PDA

View Full Version : பனி விழும் கொலை வனம்...!சிவா.ஜி
18-03-2008, 12:33 PM
பதினெட்டாயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்திருந்தது அந்த ராணுவத்தளம்.சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சனையில் இருக்கும் சியாச்சின் மலைப் பிரதேசம்.ரோஜாத் தோட்டம் என்று அர்த்தம்...ஆனால் அபாயம் நிறைந்த,எதிரிகளின் ஊடுருவல் அதிகமாக நிகழக்கூடிய சென்ஸிடிவ் பகுதி.முருகைய்யா.....தருமபுரி மாவட்டத்தின் ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவன்..சர்வீஸில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆகிறது.சமீபத்தில்தான் இந்த இடத்துக்கு மாற்றலாகியிருந்தான்...அவுல்தார் அவனுடைய பதவி.மேஜர் கன்னாவின் குழுவில் அவருக்கு நம்பிக்கையான வீரன்.

கையில் இருந்த வெள்ளை உலோக கோப்பையில் தேநீர் இருந்தது.ஒரு மடக்குக்கு ஒரு முறை சூடு படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.அத்தனைக் குளிர்.இங்கு வருவதற்குமுன் உடனிருந்த நன்பர்கள் நிறைய சொல்லியிருந்தார்கள்...இந்த பிரதேசத்தின் குளிர் பற்றியும்....ஆபத்துகள் பற்றியும்.சண்டையில் இறந்தவர்களை விட பனிப்பொழிவிலும்,நிலச் சரிவிலும்,கடுமையான குளிரிலும் இறக்கும் வீரர்களின் எண்ணிக்கைதான் இங்கே அதிகம் என்று.ஆனால் ஒரு உண்மையான கீழ்படிதல் உள்ள வீரனாய் எதைப்பற்றியும் அச்சப்படாமல்...இங்கே வந்திருந்தான்.

இங்கு வந்து பார்த்தப் பிறகுதான் இவனைப்போல எத்தனையோ பேர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக காவல் இருப்பதைப் பார்த்துவிட்டு...இவனும் அவர்களில் ஒருவன் என்ற பெருமிதத்தை அடைந்தான்.மிகச் சிறிய கூடாரங்கள்...அதுவும் அக்டோபர் மாதங்களில் பணிப்பொழிவில் பூமிக்கு அடியில் போய் விடும்.ஒரு ஆள் மட்டும் நுழையக்கூடிய வகையில் பேரல்களால் ஆன சுரங்கப்பாதை போன்ற வழியில்தான் அந்த கூடாரங்களை அடையவேண்டும்.இதற்குள்தான் எட்டு பேர் வசிக்க வேண்டும்.கெரசின் ஸ்டவ்தான் பல விஷயங்களுக்கு உதவுகிறது.பனியை உருக்கி குடிநீராக்குவதற்கும்,கூடாரத்துக்கு வெளிச்சம் மற்றும் கதகதப்பைத் தருவதற்கும் அந்த ஸ்டவ்தான் துணை.

சரேலென்று இறங்கும் அபாயமான சரிவுகளில்...கொஞ்சமும் பயமின்றி ஆடு மேய்க்கும் சிறுவர்களை ஆச்சர்யத்துடன் பார்ப்பான்.அவர்கள்தான்...இந்திய ராணுவத்தினருக்கு நம்பகமான தகவல் தரும்....உளவாளிகள்.எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனித்து உடனுக்குடன் தகவல் சொல்லி விடுவார்கள்அப்படி ஒரு சிறுவனிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில்தான்...முருகய்யாவும்,இன்னும் சில ஜவான்களும்...அந்த இடத்துக்குப் போனார்கள்.யாரையோ எதிர்பார்த்து....மறைந்திருந்தார்கள்....வெப்பமான மூச்சுக்காற்றால் மீசை முடியில் உருவான..ஐஸ் கட்டிகளை அடிக்கடி உடைத்துக்கொண்டு காத்திருந்தார்கள்....

கொஞ்ச நேரத்தில் ஒரு உருவம் மிக மிக மெதுவாக...அசாதரணமான...ஜாக்கிரதை உணர்வுடன்...மெள்ள முன்னேறி வந்து கொண்டிருந்தது.தெளிவாகத் தெரியாததால்...ஆளை அனுமானிக்க முடியவில்லை....கிட்ட நெருங்கியதும்...ஒரே பாய்ச்சல்...தரையில் கிடத்தி..கைகள் இரண்டையும் முதுகுக்கு கொண்டு வந்து விலங்கிட்டார்கள்.பின் அப்படியே கொத்தாக தூக்கி நிறுத்தியதும்தான் தெரிந்தது அது ஒரு பெண்.நல்ல திடகாத்திரமாக இருந்தாள்.பஞ்சாபிப் பெண்களுக்கே உரிய நல்ல உயரம்....வலுவான உடல்.அடிக்கடி அந்தப்பக்கத்திலிருந்து இங்கே ஊடுருவும் எதிரிகளில் பெண்களும் இருப்பார்கள்.இவர்கள் ஆண்களை விட அழுத்தக்காரர்கள்...சாமான்யமாக அவர்களை பேச வைக்க முடியாது.

முதல் வேலையாக அவளை முழுச் சோதனை செய்து...வெடிகுண்டு எதுவும் அவள் வைத்திருக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு...காலில் கட்டி வைத்திருந்த கத்தியை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு...கூடாரத்துக்கு அழைத்து வந்தார்கள்.மேஜர் கன்னா...கீழே இருந்த மற்றொரு பேஸ்(BASE)க்கு போயிருந்ததால்..அவரைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லியதும்,உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னார்.அவர் வரும் வரை அவளை பத்திரமாக...நாற்காலியோடு சேர்த்து கட்டி வைத்தார்கள்.ஒரு அலட்சிய புன்முறுவல் அவள் உதட்டில் ஓடிக்கொண்டிருந்தது....ஜவான்களைப் பார்த்து கேலி செய்வதாய் அது இருந்தது....அது கொடுத்த எரிச்சலில்...ஒரு ஜவான்..பளிச்சென்று அவள் முகத்தில் அறைந்தான்.அதற்கெல்லாம் அசராத உறுதியுடன் ஏதோ முணுமுணுத்தாள்.....க்யா போல்த்தியே தூ குத்தி....என்ன முணுமுணுக்கிறாய் நாயே..என்று மறுபடியும் அவனே அறைந்தான்...இப்போது சத்தமாக பஞ்சாபியில்....அந்தர்கே கல் நை குலா சக்தே.....எனக்குள்ள இருக்கற எந்த தகவலையும் உங்களால வெளியே எடுக்க முடியாது என்று இரைந்தாள். ஓ பி தேக்லேங்கே..சாலி...அதையும் பாத்துடலாம்...என்று மீண்டும் அடிக்கப் போனவனை முருகையா தடுத்து...மேஜர் வரும் வரை அவளை எதுவும் செய்ய வேண்டாம்..என்று சொல்லிவிட்டு அவளுக்கருகில் இரண்டு ஜவான்களை நிற்கச் சொல்லிவிட்டு...வெளியே வந்தான்.மேலும் சில ஜவான்களை அழைத்து கூடாரத்துக்கு காவல் வைத்துவிட்டு தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு கிளம்பிப்போனான்.மேஜர் வருவதற்குள் திரும்பிவிடலாமென்று நினைத்துக்கொண்டு.

மேஜர் கன்னா வந்ததும்....நேரே அவளைக் கட்டி வைத்திருந்த கூடாரத்துக்குள் நுழைந்தார்.அவரும் பஞ்சாபி என்பதால்...அவளை பஞ்சாபியிலேயே விசாரித்தார்....எந்த பலனும் இல்லை.வாயைத் திறக்கவே இல்லை.தனது இராணுவ முறையைப் பிரயோகித்தார்...எந்த மாற்றமும் இல்லை.தவ நிலையில் அமர்ந்திருக்கும் யோகியைப் போல அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.அப்படி அவள் அமர்ந்திருந்தது அவரை இன்னும் ஆத்திரப்படுத்தியது....ரைஃபிள் பிடித்துக் காய்த்துப்போயிருந்த.அந்த வலுவான கைகளால் ரப் பென்று அவள் கன்னத்தில் அடித்ததில்...விரல் நகம் கண்னில் பட்டு கீழிமை கிழிந்து ரத்தம் வந்தது....சிவந்த கண்ணம் மேலும் சிவந்து விரலடையாளங்களை வெளிக்காட்டியது.அதற்கும் அசையாமல் தலையை மட்டு சாய்த்து தோள்பட்டையால் வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டாள்.

வெளியே சின்னதாக ஒரு சலசலப்பு....தபால் கொண்டு வரும் நாய் வந்திருந்தது...உண்மையாகவே நாய்தான்.அந்த மலைப்பிரதேசத்தில் ஏறி வந்து குறிப்பிட்ட இடத்தில் தபால்களை சேர்க்குமாறு அந்த நாயைப் பழக்கியிருப்பார்கள். தற்காலிகமாக அவளை அந்த ஜவான்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்த கன்னா...தபால் பையைப் பிரித்துக்கொண்டிருந்த ஜவானைப் பார்த்து...என் பெயருக்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்.புரட்டிப் பார்த்துவிட்டு...நஹி சாப் என்றான்.
மீண்டும் உள்ளே வந்த கன்னா....கண்ணாலேயே அந்த ஜவான்களைப் பார்த்து ஏதாவது சொன்னாளா என்று கேட்டார். நஹி சாப்...மணி எத்தனை என்று மட்டும் கேட்டாள். என்று ஒருவன் சொன்னதுமே...அவருக்கு இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று தெரிந்தது.மீண்டும் அவளிடம் போய் சொல் எதற்கு மணி கேட்டாய்...யாரை எதிர்பார்க்கிறாய்...அல்லது ஏதாவது நிகழ்த்த நேரம் குறித்திருக்கிறீர்களா...என்று சரமாரியாகக் கேள்விகளை வீசினார்.எல்லாவற்றையும் கேட்டவள்..முதல் முறையாக...கிழிந்த உதடுகளூடே மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினாள்.தொடர்ந்து பஞ்சாபியில்...இந்நேரம் எங்கள் திட்டம் நிறைவேறியிருக்கும் என்று மிகச் சத்தம் போட்டு சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கியவள் கன்னத்தில் மீண்டும் ஒரு அடி இடியாய் இறங்கியது.

உண்மையைச் சொல்...என்ன உங்கள் திட்டம்....நீ இப்போது சொல்லவில்லையென்றால்....இதுவரை காட்டியதிலும் மிகக் கடுமையைக் காட்டவேண்டியிருக்கும்...சொல்...வாயைத் திற.....

எதற்கும் அசையாத அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஜவான்...சாப்...இவளை இப்படிக்கேட்டால் சொல்ல மாட்டாள்...அவர்கள் நம் ஆட்களை விசாரிக்கும் முறையில் விசாரித்தால் தான் சொல்லுவாள்..

மறுப்பதைப் போல தலையை அசைத்து வேண்டாம்...கொஞ்சம் பொறுக்கலாம்....இங்கே இன்னும் இரண்டு பேரைக் காவலுக்கு போடுங்கள்
சரி எங்கே முர்கய்யா....உடனடியாக ஒரு குழுவை தேடுதலில் ஈடு படுத்துங்கள்..

இவர் முருகய்யாவை தேடிக் கொண்டிருந்த அதே நேரம் முருகைய்யா தன்னுடன் மூன்று சிப்பாய்களை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணை மடக்கிய அதே இடத்துக்கு..வேறு வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.அந்த இடம் சமீபிக்கும்போதே தூரத்தில் நிழலாட்டத்தை உணர்ந்தார்கள்.காலடி சத்தம் கூட வராமல்...மெள்ள பதுங்கி அருகே நகர்ந்து ஒரு புதர் மறைவிலிருந்து கவனித்தார்கள்.மாலை நேரமென்றாலும்...அடர்ந்த மரங்கள் மேலும் பனியைப் போர்த்திக்கொண்டிருந்ததால் இன்னும் புஷ்டியாகி வெளிச்சத்தை வடிகட்டியிருந்தன.

கண்களைக் கூர்மையாக்கி கவனித்ததில் நான்கு பேர் தெரிந்தார்கள்.அதில் ஒருவன் கையில் ராக்கெட் லாஞ்சருடன் இருந்தான்.மற்ற மூன்று பேரும் இயந்திரத் துப்பாக்கியுடன் கண்களை சிறுத்தைகளைப் போல நாலாபுறமும் அலையவிட்டுக்கொண்டிருந்தார்கள்.

மெதுவாக கீழே அமர்ந்த முருகைய்யா குழுவினர்...அதிகம் பேசாமல்...அவர்களைத் தாக்கி பிடிக்க முடிவு செய்தார்கள்.திரும்பப்போய் இன்னும் ஆட்களைக் கூட்டிக்கொண்டு வர இப்போது நேரமில்லை.துணிந்து தாக்குதலை நடத்தி விட வேண்டியதுதான்...மிக மிக மெதுவாக...இரண்டு சிப்பாய்களில் ஒருவன் இடப்பக்கமும்...அடுத்தவன் வலப்பக்கமும் நகர்ந்தார்கள்.மீதமிருந்த ஒருவன் முருகய்யாவைக் கவர் செய்வதற்காக துப்பாக்கியை தயார் நிலையில் வைத்துக்கொண்டு அவன் பின்னால் நின்றுகொண்டான்.

வெகுக்கூர்மையான காதுகளால்...எதிரிகள் சட்டென்று இவர்கள் நடமாட்டத்தைக் கவனித்துவிட்டார்கள்...எந்தப்பக்கம் என்று உறுதியாகத் தெரியாததால் நாலாபுறமும் சுட்டார்கள்.அதில் இடது பக்கம் போன ஜவானின் மீது குண்டு பாய்ந்து விழுந்தான்...எதிரிகளின் கவனம் சற்றே அந்தப் பக்கம் திரும்பிய சொற்ப நேரத்தை சாதகமாக்கிகொண்டு..முருகைய்யா தன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக்கொண்டு சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டதில் இருவர் விழுந்து விட்டனர்...ராக்கெட் லாஞ்சரை வைத்துக்கொண்டிருந்தவன் சடாரென்று அதைக் கீழே போட்டுவிட்டு இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான்.தோட்டா ஒன்ரு முருகையாவின் தோளைத் துளைத்துக்கொண்டு பாய்ந்தது.முருகய்யாவைக் கவர் செய்தவன்...சடாரென்று முன்னால் பாய்ந்து அவனைச் சுட்டதில் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்து விட்டது...அதற்குள் வலது பக்கம் போன ஜவான் இயந்திரத்துப்பாக்கியுடன் சுட்டுக்கொண்டிருந்தவனை வீழ்த்திவிட்டான்...தோளில் பட்டிருந்த தோட்டாவையும் சட்டை செய்யாமல்...முருகைய்யா பாய்ந்து நின்று கொண்டிருந்தவனை மடக்கிவிட்டான்.

புயலடித்து ஓய்ந்ததைப் போல அந்தப் பகுதியே அமைதியாகிவிட்டது.விழுந்து கிடந்த மூன்று பேரையும் பார்த்துக்கொண்டே முருகைய்யா அந்த நாலாவது ஆளை கவனித்துக்கொள்ளும்படி மற்ற இரண்டு சிப்பாய்களுக்கும் உத்தரவிட்டான்.இரண்டு பேரும் அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு துப்பாக்கியை விலாவில் வைத்து அழுத்தினார்கள்.கீழே விழுந்துவிட்ட தன் துப்பாக்கியை எடுக்க குனிந்த முருகைய்யா டுமீல் என்ற சத்தத்தைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டான்..கீழே விழுந்து கிடந்தவர்களில் ஒருவன் கையில் கைத்துப்பாக்கியுடன் மெல்ல கீழே சாய்ந்து கொண்டிருந்தான்...புகையும் தன் துப்பாக்கியுடன் மேஜர் கன்னா அங்கே வந்து கொண்டிருந்தார்.நடக்கவிருந்ததை கன்னா தடுத்துவிட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட முருகைய்யா அவரை நன்றியுடன் பார்த்தான்.

இவனை இழுத்துட்டு வாங்க என்று உத்தரவிட்டுவிட்டு முருகய்யாவை ஆதரவுடன் தன் தோளில் சாய்த்துக்கொண்டு முகாமை நோக்கி நடந்தார்.

மாட்டிக்கொண்டவனிடமிருந்து கிடைத்த சில ஆதாரங்களை வைத்து அவர்கள் அன்று அங்கே ஆயுதங்களுடனும்,கண்கானிப்பு சாதன்ங்களுடனும் வந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டார்கள்.

சரியான சமயத்தில் அங்கே சென்ற முருகய்யாவை பாராட்டிய கன்னா
அதுசரி அந்தப் பெண்ணைக் கூடாரத்தில் வைத்துவிட்டு அந்த இடத்துக்குப் போகவேண்டுமென உனக்கு எப்படி தோன்றியது என்ரு கேட்ட்தும்

சார்...இவர்களின் ஊடுருவலைப் பற்றின செய்தி கிடைத்ததும்...உடனடியாக அந்த இடத்துக்குப் போய்...காத்திருந்து இவளைப் பிடித்துக்கொண்டு வந்தோம்.இங்கு வந்து சேரும்வரை எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.ஆனால் பொதுவாக நமக்கு வரும் செய்தியில் துல்லியமாக இடம் குறிப்பிடப்பட்டு இருக்காது,ஆனால் இந்த முறை சரியான இடத்தைப்பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது...அதுமட்டுமல்லாமல்...நம்மைப் போலவே இவர்களும் பயிற்சிப் பெற்றவர்கள்...மேலும் கூடுதலான ஆக்ரோஷம் உள்ளவர்கள்.இருந்தும் இவள் அதிக எதிர்ப்பைக் காட்டவில்லை.கையிலும் பெரிதாக ஏதும் ஆயுதமில்லை.கூடாரத்துக்கு வந்த பிறகு யோசித்தபோதுதான்...இவள் வேண்டுமென்றே பிடிபட்டிருப்பாளோ எனத் தோன்றியது.அதனால் சில ஜவான்களை அழைத்துக்கொண்டு வேறு வழியாக அதே இடத்துக்குப் போனோம்...நான் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டது.
முருகைய்யா சொன்னதைக்கேட்டதும் உடனடியாக முகம் மலர்ந்து..வெல்டன் மை பாய்ஸ்..என்று அவன் முதுகைத் தட்டிக்கொடுக்க தூரத்தில் ஹெலிக்காப்டரின் கிர்ர்ர்ர்ர்ர் சத்தம் சமீபித்துக்கொண்டிருந்தது.........

ஆதி
18-03-2008, 01:17 PM
மிக எளிமையாய் நயமாய் நளினாமாய் தொய்வில்லாமல் எப்படிதான் உங்களால் இப்படி கதை எழுத இயல்கிறதோ, எனக்கு வராத ஒன்று கதை எழுதுவது. நான் கதைப்பகுதிக்கு அதிகமா வரமாட்டேன் உங்களுடைய கதை யவனியக்கா, அப்பறம் நம்ம அமரன் அவர் குரு செல்வா இப்படி சிலப்பேர் கதைகளைப் பார்த்த இந்த பக்கம் வருவேன் காரணம் உங்கள் எழுத்துக்களில் மந்திர ஈர்ப்பு இருக்கு என்னை அப்படியே உள்ளிழுத்து கட்டிப்போட்டுவிடும். அப்படி கட்டிப்போட்ட வீரமான கதையண்ணா இது.
பாராட்டுக்கள் அண்ணா படைத்த உங்களுக்கும் நம் படைவீரர்களுக்கும்.

அன்புடன் ஆதி

சிவா.ஜி
18-03-2008, 01:20 PM
என் ஆரம்பக்காலக் கதைகளை விட சிறிதாவது உயர்ச்சி இருக்கிறதென்றால் அது இந்த மன்றத்தில் நான் படித்த பல கதைகள் கொடுத்த பாடம்தான் ஆதி.மிக அருமையான கதை சொல்லிகளான யவனிகா,மயூ,ராகவன்,பாரதி..மேலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும்..குரு,குருவுக்கு குரு அனைவரின் எழுத்துகள்தான் காரணம்.
பாராட்டுக்கு மிக்க நன்றி தம்பி.

பென்ஸ்
18-03-2008, 01:21 PM
ஹ ஹ என்ன சிவா... ராஜேஸ்குமார் (மதியை சொல்லவில்லை) மாதிரி கதை எழுத ஆரம்பித்துவிட்டீர்கள்....
இந்த வகை கதைகள் படித்தால் இதயத்தின் துடிப்பது அதிகமாவது என்னவோ உண்மைதான்...
பாராட்டுகள்...

சிவா.ஜி
18-03-2008, 01:26 PM
சும்மா...ஏதாவது வித்தியாசம் வேண்டுமல்லவா...அதன் முயற்சிதான் இது...பெரியவங்க(?) நீங்க பாத்து ஏதாவது திருத்துங்க பென்ஸ்...
பின்னூட்டப் பாராட்டுக்கு நன்றி.

யவனிகா
18-03-2008, 01:32 PM
தலைப்பு ஈர்க்க கதைக்குள் வந்தேன்...திரில்லர் கதை என்று நினைத்து ஆரம்பித்தேன். தேசப்பற்று கதையைக் கொடுத்து விட்டீர்கள அண்ணா...
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை தொய்வின்றி பயணித்தது கதை. சிவா அண்ணாக்குள்ள ரைபிள் ஏந்தியவாறு ஒருத்தர் ஒளிஞ்சிருக்கார் போல...
நல்ல கதை கொடுத்தமைக்கு வாழ்த்துக்ள அண்ணா.....தொடருங்கள்.

சிவா.ஜி
18-03-2008, 01:37 PM
நன்றிம்மா யவனிகா(எங்கே அடிக்கடி காணாமப் போயிடறீங்க...)அந்தப் பகுதியில் பணியிலிருந்த சில நன்பர்கள் விவரித்ததை வைத்து சின்ன கற்பனையில் தோன்றிய கதை.பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிம்மா.

மதி
18-03-2008, 03:01 PM
அருமையான தேசபக்தி கதை சிவா.ஜி. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கலாமோ என்றொரு எண்ணம். மன்னிக்கவும்..கதை சொல்லுதலில் உங்கள் மற்றக் கதைகளில் இல்லாத அமெச்சுர்தனம் தெரிகிறது.

பென்ஸ்
18-03-2008, 03:36 PM
அருமையான தேசபக்தி கதை சிவா.ஜி. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கலாமோ என்றொரு எண்ணம். மன்னிக்கவும்..கதை சொல்லுதலில் உங்கள் மற்றக் கதைகளில் இல்லாத அமெச்சுர்தனம் தெரிகிறது.
மதி நல்ல விமர்சனம்...:cool:

இந்த மாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று சொல்லுறது பேச்சுலரால் மட்டுமே முடியும்... :rolleyes::D:D

செல்வா
18-03-2008, 03:59 PM
ஆஹா... கையக் குடுங்க அண்ணா சேம் சேம் இனிப்பு குடுங்க.... இதே மாதிரி பின்னணியில், சூழலில் ஒரு கதை நானும் எழுதியிருக்கிறேன். தினமணிகதிரில் கார்கில் பற்றி ஒரு கட்டுரை வந்தது அதைப்படித்து அந்த குளிர்ப் பிரதேசத்தின் பிண்ணணியில் எழுதியது ஊருக்குச் சென்றால் பரணிலிருந்து இறக்கி மன்றத்தில் பதிகிறேன்... நிற்க.. அண்ணன் கதையை பார்ப்போம்...
முதலில் கிரைம்தனமான அந்த தலைப்புக்கு என் பாராட்டுக்கள் அண்ணா...ஆரம்ப அறிமுகம் அந்த இடத்தின் வர்ணணை .. சில வரிகளில் கதையோட்டம் அருமை... தேசபக்தி தூண்டும் வகையிலான கதை.
ஆனால் ஆரம்பத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் முடிவுக்கு இல்லை என நினைக்கிறேன் இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாமோ அண்ணா? எனக்கு தோன்றுவது என்ன வென்றால் முருகய்யா இறுதியாகச் சொல்வதை அவனுடைய பேச்சாக இல்லாமல் ..... சற்று மாற்றி நிகழ்ச்சியாக காட்டியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்குமோ?
வாழ்த்துக்கள் அண்ணா... இதையெல்லாம் வாசிக்கும் போது எனக்கும் எதையாவது எழுதணும்னு கையெல்லாம் பரபரக்குது....
(ஹி...ஹி... அதான் பின்னூட்டம் எழுதுறமுல்ல.... )

செல்வா
18-03-2008, 04:09 PM
ஆதி..........நேர்ல வாங்க உங்கள அப்புறம் கவனிச்சுக்கறன்........

அக்னி
18-03-2008, 05:19 PM
உண்மையிலேயே, இந்தப் பாணியில் அமையும் (கிரைம் வகைக்) கதைகளுக்கு நான் அடிமை என்றே சொல்லலாம். மிகவும் ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்தேன்.
மிகுந்த நன்றிகளும், பாராட்டுக்களும்...

இனிக் கதை பற்றிச் சில வரிகள்...
செல்வா கூறியது போல, அந்த சம்பவத்தை காட்சிப்படுத்தியிருக்கலாம்.
இன்னமும் விறுவிறுப்பாக அமைந்திருக்கும்.
ஒரு உலங்கு வானூர்தியை வீழ்த்த ஐவர் பலி கொடுக்கப்படுவார்களா?
ஏன் என்றால், அவள் குறித்த நேரம் முடிந்ததுமே கேள்விக்கு விடை சொல்வதுபோல உண்மையை ஒப்புவித்து விட்டதாக கதை இருக்கின்றது. தாக்குதலை வெற்றியாக்க அவள் நாடகமாடி அகப்பட்டாள் என்றே வைத்துக் கொண்டாலும், மற்றைய நால்வரும் தாக்குதல் முடிந்ததும் தமதிருப்பிடம் திரும்பிச் செல்லவே முயன்றிருப்பார்கள். அதுவரை அடித்த போதிலும் அவ்வளவு உறுதியோடு இருந்தவள், தாக்குதலுக்கு முன்னரே உண்மையைச் சொல்வாளா? அதனால் இலக்கு பாதுகாக்கப்படும் வாய்ப்புள்ளதே.
அடுத்து, தாக்கப்படத் தீர்மானித்த இலக்கு இன்னமும் முக்கியத்துவமானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த பனிபடர்ந்த பிரதேசத்தில் இதைவிட முக்கியமானதாக எதனைக் காட்டுவது என்ற பிரச்சினையும் உள்ளது. தவிர, வளர்ந்துவரும் தீவிரவாத அமைப்பு என்றால் அதற்கு இதுவே பெரிய இலக்குத்தான். ஆனால், அப்படியான அமைப்புக்கள் வீணே தமது உறுப்பினர் ஒருவரை இழக்கமாட்டார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.
இறுதியாக, வாசகர்களுக்கு அவளது மரணம் காட்சிப்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டது, வன்முறையைக் காட்டுவதில் காட்டப்படும் கண்ணியமாகும். ஆனால், அகப்பட்ட ஒரு தீவிரவாதியிடமிருந்து, தகவல்களை மேலும் பெற முயல்வார்களே தவிர, உடனடியாக சுட்டுக் கொன்றிட மாட்டார்கள்.

சிவா.ஜி யிடம் ஒரு வேண்டுகோள்...
இதைப்போல விறுவிறுப்பான தொடர்கதை ஒன்றை எழுத இயலுமானபொழுது எழுதுங்கள்.
அதற்கான எதிர்பார்ப்பே, எனது இந்தப் பதிவின் காரணமே தவிர குற்றம் சொல்லவல்ல.

நீண்ட நாட்களின் பின்னர் (லியோமோகன் எழுதிய இவ்வகைக் கதைக்களுக்குப் பின்னர்) விறுவிறுப்பான ஒரு கதையை படித்த மகிழ்வுடன் பாராட்டுக்கின்றேன்...
ஒரு நீண்ட நாவலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்...

சிவா.ஜி
18-03-2008, 05:33 PM
அருமையான தேசபக்தி கதை சிவா.ஜி. இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக சொல்லியிருக்கலாமோ என்றொரு எண்ணம். மன்னிக்கவும்..கதை சொல்லுதலில் உங்கள் மற்றக் கதைகளில் இல்லாத அமெச்சுர்தனம் தெரிகிறது.
முதலில் ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன்.இது தேசபக்தி கதை இல்லை.ஒரு நிகழ்ச்சி....ராணுவப் பின்னனியில் நிகழ்கிறது.நான் கடைசியில் கொடுத்திருந்த குறிப்பைப் பார்த்து அப்படி தோனியிருக்குமோ...அதனால் அதை அகற்றி விட்டேன்.
அடுத்து அமெச்சூர்த்தனம்... மிகக் கடுமையான சூழல் என்பதால் அந்த ஆபத்தான இடத்தைப் பற்றி சில தகவல்களை கொடுக்க நினைத்தேன்....அதனால் சில இடங்களில் கதையை விட்டு விலகியிருப்பதாகத் தோன்றுகிறதோ....

தயவு செய்து ஏதாவது ஒரு பகுதியை உதாரணத்துக்கு சுட்டிக் காட்டி திருத்த முடியுமா...நீங்களோ பென்ஸோ அந்த உதவியை செய்தால் அடுத்தமுறை தவறைத் திருத்திக்கொள்ள உதவும்.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மதி

சிவா.ஜி
18-03-2008, 05:39 PM
ஆனால் ஆரம்பத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் முடிவுக்கு இல்லை என நினைக்கிறேன் இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாமோ அண்ணா? எனக்கு தோன்றுவது என்ன வென்றால் முருகய்யா இறுதியாகச் சொல்வதை அவனுடைய பேச்சாக இல்லாமல் ..... சற்று மாற்றி நிகழ்ச்சியாக காட்டியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்குமோ?

செல்வா..மிக்க நன்றி.அந்த நிகழ்ச்சியைக் காட்சிபடுத்தத்தான் நினைத்தேன்...மிக நீளமாகிவிட்டால்...சிறுகதை...நெடுங்கதையாகிவிடுமோ என்ற அச்சத்தில்தான் சுருக்கமாய் முடித்துவிட்டேன்.மீண்டும் முயற்சித்து காட்சிப் படுத்த முயல்கிறேன்.

பென்ஸ்
18-03-2008, 05:47 PM
சரி சிவா....
நான் சொல்லுறேன்
1) பஞாப் பெண்கள் தீவிரவாததில் இருப்பது (???) , பாகிஸ்தான் பஞ்சாப் பெண்கள் என்று சொன்னாலும்... பஞ்ஜாபிகள் என்பவர்கள் இந்துக்கள், இவர்கள் பாகபிரிவினையின் போது புலம் பெயர்ந்தவர்கள் (சீக்கியர்கள் அல்ல)... மேலும் நீங்கள் அந்த வர்னனையை மாற்றி இருக்கலாம்.
2, பெண்களை ரானுவவீரர்கள் சித்திரவாதை செய்வதாக தெரியவில்லை, விசாரிக்க பெண் ஆபிசர்கள் வருவார்கள் என்பது என் அறிவு. மேலும் அதை விளக்கியிருப்பது நன்றாக இல்லை.
3) இந்தி மற்றும் பஞாபி வார்த்தைகள் யதாத்தமாக இருந்தாலும், அதை தமிழில் கொடுத்து இருக்கலாம்.
4) டாக் பற்றிய வரிகள் எதற்க்கு... புரியக்லையே.. தவிற்த்து இருக்கலாமோ???
5) முடிவு ரசிக்கும் படியில்லை.... உணமையாகவே.. தப்பா நினைக்காதிங்க.

சிவா.ஜி
18-03-2008, 06:03 PM
ஒரு உலங்கு வானூர்தியை வீழ்த்த ஐவர் பலி கொடுக்கப்படுவார்களா?
ஏன் என்றால், அவள் குறித்த நேரம் முடிந்ததுமே கேள்விக்கு விடை சொல்வதுபோல உண்மையை ஒப்புவித்து விட்டதாக கதை இருக்கின்றது. தாக்குதலை வெற்றியாக்க அவள் நாடகமாடி அகப்பட்டாள் என்றே வைத்துக் கொண்டாலும், மற்றைய நால்வரும் தாக்குதல் முடிந்ததும் தமதிருப்பிடம் திரும்பிச் செல்லவே முயன்றிருப்பார்கள். அதுவரை அடித்த போதிலும் அவ்வளவு உறுதியோடு இருந்தவள், தாக்குதலுக்கு முன்னரே உண்மையைச் சொல்வாளா? அதனால் இலக்கு பாதுகாக்கப்படும் வாய்ப்புள்ளதே.
அடுத்து, தாக்கப்படத் தீர்மானித்த இலக்கு இன்னமும் முக்கியத்துவமானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த பனிபடர்ந்த பிரதேசத்தில் இதைவிட முக்கியமானதாக எதனைக் காட்டுவது என்ற பிரச்சினையும் உள்ளது. தவிர, வளர்ந்துவரும் தீவிரவாத அமைப்பு என்றால் அதற்கு இதுவே பெரிய இலக்குத்தான். ஆனால், அப்படியான அமைப்புக்கள் வீணே தமது உறுப்பினர் ஒருவரை இழக்கமாட்டார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.
இறுதியாக, வாசகர்களுக்கு அவளது மரணம் காட்சிப்படுத்தப்படாமல் நிறைவேற்றப்பட்டது, வன்முறையைக் காட்டுவதில் காட்டப்படும் கண்ணியமாகும். ஆனால், அகப்பட்ட ஒரு தீவிரவாதியிடமிருந்து, தகவல்களை மேலும் பெற முயல்வார்களே தவிர, உடனடியாக சுட்டுக் கொன்றிட மாட்டார்கள்....

நன்றி அக்னி....
சரி உங்கள் கருத்துக்களுக்கு என் வகையில் சில விளக்கங்கள்.
ஒரு உலங்கு வானூர்தியை வீழ்த்த ஐவர் பலி கொடுக்கப்படுவார்களா?
பலி ஐவர் அல்ல ஒருத்திதான்.அவர்கள் ஜவான்களை எதிர் பார்க்கவில்லை.காரணம்...அந்த இடம்.மிக அதிக அளவில் ஆட்கள் இல்லாத அந்தப் பிரதேசத்தில் ஒருத்தியைப் பிடித்துக்கொண்டு போய்விட்டால்..தங்களைத்தேடி யாரும் வர மாட்டார்கள் என்ற எண்ணம்.
உண்மையைச் சொல்லிவிட்டால் அதற்குமேல் அந்த பகுதியில் அவளைக் காப்பாற்றி காவலில் வைக்க மாட்டார்கள் கொன்றுவிடுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.
ஒரு உலங்கு வாகனம்(புதிய வார்த்தை அறியத்தெரிந்த்தற்கு மிக்க நன்றி)அவர்கள் இலக்கல்ல...அது கொண்டுவரும் ஆயுதங்களும்,கண்கானிப்பு சாதனங்களும்தான்.அந்த கண்கானிப்பு சாதனம் பொருத்தப்பட்டுவிட்டால் அவர்களால் ஊடுருவல் செய்வது சிரமமாகிவிடுமென்பதால்.

அடுத்து
வளர்ந்துவரும் தீவிரவாத அமைப்பு என்றால் அதற்கு இதுவே பெரிய இலக்குத்தான். ஆனால், அப்படியான அமைப்புக்கள் வீணே தமது உறுப்பினர் ஒருவரை இழக்கமாட்டார்கள் என்பதையும்கவனத்திற் கொள்ளவேண்டும்.
இவர்கள் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல அடுத்த நாட்டு ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.உயிர்பலி என்பது அவர்கள் எப்போதும் எதிர்பார்த்து இருப்பதுதான்.
மேலும்..உலங்கு வாகனம் வரும் நேரம்,அதை வீழ்த்த சரியான,அருகாமையிலிருக்கும் இடம்,அதை நிகழ்த்துவதற்கான நேரம் அனைத்தையும் திட்டமிட்டே அவர்கள் வந்திருக்கிறார்கள்.அவளுடைய கணக்குப் படி அந்த செயல் முடிந்து விட்ட்தாக அவள் தீர்மாணித்துக்கொண்டு திட்டப்படி உண்மையை சொல்லிவிட்டாள்.இடையில் முருகய்யா போனது அவளுக்குத் தெரியவில்லை.அதனால்தான் கடைசியில் மேஜர் வெளியே வந்ததும்...ஹெலிகாப்டர் சமீபித்துவிட்ட்தாக எழுதியிருக்கிறேன்.திட்டமிட்டபடி தாக்குதல் நிகழ்ந்திருந்தால்..அவள் கணக்கிட்டபடி வாகனம் வீழ்ந்திருக்கும்...அவர்களும் தப்பித்திருப்பார்கள்.

முக்கியமான ஒன்று அந்த பிரதேசத்தில்(18000 அடி உயரத்தில்) பொதுவாக நடைமுறையிலிருக்கும் பல முறைகள் பின்பற்றப்படமாட்டாது.ஒரு கைதியைக் காவலில் வைத்து நீண்ட நாட்கள் காப்பாற்றுமளவிற்கு அங்கு வசதி இல்லை.அதனால்தான் விஷயம் தெரிந்ததும் அவளைக் கொன்றுவிடும்படி சொல்லிவிட்டார்.
மீண்டும் நன்றி அக்னி...தெளிவுபடுத்த சந்தர்ப்பம் அளித்தற்கு.

சிவா.ஜி
18-03-2008, 06:15 PM
சரி சிவா....
நான் சொல்லுறேன்
1) பஞாப் பெண்கள் தீவிரவாததில் இருப்பது (???) , பாகிஸ்தான் பஞ்சாப் பெண்கள் என்று சொன்னாலும்... பஞ்ஜாபிகள் என்பவர்கள் இந்துக்கள், இவர்கள் பாகபிரிவினையின் போது புலம் பெயர்ந்தவர்கள் (சீக்கியர்கள் அல்ல)... மேலும் நீங்கள் அந்த வர்னனையை மாற்றி இருக்கலாம்.

பாகிஸ்தானிலிருக்கும் பஞ்சாபிகள் 90 சதவீதம் முஸ்லீம்கள்.அவர்கள்தான் ராணுவத்தில் இருப்பார்கள்.அந்த பெண்களுக்குத்தான் சித்திரவதையைத் தாங்கும் சக்தி உண்டு.மற்றும் இவர்கள் தீவிரவாதிகள் இல்லை.


2, பெண்களை ரானுவவீரர்கள் சித்திரவாதை செய்வதாக தெரியவில்லை, விசாரிக்க பெண் ஆபிசர்கள் வருவார்கள் என்பது என் அறிவு. மேலும் அதை விளக்கியிருப்பது நன்றாக இல்லை.

தாராளமாக செய்கிறார்கள்.அந்த உயரத்துக்கு பெண் ஆபீஸர்கள் போவதில்லை.விளக்கியிருப்பது வேண்டுமானால் என்னுடைய வார்த்தைப் பஞ்சமோ...கற்பனைப் பஞ்சமோ காரணமாக நன்றாக இருந்திருக்காது.ஆனால் இந்த விமர்ச்னம் எனக்கு கண்டிப்பாக உதவும்.


3) இந்தி மற்றும் பஞாபி வார்த்தைகள் யதாத்தமாக இருந்தாலும், அதை தமிழில் கொடுத்து இருக்கலாம்.

ஒன்றிரண்டைத் தவிர அனைத்திற்கும் அடுத்த வரியிலேயே கொடுத்திருக்கிறேன்.


4) டாக் பற்றிய வரிகள் எதற்க்கு... புரியக்லையே.. தவிற்த்து இருக்கலாமோ???

மதிக்கு சொன்னதைப் போல அந்த பகுதியைப் பற்றின சில தகவல்களையும் கொடுக்க நினைத்தேன்.அது மட்டுமல்ல மேஜரை வெளியே கொண்டு வர அந்த நிகழ்ச்சியை பயன்படுத்தினேன்.அந்தப் பெண் ஜவான்களிடம் நேரம் கேட்பதற்காக.


5) முடிவு ரசிக்கும் படியில்லை.... உணமையாகவே.. தப்பா நினைக்காதிங்க.

கண்டிப்பா தப்பா நினைக்கல பென்ஸ்...இன்னும் நல்ல முடிவை எப்படித் தருவது என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.சிக்கினால் மாற்றி விடுகிறேன்.

மிக்க நன்றி பென்ஸ்.

சிவா.ஜி
18-03-2008, 06:17 PM
எனக்கு இதில் ஒன்று விளங்குகிறது.கதை நிகழும் பகுதியின் முக்கியத்துவத்தை படிப்பவர் விளங்கிக்கொள்ளவில்லை அல்லது என்னால் சரியான முறையில் விளங்க வைக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்.அது என் தவறுதான்.

இப்போது மதி,பென்ஸ்,செல்வா,அக்னி அனைவரின் ஆலோசனை மற்றும் உதவியினால் கதையை சற்றே மாற்றியிருக்கிறேன்.மீண்டும் படித்து கருத்து கூற முடியுமா நன்பர்களே....

அக்னி
18-03-2008, 08:34 PM
என்னைப் பொறுத்தவரையில் இப்போது மிக நன்றாக இருக்கின்றது.
சொல்லப்போனால், சினிமாத்தனம் இன்றிய ஒரு யதார்த்த களநிலையில் நின்ற உணர்வு மனதில்.
மிகுந்த பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
19-03-2008, 04:22 AM
மிக்க நன்றி அக்னி.சொல்லப்போனால்...இதுதான் மன்றம் கற்றுக்கொடுக்கும்...மிகச் சிறந்த பாடங்கள்.வெறும் பாராட்டு மட்டுமல்லாது...குறைகளையும் சொல்லி இன்னும் சரியாகச் செய்ய ஊக்கம் தரும் இந்த பாங்குக்கு என் மனமார்ந்த நன்றி.

மதி
19-03-2008, 05:21 AM
சிவா..ண்ணா..
தற்போதைய மாற்றம் கதைக்கு பலமாய் அமைந்துள்ளது. மேலும் கதை நடக்கும் களம் நன்றாய் புரிந்தது. சில இடங்களில் ஏதோ வேகமாய் கொண்டு போயிருந்தது போல தோன்றிற்று. அதனால் தான் அப்படி சொல்லி இருந்தேன். வேறொன்றுமில்லை.

சிவா.ஜி
19-03-2008, 05:30 AM
நன்றி மதி.உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.தொடர்ந்து இதேபோல ஆரோக்கியமான விமர்சனத்தைக் கொடுங்கள்.அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

மதி
19-03-2008, 05:50 AM
நன்றி மதி.உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.தொடர்ந்து இதேபோல ஆரோக்கியமான விமர்சனத்தைக் கொடுங்கள்.அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

விமர்சனமா ..நான் ஒரு வரி தானே எழுதியிருந்தேன். நான் விமர்சனமெல்லாம் எழுதுவதில்லீங்கோ..

செல்வா
19-03-2008, 08:16 AM
உண்மையிலே நல்லாயிருக்குண்ணா.... முடிவுக்கு ஒரு கனம் வந்துருக்கு..... இன்னும் நிறைய எழுதுங்க முயற்சி பண்ணுங்க.... சிவா அண்ணாவின் இன்னொரு முகம்... "தமிழ் மன்றத்தின் கிரைம் கதை மன்னன்" நல்லா தெரிய வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
19-03-2008, 10:03 AM
நன்றி செல்வா.....ஆனால்...வெகு சாதாரன எழுத்துதான் என்னுடையது.க்ரைம் கதை மன்னனென்றால் அது லியோ மோகன்தான்.

மன்மதன்
19-03-2008, 12:29 PM
தலைப்பு ராஜேஸ்குமார் நாவலைப்போல அருமையாக இருக்கிறது.. ஒரு சம்பவத்தை பற்றி எளிமையாக, சுருக்கமாக, சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்..

பாராட்டுகள்..

சிவா.ஜி
19-03-2008, 12:35 PM
ரொம்ப நன்றி மன்மதன்...பனி படர்ந்த பிரதேசம்ன்ன உடனே இந்த தலைப்பு வந்துடிச்சி.

மனோஜ்
19-03-2008, 12:53 PM
சம்பவம் நடந்த இடத்தில் இருந்தமாதியான உணர்வை சிறப்பாக கதை படிக்கும் பொழுது எழுகிறது நன்றி சிவா அவர்கலே

சிவா.ஜி
19-03-2008, 01:04 PM
கதையைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி மனோஜ்.

இளசு
19-03-2008, 11:00 PM
அன்பு சிவா

ஒரே மூச்சில் வாசித்தேன்.

விவரணப்படம் போல சில வர்ணனைகள் - கதைக்கு அவசியம் என்றாலும், கதைப்போக்கை சற்றே சிதறடிக்கவும் செய்ததாய் எனக்குத் தோன்றியது..

மற்றபடி கனமான கருவை கச்சிதமாய்ச் சொன்னதாய் நிறைவே!

தர்மபுரி ''முருகய்யா'' சொன்ன தகவலை வைத்து எழுதப்பட்ட
உண்மைக்கதையென எண்ணுகிறேன்..

மீசை முனையில் பனிகட்டித்துளி, ஒவ்வொரு மடக்குக்கும் சூடு பண்ண வேண்டிய தேநீர் - என்ற நேர்த்தியான வர்ணனைகளுக்கு ''சோர்ஸ்'' - முருகய்யாதானே?

இந்த வர்ணனைகள் அனைத்தையும் சிறுகதைக்குள் அடக்க எண்ணியதுதான்
நண்பர்களின் விமர்சனங்களுக்கு வித்து..

இரண்டு, மூன்று பாகங்களாய் குறுநாவல் வடிவம் எடுக்க வேண்டிய கரு இது!


பாராட்டுகள்...சிவா!

அடுத்து என்ன.. அமரன் சொன்னபடி நாவல்தானே?

லியோமோகனுக்கு நல்ல ஒரு ஆரோக்கியமான சவால் தயார்!

சிவா.ஜி
20-03-2008, 04:24 AM
சரிதான் இளசு.என் நன்பனொருவன் அந்தப் பகுதியில் பணியிலிருந்தபோது நிகழ்ந்ததை சொன்னான்.ஆனால் முருகைய்யா இல்லை...அவன் கோபி.அவன் சொன்னதை வைத்துதான் பெண் பாத்திரத்தைக் கதையில் கொண்டு வந்தேன்.அவளைப்போல பலரைப் பிடித்து விசாரித்தார்கள் என்றுதான் சொன்னான்...ஆனால் எதற்காக என்பதை சொல்லவில்லை.ஆனால் அவன் அவளை விசாரித்த முறையை என்னால் விளக்கமாக எழுத முடியாது..எனவேதான் அந்த விவரணையில் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்.

நீங்கள் சொல்வதை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்.அனைத்தையும் ஒரு கதைக்குள் அடக்க விளைந்ததாலேயே கதையின் சுவாரசியம் கொஞ்சம் குறைந்துவிட்டது.

அந்த மீசைமுடி ஆனுபவம் எனக்கும் இருந்திருக்கிறது -40 டிகிரி குளிரில் நானும் அதை அனுபவித்திருக்கிறேன்.

நல்லதொரு விமார்சனத்திற்கு என் ஆழ்ந்த நன்றிகள்.இன்னும் முயல்கிறேன்.

அன்புரசிகன்
20-03-2008, 05:59 AM
வாசித்து முடிக்கும் வரை உமிழ்நீரும் விழுங்கவில்லை. கண்ணும் மூடவில்லை. அவ்வளவு சாதூர்யமாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்தக்கள்....

சிவா.ஜி
20-03-2008, 06:12 AM
வாசித்து முடிக்கும் வரை உமிழ்நீரும் விழுங்கவில்லை. கண்ணும் மூடவில்லை. அவ்வளவு சாதூர்யமாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்தக்கள்....

பாராட்டுப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அன்பு.(துபாய் எப்படி இருக்கிறது...? பணி அதிகமா..?)

lolluvathiyar
21-03-2008, 10:40 AM
அருமையான கதை சிவா ஜி, இது போன்ற கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். பல தகவல்கள் தெரிந்து அழகாக எழுதி இருக்கிறீர்கள். சியாச்சின் விசயத்தில் இந்தியாவும் பாக்கிஸ்தானும் செய்து வரும் பிடிவாதம் முற்றிலும் தேவை யற்றது. இரு ரானுவத்தினரும் அந்த பகுதியில் இயற்கை அழகை சிதைத்து வருகிறார்கள். உயிரினம் வாழ தகுதி இல்லாத ஒரு இடத்தில் இருவரும் வீம்புக்கு சன்டை போட்டு கொள்கீறார்கள். காரனம் மிலிட்டரி அட்வான்டேஜ் க்காக. இயற்கை ஆர்வலர்கள் பலர் அந்த பகுதியை விட்டு விட்டு இரு ரானுவமும் தூர சென்று விட வேன்டும் என்று கேட்டு கொன்டு இருகிறாட்கள்.

பனி பிரதேசத்தில் இருக்கும் கொடுமைகளை அதே சமயம் நமது ரானுவத்தி திறமையையும் அழகாக கூறி இருந்தீர்கள் பாராட்டுகள் 100 இபனத்துடன்.

ஒரு சிறு சந்தேகம் அங்கு லெட்டர் கொன்டு போக நாய்கள் பயன்படுத்த படுவதாக கதையில் இருந்தது. காஸ்மீல் பல்லதாக்கில் பல பகுதியில் இது ரானுவ நடைமுரையில் இருப்பதுதான் ஆனால் நீங்கள் சியாச்சின் என்று குறிப்பிட்டது தான் குழப்பமாக இருக்கிறது. காரனம் சியாச்சில் பகுதியில் கழுகள் கூட நுழையாது என்று படித்ததாக நினைவு. செயற்கை சாதனங்களுடன் மனிதம் மட்டுமே அங்கு செல்கிறானாம்.
அங்கு இருக்கும் உயிரினம் இந்திய பாக்கிஸ்தான் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் மட்டுமே. அங்கு ஆடு பேய்பவர்கள் போக முடியாது.


ஒரு உலங்கு வானூர்தியை வீழ்த்த ஐவர் பலி கொடுக்கப்படுவார்களா?

மூலை சலவை செய்ய பட்ட பலிகிடாக்களைதான் பலி கொடுக்கிறார்கள், பாக்கிஸ்தான் தீவரவாதம் அவ்வாறுதான் இயங்கும். மேலும் எத்தனை பேர் பலி ஆகிறார்கள் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல, அவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நிருபிக்க அவ்வபோது தாக்குதல் செய்வார்கள்.


அடுத்து, தாக்கப்படத் தீர்மானித்த இலக்கு இன்னமும் முக்கியத்துவமானதாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அ ந்த இடத்தில் அதிக நாள் இருக்க வேன்டுமாலா லாஜிஸ்டிக்ஸ் மிக மிக அவசியம் அ ந்த லாஜிஸ்டிக்ஸ் எலிகாப்டர் மூலம் மட்டுமே வரும். அதை அடித்து விட்டால் கூடாரத்தில் உள்ள அனைவரும் பட்டினியால் இறக்க நேரிடும். காரனம் அங்கு நினைத்த நேரத்தில் எலிகாப்டர் பறக்க விட முடியாது.


வளர்ந்துவரும் தீவிரவாத அமைப்பு என்றால் அதற்கு இதுவே பெரிய இலக்குத்தான். ஆனால், அப்படியான அமைப்புக்கள் வீணே தமது உறுப்பினர் ஒருவரை இழக்கமாட்டார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.

பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் வளரந்த தீவிரவாதிகள், உறுப்பினர் இழப்பதை பற்றி அவர்கள் கவலை பட மாட்டார்கள், காரனம் அந்த நாட்டு மக்களை சுலபமாக தீவிரவாதி ஆக்க முடியும் என்று அனைத்து தலைவர்களுக்கு தெரியும்.

இந்திய ரானுவத்துக்கு பயம் ஏற்படுத்தி மொராலிட்டியை குலைக்க இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு கொன்டே இருப்பார்கள். ஆனால் இறுதி தோல்வி அடைந்து கொன்டே இருக்கிறார்கள்.


அகப்பட்ட ஒரு தீவிரவாதியிடமிருந்து, தகவல்களை மேலும் பெற முயல்வார்களே தவிர, உடனடியாக சுட்டுக் கொன்றிட மாட்டார்கள்.

காஸ்மீர் பகுதி அகபடும் அனைத்து தீவிரவாதிகளுக்கு பெயர் தான் வித்தியாசம் (லஸ்கர், ஹிஜ்புல், ஹர்கத்) இப்படி இவர்களிடம் இரு ந்து என்த தகவலும் பெற வேன்டிய அவசியமில்லை. காரனம் அனைவரும் பாக்கிஸ்தானிலிருந்து தான் வருவார்கள், ஒரே இலக்கு இ ந்தியாவில் குழப்பம் ஏற்படுத்தவது. பாக்கிஸ்தானியர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான். இதில் என்ன தகவல் பெற வேண்டி இருக்கு. வருகிறவனை போட்டு தள்ளி விட்டு மறுவேலை பார்க்க வேன்டியதுதான்.


1) பஞாப் பெண்கள் தீவிரவாததில் இருப்பது (???) , பாகிஸ்தான் பஞ்சாப் பெண்கள் என்று சொன்னாலும்... பஞ்ஜாபிகள் என்பவர்கள் இந்துக்கள், இவர்கள் பாகபிரிவினையின் போது புலம் பெயர்ந்தவர்கள் (சீக்கியர்கள் அல்ல).

புதிய தகவலாக இருகிறது பென்ஸ் பிரிவினையின் போது பாக்கிஸ்தானுக்கு எந்த ஒரு ஹிந்துவும் குடிபெயர்ந்து போயிருக்க மாட்டார்களே. மேலும் அங்கிருக்கும் பஞ்சாபில் சீக்கியர்கள் தானே இருப்பார்கள்.


2, பெண்களை ரானுவவீரர்கள் சித்திரவாதை செய்வதாக தெரியவில்லை,

சட்டபடி செய்யகூடாது ஆனால் சமயத்தில் செய்து விடுகிறார்கள். என்ன செய்வது.

சிவா.ஜி
22-03-2008, 04:27 AM
ஒரு சிறு சந்தேகம் அங்கு லெட்டர் கொன்டு போக நாய்கள் பயன்படுத்த படுவதாக கதையில் இருந்தது. காஸ்மீல் பல்லதாக்கில் பல பகுதியில் இது ரானுவ நடைமுரையில் இருப்பதுதான் ஆனால் நீங்கள் சியாச்சின் என்று குறிப்பிட்டது தான் குழப்பமாக இருக்கிறது. காரனம் சியாச்சில் பகுதியில் கழுகள் கூட நுழையாது என்று படித்ததாக நினைவு. செயற்கை சாதனங்களுடன் மனிதம் மட்டுமே அங்கு செல்கிறானாம்.
அங்கு இருக்கும் உயிரினம் இந்திய பாக்கிஸ்தான் வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் மட்டுமே. அங்கு ஆடு பேய்பவர்கள் போக முடியாது.நீண்ட அருமையான உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வாத்தியார்.
உங்கள் சந்தேகத்திற்கு பதில் இதோ.
http://thatstamil.oneindia.in/news/2000/05/04/dogs.html
இந்த லின்க்-ல் அதற்கான செய்தி கீழ்கண்டவாறு இருக்கிறது.
சியாச்சினில் \\\"போஸ்ட்மேன்\\\' வேலைபார்க்கும் நாய்கள்


புது தில்லி:
காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளஇந்திய ராணுவத்தினருக்குத் தபால் எடுத்துச் செல்லும் பணியில் நாய்கள்பயன்படுத்தப்படுகின்றன.

இத் தகவலை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்,மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தற்போது, சியாச்சின் பகுதி ராணுவ வீரர்களுக்குத் தபால் எடுத்துச் செல்லும் பணியில்ஒரே ஒரு நாய் பயன்படுத்தப்படுகிறது. உலகின் உயரமான போர்க்களமாகக்கருதப்படும் சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது.

தபால் எடுத்துச் செல்ல முதலில் இரு நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால்,அதில் ஒரு நாய் கடந்த ஆண்டு இறந்துவிட்டது. தற்போது பணியில் உள்ள ஒருநாய்க்கு உதவியாக, ராணுவத்தில் உள்ள 4 நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன.தற்போது இந்த நாய்கள் பனிச்சரிவுப் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றன.

சியாச்சின் பகுதியில் நிலவும் மோசமான தட்பவெப்ப நிலை காரணமாக, உள்ளூர்நாய்கள் கிடைக்கவில்லை. தற்சமயத்துக்கு ராணுவத்தைச் சேர்ந்த நாய்களுக்குப்பயிற்சி அளிக்கப்பட்டு அவை சியாச்சின் பகுதியில் பயன்படுத்தப்படும்.தேவைப்பட்டால், உள்ளூர் நாய்கள் கிடைக்கும்பட்சத்தில் அவையும் தபால் எடுத்துச்செல்லும் பணியில் பயன்படுத்தப்படும் என்றார் பெர்னான்டஸ்.

இதனை ஆதாரமாக வைத்துதான் அதை எழுதினேன்.மேலும் நீங்கள் சொல்வதைப்போல ராணுவத்தில் பெண்களை சித்திரவதை செய்ய்க்கூடாது என்று இருந்தாலும்...சில நேரங்களில் கடைபிடிக்கப்படுவதில்லை.
மீண்டும் நன்றி வாத்தியார்.

அமரன்
29-03-2008, 08:55 AM
கருவை கதையாக்கி, கதையை மெருகேற்றி, சீரான திரைக்கதை அமைத்து ரசிக்க கொடுக்கும் வரை எத்தனை இடர்கள்.. எத்தனை பேர் உழைப்புகள்.. திரைப்பட உலகத்தில்.. அதே கன உழைப்பு இந்தக்கதையிலும்.. நெகிழ்கின்றேன்.. இவ்வகை ஆரோக்கியமான அலசல்களைத்தான் மன்றத்தில் எதிர்பார்க்கின்றேன். என்ன செய்வது... சில சமயங்களில் நேர அரக்கன் இடைஞ்சல் பண்ணுகிறான்..

உங்களது கிரைம் கதைகளில் பாதிக்கு மேல் இராணுவ களத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. விசேடமான காரணம் ஏதும் இருக்கிறதா சிவா..

பாராட்டுகள்.. தொடருங்கள்..

முதல் எழுதிய கதையும் இருந்திருந்தால்.. எப்படி மாற்றம் அடைந்திருக்கு என்பதை அறிந்து நானும் தேற முயன்று இருப்பேனே.

சிவா.ஜி
29-03-2008, 10:27 AM
மிக்க நன்றி அமரன்.இந்தக்கதைக்காக சில விபரங்களை சேகரிக்கவேண்டியிருந்தது உண்மைதான்.ஆனால் அவற்றை கதையோடு சுவாரசியமாய் கலந்து கொடுக்க இயலவில்லை.அதனால்தான் அந்த ஆரம்ப சொதப்பல்.

மேலும் எங்கள் கிராமத்துக்கும் இராணுவத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது.இன்றளவும் வீட்டுக்கு ஒருவர் இராணுவத்தில் சேவை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களிடம் கேட்ட கதைகளும்,இராணுவத்தினரது,ஒழுங்கும்,துணிச்சலும்,கட்டுப்பாடும்,வீரமும் என்னை மிகவும் கவர்ந்தவை.அதனாலேயே என்னவோ அவற்றை மீண்டும் மீண்டும் கொண்டு வந்துவிடுகிறேன்.

நன்றி அமரன்.

மலர்
01-04-2008, 09:06 PM
சிவா அண்ணாவே இது..........???
ரமணிச்சந்திரன் நாவல் மாதிரி எழுதிட்டு இருந்த அண்ணன் இப்போ
ராஜேஸ்குமார் மாதிரி எழுத ஆரம்பிச்சாச்சி...
பனிசூழ்ந்த பகுதி.. ராணுவம்ன்னு கதை வித்தியாசமா தான் போகுது...
அதே மாதிரி தலைப்பும் சும்மா நச்சின்னு இருக்கு....

தொடர்ந்து படைக்க பாராட்டுக்கள் அண்ணா..... :icon_b: :icon_b:

சிவா.ஜி
02-04-2008, 04:14 AM
பனிசூழ்ந்த பகுதி.. ராணுவம்ன்னு கதை வித்தியாசமா தான் போகுது...
அதே மாதிரி தலைப்பும் சும்மா நச்சின்னு இருக்கு....

தொடர்ந்து படைக்க பாராட்டுக்கள் அண்ணா..... http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/
ரொம்ப நன்றி மலரு.ஒரே மாதிரி எழுதிட்டிருந்தா சரியில்ல தானே...அதான் கொஞ்சம் வித்தியாசமா....

தொடர்ந்து படைக்க நான் ரெடி...படிக்க நீ ரெடியா...?(படிச்சுதானே ஆகனும்.....வேற வழி...)

lolluvathiyar
29-04-2008, 10:01 AM
.தபால் கொண்டு வரும் நாய் வந்திருந்தது...உண்மையாகவே நாய்தான்.அந்த மலைப்பிரதேசத்தில் ஏறி வந்து குறிப்பிட்ட இடத்தில் தபால்களை சேர்க்குமாறு அந்த நாயைப் பழக்கியிருப்பார்கள்.

இப்படி பனி மழையில் வாழும் நாயை பற்றி நான் கொஞ்ச காலத்துக்கு முன் ஹிந்துவில் படித்திருந்தேன். உங்கள் குறிப்பிட்டது இந்த வகை நாயாக இருக்கலாம் என்று கருதி அதை இங்கு பதித்தால் பொருத்தமாக இருக்கும் என்று பதிக்கிறேன்.

காஸ்மீர் பனி மழையில் வாழும் நாய் பகர்வாழ் நாய் என்று அழைக்கபடும் ஒரு வித்தியாசமான நாய் இனம். அங்கு குஜ்ஜார் என்று ஒரு மலை சாதியினர் வளர்க்கும் நாய். அவர்கள் செம்மரி ஆடுகளை காவல் காக்க இதை வளர்த்து வருகிறார்கள். கடும் பனி பிரதேசத்தில் வாழும் தகுதி உள்ள நாய் இது.

இதில் ஒரு சோகமான விசயம் இந்த வகை நாய் இனம் அழிந்து வருகிறது. அழகாக இருப்பதால் இதை பெரும் பனக்காரர்கள் வாங்கி செல்கின்றனர். பழங்குடியினரும் நல்ல விலை கிடைப்பதால் இதை விற்று விடுகின்றனர். ஆனால் சமதளத்தில் இதை வளர்க்க முடியாமல் இவை இறந்து விடுகின்றன. தற்பொழுது இந்த பகர்வாழ் வகை நாய் இனம் அழிந்து வருவதாக ஹிந்து நாளிதழில் செய்தி வந்திருந்தது. இது தான் அந்த வகை நாயின் படம்

http://farm3.static.flickr.com/2009/2451807132_54dc4793f2.jpg

அதென்னவோ இந்த லொள்ளுவாத்தியாருக்கு நாய்தான் ரொம்ப பிடிக்கும் போல இருக்கு என்று யாரோ புலம்பறாங்க.

பென்ஸ்
29-04-2008, 11:29 AM
Originally Posted by பென்ஸ் http://www.tamilmantram.com/vb/images_pb/buttons/viewpost.gif (http://tamilmantram.com/vb/showthread.php?p=335931#post335931)
1) பஞாப் பெண்கள் தீவிரவாததில் இருப்பது (???) , பாகிஸ்தான் பஞ்சாப் பெண்கள் என்று சொன்னாலும்... பஞ்ஜாபிகள் என்பவர்கள் இந்துக்கள், இவர்கள் பாகபிரிவினையின் போது புலம் பெயர்ந்தவர்கள் (சீக்கியர்கள் அல்ல).புதிய தகவலாக இருகிறது பென்ஸ் பிரிவினையின் போது பாக்கிஸ்தானுக்கு எந்த ஒரு ஹிந்துவும் குடிபெயர்ந்து போயிருக்க மாட்டார்களே. மேலும் அங்கிருக்கும் பஞ்சாபில் சீக்கியர்கள் தானே இருப்பார்கள்.

சட்டபடி செய்யகூடாது ஆனால் சமயத்தில் செய்து விடுகிறார்கள். என்ன செய்வது.

வாத்தியார்...

தமிழகத்தை சேர்ந்தவர்கள் தமிழர்கல்ல்... :D:D
பஞ்சாபை சேர்ந்தவர்கள் பஞ்சாபிகள்...:rolleyes::D:D:D

தில்லியை சேர்ந்த எனது நண்பன் தன்னை பஞ்சாபி என்று சொல்ல, "அட பஞ்சாபிகள் தலப்பாகை கட்டுவார்களே, நீ கட்டலையா என்று கேட்க்க"
அவன் " நாங்கள் இந்திய சுதந்திரத்தின் போது இந்தியாவுக்கு வந்த பாக்கிஸ்தான் பஞ்சாப் ஹிந்துக்கள். எங்களை நாங்கள் பஞ்சாபிகள் என்று பெருமையடித்து கொள்வோம்... இவர்கள் சீக்கியர்கள் என்றான்...

என்ன வித்தியாசமோ... தெரியலை.. அதைதான் நானும் சொன்னேன்...:icon_p:

MURALINITHISH
23-08-2008, 06:23 AM
எத்தனை கதைகள் படித்தாலும் வீரர்கள் கதைகள் படிக்கும் போது நம்மையும் மீறி நாம் அங்கே இருப்போம் நானும் அந்த வீரனின் இடத்தில் இருந்து பார்த்தேன் அதில் இறந்திருந்தால் கூட எனக்கும் பெறுமையே என் மண்ணுக்கும் பெறுமையே

சிவா.ஜி
23-08-2008, 07:18 AM
நிச்சயமாக முரளி. நமக்காக அல்லல்பட்டு, உயிரையும் இழக்கும் அந்த வீரர்களில் ஒருவராய் இருந்து உயிர் நீத்தாலும் நமக்குப் பெருமையே. உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன். மிக்க நன்றி.

samuthraselvam
16-04-2009, 07:25 AM
அருமையான கதை அண்ணா...! இத்தனை நாள் படிக்காமல் இருந்து விட்டேனே..!

பாராட்டுகள் அண்ணா..!! எல்லாவிதமான கதைகளும் எழுதி கலக்குறீங்க...!

xavier_raja
16-04-2009, 11:23 AM
பனி பிரதசிங்களில் நம்முடைய ராணுவ வீரர்கள் எந்தளவுக்கு தங்களின் உயிரை கொடுத்து நாட்டை காப்பாட்ட்ருகிரர்கள் என்பதை அழகாக விளக்கி இருகிறேர்கள்.

சிவா.ஜி
16-04-2009, 12:12 PM
அருமையான கதை அண்ணா...! இத்தனை நாள் படிக்காமல் இருந்து விட்டேனே..!

பாராட்டுகள் அண்ணா..!! எல்லாவிதமான கதைகளும் எழுதி கலக்குறீங்க...!

எட்டுமாதத்துக்குப் பிறகு ஆழத்திலிருந்த கதையை வெளியெடுத்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி லீலும்மா.

கலக்குறதல்லாம் ஒண்ணுமில்லம்மா....எல்லாம்...உங்களைப்போல உறவுகள் கொடுக்கும் உற்சாகம்தான்.

சிவா.ஜி
16-04-2009, 12:14 PM
பனி பிரதசிங்களில் நம்முடைய ராணுவ வீரர்கள் எந்தளவுக்கு தங்களின் உயிரை கொடுத்து நாட்டை காப்பாட்ட்ருகிரர்கள் என்பதை அழகாக விளக்கி இருகிறேர்கள்.

உண்மைதான் சேவியர் ராஜா. குறிப்பாக இந்த சியாச்சின் பகுதியில் உயிரப் பணயம் வைத்துதான் உழைக்கிறார்கள்.

மிக்க நன்றி.

த.ஜார்ஜ்
20-04-2009, 06:11 AM
சிவா,ஜி எல்லை கண்காணிப்பு சூழலை அற்புதமாக கொண்டு வந்திருக்கிறீர்கள்.அவர்களது துல்லியமான கணக்கிடல் கூட உங்கள் கதை போக்கில் தெரிகிறது..மிக மெதுவாய் புறப்பட்டு மெல்ல மெல்ல வேகம் பிடிக்கும் எஞ்சினைப் போல கதை விரைகிறது.வாழ்த்துக்கள் நண்பா.

சிவா.ஜி
20-04-2009, 06:24 AM
மிக்க நன்றி நண்பரே. உங்களின் ஊக்கமளிக்கும் பின்னூட்டம் உற்சாகத்தையளிக்கிறது ஜார்ஜ்.