PDA

View Full Version : மீண்டும் கல்வாரி...!இளசு
19-03-2008, 11:16 PM
மீண்டும் கல்வாரி...!

முன்பொருமுறை வந்தேன்..
தந்தை சொன்ன வழி சொன்னேன்..
கேட்டவர்கள் பலர்..
பயந்து வெறுத்தவர்கள் சிலர்..

முடிவில் கிடைத்தவை:
முள்ளில் கிரீடமும்
உள்ளங்கை ஆணியும்
சிலுவையில் மரணமும்..

மீண்டுமொருமுறை வந்தேன்..

அன்பின் பாலையாய்
அவசர நுகர்வாய்
அலையும் மனிதக்கடல்..

குரலெழுப்பினேன்..
கூச்சலில் அழுந்தினேன்..
விரையும் கூட்டத்தின்
கரைச்சலில் கரைந்தேன்..


நிசி கவிழ்ந்தது..
நிசப்தம் நிறைந்தது
பாதையோரம்..
பனியும் நானும்..

செவிகொடுத்துக் கேட்டு
பலிகொடுத்த கல்வாரியே மேல்..

கதறி அழுதேன்..
காற்று மட்டும் கூட அழுதது..

meera
20-03-2008, 05:39 AM
மீண்டும் கல்வாரி...!

மீண்டுமொருமுறை வந்தேன்..

அன்பின் பாலையாய்
அவசர நுகர்வாய்
அலையும் மனிதக்கடல்..

குரலெழுப்பினேன்..
கூச்சலில் அழுந்தினேன்..
விரையும் கூட்டத்தின்
கரைச்சலில் கரைந்தேன்..


நிசி கவிழ்ந்தது..
நிசப்தம் நிறைந்தது
பாதையோரம்..
பனியும் நானும்..

செவிகொடுத்துக் கேட்டு
பலிகொடுத்த கல்வாரியே மேல்..

கதறி அழுதேன்..
காற்று மட்டும் கூட அழுதது..

அண்ணா இதை ஏன் பண்பட்டவர் பதிவில் பதித்தீர்கள்??

மேலும் எனக்கு இந்த கவிதை பாதிக்கு மேல் புரியவில்லை.
விளக்க முடியுமா? கேள்வி தவறென்றால் மன்னிக்கவும்.

சிவா.ஜி
20-03-2008, 06:08 AM
ஆண்டவரின் மகன்...அன்பைச் சொல்லவந்தபோது சிலுவையேற்றி முடிவைக்கொடுத்த கல்வாரி மலை....

அதே அன்பை உரைக்க மீண்டும் வந்தும்.....காதுகொடுத்துக்கேட்க யாருமில்லாமல்...
விரும்பியோ,விரும்பாமலோ...சொன்னதை செவி கொடுத்துக்கேட்ட கூட்டமிருந்த கல்வாரியே மேலென கதறி அழுகிறார்.....

இளசுவின் மூன்றுவரி கையெழுத்து முழுக்கவிதையாய் முகிழ்த்திருக்கிறது.

அன்பை மறந்தக் கூட்டம்...ஆண்டவனை அடையாளம் காணுமா....

வலியோடு பாராட்டுகிறேன் இளசு.

aren
20-03-2008, 06:27 AM
இளசு அவர்களே, கொஞ்சம் புரிந்தது முதலில். சிவா அவர்களின் விளக்கத்திற்குப் பிறகு நன்றாக புரிகிறது. கவிதையின் ஆழமும் விளங்குகிறது.

பாராட்டுக்கள் இளசு அவர்களே.

இளசு
20-03-2008, 07:39 AM
மீரா

சிவாவின் முழுவிளக்கம் கச்சிதமாய் கவிப்பொருள் சொல்கிறது!
இன்று மகான்கள் அவதரித்தாலும், அலட்சியப்படுத்தப்பட்டுவிடுவார்களோ
என்ற அச்சமே- இங்கே இப்படைப்பாய்!

புனிதவெள்ளிக்காய் கையெழுத்தை மாற்றும்போது சட்டென உதித்தது!

நன்றி சிவா..அப்படியே என் மன ஓட்டம் முழுதும் படம் பிடித்த பின்னூட்டம்!

பண்பட்டவர் பகுதியில் ஏன் பதித்தேன்?

இயேசு மீண்டும் வந்தும் யாரும் கண்டுகொள்ளா நிலை என்பது - கவிதைக் கரு. மனித இனத்தையே புண்படுத்தக்கூடிய கரு. கொஞ்சம் கவனமாய் நாம் கையாளவே இங்கே பதித்தேன்.

இன்று யோசித்தால் கவிதைகள் பகுதியில் பொதுவில் பதித்திருக்கலாம் எனத் தோணுகிறது..

முடிவு பொறுப்பாளர்களிடம் விட்டுவிடுகிறேன்.

அன்பின் ஆரென்

உங்கள் அழகான பின்னூட்டத்துக்கு நன்றி...

அனுராகவன்
20-03-2008, 08:08 AM
நன்றி இளசு மற்றும் சிவா.ஜிக்கும் ..
என் நன்றி தொடருங்கள்

அக்னி
20-03-2008, 09:14 PM
கவிச்சமரில் நான் எழுதிய ஒரு கவிதை நினைவில்...

இயேசு..!
அன்று,
சிலுவை சுமந்தார்...
எமக்காக...
உயிர்த்தெழுந்தார்...
எமை மீட்க...
இன்று..,
உயிர்த்தெழுந்தவரை
அழைத்துவந்து,
நிரந்தரமாய்
அறைந்துவிட்டோம்
நாம் வணங்க...
இறைவனையும் இனங்காண முடியாது, மனித மனங்கள் மரத்துப் போன நிலையில், நவயுகம்...
மனிதன் மாறவேண்டும் என்று உணர்த்தும் இக்கவிதை பொதுவில் இருப்பதே நன்று என்று எண்ணுகின்றேன்...

எம் நிலையை உணர்த்தி வெட்கித் தலைகுனிய வைக்கின்றது கவிதை...

வியர்வை
அன்று குருதியாய்த் துளிர்த்தது...
துடைக்க யாருமில்லை...
இன்று நினைக்கவே யாருமில்லை...

இளசு
20-03-2008, 09:45 PM
நன்றி அனு

அக்னியின் மனத்திராவகம் தெறித்த பின்னூட்டம்.
இப்படைப்பின் கருத்தை இன்னும் ஆழமாய் இறக்கிய கவிச்சமர் விள்ளல்..

சபாஷ் அக்னி!

(இதைப் பொதுவில் மாற்ற என் முழுச் சம்மதம்..)

செல்வா
20-03-2008, 11:35 PM
காலத்திற்கேற்ற கவிதையண்ணா....
இன்று ஏசு வந்தால் என்ற தலைப்பில் நான் எழுதிய நாடகம் ஒன்று நினைவுக்கு வருகிறது...
அது ஒரு போட்டிக்காக எழுதப்பட்டது....
பலரும் அவர் ஒரு இந்துவுக்கும் முஸ்லீமுக்கும் மகனாகப் பிறப்பர்... தீவிரவாதத்தை ஒழிப்பார் என காட்டும் போது
நான் அவரது கருத்துக்கள் அவரைப் பின்பற்றுபவர்களாலேயே புறக்கணிக்கப் பட்டதைக் காட்டினேன்...
அன்றைக்கும் இன்றைக்கும் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை... அறிவியல் வளர்ச்சி தவிர
அன்றைக்கிருந்த சாதி வேற்றுமைகளும்
ஏழை பணக்காரன் ஆண்டான் அடிமை
மதக்குருமார்களின் ஏமாற்று அனைத்தும் அப்படியே...
அதோடு கூட அவரைப் பின்பற்றுபவர்கள் அவர்களுக்குள்ளே
சண்டையிட்டு அவர் கூறியதை காற்றில் பறக்கடித்த நிலையை கண்டு
பொங்கி எழுந்து என்னை வணங்க நான் யாரையும் சொல்லவில்லை
என்னை வைத்து மதத்தை வளர்க்கச் சொல்லவில்லை
மனிதத்தை வளர்ப்பீர் என்று சொல்லி ஆலயங்களை உடைப்பதாக முடித்திருப்பேன்......
கூட்டத்திலும்.... நடுவர்கள் மத்தியிலும்... சற்று அதிர்வலைகளை ஏற்படுத்தியது அந்த நாடகம்.........
அதிரடியாகச் சொல்லாமல் ... அதே கருத்தை அமைதியாகச் சொல்லிச் செல்லும் உங்கள் கவிதை...........

ஆனால்.... என்னைப் பொறுத்தவரை ஏசுவோ யாருமே மீண்டும் பிறக்க வேண்டிய அவசியமில்லை ... அவர் வந்து என்ன சொல்லவேண்டுமோ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்துவிட்டார்... அதோடு மட்டுமின்றி இன்னும் என்ன என்ன மனித குலத்திற்கு அறிவுரைகளும் நீதிக்கதைகளும் ... எதற்குமே பஞ்சமில்லை ... எதுவுமே புதிதாகச் சொல்ல யாரும் வரவேண்டியதில்லை ... மனிதன் மனிதத் தன்மையுடன் நடந்து கொண்டால் போதும். தன் அறிவை ஆக்கத்துக்கு பயன்படுத்தினால் போதும்

meera
21-03-2008, 11:15 PM
நன்றி சிவா அண்ணா விளக்கம் அருமை.புரிந்தது கவிதை.

அழகிய கவிக்கு என் வாழ்த்துகளும் நன்றியும் இளசு அண்ணா

பூமகள்
06-04-2008, 08:17 AM
கவிக்கரு படித்ததும் ஓரளவு புரிந்தது.. சிவா அண்ணாவின் தெள்ளிய விளக்கம் இன்னும் தெளிவாக்கியது.

அன்பின் பெரியண்ணாவின் மீண்டும் கல்வாரி கவிதை வேற்றுக் கோணத்தில் சிந்திக்க வைத்தது.

விரைவான வாழ்க்கையில்
விதையாக முளைக்கும்
வேந்தர்களை காணத்
தவறிடும் சமூகத்திற்கு சாடல்..!!

இயற்கை அன்பினை
செயற்கை குழாய்களில்
சுத்தீகரித்து உள்வாங்கும்
நிலையிலா இன்று நாம்??

சிந்திக்க சிந்தியது
கண்களில் கண்ணீர்..!!
உந்தியது புது
வெளிச்சம்..!!
மகான்களினை
அடையாளம் காண
அறிய வைப்போம்..
எல்லாரும் மகான் எனில்
இக்கவலை வராதே..!
இன்றைய விதைகளை
செதுக்குவோம் - நாளை
நல்விருட்சங்களை
உருவாக்குவோம்..!!

--------------
அழகிய கவிதை தந்தமைக்கு நன்றிகள் பெரியண்ணா. :)

lenram80
07-04-2008, 02:16 AM
மரங்கள் சொன்னதாம்
"நாங்கள் எத்தனை சிலுவைகள் கொடுத்து விட்டோம்-
மனிதர்களே! நீங்கள் ஏன் ஒரு இயேசுவை மீண்டும் கொடுக்கவில்லை?" -(வாலியின் படைப்பு)

இளசு சொன்னது போல, எத்தனை இயேசுககள் இங்கெ இருக்கிறார்களோ!

மனிதர்களின் நடுவே இறைவனை காணும் இளசுவே, பாராட்டுக்கள்!!!

சாலைஜெயராமன்
07-04-2008, 04:32 AM
அருமை திரு இளசு.

ஒப்பற்ற உலக மகாத்மாக்கள் உலா வரும்போது உதாசீனம்தான் அவர்கள் கண்டது. ஏனெனில் மனத்தின் மாசுகளால் நாம் எதிர்பார்க்கும், கற்பனை செய்து வைத்திருக்கும் கதாபாத்திரத் தோற்றத்தில் மகான்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. நம் எண்ணத்தில் வடித்து வைத்த கற்பனையான உருவங்களைக் கண்டாலும் நாம் அவர்களை ஏற்கப் போவதில்லை. அறிவின் முழு முயற்சியே நம்மைச் சுற்றியுள்ள நன்மையை அறிந்து கொள்வதுதானே. நம்மிடமே உலாவி இருக்கும் பெரியோர்களை நாம் எப்போதும் அறிந்து கொள்வதில்லை. அவர்கள் மறைவுக்குப் பின்தான் போற்றிப் புகழுகிறோம். இதுவும் ஒரு அறியாமையே,

உதாரணமாக ஒரு குளத்தில் உள்ள தாமரைக்கு அதிகச் சொந்தம் அதில் அதனோடு வாழும் மீன்களும் தவளைகளுமே. ஓடி விளையாடி தாமரை பூத்ததிலிருந்து அதிக நெருக்கத்துடன் உள்ள இந்த ஜீவன்களுக்கு தாமரையின் உள்ளே இருக்கும் தேனின் சுவை தெரியாது. காலமெல்லாம் அதனோடு புரண்டு புழங்கி இருந்தாலும் அறிந்து கொள்ளாத அந்த ஜீவனக்ள் அறியாமையின் அடையாளங்கள். ஆனால் தாமரை முதிர்ந்து பூத்துக் குலுங்கி Divine Nector ஆகிய தேனை சூலில் சுமந்து இருக்கும் குணம் கண்டு எங்கோ பிறந்து வளர்ந்த தேனிக்கள் தான் அதைப் பெறுவதற்கு தகுதியாகிறது. என்னதான் தவளையும், மீனும் தாமரைக்கு சொந்தம் கொண்டாடினாலும் முடிவு பலனான தேன் என்னவோ அறிவுடைய தேனீக்களுக்குத்தான்.

நுண்ணிய நுண்ணறிவு கொண்டு நோக்கும்கால் நம்மிடையே புழக்கத்திலிருக்கும் பெரியோர்களை அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் தேனின் சுவையை பெறத் தகுதியுடையோர்கள்தான் உண்மையான அறிவாளிகள். மற்ற உலகப் படிப்பாலும், பொருளாதாய வெற்றியாலும் அறிஞர்களை உதாசீனப்படுத்துபவர்கள் தவளைக்கும் மீனுக்கும் ஒப்பானவர்களே.

உதாரணமாக கிருஷ்ண பரமாத்மாவே நேரில் குண்டத்தோடும் மயில் இறகு வைத்த கிரீடத்தோடும், கையில் குழலோடும் இன்று நேரில் வந்தால் நிச்சயம் நகைப்புக்கும் கேலிக்கும் ஆளாகி வெருண்டு அவரை அதிகமாக கோவில்களில் தேடும் ஹிந்துப் பெருமக்களால் ஓடவைக்கப்படுவார்.

இயேசுநாதர் இன்று வந்தால் அவரிடம் அற்புதங்களை எதிர் பார்த்து சொந்தம் கொண்டாடும் அனைத்து மக்களாலும் சாத்தியமே அற்ற செயல் படுத்தமுடியாத அதிசயங்களை எதிர்பார்த்து அவரைப் புறக்கணிப்பார்கள்.

ஆனால் இயேசு பிரான் தனது இரண்டாம் வருகையை உலகத்திற்கு அறிவித்து இருக்கிறார். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற வேத வசனம் நிறைவேற வேண்டுமானால், அவரிடம் அதிசயங்களை எதிர்பார்ப்பதை விட்டு அன்று காட்டிய அந்த மனித நேயமும் அன்பையும் நம்மிடையே தேடினால் அவர் நிச்சியம் கண்ணில் படுவார். ஏனெனில் அவர் மரணிப்பதுமில்லை மறைவதும் இல்லை. நித்திய ஜீவனான அறிவாகரப் புதையலிலே அவர் என்றும் மறைந்து வாழ்வளித்துக் கொண்டிருக்கிறார்.

கிருஷ்ணன் என்பதும் கிருஸ்து என்பதும் ஒரு ஒப்பற்ற உயிர் ஆற்றல்.
மனத்துக்கண் மாசற்ற ஒரு நிலையை உருவகமாக்கப் பெற்ற ஒரு குணத்தின் பிரதிபலிப்பு. அக் குணங்கள் வாய்க்கப் பெற்றால் நாமே ஒரு கிருஷ்ணன்தானே, கிறிஸ்துதானே. கிருஷ்ணனாக அரிதாரம் மட்டும் பூசாமல் அவர்களுடைய ஒப்பற்ற குணங்களைக் கைக் கொள்ளும்போது மனிதனே இறைவனாகிறான்.

அல்லவை தேய அறம் பெருகும்
நல்லவை நாடி இனிய சொலின்

நாம் பிறந்தபோது குற்றம் குறையற்ற இறைநிலையுடன் கூடிய அறமாகத்தானே பிறந்தோம். அறம் என்ற பொருளோடு பிறந்த நாம் வயது ஏற ஏற மறச் செயல்களால் அறம் மறைய குணம் கெட்ட குடிமக்களானோம்.

அறம் என்ற போர்வையில் எந்த தான தர்மங்களும் தேவையில்லை. நம்மிடம் உள்ள மறம் என்ற தீமைகளை என்னஎன்ன என்று அறிந்து அதை நீக்கிக் கொண்டாலே பிறந்த போது இருந்த அறமாகவே மரிக்கும்போதும் இருப்போம். அவ்வாறு குற்றங்களை நீக்கிக் கொண்டவர்களே கிருஷ்ணனும், கிருஸ்துவும் மற்றும் எண்ணற்ற உலகில் தோன்றிய உத்தம உருவங்கள்.

மறத்தை அறிந்து நீக்கிக் கொள்ளும் உபாயமே அறம் எனப்படுவது. அதற்கு முதலில் மனத்துக் கண் மாசிலன் ஆதல் என்ற நிலையை அடைதலே அனைத்து அறனுமாகும்.

அப்படிப்பட்ட அவதார புருஷர்கள் நிச்சயம் நாம் கற்பனையாகப் பார்க்கும் உருவத்தில் உலா வரமாட்டார்கள்.

புனிதர் இயேசுவை நம்மிடையே தேடுவோம்,

நல்ல சிந்தனையைத் தூண்டிய கவிதை தந்தமைக்கு நன்றிகள் பல திரு இளசு அவர்களே.

நாகரா
07-04-2008, 06:10 PM
இளசுவின் கவிதை அருமை, சிவா, அக்னி, செல்வா, பூமகள், லெனின் இவர்களது பின்னூட்டங்களும் அருமை, ஐயா சாலை ஜெயராமனின் பின்னூட்டம் அருமையிலும் அருமை, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

"கிறிஸ்து அவன்(ள்)" என்று போற்றும் படி இறை மகனா(ளா)ய் இயேசுவைப் போல் வாழ்பவனே(ளே) உண்மையான கிறிஸ்தவன்(ள்). அவ்வாறு நம் ஒவ்வொருவராலும் வாழ முடியும் என்று நம்புவோம், வாழ்ந்து காட்டுவோம், அதுவே உண்மையில் கிறிஸ்துவின் இரண்டாவது வருகை.

ஊளைக் கும்பிடு போட்டு நாளைக் கடத்தும் மதம் பிடித்தோராய் நலிவதை விட்டு, அன்பெனும் நியதியில் மனந்திரும்பி அன்பே சிவமாய் வாழ்வோம். அதுவே நம் ஒவ்வொருவரின் உயிர்த்தெழுதல்.

கிறிஸ்துவாய் நீ சிவமாம் பரமபிதாவில் அடங்கு, அவ்வாறு அடங்க உனக்குப் பரிசுத்த ஆவியாம் சக்தியின் அருட்கிருபை உண்டு, அடங்காப் பிடாரியாய்த் தான் நான் இருப்பேன் என்று நீ அடம் பிடித்தால், நீ நரகில் உழலும் ஒரு நடைப் பிணமே!

மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது.
வன்பை விட்டு அன்பின் கண் மனந்திரும்பு மனிதா, இன்றே, இப்போதே!

மனோஜ்
07-04-2008, 09:13 PM
கல்வாரி அன்பை ஒருமுறைகூட சிந்திக்க வைத்த அன்புஇளசு அண்ணாவிற்கு மிக்க நன்றி
அனைவரது கருத்துகலும் மிக சிறப்பு

அறிஞர்
08-04-2008, 03:12 AM
இன்று தான் படித்தேன்..

அருமை... இளசு...

முன்பொருமுறை வந்தேன்..
தந்தை சொன்ன வழி சொன்னேன்..
கேட்டவர்கள் பலர்..
பயந்து வெறுத்தவர்கள் சிலர்..

முடிவில் கிடைத்தவை:
முள்ளில் கிரீடமும்
உள்ளங்கை ஆணியும்
சிலுவையில் மரணமும்...


பைபிளின் படி...
இயேசுவின் முதல் வருகை.... கடவுளுடைய எல்லா தன்மைகளையும் (தெய்வீகத்தை) மனித உருவில் காட்டுவதாக அமைந்தது.

அதை போல் இன்று தெய்வீகத்தை, மனித உருவில் காட்டவேண்டியது கிறிஸ்துவை மதிக்கும் ஒவ்வொருவரின் கடமை....அன்பின் பாலையாய்
அவசர நுகர்வாய்
அலையும் மனிதக்கடல்..

குரலெழுப்பினேன்..
கூச்சலில் அழுந்தினேன்..
விரையும் கூட்டத்தின்
கரைச்சலில் கரைந்தேன்..


நிசி கவிழ்ந்தது..
நிசப்தம் நிறைந்தது
பாதையோரம்..
பனியும் நானும்..

செவிகொடுத்துக் கேட்டு
பலிகொடுத்த கல்வாரியே மேல்..

கதறி அழுதேன்..
காற்று மட்டும் கூட அழுதது..

சிலுவை மொழிந்த மொழிகளில் ஒன்று "தாகமாயிருக்கிறேன்".
அன்றைக்கு அவருக்கு சிலுவையில் இருந்த தாகம்... இன்று நிவர்த்தியாகியதா.. என்றால் கேள்விக்குறியே....

அதே கேள்விக்குறி.. தங்கள் கவிதை வடிவிலும் ஒலிக்கிறது.
----------------

கமல் தனது.. படத்தில் சொல்வது... போல எல்லாரும் கடவுளாகலாம் (ஜீவன், சுபாவத்தில். ஆனால் கடவுளின் தலைமைக்கு நிகராக மாற இயலாது).

கடவுளுடைய குணாதிசியங்களை மனித உருவில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தினால்.... உலகில் அனைத்தும் சிறப்பாக அமையும்.

kavitha
17-06-2008, 09:49 AM
நாம் பிறந்தபோது குற்றம் குறையற்ற இறைநிலையுடன் கூடிய அறமாகத்தானே பிறந்தோம். இதை பைபிளும், கிறிஸ்தவமும் ஒப்புக்கொள்ளவில்லை சாலை அண்ணா. அன்னை, தந்தை வழி வந்த பாவங்கள் போக நாம் கழுவப்படவேண்டும் என்கிறது.
உயிர்ப்படைப்பின் ரகசியத்தை விதிகள் மீறி அறிந்த பாவம், இன்றும் சூழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.


அன்பின் பாலையாய்
அவசர நுகர்வாய்
அலையும் மனிதக்கடல்..
இன்றைய நிலையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா.
தொடர்ந்த அக்னி அவர்களின் குறுங்கவிதை, பூமகளின் பா, வாலியின் வரிகளை எடுத்துச்சொன்ன லியோமோகன், செல்வா, சாலை அண்ணா, நாகரா, அறிஞர் மற்றும் அனைவரின் பரந்த பதிவுகள் .... தாமதமாக இப்பதிவினைப்படித்ததிலும் பல விசயங்கள் அறியமுடிந்தது. அறிஞருக்கு நன்றிகள்.

இக்பால்
17-06-2008, 11:12 AM
பிரிவை மறக்க வைக்கும் இன்னுமொரு பதிவு. இன்னுமொரு உறவு.

ஒவ்வொரு சொல்லும் புரிந்ததென்றால் மிகையல்ல.

காற்று மட்டுமல்ல...கடன் பட்ட மன்றமும்தான் உங்களுடன் இளசு.

என்றும் தொடருங்கள்.

-அன்புடன் இக்பால்.

சாலைஜெயராமன்
24-06-2008, 05:48 PM
சகோதரி கவிதாவின் சிறப்பான பின்னூட்டம் கருத்தின் ஆழத்தை இன்னும் கனமுடன் நோக்க வைக்கிறது.

இளசு
08-07-2008, 05:46 AM
மிக நல்ல பின்னூட்டங்களிட்டு இத்திரியைச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி..

மிக அனுபவபூர்வமாய் சொன்ன செல்வா
பூமகளின் அன்புக் கண்ணீர்க் கவிதை
லெனினின் மேற்கோள் கவிதை
அழகாய் விமர்சித்த அறிஞர்
கவீயின் சிந்தனைத் தெறிப்பு
அன்பு இக்பாலின் நெகிழ்வு...

முத்தாய்ப்பாய் சாலை & நாகரா ஆகியோர்..

நம் மதிப்புக்குரிய நாகரா அன்பு வற்றிய நிலையை இங்கே கேள்வியாக்க
நமது சாலை அய்யா அவர்கள் ஒரு ஆழ்ந்த பதிவை பதிலாக்கிய சிறப்பைப் படியுங்கள் :

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=363901#post363901