகளையும் புருவங்களையும் விரியவைக்கலாம். கவிதையில் அது அசாத்தியம். திறமை வேண்டும். அதுவும் இங்கே வாய்த்திருக்கிறது. (நான் முதலில் படித்தது கவிதை)

அந்த தேவதை ஒரு வினாடி ஒதுக்கியிருந்தால் கூட அது அவனுக்கு ஆயுள் காலம் தான்.. பின்னே எகிறிக் குதிக்காதா இதயமும் காதலும்?

தேநீர் வேண்டாம் என்றாலும் வெறும் நீர் வேண்டும் என்பதும் நாகரீகமே, முன்னே பின்னே தெரியாதவனோடு தேநீர் பருகுதலை அவள் தவிர்க்க முடியாமலும் முடிந்தும் இறுதியில் அவள் கேட்ட நீர் கூட அவளின் நாகரீகத்தையே சொல்லுகிறது. தேன் நீர் அருந்த அது தேநீர் ஆகும் என்பது அழகிய முரண். அவள் சிரித்த ஒலி அவன் காதுக்குக் கேட்டவிதம், அவன் அங்கே கவிதையை அவள் முன்னே வடித்துக் கொண்டிருக்கிறான் என்று பொருளாகிறது.

கைதட்டி வெற்றியென்று
விரலால் சைகை செய்தான்!

வெற்றி சைகை அவன் செய்த தேநீர் ஆர்டரில் மட்டுமல்ல, அவன் காதலிலும் உண்டு அல்லவா? அவள் சிரிப்பை வரமாகப் பெற்ற அவனுக்கு வெற்றி மிக அருகாமை தான் என்று சொல்லவேண்டும். (நமக்கு யாரும் இந்த மாதிரி முதலிலேயே சிரிப்பைக் காட்டமாட்டாங்க :( )

கவிதைப்படி மாற்றம் செய்தபடியால் சின்ன சருக்.. மன்மி சொன்ன கதையில் நாயகிக்குக் கூச்சம் மிகுந்து வீட்டுக்குச் செல்ல ஆசைப்படுவாள். ஆனால் அது இங்கே மிஸ்ஸிங். அவன் வீட்டுக்குச் செல்ல எழுந்ததும் நாயகன் தன் உதடு என்ன சொல்லவருகிறது என்று தெரியாமல்தான் உப்பு கொண்டு வாங்க என்று சொல்வான்.. அது கதையில் முக்கியமான தருணம். கவிதையில் இல்லாமல் போனது ஏமாற்றம்.

நீர்த்துளிகள் - நீர்பந்துகள். உருவகம் அருமை. கீழே விழுந்திடத் தயாராக இருப்பதால் தன் சோகத்தைச் சொல்லவருகிறான் என்பதை முன்கூட்டியே ஊகிக்க முடிகிறது. பின்னர் கவிதையில் மீண்டும் ஒரு சருக். மூன்றாம் நபருக்குச் சொல்வதைப் போல அவனின் ஃப்ளாஷ் பேக் சென்று அது முடியுமிடத்தில் தான் சொல்வதைப் போல முடித்திருப்பதும் கவிதையில் எதிர்பார்த்திராதது..

கடலோர கிராமத்திலே
உப்புக்காற்றின் வாசத்தில் பிறந்தவன்.

................ நீரினை ருசித்தவன்
...........

ஒவ்வொரு முறை
தேநீரில் உப்பினை போடும்போதும்
நான் ருசித்துக்கொண்டிருப்பது...

மேலே, உப்புக்காற்றின் வாசத்தில் பிறந்தவன்- நான் என்ற வார்த்தையாவது ஏதாவது இடத்தில் நுழைத்திருக்கவேண்டும். ஆனால் கடல் ஏன் இல்லாமல் போனது? பதிலாக, அங்கே வாழ்ந்த இல்லம் இல்லாமல் போகும்படி எழுதியிருக்கலாம். அவனது ருசி மாற்றப்பட்டதாகச் சொன்ன வரிகளும் அருமை. தேநீரை ருசிக்காமல் இழந்துபோன பால்யத்தை ருசிப்பது கவிதையின் உச்சம். சில சமயங்கள் எனக்கு பழைய பாடல்கள் (அதாவது நான் மிக இளம் வயதிலோ அல்லது ஏதோ ஒரு அனுபவத்திலோ எங்காவது ஒலித்துக் கொண்டிருந்த பாடல்கள்) கேட்கும் போதெல்லாம் அந்தப் பாடல்களின் வரிகளோ அல்லது இசையோ நான் ரசிக்கமாட்டேன். அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு வரும் நிகழ்வுகள்;ஞாபகங்களையே ரசிப்பேன்.. [சில சமயங்கள் தொண்டை அடைப்பதுண்டு.] சும்மாவா பாடிவைத்தார்கள் "ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்....."

அவனுள்ளிருந்த உப்புத் துளிகள் மேஜையில் படருவதும் கவிதை.. அவன் உண்மையிலேயே உப்பைக் காதலித்தவனாக இருப்பதால்தான் அவன் உள்ளிருந்த உப்பும் கண்ணீர் விட்டு தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போலும். அவள் நினைத்தது சரிதான். அவன் உண்மையான கணவனுக்கானத் தகுதிகளை வைத்திருப்பவன் தான். நிற்க, இங்கே அவன் அழுததால் ஆண்மை குறைந்ததாக கருதவேண்டியதில்லை. அவன் ஞாபகங்கள், இழந்த தன் பெற்றோர், இல்லம், குடும்பம், சொந்தம் என அத்தனையும் நெருக்கும்போது வலி தாங்காமல் கண்ணீர் வருவது இயல்பே.... கண்ணீர் இல்லாத மனிதன் மிருகத்திற்கு ஒப்பாவான்.

சங்கோசமில்லாமல் அவன் வாழ்வில் தினமும் உப்பு நீரைக் குடிப்பது, தன் காதலை தினமும் புதிப்பிப்பது போல, அவள் கொடுத்த உப்பு கூட தேநீரில் இனிப்பதும் இந்த காதலால்தானே! காதல் அனுபவித்தவர்களுக்குத் தெரியுமே!

கதைப்படி கடிதம் பேசவேண்டும், இங்கே இவன் பேசுகிறான். தவறில்லை. இதற்குப் பிறகு வரும் வரிகள் யாவும் வசன நடையில் இருப்பதால் கவிதைக்கான சில வார்த்தைகள் காணக் கிடைப்பதில்லை. ஒருவேளை இந்த "உப்பு" விசயத்தை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால், அவள் மன்னித்திருக்கக் கூடும், அவள் "இத்தனை நாளாக ஏன் குடித்தீர்கள்" என்று கேட்பதிலேயே தெரிகிறது.

அவன் சொல்ல வரும் போது தடுத்தது எது? ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்வாளா என்ற பயமும், தன்னை ஏமாற்றிவிட்டானே என்ற பயமுமாக இருக்கலாம். ஏனேனில் இந்தக் காதலில் அஸ்திவாரமே இந்த உப்புக் காபிதான், அதைக் கெடுக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.

தேநீரில் கலந்தது உப்பல்ல, நம் காதல் எனும்போது அவன் முழு காதலனாக அமரனாகிறான். அவள் காதலித்தது ஒரு சாதாரணக் காதலன் அல்ல. அடுத்த பிறவியில் மீண்டும் உப்புக் காபி, அவர்களின் காதல் மேல் அவன் எழுதும் கவிதை.

கவிதையில் பெருங்குறையே அதன் நீளம். ஆரம்பத்தில் எதுகை வார்த்தைகள் சுவாரசியாகப் படிக்க வைத்தன என்பதால் மீண்டும் அவ்வகை வார்த்தைகளைத் தேடத் துவங்குகிறது மனம். அல்லது முதலிலேயே இவ்வகைக் கையாடல்களைத் தவிர்த்திருக்கலாம். இறுதியில் க்ளைமாக்ஸ் வெறும் வசனத்தையே கொண்டிருக்கிறது.. சில வரிகள் குறைத்திருக்கலாம் கவிதைக்காக.. இது தீடீரென்று எழுதிய கவிதையாகத் தோன்றுகிறது. அதனால் சிறுசிறு சருக்கல்கள். அதையும் மீறி நிற்பது கவிஞரின் திறமை.

ஆனால் முழுக்கவும் நகல் எடுத்திருப்பதால் மற்ற கவிதைகளோடு இதை அருகில் கொண்டு சேர்க்க இயலாது. உங்களின் மற்ற கவிதைகளைப் படிக்கும் போது ஒவ்வொரு வரிகளும் கவிதையாக இருக்கும், இங்கே முழுமையும் இணைந்தால்தான் கவிதை என்று என் மனதிற்குத் தோணுகிறது. மற்றபடி இக்கதையைக் கவிதையாக்க நினைத்த உங்களுக்கு என்றும் என் வாழ்த்துகள்.

எகிறிக் குதித்த இதயம், தேன் அருந்தும் நீர், நூறுபுறாக்களின் ஒலி, தேநீருக்குப் பதில் பால்யத்தை ருசிப்பது, தேநீரில் கலந்த காதல் என சில இடங்கள் மொத்த கவிதையையும் தூக்கிச் செல்கின்றன.

இக்கதையில் நாயகன் போடும் வேடம், நல்லதா கெட்டதா என்று வாதிட முடிகிறது.. காதலுக்காகப் பொய் சொன்னவன் என்று சொல்வதா? இல்லை தடுமாற்றத்தால் விளைந்த மடத்தனமா? என்றாலும் அந்தப் பொய்யை அவன் ஒவ்வொரு முறையும் காபி குடிக்கும்போதெல்லாம் உணர்வானே? இந்த உண்மை என்றாவது அவளுக்குச் சொல்லவேண்டும் என்ற உந்துதல் மனதில் உறுத்திக் கொண்டே இருந்திருக்குமே.. ஏனெனில் அவன் இறுதியிலாவது இந்த உண்மை தெரியவேண்டும் என்று நினைக்கிறான்.. அவன் வாழும் காலத்திலேயே இந்த உண்மையை உணர்த்தவேண்டும் என்ற முடிவு எடுத்திருக்கவேண்டும்.

ஆனால் ஒரு விசயம், சில பொய்கள் உண்மையைக் காட்டிலும் மேலானவை, என்னைக் கேட்டால் இந்த பொய் முடிச்சை அவன் அவிழ்த்திருக்கவேண்டியதில்லை, ஆனால் அதை அவன் அவிழ்த்திருக்காமல் இருந்தால் அந்த டச்சிங் கிடைத்திருக்காது.

அவன் சொன்ன நிகழ்வுகள், தான் இழந்தவைகளை உப்பு மூலமாக நினைவு படுத்துதலை பொருத்தமான பொய்யாகச் சொல்லியிருக்கிறான். இல்லையென்றால் உடனே அவளுக்கு அவன் மீது காதல் பிறக்க வாய்ப்பில்லை.

இந்த நிகழ்ச்சி உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்திருந்தால் அதைவிட புனிதமான காதலை நான் வரலாற்றில் தேடித்தான் பார்க்கவேண்டும்.

காதல் இறந்தும் வாழ்கிறது.. இங்கே காதலர்களும் வாழ்கிறார்கள்.

ஷீ-நிசி
25-03-2008, 12:25 PM
நன்றி நம்பிகோபாலன்

------------------------------

நன்றி ஆதவா...
மிகப் பிரமாதமான விமர்சனம்...
எவையெல்லாம் நான் நிறையென்று நினைத்தேனோ, எவையெல்லாம் நான் குறையென்று நினைத்தேனோ... அவை யாவும் மிக அழகாக 100% சொல்லியிருக்கிறாய் ஆதவா....

இப்பொழுதெல்லாம் உன் விமர்சனத்தினை காண்பது மிக அரிதாயிருக்கிறது.

விமர்சனங்கள்தான் ஒரு கவிஞனை இன்னும் எழுது எழுது என்று உற்சாகப்படுத்துகின்றன.. துரதிர்ஷ்டவசமாக சமீபகாலமாய் நம் தமிழ்மன்றம் கவிதைகளை விமர்சிப்பதிலும், படைப்புகள் கண்டுகொள்வதில் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது.

நன்றி ஆதவா...

rocky
27-03-2008, 03:31 PM
அன்புள்ள ஷி.நிசி அவர்களுக்கு,

மன்மதன் அவர்களின் கதையையும் உங்களின் கவிதையையும் படித்தேன், மிகவும் அருமை, இதற்குமேல் நான் சொல்ல எதுவுமில்லை. ( அதான் ஏற்கனவே ஆதவன் வந்து சுத்தமாகத் துவைத்து, பிளிந்து, காயப்போட்டுவிட்டுப் போய்விட்டானே) ஆனால் இந்த கவிதையைப் படித்தவுடன் இதற்கு நேர்மாறான ஜெயகாந்தன் அவர்களுடைய கதை ஒன்று நியாபகம் வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

இந்தக் கவிதையில் வருவது போலவே ஒரு "சிறந்த" காதல்ஜோடிவாழ்ந்துவந்தார்கள். மிகவும் வயதான காலத்திலும் மகிழ்ச்சியாக உறையாடிக்கொண்டு இருந்த ஒரு பொழுதில் அந்தக் கணவன் விளையாட்டாக ஒரு பொய் சொல்கிறான், நீ கர்ப்பமாக இருந்த சமயத்தில் இந்த ஊரில் உள்ள விலைமாதுவிடம் நான் சென்றேன் என்று கூறி அவளின் அழகை வருனிக்கிறான், இதைக்கேட்டதும் நாற்பது ஆண்டுகள் அவனுடன் வாழ்ந்திருந்தாலும் அந்த மணைவிக்கு இது பொய் என்று உணரமுடியவில்லை, அதனால் அந்த கணவனை விட்டு விலகுகிறாள், அவனுடன் பேசுவதில்லை, அவன் எவ்வளவோ போராடியும் அது பொய் என்று கூறியும் அவள் அவனை முற்றிலும் புறக்கனிக்கிறாள். இது அவள் இறக்கும் தருவாயிலும் நடக்கிறது, அப்போது கிழவன் சொல்வான் இவள் என்னாடா என்னோடு குடும்பம் நடத்தினால் இவ்வளவுதானா என்னை இவள் புரிந்துகொண்ட லட்சனம் இவளுக்கு என்கையால் கொள்ளிகூட வைக்கமாட்டேன் என்று சொல்லிவிடுவான்.

இந்த இரண்டு கதைகளுமே என்னைப்பொருத்தவரை மிகச்சிறந்த கதைகள்தான், தன் காதலியிடம் தான் சொன்ன பொய்யை இறுதியில் சொன்னதும் முதல் கதையில் உள்ள காதல் நெகிழவைக்கிறது, ஆனால் இரண்டாம் கதையில் வாழ்வின் இருதியில் சொன்ன ஒரு பொய்யால் அவர்கள் காதல் அழிந்துவிடுகிறது. என்ன கொடுமை சார் இது.

ஷீ-நிசி
27-03-2008, 05:07 PM
நன்றி ராக்கி....

சூழ்நிலைகள்தான் பொய்யின் வலிமையையும் கூட தீர்மானிக்கின்றனவோ என்னவோ?!

kavitha
11-04-2008, 11:15 AM
மன்ஸ், ஷீ-நிசி இருவரும் சேர்ந்து கலக்கிய உப்புத்தேநீர் இனிக்கிறது. நன்றி.

ஷீ-நிசி
11-04-2008, 02:09 PM
மன்ஸ், ஷீ-நிசி இருவரும் சேர்ந்து கலக்கிய உப்புத்தேநீர் இனிக்கிறது. நன்றி.
நல்ல முரண்....

நன்றி கவிதா....

அறிஞர்
11-04-2008, 03:55 PM
வாவ் மன்மதனின் கதை உள் வாங்கி..
கவிதையாய் வடித்தவிதம் அருமை ஷீ.....
கவிதா சொல்வது... போல்
உப்பு தேநீர்... இனிமையாக உள்ளது...
வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி
13-04-2008, 01:29 AM
நன்றி அறிஞரே!